அத்தியாயம் 🌾 13 :
தன்னுடைய அறையின் வாயிலில் வந்து நின்ற மலரை முகி கண்களில் தெறிக்கும் ஆச்சரியத்தோடு பார்த்து சிலையென நின்றான்.
மலர் அவனிடம் வந்திருப்பதை அவனால் நம்ப முடியவில்லை.
‘உண்மையில் மலர் தான் தன் கண் முன் நிற்கின்றாளா?’ தன்னைத்தானே கிள்ளி பார்த்துக்கொண்டான்.
அதுவரை தயக்கத்துடன் முகியை நிமிர்ந்தும் பாராது வாயிலில் நின்றிருந்தவள், கண் இமைக்கும் நொடியில் பாய்ந்து வந்து முகியை அணைத்து அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்திருந்தாள்.
“முகி மாமா…”
இதனை சுத்தமாக முகியால் நம்ப முடியாமல் போனது. முகியை பார்ப்பதற்கே முகம் மறுப்பவள் இன்று அணைத்து நின்றாள் அவனின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
உறைநிலையில் இதயத்தின் துடிப்பை உறைய வைத்துக் கொண்டிருந்தான்.
சட்டையைத் தாண்டி நெஞ்சை தீண்டிய ஈரத்தில் தன்னிலை மீண்டவன்,
“டேய் மலர்… என்னாச்சுடா?” என்று வினவியவன், தன் விரல் கொண்டு அவளின் முகம் உயர்த்தினான்.
“நான் மாமா சொல்லலாமா?”
அவளின் கேள்வியில் என்றோ முட்டாள் தனமாக தான் நடந்துகொண்டதை எண்ணி இப்போது வருந்தினான். காலம் கடந்து மன்னிப்பை யாசித்தான்.
“சாரிடாம்மா.”
நேற்றிலிருந்து தன்னை மீறி நடந்த நிகழ்வுகளால் தன் உணர்வுகளை காட்டிட முடியாது, உள்ளுக்குள் அழுத்தி வைத்ததன் விளைவு… தன் கட்டுப்பாடுகளை உடைத்து சேர வேண்டிய தோள் சாய்ந்தாள்.
அவளது பக்கம் சொல்லி அழக்கூட ஆளின்றி தவித்தவள், தனக்கான இடத்தை தேடியே முகியிடம் வந்திருந்தாள்.
முகியின் மீது இன்னமும் சொல்லிக்கொள்ள முடியா வருத்தம் அவளுள் உள்ளதுதான். இருப்பினும் தவிக்கும் அவளின் மனம் அமைதி வேண்டி தேடியதும் அவளவனைத்தான்.
அடுத்து என்னவென்று யோசிக்கும் திறனின்றி, மனதோடு போராடிக் கொண்டிருந்தாள்… இந்நொடி, தனக்கானவனிடம் தஞ்சம் கொண்டுள்ள அந்த நாழிகை அனைத்தும் இதமாக மாறுவதை பாவையவள் உணர்ந்தாள்.
பார்க்கும்போதெல்லாம் முறைத்துக்கொண்டும், காதலை சொல்லும் போதெல்லாம் சுட்டு எரிப்பதுமாய் இருந்தவள் தனது ஆறுதல் தேடி முகியை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்.
மற்ற விஷயமென்றால் கயலின் மடி சாய்ந்திருப்பான். ஆனால், இதில்… தன்னை ஆளாக்கி பார்க்க நினைக்கும் அக்காவிற்கு நல்லதென்று ஒன்றும் செய்யாமல்… அவளில்லாமலே தன் வாழ்வின் முக்கிய நிகழ்வை தானே நடத்திக்கொண்டதில் இருக்கும் குற்ற உணர்வால் கயலை நெருங்க அவனால் முடியவில்லை.
அதனால் அவனுமே வெளியில் தன்னை சாதரணமாகக் காட்டிக்கொண்டாலும்… உள்ளுக்குள் தவித்துதான் இருந்தான். இப்போது மலரின் அணைப்பில் தன்னை தேற்றிக் கொண்டான்.
முகியின் மன்னிப்பு அவளை சுயம் மீட்டது.
அவனிலிருந்து விலக பார்த்தவளை தடுத்தவன்,
“இப்படியே இருடா ப்ளீஸ்! மனம் லேசான ஃபீல்.” அதற்கு மேல் அவளால் விலக முடியுமா என்ன? மீண்டும் அவனை நெருங்கி அணைப்பை இறுக்கினாள்.
“என் சாரியை அக்செப்ட் பண்ணிட்டியா மலர்?”
முதல் அணைப்பு. தன் மனம் கவர்ந்தவனுடன். அவனே வேண்டிய பிறகு தள்ளியிருக்காது அவனுடன் ஒண்டியவள், அவளவனின் வாசத்தில் கிறங்கி நிற்க, முகி கேட்டது புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
“அம் ரியலி சாரி மலர். அப்போ… இப்போ. ரெண்டு விஷயத்துக்குமே சாரி.”
“தெரியல… மன்னிச்சிட்டனா, இல்லையா! ஆனால் எனக்கு இந்த நேரம் உங்களைத்தான் தேடுது” என்றவளின் அணைப்பு இறுகிக்கொண்டே செல்ல இருவரின் நினைவுகளும் கடந்த காலம் நோக்கி சென்றது.
அப்போது மலர் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். முகி கல்லூரியில் இரண்டாம் வருடம்.
அப்போதெல்லாம் முகியும் மலரும் நன்றாக பேசுவார்கள். விடுமுறைக்கு வரும்போது ஒன்றாக அமர்ந்து விளையாடி பொழுதினை போக்கியிருக்கின்றனர்.
கயலுக்கு மலரை பிடிக்கும். அதோடு தங்கள் வீட்டிலேயே இருப்பதால், முகிக்கும் மலரை பிடிக்கும் என்பதைவிட பிடிக்காமலிருக்க காரணம் ஒன்றும் இல்லை.
அந்த வருடம் முதல் செமெஸ்டர் விடுமுறையில் முகி தன்னுடைய நண்பர்களை கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தான். அவர்கள் அனைவரும் நகரத்தின் செழுமையில் வளர்ந்தவர்கள்.
அன்று மாலை பள்ளிக்கு சென்று வந்த மலர் கண்டது,
முகியின் நண்பர்களில் இருவர், அங்கிருந்த ஆட்டுக்குட்டியை வீட்டிற்கு முன் ஓடும் பெரிய வாய்க்காலில் தூக்கி போடுவதும், அது ஏற முடியாது வரப்பு ஏறி நிற்கவும் மீண்டும் அதை அவர்கள் தூக்கி போடுவதுமாக இருந்தனர். அத்தோடு கொட்டமடித்து சிரிப்பு வேறு.
அதனை கண்டதும் மலருக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ,
அவ்விருவரின் முன் நின்று புசுபுசுவென மூச்சினை வெளியேற்றி… “ரெண்டு பேருக்கும் அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லையா?” எனக் கேட்டாள்.
“ஏய் யாருக்கிட்ட…” என்று எகிறிய ஒருவன், மலரை அடிக்க கை ஓங்க, அவன் உணரும் முன் கையினை தடுத்து அவனை அடித்திருந்தாள் மலர்.
“யாரு நீ?” எனக்கேட்டு இன்னொருவன் அருகில் வர அவனை பிடித்து வாய்க்காலில் தள்ளியிருந்தாள். அவனின் கையிலிருந்த ஆட்டை வேகமாக உருவியிருந்தாள்.
“இப்போ எப்படியிருக்கு?” என்று நக்கலுடன் மலர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே…
“மலர்” என்ற முகியின் குரல் கர்ஜனையாக அவளின் பின்னால் ஒலித்தது.
மெல்ல சாவதினமாக திரும்பியவள்,
“என்ன மாமா” எனக் கேட்டாள்.
“எதுக்கு என் ஃபிரண்டை தண்ணியில தள்ளுன?”
“என்னது உங்க பிரண்டா?”
“ஆமா.”
“உங்களுக்கு இந்த மாதிரி ஃபிரண்ட்ஸ்லாம் இருக்காங்களா?” என்று கேட்டவளின் குரலில் என்ன இருந்ததோ. ஆனால் முகியின் அருகில் மலரிடம் அரை வாங்கி நின்றவனுக்கு அவளின் வளைந்த இதழ்கள் ஏளனம் செய்வதுபோல் இருந்தது.
“யாருடா மச்சி இந்த பிசாசு… பெரியவங்குற மரியாதை கொஞ்சமும் இல்லாம இப்படி பேசுறாள்.
உன்னை மாமான்னு வேற சொல்லுறாள்.
உன் மாமன் மகளா இந்த பஜாரி. உங்க வீட்டில் மற்ற பொண்ணுங்களும் இவள் மாதிரி தானா? எனக்குலாம் ஃப்ரியா கொடுத்தாலும் இப்படியொரு மாமா பொண்ணு வேண்டவே வேண்டாம். மாமாவாம் மாமா, அப்படி சொல்ல நல்லாவா இருக்கு. இதுவே பேபி, ஹனி, டியர், டார்லிங் இப்புடி சொன்னால் செம கிக்… படிச்சாலும் வில்லேஜ் பீப்பிள் மாறுவதில்லை. சரியான பட்டிக்காடு” என்று மூச்சு விடாது தன் ஆத்திரம் மொத்தத்தையும் வார்த்தையில் காண்பித்தான் அவன்.
அவனின் வார்த்தைகள் முகிக்கு அவமானமாக இருந்தது. தன் நண்பனின் முன்னால் இப்படி நடந்துகொண்டாளே என மலரின் மீது சினம் கொண்டான்.
வாய்க்காலில் வீழ்ந்தவன்,
“டேய் என்னை தூக்கி விடுங்கடா” என்று கதற, அவனை முகி கை பிடித்து இழுக்க… நன்கு பெருத்திருந்த அவனை மெல்லிய உடல்வாகு கொண்ட முகியால் இழுக்க முடியவில்லை… அவனின் பலம் முகியை அவன் பக்கம் இழுக்க வரப்பு சகதி வழுக்கி முகியும் நீருக்குள் விழுந்தான்.
“அய்யோ முகி மாமா” என்று அலறிய மலர் தனக்கு முன்னால் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமின்றி மலரையும் முறைத்துக்கொண்டு நின்றவனை, மற்றைய பக்கம் ஒரே தள்ளாக தள்ளிவிட்டு, “கை கொடுங்க மாமா” என்று தன் கையை நீட்டினாள் முகியிடம்.
மலர் இவர்களிடம் பேச போனதால் தான் எல்லாம் என்றதோடு அவனின் நண்பன் வேறு சற்று கீழிறக்கி பேசியிருக்க, அந்த மொத்த கோபமும் முகிக்கு மலரிடம் திரும்பியது.
“யாருக்கு யாருடி மாமா. உங்க அப்பாவை நான் மாமா சொன்னால் நீயெனக்கு மாமா பொண்ணாகிடுவியா? எங்கம்மா உங்கப்பாவுக்கு தங்கச்சியா இல்லாதப்போ நானெப்படிடி உனக்கு மாமா ஆவேன். இனியொரு முறை சொல்லிப்பார், வாய் சுண்ணாம்பு இல்லாமலே சிவந்திடும்” என்று நடந்தது அறியாது வார்த்தைகளைக் கொட்டினான்.
“நடந்தது என்னன்னு தெரியாம நீபாட்டுக்கு பேசாத மா…”
மாமா என்கிற வார்த்தையை முகி முடிக்கக்கூடயில்லை.
அவளைத் திட்டிக்கொண்டே கரையில் ஏறி நின்றவன், மீண்டும் அவள் மாமா என்று சொல்ல வர அவளின் கன்னத்திலேயே அறைந்திருந்தான்.
“திரும்ப மாமா சொல்ற நீ” என்றவன் அவளின் கழுத்தை பிடித்து நெரித்து “அவன் என்ன வேணா செய்திருக்கட்டும். அதுக்கு நீ அவனைத் தள்ளிவிடுவியா?” என்று சீறினான்.
தொண்டையில் முகியின் கை அழுத்தத்தைக் கூட்டிட, கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் தொட்டது.
“ச்சீய்…” என்று உதறியவன் வேகமாக தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டான்.
சற்று நிதானத்திற்கு வந்த பின்பே, மலர் தெரியாதவர்களிடம் அப்படி நடந்துகொள்பவள் இல்லையென்ற எண்ணம் தோன்ற, தன் நண்பனிடம் நடந்தை கேட்டான். தங்கள் பக்கமிருக்கும் தவற்றை மறைப்பதற்காக முதலில் சொல்ல மறுக்க… அடுத்து முகியின் முறைப்பில் சொல்லிவிட்டான்.
முகி தன் கன்னத்தில் தானே ஒன்று போட்டான்.
‘ஆச்சோ உண்மை தெரியாம ரொம்ப பேசிட்டனே!’ என்று உண்மையிலேயே வருந்தியவன், மலரிடம் மன்னிப்பு வேண்டிட அவளோ கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப்போல் அவனை பார்திருந்துவிட்டு, முகி மன்னிக்கக்கோரி சொல்லியதும் அவ்வளவு தான் பேசிட்டியா என்பதைப்போல் சாதாரணமாக அவனை கடந்து விட்டாள்.
ஒரு கட்டத்தில் சிறு பெண்ணிடம் அதற்கு மேல் இறங்கிப்போக அவனின் ஈகோ இடமளிக்கவில்லை.
அத்தோடு முகியின் பக்கம் பார்வையை நகர்த்துவதற்குக்கூட மலர் தன் கண்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. அவனிருக்குமிடத்தில் தன் பெயர் நுழைவதைக்கூட மலர் விரும்பவில்லை.
மொத்தமாக முகியை ஒதுக்கி வைத்தாள். தள்ளிச் செல்ல செல்ல, மனதால் அவனை நெருக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அந்நெருக்கத்தின் காரணம் சரியான தருணத்தில் புரிந்திட, தன்னோடு தன் ஆசைகளை மறைத்துக்கொண்டாள்.
இருவரும் நினைவிலிருந்து மீள, முகி தான் பேச்சினைத் துவங்கினான்.
அவளின் கன்னங்களை தன்னிரு கைகளிலும் ஏந்தி… “ஐ லவ் யூ மலர். லவ் யூ சோ மச்” எனக்கூறி அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
உச்சி முதல் பாதம் வரை ஓடி மறைந்த சிலிர்ப்பை முதல்முறை உணர்கிறாள். காதலின் ஒற்றை முத்தத்திற்கே தொய்ந்து அவன்மீது சரிந்தாள்.
“மலர்… டேய் மலர்…” பதறியவனாய் முகிலன்.
“ஒன்னுமில்லை மாமா. இப்படி உங்க பக்கத்தில், உள்ளுக்குள்ள குட்டியா எதுவோ பண்ணுது.” சொல்லியவளின் முகம் நாணத்தால் ரத்த நிறம் பூசியது.
“டூ யூ லவ் மீ?”
அவனது கேள்வியில் பட்டென்று அவனிடமிருந்து விலகியவள்…
“முதல்ல டாக்டர் ஆகுங்க சார். அப்புறம் சொல்றேன்” எனக்கூறி வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்.
மலர் தன்னை மன்னித்துவிட்டாளா தன்னுடைய காதலை ஏற்றுக்கொண்டாளா என்று தெரியாத போதும்… அதற்கு அவள் விடை கூறிடாத போதும் இருவருக்குள்ளும் முன்பிருந்த விலகல், தூரம் இப்போதில்லை. அதனை மலரே முன்வந்து சரி செய்திருந்தாள்.
காதலே அவனாக இருக்கும்போது, கல்யாணமே நடந்து முடிந்திருக்க… அவனுடன்தான் வாழ்வு என்றிருக்க, என்றோ நடந்த அர்த்தமற்ற விடயத்திற்கு வெறுப்பை இழுத்து பிடிப்பது சரியல்ல என்று சிந்தித்ததாலே எவ்வித தயக்கமுமின்றி முகியிடம் மனம் அமைதி வேண்டி தஞ்சம் புகுந்திருந்தாள்.
காதல் முழுமையாக பகிரப்படவில்லை என்றாலும், இந்நொடி இருவருக்குள்ளும் ஒரு மென்மையான இதம் இதமாக பரவி… சந்தோஷம் முகிழச் செய்தது.
காதல் கொண்ட மனங்கள் இன்பத்தின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைத்த வேளையில் துன்பத்தை பரிசளிக்க தீயாக திட்டம் வகுத்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
நாளை முகி சென்னை கிளம்பிச் சென்ற வேளையில்… மலரின் நிலை அவன் நினைத்தும் பார்க்காததாக இருக்கப்போகிறது.
*****
“நான் உழவுறேன் கயல்.”
நெல் அறுவடை செய்திருக்கும் இரண்டு ஏக்கர் வயலை தன் புது முயற்சிக்கு பயன்படுத்த கயல் முடிவு செய்திருந்தாள்.
அதன்படி முதல் வேலையாக நிலத்தை உழுது சமன்செய்ய வேண்டும்.
டிராக்டர் வீட்டிலிருக்க அதனை கொண்டு தான் உழுவதாக சிவா சொல்லவும் கயல் மறுத்துவிட்டாள்.
“வேறெப்படி கயல்?”
“முன்னோர்கள் வழி தான் அண்ணா இதுக்கு பெஸ்ட்.” எதையோ முடிவு செய்தவளாகக் கயல் கூறினாள்.
“எனக்கு புரியல கயலும்மா.”
“எல்லாமே இயற்கை வழியில்.” அவளின் பதிலில் அவன் தான் குழம்பி நின்றான்.
“இப்பவும் நாம இயற்கை விவசாயம் தானே கயல் செய்றோம்.” புரியாது கூறினான்.
“ஆமாண்ணா… ஆனால் இந்தமுறை எல்லாமே… சின்ன விஷயம் கூட இயற்கையை சார்ந்ததா மட்டும் தான் இருக்கணும். அதன் முதல் அடியை டிராக்டர் விடுத்து நம்ம மாடு வைத்தே உழுவப் போறோம்” என்றாள்.
“இப்பவே மணி மூனு ஆச்சு. டிராக்டர் வச்சு உழுதாலே ஒரு மணி நேரமாகும்” என்ற சிவாவின் கூற்றை மறுத்த கயல்,
“இப்படி அவசரத்துக்கு செயற்கை வழியில் போய் தான்… இயற்கை முறை முழுசா அழியும் நிலையில் இருக்குண்ணா.
அப்போலாம் மாடுகள் இல்லாத வீடே இல்லை… இப்போ கோழிகள் கூட அரிது தான்.
ஆடு மாடெல்லாம் நாம எதுக்கு வளர்த்தோம். முக்கிய காரணம் அதுகளோட கழிவு, சிறந்த இயற்கை உரம். அதை மட்டுமே போட்டு விவசாயம் பார்த்த நம் முன்னோர்கள் நம்மைவிட அதிக விளைச்சல் செய்தது எப்படி? இயற்கை. அது கொடுக்கும் எல்லாமே! ஆனால் நாமதான் இயற்கையை புரிந்துகொள்ளாம இருக்கோம்.
இப்போலம் மகசூல் குறைய காரணமே செயற்கை உரங்கள் தான். இதில் அமோக லாபம் வர, அதிக உரம் போடணும். இதை நான் சொல்லலை, விவசாயத்தை ஏட்டு கல்வியில் படித்தவன் சொல்லுறான். அவனுக்கு தெரிந்தது வெறும் எழுத்து அறிவுதான். ஆனால் நம் முந்தைய தலைமுறையினர் எதை படிச்சு விவசாயம் பண்ணாங்களாம்? அவங்களோட முறையில் வயிறு வாடாம சாப்பிடலையா என்ன? இப்போலம் யாருண்ணா முன்னோர் சொன்ன முறையில் விவசாயம் பாக்குறா…
அ**ன்னு ஒருத்தரை கூட்டிட்டு வந்து வயலை காட்டுறாங்க. அவங்க இந்த நெல்லை போடு மூட்டை கணக்கு அதிகம் வருன்னு, ஹைபிரிட் விதையை கொடுக்குறாங்க. அது முளைக்கவே தகிடதத்தோம் ஆடுது. அப்படியே முளைச்சாலும், வளர வளர அந்த நோய் இந்த நோயின்னு புதுசு புதுசா நோய்வாய்ப்படுது. அதுக்கும் அவனே அந்த உரத்தை போடு இந்த உரத்தை போடுன்னு எழுதித்தரான். அந்த உரம் பூச்சியை அழிக்குதோ இல்லையோ பயிரை நல்லா அழிக்குது. அதோடவா நிக்குது, அந்த உரம் மண்ணை சூடாக்கிடுது. சூடான மண்ணு மலட்டுத்தன்மையை சீக்கிரம் அடைஞ்சிடும். அப்புறம் என்ன செலவு பண்ணாலும் அந்த மண்ணுல வைக்குற பயிர் பதுறாத்தான் போகும். அடுத்தடுத்து பயிர் வைக்கவே முடியாத அளவுக்கு மண் தன்னோட சக்தியை இழக்குது. இதுக்கு காரணம் யாரு? நாமதான். நாம மட்டும் தான்.
நாம் என்ன செய்றோமோ அதை பலமடங்கு திருப்பி தரும் ஆற்றல் இந்த இயற்கைக்கு இருக்கு. அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும்.
‘நீ எதை விதைக்கின்றாயோ அதையே அறுவடை செய்கின்றாய்.’
ஒரு பயிர் வளர மண்ணு, விதை, தண்ணீர், உரம் இது மட்டும் போதாதுண்ணா. மண்ணுக்குள்ள இருக்க மண் புழு மிக முக்கியம். அடுத்தது பறவைகள். மண் புழு மண்ணோட வளத்தை மேம்படுத்தும். பறவைகள் பயிரை அழிக்கும் பூச்சிகளை உணவாக உட்கொண்டு பயிர்களை பாதுகாக்கும். பயிர்களுக்கு சிறந்த காவல்காரன் பறவைகள் தான். பறவை இல்லனா மகரந்தச்சேர்க்கை இருக்காது. அது இல்லன்னா, விளைச்சல் இருக்காது. இப்போ இதையெல்லாம் சொன்னா என்னத்தான் கேலி செய்து சிரிப்பாங்க” என்றவள் தான் அணிந்திருந்த பாவாடையை ஏற்றிக் கட்டிக்கொண்டு, நீர் நிறைந்த வயலில் காலினை வைத்தாள்.
முதலில் சாதரணமாகத் தொடங்கிய கயலின் பேச்சு இறுதியில் அதீத ஆதங்கத்தோடு நிறைவடைந்தது. அவ்வளவு வருத்தம் அவளுள். இன்று அது சிவாவின் பேச்சினால் சற்று வெளியே வந்தது.
கேட்ட சிவாவிற்கே மலைப்பாக இருந்து.
அவனுக்கே விவசாயத்தில் இவ்வளவு இருப்பது தெரியாது. கயல் சொல்லுவதை ஆர்வத்தோடு செய்திடுவானே தவிர, எதையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள மாட்டான்.
ஆனால் கயலின் பேச்சினால் இன்று அவனுக்கே விவசாயம் அவ்வளவு பிடித்தது.
விவசாயியின் இறப்பு எதற்கு என்கிற காரணமே இங்கு பலருக்கு புரிவதில்லை. அவன் கடனுக்காக இறக்கும் கோழையல்ல. தன் உணர்வோடு கலந்திருக்கும் விவசாயத்தை தன்னால் பாதுக்காக்க முடியவில்லை என்கிற அவனின் குமுறலே அவனின் இறப்பிற்கு காரணம்.
நமக்கு எது உகந்ததோ, ஏற்றதோ அதுவே இங்கு நமக்கு சரியானது. இது புரியும் வரை கயலைப்போல் நாமும் விவசாயம் காப்போம் என்று கொடி மட்டுமே பிடிப்போம்.
‘இங்கு பேச்சைவிட, செயலே சிறந்து.’
கயலை நினைக்கையில் சிவாவிற்கு அவ்வளவு பெருமையாக இருந்தது.
ஏரில் மாடுகளை பூட்டிக்கொண்டிருந்த கயலிற்கு உதவ வேண்டும் என்பதை மறந்து மெச்சுதலாய் புருவ தூக்களுடன் தனக்கு விவசாயம் கற்றுத்தந்த கயலையே பார்த்திருந்தான் சிவம்.
விவசாயத்தை உயிர் மூச்சாய் நினைக்கும் கயலும், சேற்றில் கால் வைப்பதையே முகம் சுளிக்கும் பார்த்திபனும் இணைவது எவ்வழியிலோ?