பார்த்திபனின் கயல்விழியாள் 17

அத்தியாயம் 🌾 17 :

“நான் கயலை லவ் பண்றேன் மாம்.”

கடந்தகால நிகழ்வினை கேட்டறிந்த பார்த்திபன் உதிர்த்த வார்த்தைகள் அவை.

“கயல்?” மங்கை கேள்வியாய் மகனை ஏறிட்டார்.

குறுநகையை இதழில் படரவிட்டவன்,

“உங்க மருமகள். உங்களோட அண்ணன் பொண்ணு” எனக்கூறினான்.

சட்டென்று கண்களில் துளிர்த்து நீரோடு, “உண்மையா?” என்று பார்வையால் மகனிடம் வினவ, அவனோ கண்கள் மூடி ஆமென்று ஆமோதித்தான்.

“நீ பார்த்தியா?” திணறலுடன் கேட்டார்.

“செமயா இருக்கா மாம்.” அதனை சொல்லும் போது பார்த்திபனின் முகத்தில் அப்பட்டமான காதல். காதல் கடல் அவனுள் ஆர்ப்பரித்தது.

மகனின் முகமே அவனின் காதலை அன்னைக்கு பறைசாற்றியது.

“அம்மாவிடம் சொல்லும் வார்த்தையா பார்த்திபா இது?” முதல் முறையாக வாழ்வில் அசடு வழிகிறான் அன்னையின் கேள்வியில். அதுவும் அவனுக்கு அழகாகத்தான் இருந்தது.

“எப்போ? எங்கே?” இப்போது மங்கை உணர்வின் பிடியிலிருந்து மீண்டிருந்தார். தன் அண்ணன் குடும்பத்தைப்பற்றி அறியும் ஆவல் முன் வந்து மகனிடன் வினாக்களைத் தொடுத்தார்.

பார்த்திபன் இந்தியா வந்திருந்த போது நடைபெற்ற அனைத்தையும் மங்கையிடம் கூறினான்.

மங்கைக்கு தன்னுடைய அண்ணனுக்கு இரு மக்கள் என்பதில் அதீத மகிழ்ச்சி. ஆனால் அழகரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே என்கிற கவலை அவரின் முகத்தில் வெளிப்பட்டது.

அவரின் மனம் புரிந்த பார்த்திபன் “சீக்கிரம் எல்லாம் தெரிந்திடும் மாம். டோன்ட் ஃபீல்” என ஆறுதல் படுத்தினான்.

மகன் மீது கொண்ட நம்பிக்கையால் தன் வருத்தத்தை புறம் தள்ளிய மங்கை,

“நீயெப்படி சின்னத்தங்கம் லவ் எல்லாம்?” என்று ஆச்சரியமாகக் கேட்டவர்,

“என் மருமகள் நல்ல அழகோ?” என்று மகனின் மனதை ஆழம் பார்த்தார்.

“அச்சோ மாம். நல்ல அழகா? கொள்ளை அழகு மாம். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து வச்சிருக்கா(ள்) மாம் உங்க அண்ணன் பெத்த பொண்ணு” என்று அன்னையிடம் தன்னவளை நினைத்து குழைந்தான்.

காதல் கொண்ட பிறகு பார்த்திபனின் சிறு செயலும் மங்கைக்கு ஆச்சரியத்தையே வாரி வழங்கின.

“பார்த்ததும் லவ்வா? லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் அப்படின்னு சொல்லுறாங்களே அப்படியாடா?” என்றார்.

அக்கேள்வியில் கண்களை மூடியவனின் முகம் மேலும் மென்மையை காட்டியது.

“நோ மாம். இது இரண்டு வருட தவம்.” காதலில் கசிந்து உருகினான். அது அவனின் தவம் தான். அவளின் விழிகளை கனவில் கண்ட பின்னர் அவளைத்தேடி அவளின் நிஜம் தேடி, தனக்குள் தன்னை அறியாது தோன்றிய காதலை மனப்பெட்டகத்தில் பொக்கிஷமாக புதைத்து நித்தம் தவம் செய்தான் விழியவளின் முகம் கண்டிட.

“என்னடா சொல்லுற?” இது முற்றிலும் அதிர்ச்சி.

“இதை என் பொண்டாட்டிகிட்ட தான் சொல்லுவேன். சாரி மாம்” என்றவன் அவரின் கன்னங்களை பிடித்து ஆட்டினான்.

சிறு வயது பார்த்திபனை அவருக்கு அவனின் அந்த செயல் நினைவூட்டியது.

“சரி எப்போ கயலை எனக்கு காட்டப்போற?” என்றவர் “கயல் மட்டும் தானா… இல்லை முழுப்பெயர்…”

“கயல்விழி.” மங்கை வாக்கியத்தை முடிப்பதற்குள் கூறியிருந்தான். மென்மையிலும் மென்மையாய்.

மங்கைக்கே பெரும் வியப்பு.

‘தன் மகனிடத்தில் இத்தனை மென்மையாய்!’

முகம் விகசிக்க இமை மூடி நின்றிருந்த பார்த்திபனின் தோற்றமே மங்கைக்கு உடனடியாக மகனின் காதலை சேர்த்து வைத்து மணக்கோலத்தில் பார்த்திட வேண்டுமென்ற ஆசையை ஆவலை தூண்டியது. அதிகரித்தது.

ஆனால் அவர்களின் மணம் அவ்வளவு எளிதில் நடக்கக்கூடியதா என்ன? இருவருக்கிடையே போர் மூண்டு… காதல் அம்புகள் இதயத்தை கிழித்து வலி பல நிறைத்து தைய்த்த பின்னரே சாத்தியமாகும். அதனை ஆட்டத்தில் பங்கேற்கும் காதல் ஜோடிகளே இன்னும் அறிந்திருக்கவில்லை.

இருவருக்குமிடையேயான கண்ணாமூச்சி ஆட்டம் வெகு அருகில்.

ஆட்டி வைப்பவள் பெண்ணவள். ஆட்டத்திற்கு சுழல்பவன் பெண்ணவளின் கோமகன்.

காதலுக்காக தனக்கு பிடிக்காத ஒன்றை தன்னவளின் வார்த்தைக்காக செய்து முடிப்பவன்… பேதையின் காதல் வேண்டி ஒவ்வொரு நொடியும் துடிக்கவிருக்கிறான். காத்திருக்கப் போகிறான். காத்திருப்பு அவனின் காதலை அதிகரிப்பதை விட்டு பெண்ணவளின் மீது வலி நிரப்பி மட்டுப்படுத்தினாள்… அவன் கொண்ட காதலின் நிலை என்னவோ? பார்த்திபனின் காதல் இங்கு அவனுக்காக அவனவளிடம் போராட இருக்கிறது.

இருவரின் மனமும் காதல் போர்க்களமாய்.

காதலை கொடுத்து காதலை பெற சித்தம் வாய்க்கவிருக்கிறான்.

“உன்னை அவள் ரொம்ப மாத்திட்டா(ள்)டா!”

“ஆஹான்… அப்படியா மாம். அவளுக்காக மாறாம வேற யாருக்காக மாறுவது?”

மங்கை வாய் மீது கை வைத்துக்கொண்டார் அவனின் பதிலில்.

“என்னடா தலைகுப்புற கவிழ்ந்திட்ட!”

பார்த்திபனிடத்தில் புதிதாக வெட்கம். கம்பீரமான ஆணின் வெட்கம் எத்தனை அழகு வாய்ந்தென்று பார்த்திபனின் முகம் பார்த்து மங்கை தெரிந்துகொண்டார்.

ஒருபக்கமாக தலை சரித்து பின்னந்தலையை வலது கையினால் தடவிக்கொண்ட பார்த்திபனின் இதழில் வசீகரமான இளநகை.

“உன்னை இப்படி பார்க்க எனக்கே உலக அதிசயத்தை பார்த்த மாதிரி இருக்குடா. இப்படியெல்லாம் ஷாக் கொடுக்காதே! நீதான் என் மகனான்னு டவுட் வருதுடா!” வெளிப்படையாக கலாய்த்தார்.

“மாம்.” சிறுப்பிள்ளையென சிணுங்கினான்.

“இப்படியெல்லாம் எக்ஸ்பிரஷன் கொடுத்து நீ என் ஆர்வத்தை ரொம்ப தூண்டுறடா. கயல் போட்டோ இருந்தால் காட்டு” என்றார்.

“இருக்கு மாம். பட் இப்போ காட்டமாட்டேன்” என்றவன் அவர் மீண்டும் கேட்பதை கூட காதில் வாங்காது தன்னறை செல்ல வேகமாக அடிகள் வைத்திட…

“நீ இன்னும் ஒன்னுமே சொல்லலையே?” எனக் கேட்டிருந்தார் மங்கை.

“என்னது மாம்.” அவனுக்கும் அவர் எதைப்பற்றி கேட்கிறார் என்று புரியவில்லை.

“நடந்தது எல்லாம் தெரிந்து, நீயும் உன் மாமாவை தவறா நினைக்கியா பார்த்திபா?”

சில நொடிகள் மௌனம் காத்தவன்,

“லைஃபில் எல்லாத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கு மாம். இந்த விஷயத்தை பொறுத்தவரை அப்பா பக்கம் என்னவோ அதைத்தான் நீங்க சொல்லியிருக்கீங்க. மாமா பக்கம் என்ன நடந்ததுன்னு அவர் சொன்னாதான் தெரியும். அதுக்கு அப்புறம் தான் உண்மையிலே அவர் மீது தவறா இல்லையா என்பதே சொல்ல முடியும்” என்றான்.

“நிச்சயம் அண்ணா உன் அப்பாவின் வார்த்தையை மீறி சொல்லியிருக்க மாட்டார்.” மங்கை வேகமாகக் கூறினான்.

“நானும் அப்படித்தான் இருக்கணும் நினைக்கிறேன் மாம்” என்றவன் சென்று விட்டான்.

அறைக்குள் வந்தவன் இந்தியா செல்வதைப்பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.

சிங்கப்பூரின் மற்றுமொரு நகரில் தி வாரியர் திறக்க இருப்பதால் அதற்கான பணிகள் அவனின் தலையில் அதிக சுமையை ஏற்றியிருந்தன.

இது நான்கு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. அன்றையிலிருந்து அதற்கான பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் அதற்கான முழு பணிகளும் நிறைவடைந்திருக்க வேண்டும். அதற்காக பார்த்திபன் இங்கு இருந்தாக வேண்டிய நிலை. கிட்டத்தட்ட  இரண்டரை மாத காலத்திற்கு அவன் இந்தியா செல்ல வாய்ப்பில்லை.

முதல்முறையாக தன் வேலை பளுவை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டான்.

அப்போதே டெல்லிற்கு அழைத்து…

“நியூ ஹோட்டல் வேலையை ஒரு மாதத்தில் முடித்திட முடியுமா?” என்று, முடியாதென தெரிந்துகொண்டே வினவினான்.

பார்த்திபனின் கேள்வியில் டெல் தான் குழம்பி நின்றான்.

“டேய் என்னடா சொல்லுற” என்று புரியாது கேட்ட டெல் “இப்போவே ரொம்ப ஸ்பீடாத்தான் வேலையெல்லாம் போகுதுடா. இதுக்கு மேல சீக்கிரம் என்றால் மேஜிக் செய்து தான் திறப்பு விழா வைக்கணும்” என்றான்.

“இந்த ஜீனியெல்லாம் நிஜமா இருக்காங்களா?” (ஜீனி – கேட்டதையெல்லாம் நொடியில் செய்து கொடுக்கும் பூதம்.)

பார்த்திபனின் இந்த கேள்வியில் உண்மையிலேயே டெல் அரண்டு விட்டான்.

“பார்த்தி… ஆர் யூ ஓகே?”

“யா… அம் குட்” என்ற பார்த்திபனுக்கே தன் கேள்வி சிரிப்பைத்தான் வரவழைத்தது.

“என்னடா என்னாச்சு. ஏதேதோ கேட்குற?”

“ஹேய் மேன் நத்திங்.”

“ஆர் யூ ஷ்யூர்?”

“ஷ்யூர்.”

மேற்கொண்டு டெல் எதுவும் கேட்பதற்கு முன்பு அலைபேசியை வைத்திருந்தான்.

டிடெக்ட்டிவிடமிருந்து வாங்கியிருந்த கயலின் புகைப்படத்தை தான் அலைபேசியின் சுவரில் வைத்திருந்தான்.

இப்போது அதில் மிளிர்ந்தவளை கண்டவன்,

“என்னை என்னவோ பண்றடி” என்று தன்னுடைய இதயப்பகுதியை நீவிக்கொண்டான்.

“சீக்கிரம் வர்றேன். வந்து உன்னை கவனிச்சிக்கிறேன்.” மிரட்டலைக்கூட காதலாகக் கூறினான்.

“அய்யோ… யூ ஆர் ட்ரைவிங் மீ” என்றவன் தொடுதிரையில் தெரிந்த அவளின் கன்னத்தை தன் விரல் கொண்டு மென்மையாகத் தீண்டினான்.

பார்த்திபனின் காதல் மனம் நொடியில் கவலைக்கொண்டது.

அவனுக்குத் தெரியும் ஹோட்டல் வேலை அவ்வளவு எளிதில் முடிந்துவிடாதென்று. இரண்டு மாதங்களில் முடிந்து விடுமென்றாலும், திறப்பு விழாக்கான வேலைகளும் சேர்த்து மூன்று மாதங்களாகிவிடும்.

“அதுவரை உன்னை பார்க்காம எப்படிடி இருக்கப் போறேன்.” வாய்விட்டே புலம்பினான். தன்னவளின் நிழலுருவிடம்.

அவன் நினைத்தால் நொடியில் கயலை சுற்றி நடக்கும் யாவையும் தன் கண் பார்வையில் கொண்டுவர முடியும். ஆனால் தன் மனதிற்கினியவளை தானே அறிந்துகொள்ள வேண்டுமென அவனின் காதல் மனம் யாரோ ஒருவரின் கீழ் தெரிந்துகொள்வதை விரும்பவில்லை.

இப்போதே நகரும் நொடிகள் அவனுக்கு யுகங்களாகத் தோன்றின.

“இதுவும், உனக்கான இந்த தவிப்பும் நல்லாத்தாண்டி இருக்கு.”

அவனிடத்தில் அப்பட்டமான ஏக்கம்.

“என்னடி பண்ண. வெறும் கண்ணை மட்டும் காட்டியே சிங்கமா சுத்திட்டு இருந்த என்னை சாய்ச்சிட்டியேடி.” அவனின் இயல்பிலிருந்து முற்றிலும் மாறி உளறிக்கொண்டிருந்தான்.

அதே பூமியில் தான் அவளின்றி இருபத்தி ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை இப்போது இந்நொடி அவனால் ஏற்க முடியவில்லை. நம்ப இயலவில்லை.

“கொல்றடி” என்று மெத்தையில் விழுந்தவன் கயலின் நினைவோடு உறங்கிப்போனான்.

****

முகிலன் மீண்டும் கிராமத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறான்.

அவனின் மனம் முழுக்க வேதனை.

மலரின் கன்னத்தில் ரகு தீண்டியது… அவனின் தொடுகை அதை நினைத்தே உயிர்வலி கொண்டான். தன்னவளுக்கு எத்தகைய துன்பத்தை கொடுத்திருக்குமென்று எண்ணி.

“சாரிடி…” மலரை அந்நிலையில் கண்டதிலிருந்து அவளிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டிக் கொண்டிருக்கிறான்.

‘மலரை காப்பாற்ற முடியாதோ’ என்று ரகு மலரை இழுத்து கீழே சரித்ததும் மொத்தமாக உடைந்து நொறுங்கிய முகி, திரையில் கயலை கண்ட பிறகே ஆசுவாசம் அடைந்தான். நின்றிருந்த அவனின் மூச்சு சீரானது.

அந்நொடியே ஊருக்கு கிளம்பிவிட்டான்.

முகி வீடு வந்து சேரும்போது அதிகாலை நான்கு மணி இருக்கும். அநேரத்திலும் வீட்டின் கதவு திறந்திருந்தது. வாயிலை கடந்த கூடத்தில் மாணிக்கமும் சரளாவும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருக்க, தூணில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்த கயலின் மடியில் மலர் தலை வைத்திருந்தாள். கயலின் கை மலரின் தலையை மென்மையாய் வருடிக் கொண்டிருந்தது. மலரின் பார்வை முற்றத்தின் வழி தெரிந்த இருள் பிரியாத வானத்தை வெறித்திருந்தது.

அனைவரின் முகத்திலும் நடந்ததை நினைத்து சோகம் அப்பிக்கிடந்தது.

அச்சூழலை கடந்து அவர்களால் வெளிவர முடியவில்லை.

“மலர் கல்லூரி விட்டு சென்றுவிட்டாள். கல்லூரியின் உள்ளே மாணவர்கள் யாருமில்லை” என்று கல்லூரி காவல்காரர் சொல்லியதுமே மாணிக்கத்தை பயம் கவ்வியது.

அந்நேரம் கயல் அவருக்கு அழைத்திருக்க, காவல்காரர் சொல்லியதை கயலிடம் தெரிவிக்க… அடுத்த கால் மணி நேரத்தில் சிவாவுடன் கயல் கல்லூரிக்கு முன்பு நின்றிருந்தாள்.

எவ்வளவோ கேட்டும் காவல்காரர் கல்லூரி முடிந்த பின்னர் யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாதென்று மறுக்க… அருகிலிருந்த காவல் நிலையம் சென்று மலரைப்பற்றி தெரிவித்து…

“ஒரே ஒருமுறை கல்லூரியின் உள்ளே சென்று பார்ப்பதற்கு மட்டும் உதவி செய்யுங்க” என்று கேட்டிட, காவல்துறை அதிகாரியும் பெண் விடயம் என்பதால் அப்போதே கயலுடன் புறப்பட்டு கல்லூரிக்கு வந்தார்.

போலீசை பார்த்ததும் வாட்ச்மேன் தானாக அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதியளித்ததோடு அவரும் உடன் வந்து ஒவ்வொரு கட்டிடமாகத் தேடி பார்க்க உதவி செய்தார்.

ஸ்டூடன்ட்ஸ் பார்க்கிங் ஏரியாவை கவனித்த அதிகாரி,

“ஸ்டுடன்ட்ஸ் எல்லாரும் போயிட்டாங்க சொன்ன. அப்போ அது யார் பைக்” என்று அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காட்டி வினவினார்.

அந்த வண்டியை கூர்ந்து நோக்கிய வாட்ச்மேன்…

“சார் இது ரவுடி சிங்காரத்தின் மகன் ரகுவுடைய வண்டி” என்றார்.

அதில் கயல் வெளிப்படையாக அதிர்ந்தாள்.

அவளின் அதிர்வை கண்டு அதிகாரி விசாரிக்க… கயலும் ரகுவைப்பற்றி அனைத்தும் கூறினாள்.

“அப்போ ரகு தான் மலரை கடத்தியது சொல்றீங்களா?”

“அப்படியும் இருக்கலாம் சார்.”

“அப்படி இருந்து அவன் மாட்டினால் நன்றாகத்தான் இருக்கும்.”

அதற்குள் போலீஸ் வந்திருக்கும் விடயமறிந்து கல்லூரி முதல்வரும் அங்கு வந்திட…

“ஜஸ்ட் செர்ச்சிங்” என்ற காவல் அதிகாரியின் வார்த்தையில் நிம்மதி அடைந்தவர், “கல்லூரியின் பெயர் எவ்விதத்திலும் பாதிப்படையாமல் பார்த்துக்கோங்க” என்று சொன்னதோடு தன் வேலை முடிந்ததென்று சென்று விட்டார்.

பேசிக்கொண்டே கல்லூரி வளாகத்தின் பின் புறமிருந்த கட்டிடத்தை பார்க்க வந்தபோது வராண்டாவில் மலரின் பை கிடந்தது.

அதனை முதலில் பார்த்த சிவா ஓடிச்சென்று கையிலெடுத்து மலருடையது தான் என்பதை உறுதி செய்ய… ரகுவின் மீது அவர்களுக்கு சந்தேகம் உறுதியானது.

அக்கட்டிடத்தை முழுவதும் தேடிப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“அவனோட வண்டி இங்குதான் இருக்கு. சோ, அவன் இங்கு தான் எங்கயோ இருக்கணும்” என்ற அதிகாரியின் போலீஸ் பார்வை அக்கல்லூரி வளாகத்தையே ஒருமுறை ஆழ்ந்து வலம் வந்தது.

அவரின் மூளை எதையோ சிந்தித்து கணக்கிட்டது. ஏதோ கண்டுகொண்டது.

“காலேஜில் ஏதாவது யூஸ் செய்யாத சோன் (zone) இருக்கா?”

வாட்ச்மேன் பயன்படுத்தாத பழைய லேபிற்கு அழைத்துச் சென்றார்.

அது மைதானத்திற்கு அருகில் சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது.

அதனை பார்த்ததுமே மலர் இங்கு தான் இருக்கிறாள் என்று கயலின் உள்ளுணர்வு கூறியது.

வேகமாக ஓட்டத்துடன் அச்சிறு கட்டிடத்தை நெருங்கியவள், கதவில் கை வைக்க உள்ளே ரகு பேசும் குரல் கேட்க… நொடியும் கடத்தாது கதவினை தட்ட செல்ல, அவளின் பின்னாலே விரைந்து வந்திருந்த சிவா, பழைய பழுதடைந்த கதவு என்பதால் ஒரே உதையில் உடைத்திருந்தான்.

ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் மலரின் நிலை? நினைக்கவே அஞ்சியது.

போலீஸ் ரகுவை அழைத்துச் சென்ற பின்னர், மலரை ஆராய்ந்து அவளுக்கு ஒன்றுமில்லை என்று அறிந்த பிறகு தான் கயலின் படபடப்பு அடங்கியது.

மலர் இருந்த கோலம் இப்போது நினைத்தாலும் கயலுக்கு படப்படப்பாக வந்தது. மலரின் நிலையை நினைத்து கண்ணில் உதித்த நீரை சுண்டியபடி திரும்பிய கயல் அந்நேரத்தில் நலுங்கியத் தோற்றத்தில் வந்து நிற்கும் தம்பியை கண்டு, அவன் எப்படித் துடித்திருப்பான் என்பதை உணர்ந்தவள் வருந்திய குரலோடு “முகி” என்று விளித்தாள்.

கயலின் மெல்லிய குரலில் உதிர்ந்த ஓசை மலருக்கு மரித்திருந்த உயிரை மலரச்செய்திட வேகமாக கயலின் மடியிலிருந்து எழுந்து, முகியை காண முடியாதவளாக அறைக்குள் ஓடிச்சென்று கதவடைத்துக் கொண்டாள்.

முகி விக்கித்துப் போனான்.

முகிலனைத் தவிர்த்து மூவரும் மலர் சென்ற அறையின் கதவை தட்ட உள்ளே இருந்து எவ்வித அரவமும் இல்லை. இங்கே வெளியே நின்றிருந்த மூவருக்கும் பயம் பிடித்தது.

அவர்கள் பலமுறை கதவினைத் தட்டியும் மலரிடமிருந்து பதிலில்லை.

மலரின் இச்செயல் உண்மையிலேயே முகிக்கு அதீத வலியை கொடுத்தது.

வலித்த மனதை சமன் செய்தவன், அறையை நெருங்கிட மூவரும் அவனுக்கு வழிவிட்டு தள்ளி நின்றனர்.

“மலர்.”

கரகரப்பான குரலில், மெல்லிய ஓசையில் ஒரேயொரு அழைப்பு. அவளவனின் காற்றாகிப்போன விளிப்பு.

செவி நுழைந்த அடுத்த கணம் கதவைத் திறந்திருந்தாள் மலர்.

கயலை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தவன், உள்ளே சென்று கதவினை சாற்றிக்கொண்டான்.

முகிலன் மலரிடம் தனித்து பேசிட நினைப்பதை புரிந்துகொண்டவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

அறைக்குள் முகிலனுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்த மலரின் தோள்கள் அழுவதில் குலுங்கின.

“மலர்…”

“அப்படி கூப்பிடாதீங்க.” கத்தினாள். அவனின் அந்த குரல் அவளை என்னவோ செய்தது.

“ஏன் மலர்?”

………

அவளிடம் பதிலில்லை.

“மலர் என்னைப் பார்.” கிட்டத்தட்ட மன்றாடினான். அவள் அவனை பார்ப்பதற்கு தயாராக இல்லை என்பது அவளின் அழுத்தமான தலையசைப்பில் புரிந்து கொண்டவன், அவளுக்கு முன் வந்து நின்றான்.

“இப்போ என்னாச்சு மலர். எதுக்கு என்னை அவாய்ட் பண்ற?”

அவனின் இக்கேள்விக்கு பதில் சொல்லிடாதவள் வேறொன்றை அவனிடம் கேட்டிருந்தாள்.

“எனக்கு டிவோர்ஸ் வேணும்? கொடுங்க.”

எதனால் மலரின் இத்தகைய முடிவு? முகியின் பதில் என்னவாகியிருக்கும்?

error: Content is protected !!
Scroll to Top