பார்த்திபனின் கயல்விழியாள் 15

அத்தியாயம் 🌾 15 :

இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு…

“அத்தை…”

நான்கு வயது பார்த்திபன் துள்ளலோடு தன்னுடைய அத்தை மீனாட்சியை அழைத்தபடி அந்த வீட்டிற்குள் ஓடி வந்தான்.

ஆறு மாத மேடிட்ட வயிற்றோடு அசைந்தபடி, பூஜையறைக்குள்ளிருந்து தீபாராதனை தட்டுடன் வெளியில் வந்தார் மீனாட்சி.

முகத்தில் சந்தோஷம் ஆர்பரித்திருக்க, மீனாட்சி தனதருகில் வருவதற்குள் ஓடிச்சென்று அவரின் வயிற்றை இரு கைகளாலும் பற்றினான் பார்த்திபன்.

“குட்டிம்மா, நான் மாமா பேசுறேன். உனக்கு கேட்குதா?”

பார்த்திபன் கையிருந்த இடத்தில் சிறு அசைவு.

“அச்சோ அத்தை பாப்பா என்கிட்ட பேசுறாள்.” மழலையின் முகத்தில் காணத் தெவிட்டாத மகிழ்ச்சியின் ஊற்று.

“ஆமாம் சின்னத்தங்கம், உன்னைப்போலவே அவளுக்கும் அவளுடைய மாமாவைத்தான் பிடிக்குது” என்று சிரிப்போடு சொல்லியவர், அவனின் முகத்தில் தீபத்தை ஒற்றி, நெற்றியில் திருநீறு பூசிவிட்டார்.

“சூப்பர்ல அத்தை” என்றவன் இரு கைகளையும் தட்டிக்கொண்டு துள்ளி குதித்தான்.

சின்ன சிரிப்போடு மருமகனின் தாடையை பிடித்து ஆட்டி “பிறந்தநாள் வாழ்த்துகள் சின்னத்தங்கம்” என்று அவன் கன்னத்தில் ஆதுரமாக இதழ் பதித்தார் மீனாட்சி.

உடனடியாக அவரை வயிற்றோடு கட்டிக்கொண்ட பார்த்திபன்,

“பாப்பா… மாமாக்கு இன்னைக்கு ஹாப்பி பெர்த்டே, அத்தை முத்தா கொடுத்தாங்க… நீயும் தா” என்று பேசியபடி இருந்தான்.

அப்போது வாசலில் ஒலித்த,

“கண்ணா” என்ற விளிப்பில்…

“மாமா” என்று அழகரை நோக்கி ஓடியவன் தாவி அவரின் மேல் ஏற முயற்சிக்க, தன்னுடைய ஆசை மருமகனை வாரி அணைத்துக் கொண்டார்.

முகம் முழுக்க முத்தம் பதித்தவர் வாழ்த்துக்கூறி தான் வாங்கி வந்திருந்த பரிசினை பார்த்திபனின் கைகளில் கொடுத்தார்.

வாங்கியவன் மகிழாது, “பாப்பாக்கு வங்கலயா” எனக்கேட்டு சண்டை பிடித்தான். அழகர் இல்லையென தலையசைக்க அவனின் உதடுகள் அழுவதற்கு தயாராகி பிதுங்கியது.

அவர் எவ்வளவோ சமாதானம் செய்தும் அழுகையை நிறுத்திடாத பார்த்திபன் கோபம் கொண்டவனாக முற்றத்திலிருக்கும் தூணிற்கு அருகில் சென்று முகம் சுருங்க அமர்ந்துவிட்டான்.

அவனின் கோப முகம் கூட ரசிக்கக்கூடியதாக இருக்க ரசித்து பார்த்த அழகர் அவனின் அருகில் சென்று அமர முகத்தை திருப்பிக்கொண்டான் பார்த்திபன்.

“மாமா தப்பு… மன்னிச்சிக்கோ கண்ணா.” அழகர் தன்னிரு காதுகளையும் பிடித்துக்கொண்டு கேட்க, கிளுக்கிச் சிரித்தான் சிறுவன்.

“ரெண்டு பேரும் சமாதானம் ஆகியாச்சா” என்று கேட்ட மீனாட்சி அப்போதுதான் பார்த்திபன் யாருடன் வந்தான் என்பதை விசாரித்தார்.

“அப்பா தான் விட்டாங்க அத்தை. அப்படியே கடைக்கு போயிட்டார்” என்றவன் அழகர் கொடுத்த இனிப்பை சுவைக்கலானான்.

“வீட்டுக்குள்ள வராம அப்படியென்ன அவசரம்” என்றபடி மீனாட்சி அடுக்கலைக்குள் சென்றார்.

அழகரின் முகம் கசங்கி சீரானது.

பார்த்திபனின் தந்தை தேவராஜ் அழகரின் கிராமத்திற்கு அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வசிக்கிறார். இரு ஊருக்கும் பக்கத்திலுள்ள சிறு டவுனில் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

அழகருக்கு தந்தை மட்டும்தான். அவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமாகியிருந்தார். தன்னிரு மக்களின் மகிழ்ச்சி வாழ்வினை கண்ணார பார்த்து ரசித்தவர் தனது முதுமையில் பிறருக்கு பாரமின்றி இறைவனடி சேர்ந்திருந்தார்.

என்ன தான் தந்தை வளர்ப்பு என்றாலும் அங்கைக்கு அனைத்தும் அழகர் தான். தங்கைக்காகவே வாழ்ந்தவர் அழகரென்றால் மிகையாகாது. ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தார். தங்கையை தன் மகளாக பாவித்தவர் அழகர்.

தேவராஜன் அழகரின் தந்தை மங்கைக்காக பார்த்த மாப்பிள்ளையாக இருப்பினும், அவரைப்பற்றி எல்லாம் விசாரித்து, தங்கைக்கும் சம்மதமென்ற பின்னரே ஒப்புக்கொண்டு அக்காலத்திலேயே திருமணத்தை மிக விமர்சையாக நடத்தினார்.

அழகருக்கு எல்லாம் தங்கை தான். அடுத்தபடியாக அவர் நேசித்தது விவசாயம்.

அடுத்த பிடித்தம் தேவராஜன். தங்கையின் கணவன் என்கிற காரணத்திற்காகவே தேவராஜனை தன்னுடைய உயிரின் பாதியாக நினைத்தார் அழகர். தேவராஜனும் அழகரை மாப்பிள்ளை என்பதைத் தாண்டி நண்பனாகவே பாவித்தார்.

இருவரும் நட்பிற்கு கூறப்படும் அனைத்து உதாரணத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தனர். மாமன் மச்சான் உறவுன்னா அது அழகர் தேவனை போல் இருக்க வேண்டுமென ஊரே பேசுமளவிற்கு அவ்வளவு நெருக்கம் இருவரிடத்திலும். அது அழகருக்கு திருமணம் முடிந்த பின்னர் இரு குடும்பத்தின் உறவிலும் அழகாய் பிரதிபலித்தது.

ஆனால் அவ்வூரின் பேச்சாலே இருவரும் பிரிய நேரிடுமென்று அவர்கள் நினைத்து பார்க்கவில்லை.

மங்கை, அண்ணன் கணவனின் உறவை புரிந்துகொண்டதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அழகரின் மனைவியாக வந்த மீனாட்சியும் நாத்தனார் குடும்பத்தை தனதாக ஏற்றார். அழகரின் பாதியாக மங்கையை ஏற்றுக்கொண்டதுதான் விந்தை.

அழகர் விவசாயத்தில் நல்ல வளர்ச்சியில் சென்று கொண்டிருக்க… தேவராஜனிற்கு அவர் எதிர்பார்த்ததைப்போல் தொழிலில் முன்னேற்றம் இல்லை. இருப்பினும் பின்தங்கியும் விடவில்லை. ஓரளவிற்கு லாபம் கிட்டியது. அவர் எதிர்பார்த்த உயர்வு இல்லை அவ்வளவே. நஷ்டம் ஆகாமல் வருவதற்கும் போவதற்கும் சரியாக இருந்தது. வளர்ச்சியில்லா தொழிலில் சலிப்புத் தட்டினாலும், அதிலிருந்து வெளிவர அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு தெரிந்த ஒன்றே ஒன்று அது என்பதே காரணமாகும். புதிதாக தெரியாத ஒன்றில் கால் வைக்க தேவராஜனிற்கு விருப்பமில்லை என்பதைவிட… புதிதாக ஒன்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவரிடத்தில் எப்போதும் இருந்ததில்லை.

அதனால் விவசாயம் செய்யென்று அழகர் அழைத்த போதும் மறுத்துவிட்டார். அதில் அழகருக்கு வருத்தம் இருந்தபோதும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. தன்னால் முடிந்தளவிற்கு தேவராஜிற்கு துணையாக நின்றார்.

பார்த்திபன் பிறந்த அன்று ஊருக்கே விருந்து வைத்துக் கொண்டாடினார். அன்று முதல் பார்த்திபன் அவரின் உலகமென்றானார்.

பெற்றது மங்கையாக இருப்பினும், வளர்த்தது மீனாட்சி.

இரவு உறங்குவதற்கு மட்டுமே அவர்களது இல்லம் செல்வான். அதுவும் சில சமயங்களில் அழகர் வீட்டிலேயே தங்கிவிடுவான்.

பார்த்திபன் பிறந்த இரண்டு வருடத்தில் அழகரின் தந்தை இறந்திட, வழிநடத்தி உறுதுணையாக இருந்த தந்தையின் இழப்பிலிருந்து அழகர் தன்னை மீட்டுக்கொள்ள காரணமாக இருந்தது பார்த்திபன் தான். அதனால் இன்னும் அவனின் மீது அழகருக்கு அன்பு கூடியது.

பார்த்திபன் நான்கு வயதை நெருங்கும் சமயம் மீனாட்சி கருவுற்றிருந்தார்.

அப்போதே அழகருக்கு மனதளவில் ஓர் ஆசை.

“பார்த்திபன் தான் என் மகளுக்கு கணவன்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.

“பிறப்பது ஆணாக இருந்தால் என்ன செய்வீங்க?” விளையாட்டாய் கேட்ட மங்கையிடம், “நிச்சயம் வயிற்றில் இருப்பது மகள் தான்” என்று அடித்துக் கூறினார்.

அழகர் பார்த்திபனிடம் பிறக்கவிருக்கும் குழந்தையைப் பற்றி பேசி பேசியே அவனுக்குள்ளும் ஒரு பிடித்தம் முளைத்தது.

தினமும் மங்கையின் வயிற்றிலிருக்கும் சிசுவிடம் நீளமாக கதை பேசிடுவான்.

ஒன்பதாம் மாதம் வளைகாப்பு வைக்கலாம் என்று ஏழாம் மாதத்தினை தவிர்த்தனர்.

அப்போது அழகரின் வீட்டிற்கு வந்த மங்கை கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாரே தவிர வாய் வார்த்தையாக எதுவும் சொல்லவில்லை.

‘கணவன் மனைவிக்குள் பிணக்கு, அதனால் தான் சொல்லாமல் மருகுகிறாள்’ எண்ணிய மீனாட்சி ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.

துன்பத்தில் உடன் நானிருக்கிறேன் என்று சொல்வது எத்தகைய ஆறுதலோ, அதேபோல் தனிமை கொடுத்து தள்ளி நிற்பதும் ஆறுதல் தான். அவர்களாக அழுது ஓய்ந்து அமைதி கொள்ளும்போது வருகின்ற திடம் வேறெந்த செயலிலும் கிட்டிடாது. அதைத்தான் இப்போது மீனாட்சி மங்கைக்கு செய்தார்.

“அண்ணி.”

அழுது கரைந்து திடம் பெற்று மீனாட்சியிடம் வந்தவர்,

“அண்ணா வந்ததும் வீட்டுக்கு வந்துட்டு போக சொல்லுங்க” என்று சொல்லிச் சென்றார்.

அழகர் வந்ததும் மீனாட்சி மங்கை வந்தது அழுதது எல்லாம் சொல்ல அடுத்த பத்து நிமிடத்தில் மங்கையின் வீட்டில் இருந்தார்.

அழகரை கண்டதும் மாமாவென்று ஓடிவந்த பார்த்திபனை வழமைப்போல், கண்ணா என்று வாரியணைத்துக் கொண்டார்.

“வாங்கண்ணா.” மங்கையின் முகமே தெளிவில்லாது கண்கள் வீங்கி காட்சியளித்தது. தங்கையையும் மருமகனையும் ஒரு நொடி மாற்றி மாற்றி நோக்கினார்.

“கண்ணா நீ போ விளையாடு. வீட்டுக்கு போகும்போது நான் கூட்டிப்போறேன்.”

அழகர் சொல்லியதும் பார்த்திபனும் சரியென்று வெளியில் ஓடிவிட்டான்.

அழகர் என்னவென்று தங்கையிடம் கேட்கவில்லை. ஆனால் மங்கை மீது ஓர் ஆழ்ந்தப் பார்வை.

“அவர் உள்ள தான் இருக்கார்.” மங்கை அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டார். துக்கமோ மகிழ்வோ பெண்களின் வெளிப்பாடு சமையலறையில் தான் இருக்கும்.

‘கடைக்கு போகாம இந்த நேரம் இங்கென்ன செய்றார்’ என்ற யோசனையோடு தேவராஜன் இருந்த அறைக்குள் நுழைந்த அழகர் தான் கண்டதில் அப்படியே மரித்து நின்றார்.

விட்டத்தில் முடிச்சிடப்பட்ட கயிறு தொங்கிக்கொண்டிருந்தது.

“என்ன மாப்பிள்ளை இது?” அதிர்ந்தவராகக் கேட்ட அழகர் படுத்திருந்த தேவராஜிற்கு அருகில் சென்று அமர… மிக மிக அமைதியாக எழுந்து அமர்ந்தார் தேவராஜன்.

“என்னன்னு சொன்னாதானே தெரியும். எதுவும் சொல்லாம ராத்திரி இந்த மனுஷன் பார்த்த வேலையை பார்த்தியாண்ணா” என்ற மங்கை உணவு அடங்கிய தட்டினை அழகரின் கையில் கொடுத்தார்.

அவரும் புரிந்தது என்பதைப்போல் தேவராஜனை சாப்பிட வைத்தார்.

சாப்பிடும் வரை அழகர் ஒன்றும் பேசவில்லை.

தேவராஜன் நண்பனுக்காக அவரின் வார்த்தைக்காக முயன்று உணவினை விழுங்குவதை, சீரற்ற அவரின் தொண்டைக்குழியின் ஏற்ற இறக்கங்கள் அழகருக்கு காட்டிக்கொடுத்தது.

தண்ணீரை பருகி உணவினை விழுங்கி வைத்த தேவன் நண்பனின் முகம் பார்க்க வெகுவாக தயங்கினார்.

“ஒரு நிமிஷம்” என்ற அழகர் வீட்டிற்கு வெளியில் சென்று மீண்டும் உள் வந்தார். இப்போது அவரது கையில் மஞ்சப்பை ஒன்று இருந்தது.

அதனை அழகர் தேவனிடம் நீட்டிட, என்னவென்று பார்வையாலே வினவியவரின் கையில் திணித்தார்.

தேவன் பையை பிரிக்க… அதில் சில லட்சங்கள் இருந்தன.

“எனக்கு இது வேண்டாம் அழகு.”

நிர்தாட்சண்யமாக தேவன் மறுத்தார்.

“இதை நான் உனக்கு என தங்கையின் அண்ணனா செய்யல. ஒரு நண்பனா, நண்பனின் கஷ்டத்தில் தோள் கொடுக்கிறேன்” என்று அழகர் கூறியபோதும் தேவராஜ் வெகுவாக தயக்கம் காட்டினார்.

“நிச்சயம் இவ்விஷயம் மீனாவுக்கு கூட நான் சொல்லமாட்டேன். உன்னால திருப்பி கொடுக்க முடியுங்கிற போது கொடு. அதுகூட உனக்காகத்தான். இப்படி மச்சானிடம் கையேந்திட்டோமேன்னு நீ மருகக் கூடாதுங்கிறதுக்காகத்தான்.”

அவ்வாறு சொல்லிய அழகரை தேவராஜன் அணைத்துக் கொண்டார்.

“நான் என்னுடைய கஷ்டத்தை சொல்லாதப்பவும், என்னன்னு தெரிஞ்சு உதவி பண்ணதுக்கு நன்றிடா. நீ எனக்கு இப்போ கடவுளா தெரியுற அழகு.” தேவராஜ் அதீத உணர்ச்சிவசத்தில் நெகிழ்ந்திருந்தார்.

‘கணவருக்கு ஏதோ பண நெருக்கடி அதை சமாளிக்க முடியாது தான் நேற்று தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். இப்போது அண்ணன் பணம் கொடுத்ததில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆசுவாசம் அடைந்த மங்கை சேலைத்தலைப்பால் கண்களில் துளிர்த்த நீரை துடைத்தார்.

ஆனால் இதுதான் இருவருக்குள்ளும் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி பிரிவிற்கு காரணமாக அமைய போகிறதென்று மங்கைக்கு தெரிந்திருக்கவில்லை.

தேவராஜின் உணவு கடை முக்கிய சாலையில் இருப்பதால் அமோகமாக இல்லாவிட்டாலும் அவருக்கு போதுமளவிற்கு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. சரியான வரவு இல்லாததால் தெரிந்த இடங்களில் கடன் வாங்கித்தான் தொழில் நடத்தி வந்தார். அதற்கும் சரியான வட்டி கொடுக்கப்படாமல் வட்டி அதிகரித்து அசலுக்கு மேல் சென்று கடன் கழுத்தை நெரிக்க என்ன செய்வதென்று தேவராஜ் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் பெரிய இடி அவர் தலையில் இறங்கியது.

அவரின் உணவு கடைக்கு பக்கத்தில் அனைத்து வகை உணவுகள் அடங்கிய மினி ஹோட்டல் ஒன்று திறக்கப்பட இருந்தது.

அதனை அறிந்து தேவராஜன் முற்றிலும் உடைந்து போனார்.

ஏற்கனவே டல்லடிக்கும் கடை, அந்த ஹோட்டல் வந்த பின்னர் படுத்துவிடும் என்பது அவருக்கு நன்கு தெரிந்தது. தன்னுடைய கடையை அதற்கு போட்டியாக விரிவுபடுத்த அவரிடம் சேமிப்பென்று எதுவுமில்லை. கடன்களும் அதிகம். தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கியிருக்க மேற்கொண்டு யாரிடம் கேட்கயென்று அவருக்கு தெரியவில்லை.

அழகரிடம் கேட்டால் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்திடுவார். ஆனால் பெண்ணெடுத்த இடத்தில் பணம் வாங்குவதை அவர் தன்மானம் ஒப்புக்கொள்ளவில்லை.

என்ன செய்வதென்று தவித்த நிலையில் அவரின் தற்போதைய நிலையறிந்த கடன்காரர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு காலவகாசம் கொடுக்க… எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்ய முடிவு செய்து விட்டத்திலிருந்த கிரிப்பில் கயிற்றினை போட்டு கழுத்திலிட்டு இறுக்கும் சமயம் மங்கை வந்து பதறி துடித்து அவரின் செயலை தடுத்தார்.

ஏனென்று மங்கையும் கேட்கவில்லை அவரும் பதில் சொல்லவில்லை.

விளையாடிக் கொண்டிருந்த பார்த்திபனை அழைத்து வந்து கணவரின் அருகில் உட்கார வைத்த மங்கை, “அப்பாவை விட்டு எங்கும் போயிடக்கூடாது சின்னத்தங்கம்” என்றதோடு, “ஆத்தா என்னதான் இருந்தாலும் பிள்ளைக்கு அப்பனிருந்து பார்த்துகிற மாதிரி வராது” என்று கணவரை பார்த்து அழுத்தமாகக் கூறி அண்ணன் வீட்டிற்கு மனத்தாங்கலை இறக்கச் சென்றவர் குமுறலை வெளியில் கொட்ட முடியாது திரும்பி வந்திருந்தார்.

இப்போது அண்ணனின் வருகையால் மங்கை தங்களது பிரச்சனை தீர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார்.

அடுத்து யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதனை உடனடியாகக் கொடுத்து கடன்களை அடைத்த மீதி பணத்தை வைத்து தன்னுடைய கடையை துரித கதியில் விரிவுபடுத்தி பல மாற்றம் செய்து விட்ட தொழிலில் முன்னேற்றம் கண்டார்.

இதற்கெல்லாம் காரணம் அழகர் தானென்று மச்சானின் மேல் தனிப்பிரியம் கொண்டார். அப்பிரியம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை.

ஒன்பதாம் மாதம் மீனாட்சிக்கு வளைகாப்பினை அழகர் தன்வீட்டில் அனைத்து சொந்த பந்தங்களையும் ஊராரையும் அழைத்து வெகு சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.

எல்லோரையும்விட பார்த்திபன் தான் பாப்பா வரப்போவதை மிகுந்த ஆவலுடன் அன்றைய நாளை கொண்டாடினான்.

இரு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் பல எடுத்துக்கொண்டன.

அப்போதே விழா முடிவதற்குள் அதனை புகைப்படக்காரரிடம் சொல்லி பிரேம் செய்து வீட்டில் மாட்டிவிட்டார் அழகர்.

சபையில் மங்கை அண்ணிக்கு ஆறு பவுனில் ஒரு சோடி வளையல்களை அணுவிக்க சொந்த பந்தமெல்லாம வாய் பிளந்து பார்த்தனர்.

“இந்த தேவன் கைகாசுக்குக்கூட சிங்கி அடிச்சிட்டு இருந்தானப்பா. இப்போ தங்கத்துல வளவி போடற அளவுக்கு வருமானம் வருது போல” என்று பலர் அங்கே அவர் காதுபடவே பேச அதனை இரு குடும்பமுமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் “அழகர் கொடுத்த பணத்துல வந்தது தான் இந்த பவுசு” என்று அவ்வூர் தனக்காரர் வாய்விட,

“அதானே பார்த்தேன். பொழைக்கைத் தெரியாத இவனுக்கு எப்படி இம்புட்டு பணமுன்னு.”

“நிமிர்ந்து நிக்கவே வக்கில்லாம இருந்தவனுக்கு அழகர் கிடைச்சது வாழ்வு தான்.”

“அவ்வளவு கடனையும் எப்படி இவ்வளவு சுருக்கா அடைச்சான்னு இப்போல தெரியுது.”

“மச்சான் துணையிருந்தா மலைமட்டுமில்லை கடனை அடைச்சு ஓசில பவுசும் காட்டலாம் போல” என ஆளாளுக்கு பேசி கிண்டல் செய்ய தேவராஜ்ஜிற்கு பெருத்த அவமானகிப்போனது.

தனக்காரர் சொல்லியபோதே அதிர்ந்த அழகர் அப்போதே தன்னுடைய மாப்பிள்ளைக்கு அருகில் வந்து நின்றார்.

தேவராஜ் நண்பனை அடிபட்ட பார்வை பார்க்க…

“நிச்சயம் நான் யாரிடமும்… மீனாவுக்கே சொல்லலை மாப்பிள்ளை.”அழகர் எவ்வளவு சொல்லியும் தேவராஜன் நம்பவில்லை.

“இப்படி சபையில் என் மூக்குடைக்க எத்தனை நாளா காத்துக்கிட்டிருந்த” என்று கேட்ட தேவராஜன் தன் மனைவி மகனை அந்நொடியே அழைத்துக்கொண்டு கிளம்ப,

“அண்ணன் நிச்சயம் சொல்லியிருக்காதுங்க அவருக்கிட்ட (தனக்காரர்)” மங்கை மன்றாடினர்.

“புருஷன் வேணுன்னா இப்போ இப்படியே என்னோட வா.” தேவராஜின் அவ்வார்த்தைக்கு மங்கை கட்டுப்பட்டார்.

ஆனால் எதற்கும் கட்டுப்படாது வர மறுத்த பார்த்திபனை அழகர் எவ்வளவு தடுத்தும் அடித்து இழுத்துக்கொண்டு சென்றார்.

அடுத்த இரண்டு நாட்களில் தன்னுடைய கடையை விற்க ஏற்பாடு செய்தார். இப்போது அதன் மவுசு அதிகரித்திருக்க அவர் எதிர்பார்த்ததைவிட நல்ல விலைக்கே போனது.

அழகரின் வீட்டிற்கு செல்ல பிடிக்காது வேறு ஒருவரின் மூலம் கடையை விற்று வந்த பணத்தில் அழகர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து அனுப்பியவர் மீதமிருந்த பணத்தை வைத்துக்கொண்டு அன்றே யாரிடமும் சொல்லிக்கொள்ளாது மனைவி மகனுடன் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்.

திருப்பிக்கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு அழகர் செல்வதற்குள் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டிருந்தனர்.

தன்னால் தானென்று அன்று அழகர் கண்ணீர் சிந்தியதை மீனாட்சி மட்டுமே அறிவார்.

மகனிடம் தனக்கு தெரிந்தவற்றை சொல்லிய மங்கையின் மனம் அன்றுபோல் இன்றும் கனத்துக் கிடந்தது.

எல்லாம் கேட்டறிந்த பார்த்திபனின் முகத்திலிருந்து மங்கையால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

உணர்ச்சிகளற்ற முகத்துடன் நின்றிருந்தான் பார்த்திபன்.

கடந்தகாலத்தை அறிந்துகொண்ட அவனின் மனம் நினைத்துக் கொண்டிருப்பது என்னவாக இருக்கும்?

error: Content is protected !!
Scroll to Top