அத்தியாயம் 🌾 20 :
கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு திருவிழா போலத்தான்.
அன்று கயலின் வயலும் திருவிழா போன்று தான் கூட்டத்தோடு காட்சியளித்தது.
இதுவரை பார்த்திடாத கேட்டிடாத முறையில் விவசாயம். அதனை பார்க்கவே மக்கள் வந்திருந்தனர். அருகிலுள்ள கிராமத்திலிருந்தெல்லாம், விவசாய மக்கள் விடயமறிந்து திரண்டிருந்தனர்.
முகில் அவர்களது நகரத்தில் மட்டும் ஒளிபரப்பாகும் லோக்கல் சேனல் ஒன்றை பிடித்து, கயலின் முயற்சியை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்திருந்தான். அந்த தொலைக்காட்சி முகிலனின் நண்பனுடையது என்பதால் அதுவும் சாத்தியமாகியது.
வயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்படி காமிராவில் நடக்கும் எல்லாவற்றையும் நேரடியாக படம் பிடித்து ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருந்தது.
அது மட்டுமில்லாது சமூக வலைதளங்களான முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்றவற்றிலும் தனக்கான கணக்கில் ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தான் முகிலன்.
அனைத்தும் அங்கு ஒருவித உற்சாகத்தோடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வயலுக்கு நடுவிலிருக்கும் சமமான சேறு நிறைந்த பரப்பில் முதலில் நாற்றினை நட ஆரம்பித்திருந்தனர். இம்முறையின் முதலடி இதுதான்.
சரளா சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி ஆரத்தி காட்ட… சுற்றியிருந்த அனைவரும் இயற்கையை இரு கரம் குவித்து வணங்கினர்.
தீபத்தை தொட்டு கண்ணில் ஒற்றி வணங்கிய கயல், அணிந்திருந்த பாவாடையை சற்று ஏற்றி இடுப்பில் சொருகி, நாற்று கட்டை கையிலெடுத்து… சில நாற்றுகளை மட்டும் கொத்தாக அதிலிருந்து பிரித்தெடுத்தாள். இயற்கையை வேண்டி கண்ணில் ஒற்றியவள் வயலின் சனி மூலையில் அதனை நட்டு நாற்று நடுதலை தொடங்கிவைத்தாள்.
அவளைத் தொடர்ந்து இன்னும் சில பெண்களும் நாற்று நட குனிந்தனர். மாணிக்கமும், சிவாவும் பட்டம் அமைக்க… சரளாவும், மலரும் நாற்று கேட்கும் பெண்களுக்கு நாற்று கட்டுகளை தூக்கிப்போட்டவாறு இருந்தனர்.
பட்டம் என்பது சில அடிகள் அளவிற்கு நாற்றுகளுக்கு இடையே குறிப்பிட்ட அளவு இடைவெளி விடுவது. ஒவ்வொரு சில அடிகளும் ஒரு பட்டம் என்றழைக்கப்படும். இந்த இடைவெளி பயிர்களுக்கு நடுவே நடைபாதை போன்றது. பயிர்களுக்கு எவ்வித சேதமுமின்றி உள்ளே இறங்கி களையெடுப்பது உரமிடுவதற்கு எளிதாக இருக்க உதவும்.
“இங்கு நடந்து கொண்டிருக்கும் இம்முறைக்கு பெயர் தான் நாற்று நடுதல். இது எங்க வயல். எங்க விவசாயம். இங்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும் எங்க குடும்பம். சொல்லும்போதே செமயா இருக்குல… இதோட தொடர்ச்சியை நாம் தொடர்ந்து பார்ப்போம்.” வலைதளங்களில் நேரடியாக காட்சிகளை காட்டியவாறு பின்னணியில் பேசியபடி இருந்தான் முகிலன்.
அவனுக்கு அவனது அக்காவை நினைத்து பெருமையாக இருந்தது. அதனால் உலகமே தன்னுடைய தமக்கையை அறிய வேண்டுமென்று தனக்குத் தோன்றிய முறையில் உலகறியச் செய்துகொண்டிருந்தான்.
அறிய வேண்டியவனும், கயலை தெரிந்துகொள்ள வேண்டியவனும் இதனை பார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.
பலபேருக்கு உணவு விவசாயத்திலிருந்து வருகிறது என்று தெரியுமே தவிர அதனின் செய்முறை தெரியாது. உணவு வகைகள் தட்டுக்கு வரும்வரை அதில் விவசாயிகளின் உழைப்புகள் எத்தனை இருக்கிறதென்று முழுதாக அறிந்திடாதோர்தான் இன்று அதிகம். அதை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தான் முகி.
காணொளிக்கு கீழே விருப்பங்களும், கருத்துக்களும் குவிந்தபடி இருந்தனர்.
பலர் இன்று தான் வயல் பரப்பையே பார்ப்பதாகக்கூட கருத்திட்டிருந்தனர். அது ஆச்சரியம் இல்லை. நம் விவசாயத்தின் தற்போதைய நிலையின் அவலத்தின் அளவீடு.
“இரண்டு ஏக்கர் வயலில் நாற்று நட வேண்டும். சில மணி நேரங்கள் ஆகும். அதுவரை சுற்றியுள்ள சில சுவாரஸ்யமான பேச்சுக்களை கேட்போம்” என்ற முகிலன் அலைபேசி காமிராவினை கூடியிருந்த மக்கள் பக்கம் திருப்பினான்.
தன் கையிலிருந்த முதல் கட்டு நாற்று முடிந்ததுமே, கயல் மேற்பார்வையிட வரப்பில் ஏறியிருந்தாள்.
“வளரு அத்தை நாத்து சாயாம நல்லா குத்தி நடு. உன் பட்டத்தில் எல்லாம் சாஞ்சிக்கிட்டே வருது.”
“எல்லாம் ரா பொழுது வேர் பிடிக்குற வரை தான் கயலு. அப்புறம் நிமிந்துக்கும்.”
கயல் சொன்னதை சரி செய்யாது தனக்கு சாதகமாகப் பேசினார் அப்பெண்மணி.
“ஆமா கயலு அப்படியே நெட்டுக்க செங்குத்தா நின்னுக்கும்.” ஒருபெண் அவர் சொல்லியதற்கு கேலி பேச அங்கே சிரிப்பலை.
“என்ன கயலு, வயலு தோற்றமே வித்தியாசமா இருக்கு?” ஒரு பெண்மணி கேட்டிருந்தார். இதுவரை சமப்பரப்பில் இருந்தே வயல்களை பார்த்திருந்ததால், வயலைச்சுற்றி வரப்புகளை ஒட்டி காணப்பட்ட இரண்டடி ஆழம்… அதில் நிறைந்திருந்த நீர் யாவும் பார்ப்போருக்கு வித்தியாசமாகத்தான் தெரிந்தது.
“இதுல தான் பொன்னியக்கா மீன் வளர்க்கணும். இதுல இருக்க தண்ணீர் நெற்பயிரோட சமமா நிறைஞ்சிடும். மீன்கள் பயிருக்குள்ளும் நீந்திச்செல்ல ஏதுவா அது அமைஞ்சிடும். பயிரில் வரக்கூடிய புதிய பூச்சி, களையெல்லாம் வரும் ஒட்டுண்ணிகளை மீன் தனக்கு இரையா எடுத்துக்கும். அதனால் பயிருக்கு நோவும் அண்டாது, செயற்கை உரத்தைக் கொட்டி மறைமுகமா நம்மை அறியாமலே பயிரையும் நிலத்தையும் நாமலே நாசப்படுத்துற வேலையும் இருக்காது.”
அனைவருக்கும் இம்முறை புதிது என்பதால், கேட்பவர்களுக்கு விளக்காமாக அனைத்தையும் சொல்ல வேண்டுமென்று ஒவ்வொன்றையும் நிறைவாகக் கொடுக்க எண்ணினாள் கயல்விழி.
“படிச்ச புள்ள அதனால ஏட்டுல இருக்கிறதை நடைமுறைப்படுத்த நினைக்குது. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது கண்ணு.” பெரியவர் ஒருவர் ஏதோ நகைச்சுவை சொல்லிவிட்டதாக நினைத்து இடியென சிரித்தார்.
“என்னதான் புதுசா புதுசா வந்தாலும் எல்லாம் நம் பாரம்பரிய விவசாயதத்துக்கு முன்னுக்க நிக்க முடியுமா?” வயதில் மிகவும் மூத்தவர் சற்று அங்கலாய்த்தார்.
“என்ன தாத்தா அப்படி சொல்லிட்டீங்க இதுவும் நம்ம பாரம்பரிய விவசாயம் தான். நாலு தலைமுறையை நெருங்குற உங்களுக்குத் தெரியாதா?” எனக்கேட்ட கயல்,
முதலில் பேசிய பெரியவரைப் பார்த்து… “இது ஏட்டில் இருப்பது தான் பெரியப்பா, ஆனால் காகித ஏடுகள் இல்லை. பன ஏடுகள். ஓலைச்சுவடி” என்றாள்.
“ஆண்டாள் திருப்பாவை தெரியும்ல… அதுலே சொல்லியிருக்கு இம்முறை.
“ஓங்கு பெருஞ்செந் நெல்ஊடு கயலுகள் பூங்குவளைப் போதில் பெறிவண்டு கண்படுப்ப” என்றவள்,
“இதுக்கு அர்த்தம் என்னன்னா?
பெய்த பெருமழை காரணமாக செழித்து வளர்ந்துள்ள செந்நெல் வயல்களில் மீன்கள் பாய்ந்தோடி மகிழ்கின்றன. குவளை மலர்களில் புள்ளிகளை உடைய வண்டுகள் தேன் குடிக்க இறங்கிக் கிடக்கின்றன” என்று விளக்கம் அளித்ததோடு “இப்போ சொல்லுங்க இது நம்ம பாரம்பரிய முறைதானே. அப்போலாம் எந்தவொரு நவீன விவசாய முறையுமில்லாம மிகவும் கஷ்டமான முறையில் விவயாசம் பார்த்தாங்க. அந்த கஷ்டத்தில் கூட யாரும் விவசாயத்தை விட்டுடல. ஆனால் இப்போ…” என இழுத்து, “சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை” என கை விரித்தாள்.
தற்போதைய விவசாய நிலையை வார்த்தைகளால் சொல்லவும் வேண்டுமோ?
“எல்லாமே நம்மக்கிட்ட இருந்து போனதுதான் தாத்தா… புதுசு புதுசா கொண்டு வந்து நம்மக்கிட்ட வியாபாரம் செய்து, நமக்கு எளிமையில் சுகத்தை கொடுத்து எல்லாத்தையும் மறக்கடித்து… இப்போ எவன் எவனோ நம்ம முறையில் விவசாயம் செய்து அவன் நாட்டை வளர்ச்சியடைய வைத்துட்டிருக்கான். நாமளும் வெறும் வேடிக்கையை மட்டுமே பார்த்திட்டு விவசாயம் கைகொடுக்கலன்னு அதுமேலே பழியை போடுறோம்.
இந்தோனேசியாவில் இப்போ இந்தமுறையில் தான் பயிர் செய்றாங்க. அதாவது நெல்வயலில் நெல்லோடு மீனும் சேர்த்து வளர்க்குறாங்க. எல்லாம் இங்கிருந்து போனதுதான்.” கயலிடம் பெருமூச்சு.
“அப்படியா கண்ணு.” இந்தோனேசியா என்றதும் ஒருவர் வாய் பிளந்து ஆச்சரியமாகக் கேட்டார்.
“இங்கு வெளிநாடுன்னு சொன்னால் தான் மதிப்பு அப்படித்தானே! நம்ம நாடு சொன்னால் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழி தான் டக்குன்னு தோணுதுல” என்றவள் தன் வேலையில் கவனமானாள்.
“பொளந்துகட்டுறியே கயலு.” சிவா.
அங்கிருந்தோருக்கெல்லாம் கயல் வித்தியாசமானவளாகத் தெரிந்தாள். அவளை நினைத்து சற்று பெருமையாகக்கூட இருந்தது.
“இது என்னோட ஆதங்கம் சிவாண்ணா” என்றாள்.
கயலுடைய ஆதங்கம் மட்டுமல்ல, பல விவசாயிகளின் ஆதங்கம் இது.
“இந்த கயலுக்குள்ள எவ்வளவு இருக்கு பாரேன்.” ஒரு பெண் மேவாயில் கை வைத்தார்.
“மீனெல்லாம் விட்டாச்சா?”
கேட்டபடி வந்த ரத்தினம், “எவ்வளவு லைக்ஸ் வந்திருக்கு?” என முகிலனிடம் கேட்டார்.
அதற்கு முகிலன் அளித்த பதிலில் “பயங்கரம் பாஸ்” என்ற ரத்தினம், “நடவு முடிஞ்சதும் மீன் குட்டிகளை விட்டுடலாமா?” என்று கயலிடம் கேட்டார்.
“ம்… விட்டுடலாம்.”
“இது சாத்தியமா? மீனும், நெல்லும் வளரும் பருவம் சரியா இருக்குமா?”
ரத்தினம் தன்னுடைய பெரும் சந்தேகத்தை வினவினார். அதே சந்தேகம் அங்கிருந்த பலருக்கும் இருந்தது.
“மூனு மாசத்துல விளையுற நெல்லு தான் நட்டிருக்கேன். மீன்களும் மூனு மாசத்துல வளர்ந்து பிடித்தலுக்கு ரெடியாகிடும். நெல் அறுவடை அப்போ, வற்ற வாய்க்கால் பிடிப்போமில்லையா அப்போ மீன்கள் தானா இங்கிருந்து பக்கத்துல வெட்டியிருக்க குளத்துக்கு போயிடும். அப்படித்தான் அமைச்சிருக்கேன் என்று ஒரு குண்டு பரப்பில் சிறிய அளவில் அமைத்த குளத்தினைக் காட்டினாள்.
“மெனக்கெடல் அதிகமாக இருக்கும்போல?”
“எதுல தான் கஷ்டமில்லை. விரும்பி செய்தால் கஷ்டமும் இஷ்டம் தான்.”
எளிதாக சொல்லிவிட்டுச் சென்றாள். கேட்ட ரத்தினத்திற்குத்தான் கயலின் மன முதிர்வும் தன்னம்பிக்கையும் தன்னிடம் கூட இல்லை என்று அவளை வியந்தார்.
நாற்று நட்டு முடிந்தது. அனைவரும் ஒருவித சுவாரஸ்யத்துடன் அடுத்து என்ன என்று ஆவலாகக் காத்திருந்தனர்.
“முகி வாடா!”
போனும் கையுமாக நின்றிருந்த முகியை அழைத்தாள்.
தன்னுடைய நண்பனிடம் அலைபேசியை கொடுத்த முகிலன் கயலின் அருகில் சென்றான்.
“இப்போ நாம் ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு… மீன்களை வயலில் விடப்போறங்க.” முகிலனுக்கு பதிலாக மலர் காணொளிக்கு குரல் கொடுத்தாள்.
மிகவும் ஆர்வமாக இருப்பதாக எக்கச்சக்கமானோர் கருத்திட்டனர்.
சிவாவும், மாணிக்கமும் சிறு சிறு தொட்டிகளில் மீன் குட்டிகளை வயலுக்கு அருகே கொண்டு வந்தனர்.
“அவ்வளவுதான் கயல். கிணற்று தொட்டியில் விட்டிருந்த மீன் குட்டிகளெல்லாம் கொண்டு வந்தாச்சு.” சிவா சொல்லியதும் வயலில் இரண்டடி ஆழப்படுத்தியிருந்த பகுதியில் இறங்கி நின்றாள்.
தொட்டியிலிருந்த மீன்களை இரு கைகளாலும் நீருடன் அள்ளி வயற்று நீரில் விட்டாள்.
ஏதோ சில்லென்ற உணர்வு அவள் இதயத்தில். நினைத்ததை தொட்டுவிடும் சிலிர்ப்பு அது. நீரில் நெலிந்து ஓடும் மீன்களை பார்த்தவளின் கண்களில் பிரகாசம்.
தமக்கையின் முகத்தையே பார்த்திருந்த முகிலனுக்கு கயலின் ஒளி அதீத மகிழ்வைத் தந்தது. கயலையே வைத்த கண் எடுக்காது ஆதுரமாக பார்த்திருந்தான்.
அவளுக்கு பிடித்ததை செய்யும் நிறைவு அவளிடம்.
“டேய் முகி நீயும் வா…” என்று முகிலனின் கையை பிடித்து வயலுக்குள் இழுத்தாள்.
“விடுடா” என்ற கயலின் கையினை தன் கைகளுடன் சேர்த்தவாறு குவித்த முகிலன், மீன்களை அள்ளி விட்டான்.
“இந்த சந்தோஷம் எப்பவும் உன்னோட இருக்கணும் கயல்” என்ற முகி, “லவ் யூக்கா” என்று நீர் பனித்த கண்களுடன் கூறினான்.
முகியின் அன்பில் நெகிழ்ந்த கயல், ஆதுரமாக அவனின் முன்நெற்றி கேசத்தை கலைத்துவிட்டாள்.
“உன்னை மலர் உதைக்கப்போறாள்.”
சிவாவின் குரலில் மீண்ட முகில் அவன் சொன்னது புரியாது பார்க்க, “அவளுக்கு சொல்ல வேண்டிய ஐ லவ் யூவை கயலுக்கு சொல்றியே… தெரிஞ்சுது நீ காலிதான்” எனக்கூற அருகிலிருந்த சரளா கூட சிரித்துவிட்டார்.
“அவுங்க அக்காக்கு அப்புறம் தான் யாராயிருந்தாலும். எனக்கு அது சந்தோஷம் தான் சிவாண்ணா.” மலர் தன்னிலை விளக்கம் அளித்தாள்.
“நல்ல ஜாடிக்கேத்த மூடி தான்.” பெண்மணி ஒருவர் சொல்ல கொள்ளென்ற சிரிப்பு அவ்விடத்தை நிரப்பியது.
இப்படியே சிரிப்பும் கலகலப்புமாக ஒவ்வொரு குண்டு பரப்பிற்கும் இவ்வளவு மீன்களென அளவிட்டு வேலையை முடித்திருந்தனர்.
அன்றைய வைரல் செய்தியாக இந்நிகழ்வு சமூக வலைதளங்களின் மூலம் உலகின் பல முடுக்குகளில் பரவியது.
கயல் என்கிற ஹேஷ்டேக்குடன் பலரால் அந்நிகழ்வு பகிரப்பட்டிருந்தது.
இது எதையும் மனதில் நிறைக்காது தன் வேலையென கயல் இருக்க… அவள்மீது எழும் கட்டுகடங்கா கோபத்தை தணிக்கும் வழி அறியாது அங்கே கூண்டுப்புலியென தன்னறையில் நடந்து கொண்டிருந்தான் பார்த்திபன்.
அன்று தன்னுடைய மென்பொருள் அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் ஒன்று இருப்பதால், அதற்கு முன்னர் ஹோட்டலிற்கு சென்றுவிட்டு அங்கு செல்ல வேண்டுமென காலை விரைவாகவே கிளம்பி கீழே வந்த பார்த்திபன் நீளிருக்கையில் அமர்ந்திருந்த மங்கையிடம் “பை மாம்” என்க அவரிடம் பிரதிபலிப்பில்லை.
அருகிலிருந்த தேவராஜன், “ஒருமணி நேரமா அந்த போனுல தான் முகத்தை வச்சிட்டு இருக்காள். டீ கேட்டதுக்கு நீங்களே போட்டு குடிங்க இல்லனா மெய்ட்கிட்ட சொல்லுங்கன்னு சொல்றா” என்று பார்த்திபனிடம் மனைவியைப் பற்றி புகார் கொடுத்தார்.
“அப்படியென்ன அந்த போனுல பார்க்குறாங்க?”
கேட்டுக்கொண்டே பார்த்திபன் மங்கையின் அருகில் அமர,
“ஏதோ வயலுல நாத்து நடுறாங்களாம்.” தேவராஜன் முகம் சுளிக்க…
“டேய் பார்த்தி இந்த பொண்ணை பாரேன். என்னம்மா நாத்து நடுது” என்று தன் கையிலிருந்த அலைபேசியை மங்கையும் மகனிடம் நீட்டினார்.
திரையை பார்த்தவனின் கண்கள் அகல விரிந்தன.
முகில் பெண் விவசாயி என்கிற பெயரில் எந்தவொரு அடையாளமுமின்றி கயலின் விவசாய வீடியோக்களை அவ்வவ்போது இன்ஸ்டாவில் இடுகையிடுவான்.
மங்கைக்கு விவசாயம் என்றால் உயிர். ஆதலால் கயலின் பக்கத்தை பின்தொடர்கிறார். “வீட்டில் ஒரு வேலையுமில்லை. எல்லாம் மெய்ட் பார்த்துகிறாங்க. போர் அடிக்குது. அதனால் தான் தோட்டத்தில் வேலை செய்றேன்” என்று ஒருமுறை மங்கை சொல்ல, “நேரத்தை செலவழிக்க ஆயிரம் வழியிருக்கு மாம்” என்ற பார்த்திபன்தான் மங்கை சேற்றில் கை வைப்பது பிடிக்காது சமூக வலைதளங்களை அடையாளப்படுத்தினான். அவனுக்கெல்லாம் அதில் நேரத்தை செலவழிக்க விருப்பமில்லாத போதும் மங்கை சேற்று கையோடு சுற்றுவதற்கு இது மேலென சொல்லிக்கொடுத்திருந்தான்.
மங்கைக்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்க்க பிடிக்கும். அப்படியொரு முறை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் முகி இடுகை செய்திருந்த கயலின் காய்கறித்தோட்ட வீடியோவை பார்த்து முகியின் கணக்கை பின் தொடர ஆரம்பித்தார்.
அவனிடும் வீடியோக்களில் வரும் இடமெல்லாம் ஏதோ ஜென்ம தொடர்புடையது போல் தோன்றும். வருடங்களின் காலநிலை மாற்றத்தினால் மங்கை தான் ஆடித் திரிந்த வயல்வெளியையே இனம் கண்டறிய முடியாது போனது விதியன்று வேறென்ன.
மங்கை காட்டியபோதுதான் பாவாடையை இடுப்பில் ஏற்றி சொருகி நாற்றினை நட்டாள் கயல்.
பார்த்திபனுக்கு அது கயலென்றதும் அவனின் கண்ணுக்கு முன் தெரிந்ததெல்லாம், கெண்டைக்கால் வரை சேற்றில் புதைந்து நின்ற கயலின் கால்களும், நாற்றோடு சேறு பூசிய கயலின் வெண்ணிற கையும் தான். கயல் மீது அவன் கொண்ட காதலைத்தாண்டி மனதிற்குள் ஏதோ அசூசை. அருவருப்பு என்றுகூட சொல்லலாம். அவனால் மிக சாதாரணமாக ஈரத்திலேயே நிற்க முடியாது. ஆனால், அவனவளோ சேற்றினையே தன் விருப்பமாக அல்லவா கொண்டுள்ளாள்.
பார்த்திபனின் காதல் மனம் பெண்டூலமாய் ஆடியது.
அடுத்த கணம் வேலையிருப்பதாக வெளியேறி காரில் அமர்ந்தவன் அலுவலகம் வந்திறங்கினான்.
அறைக்குள் நுழைந்த பார்த்திபனை டெல் கண்டுகொள்ளவே இல்லை. அவனும் கயலின் வீடியோவில் மூழ்கியிருந்தான்.
“அப்படியென்ன அந்த மொபைலில்…” என்ற பார்த்திபன் டெல்லிடமிருந்து கிட்டத்தட்ட பறித்திருந்தான்.
“செம பொண்ணு மச்சான். மாடலிங் போனா இவள் தான் நெம்பர் ஒன். அவள் செய்யுறதை விட அவளுக்காகவே பலர் இந்த லைவ்வை பார்த்துக்கிட்டு இருக்காங்க” என்றபடி பார்த்திபனின் கையிலிருந்த அலைபேசியை டெல் வாங்க முயற்சிக்க… பார்த்திபனின் தாடை இறுகியது டெல் கூறியதில்.
தன்னவளை பிறர் ரசிப்பது அவனுக்கு உவப்பாக இல்லை. அந்நொடி பெண்டூலமாய் ஆடிய அவனின் மனம் கயலென்று நிலையாய் நின்றது.
“டேய் பார்த்தி என்னடா?” அவனின் இறுகியத் தோற்றம் டெல்லை அவ்வாறு கேட்க வைத்தது.
“ஒன்னுமில்லை” என்றவன் அலைபேசியை அணைத்து அவனிடம் நீட்ட,
“தமிழ்நாட்டு பொண்ணுன்னாலே தனி அழகுதான்டா” என்றவாறு டெல் மீண்டும் அலைபேசியை திறக்க,
“ஷீ இஸ் மை கேர்ள்.” அழுத்தமாக திடமாகக் கூறினான் பார்த்திபன்.
“கம் அகெய்ன்?”
“ஷீ இஸ் மைன். மை லவ்” என மீண்டும் கூறினான்.
அப்போதுதான் பார்த்திபன் சொல்லியது டெல்லிற்கு விளங்கிற்று.
அதிர்ந்து… பார்த்திபனின் குணம் தெரிந்து அரண்டு நின்றான்.