அத்தியாயம் 🌾 19 :
“வாட்…?”
அலைபேசி வழியாகக் கேட்ட செய்தியில் அதிர்ந்து எழுந்தான் பார்த்திபன். இருக்கை இரண்டடி பின் சென்றிருந்தது.
பார்த்திபனின் அதிர்வான குரலின் எதிரொலிப்பில், அந்த தளத்தில் செய்து முடித்த உள்ளமைப்பு வேலைபாட்டினை சரிபார்த்துக் கொண்டிருந்த டெல் பார்த்திபனிருந்த அறைக்குள் வேகமாக நுழைந்தான்.
எதற்கும் அலட்டிக்கொள்ளாத பார்த்திபனின் இத்தோற்றம் டெல்லிற்கு புதிது.
பார்த்திபனின் முகத்தில் தோன்றிய அதிர்வெல்லாம் ஒரு நொடி தான். அடுத்த கணம் தன் இறுக்கத்தை மறைத்து தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டான்.
“வாட் ஹேப்பன் பார்த்தி?”
“நியூ கேம்… வா ஆடி பார்க்கலாம்.” எல்லாவற்றையும் போல் இதையும் சாதாரணமாக நினைத்துக்கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் பார்த்திபன் அழைத்து வந்திருக்கும் இடத்தை பார்த்த டெல்… “யாருக்கு என்னடா?” என்று பதறியவனாகக் கேட்டான்.
அவர்கள் வந்திருப்பது மருத்துவமனை.
பார்த்திபனின் முகத்தில் ஒரு சுளிப்பான புன்னகை.
“ஹேய் என்னடா… எதுக்கு இங்கு வந்திருக்கோம்?”
டெல்லிடம் இருக்கும் பதற்றம் கொஞ்சம்கூட பார்த்திபனிடம் இல்லை.
“உள்ள போனால் தெரியப்போகுது. வாடா” என்ற பார்த்திபன் டெல்லை இழுக்காதக் குறையாக இழுத்துச் சென்றான்.
வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் அவசர சிகிச்சைப்பிரிவு எங்கென்று கேட்டு அறிந்த பார்த்திபன் இதுவரை தனக்கு நடந்தே பழக்கமில்லா அடி மேல் அடி வைத்து மிக மிக மெதுவாக நடந்தான்.
“பார்த்தி… ஆர் யூ ஓகே மேன்?”
“எனக்கென்னடா… உன் முன்னால் நல்லாத்தானே நடந்து வரேன்.”
“இது உன் நடையே இல்லையே! ஏதோ நடக்கத் தெரியாதவன் நடக்குற மாதிரி இருக்கு.” முகத்தை சுளித்தவனாகக் கூறினான்.
சத்தமாக சிரித்திட்ட பார்த்திபன், “நடக்கவிருப்பதை சில நிமிடங்கள் ஒத்தி வைக்கலாம் நினைத்தேன்” என்ற பார்த்திபன், “மாம் அண்ட் டாட் வந்துட்டாங்களா தெரியலயே?” என்றான்.
“டேய் என்னடா நடக்குது. அங்கிள் ஆன்ட்டி எதுக்குடா ஹாஸ்பிடல் வரணும்?” டெல்லிற்கு மண்டை குழம்பியது.
“எனக்கு கல்யாணம் நடத்தி வைக்க!” முகத்தில் அருவருப்பைக் காட்டியவனாகக் கூறினான் பார்த்திபன்.
“என்னடா உளறிட்டு இருக்க?”
“நான் உளறல டெல். நடக்கப்போறதை சொன்னேன்.”
டெல்லிற்கு சுத்தமாக விளங்கவில்லை. மூளை குழம்பிய நிலை தான்.
“டேய்… தெய்வமே! நீ ஒன்னும் சொல்லவேணாம். நானும் எதுவும் கேட்கவேணாம். நான் நடக்கிறதை பார்த்தே தெரிஞ்சுக்கிறேன்” என்ற டெல்லிற்கு சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் என்றே தோன்றியது.
“சில் மேன்” என்ற பார்த்திபன் தான் வரவேண்டிய இடத்திற்கு வந்தபோது தேவராஜன் மற்றும் மங்கை வெளிறிய முகத்தோடு அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பே நடுத்தர வயதுடைய தம்பதியர் கண்கள் கலங்க நின்றிருந்தனர்.
“லீனா பேரண்ட்ஸ்.” அவர்களை கண்டதும் டெல் தானாக சொல்லியிருந்தான்.
“இவங்க எதுக்குடா இங்கு இருக்காங்க?”
“அவங்க டாட்டர் பாய்சன் சாப்பிட்டால் ஹாஸ்பிடல் போகாம வேறெங்க இருப்பாங்க.”
பார்த்திபன் சொல்லியதில் டெல் வெளிப்படையாக அதிர்ந்தான்.
“என்னடா சொல்ற… லீனா பாய்சன் சாப்பிட்டாளா?”
“அப்படித்தான் எனக்கு கால் வந்தது.”
பார்த்திபனின் பேச்சினிலேயே அவனுக்கு இதில் நம்பிக்கையில்லை என்பது தெரிந்தது.
“ஓகே… பட் அவள் பாய்சன் சாப்பிட்டதுக்கு எதுக்கு உன் பேரண்ட்ஸ் வந்திருக்காங்க?” அந்த கேள்வி பார்த்திபனிடத்தில் இல்லை. அவனுக்குத்தான் அதற்கான காரணம் தெரியுமே.
லீனாவிற்கு நோ சொல்லியதும், இத்தனை நாட்கள் அவள் அமைதியாக இருந்ததற்கான காரணம் அவன் எதிர்பார்த்த ஒன்று தான்.
அவளின் குணம் அப்படி. தனக்கென நினைத்த ஒன்றை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் பழக்கம் இல்லாதவள். அவனை விட்டுவிடுவாளா என்ன?
“லீனா பொய் சொல்றாளா?”
“உன் ஃபிரண்ட் பற்றி உனக்கு தெரியாதா?”
வார்த்தையிலே நம் என்பதை தவிர்த்தான் பார்த்திபன்.
அந்நேரம் போலீஸ் வருகை டெல்லிற்கு அனைத்தையும் விளக்கியது.
“பக்கா பிளானிங்.”
“யா மேன்… இதுகூட அவள் பண்ணலன்னாதான் ஆச்சரியம்” என்றவன், “வா போகலாம்” என முன் நடக்க… போலீசின் வருகையை உணர்ந்து எழுந்த மங்கை தன் மகனைக் கண்டு அவனின் அருகில் சென்றார்.
“பார்த்தி என்னடா இது?”
“டென்ஷன் ஆகாதீங்க மாம்” என்ற பார்த்தி போலீசிடம் பேசிக்கொண்டிருந்த மருத்துவரிடம் சென்றான்.
“யூ ஆர்…?” மருத்துவர் அவனை கேள்வியாகப் பார்த்தார்.
“அம் பார்த்திபன்.”
“லீனா சொல்லும் பார்த்திபன் நீங்களா? உங்களை மேகசினில் பார்த்திருக்கேன் பட் சடனா நினைவு வரல.”
“இட்ஸ் ஓகே… லீனாவை பார்க்கலாமா?”
‘அவளை பொளந்து கட்ட என்னம்மா நடிக்குறான்.’ டெல்லின் மைண்ட் வாய்ஸ்.
“நேற்று தான் ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன்னு வந்து சொன்னான். அதுக்குள்ள இந்த பிரச்சினையா?” மங்கை டெல்லிடம் புலம்பினார். பார்த்திபன் டெல்லிடம் எதையும் மறைக்கமாட்டான் என்பதாலேயே வெளிப்படையாக அவனின் காதலை சொல்லி மங்கை அங்கலாய்த்தார். லீனாவை நினைக்கையில் அவருக்கு அப்படியொரு கோபம். தன்னுடைய பிள்ளையின் காதலை அழிக்க வந்த அரக்கியாகவே லீனாவை மனதில் திட்டி தீர்த்தார்.
தன் புலம்பலில் தனக்கு ஆறுதலாக பேசாது தன்னையே அகன்ற பார்வையுடன் வாய் பிளந்து பார்த்திருக்கும் டெல்லின் தோளில் அடித்தவர்…
“என்னை ஏண்டா முறைக்கிற?” என்றார்.
“ஏதே… நான் முறைக்கிறேனா! ஆளாளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுக்குறீங்க” என்றவன், “சும்மா புலம்பிட்டு இருக்காம நடப்பதை கவனிப்போம்” என்று மங்கையின் கவனத்தையும், தன் கவனத்தையும் நடப்பில் திருப்பினான்.
“பர்ஸ்ட் எய்ட் பண்ணியிருக்கோம். ட்ரீட்மெண்டுக்கு கோ ஆப்ரேட் பண்ண மாட்டேங்குறாங்க மிஸ்டர்.பார்த்திபன்.”
மருத்துவரை தொடர்ந்து…
“அவங்க உயிருக்கு மட்டும் எதாவது விபரீதம் ஏற்பட்டால், உங்களை கைது செய்யும் சூழல் ஏற்படும்” என்றார் காவல்துறை அதிகாரி.
அதில் பார்த்திபனிடம் அலட்டலில்லா தன்மை.
ஆனால் தேவராஜன் தான் அரண்டு போனார்.
“பார்த்தி லீனாவும் நல்ல பெண் தான்ப்பா. அவளை கல்யாணம் செய்வதில் உனக்கு எவ்வித குறையும் ஏற்படாது. ஒத்துக்கோ” என்றார்.
அந்நேரம் சரியாக… லீனாவின் தாய், “காதலுக்காக விஷம் சாப்பிட்டாளே!” என்று கேவலை வெளியிட, “எம்பொண்ணுக்கு மட்டும் எதாவது ஆச்சுதுன்னா இந்த லெட்டரை வைத்து உன்னை என்ன செய்றேன் பார்” என்று லீனாவின் தந்தை ஒரு ஆட்டமே ஆடித்தீர்த்தார்.
“என் காதலை ஏற்காத பார்த்திபனே என் தற்கொலைக்கு காரணம்” என்று வெள்ளைத்தாளில் எழுதி கையெழுத்திட்டிருந்தாள் லீனா.
அவர்கள் பேச்செல்லாம் ஒருவித சுவாரஸ்யத்துடன் கேட்டிருந்த பார்த்திபனுக்கு உள்ளுக்குள் ஏதோ காமெடி படம் பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வு.
“அவங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். லவ் அக்செப்ட் பண்ணிக்கோங்க மிஸ்டர்.பார்த்திபன். உங்க மேல் எவ்வளவு லவ் இருந்திருந்தா தற்கொலைக்கு முயன்றிருப்பார்.” மருத்துவர் அவளைப்பற்றி தெரிந்துகொள்ளாது பேசுகிறாரே என்று பார்த்திபனுக்கு ஒரு விரக்தி புன்னகை.
“பார்த்திபா என்னடா இது. ஒரு உயிர் டா. சரின்னு சொல்லேன்.” தன் மகனால் எங்கே ஒரு உயிர் போய்விடுமோ என தேவராஜன் பயந்தார்.
மகனின் காதல் அறிந்ததால் மங்கையால் எதுவும் பேச முடியவில்லை. மனதிற்குள் தன் கணவருக்குத்தான் அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தார்.
இதில் மகன் மீது குற்றம் வந்திடுமோ என தேவராஜிற்கு அச்சம். அதனாலேயே லீனாவை ஏற்க முடிவு செய்து மகனிடம் பேசினார்.
கணவரின் பேச்சு மங்கைக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“அவன் மனசுல என்னயிருக்குன்னு தெரியாம எதுவும் பேசாதீங்க.” மங்கை பேச்சில் ஜாடை காட்டினார். பாவம் அவருக்குத்தான் விளங்கவில்லை.
“என் மகள் உன்னால் விஷம் சாப்பிட்டு உயிருக்கு போராடுறா(ள்)” என்று லீனாவின் தந்தை பார்த்திபனுக்கு அலைபேசியில் அழைத்து பேசிய தொனிக்கும்… இப்போது அவர் பேசும் மிதப்பான தொனிக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.
பார்த்திபனிற்கு இது இன்னும் எவ்வளவு தூரம் தான் போகிறது பார்ப்போமென்கிற எண்ணம். ஆதலால் யாருடைய பேச்சுக்கும் எதிர்வினை ஆற்றாது அசையாது நின்றிருந்தான்.
வழக்கம்போல் டெல்லிற்கு தான் பார்த்திபனின் இந்த அமைதி வரவிருக்கும் சுனாமியை நினைவூட்டியது.
லீனாவின் தாய் மகளின் உயிரை நினைத்து பார்த்திபனிடம் கெஞ்சவே துவங்கிவிட்டார்.
“அவளுக்கு சிகிச்சை அளிக்கவாவது சரின்னு சொல்லுங்க பார்த்திபன். அவள் சிகிச்சைக்கு ஒத்துக்கிட்டு உயிர் பிழைத்த பிறகு பார்த்துக்கலாம்.” லீனாவின் தந்தை முகம் சுளித்தவராக மனைவியை அதட்டினார்.
“அவன் பிடி இப்போ நம்ம கைக்குள்ள… அவன் சரின்னு சொல்லித்தான் ஆகணும். அதோடு கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி இந்த பேப்பரில் கையெழுத்திட வேண்டும். அதற்கு இந்த போலீஸ் தான் சாட்சி” என்று தன் மனைவியிடம் பேசினாலும் அவரின் பார்வை பார்த்திபனின் மீது எள்ளலாக விழுந்தது.
“இதுல ஏதோ சதி இருக்க மாதிரியே தோணுது டெல்லு.” இப்போது மங்கைக்கும் நடப்பதை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.
“எப்படி சொல்றீங்க?”
“மகள் உயிருக்கு போராடும் போது, ஒரு அப்பன் இப்படியா டீல் பேசிட்டு நிப்பான்.” மங்கை சரியாக பாயிண்டை பிடிக்க, அது அவர்கள் இருவருக்கும் அருகில் நின்று கொண்டிருந்த தேவராஜை யோசிக்க வைத்தது.
“என்ன சார் பெத்தவங்க பொண்ணை நினைச்சு கெஞ்சிட்டு இருக்காங்க… நீங்க கல்லு மாதிரி நிக்கிறீங்க!” போலீஸ் பார்த்திபனிடம் லீனாவின் பெற்றோரை குறித்து பேசினார்.
“இவரு கெஞ்சுற மாதிரியா இருக்கு…” வார்த்தையை இழுத்த டெல்லின் குரலில் தேவராஜிற்கு உள்ளுக்குள் நெருடியது.
“என்ன மிஸ்டர்.பார்த்திபன்… நீங்க லேட் பண்ற ஒவ்வொரு நொடியும் அவங்க உயிருக்கு ஆபத்து. ஓகே சொல்லுங்க. இப்போ அவங்க உயிர் நமக்கு முக்கியம்.” தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு உயிர் போய்விடக்கூடாதே என்று பேசினார் மருத்துவர்.
“லீனாவை பார்க்கலாமா?” இறுதியாக பார்த்திபன் வாய் திறந்தான்.
“இந்த பேப்பரில் லீனாவை கட்டிக்க சம்மதன்னு சைன் பண்ணிட்டு உள்ள போங்க.” லீனாவின் தந்தைக்கு பார்த்திபன் தங்கள் வழிக்கு வந்துவிட்டான் என்கிற எண்ணம்.
“என்ன பார்க்குறீங்க பார்த்திபன்… வேண்டாம் சொல்லாம கையெழுத்து போடுங்க.” போலீஸ் பார்த்திபனை தூண்டினார்.
“என்ன சார் அவனை கெஞ்சிட்டு இருக்கீங்க. என் மகளை இப்போ இவனை வேண்டாம் சொல்ல சொல்லுங்க பார்ப்போம். சொல்லிடுவானா இவன். சொல்லித்தான் பார்க்கட்டுமே! அப்புறம் இந்த பேப்பர் பேசும்” என்று லீனாவின் தந்தை சற்று அதிகப்படியாகவே குரலை உயர்த்தினார்.
“முடியாது.” அவ்வளவு அழுத்தமாக, உறுதியாக வெளிவந்தது பார்த்திபனின் குரல்.
“என்ன பண்ணுவியோ பண்ணிக்கோ!” அடுத்த நொடி அவனின் குரலில் ஒரு தெனாவட்டு.
இப்போது அதிர்ந்து நிற்பது லீனாவின் தந்தை முறையாயிற்று.
“இதை போலீஸ் கிட்ட கொடுத்தா போதும்…” நா தடுமாற கூறினார்.
“ஓ… பயந்துட்டேன். அவள் செத்தா எனக்கென்ன மேன்” என்று காலினை அகட்டி வைத்து, தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று தனக்கே உரித்தான திமிருடன் கூறினான்.
மனிதர் ஆடிபோய்விட்டார்.
மகள் பார்த்திபனை விரும்புகிறேன் என்று சொன்னதும் தந்தையாக மகளின் காதலுக்கு மறுப்பேதும் கூறாது அதனை ஆதரித்தார்.
விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவன். அவன் தனக்கு மருமகனென்றால் கசக்கவா செய்யும். அவரின் தொழிலில் அடி மேல் அடி. அதனையெல்லாம் பார்த்திபனை வைத்து சரிகட்டிவிடலாமென்கிற அவரின் ஆசையை நிராசையாக்கியது லீனாவின் காதலை பார்த்திபன் நிராகரித்தது.
இரண்டு நாட்களில் மன வேதனையோடு சுற்றிக்கொண்டிருந்த லீனாவிடம், “தற்கொலை முயற்சி செய். உனக்காகத்தான் சாக முடிவெடுத்தேன். உனக்காக எதுவும் செய்வேன் அப்படிங்கிற பிம்பம் அவனுக்கு உன்மேல வரணும். நீ லவ்வுக்கு ஓகே சொன்னாதான் ட்ரீட்மெண்ட் செய்துப்பேன்னு பிடிவாதமா இரு. உயிருக்கு போராடும் நிலையில் அவன் சரின்னுதான் சொல்லுவான்” என்று தன் திட்டத்தைக் கூறினார்.
“இதில் எனக்கெதாவது…?” லீனா தந்தையை மிரட்சியாக பார்த்தாள்.
“காப்பாற்ற முடியும் அளவிற்கு… சும்மா மயங்கி விழுமளவிற்கு கம்மி டோஸ் எடுத்துக்கலாம்” என்று சர்வ சாதரணமாகக் கூறினார்.
இதனால் பார்த்திபன் கிடைத்தால் மட்டும் போதுமென நினைத்த லீனா தந்தையின் திட்டத்திற்கு சம்மதம் வழங்கி… மிகக் குறைந்தளவே விஷம் உட்கொண்டாள்.
மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டாள். முதலுதவி அளிக்கும் வரை அமைதியாக இருந்தவள், அதன் பின்னர் “பார்த்திபன் வந்து என்னை என் காதலை ஏற்றால் தான் மேற்கொண்டு சிகிச்சைக்கு ஒத்துழைப்பேன்” என்று மருத்துவரிடம் பிடிவாதமாக வாதம் செய்தாள்.
ஏற்கனவே தற்கொலை முயற்சியென மருத்துவர் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்திருக்க… லீனா இறந்துவிட்டால் தனக்கு கெட்டப்பெயர் வந்துவிடுமென்று நினைத்த மருத்துவர் லீனாவின் தந்தையிடம் பேசி பார்த்திபனிடம் நிலையைக் கூறச்செய்து வரவழைத்ததோடு… அவனின் பெற்றோரையும் வரச்செய்திருந்தார்.
எல்லாம் சரியாகத்தான் செல்வதை போலிருந்தது… ஆனால் பார்த்திபனின் மறுப்பு, அவரின் திட்டத்தில் மண்ணள்ளிப்போட… அடுத்து பார்த்திபன் பேசியதில் வார்த்தையை விட்டார்.
“உண்மையாவே பாய்சன் சாப்பிட்டு இருக்காளா?” பார்த்திபனின் கேள்விக்கு மருத்தவர் ஆமென்க… “அப்போ போகட்டும் விடுங்க டாக்டர். எனக்கொரு தொல்லை இனியில்லை” என்றவன் தன் பெற்றோரை பார்த்து “போகலாம்” என்று நடக்கத் தொடங்கினான்.
“இதுக்காகவா… நீ வேண்டான்னு போவதற்கா என் மகளுக்கு நானே விஷம் ஊற்றிக்கொடுத்தேன்.” அத்தளமே அதிரும் வகையில் கத்தினார்.
ஸ்விட்ச்சிட்டவாறு நின்று திரும்பிய பார்த்திபன், காவல்துறை அதிகாரியை அர்த்தம் பொதிந்து பார்த்துவிட்டு, மீண்டும் அங்கிருந்து வெளியேற நடந்தான்.
நீயும் ஒரு தந்தையா என தன் கணவனை பார்வையாலே எரித்த லீனாவின் அன்னை, மருத்துவரிடம் அவளை காக்கச்சொல்லி அழுதார். மருத்துவரும் ஒரு கண்டனப் பார்வையுடன் அறைக்குள் நுழைந்து பார்த்திபன் சொல்லியதை அப்படியே லீனாவிடம் தெரிவிக்க… தன்னுயிர் முக்கியமென்று நினைத்தவளும் அடுத்து மறுப்பினைக் காட்டாது சிகிச்சையை ஏற்றுக்கொண்டாள்.
காவல்துறை அதிகாரியும் லீனாவின் தந்தையை கண்டித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
பார்த்திபன் காரில் டெல்லுடன் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்.
“எப்படியோ இதிலிருந்து நீ தப்பிச்சிட்ட பார்த்திபா. நீ லவ் பண்ற பொண்ணே உனக்கு மனைவியா வருவாள்.” சந்தோஷத்தில் என்ன பேசுகிறோமென்று தெரியாது மங்கை தேவராஜின் முன் உளறிக்கொட்டினார்.
தேவராஜ் மகனை சிறு அதிர்வோடு ஏறிட… டெல் ‘என்னிடம் சொல்லவில்லையே’ என்று பார்வையால் குற்றம் சாற்றினான்.
“அச்சோ மாம்… ஏன் மாம்…?”
“விடுடா எப்படியிருந்தாலும் ஒருநாள் தெரியத்தானே போகுது” என்று அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த மங்கை மென்குரலில் சொல்ல, “அடுத்து பொண்ணு யாருன்னு உன் புருஷன் கேட்பார்” என்று பார்த்திபன் சொல்லி முடிக்கவில்லை…
“பொண்ணு யாருப்பா?” எனக் கேட்டிருந்தார் தேவராஜ்.
அப்படியே மங்கை பயத்தில் கை ரெண்டும் சில்லிட கணவரை திருதிருவென பார்த்தார்.
வீட்டிற்கு முன் கேட்டைத் தாண்டி வண்டியை நிறுத்திய பார்த்திபன்… மின்னல் வேகத்தில் இறங்கியிருந்தான்.
“மாம் சொல்லுவாங்க டாட்” என மங்கையை கோர்த்துவிட்டு அதே வேகத்தில் டெல்லிடம் தலையசைத்து விடுவிடுவென உள்ளே சென்று மறைந்தான்.
“அச்சோ… இப்போ நான் என்ன சொல்லி சமாளிப்பேன்.” மங்கை கைகளை பிசைந்தவாறு விழிக்க… “யாரது மங்கை?” என மீண்டும் கேட்டார் தேவராஜன்.
“அது… பெயர் மட்டும் தாங்க சொன்னான். அதுக்கூட ஏதோ… மறந்துப்போச்சுங்க” என்றவராக விட்டால் போதுமென்று ஓடிவிட்டார்.
மனைவியின் ஓட்டத்தில் தேவராஜிற்கு சிரிப்புத்தான் வந்தது.
இதே சிரிப்பு கயல்விழி யாரென்று தெரிந்த பின்னாலும் இருக்குமா? மகனின் காதலுக்காக தன் கோபத்தை விடுத்து கயலை மருமகளாக ஏற்றுக்கொள்வாரா?
மகன் காதலிக்கும் பெண் தன் முன்னால் நண்பன்… தனக்குத் துரோகியான அழகரின் மகளென்று அறிந்த பின்னர் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும். கதையின் போக்கில் தேவராஜின் பதிலை தெரிந்துகொள்வோம்.