அத்தியாயம் 🌾 14 :
அன்றைய நாள் கயலுக்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் ஆரம்பித்தது.
தான் நினைத்ததை செய்யும் சந்தோஷம் முழுமையாக அவளின் முகத்தில் தென்பட்டது.
ஒரு ஜோடி மயிலை காளையை சிவா இழுத்துவர, அதனை கயல் ஏரில் பூட்டினாள்.
மயிலை பார்ப்பதற்கு பனங்காய் நிறத்தில் அடர் இருளில் கூட பளபளப்புடன் காணப்படும். கூர்மையான கொம்புகளுக்கு நிகராக அதன் விழிகள் இருக்கும்.
நேற்று இரு குண்டுகள் உழுதிருக்க… மீதமிருக்கும் மற்ற குண்டுகளை இப்போது உழுதிட தாயாராகினாள் கயல். (குண்டு என்பது வயலில் ஒரு சதுர பரப்பினைக் குறிக்கும் கிராமத்து சொல்.)
பாவாடையை முட்டிவரை உயர்த்தி சொருகியவள், மாட்டின் கயிற்றை கையில் இறுகப்பற்றினாள். ஏரின் கூர் முனையை நிலத்தில் அழுந்த குத்தி நின்றவள், வானத்தில் தெரியும் வெய்யோனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் மனதிற்குள் வேண்டியவளாக, ஏரினை சேற்றில் குத்தி நகர்த்தினால். மாடுகள் இரண்டும் கயலின் கையின் அசைவுகளுக்கு ஏற்ப அசைந்து கொடுக்க… ஏர் லாவகமாக சேற்றினை பிரட்டி போட்டது. நீரில் குளிர்ந்த மேற்பரப்பு களிமண் ஏரின் உதவியால் உள்ளே இறங்க, உள்ளே இருக்கும் இறுகிய மண் மேலே வந்து, மாடுகளின் மிதியால் மென்மை அடைந்து… பயிரிடும் முறைக்கு ஏற்றவாறு மெல்ல மெல்ல மாறியது.
கயலின் வேலையில் ஒரு ஆத்மதிருப்தி இருப்பதை சிவாவால் உணர முடிந்தது.
நேற்று கயல் எவ்வாறு நெல் வயலில் மீன் வளர்ப்பு முறைக்கு ஏற்றவாறு வயலை உழுதால் என்பதை கூர்ந்து பார்த்திருந்த சிவா…
அவர்களது வீட்டில் உழவுக்காக வளர்க்கப்படும் மற்றொரு ஜோடியான குடைக்கொம்பனை இழுத்து வந்து ஏரில் பூட்டி தானும் மற்ற வயலில் இறங்கி உழுவலை ஆரம்பித்தான்.
சமமான வயலினை நன்கு சமன் செய்து அதன் பரப்பை விரிவுபடுத்தி… வரப்பின் ஓரம், நான்கு பக்கங்களும் உட்புறம் நான்கு அடிக்கு இரண்டடி ஆழம் செய்து… மையத்தில் நாற்று நடுவதற்கு ஏற்ப நிலத்தினை உழுது தயார் செய்தனர்.
அதற்கே அன்றைய பொழுது பாதிக்குமேல் அவர்களின் நேரத்தை விழுங்கியது.
“ரொம்ப தீவிரமான வேலையா இருக்கே!”
ரத்தினம் காலையிலிருந்து தன்னுடைய பண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றார். உழுத பிறகு நிலத்தின் அமைப்பே வேறு மாதிரியிருக்க… ஒரு ஆர்வத்தில் அவர்களிடம் வந்து பேசினார்.
“நினைத்ததை அடைய இந்த தீவிரம் இருக்கத்தானே வேண்டும்” என்ற கயலின் பேச்சிலிருந்த மகிழ்ச்சியை அவளின் முகமே ரத்தினத்திற்கு காட்டிக்கொடுத்தது.
“ஏதோ, செய்யுறது நல்லா வந்தா சரி” என்றவர், “ஆமா இதுல எப்படி மீன் வளர்த்து லாபம் பார்க்கப்போற?” எனக் கேட்டார்.
“எந்தவொரு செயலுமே முதல்முறையே வெற்றி பெருமென்று சொல்லிட முடியாதே! முதலில் முயற்சி செய்வோம், பின் வளர்ச்சியை பார்ப்போம்!” என்ற கயல் மடையை மாற்ற மண்வெட்டியோடு கீழே குனிந்தாள்.
சில நிமிடங்கள் அவள் மண்வெட்டி பிடிக்கும் தோரணையை எப்போதும்போல் வியந்து பார்த்தவர்,
“இதுல நீ ஜெயிச்சிட்டா… இந்தமுறை விவசாயத்தை எனக்கும் சொல்லிக்கொடு. நானும் ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சுக்கிறேன்” என்றார்.
“இதுலையும் போட்டியா?” சிவா தான் வேகமாகக் கேட்டிருந்தான்.
“போட்டி இருந்தாதான்டா, செய்யுற வேலையில சுவாரஸ்யம் இருக்கும்” என்றவர் அங்கிருந்து சென்றார்.
“இவரை புரிஞ்சிக்கவே முடியல கயல்.”
“புரிஞ்சிக்க முடியாதளவுக்கு அவர் கெட்டவரில்லை” என்ற கயலுக்கு மட்டுமே தெரியும் அவரின் பழிவாங்கல் குணம் மறைந்ததற்கான காரணம்.
ரத்தினத்திற்கு அவரின் மனைவியென்றால் அதீத காதல். ஒரு விபத்தில் அவருக்கு ரத்தம் தேவைப்பட, அந்நேரம் சரளாவிற்கு முடியவில்லையென மருத்துவமனை சென்றிருந்த கயல் அதனை அறிந்து தானாக முன்சென்று அவருக்கு ரத்தம் அளித்ததோடு, அதனை யாரிடமும் சொல்லிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள். சரளா பரிசோதனைக்காக சென்றிருந்த நேரம் கயல் ரத்தம் அளித்ததால், அவருக்கும் அவளின் செயல் தெரியாது.
மருத்துவர்கள் எவ்வளவு சொல்ல மறுத்தும்… “தானம் செய்தவர் தன் பெயரை வெளியில் சொல்வதை விரும்பவில்லை” என்று சொல்லியும் ரத்தினம் பிடிவாதமாக நின்று… “என் உயிரையே மீட்டுத் தந்திருக்காங்க. அவருக்கு ஒரு நன்றிகூட நேர்ல சொல்லலன்னா என் மனசே என்னை சாடும்” என்றுக்கூற…
“உங்க ஊர் தான் அந்தப்பொண்ணு. பெயர் கயல்விழி” என்றார் செவிலி.
அப்பெயரில் ரத்தினம் மனதால் பெரும் அடி வாங்கினார்.
எத்தனை இன்னல்களை கயலுக்கு ஏற்படுத்திருப்பார். அதனையெல்லாம மறந்தவளாக அவள் செய்த உதவி அவரின் மனதிலிருக்கும் பழிவாங்கலை காணாமல் போகச் செய்தது.
செய்த உதவியை சொல்லிக்காட்டிடாத அவளின் பண்பு… அவரிடம் அவளை உயர்த்திக் காட்டியது.
இதுவரை தான் செய்த கெட்டதெல்லாம் கயலிடம் நேராகச் சென்று நன்றி உரைத்திட தடையாக இருக்க… கயலுக்கு தான் கொடுக்கும் இடைஞ்சல்களை நிறுத்திக் கொண்டார்.
இப்போது கயல் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.
ஒருசில அடியோடு வலி தான் மனிதனை நல்வழி படுத்துகிறது.
“என்ன கயல் போற அவரையே பார்த்திட்டு இருக்க?”
“ஒன்னுமில்லைண்ணா.”
“வேலை முடிஞ்சிட்டா ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம், அந்தி வேளை ஆரம்பிக்க போவுது.” உணவு கொண்டு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இருவரும் வயலை கட்டிக்கொண்டு அழுவது சரளாவிற்கு கடுப்பாக இருக்க உரக்க குரல் கொடுத்தார்.
சாப்பிட அமர்ந்த கயல்…
“மலர் வந்துட்டாளா?” என்று வினவினாள்.
“இன்னும் வரல, அவளை கூப்பிடத்தான் மாமா(மாணிக்கம்) போயிருக்காங்க.”
“ம்.” என்ற கயல், தொட்டி சுவற்றின் மீதிருந்த அலைபேசியை எடுத்து மணியை பார்த்தாள். அது மூன்று என்று காட்டியது.
முகிலனுக்கு அழைத்தவள் அவன் சென்னை சென்றுவிட்டதை அறிந்துகொண்டு அழைப்பைத் துண்டித்தாள்.
“கரும்பு ஏஜெண்ட் நாளைக்கு பணம் தரதா சொன்னார். அதை அவரை நேரில் பார்த்து வாங்கி பேங்கில் போட்டுடுங்கண்ணா” என்ற கயலுக்கு மனதில் ஏதோ நெருடுவதை போலிருந்தது.
அவளின் மனம் மலரின் முகத்தையே அடிக்கடி அவளுக்குக் காட்டியது.
என்னவென்று புரியாத போதும் ஏதோ தவறாக நடக்க இருப்பதாக அவளின் உள்ளுணர்வு கூறியது.
உடனடியாக மாணிக்கத்தை அழைத்தவள், “மலரை பார்த்துட்டீங்களா?” என எடுத்ததும் வினவினாள்.
அவளின் நடவடிக்கைகளை அவதானித்தபடி இருந்த சரளாவுக்கு பதட்டம் கூடியது.
“ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்காம் கயலு. இப்போதான் போன் போட்டு சொன்னுது. நான் வெளியதான் நிக்குறேன்” என்றார் மாணிக்கம்.
‘தேர்வு நேரத்தில் என்ன ஸ்பெஷல் கிளாஸ்’ என எண்ணிய கயல்…
“அண்ணா ஏதோ தப்பா இருக்கு. கிளம்புங்க” என்றவள் சரளா என்னவென்று கேட்க பதில் சொல்ல மறுத்தவளாக சிவாவை அழைத்துக்கொண்டு மலரின் கல்லூரி நோக்கி பயணமானாள்.
கயலின் உள்ளுணர்வு சரியா? மலருக்கு என்ன நேர்ந்திருக்கும்?
*******
சீலிங்கை வெறித்தவாறு, காலினை தரையில் ஊன்றி உடல் மட்டும் மெத்தையிலிருக்குமாறு படுத்திருந்த பார்த்திபனின் விழிகளின் காட்சிகள் அங்கில்லை. அவனின் விழித்திரையை கயலின் முகம் நிறைத்திருந்தது.
அப்போதுதான் உடற்பயிற்சி செய்து முடித்திருப்பான் போலும் உடல் முழுக்க வியர்வை
கயலை பார்த்த கணம்… தன்னை ஊடுருவும் காந்த விழி மலர்களில் மொத்தமாக தலைகுப்புற கவிழ்ந்திருந்தான்.
விழிகளின் முகம் தெரியாத போதே… அவவ்விழிகளுக்குள் சிக்கித் தொலைந்து கொண்டிருந்தவன், அதனின் மதி முகத்தில் தன்னை தொலைத்திட்டான்.
“டேமிட்… என்னை என்னவோ பண்றா(ள்).
கயல்ல்ல்…”
நினைத்தவுடன் அவளை சென்று பார்க்கும் தூரத்தில் அவனில்லை. கடல்கடந்து அவனின் சுவாசம் அவளைத்தேடி சுழன்றது.
அவனுடைய மென்பொருள் நிறுவனத்தில் புதிய ப்ரொஜெக்ட் ஒன்று சைன் ஆகியிருக்க, அதற்காக தன்னுடைய மொத்த நேரத்தையும் செலவழித்தான். அவ்வேலை அவனை விழுங்கிக்கொண்டது என்பதே சரியாகும்.
அமெரிக்க நிறுவனம் தொடர்புடையது. அதனை முடித்தால் மேலும் பல மில்லியன் டாலர்ஸ் சுழலும் ப்ரொஜெக்ட்ஸ் அவனின் நிறுவனத்திற்கு கிடைக்கும். அதற்காகவே இரவு பகலின்றி திரிந்தான்.
இதற்கிடையில் தி வாரியரின் பணியும் சேர்ந்து அவனுக்கு சுமை அதிகரித்தது. என்னதான் டெல் பக்க துணையாக இருந்தாலும், தன்னுடைய வேலையை தான் தான் செய்ய வேண்டும். தன்னுடைய வெற்றி அனைத்திற்கும் தானொருவனே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவனின் குணம், நிற்க நேரமின்றி அவனை ஓட வைத்தது.
இதற்கிடையில் கயலின் நினைவு என்று சொல்வதைவிட… ஒவ்வொரு நொடியும் அவளின் ஆக்கிரமிப்பு பார்த்திபனின் இதயத்தில் அதிகமாகிக்கொண்டே சென்றது.
தன்னவள் தன்னுடைய மாமன் மகள், அதிலும் தன்னுடைய அம்மாவிற்கு எல்லாமுமாக இருந்த அவரின் அண்ணனின் மகள் என்பதில் பார்த்திபனுக்கு அத்தனை மகிழ்வு. உடனடியாக அன்னையிடம் சொல்லி, அவரின் முகத்தில் தோன்றும் ஒளியை, ஆனந்தத்தை பார்த்திட அவனின் மனம் துடித்த போதும் பொறுமை காக்கின்றான்.
இன்னும் அவனுக்கு தெரியாத பல, அவனது குடும்பத்தில் உள்ளது. அனைத்தையும் முதலில் பார்த்திபன் தெரிந்துகொள்ள வேண்டும்.
தாய்மாமனின் மீதான தந்தையின் கோபம் அறிந்து, அழகரின் மீது தவறில்லை எனும்பட்சத்தில் அதனை தீர்க்க வேண்டும்.
‘என்னவாக இருக்கும்?’
எப்படியும் தேவராஜ் சொல்லப்போவதில்லை. மங்கை தான் சொல்ல வேண்டும்.
நினைத்த நொடி தன் அன்னையைத் தேடிச் சென்றான்.
ஆம் கட் டீஷர்ட் அணிந்து உடலில் வியர்வையோடு கலைந்திட்ட கேசத்தோடு அப்படியே வந்திருக்கும் மகனைக் கண்டு என்னவோ ஏதோவென்று பதறினார் மங்கை.
எப்போதும் பார்த்திபன் இப்படி வருவதில்லை. அதுவும் சமையற்கட்டின் பக்கம் திரும்பியது கூட இல்லை. அவன், இப்படி கிச்சனிற்குள் வந்ததோடு… மங்கை செய்து கொண்டிருந்த ஸ்டவ்வினை அணைத்துவிட்டு,
“நீங்க பார்த்துக்கோங்க” என்று மெய்ட் இடம் சொல்லிவிட்டு, “வாங்க மாம்” என கைபிடித்து அழைத்துச் செல்லும் மகனின் செயலில் ஒருவித கலக்கத்தோடே மங்கை சென்றார்.
மொட்டை மாடிக்கு அழைத்து வந்தவன், மங்கை வளர்த்து வரும் செடிகள் அடங்கிய தோட்டத்திற்கு நடுவிலிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்து…
“மாம் இந்த செடி மீது நீங்க வைத்திருக்கும் பிரியம் ஆழமானதுன்னா, நான் கேட்குறதுக்கு யோசிக்காம பதில் சொல்லணும்” என்றான்.
அவனது அத்தகைய பேச்சே அவருக்கு கலக்கத்தைக் கொடுத்தது.
“நான் கேட்டதுக்கு அப்புறம், சொல்ல முடியாதுன்னு பின்வாங்கக் கூடாது!” ஒருவித அழுத்தம் அவனின் குரலில்.
“என்ன கேட்கப்போற?”
“கேட்கிறேன் மாம். அதுக்கு முன்னாடி எனக்கு உறுதி கொடுங்க!”
“என்னடா பார்த்தி இது. நீ கேட்டு நான் எதை சொல்லாம இருந்திருக்கேன்.” மகன் ஏதோ வில்லங்கமாகக் கேட்கப்போகிறான் என்று அவருக்கு தெரிந்துபோனது. அதிலிருந்து தப்பும் மார்க்கமின்றி போக, எதுவாக இருந்தாலும் சொல்லிவிட வேண்டியதுதான் என்று மனதை திடப்படுத்தினார்.
“எல்லாமே சொல்லிடுவீங்க அப்படின்னா… என்கிட்ட ஏன் மாம் இதுவரை நம்ம ஊரைப்பற்றி, முக்கியமா மாமாவைப்பற்றி சொல்லல? நான் இருக்கும்போது அவங்களைப்பற்றி பேசியதுகூட இல்லை, ஏன்?”
இன்று அனைத்தும் தனக்கு தெரிந்தாக வேண்டுமென்கிற தீவிரத்துடன் தாயை பார்த்திருந்தான்.
“என் மகனுக்கு உறவுன்னா அது நீயும் நானும் தான். அப்படியொரு சொந்தம் இருக்குன்னு அவனுக்கு உன் மூலமாகத் தெரிஞ்சா, அப்போலேர்ந்து அவனுக்கு அம்மா மட்டும் தான். தகப்பனா நான் இருக்க மாட்டேன்.” பல வருடங்களுக்கு முன்பு முகம் தீ கங்குகளாய் மாறியிருக்க, தியாகராஜன் உதிர்த்த வார்த்தைகள் இன்றும் கர்ஜனையாக மங்கையின் காதில் ஒலித்தது.
“என்னால் சொல்ல முடியாது சின்னத்தங்கம்.” சேலை தலைப்பினை வாயில் வைத்துக்கொண்டு விசும்பினார்.
“இப்படி அழுது இப்பவும் மறைச்சிடலாம் நினைக்காதீங்க மாம்.” பார்த்திபனுக்கு பொறுமை எங்கோ ஓடிப்போகும் நிலை. முயன்று தன்னை கட்டுக்குள் வைத்திருக்கிறான்.
மங்கை வாய் திறந்திடவே பெரிதும் தயங்கினார்.
“உங்க அப்பா?” கேள்வியாக இழுத்தார்.
“உங்க அண்ணனுக்கு எத்தனை பிள்ளைங்க தெரிஞ்சிக்க உங்களுக்கு ஆசையில்லையா மாம்.” எங்கு அடித்தால் அன்னை வாய் திறப்பார் என்பதை சரியாக யூகித்து குளத்தில் (மனதில்) கல் (வார்த்தைகளை) எறிந்தான்.
“பார்த்திபா…” மேடையிலிருந்து எழுந்து விட்டார்.
மெல்ல அவரை நோக்கியவன், “எதுக்கு மாம் இவ்வளவு தவிப்பு. உங்களுக்கு தெரிஞ்சிக்க வேண்டாம் தானே! இல்லைன்னா இத்தனை வருஷம் அமைதியா இருந்திருக்க மாட்டீங்க” என்று மங்கையின் இதயத்தில் மெல்ல ஊசியை இறக்கினான்.
“உனக்குத் தெரியுமாப்பா?” மங்கையின் கண்களில் அழுகையும் ஏக்கமும் போட்டிபோட்டது. உணர்வின் பிடியில் சுழன்றார்.
பார்த்திபன் தலையை மட்டும் ஆட்டினான்.
“ஆனால் நீங்க அதை தெரிஞ்சிகிறதுக்கு முன்ன எனக்கு எல்லாம் தெரியணும்” எனக்கேட்டான்.
‘இது தன் மகனுக்கு அனைத்தும் தெரிய வேண்டிய நேரம். அவன் மூலம் தங்கள் குடும்பம் ஒன்று இணைவது காலத்தின் கட்டாயம்’ என்று மனதோடு உணர்ந்தவர், கடந்த காலத்தை மகனின் கைகளில் ஒப்படைத்தார்.
இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு,
**********
முன் அந்தி வேளையிலும் அவ்விடம் அத்தனை இருளாகக் காட்சியளித்தது. மூடிய சன்னலின் வழியே கீற்றுப்போல் வெளிச்சம் பாய்ந்தது.
அறை முழுவதும் பழுதடைந்த மரப்பொருட்கள் நிரம்பியிருந்தன. நடுவில் மட்டுமே கொஞ்சமே கொஞ்சம் இடமிருக்க, அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் வாய், கண்கள், கை அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் மலர்.
‘தான் கல்லூரியில் தான் இருக்கின்றோம்.’ ஆனால் எங்கு எந்த கட்டிடத்திலென்று அவளால் கணிக்க முடியவில்லை.
தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்தவள் யாரோ தன் பெயர் சொல்லி அழைக்க பின்னால் திரும்பி பார்த்தது மட்டுமே நினைவிருக்க, அரை மயக்கத்தில் யாரோ தன்னை தோளில் சாய்த்து நடத்தி செல்வதும்… பின் ஓர் அறையில் கட்டியதும் முழு சுயம் மீண்ட பின்னர் புரிந்தது.
‘யாராக இருக்கும்?’ யோசித்தவளின் புருவ மத்தியில் சுருக்கங்கள்.
அப்போதுதான் யாரோ தன்னை தன் முகத்திற்கு அருகே உற்று பார்ப்பதாக அவளின் உள்ளுணர்வு சொல்ல…
வறண்ட இதழ்களை நா கொண்டு ஈரம் செய்து… செருமிய குரலில் “யாரது?” என்றாள்.
“உனக்கு புருஷனாகப் போறவன்.” பட்டென்று கேட்ட குரலில் உடல் தூக்கிப்போட மிரண்டாள் மலர்.
“ரகு…”
“எஸ். என் குரலை வைத்தே கண்டுபிடிச்சிட்டியே! அந்தளவுக்கு மாமன் நான் உன் மனசில் இருக்கேன் போல.” ஒருவித எள்ளல் அவனிடம்.
“ச்சீய்… இதை சொல்ல உனக்கு நா கூசல. இப்போ, நான் இன்னொருத்தர் மனைவி.” ரகுவின் வார்த்தைகள் மலரை சீற வைத்தது.
“ஹா… ஹா… ஹா…” வெடிச்சிரிப்பு சிரித்தான்.
“நான் ஆசைப்பட்டதெல்லாம் என் அப்பா நிறைவேத்திடுவார். அதனால் எதையும் தட்டி பரித்தோ, போராடியோ அடைந்து எனக்கு பழக்கமில்லை. அதனால் நீயா என்கிட்ட வந்திடு” என்றான்.
“போடா… பொ***.”
“ஏய்!” மலரின் முடியை கொத்தாக பற்றியவன், “அடித்து கனிய வைக்கும் பழத்திற்கு ருசி அதிகம் கேள்விப்பட்டிருக்கேன். இதுவரை அப்படியொரு ருசியை உணடதில்லை. இன்று அதுக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னா நான் விட்டுடுவேனா என்ன?” என அவளின் உடலை குரூர விழிகளுடன் ரசித்தான்.
அதனை கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் மலரின் பெண் மனதால் உணர முடிந்தது. அருவருத்துப்போனாள்.
“அப்படி பார்க்காதடா நாயே!”
“நீ செமயா இருக்கத் தெரியுமா?” மலரின் அழகில் கிறங்கிப்போனான்.
“எனக்கு பெண்கள் புதிது அல்ல. ஆனால் உன்னை மட்டும்தான் கட்டி குடும்பம் நடத்தனுமுன்னு தோணுச்சு. அதுக்கு அவன்(முகி) வழியில்லாம செய்துட்டான்.” கோபத்தில் தன் தொடையில் தட்டிக்கொண்டான்.
“அவனை கொல்லும்வெறி எனக்குள்ள இருக்கு. அதுக்கு முன்னாடி நான் ஆசைப்பட்ட உன்னை…”
அவன் மேலும் என்ன சொல்லியிருப்பானோ, தனக்கு முன்னால் ஒரு அடி இடைவெளியில் நின்றிருந்தவனை கட்டப்படாத தன்னுடைய காலால் எட்டி உதைத்தாள்.
“உன் கால் படக்கூட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.” மயக்கமான குரல்.
பெண்ணவள் கூசிப்போனாள்.
“அய்யோ இப்படிலாம் பேசாதே!” மன்றாடினாள்.
“அந்த முகிலனை ஏதாவது செய்யுற வரை நான் எதையும் நிறுத்தமாட்டேன். அவனை என் அப்பாகிட்ட சொல்லி போட்டுத்தள்ள எனக்கு ஒரு நொடி ஆகாது. ஆனால் அதை நான் தான் செய்யணும். அதனால் தான் அவன் இன்னும் உயிருடன் இருக்கான்.
நீ எனக்கு உடன்படலன்னா அடுத்த அரை மணி நேரத்தில் அவன் எங்கிருந்தாலும் கொன்னு புதைச்சிடுவேன்.”
ரகுவின் ஆவேசப் பேச்சில் ஸ்தம்பித்த நிலையில் மலர்.
“அவங்க… அவங்கள ஒன்னும் செய்துடாத!” கெஞ்சினாள். கதறினாள்.
“அப்போ எனக்கு சம்மதம் சொல்லு.”
மலரிடம் முகியின் நலனை எண்ணி பயம். அந்த பயம் மலரை ரகுவிடம் கட்டுப்படுத்திடுமா?”