அத்தியாயம் 🌾2 :
பாயு மொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுவதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
‘கண்ணம்மா என் காதலி’ என்ற தலைப்பில் தனது கனவு(கற்பனை) காதலி கண்ணம்மாவை நினைத்து பாரதி எழுதிய கவிதையின் வரிகள் மெல்லிசையில் அவ்வறை முழுதும் இதம் பரப்பிக் கொண்டிருந்தது.
இசைக்கும் பாரதியின் கவிச்சொல்லுக்கும் மயங்காதோர் இவ்வையகத்தில் உண்டோ?
பாடலில் லயித்த போதும்…
த்ரெட் மில்லில் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான் அவன். பார்த்திபன். இருபத்தியெட்டு இளம் அரிமா. தொழிலில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருப்பவனின் தோற்றத்தை விவரிக்கவும் வேண்டுமா?
காற்றிற்கும் அசைந்து கொடுத்திடாது இறுகியிருக்கும் அவனின் முன்னெற்றி தலைகேசம் உரைக்கும் எவருக்கும் அடங்கிடாதவன் இவனென்று. பிறர் தோற்றம் கண்டே அவரின் குணம் அறியும் கூர்ப்பார்வை. பெண்களுக்கு மட்டும் தான் விழிகள் அழகாக இருக்குமா என்ன? இவனுக்கு இருக்கிறதே! பார்ப்போரை பார்வையாலேயே சுருட்டி உறைய வைத்திடும் அவனின் விழிகள். அழுத்தமான உதடுகள். ஆனால் அதில் எப்போதும் நெளிந்த புன்னகை ஒட்டியிருக்கும். அதுவே அவனின் எதிரிகளுக்கு அவன் விடும் எச்சரிக்கை.
செய்து கொண்டிருக்கும் உடற்பயிற்சியின் காரணமாக நெற்றியில் துளிர்த்து கன்னத்தில் இறங்கி உயர்ந்த கழுத்து வழி பயணித்து திண்ணிய மார்புகளில் மற்றும் திமிறித் துடிக்கும் புஜத்தில் வடியும் வியர்வை மட்டுமே அறியும் அவனின் உடலின் கட்டுக்கோப்பை. ஆறடி ஆண் மகனும் விழி உயர்த்தி தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் பலர் வியக்கும் வேங்கை. தோற்றத்திலும், குணத்திலும். அதற்கேற்ற கர்வமும், திமிரும் சற்றே அதிகம் வாய்க்கப்பெற்றவன்.
புள்ளிமான் வேங்கையிடம் மாட்டிக்கொண்டால் இரையாகிப்போகும். அதுவே வேங்கை மானிடம் சிக்கிக்கொண்டால்? காதல் வேட்டையை கதையில் பயணித்து அறிவோம்.
அறையில் கசிந்து கொண்டிருந்த பாரதியின் பாடல் நிறைவுபெற நாயகனின் ஓட்டமும் முடிவுற்றது.
உடலில் வழியும் வியர்வையை துடைத்தவாறு பால்கனிக்கு வந்தவனின் கண்கள் விரிந்திருக்கும் சிங்கப்பூரின் காலை நேரத்தை ஒருவித யோசனையுடன் பார்வையிட்டான். அவனின் மனதின் எண்ணத்தினை யாரும் கண்டறிந்திட முடியாது.
யாருக்கோ தன்னுடைய அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தவன் தனக்கு வேண்டிய பதில் கிடைத்ததும் அளவான புன்னகையை சிந்தி தன் வெற்றியை ரசித்தான்.
“வீ வில் மீட் சூன் நியோ” என்று கூறிக்கொண்டவனின் பார்வையில் சிங்கத்தின் கண்ணில் இரை சிக்கிய வேட்கை.
இன்டர்காமினை எடுத்தவன்… அந்தப்பக்கம் ஏற்றதும் “மாம்” என்று விளித்தான்.
சிங்கப்பூரில் பேசப்படும் ஆட்சி மொழி மலாயாக இருந்தாலும் தமிழ் மொழிக்கும் அங்கு இடமுண்டு. அவர்கள் பேசுவது மலாயாக இருந்தாலும் கதைக்காக தமிழில்.
“சார் அம்மா மாடித்தோட்டத்தில் இருக்காங்க.”
வீட்டில் சமையல் செய்யும் குக் பதிலளிக்க பட்டென்று இண்டர்காமினை அதனிடத்தில் பொறுத்தியவன் தன்னுடைய அறையிலிருந்தே நேரடியாக மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறினான்.
பார்த்திபனின் வீடு பங்களா என்றே சொல்லலாம். நான்கு அடுக்குகளைக் கொண்டது. மூன்றாவது தளம் முழுக்க அவனுக்கு மட்டுமே உரித்தானது. அங்கு அவனின் தாய் தந்தையை தவிர்த்து யாருக்கும் தடம் வைக்க அனுமதியில்லை.
இரண்டாவது மாடியிலிருந்தே மாடிக்குச் செல்ல இன்னொரு வழியும் உண்டு. அதனையே வீட்டு உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்கள் பயன்படுத்துவர்.
வீட்டு உறுப்பினர்கள் என்றால் பல உறவுகள் இருக்கின்றனர் என்றல்ல. பார்த்திபன், அவனின் அன்னை மங்கை, தந்தை தேவராஜன். மூன்று பேர் மட்டுமே உள்ள அளவான குடும்பம்.
தேவராஜின் பூர்வீகம் தமிழ்நாட்டில் ஏதோவொரு மூலையில் இருக்கும் சிறு கிராமம். தலைநகரமான சென்னையில் தன்னுடைய தொழிலான உணவு விடுதியை சிறிய அளவில் தொடங்கினார்.
யார் மீதோ கொண்ட கோபம் மற்றும் வெறியில் தன்னிலையை உயர்த்த எண்ணி கடுமையாக உழைத்தார். இரவு பகல் பாராது தன்னுடைய இளமை காலத்தினை தொழிலில் செலவழித்தார்.
நண்பனின் துணை கொண்டு சிங்கப்பூர் வந்தவர்… ஹோட்டல் ஆரம்பித்து, ஆறு மாதத்தில் அதில் முன்னேற்றம் காணத் துவங்கியதும் தன்னுடைய மனைவி மற்றும் மகனை தன்னுடனே அழைத்துச்சென்று சிங்கப்பூர் வாசியாக மாறிவிட்டார்.
உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லையென தனித்திருந்தவருக்கு மீண்டும் இந்தியா வர விருப்பமற்று போனது.
மென்மேல தனது வாழ்வின் தரத்தை உயர்த்த முயன்றவர், திரீ ஸ்டார் என்று துவங்கி செவன் ஸ்டாரில் வளர்ச்சி பெற்றார்.
இந்த இடம் அவருக்கு சாதாரணமாக கிடைத்திடவில்லை. அப்பாவின் போராட்டத்தை கண்டு வளர்ந்ததால் தன்னுடைய ஆசையை சற்று ஒதுக்கி வைத்த பார்த்திபன் படித்து முடித்ததும் தந்தைக்கு ஓய்வளித்து தொழிலினை தன் கையில் எடுத்துக்கொண்டான்.
முதலில் ஹோட்டலிற்கு ‘தி வாரியர்’ என்று பெயர் வைத்து தன்னுடைய பணியைத் துவங்கினான்.
ஓரிடத்தில் மட்டுமே இருந்தாலும் தி வாரியர் சிங்கப்பூர் முழுவதும் புகழ் வாய்ந்தது. அதனின் அடுத்த கட்டமாக சிங்கப்பூரில் பல நகரங்களில் தி வாரியரின் கிளைகளைத் துவங்கி, அதன் வளர்ச்சியில் வெற்றியும் அடைந்தான்.
அத்தோடு நிறுத்தாது, பல நாடுகளிலும் தங்களுடைய ஹோட்டல் பிஸ்னெசினை முன்னேற்றிச் சென்றான். இந்தியாவிலும் தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, கேரளா, இன்னும் பல மாநிலங்களில் தங்களது ஹோட்டலைத் துவங்கி தந்தைக்கு பெருமை சேர்த்தான்.
எதுவுமே இல்லாது வெறும் கையோடு புறப்பட்ட இடத்தில் தங்களின் பெயரை ஆழ பதிய முயற்சித்தே இந்தியாவில் பல இடங்களில் தி வாரியரை நிற்க வைத்தான்.
தி வாரியர் என்ற பெயரை அனைவரது நாவிலும் உச்சரிக்க வைத்தவன் அதன் பிறகே தன்னுடைய ஆசையான மென்பொருளில் கால் பதித்தான். அதிலும் தனக்கென தனி முத்திரையை பதித்திருந்தான்.
மாடிக்கு வந்தவன் அங்கு தன்னுடைய அன்னை செய்து கொண்டிருந்த செயலை பார்த்து முகம் சுளித்தான்.
“மாம் என்னதிது… கார்டனரிடம் சொன்னா செய்யப்போறார். நீங்க ஏன் இதிலெல்லாம்…?” கேட்டவனுக்கு பேச்சிலும் உடலிலும் ஒரு ஒவ்வாமை.
மங்கைக்கு என்னதான் வசதி வாய்ப்பு வந்திருந்தாலும் தோட்டம் வைப்பது மற்றும் பயிர் செய்வதில் அலாதி பிரியம். வீட்டைச்சுற்றி மற்றும் மாடியிலும் தோட்டம் அமைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கின்றார். அதில் அவருக்கு அப்படியொரு சுகம். ரத்தத்தோடு கலந்ததல்லவா விவசாயம்.
செடிகளை நடுவதோடு மட்டுமல்லாமல் அதனை தானே பராமரிக்கவும் செய்வார்.
இப்போதும் அங்கை கத்தரிச் செடியை சுற்றியிருக்கும் களையை தானே அகற்றிக் கொண்டிருக்க… அவரின் கைகள் முழுவதும் சேறு. அதனை பார்த்தே பார்த்திபன் அருவருத்தான்.
“மாம் இந்த மட்(சேறு) கையெல்லாம்… இட்ஸ் டிஸ்கஸ்ட்டிங். வாமிட் வர மாதிரி இருக்கு மாம். முதலில் கை வாஷ் பண்ணுங்க.” தன் கோபத்தை அன்னையிடம் மட்டும் அடக்கி கையாண்டான்.
“இதில் நீ முகம் சுளிக்கவோ அருவருக்கவோ எதுவுமில்லை சின்னத் தங்கம்” என்றவரின் பேச்சினை இடைவெட்டினான் பார்த்திபன்.
“அய்யோ மாம் முதலில் இந்த சின்னத் தங்கம் சொல்றதை நிறுத்துங்க. லாஸ்ட் வீக் உங்க வெட்டிங் டே பார்ட்டிக்கு வந்த என் பிரண்ட்ஸ் முன்னாடியும் அப்படியே கூப்பிட்டு வச்சிட்டீங்க… அவவன் ஓட்டியே தள்ளிட்டான்” என்று சிறுப்பிள்ளையின் கோபத்தோடு புலம்பினான்.
“நீ பிறந்ததிலிருந்தே அப்படித்தான் கூப்பிடுறேன். நீ குட்டியா தேஜசோட என் கையில் முதன் முதலா வாங்கும் போது சின்னத் தங்கக்கட்டியே கையில் இருக்க மாதிரி இருந்த” என்று தன்னுடைய சேற்று கையினால் மகனின் கன்னத்தை ஆதுரமாக தடவினார்.
“மாம்” என்று அலறியவன் அருகில் கிடந்த ஓசினை எடுத்து அப்படியே தன்னுடைய முகத்தில் காண்பித்தான். அதில் பாய்ந்தடித்த நீர் அவனின் கன்னத்து கரையை போக்கிய போதும் தண்ணீரை முகத்தில் காண்பித்தபடியே நின்றிருந்தான்.
இது மங்கைக்கு பழகிய ஒன்றாக இருந்தாலும்,
“சேற்றில் கை வைக்க அசிங்கப்பட்டா சோற்றில் கை வைக்க முடியாதுப்பா” என்றார். அவரின் குரலில் அப்படியொரு அழுத்தம்.
“மாம் போதும் விடுங்க… அதுக்காக உடம்பு முழுக்க பூசிக்கவா முடியும்” என்று பார்த்திபன் சத்தமிடும் போது…
“விவசாயியோட தங்கச்சி வேறெப்படி பேசுவாள்” என்றபடி தேவராஜன் வருகை தந்தார்.
“எங்க அண்ணனை இழுக்கலனா உங்களுக்குத் தூக்கம் வராதே” என்று கணவரை நொடித்த மங்கை பார்த்திபனின் கையிலிருந்த ஓசினை பிடுங்கி கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு இருவரையும் முறைத்தபடியே அங்கிருந்து சென்றார்.
மனைவியின் கோபத்தை ரசித்தவாறு நின்றிருந்த தந்தையை ஆராயும் பார்வை பார்த்த பார்த்திபன்…
“அம்மாவுடைய பிரதர் மட்டும் தான் நமக்கு ரிலேட்டிவ்வா டாட். அவங்க எங்க இருக்காங்க? உங்க சைட் யாருமில்லையா?” பதில் கிடைக்காது என்று தெரிந்தும் பலமுறை கேட்ட கேள்வியையே இப்போதும் கேட்டான்.
தங்களுடைய கிராமத்திலிருந்து வரும்போது பார்த்திபனுக்கு நான்கு வயது. வளர வளர தங்களின் ஊர் மற்றும் உறவுகளைப்பற்றி தேவராஜன் மற்றும் மங்கை பேசியிருந்தால் அவனுக்கும் நினைவிருந்திருக்கும். தேவராஜன் மங்கையின் அண்ணன் என்று குறிப்பிடுவதோடு சரி. ஆதலால் பார்த்திபனுக்கு சிறு வயது நினைவு அவனோடு வளராது போனது. மங்கைக்கு அண்ணன் குடும்பம் உள்ளது மட்டும் தெரியும்.
அவமானப்பட்டு வந்ததாலோ என்னவோ அவ்வூரின் பெயரை கூட தேவராஜ் உச்சரித்ததில்லை. அதனால் பார்த்திபனுக்கு பூர்விகம் தெரியாமல் போனது.
“அவங்களைப்பற்றி தெரிந்து ஒன்றும் ஆகப்போறதில்லை” என்றவர் மெல்ல நகர,
“கண்டுபிடிப்பதும் அவ்வளவு கஷ்டமில்லை… பட் நீங்களே சொல்லணும் எதிர்பார்க்கிறேன்” என்று தந்தைக்கு பதில் அளித்தவன் அவருக்கு முன் வேகமாக சென்றிருந்தான்.
அன்றைய தினம்… நினைத்ததும் தேவராஜின் மனமும் முகமும் இருண்டது.
நம்பிக்கைத் துரோகத்தை அவரால் ஏற்க முடியவில்லை.
பார்த்திபன் தனது அறைக்குள் நுழைய கையில் பிளாக் டீயுடன் எதிர்ப்பட்டார் மங்கை.
“ஹேண்ட் வாஷ் யூஸ் பண்ணிங்களா மாம்?” அவர் கையிலிருந்த ட்ரெயில் இருந்து கப்பினை எடுத்தவனின் கேள்வியில் மங்கைக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
“போட்டேன் போட்டேன்” என்றவர் அவன் கோப்பையை வைத்ததும் சென்றுவிட்டார்.
************
காலை நேர பரபரப்பில் அந்த ஏழு நட்சத்திர உணவு மற்றும் தங்கும் விடுதி இயங்கிக் கொண்டிருந்தது.
ஓங்கி உயர்ந்து விண்ணை முட்டும் அளவிற்கு காண்போரை அண்ணாந்து பார்க்க வைக்கும் பிரமாண்டத் தோற்றம்.
202 மாடிகள் கொண்ட ராட்சத கட்டிடம். தளம் 201 முழுக்க பார்த்திபனுக்கு மட்டுமே உரித்தானது. அவனின் அலுவலக அறை இருநூறாவது தளத்தில் அமைந்திருந்தது.
தன்னுடைய பிளாக் ஆடியில் ராஜாவின் தோரணையோடு சீரிப்பாயும் வேகத்தில் வந்திறங்கியவன்… வாலட்டிடம் கார் சாவியினை தூக்கி எறிந்து அதே வேகத்தில் கட்டிடத்தின் உள் நுழைந்தான் பார்த்திபன். அவனின் பின்னால் பெர்சனல் ஆசிஸ்டெண்ட் டெல்வினோ அரக்க பறக்க ஓடினான்.
பார்த்திபனின் வருகையை உணர்ந்து… கட்டிடமே மிரட்சியில் சற்று ஆட்டம் கண்டு அடங்கியது.
மின்தூக்கியில் ஏறியவன்… உணவு கூடமிருக்கும் தளம் நோக்கிச் சென்றான். அதற்கு மற்றொரு பக்கத்தில் பிரமாண்டமான சமையலறை.
தேனீக்களின் சுறுசுறுப்போடு அவ்விடம் இயங்கிக் கொண்டிருந்தது. சீஃப் செஃப் தனக்கு கீழ் வேலை செய்யும் அசிஸ்டெண்ட் குக் ஒருவரை திட்டிக்கொண்டிருக்க அங்கு மேற்பார்வையிட்டவன், தன்னுடைய அலுவலக அறை நோக்கிச் சென்றான்.
இருக்கையில் அமர்ந்தவன்… “கால் ஹெர்” என்று கணினியில் சிசிடிவியின் உதவியால் தெரிந்த பெண்ணையும்… “அந்த குக்ஸ் ரெண்டு பேரையும் வர சொல்லுங்க” என்று டெல்வினிற்க்கு உத்தரவிட்டான்.
யாரையும் கண்டுகொள்ளாது கடந்து வந்திருந்தாலும் பார்த்திபனின் பார்வையிலிருந்து ஒன்றும் தப்பாது. சிறு விடயத்தையும் உன்னிப்பாய் மனதில் பதிய வைத்து கடப்பான்.
அதேபோல் யார் தவறு இழைத்தாலும் தானே முன்வந்து தண்டனை அளிப்பான். ஆயிரக்கணக்கில் அங்கு வேலை புரிபவர்கள் இருந்தபோதிலும் அனைவரின் கட்டுப்பாடும் பார்த்திபனின் விரல் நுனியில் இருந்தது. ஒரு சாம்ராஜ்யம் அசைக்க முடியாத விருட்சமாக வளர வேண்டுமென்றால் அடிமட்ட தொழிலாளி வரை அந்த ராஜாவின் பார்வையில் இருக்க வேண்டும் என்பது பார்த்திபனின் எண்ணம். அதனால் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் இருந்த போதும் அனைவரின் கட்டுப்பாட்டையும் தன் கைக்குள் வைத்திருக்கின்றான்.
முதாலாளியே அழைத்ததால் நடுங்கியபடி அவனின் அறை முன்னால் வந்து நின்றாள் சற்று நேரத்திற்கு முன் பார்த்திபனால் டெல்வினின் மூலம் அழைக்கப்பட்ட வரவேற்பில் பணிபுரியும் பெண்.
நடுங்கிய குரலில் அனுமதி வேண்டி உள் நுழைந்தாள்.
கணினியில் பார்வை பதித்து அமர்ந்திருந்தவன்… அவளை சற்றும் நிமிர்ந்து பாராது,
“ஹோட்டல் பேட்ச் கழட்டி கொடுத்திட்டு நீங்க கிளம்பலாம்” எனக்கூறி கீ போர்டில் உள்ள எழுத்துக்களை தட்ட ஆரம்பித்தான்.
“சார்…?” செய்த தவறு என்னவென்றே தெரியாத அப்பெண் மலங்க மலங்க விழித்தாள்.
“டெல்வின்.”
பார்த்திபனின் உக்கிர குரலில் தான் அணிந்திருந்த சட்டையின் வலது பக்க மார்புப் பகுதியில் குத்தப்பட்டிருந்த ‘தி வாரியர்’ என்ற பேட்சினை கழட்ட முயல்கையில் தான் அப்பெண் கவனித்தாள். அது தலை கீழாக குத்தப்பட்டிருந்தது.
டெல்வினோவிற்கு கூட ‘இதற்காக வேலையை விட்டு வெளியேற்ற வேண்டுமா’ என்று அப்பெண்ணை நினைத்து வருந்தத் தோன்றியது.
“சாரி சார்… இனி…”
“நோ எக்ஸ்கியூசஸ்… யூ கேன் லீவ் திஸ் பிளேஸ் ரைட் நவ்” என்றவன் அப்போது அங்கு நுழைந்த சீஃப் செஃப்’பின் கன்னத்தில் இடியென அறைந்தான்.
அந்த சத்தத்தில் அப்பெண் தானாக பேட்சினை கழட்டி டெல்வினிடம் கொடுத்து திரும்பியும் பாராது வெளியேறியிருந்தாள்.
“இப்போ சொல்லு என்ன பிராப்ளம்?”
‘இதை அடிப்பதற்கு முன்பு கேட்டிருக்கலாம்.’ சீஃப் செஃப்’பால் அவ்வாறு நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவரின் மனதின் ஓட்டம் புரிந்ததோ…
“கெஸ்ட் முன்பு அநாகரிகமா நடந்து கொண்டதற்கு தான் இந்த அடி. அதுவுமில்லாம கிச்சன் உள் வரை ஒருவரை அனுமதிச்சிருக்கீங்க” என்றான்.
ஆம் அவர் ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் கஸ்டமர் ஒருவர் முன்னிலையில் குக்கினை திட்டிக் கொண்டிருந்தார்.
“சார்… அவர் தான் புட் வர லேட்டாகிருச்சின்னு கம்ப்லைன்ட் கொடுத்தார்.” செஃப் தன் கன்னத்தை தடவிக்கொண்டே பதில் அளித்தார்.
இப்போது பார்த்திபனின் பார்வை குக்கின் மீது படிந்தது.
“சார் அவர் தான் முதலில் கொடுத்த ஆர்டரை பாதியில் கேன்சல் பண்ணிட்டு வேற ஆர்டர் செய்தார். அப்படியிருந்தும் சரியான நேரத்திற்கு நான் அனுப்பிட்டேன்” என்று பயந்தபடி அந்த குக் பதிலளித்தான்.
“கால் தட் ஃபுளோர் மேனேஜர்.” பார்த்திபன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
ஐந்து நிமிடத்தில் மேனேஜர் பார்த்திபனின் முன் நின்றிருந்தார்.
“கஸ்டமர் கம்பலைன்ட் உங்கக்கிட்ட தானே கொடுத்தாங்க” எனக் கேட்டவன், மேனேஜரின் திருதிரு முழியில் அவரை கண்டு கொண்டவனாக… டெல்வினை அர்த்தமாக பார்த்தான்.
ஆசிஸ்டெண்ட் குக்கை கிச்சனிற்கு போகச் சொல்லிய பார்த்திபன் தன் வேலையில் கவனமானான்.
பார்த்திபனின் பார்வைக்கான பொருள் அறிந்த டெல்வின்… மேனேஜரை வேலைவிட்டு அனுப்பி வைத்ததொடு செஃப்’பை இரண்டு வாரங்களுக்கு சஸ்பென்ட் செய்தான்.
அடுத்த இரண்டு மணி நேரம் மற்ற நாடுகளில் உள்ள தங்களின் ஹோட்டல் தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொண்டு… சற்று ஆசுவாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விழி மூடினான்.
அவனின் கை தானாக மியூசிக் பிளேயரை ஆன் செய்தது. பாரதியாரின் கவிதை இசையில் கசிந்தது.
“இப்படி பாரதியார் பாட்டு கேட்டால் மட்டும் போதாது. கண்ணம்மாவை அவர் எப்படி லவ் பண்ணியிருக்கிறார். அவர் மாதிரி வேண்டாம்… அதுல பாதியாவது யாரவது பொண்ணை கண்டு பிடிச்சு லவ் பண்ணலாம் தானே!”
அன்னையின் குரல் இசையையும் மீறி அவனின் செவிகளில் நுழைந்தது.
இருபத்தியொன்பது வயதாக, இன்னமும் மகன் திருமணத்திற்கு சம்மதிக்காது தொழில் தொழிலென்று ஓடுகிறானே என்கிற ஆதங்கம் மங்கைக்கு.
‘லவ்… இதுக்காக ஒரு பொண்ணை கண்டுபிடிக்க முடியுமா?’ மானசீகமாக அன்னையிடம் கேள்வி கேட்டான்.
அக்கேள்வி அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது. உள்ளுக்குள் சிரித்தும் கொண்டான்.
அந்நேரம் அவனின் அலைபேசி அதனின் இருப்பை தெரிவித்தது. அழைப்பினை எதிர்பார்த்தானோ? முகம் வேட்கையில் தகிக்க அதீத சந்தோஷத்தில் செவி மடுத்தான்.
“ஹாய் நியோ…” பார்த்திபனின் குரலில் அத்தனை உற்சாகம்.
எதிர் முனையில் பதிலின்றி போக…
“டூ ஃபிப்டி ஏக்கர்ஸ் ஃபார்ம்ஸ் தீயில் எரிந்து சாம்பலாகிப் போச்சாமே?” முயன்று வரவழைக்கப்பட்ட பரிதாபத்தோடு உச்சுக் கொட்டினான் பார்த்திபன்.
“உன்னை சும்மா விடமாட்டேன் டா! யூ வில் பே ஃபார் திஸ்.” நியோ தகித்தான். அவனிடம் பார்த்திபனின் மீதான கோபம் மிதமிஞ்சி காணப்பட்டது.
“ஆஹான்… பே பண்ணிடலாமே! ஒரே செக். அமௌண்ட் எவ்வளவு சொல்லு.” பார்த்திபனிடம் அப்பட்டமான நக்கல்.
“ரொம்ப ஆடாத பார்த்திபன். உன்னை அடக்கவும் ஒரு ஆள் வருவாங்க. வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு” என்ற நியோ இணைப்பைத் துண்டித்திருந்தான். பார்த்திபனை ஒன்றும் செய்ய முடியாத ஆத்திரம் அவனிடம்.
“வரட்டும்… வரட்டும்…” கிண்டலாக சொல்லிக்கொண்ட பார்த்திபனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, தான் ஒருத்தியிடம் அடங்கி அடிபணிந்து போகப்போகிறோம் என்று.