அத்தியாயம் 🌾 18 :
“கம் அகெய்ன்.”
மலர் கேட்டதில் முகிலிடம் அவளின் நிலையெல்லாம் மறந்து சினம் துளிர்த்தது.
“உங்களுக்கு சரியாகத்தான் கேட்டது.”
“அதைத்தான் திரும்ப சொல்லு.” கட்டுப்படுத்தப்பட்ட கோபம்.
முகிலனின் முகம் காணவே அச்சமாக இருந்தது. இதற்கு முன்பு அவனிடத்தில் இப்படியானதொரு கோபத்தை அவள் பார்த்ததேயில்லை.
அதனால் மீண்டுமொரு முறை சொல்லுவதற்கு வெகுவாகத் தயங்கினாள்.
“நான் திரும்ப சொல்ல சொன்னேன்.” வார்த்தைகள் அவனின் பற்களுக்கு இடையில் கடிப்பட்டன.
“அது… வி…”
“சொல்லப்போறியா இல்லையா?” அருகிலிருந்த சுவற்றில் கை முஷ்டியை வேகமாகக் குதத்தினான்.
“மாமா… என்னதிது? காட்டுமிராண்டித்தனம்.” அவன் குத்துவதை நிறுத்தவேயில்லை. அதனால் தான் கேட்டதை மறந்து அவனுக்கு வலியென்றதும் பதறினாள்.
அருகில் தடுக்க வந்தவளை பார்வையாலே எட்ட நிறுத்தினான்.
“கையெல்லாம் ரத்தம்.” அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நீதான் என்ன டிவோர்ஸ் பண்ணப்போறியே. என்ன வேணா ஆகட்டும். உனக்கு என்ன?”
“அப்படி சொல்லாதீங்க.” தலையை இட வலமாக அசைத்து தன் மறுப்பைத் தெரிவித்தவள், தரையில் மடங்கி அமர்ந்து தலையிலேயே அடித்துக் கொண்டாள்.
தடுக்க கைகள் துடித்தாலும் அவள் சொல்லியது மனதை இரும்பாக்கியிருக்க கைகளை இறுக மூடிக்கொண்டு அவளையே வெறித்துப் பார்த்திருந்தான்.
“நான் உனக்கு வேண்டாம் மாமா. உனக்கு என்னை பார்க்கும்போது அருவெறுப்பா இல்லையா?” அழுகையினூடே மனதை அழுத்திக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டாள்.
முகிலன் ஏற்கனவே யூகித்தது தான். ‘அதற்கான விளக்கம் கொடுத்தாள் புரிந்துகொள்வாளா?’
“அவன்… அவ்…அவன் என்னை இங்க இங்க தொட்டான் மாமா” என்று தன்னுடைய உடலில் ரகுவின் கைப்பட்ட இடத்தை சுட்டிக்காட்டியவள், “இதோ இதோ இந்த கன்னத்துல தான் முத்…” அடுத்து சொல்ல முடியாது தரையில் கையை ஓங்கித் தட்டி கதறினாள்.
“நீ அதை பார்த்துட்டியே மாமா. உனக்கு என்கிட்ட வந்தாலே அது நினைவு வராதா?” கேட்டவளை மண்டியிட்டு வாரி அணைத்திருந்தான்.
முகிலனின் பிடியை அவள் உணரும் முன்பே அவளின் முகம் முழுக்க மழையென தன் முத்த அச்சாரங்களை பொழிந்துக் கொண்டிருந்தான். அவளின் கண்களில் வழியும் நீர் நின்றபாடில்லை. எவ்வளவு நேரம் அவனின் முத்தம் அவளின் முகத்தை நனைத்ததோ இறுதியாக அவளின் இதழில் நீண்ட நேரம் இளைப்பாறினான். இருவரின் மூச்சுக்குழலும் மூச்சுக்கு ஏங்குவதை உணர்ந்த பின்னரே சிறை செய்திருந்த இதழ்களுக்கு விடுதலை அளித்தான்.
அப்போதும் அவளின் கன்னங்களை தாங்கியிருந்த தன்னிரு கைகளையும் விலக்காது…
“நீ சொன்ன மாதிரி எனக்கு எதுவும் தோணலடி. உனக்கு அப்படி எதாவது தோணுதா?”
அவளின் முகம் இல்லையென்று மறுப்பாக அசைந்தது.
“அவன் தொடுறதும் நான் தொடுறதும் ஒன்னாடி?” கேட்டவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.
“சாரி… சாரி மாமா. உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு தான் நினைச்சேன். சாரி. இனி உன்னைவிட்டு போகணும் நினைக்க மாட்டேன் மாமா” என்று அவனின் மார்பில் புதைந்து கேவினாள்.
தன்னிலிருந்து மலரை பிரித்தவன், தன்னிரு உள்ளங்கை கொண்டு அவளின் முகத்தை அழுந்தத் துடைத்தான். முகத்தில் விழுந்திருந்த முடிகளை மென்மையாக அவளின் காதுக்கு பின்னால் சொருகினான்.
“நடந்ததை முழுசா மறந்திடு. அப்படியொருத்தனை நீ உன் வாழ்க்கையில பார்க்கவே இல்லை.
முத்தம் அப்படினாலே உனக்கு இப்போ நான் கொடுத்தது மட்டும் தான் நினைவில் வரணும்.”
அழுத்தமாகக் கூறியவன் மேலும் பலவாறு ஆறுதலாக பேசி மலரை இயல்புக்கு திருப்பியிருந்தான். தன்னுடைய மலரை மொத்தமாக மீட்டிருந்தான்.
“கடைசியா ஒருமுறை மலர்” என்றவன், “நீயென்ன பிரியனும் நினைத்தது இதுதான் கடைசியா இருக்கணும்” என்று மிரட்டும் தொனியில் கூற அவள் புன்னகையோடு சம்மதம் அளித்தாள்.
மனம் லேசான பிறகே பசியை உணர்ந்தாள். நேற்று காலை கல்லூரிக்கு கிளம்பியபோது சாப்பிட்டது.
“பசிக்குது மாமா.” வயிற்றை பிடித்துக்கொண்டு அவள் சொல்லியவிதம் அவனுள் தாய்மையை உண்டாக்க, “குளிச்சிட்டு வா” என்று அவளை கொல்லைப் பக்கம் அனுப்பியவன் சமையலறைக்குள் சென்றான்.
அங்கு ஏற்கனவே கயல் தேநீர் வார்த்துக் கொண்டிருந்தாள். தம்பியை கண்டதும், “வாடா… மலர் ஓகேவா?” எனக் கேட்டாள்.
“ஓகே ஆகிட்டான்னு தான் நினைக்குறேன்” என்றவன், “மலர் பசிக்குது சொன்னாள் கயல்” என்றான்.
“நீ மலருகிட்ட பேசணும் உள்ளே போனதுமே, அவளை சரிபண்ணிடுவ தெரியும் முகி. அதான் இட்லி ஊத்தி வச்சிட்டேன். காரச்சட்னி தாளிக்கணும்” என்று அவனிடம் சொல்லியவாறே அதையும் செய்து முடித்தாள்.
“நேற்று மதியத்திலிருந்து யாருமே சாப்பிடல முகி. நானும் வயலுக்கு போகணும். வேலையிருக்கு. சிவாண்ணாக்கும் சாப்பாடு எடுத்துப்போகணும். அதான் சமைச்சிட்டேன்” என்றவள் மணியை பார்க்க அது ஆறு மணியை கடந்து சுழன்று கொண்டிருந்தது.
“ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்றவள் பையில் எடுத்து வைத்த உணவை கையிலெடுக்க மாணிக்கம் வந்து வாங்கிக்கொண்டார்.
இருவரும் வயலுக்கு செல்ல, அங்கிருந்த சரளாவிடம் முகி மற்றும் மலரை பார்த்துக்கொள்ளுமாறு கண்காட்டிவிட்டுச் சென்றாள்.
மலர் வந்ததும் தானே உணவினைத் தட்டில் எடுத்து வைத்து அவளுக்கு ஊட்டிவிட்டான். முகிலனின் அந்த செயல் மகளை நினைத்து விம்மிக் கொண்டிருந்த சரளாவின் மனதை அமைதிப்படுத்தியது. ஒருவித நிறைவுடன் பார்த்திருந்தவர், அவர்களுக்கு தனிமை அளித்து விலகிச் சென்றார்.
முகிலன் கொடுத்துக்கொண்டே இருக்க மலர் உண்டுகொண்டே இருந்தாள்.
“இவ்வளவு பசியை எப்படிடி தாங்கிட்டு இருந்த?”
“உன்னை பார்க்குற வரை மரத்துப் போயிருந்தேன் மாமா.”
அவள் இதுவரை சொல்லிடாத காதலை அந்நொடி உணர்ந்தான். மனதோடு அவளின் காதலை ஆழ்ந்து மகிழ்ந்தான்.
பசி அடங்கிய பின்னரே நிகழ் புரிந்திட,
“நீங்க சாப்பிடலையா?” எனக் கேட்டாள்.
“நான் மட்டும் தான் ஊட்டிவிடணுமா?” கேட்டு முடிக்கும் முன்னரே, உணவடங்கிய தன்னுடைய கையினை அவனின் வாயருகே கொண்டு சென்றிருந்தாள்.
சாப்பிட்டு முடித்து ஆசுவாசமாக அமர்ந்ததும் முகிலன் மலரிடம் நிறைய பேசினான். பேசிக்கொண்டே இருந்தான். நடந்த நிகழ்வின் தாக்கத்தை முற்றிலும் களைந்திட எண்ணி பல கதைகள் பேசி அவளின் மனதை முழுவதுமாக தன்வசப்படுத்தினான். அதிகம் பேசிவிட்டோமென்று அவனே உணரும் வகையில் அவ்வளவு பேசினான். இறுதியில் தானெடுத்திருக்கும் முடிவை மலரிடம் கூறினான்.
அதற்கு, “எனக்கும் உங்களை விட்டு இருக்க முடியும் தோணல” என்றவளின் பதிலில் அனைத்து வேதனைகளையும் மறந்து இன்பம் கொண்டான்.
“கயல்கிட்ட பேசணும்” என்றவன் எழுந்துகொண்டான்.
மலரின் பார்வையை வைத்தே, “வயல் வரை போயிட்டு வர்றேன்” என்றவன் நடக்க அவனுடன் இணைந்து நடந்தாள் மலர்.
******
“எல்லாம் ரெடியா கயல்…”
“இன்னும் கொஞ்சம் வேலையிருக்குண்ணா” என்று சிவாவின் கேள்விக்கு பதிலளித்த கயலின் பார்வை அந்த இரண்டு ஏக்கர் வயலில் படிந்திருந்தது.
“நடுவில் நெல்லுக்குன்னு விட்டிருக்க பகுதியில் நாற்று நட்டுட்டா, சிறு சிறு குட்டி மீன்களை வயலில் விட்டுடலாம் அண்ணா. ஆனால் அதுக்கு பிறகு தான் வேலையே இருக்கு.”
கயல் சொல்லியதை கவனித்த சிவா, “எவ்வளவு கடினமா இருந்தாலும் ஒருகை பார்த்திடலாம்” என்றான்.
நெல் பயிருடன் மீன் வளர்ப்பு. அதற்கேற்றவாறு கயல் தயார் செய்திருந்த வயலினை சுற்றி பார்த்த மாணிக்கம், “இந்த அமைப்பே புதுசா இருக்கே?” என்று வினவினார்.
“இதுல வயலைச்சுற்றி ஓரத்தில் மீன் வளர்ப்புக்கு ஏற்றவாறு இரண்டடி நிலத்தை ஆழப்படுத்தியிருக்கு மாமா. அவ்வளவு தான். மத்தபடி எல்லாம் சாதாரண நெற்பயிருடும் முறை தான். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை” என்று மாணிக்கத்திற்கு விளக்கினாள்.
அதனைக் கேட்டுக்கொண்டே வந்த ரத்தினம்…
“ரொம்ப தீவிரமா இருக்க போலிருக்கே?” என்றார்.
அவருக்கு ஒரு மென் புன்னகையை மட்டுமே பதிலாக வழங்கினாள்.
“சிங்காரம் மலரை பற்றி விசாரித்தான்.” கயலை பார்க்க வந்ததற்கான காரணத்தை நேரடியாகக் கூறினார் ரத்தினம்.
மூவரும் அதிர்வை வெளிப்படுத்தினர்.
“சிங்காரம் கட்டப்பஞ்சாயத்து பண்றவன் தான். ஆனால் பொண்ணுங்க விடயத்தில் ரொம்ப கண்ணியமானவன். அவன் மகனின் நடத்தையை கேள்விப்பட்டு உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டேன் சொல்ல சொன்னாரு. மலருக்கு எதாவது உதவி வேணும்னா தயங்காம கேட்கச் சொன்னார்.”
“பாருடா ரவுடியிடமும் சில நல்ல குணங்கள் இருக்கும் போல.” சிவாவின் கூற்றை மாணிக்கம் ஆமோதிக்க, “அவர் மன்னிப்பு கேட்டேன் சொன்னதே போதும்” என்ற கயல் அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
அவளுக்கு மேற்கொண்டு மலர் விடயம் பேச விருப்பமில்லை என்பதை உணர்ந்த ரத்தினம் நாசூக்காக அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
“யாரையும் எளிதில் கணிக்க முடியறதில்லை இல்லையா” என்ற சிவாவிடம், “ரத்தினம் போல” என்றாள் கயல்.
அடுத்து அவர்களின் கவனம் பேச்செல்லாம் மீன் வளர்ப்பு மற்றும் நாற்று நடுதலைப் பற்றியே இருந்தது.
“இந்த வேலை எப்போ முடியும்?”
“நாளைக்கே முடிஞ்சிடும்” என்ற கயல், “நிலத்தில் வரும் பாசிகள், பூச்சிகள் தான் மீனுக்கு உணவு. அதனால் நூறு சதவிகிதம் இயற்கை உரம் மட்டும் தான் பயன்படுத்திடனும்” என்றதோடு, “வெர்மிகம்போஸ்ட் போதுமான அளவு இல்லைன்னா, அதோட உற்பத்தியை பெருக்கணும். அதை நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க மாமா” என்று மாணிக்கத்திடம் கூறினாள்.
ஒவ்வொன்றையும் கயலே பார்த்து பார்த்து செய்தாள். அதிலேயே அவள் இதனை எத்தனை முக்கியமாக நினைக்கிறாள் என்று விளங்கியது. விவசாயத்தில் ஏதேனும் புதிதாக செய்ய வேண்டுமென்ற அவளின் துடிப்பும் புரிந்தது.
பண்ணையிலிருந்து விவசாயத்திற்காக வாங்கி வந்த மீன் குட்டிகளை தற்சமயத்திற்கு பாதுகாத்து வைத்திருக்கும் தொட்டியின் அருகே சென்றவள், சில இயற்கை உணவுகளை இட்டு… அவை உண்ணும் அழகை ரசித்திருந்தாள்.
“கயல் பக்கத்து ஊர் கோவில் திருவிழாக்கு பூ கேட்டிருந்தாங்க இல்லையா, அவங்க இப்போ கொடுக்க முடியுமா கேட்குறாங்க?” என்று அவளருகில் வந்தான் சிவா.
“எப்பவும் சாயங்காலம் தானே பறிப்போம். இப்போ மணி இரண்டரை தானே ஆகுது” என்று கயல் யோசிக்கும் போதே, “சாமி அலங்காரத்துக்கு தேவைப்படுது” என வந்திருப்போர் சொல்ல… “ஆளுங்களும் சாயங்காலம் தானே வருவாங்க” என்று சிந்தனை வயப்பட்டவள், “நாமே பறிக்கலாம்” என சிவாவையும் மாணிக்கத்தையும் பார்த்தாள்.
அந்நேரம் தான் முகியும் மலரும் அங்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதே மலருக்கு அனைத்தும் சரியாகிவிட்டதென்ற நிம்மதியை அளித்தது. அத்தோடு மலரின் முகத்தில் தென்பட்ட சிறு புன்னகை, அதற்கு காரணமான தம்பியை நினைத்து பெருமை கொள்ளச்செய்தது.
சில தினங்களுக்குப் பின்னர் அனைவரும் ஒன்றாக பேசி சிரித்தபடி வேலை செய்தனர். விரைந்து பூக்களை பறித்து தங்களது வேலையை முடித்தும் கொண்டனர்.
“அண்ணா நாளைக்கு நாற்று நட ஆள் சொல்லிடுங்க” என்று சிவாவிடம் கூறிய கயல் அந்தி சாய்வதை உணர்ந்து மலரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு மாணிக்கத்தையும் உடன் போகச் செய்திருந்தாள்.
“என்ன முகி என்ன பேசணும்?”
வேலை செய்து கொண்டிருக்கும் போது அவ்வவ்போது தன் முகத்தையே பார்த்திருக்கும் முகி தன்னிடம் ஏதோ பேச விழைகிறான் என்பதை கணித்து கயல் அவனிடம் என்னவென்று நேரடியாகவேக் கேட்டிருந்தாள்.
“கயல்…”
“சொல்லுடா. என்ன தயக்கம்.”
ஏற்கனவே கயலிடமிருந்து தனித்திருக்கும் வேளையில், அவளை விடுத்து திருமணம் செய்ததோடு இப்போது தன்னுடைய எண்ணத்தையும் கூறினால் முற்றிலும் தான் அவளை விட்டுவிட்டதாக வருத்தம் கொள்வாளோ’ என சொல்ல வந்ததை சொல்லாது தயங்கி நின்றான்.
“முகி என்னடா?” அவனின் தலைகோதி வினவினாள்.
அந்த ஆதுரமான வார்த்தையில் சகோதரியை அணைத்திருந்தான். மலருக்கு ஆறுதலாக இருந்தவன், கடந்து வந்த நிகழ்வை எண்ணி ஆறுதல் தேடி நின்றான்.
தம்பியாகிய தன் சேயின் முதுகை பரிவுடன் தடவிக் கொடுத்த கயல்,
“எல்லாம் சரியாகிருச்சு முகி. இனி அந்த ரகு தொல்லை இருக்காது” என்று அன்றைய தினம் ரத்தினம் சிங்காரத்தைப்பற்றி கூறியதை கூறினாள்.
“ம்” என்றவாறு அவளிடமிருந்து மெல்ல விலகியவனிடம், “இப்போ சொல்லு என்னன்னு” எனக் கேட்டாள்.
“நான் மலரை என்னோட கூட்டிட்டு போவட்டும்மா?”
இதை நான் எதிர்பார்த்தேன் என்கிற பாவம் கயலிடம்.
“உன் விருப்பம் முகி. உனக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணு” என்றாள்.
“அப்புறம் கயல், இந்த எக்ஸாம் முடிந்ததும் நான் பார்ட் டைம்மா ஹாஸ்பிட்டலில் பிராக்டிஸ் பண்ணலாம் நினைக்கிறேன். அப்படியே பிஜி படிக்கிறேன்” என்று முக்கிய விடயத்தை தெரிவித்தான்.
“என்கிட்ட பணம் கேட்க கஷ்டமா இருக்கா முகி.” அப்பட்டமான வருத்தம்.
“அச்சோ கயல் நீயெனக்கு அம்மா டா. இதுவரை ஓகே. இப்போ என்னை நம்பி ஒரு பொண்ணு இருக்காள். அவள் முன்னாடி நானும் நிமிர்ந்து நிக்கணுமே. அதுமட்டுமில்ல உன்னை மேலும் பாரம் சுமக்க வைக்க எனக்கு கஷ்டமா இருக்கு” என்று தன் மனதை மறையாது வெளிப்படுத்தினான்.
“இன்னும் நீயெனக்கு சின்ன பையனாத்தான் தெரியுற முகி. நீயெப்போ இப்படி யோசிக்க ஆரம்பிச்சன்னே ஆச்சர்யமா இருக்கு” என்றவள் அவனின் சுயமரியாதைக்காக அரை மனதாக சரியென ஒப்புக் கொண்டாள்.
“பிஜி முடிச்சதும் இங்கு மொத்தமா ஓடி வந்திடுவேன் கயல். அதுவரை லீவுக்கு மட்டும் வந்து போவது போலிருக்கும்” என்று இப்போதே தமக்கையை பிரிந்திருக்க போவதை எண்ணி வருந்தியவன், “மலரை அங்கு சென்று காலேஜில் சேர்க்க வேண்டும்” என்று கூறினான்.
முகியின் அடுத்தடுத்த திட்டங்கள் அவனின் வாயாலேயே கேட்ட கயல் தன் தம்பி வளர்ந்துவிட்டான் என்பதை எண்ணி பூரித்துப் போனாள்.
*****
புதிய வாரியரின் கட்டிட வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தது. மேற்பார்வை பார்க்க வந்த பார்த்திபன் அவ்வேலையை விடுத்து நொடிக்கு ஒருதரம் அலைபேசியை எடுத்து தொடுதிரையில் தெரியும் கயலின் முகத்தையே பார்த்திருந்தான்.
எப்போதும் வேலை விடயத்தில் சீரியஸாக புயல் போல் இருப்பவன் இன்று மென்மையாக பூ போல் வசீகரிப்போடு தன்னிருக்கையில் அமர்ந்திருக்க, கேள்வியாக அவனை பார்த்திருந்தான் டெல்.
“டேய் உடம்பு ஏதும் சரியில்லையா?”
டெல்லின் கேள்விற்கு பதிலளித்த பார்த்திபன்,
“இந்த லவ் பற்றி என்னடா நினைக்குற?” எனக் கேட்டான்.
“லவ்வா” என்று வியந்து பார்த்த டெல்… “நோ எக்ஸ்பீரியன்ஸ் டா” என்றான் பாவமாக முகம் வைத்து.
“ஏன்?”
“உன்னை ஃபிரண்டா வச்சிக்கிட்டு நான் லவ்வுக்கெல்லாம் ஆசைப்படலாமாடா” என்ற டெல்லின் பேச்சில் பார்த்திபன் வாய்விட்டு சிரித்தான். அவன் இப்படி சிரிப்பது மிகவும் அரிது.
அவனையே ரசனையாக நோட்டமிட்டிருந்த டெல், பார்த்திபனின் சிரிப்பு அடங்கியதும், “சரி சொல்லு யாரந்த பொண்ணு?” எனக் கேட்டிருந்தான்.
டெல்லிடம் எதையும் மறைக்கும் பழக்கம் பார்த்திபனுக்கு கிடையாது அதனால் தன்னுடைய காதலையும் மறைக்காது கூறியவன், கயல் யார் என்பதையும் சொல்லியிருந்தான்.
“ஹோ… அப்போ லவ்வுக்காகத்தான், இந்தியா போக நேற்று ஜீனி பற்றியெல்லாம் கேட்டியா” என்ற டெல்லிடம் அசடு வழிவதைவிட வேறு வழியிருந்திருக்கவில்லை பார்த்திபனிடம்.
“டேய் சத்தியமா வெட்கமெல்லாம் படாதே. பார்க்கவே கொடூரமா இருக்கு” என்ற டெல்லிற்கு உண்மையில் நண்பனின் காதலை எண்ணி மகிழ்வு தான்.
“எனக்கே தெரியுது டெல். இந்த காதலை உணர்ந்தது முதல், எனக்கு முரணாவே எலாம் செய்றேன். இம்சை. இன்பமான இம்சை” என்று காதலில் அரற்றினான்.
“ரொம்ப முத்திடுச்சு போலவே” என்று கலாய்த்த டெல், வேலையை கவனிக்கச் சென்றான்.
உண்மையில் தன் காதல் தெரிந்து டெல் இதுபோல் தன்னை கிண்டல் செய்வான் என்று அறிந்திடாத பார்த்திபன் இருவருக்குமிடையேயான பேச்சினை நினைத்து சிரித்த சமயம், இடியென்ற செய்தியை தாங்கி ஒலித்தது.
அச்செய்தி என்னவாக இருக்கும்?
குறிப்பிட்ட நாட்களில் இந்தியா சென்று தன் காதலை தன்னவளுக்கு உணர்த்திடுவானா?