பார்த்திபனின் கயல்விழியாள் 12

அத்தியாயம் 🌾 12 :

“ரிசப்ஷனில் வேலை செய்யும் அத்தனை பேரையும் மீட்டிங் ஹாலில் அசெம்பில் பண்ணு.”

டெல்வினிற்கு உத்தரவிட்ட பார்த்திபன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினான்.

‘நாளை இந்த செய்தி மீடியாக்களில் வந்தால் ஒட்டுமொத்தமாக தி வாரியரின் பெயர் சருக்கிவிடும். முதல் கரும்புள்ளி. அதற்கு காரணமான லூங்கை விட்டுவிடாதே!’

பார்த்திபனின் மூளையும் மனமும் ஒருங்கே கூவிக்கொண்டது.

“டெல்வின்.”

மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்த டெல்வின் பார்த்திபனின் அறைக்குள் வந்து முழுதாக பத்து நிமிடங்கள் கடந்திருக்க, ஏதோ முடிவு செய்துவிட்ட குரலில் நண்பனை அழைத்தான்.

“எஸ் பாஸ்.”

“கொஞ்சம் ஃப்ரியா மூவ் பண்ணலாம் டெல். ரொம்ப ப்ரஷரா இருக்கு.” சிறிது சிறிதாக அவன் உருவாக்கிய சாம்ராஜ்யம். அவனின் முதல் குழந்தை. அதனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அதற்கு அடித்தளமிட்ட தேவராஜைவிட பார்த்திபனுக்கு அதிக பங்கிருக்கிறது. அதனால் இதனை சாதாரணமாக பார்த்திபனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டுமென பிரச்சனையின் தீவிரம் புரிந்ததும் திட்டங்களை வகுத்திருந்தாலும், அனைத்தும் நல்ல முறையில் செயல்பட வேண்டுமென சற்று பதட்டம் கொண்டவனுக்கு அந்நேரம் ஆறுதல் தேவைப்பட தோழனின் தோள்களில் சாய நினைத்தான்.

“சொல்லுடா… நான் என்ன செய்யணும்?”

தானிப்போது அவனுக்கு நண்பனாக தேவைப்படுகிறோம் என்று புரிந்துகொண்ட டெல் பார்த்திபனின் தோளில் கரம் பதித்து வினவினான்.

பார்த்திபன் தன் திட்டங்களைக் கூற டெல்வினிற்கு உதரல் எடுத்தது.

“இது சரியா பார்த்தி?”

“அப்போ அவன் செய்தது மட்டும் சரியா?” பார்த்திபனிடத்தில் சத்தமில்லாத அழுத்தமான கோபம்.

“அங்கிள் ஃபீல் பண்ணுவார் டா!”

“இவ்வளவு நாள் டாட்’காக மட்டும் தான் அந்த லூங்கை விட்டு வைத்தேன். இனியும் பொறுமை காக்க என்னால் முடியாது” என்று சீரிய பார்த்திபன், “நான் சொன்னதை செய்” என்றான். அவ்வளவு உறுதி அவனிடத்தில்.

“இந்த வயதில் இப்படியொரு அவப்பெயர் அவருக்கு தேவையா? அவரின் குடும்பத்தை நினைத்தாவது விட்டுவிடலாம்.” டெல்வினிற்கு இதை செய்வது சரியா என்கிற குழப்பம்.

“ஹா… ஹா…” சத்தமாக சிரித்தான் பார்த்திபன்.

அச்சிரிப்பிற்கான அர்த்தம் டெல்லுக்கு விளங்கவில்லை.

“இந்த வயதில் அவர் செய்யக்கூடிய செயலும் இதுவல்லவே! தேவைப்படுன்னுதான், லூங் என்னோட முதலில் மோதியதும் அவனோட அடி முதல் நுனி வரை தெரிஞ்சுக்கிட்டேன். அதில் அவனின் பல ரகசியங்களும் அடக்கம்.

இப்போ இதை நான் செய்யல… நாளை மீடியாக்களுக்கு நம் வாரியர் தான் பேசுபொருள்” என்று விளக்கமளித்த பார்த்திபன்,

“மீடியாக்களும் மக்களும் இப்போல்லாம் இந்தமாதிரி பெரிய இடத்து கிசுகிசுக்கள் தான் அதிகம் லைக் பண்றாங்க டெல்” என்று ஒருவித முகச் சுளிப்புடன் கூறினான்.

“அதென்னவோ உண்மைதான்” என்ற டெல்லும், பார்த்திபன் சொல்லியதை செய்திட அங்கிருந்த லேப்டாப்பின் முன் அமர்ந்தான்.

டெல்வின் செய்யட்டுமென்று நகர்ந்து வந்த பார்த்திபன், நகரத்தின் ஊடங்கங்கள் அனைத்திற்கும் தானே நேரடியாகத் தொடர்பு கொண்டு தி வாரியரின் பெயர் வெளியில் வராமலிருக்க அனைத்தையும் செய்தான்.

இதில், இதுபோன்று தங்களுக்கு மீண்டுமொரு நல்ல ஹாட் நியூஸ் கிடைக்காது என்று யோசித்தவர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதோடு,

“இன்னும் அரை மணி நேரத்தில் இதைவிட சூப்பரான ஹாட் நியூஸ் உங்களுக்கு கிடைக்கும்” என்றுகூறி தன் வழிக்கு கொண்டு வந்திருந்தான்.

மீடியாக்களுக்கு டி.ஆர்.பி தானே முக்கியம். அதற்காகத்தானே இன்று நடந்ததை இல்லையென்றும், இல்லாததை இருக்குமென்றும் மாற்றி மாற்றி சமூகத்தை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருசிலர் உண்மையாக இருந்தாலும் அவர்களெல்லாம் அந்தக் கூட்டத்திலிருந்து தனித்து வெளியே தெரிவதில்லையே. இங்கு அதனை தனக்கு சாதகாமாக பயன்படுத்திக் கொண்டான் பார்த்திபன்.

காய்களை அழகாக லூங்கின் பக்கம் திருப்பிய பார்த்திபனுக்கு அப்போதுதான் மனம் சமன்படுவதைப் போலிருந்தது.

“வாட் ஹேப்பன் டெல்.”

டன் என்பதைப்போல் டெல்வின் பெருவிரலை உயர்த்திக் காண்பித்தான்.

விஷமமாகப் புன்னகைத்த பார்த்திபன், மீட்டிங் ஹாலை நோக்கிச் செல்ல, டெல் பின் தொடர்ந்தான்.

பார்த்திபனை கண்டதும் அனைவரும் தன்னைப்போல் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர்.

முதன்மையாக தன்னுடைய இருக்கையில் தோரணையாக அமர்ந்தவன், கூலர்ஸை கழட்டிவிட்டு நேர்பார்வையாக அங்கு நின்றிருந்த பதினோரு பேரையும் குத்தி கிழித்தான்.

“யார் அவங்களுக்கு பாஸ் கொடுத்தது?”

கர்ஜனையாக அவ்வறையில் பார்த்திபனின் குரல் எதிரொலித்தது.

ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டனரேத் தவிர, யாரும் வாய் திறக்கவில்லை.

“ஒட்டுமொத்தமாக இவங்க எல்லோருக்கும் டெர்மினேஷன் கொடுங்க” என்று டெல்லிடம் கூறியவன், “இவங்களுக்கு அடுத்திருக்கும் அனைவரையும் வரச்சொல்லுங்க, அதில் பாஸ் செக்கிங், கார்ட்ஸ், மேனேஜர்ஸ் எல்லாரும் இருக்கணும்” என்ற பார்த்திபன் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி காவல் துறையின் உயர் அதிகாரியை காண விரைந்தான்.

செல்லும் வழியில் தேவராஜ் பலமுறை அவனை அழைத்தும் பார்த்திபன் அதனை ஏற்கவில்லை.

தந்தை மட்டுமில்லை என்றால் எப்போதோ அந்த லூங்கை தொழில் உலகில் அழித்திருப்பேன். எல்லாவற்றிற்கும் நட்பு என்று தேவராஜ் முன்நின்றது தான் காரணம். அதனால் தான் அவன் தன்னையே ஆட்டம் காண வைக்க நினைத்தானென்று பார்த்திபனின் மொத்த கோபமும் தந்தையின் பக்கம் திரும்பியிருந்தது.

பார்த்திபனின் பணம் அவனை எவ்வித தடையுமின்றி நேரடியாக காவல்துறை முதன்மை அதிகாரியை காண வழி செய்தது.

பார்த்திபன் யாரென்று அறிந்த அதிகாரி,

“நிச்சயம் இதனை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை” என்று தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“எத்தனை கிராம்ஸ்?” அவரின் நம்பகத்தன்மை தன்னை பாதிக்கவில்லை என்பதைப்போல் தான் வந்த விடயத்தில் கண்ணாய் இருந்தான் பார்த்திபன்.

தொழில் உலகின் சக்ரவர்த்தி பார்த்திபன். பல அரசியல்வாதிகள் அவனின் கைகளில். சட்டதிட்டங்கள் அங்கு கடுமையானதாக இருப்பினும், பார்த்திபனை பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.

ஆதலால் பார்த்திபனுக்கு பதில் அளித்தார். பதில் கொடுக்க வேண்டிய இடத்திலும் அவர் இருந்தார்.

“சிக்ஸ் கேஜிஸ்.”

“ம்.” சில நொடி அமைதி.

“மீடியாக்கு நாங்க நியூஸ் கொடுக்கல.”

“ஐ க்னோவ்.”

“நியாயமாகப் பார்த்தால் தி வாரியரின் நிர்வாகி என்ற அடிப்படையில் உங்களுடைய அப்பாவை கைது செய்திருக்க வேண்டும். நீங்க வருவீங்க தெரியும். அதான்.”

எதனை எதிர்பார்த்து லூங் அதனை செய்தானோ, அது நடைபெறாமல் இருப்பதற்கு காரணத்தை அவர் கூறினார்.

“அவங்க யார் பெயரை சொல்றாங்க?”

“மிஸ்டர். தேவராஜ் பெயரில் நீங்க சொல்லித்தான் கடந்த இரண்டு வருடங்களாக செய்வதாக…”

“ஹோ…”

அவர் வாக்கியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் பார்த்திபனிடத்தில் பிரதிபலிப்பு.

“நான் அவங்களை மீட் பண்ணணுமே!”

காவல்துறை அதிகாரி தயக்கம் காட்டினார்.

“யாரை உங்கக்கிட்ட பேச சொல்லணும். பிரசிடெண்ட் ஒகேவா?”

“நோ… நோ… சார். ஐ க்னோவ் யூர் பவர். நானே கூட்டிட்டுப்போறேன்.”

“குட்.”

அவரே ஒரு செல்லிற்குள் பார்த்திபனை கூட்டிச்சென்றார்.

இரு ஆண்கள் அங்கு விசாரணைக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் உடலில் சில அடிகளின் தடம் பதிந்திருந்தது.

“நல்ல கவனிப்பு.” கூறியவன், அவர்களுக்கு முன்னிருந்த மேசையில் குதித்து அமர்ந்தான். ஆஜானுபாகுவான அவனின் தோற்றத்தில் அவர்களுக்கு பயந்து வந்தது.

“உங்க பெயர்?”

அவர்கள் இருவரும் அதிகாரியை பார்த்தனர்.

“கேள்வி கேட்டது நான்.” நிசப்தமான அவ்வறையில் பார்த்திபனின் குரல் ஓங்கி ஒலித்தது.

“நீங்க யாரு?”

பார்ப்பதற்கு போலீஸ் போன்ற தோற்றம் பார்த்திபனிடத்தில் இல்லை என்பதால் இருவரும் ஒன்றாக வினவினர்.

அவர்கள் கேட்டதற்கு அட்டகாசமாக சிரித்த பார்த்திபன்,

“ஆர் யூ நோட் இட்?” எனக் கேட்டான் அதிகாரியிடம்.

அவரும் பார்த்திபன் கேட்பது புரிய ஆமென்று தலையசைத்தார்.

“சரி சொல்லுங்க உங்களை ட்ரக்ஸ் சப்ளை பண்ண சொன்னது யார்?”

ஆம் தி வாரியரில் உள்ள மது கூடத்தில் பார்த்திபனின் பெயரை கொண்டு போதை மருந்து விநியோகம் நடைபெறுகிறது என்ற தகவலின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்ய, எவ்வித சிரமமின்றி அவர்கள் இருவரும் சிக்கினர்.

கையில் ஆறு கிலோ பவுடர் போதை மருந்து வைத்திருந்தனர்.

பெரிய பெரிய ஹோட்டல்களில் விருந்தினர்கள் போன்று வந்து இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்கள் சகஜம் என்பதால் அங்கு வைத்து எவ்வித விசாரணையுமின்றி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க முதலில் சொல்ல மாட்டோமென்று பிடிவாதமாக இருந்தவர்கள், போலீசின் அடிக்கு பயப்படுவதைப்போல் நடித்து பார்த்திபனின் பெயரை கூறியிருந்தனர்.

பார்த்திபனின் ஒழுக்கத்தை பற்றி மீடியாக்களில் அவனைப்பற்றி வரும் பல கட்டுரைகள் மூலம் அறிந்திருந்த அதிகாரி மீண்டும் தன்பானியில் விசாரிக்க, இறுதிவரை அவர்கள் சொல்லியது என்னவோ பார்த்திபனின் பெயரை மட்டும் தான்.

அப்போதே காவல் நிலையத்திலிருந்து டெல்வினிற்கு செய்தி கசிந்தது.

ஏற்கனவே தங்களது இடத்தில் இப்படியொன்று நடந்துவிட்டதே, போலீஸ் வந்து சென்றது தெரிந்தாலே பார்த்திபன் அனைவரையும் தன் கோபத்தால் வதைத்திடுவான் என்று பயந்திருந்த டெல்… இப்போது தான் கேட்ட செய்தியில் இதனை பார்த்தியிடம் எப்படி சொல்வதென்று தயங்கி தடுமாறி, ‘சொல்லாமல் இருக்க முடியாது… இரவிற்குள் சரிசெய்திட வேண்டும் இல்லையென்றால் பார்த்திபன் ஊரில் இல்லாததால் அவருக்கு பதிலாக தேவராஜ் கைதாகலாம்… அதோடு வாரியரின் மீது கரும்புள்ளி விழுந்திடும்’ என அனைத்தையும் அலசி ஆராய்ந்ததோடு இப்போது பார்த்திபன் இங்கிருப்பது அவசியம் என்பதை உணர்ந்து ஒருவாறு தைரியத்தை வரவழைத்து அவனிடம் சொல்லிவிட, துரித நிலையில் வந்து சேர்ந்த பார்த்திபன் தன் வழியில் நேர்ந்திருக்கும் தவறை சரி செய்து கொண்டிருக்கிறான்.

மீண்டும் தன் வினாவை பார்த்திபன் அழுத்தி கேட்க…

“எங்க பாஸ் பார்த்திபன். அவர் சொல்லித்தான் செய்தோம்” என்று அவனிடமே கூறினர்.

“யா… வெல்” என்ற பார்த்திபன், “நீங்க உங்க பாஸை நேரில் பார்த்ததில்லையா?” என்க அவ்விருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தனர்.

“இதுவரை பார்த்தில்லைன்னா இப்போ பாருங்களேன்” என்ற பார்த்திபன் மேசையிலிருந்த எழுந்து கால்களை அகட்டி வைத்து தோரணையாக நின்றான்.

அவனின் கண்களில் தெரிந்த தணலில் இருவரின் தொண்டைக்குழியும் பயத்தில் ஏறி இறங்கியது. நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. சிங்கத்திடம் சிக்கிக்கொண்ட உணர்வு.

பார்த்திபன் நேரடியாக வருவானென்பதோடு அவன்தான் பார்த்திபனென்று அவர்கள் நினைக்கவில்லை. அப்பட்டமாக பயம் கண்ணில் தெரிந்தது.

காவல்துறை அதிகாரியே அவன்முன் அமைதியாக நிற்க, தற்போதுதான் பார்த்திபனின் உயரம் அவர்களுக்குப் புரிந்தது.

பார்த்திபன் எத்தகைய உயரமான இடத்தில் இருக்கின்றான் என்பது தெரிந்ததும் அவனின் காலினைக் கட்டிக்கொண்டு இருவரும் தங்களை விட்டுவிடுமாறு மன்றாடினர்.

“சரி சொல்லுங்க… நடந்தது என்ன?”

ஒரு நொடி தயக்கம் காட்டியவர்கள், லூங்கின் காரியதரிசி சொல்லியதை தாங்கள் செய்ததாகவும், போலீசிடம் மாட்டிக்கொண்டால் பார்த்திபனின் பெயரை சொல்லிவிட சொல்லியதையும் அவர்கள் ஒன்றாககூற அதனை அதிகாரி பதிவு செய்துகொண்டார்.

“சாரி மிஸ்டர்.பார்த்திபன்.”

உண்மை அறிந்ததும் அதிகாரி தன் மன்னிப்பை வேண்டினார்.

“அடுத்து என்ன?” பார்த்திபன் அர்த்தமாக வினவினான்.

“எங்க கடமையை செய்றோம்” என்றவரின் பதிலுக்கு,

“ஒருத்தரை மாட்டிவிட சிக்ஸ் கேஜிஸ் கொக்கைன் யூஸ் பண்ணியிருக்காங்க, அதுக்கு அவங்களுக்கு எப்படி ட்ரக்ஸ் கிடைச்சிருக்கும்” என்று சந்தேகம் எழுப்புவதைப்போல் லூங்கின் மறைமுக இருட்டு உலகை மாட்டிவிடச் செய்தான்.

“இந்த கோணத்தில் விசாரிப்பதாக” அதிகாரி சொல்லியதும்,

“இந்த நியூஸ் நாளை அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியிருக்க வேண்டும். லூங் என்ற பெயர் அனைவரின் வாயிலும் விழுந்திருக்க வேண்டும்” என்ற பார்த்திபன் தன் பழியைத் தீர்த்துக் கொண்டதற்கான சந்தோஷத்தை முழுவதுமாக அனுபவிக்க லூங்கை காணச் சென்றதோடு இன்னும் தன்னைக் காத்துக்கொள்ள எந்தவொரு அடியும் எடுத்து வைக்கவில்லை என்பதான மாயத் தோற்றத்தை காட்டிவிட்டு வந்தான்.

வாரியருக்குள் நுழைந்தவனுள் புது ரத்தம் பாய்வதைப்போலிருந்து.

போதைப்பொருள் விநியோகம் என்பது சாதரணமல்லவே. லூங் எண்ணியதைப்போல் நடந்திருந்தால், இந்நேரம் பார்த்திபன் சிறையில். வாரியரின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். நினைக்கவே வலி தந்தது.

“பார்த்தி…?”

லாபியிலேயே சிலையென நின்றிருந்தவனை உலுக்கி நிகழ் அழைத்தான் டெல்.

“ஜஸ்ட் எமோஷன்ஸ் டா” என்றவன், “ஹவ் இஸ் சோசியல் மீடியா?” எனக் கேட்டான்.

“சும்மா அதிருது.”

டெல்லின் பதிலில் பார்த்திபனின் உதடு நெலிந்தது.

“இது பத்தாது…” எனக்கூறியவன், “லூங்கை பார்க்கணுமே!” என்றான்.

“அதற்கு அவசியமே இல்லை. அவரே வராரு.”

“இஸ் இட்” என்ற பார்த்திபன் திரும்பி பார்க்க… அதீத சீற்றத்துடன் பார்த்திபனை நெருங்கிய லூங், அவனின் கழுத்தில் கை வைக்க போக லாவகமாக நகர்ந்தான்.

“நான் யார் கையிலும் அவ்வளவு எளிதில் சிக்கமாட்டேன் மிஸ்டர்.லூங்.” பார்த்திபனின் வார்த்தைகள் நிறைய அர்த்தங்களை கொடுத்தன.

“என்னை மொத்தமா காலி பண்ணிட்டல…” ரணமான குரல், கோபத்தில் கொந்தளித்தது.

“நீங்க காலி பண்ண நினைத்தது இந்த பார்த்திபனை.” தீ ஜூவாலை என தகித்த முகம்… புன்னகையில் தோய்ந்திருந்தது. அது பகை முறித்த வெற்றிக்கு சான்று.

“தொழிலில் வீழ்த்த நினைத்த என்னை, என் மரியாதை கௌரவத்தின் மீது கைவைத்து மொத்தமா சாய்ச்சிட்டல.”

“அஃப்கோர்ஸ்… நீங்க தொட நினைத்தது என்னை. இதுவே என் இடத்தில் குறைவு தான். போதாதுன்னா இன்னும் செய்யட்டுமா?”

“டேய்…” பாய்ந்திடும் வேகத்தில் கத்தியவர், அங்கிருப்போர் அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து… அங்கிருந்து வெளியேறினார்.

“இவர் தானே லூங். அந்த வீடியோவில் இருந்தது.” ஒருவர் மற்றொருவரிடம் கேட்டது, அவர்களை கடந்து சென்ற லூங்கிற்கு தெளிவாகவே கேட்டது.

“இவருக்கே இவருடன் இருந்த பெண் வயதில் பிள்ளைகள் இருப்பார்கள் போலவே.”

அந்த வார்த்தையில்… யாரோ பலம் கொண்டு மண்டையில் ஓங்கி அடித்த உணர்வு அவருக்கு.

அவர்கள் பேசியது பார்த்திபனுக்கும் தெளிவாகக் கேட்க… அவன் எதிர்பார்த்ததுதானே, முகத்தில் தோன்றிய புன்னகையை மறைத்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

லூங் அதீத போதையில் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்டுத்தீப்போல் ஊடகங்களிலும் இணையத்திலும் பரவியது. அதற்கு காரணம் பார்த்திபனே. தன் நிழலையே பிறர் தொட அனுமதித்திடாதவன் தன் சாம்ராஜ்யத்தை தொட நினைத்தால் விட்டுவிடுவானா?

எந்த மீடியாவில் தன்னுடைய பெயரை பரவச்செய்து சந்தோஷம் காண லூங் விழைந்தானோ அதையே திரும்பி அவனுக்கு அளித்திருந்தான் பார்த்திபன்.

விடயம் இணையத்தில் எளிதாக மூலை முடுக்கிலும் பரவியிருக்க… வீடியோவை வைத்தே அவருக்கு எப்படி போதைப்பொருள் கிடைத்தது எனும் வகையில் அவரது தொழில் இடங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்து சோதனை செய்ய, அண்டர் டார்க்கில் ட்ரக்ஸ் உலகின் தாதா லூங் என்பது தெரியவர, அதற்கு சாட்சியாக தி வாரியரில் கைது செய்யப்பட்ட இருவரும் இருக்க லூங் எளிதாக மாட்டிக்கொண்டர்.

தன் பொருள் வைத்தே சிக்குண்டார்.

போதைப்பொருள் கடத்தலில் வெளிவருவது மிகக் கடினமென்று அவருக்கும் தெரியும். அதனாலேயே பார்த்திபனை அவ்வழக்கில் சிக்க வைக்க நினைத்து திட்டம் போட்டார். அவரின் திட்டம் அவருக்கே வினையாக முடிந்தது.

இந்த வயதில் பெண்ணுடன் அவர் போட்ட ஆட்டத்தை கண்ட அவரின் குடும்பம் மொத்தமாக அவரை ஒதுக்கி வைத்தனர். அதன் விளைவு அவரை வெளியில் எடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை.

பார்த்திபன் நடத்திய இந்நிகழ்வால் லூங்கை விட அதிகம் பயந்தது நியோ மற்றும் வில் தான்.

பார்த்திபன் இந்தளவிற்கு இறங்கி அடிப்பான்… ஒருத்தரின் வாழ்வையே நிர்மூலம் ஆக்குவான் என்று நினைத்துக்கூட பார்த்திடாத இருவருக்கும் லூங்கின் நிலையை பார்த்து தங்களுக்கு அவன் கொடுத்த பதிலடி எவ்வளவோ தேவலாம் என்பது தான்.

“இனி அவன் பக்கமே திரும்பாதே!”

நியோ தன் தம்பி வில்’லை எச்சரித்தவனாய்.

வில்லும் அரண்டு போயிருக்க… பார்த்திபனிடம் ஒதுங்கியே இருக்க அந்நொடி முடிவெடுத்திருந்தான்.

“டேய் பார்த்தி காலையிலிருந்து நூறு முறையாவது அங்கிள் கால் பண்ணியிருப்பாருடா… நீ எடுக்கலன்னு என்னை திட்டுறாருடா.” அப்பாவியாகக் கூறினான் டெல்.

“மீட்டிங் ஹாலில் எல்லோரும் ரெடியா?”

“கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமா உனக்குத்தான் வெயிட்டிங்” என்ற டெல் மீட்டிங் ஹால் நோக்கிச் செல்ல… பத்து நிமிட இடைவெளியில் பார்த்திபன் உள் நுழைந்தான்.

அனைவரும் அவனின் வருகையில் மிரண்டிருந்தனர்.

“இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. அதற்கு நீங்கலாம் என்ன பதில் சொல்லப்போறீங்க?” அதிரடியாக வினவினான்.

பாஸ் செக்கிங்… செக்யூரிட்டி… மேனேஜர்ஸ் என அனைவரும் கை காட்டியது, பாதுகாப்பு பிரிவில் இருக்கும் எச்.ஆர்’ஐ.

அடுத்து அவருக்கு என்ன நடந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமோ!

தவறு என்றால் பார்த்திபனின் அகராதியில் தண்டனை என்பது நிச்சயம். மன்னிப்பே கிடையாது.

அனைவரையும் தன் விரல் நுனியில் ஆட்டுவிப்பவன்… அவனை ஆட்டுவிக்கும் கண்ணாட்டியின் விழி அசைவிற்கு ஆடயிருக்கிறான்.

ஆட்டுவிக்கும் இடத்தில் இருப்பவரும் ஓர் நாள் அடங்கித்தான் ஆகவேண்டும் என்பதை அனுபவித்து தெரிந்துக்கொள்ளவிருக்கிறான்.

error: Content is protected !!
Scroll to Top