அத்தியாயம் 🌾 11 :
“என்ன முடிவு பண்ணியிருக்க?” சரளாவின் எண்ணப்படி கோவிலுக்கு சென்று இருவரையும் இறைவனின் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு, பொங்கல் வைத்து வந்த பின்னரும் மலர் அவளின் வீட்டிலேயே இருக்க, கயல் நேரடியாகவே மலரிடம் அவளின் எண்ணத்தை அறிய வினவினாள்.
“என்னை அவங்க கூப்பிடலக்கா. அம்மாவும் போன்னு சொல்லலை. எனக்கும் என்ன செய்யணும் தெரியல.”
முகி வந்து அழைத்ததையெல்லாம் மலர் அறிந்திருக்கவில்லை.
மகள் பழைய கலகலப்பு இல்லாது, தங்களிடமே பேசாது ஏதோ நினைவிலேயே வலம் வந்து கொண்டிருப்பதால் மகளை எப்படி போவென்று சொல்வதென தெரியாது சரளாவும் மகளை அவள் போக்கில் விட்டுவிட இன்று கயல் கேள்வி கேட்கும்படி ஆனது.
“அது வந்து கயல் நான் தான் அவள் வெசனத்துல இருக்காளேன்னு அப்படியே விட்டுட்டேன்.”
மகளுக்காக சரளா பரிந்து வந்தார்.
“சரி அதையெல்லாம் விடுங்க… உனக்கு முகியோட வாழ சம்மதமா?”
மலர் ஏதோ சொல்ல வாய் திறக்க,
“எங்க யாருக்காகவும் யோசிக்காம உனக்காகன்னு நினைத்து மட்டும் பதில் சொல்லு. விருப்பமில்லாம வாழுற வாழ்வு நரகத்துக்கு சமம்.
பிடிச்சா தான் சாப்பாட்டையும் ஒரு வாய் அதிகமா உண்ண முடியும். பிடிக்காம தண்ணீர் குடித்து விழுங்கிடலாம் அப்படிங்கிறது நடு ஆற்றில் நீச்சல் தெரியாம தத்தளிக்கும் நிலை தான்.
முகி கட்டியது தாலியா இல்லை வெறும் கயிறு தானான்னு நீதான் முடிவு பண்ணனும்” என்றிருந்தாள் கயல்.
ஏற்கனவே முகியின் மீது காதல் கொண்டிருப்பவள் வேண்டாமென்றா சொல்லுவாள். ஆனால் என்னவோ ஒன்று தடுக்க மலரின் மனம் ஊமையாய் கதறியது.
முகி மலரின் பதிலை எதிர்பார்த்து அவளையே பார்த்திருந்தான். மனதில் அதீத ஏக்கம்.
‘உன்னோட வாழ முடியாது சொல்லிட்டா அவளை விட்டுடுவியா?’ மனதின் கேள்வி மொத்தமாய் காதல் நெஞ்சத்தை உலுக்க வேகமாக சரளாவின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.
தம்பியின் வேதனை கயலுக்கும் புரிந்தது. அதே சமயம் புரிந்துகொள்ள வேண்டியவளோ சிலையென நின்றிருந்தாள்.
மலரின் நீண்ட அமைதி கயலுக்கு, ‘அவளுக்கு விருப்பமில்லாததை சொல்லத் தயங்குகிறாளோ?’ என தவறாக பட…
“உன்னால முடியாதுன்னா நீ உன் விருப்பம்போல இரு மலர். இதை நினைத்து உன்னை வருத்திக்காத!” என்று மலருக்கு ஆதரவாக பேசும்போதே,
‘இவள் இல்லையென்றால் முகிக்கு ஏற்படும் வருத்தத்தை எப்படி போக்குவேன்’ என உள்ளுக்குள் வேதனை கொண்டாள் கயல்.
மகளின் அமைதி சரளாவிற்கே அவளின் வாழ்க்கையை நினைத்து பயத்தை தோற்றுவித்தது.
எவ்வளவு நேரம் நின்றாலும் மலர் பேசப்போவதில்லையென அறிந்த கயல் எதுவும் சொல்லாது வெளி செல்ல முயல…
“எனக்கு முகி மாமான்னா ரொம்ப இஷ்டம்க்கா” என்ற மலரின் மெல்லிய ஒலி அவளை தடுத்து நிறுத்தியது.
“அப்போ என்னோட நம்ம வீட்டுக்கு வர்றியா?”
கயலின் கேள்வியில் மலரின் தலை சம்மதம் தெரிவிக்க அப்போதுதான் மாணிக்கத்திற்கும் சரளாவிற்கு சீரான மூச்சு வந்தது.
“அமைதியா இருந்து பயமுறுத்திட்டியே மலர்” என்ற கயல் தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.
என்னதான் மிக நெருக்கத்தில் இருக்கும் பக்கத்து வீடென்றாலும், மணம் முடிந்த பின்னர் கணவன் வீட்டில் பெண் இருப்பதுதானே முறை. அதனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய உடைமைகளுடன் கயலின் வீட்டு வாசலில் அடி வைத்தவளை அங்கேயே நிற்க சொல்லிய கயல், முகியின் அறையை நோக்கி சத்தம் கொடுத்தாள்.
மலரின் யோசனையான முகத்தில் மூழ்கியிருந்தவன், ‘தன்னுடன் இருப்பது அவளுக்கு அத்தனை கடினமானதா?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருக்க செவி தீண்டிய கயலின் குரலில் வீட்டிற்கு வெளியில் வந்தவனின் விழிகளில் சந்தோஷ மின்னல்.
மலர்ந்த புன்னகையை இதழோடு மறைத்தவன்… உண்மையில் உள்ளுக்குள் குத்தாட்டம் ஆடினான்.
தன்னை ஏற்கமாட்டாளோ என்று பயந்திருந்தவனுக்கு அவனவளின் வருகை பேராழி இன்பம் தந்தது.
“சும்மா பார்த்துட்டே நிக்காதடா! வந்து மலர் பக்கத்துல நில்லு” என்றவள் இருவரையும் சேர்த்து நிற்க வைத்து ஆலம் சுற்றி வீட்டிற்குள் அழைத்துச்சென்று மலரை தன் பெற்றோரின் புகைப்படம் முன்பு விளக்கேற்ற சொல்லியவள் இருவரையும் அணைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
“சரிடா ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. நான் கரும்பு கொல்லைக்கு போறேன். இன்னைக்கு கடைசி நாள். கறி விருந்துக்கு வேற அங்கு ஏற்பாடாகுது” என்றபடி மலர் நகர, முகியுடன் தனித்து இருக்க வேண்டியதை எண்ணி விதிர்விதிர்த்த மலர்…
“அக்கா நானும் வர்றேன்” என்றும்,
“நீ வா மலர்” என்று முகியும் ஒரே நேரத்தில் சொல்ல இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த கயல்,
“நீயெதுக்கு அவளை கூப்பிடற, நாளைக்கு காலேஜ் போகணும் ரெண்டு பேரும். நீ சென்னை போக தின்க்ஸ் பேக் பண்ணு. நீ அந்த ரூமுக்கு போ மலர்” என்று முகியுடையது அல்லாத மற்றொரு அறையை மலருக்கு காண்பித்து…
“முதல்ல படிப்பை முடிங்க. அப்புறம் தான் கணவன் மனைவி காதலெல்லாம்” என முகியை பார்த்து அழுத்தமாகக் கூறியவாறு சென்றாள்.
கயல் சென்றதும் விட்டால் போதுமென்று மலர் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
மலருடன் உடனடியாக வாழ்கையை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் முகிக்கு கிடையாது. முதலில் அவள் அவனின் காதலை ஏற்று கணவனாக அவன் அவளின் மனதில் தடம் பதித்த பின்னரே வாழ்வின் ஆர்ம்பம் அமைய வேண்டுமென்று நினைத்திருந்தவனக்கு அவளுடன் பேச கூட முடியாது, இருவரும் இரு துருவமாக தனித்து இருக்க போவது முகியின் முகத்தில் அப்பட்டமான பிடித்தமின்மையை காட்டியது.
எப்படியும் முகி கல்லூரி சென்றுவிட்டாள் அவளுடன் இருக்க போவதில்லை தான். ஆனால், இன்று தனித்து தன்னுடன் இருப்பவளிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும். அவளின் மனதை தன்புறம் சற்றேனும் சாய்க்க வேண்டுமென எண்ணியிருக்க அதற்கு வாய்ப்பின்றி போனது.
‘போச்சு… அவ்வளவு தான். காலேஜ் போயிட்டா திரும்பிவர நான்கு மாதம் ஆகும். அதுவரை அவளோட இந்த விலகளோட எப்படிடா முகி இருக்கப்போற?’ தன்னைத்தானே கேட்டவாறு மெத்தையில் விழுந்தவன் திறந்திருக்கும் தனது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு அறை வாயிலில் பார்வையை வைக்க அங்கு அவனவள் நின்றிருந்தாள்.
கயல் சொல்லிய பிறகு மலர் தன்னுடைய அறைக்கு வருவாளென்று முகி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
வேகமாக எழுந்தவன், “வா மலர்” என்று அவளை உற்சாகத்தோடு உள் வரவேற்றான்.
அறையினுள் நுழைந்த மலர், முகி கொஞ்சமும் நினைத்திடாத ஒன்றை செய்தாள்.
******
கரும்பு வெட்டுவது முடியும் நாள் தங்களது வசதிக்கேற்ப வேலை செய்தவர்களுக்கு விருந்து வைப்பர். ஒருசிலர் விளைச்சலில் பதியும் கண் திருஷ்டிற்காக ஆடு அல்லது கோழி வெட்டி சமைத்து போடுவர்.
அந்த வகையில் கரும்பின் இறுதி லோடு ஏற்றிக்கொண்டிருக்க, தென்னந்தோப்புக்கு அடியில் சமையல் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அந்த நாள் கரும்பு வெட்டுதலில் ஈடுபட்டவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
“அண்ணா மதியம் விருந்து முடிஞ்சு எல்லாரும் கிளம்பினதும் இன்னைக்கே வேலையை தொடங்கிடலாம்” என்ற கயலின் கூற்று புரிந்த சிவா, தங்களின் புது முயற்சிக்காக தாங்கள் தேர்ந்தெடுத்திருந்த கழனிக்கு நீர் பாய்ச்ச சென்றான்.
அடுத்த ஒருமணி நேரமும் மின்னலென விரைய தென்னந்தோப்பு கீழே, பேச்சும் சிரிப்புமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்தனர்.
“என்னடா கரும்பு வெட்டி முடிச்சிட்டா(ள்) போலிருக்கே! அந்த பண்ணையில ஒரே சத்தமா இருக்கு. கறி குழம்பு வாசம் இங்கு வரை வீசுது” என்ற ரத்தினம்,
“எத்தனை லோடு வந்துச்சாம்” என்று தன்னுடைய ஆளிடம் வினவினார்.
கரும்பு ஏற்றிச் சென்ற ட்ராக்டர் கணக்கை அவன் சொல்ல…
“அவளால் மட்டும் எப்படிடா இந்தளவுக்கு விளைச்சல் கொண்டுவர முடியுது” என்று அப்பட்டமாக தன் பொறாமையை வெளிக்காட்டினார் ரத்தினம்.
“இப்போ ஏதோ புதுசா மீன் வளர்க்க போறாளாம்.” அரைகுறையாக கிடைத்த தகவலை ரத்தினத்திடம் கூறினான் ஒருவன்.
“என்னது மீன் வளர்க்கவா?” என்று யோசனையைக் காட்டிய ரத்தினம், “எங்க குளம் வெட்ட போறா? இல்லை குட்டை அமைக்க போறாளா?” என்று அதனைப்பற்றி தெரிந்துகொள்ள கேட்டார்.
“அது தெரியலங்க… ஆனால் கூடவே நெல்லும் நட போறதா, அவள் பண்ணையில வேலை செய்யுறவங்க பேசிக்கிட்டாங்க” என்ற ரத்தனத்தின் ஆள் கேலியாக சிரித்தான்.
“எதுக்குடா சிரிக்குற?”
“அது ஒன்னுமில்லைங்க… நெல்லும் மீனும் எப்படிங்க ஒன்னா வளர்க்க முடியும். படிச்ச புள்ளைன்னு பார்த்தா இப்படி வெவரம் தெரியாம இருக்குதுங்களே!” என்றான் அவன்.
ஆனால் ரத்தினத்திற்கு இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு முறை அறுவடையின் போதும், ரத்தினம் மற்றும் கயலின் மூட்டைகளின் எண்ணிக்கையில் தான் அனைவரின் கண்ணும் இருக்கும். போட்டியே அவர்கள் இருவருக்கும் தான். யார் முன்னென்று அறிய அவர்களை விட அவ்வூர் மக்களுக்குத்தான் அதிக ஆர்வம்.
முதலில் தனியொரு பெண்ணாக விவசாயம் செய்யப்போவதாக சொல்லிய கயலை அனைவரும் பரிதாபமாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அவளின் உழைப்பில் அதிசயித்து தான் போனார்கள். யாரும் எதிர்பாராத உழைப்பு அவளிடம்.
கடந்த இரண்டு வருடத்தில் கயல் ஐந்து முறை நெல் அறுவடை செய்திருக்கின்றாள். அதில் முதல் முறை மட்டுமே, உழைப்பில் முதல் அடி என்பதால் தட்டுத்தடுமாறி நின்றாள். அடுத்தடுத்த முறை ரத்தினத்தை விட தன் விளைச்சலை அதிகமாக உயர்த்திக்காட்டி… விவசாயம் பெண்களாலும் முடியுமென்று நிரூபித்துக் காட்டினாள்.
அன்று முதல் ரத்தினம் கயலை முந்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் கயல் விவசாயத்தில் காட்டும் வழிமுறைகளை தன் கண்காணிப்பின் மூலம் தெரிந்துள்ள ரத்தினம் இம்முறையும் அவள் பெரிதாக ஒன்றை செய்ய இருக்கிறாள் என்று எண்ணினார்.
அவரால் அவருடைய ஆளைப்போன்று அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
‘சரி செய்யட்டும் பார்ப்போம்’ என்று இருந்தார்.
பொறாமை இருந்த போதும் முதலில் இருந்த பழிவாங்கல் இப்போது ரத்தினத்திடம் இல்லை. ஆனால் தன்னுடைய போட்டியாக அவர் கருதுவது கயலை மட்டுமே.
“ஆளெல்லாம் கலைஞ்சிட்டாங்களா?”
வயலுக்கு நீர் பாய்த்து முடித்த சிவா கயலிருக்கும் இடம் வந்தான்.
“இல்லைண்ணா… கூலி கொடுத்து அனுப்பனும். நீங்க சாப்பிடுங்க நான் கணக்கை முடிச்சிட்டு வர்றேன்” என்றவள் சிவாவிற்கு இலையில் உணவினை பரிமாறிய பின்னரே ஆட்கள் இருக்கும் இடம் சென்றாள்.
பேசியதை விட ஆளுக்கு ஐம்பது ரூபாய் அதிகமாகவே கயல் கொடுக்க… எல்லோரும் நிறைவுடன் அங்கிருந்து சென்றனர்.
“விவசாயத்தில் போட்ட முதல் எடுக்கவே அரும்பாடு பட வேண்டியதா இருக்கு. இதில் ஆள் விலையை ஐம்பது ரூபாய் ஏற்றினா மத்த விவசாயிங்க என்ன பண்ணுவாங்க.
நீ கொடுத்தா அடுத்த பண்ணையிலும் அதைத்தானே எதிர்பார்ப்பானுங்க.”
தனக்கு பின்னால் கேட்ட குரலில் கயல் திரும்பிப் பார்க்க, அங்கு ரத்தினம் நின்று கொண்டிருந்தார்.
“நூறு நாள் வேலை ஆரம்பித்ததுல இருந்து விவசாய கூலிக்கு யார் வரா? நெல்லை மட்டும் மிஷின் வச்சு அருத்தால் போதுமா. மத்த பயிரெல்லாம் ஆளு வச்சு தானே அறுவடை பண்ண முடியும்.
சுலபமா கிடைக்கிற கூலியை விட்டுட்டு எனக்காக வந்தவங்களை சந்தோஷப்படுத்திப் பார்க்க நான் கொஞ்சம் அதிகமா கொடுத்தேன். அவ்வளவுதான். நாளை பின்ன கூப்பிட்டா ஆள் வரனுமா இல்லையா? ஆள் விலையை ஏத்துற எண்ணம் எனக்கில்லை.”
ரத்தினத்தின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்தாள் கயல்விழி.
“என்னவோ… உனக்கு மட்டும் தான் விவசாயம் பண்ண முடியுமுன்னு ரொம்ப தான் ஆடுற.”
“வயசுல மூத்தவருன்னு பார்க்கிறேன். இல்லை எனக்கும் திருப்பிக் கொடுக்கத் தெரியும். வார்த்தை வித்தியாசம் எல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்ற கயல் ரத்தினத்திடம் தேவையில்லா பேச்செதற்கென்று நகர,
“உன் தம்பியை கொஞ்சம் உசாரா இருக்க சொல்லு, சிங்காரம் மகனை காலையில நம்ம ஊர் எல்லையில் பார்த்தேன்” என்ற ரத்தனத்தின் வார்த்தையில் அதிர்வுடன் திரும்பி நின்றாள்.
“என்ன சொல்றீங்க?”
தம்பியை நினைத்து கயலுக்கு கலக்கமாக இருந்தது.
“ஏய்… எதுக்குத்தா இப்படி பீதியாவுற, அவன் சிங்காரத்துகிட்ட எதுவும் சொல்லல போலிருக்கு. சொல்லியிருந்தா சிங்காரம் இந்நேரம் வரை உன் தம்பியை விட்டு வைத்திருக்க மாட்டான். இந்த பய வேறெதோ திட்டத்தோடு இருக்குது. அதான் ஊருக்குள்ள வேவு பார்க்க வந்திருக்கான் போல. சூதானமா இருக்க சொல்லணும் தோணுச்சு அவ்வளவுதான்” என்ற ரத்தினம்,
“உன்னை தைரியமான பொண்ணுன்னு நினைச்சாக்கா, தம்பின்னதும் இப்படி வெம்புற” என்றார்.
“புதுசா கரிசனம் காத்து வாங்குது.” அந்நேரம் சிவா அங்கு வந்தான்.
“நான் கொஞ்சம் கெட்டவன் தாம்ல… நான்னு சுயநலமா இருக்கவன் தான், எனக்கு போட்டியா யாரும் வரக்கூடாதுன்னு நினைக்கவன் தான், என்னைவிட வயசில் பல வருசம் சின்னது, எனக்கு போட்டியான்னு சில குடைச்சல் கொடுக்கத்தான் செய்வேன். அதெல்லாம் போட்டியாத்தான். அதுக்குன்னு பழிவாங்க அடிதடி, கொலைன்னு இறங்குற ஆளில்லை.
நம்மவூர் பிள்ளைக்கிட்ட நான் எடைஞ்சல் கொடுப்பேன். அதுக்காக வெளியூர் ஆளு வந்தால் பார்த்துகிட்டு இருக்கணும்மா?” என்றவர், “போடா” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
ரத்தினம் நடந்து செல்ல… பின்னால் தென்பாண்டிச் சீமையிலே பாடல் ஒலிப்பதை போலிருக்க,
“இவரு நல்லவரா? கெட்டவரா?” என்று கயல் அப்பாவியாய் வினவ,
“தெரியலையேம்மா” என்றான் சிவா.
அடுத்த நொடி நகைச்சுவையை விடுத்த கயல் தீவிரமானாள்.
“அவன் என்ன பிரச்சனை பண்ணுவான்னு தெரியலையே கயலு.” சிவாவும் யோசித்தான்.
“மலருக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு, அவனுக்கு கோபம் இருக்கும். அதுக்கு காரணமான முகிக்கிட்டதான் அவன் கோபத்தை காட்டுவான்னு நினைக்குறேன். கல்யாணம் ஆன பெண்ணை தொல்லை செய்ய மாட்டான்” என்ற கயலுக்கு தெரிந்திருக்கவில்லை, ரகு அவ்வளவு நல்லவனில்லை என்று.
“எதுக்கும் முகியை கொஞ்சம் சூதானமா இருக்க சொல்லணும் கயல்” என்ற சிவாவின் கூற்றிற்கு,
“முகி நாளைக்கு சென்னை கிளம்பிடுவாண்ணா. அதுக்கு அப்புறம் வர மாசமாவும். அதுக்குள்ள அந்த ரகு கோபம் குறையுதா பார்ப்போம்” என்றவள் நடக்கப்போகும் விபரீதம் அறியாது தன் புது முயற்சியில் கவனமானாள்.
******
“லூங் என்னை உரசிக்கிட்டே இருக்க. இது உனக்கு நல்லதில்லை.”
தன் முன் கால் மேல் காலிட்டு அமர்ந்து தன்னையே எச்சரிக்கும் பார்த்திபனை சுவாரசியமாக பார்த்திருந்தார் லூங்.
“தொழில் போட்டியில் இதெல்லாம் சாதாரணம் தானே பார்த்திபன்.” லூங் பார்த்திபனை பற்றி முழுவதும் தெரியாமல் சுரண்டி விட்டார். அதனின் பலனை இனி அவர் முற்றும் முழுதாக அனுபவிக்கப் போகிறார். பாவம்.
ஏற்கனவே கயலைப்பற்றி மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியாது தான் சிங்கப்பூர் திரும்பி வந்ததற்கு லூங்கின் செயல் தான் காரணமென்ற நிலையில் முன்பைவிட அதிகமாக கோபமிருக்க, இனி தந்தையின் முன்னால் நண்பன் என்கிற பாவ மன்னிப்பு கூட பார்த்திபனிடத்தில் லூங்கிற்கு இருக்கப்போவதில்லை.
பார்த்திபனின் அருகில் நின்றிருந்த டெல்வினிற்கு, ‘சிங்கத்தை சொரிஞ்சுவிட்டுடியே’ மொமண்ட் தான்.
“இங்கப்பாரு பார்த்திபன், நீ என்னை மாட்டிவிட இருந்த. அதான் உனக்கு முன்பு நான் முந்திக்கிட்டேன்” என்ற லூங் அட்டகாசமாக சிரித்து வைத்தார்.
‘இவரு அடங்கமாட்டார் போலவே!’ டெல்வின் மைண்ட்வாய்ஸ்.
“ஹோ, டிட் ஃபார் டேட்.”
அவ்வளவு தான் என்பதைப்போல் பார்த்திபன் எழுந்து கொண்டான். அமைதியாக வெளியேறும் பார்த்திபனின் முதுகை வெறித்த லூங்கிற்கு அவனை கணிக்க முடியவில்லை.
நியோவின் ஃபார்மை அதிரடியாக எரித்ததால், தன் பெயர் வெளியில் வந்துவிடக் கூடாதென்று லூங் கொஞ்சம் பொறுமை காப்பான் என்று நினைத்தே சற்று அசட்டையாக… பிரச்சினை என்றதும் இந்தியா சென்றிருந்தான் பார்த்திபன்.
அங்கு வேலையை முடித்தவன், தான் எதிர்பாராத ஒன்றும் நல்லவிதமாக கிடைக்க மறுநாள் தன் கிராமம் செல்லவிருந்தான்.
அன்றைய இரவு டெல்வினிடமிருந்து அழைப்பு வரவும் சொல்லப்பட்ட செய்தியில் பார்த்திபனுக்கு கொஞ்சமே கொஞ்சம் அதிர்வுதான். அவனால் சமாளிக்கக்கூடிய ஒன்று தான். இருப்பினும் தி வாரியர் என்கிற பெயருக்காக அவன் தந்த உழைப்பு. அதனை வீணாக்க விட்டுவிடுவானா என்ன?
திரும்ப இந்தியா வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று அச்சமயம் கயலின் எண்ணங்களை ஒதுக்கி வைத்தவன், இரவோடு இரவாக சென்னையில் சிங்கப்பூர் நோக்கி தனி விமானம் மூலம் கிளம்பியவன் நான்கு மணி, இருபது நிமிடத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தான்.
பின் இரவில் வந்தவன் நேராகச் சென்றது, தலைமையான தி வாரியருக்குத்தான்.
அங்கு சென்ற பின்னர் தான் லூங் செய்த செயலின் வீரியம் பார்த்திபனுக்கு புரிந்தது.