அத்தியாயம் 🌾 23 :
கயலின் அடக்கிய கண்ணீர் மெல்லிய நீர் படலமாக பார்த்திபனின் விழித்திரையில் பதிந்தது. அவளின் சோகம் அவனையும் தாக்கியது.
சிறுவயதில் கேட்ட அழகரின் கண்ணா என்கிற விளிப்பு, இப்போது அவனின் ஞாபக அடுக்கில் ஒலித்து மறைந்தது. கலங்களாக அவரின் தோள்மீது சென்ற பயணம் நெஞ்சை ரணமாக்கியது. அவரைப்பற்றிய நினைவு சிறிதுமின்றி இருந்த தன் நினைவலைகளை தனக்குள்ளே நிந்தித்து வெறுத்தான்.
அப்போது அவனும் நான்கு வயது பாலகன் தானே! சிறுவயதில் வளரும் சூழ்நிலை மாற்றம் நம்மை வழிநடத்துபவர்களாலே நம் நினைவுகள் நினைவாக அல்லது மறதியாக மாறுகின்றன. இங்கு அழகரின் நினைவுகள் பார்த்திபனுக்குள் மீட்கப்படாத ஸ்வரமாய் புதைந்து போனது தேவராஜின் ஆத்திரத்தால்.
மேற்கொண்டு கயல் பேசிட தாய், மகன் இருவருக்கிடையே கனத்த மௌனம். உணர்வுகளின் பிடியில் சிக்கி சுழன்றனர். மங்கையின் கண்கள் சோகத்தை வெளிப்படுத்தின என்றால், பார்த்திபனின் வருத்தம், தன்னவளை நினைத்த சோகம் அவனின் மனதை எரிமலையாய் வெடித்து சிதறச்செய்தது.
கண்களில் பனித்த நீரை கன்னம் வழிந்திடாது இமை சிமிட்டி உள்ளே அடக்கியவள்,
“அப்போ நான் பள்ளி இறுதி வருடத்தில் இருந்தேன்” என்க, இங்கு மங்கை உள்ளுக்குள் குமுறினார்.
‘அந்த வயதில் தாய் தந்தையை இழந்த என் மக்கள் என்ன கஷ்டம் அனுபவித்தார்களோ.’ ஊமையாய் அரற்றினார்.
அந்த இடத்தில் தொகுப்பாளினி கயலின் பேச்சினை இடைவெட்டி,
“உங்களுக்கு சொந்தமுன்னு யாருமில்லையா?” எனக் கேட்டாள்.
விரக்தியாகப் புன்னகை ஒன்றை சிந்திய கயல்,
“எனக்கொரு அத்தை இருக்காங்க. அவங்க பெயர் மங்கை. அது மட்டும்தான் தெரியும். அவங்களை நான் போட்டோவில் தான் பார்த்திருக்கேன்” என்றாள்.
அதனைப்பற்றி மேற்கொண்டு பேச விருப்பமில்லை என்பதைப்போல் மங்கையை பற்றி அவள் கேட்டதற்கு பதில் சொல்லாது அடுத்ததை பேசினாள். அதில் ரத்தினத்தைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
அந்நிலையில் துணையாக இருந்த சரளா மற்றும் மாணிக்கதைப்பற்றி கூறியவள், மாணிக்கத்தை தன் தந்தைக்கு நெருக்கமானவர் என்றுதான் அறிமுகம் செய்தாளே தவிர, வீட்டில் வேலை செய்தவர் என்று குறிப்பிடவில்லை.
அந்த இடத்தில்… ‘தான் செய்ய வேண்டியதை மாணிக்கம் செய்திருக்கிறாரே’ என்று அவர்மீது நன்றி பெருகியது மங்கைக்கு.
வேலைக்காரன் என்று சொல்லாது, அப்பாவின் நெருங்கிய நண்பர் என்ற முறையில் மாணிக்கத்தை கயல் குறிப்பிட்டதிலேயே மாணிக்கம் அவர்களை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதை மங்கையால் புரிந்துகொள்ள முடிந்தது.
“அந்த வயதில் யாரை நம்பறது தெரியல, தம்பியை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இருப்பதை உணர்ந்தேன். ரிசல்ட் வந்துச்சு மேல என்ன படிக்கலாம் யோசித்தப்போ, சரளா அக்கா தான்… இவ்வளவு நிலத்தையும் நீதான் பாதுகாக்கணும், அதனால் அதையே பாடமா படின்னு சொன்னாங்க. அதனால் தான் வேளாண்மைத்துறையில் படித்து பட்டம் வாங்கினேன்” என்று கயல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“படிப்புல தங்கமெல்லாம் வாங்கியிருக்கு” என்று மாணிக்கம் இடைப்புகுந்துக் கூறினார்.
“வாவ்… கோல்ட் மெடலிஸ்ட்டா” என்று ஆச்சரியமாகக் கேட்ட தொகுப்பாளினி, “காங்கிராட்ஸ்” என்றாள்.
“அப்போ படிச்சிட்டே விவசாயம் செய்தீங்களா?”
“இரண்டாம் வருடம் படிக்கும் போதுதான் நாமே விவசாயம் செய்தால் எப்படி இருக்கும் நினைத்து செய்தேன்.”
“கிட்டத்தட்ட பத்து ஏக்கருக்கு மேல் எப்படி மேனேஜ் செய்தீங்க?”
“நான்னா நான் மட்டுமில்லை… மாணிக்கம் மாமாவும், சிவா அண்ணாவும் எனக்கு பின்னால் துணையா நின்னாங்க, நிக்கிறாங்க. அவங்க இல்லைன்னா இதெல்லாம்” என்றவள் சுற்றி தன் பசுமை போர்வையை கை காண்பித்தாள்.
“அதோட மூன்று போகம் நெல்லிற்கு நான்கு ஏக்கர் மட்டும் வைத்துக்கொண்டு மற்றதையெல்லாம் பூக்கள், பழங்கள், காய்கள் தோட்டம் போட்டு அதிகம் வேலையில்லாம பார்த்துகிட்டோம்” என்றாள்.
“முதலில் ரொம்பவே சிரமமாத்தான் இருந்தது. அப்போலாம் அப்பா அம்மா கூட இல்லைன்னு நினைச்சு அழாத நாளில்லை. அந்தநாளில் எல்லாம் எனக்கு அப்பாவா அண்ணாவா நல்ல ஃபிரண்டா இருந்தது என்னோட முகி… முகிலன்” என்று தன்னுடைய தம்பியையும் அங்கு பெருமைப்படுத்தினாள்.
இறுதியாக, “இன்னும் மூன்று வாரத்தில் நெல்லெல்லாம் அறுப்புக்கு ரெடியாகிடும்… அதற்கடுத்த வாரம் மீனெல்லாம் பிடிச்சு மார்க்கெட்டுக்கு அனுப்பிடலாம். இந்தமுறையில் லாபம் தான். நஷ்டமென்று எதுவுமில்லை” எனக்கூறி “விவசாயம் அழிவை நோக்கி வேகமாக போயிட்டிருக்கு… அதை தடுக்க ஏதாவதொரு வகையில் முயற்சிப்போம்” என சொல்வதோடு அந்நிகழ்வு முடிவடைந்தது.
நடுவில் உணர்ச்சிவசப்பட்டாலும் தான் பேச வேண்டியதை எவ்வித தடையுமின்றி கயல் பேசியிருந்தாள்.
‘தன்னவள் அவ்வளவு கஷ்டத்தையும் தனி ஆளாக அனுபவித்த சமயம், தான் ஜாலியாக பணத்தின் செழுமையில் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்திருக்கின்றோம்’ என்று உள்ளுக்குள் எழுந்த பெரும் வேதனையை அப்படியே விழுங்கினான்.
அது அவனின் தவறல்ல இருப்பினும் உடனிருக்கும் வாய்ப்பையும் அந்த காலம் தனக்கு தரவில்லையே என்று நெஞ்சம் விம்மினான்.
‘இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகிறது… இனி கயலின் ஒவ்வொரு சந்தோஷத்திற்கும் தான் காரணமாக இருக்க வேண்டும். எந்தவொரு துன்பமும் தன்னைத் தாண்டித்தான் தன்னவளை நெருங்கிட முடியும்’ என்று மனதில் உறுதியெடுத்தவன் முகத்தை இரு உள்ளங்கையினால் அழுத்தி தேய்த்து தன்னை சமன்படுத்தி அருகிலுள்ள அன்னையை ஏறிட, அவர் அவ்விருக்கையிலேயே மயங்கி சரிந்திருந்தார்.
“மாம்.”
அதிர்வில் உறைந்து நின்றது ஒரு கணம் தான். உடனடியாக தன்னை மீட்டெடுத்தவன், மங்கையை தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான். செல்லும் வழியிலேயே, அவர்களின் குடும்ப மருத்துவர் மற்றும் நண்பருமான ஜோனுக்கு அழைத்து விவரம் சொல்லியிருக்க… அனைத்தும் தயாராக ஆயத்தமாகியிருந்தது. மங்கைக்கு விரைந்து மருத்துவம் பார்க்கப்பட்டது.
மருத்துவர் சிகிச்சை முடித்து வெளியில் வரும்வரை ஒருவித பதற்றம் பார்த்திபனை சூழ்ந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக பயம் என்பதை அறிகிறான்.
‘அன்னை இல்லையென்றால்?’
அதனை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இந்த வயதிலும் அன்னைமடி வேண்டுமென்று மன்றாடி நின்றவனுக்கு, அக்கணம் தன்னவளின் வேதனை முற்றும் முதலும் உணர்வதாய்.
வெடித்து கத்த வேண்டும் போலிருந்தது. அழுத்தத்தில் நடுங்கிய விரல்களை கோர்த்து கட்டுப்படுத்தியவன், மருத்துவரின் வரவிற்காகக் காத்திருந்தான்.
“ஹேய் யங் மேன்… ஆர் யூ ஓகே” என்ற மருத்துவர், “நவ் ஷீ இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட், பட் கண் திறக்க டைம் ஆகும்” என்றார்.
“எதனால் மயக்கமானங்க அங்கிள்?”
“ஹார்ட் அட்டாக். இது பர்ஸ்ட் டைம் அப்படிங்கிறதால, ரிஸ்க் இல்லை. மன அழுத்தத்தால் வந்திருக்கு. ஹேப்பியா வச்சிக்கிட்டாலே போதும்” என்றவர் அவனின் தோளில் தட்டிவிட்டுச் சென்றார்.
ஹார்ட் அட்டாக் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை.
அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது, கணவனுக்காக இருபத்தி நான்கு வருடங்கள் உள்ளுக்குள்ளே மறைத்து வைத்த அழுத்தம் இன்று தன் அண்ணனின் இறப்பைத் தெரிந்துகொண்டதில் மூச்சடைக்க வைத்திருக்கிறதென்று.
விடயமறிந்து மருத்துவமனை வந்த தேவராஜிற்கு அதுவரை இருந்த மொத்த திடமும், பார்த்திபனின் ஓய்ந்தத் தோற்றம் கண்டு முற்றும் முழுதாக வடிந்தது.
அவர் மகனின் தைரியம் அவர் அறியாததா? அவனே இப்படி நிற்கும்போது மங்கையின் நிலை? அவரால் அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை. கால்கள் தள்ளாடின. அழுந்தி ஊன்றி நிற்க முடியவில்லை. தேவராஜின் ஒட்டு மொத்த உலகமும் மங்கை தானே! வெறும் கையோடு நிற்கிறார் என்று தெரிந்தும் அமைதியாக அவருடன் வாழ்க்கைப் பயணத்தை துவங்கியவர். தேவராஜின் முதுகெலும்பு மங்கை.
மனைவியின் படுக்கைநிலை தேவராஜின் மனத்திடத்தை ஆட்டம் காண வைத்தது.
‘அவளுக்காக நகை பணம் என்று வாங்கி குவித்திருந்தாலும், அவளின் விருப்பத்தை இதுவரை கேட்டதில்லையே!’ கண்கள் கலங்கும் போலிருந்தது.
தேவராஜன் மனைவியிடம் விருப்பத்தை ஏன் கேட்கவேண்டுமென நினைக்கும் பெண் அடிமைவாதியல்ல.
மங்கையின் விருப்பம் என்னவென்று அவர் அறியாததா!
எங்கே உன் விருப்பம் என்னவென்று கேட்டால், கிராமத்திற்கு செல்ல வேண்டுமென மங்கை கேட்டுவிடுவாரோ என்று பயந்தே இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அக்கேள்வியை அவர் மனைவியிடம் கேட்டதில்லை.
ஆனால், இப்போது… அந்த ஆசையையாவது நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென முடிவு செய்த பின்னரே… திடமாக அடி வைத்து மகனிடம் சென்றார்.
“பார்த்தி…”
அமைதியாக திரும்பிப் பார்த்தவன், தந்தையை அணைத்துக் கொண்டான். நான்கு வயது சிறுவனாக ஆதரவு தேடினான்.
மகனின் மனம் புரிந்த தேவராஜ் தன்னுடைய துக்கத்தை விழுங்கிக்கொண்டு ஆறரை அடி ஆண் மகனின் முதுகு வருடி தேற்றினார்.
“மேடம் கண் முழிச்சிட்டாங்க.” நர்ஸ் வந்து சொல்லியதும்… இருவரும் மங்கை இருந்த அறைக்குள் நுழைந்தனர்.
அவர்கள் செல்லும்போது பல வயர்களுக்கு நடுவில் மங்கை படுத்தெல்லாம் இருக்கவில்லை. எழுந்தமர்ந்திருந்தார்.
கணவரின் முகத்தை மங்கை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
மகனை மட்டும் விழி உருள அசைத்துப் பார்த்தவர், “வீட்டுக்கு போகலாம் கண்ணா” என்றார்.
மங்கையின் கண்ணா என்கிற அழைப்பு தேவராஜை அதிர வைத்தது.
“உன் அண்ணன் தான் பார்த்தியை கண்ணா என்றழைப்பான். நீ அப்படி சொல்லும்போதெல்லாம் எனக்கு அவன் செய்த துரோகம் தான் நினைவுக்கு வருது.” என்று அழகர் அவ்வாறு சொன்னாரோ அன்று முதல் மங்கையும் கண்ணா என்ற விளிப்பை நிறுத்தியிருந்தார்.
எப்போதாவது தன்னையும் மீறி சொல்லிவிட்டு மனதில் கொட்டிக்கொள்வார்.
ஆனால் இன்று மங்கை வெளிப்படையாக அப்படி அழைத்தது… ஹார்ட் அட்டாக் அவருக்கு சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்த்தியது.
‘என்னவோ நடந்திருக்கு?’ அவரின் எண்ணமெல்லாம் அங்கில்லை.
“நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட்டில் இருக்கணும் அங்கிள் சொல்லிருக்காறு மாம். ஒரு டூ டேஸ் இங்கிருந்துட்டு போகலாம்.”
மழலைக்கு சொல்லுவதைப்போன்று பொறுமையாகக் கூறினான்.
“வீட்டுக்கு போகணும்.” பல வருடங்களுக்குப் பிறகு பிடிவாதம் பிடித்தார் அ
மங்கை.
“பார்த்தி சொல்றவதை கேளு மங்கை.”
தேவராஜின் பக்கம் மங்கை திரும்பக்கூட இல்லை.
அந்நேரம் அங்கு வந்த ஜோன், “என்ன தேவராஜ், மிஸ்ஸஸ் தேவராஜ் என்ன சொல்றாங்க?” எனக் கேட்டார்.
“மாம் வீட்டுக்கு போகணும் சொல்றாங்க அங்கிள்.” பார்த்தி பதில் கூறினான்.
“யா… போகலாமே” என்றவர், ஹார்ட் பீட் ரேட், ரத்த அழுத்தம் எல்லாம் தானே செக் செய்து… “அவங்களுக்கு இப்போ அமைதியான சூழல் தான் அவசியம் பார்த்தி, அவங்க இருக்க இடம் அவங்களுக்கு பிடிச்ச இடமா இருந்தால் இன்னும் பெட்டர்… சோ நீங்க கூட்டிட்டு போகலாம். டேப்லெட்ஸ் மட்டும் ஒன் மந்த்ஸ் கன்ட்னியூ பண்ணுங்க. நெக்ஸ்ட் மந்த்ஸ் ஒரு செக்கப் வச்சிக்கலாம்” என்றார்.
அதற்கடுத்து அப்போதே ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் முடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
இருக்கையில் அமர்ந்த மங்கை பின்னால் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டார்.
“மாம் ரூமுக்கு போங்க. படுத்து ரெஸ்ட் எடுங்க.”
பட்டென்று கண் திறந்தவர்,
“உனக்கு முன்னாடியே தெரியுமா?” எனக்கேட்டு பார்த்திபனின் சட்டையை பிடித்து உலுக்கினார்.
தெரியாதென இட வலமாக தலையசைத்தான்.
“அன்னைக்கு வீடியோ காட்டினப்போக்கூட நீ சொல்லலையே! ஏன்டா ஏன்?” பார்த்திபனின் நெஞ்சிலேயே சரமாரியாக அடித்தார். சாய்ந்து கதறினார். வெடித்து அழுதார்.
அன்னையின் கதறல் காண பொருக்காதவன், அவரை அணைத்துக் கொண்டான்.
“மாம்… காம் டவுன்… சில் ” என்று பலவாறு பேசி அவரின் அழுகை ஓயும் வரை அமைதி காத்தான்.
ஏன்? எதற்கு இந்த அழுகையென்று தேவராஜிற்கு ஒன்றும் புரியவில்லை. மௌனமாக வேடிக்கைப் பார்த்தார். மனைவியின் பாராமுகம் அவரை எட்ட நிறுத்தியிருந்தது.
“பார்த்தி என்னடா… என்ன தான் நடக்குது?”
“என்ன நடந்தால் உங்களுக்கென்ன. உங்களுக்கு உங்களோட வரட்டு பிடிவாதமும் ஒன்னுத்துக்கும் ஆகாத முன் கோபமும்தானே முக்கியம். அதனால நான் இழந்தது என்ன தெரியுமா?” மங்கை வெடித்து சிதறியிருந்தார். முதல் முறையாக கணவரிடம் கேள்வி கேட்டார்.
“மாம்… மெதுவா பேசுங்க!” கோபத்தில் எங்கே மீண்டும் ஏதாவது அனர்த்தம் நேரிட்டுவிடுமோ என்று பார்த்திபன் பயந்தான்.
மகனின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தார் மங்கை. இத்தனை வருட வேதனையை ஒரே நாளில் அழுது கரைத்திட முயன்றார்.
“டேய்… என்னடா… என்ன பிரச்சனை. மங்கை ஏன் இவ்வளவு எமோஷ்னலா இருக்கா?”
“அவங்க துக்கத்தோட வெளிப்பாடு டாட் அது.”
“என்ன சொல்ற பார்த்தி, எனக்கு புரியல?”
“என்ன புரியனும் உங்களுக்கு. அன்னைக்கு எவ்வளவு கெஞ்சியிருப்பார். புரிஞ்சிக்கோடா, என்னை பேச விடுன்னு. நீங்க கேட்டீங்களா? இப்போ நீங்க கேட்கிறதுக்கு மட்டும் நாங்க பதில் சொல்லணுமா? எதுவும் உங்களுக்கு புரிய வேண்டாம். சொன்னா புரிய போறதுமில்லை” என்ற மங்கை, “கடைசியா ஒருமுறை கூட என் அண்ணன் முகம் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கல. இதெல்லாம் விதின்னு நான் சொல்லமாட்டேன். மொத்த காரணமாவும் என் முன்னாடி நீங்க நிற்கும் போது விதியோட சதின்னு என்னால் ஏற்க முடியல!” அழுதபடி தன் அறையில் புகுந்து கொண்டார்.
“கடைசியாய் ஒருமுறை என் அண்ணன் முகம் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே!” மங்கையின் குரல் தேவராஜின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. மனிதர் தள்ளாடியபடி பொத்தென்று இருக்கையில் விழுந்தார்.
“டாட்…”
“அம் ஓகே!”
“அழகர்… என் அழகர் இப்போ உயிரோடில்லையா?” திரும்பத்திரும்ப முணுமுணுத்தார்.
அரற்றியபடியே இருந்தார். பார்த்திபனை பேசவே விடவில்லை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அவர் கேட்கவேயில்லை. அதையுமீறி அவன் பேசியதெல்லாம் அவரின் கருத்தில் விழவில்லை.
தந்தைக்கும் ஏதேனும் நேர்ந்திடுமோ என்று அஞ்சியவன், அவருக்கு முன்னால் இருந்த கண்ணாடி டீபாயினை அடித்து நொறுக்கினான். அதன் சத்தத்தில் நிகழ் மீண்ட தேவராஜ், “பார்த்தி… பார்த்தி… ஒருமுறை ஒரேமுறை அழகரை பார்க்க என்னை கூட்டிட்டு போ” என்று கெஞ்சினார்.
“அவர் இறந்து செவன் இயர்ஸ் ஆகுது டாட்.”
மொத்தமாக இடிந்து விட்டார். இப்போது புரிந்தது மங்கையின் வார்த்தைகளுக்கான அர்த்தம்.
அந்நேரம் அழகர் செய்த துரோகம். தேவராஜின் ஆத்திரம் எதுவும் அவருக்கு நினைவில்லை. எல்லாம் அழகரின் இறப்புக்கூட அறிந்திடாத பாவியாக இருந்திருக்கேனே என்று மருகினார். வயது முதிர்ந்த நிலையில் பக்குவம் அடைந்தார். ஒன்றுமில்லாததை பேசி சரி செய்திருந்தால் ஒன்றாக இருந்திருக்கலாமே. இப்போது தோன்றியது. தனக்கு ஒன்றென்றால் முன்னால் வந்து நிற்கும் அழகரை இப்போது அவரின் மனம் வெகுவாகத் தேடியது.
‘உன் தேவராஜ் அழறேன் அழகர். கண்ணீர் துடைக்க வரமாட்டியா?’ ஊமையாகக் கதறினார்.
‘இப்போதே மொத்தமாக அழுது விடட்டும்’ என்று நினைத்த பார்த்திபன்…
“அத்தையும் உயிரோடில்லை டாட்” என்றவன், கயல் மற்றும் முகிலனை பற்றியும்… இன்று டிவியில் கயல் சொல்லியதை எல்லாம், அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தனக்குத் தெரிந்த எல்லாம் கூறிட மனிதர் நொறுங்கிப்போனார்.
“அய்யோ… அய்யோ…” தலையில் அடித்துக்கொண்டார். அக்கணம் அவருக்குள்ளிருக்கும் கிராமத்தான் வெளியில் வந்திருந்தான்.
அப்போதிருந்த இளகிய மனம் அவரை உமிழ்ந்தது.
தன்னுடைய முன் கோபத்திற்கு கிடைத்த தண்டனையென்று வருந்தினார்.
அவரின் கதறல் கேட்டு ஓடி வந்த மங்கை மனைவியாய் அவரை மடி தாங்கினார்.
“அய்யோ மங்கை என் அழகர், அவன் பெத்த மக்கள்… அய்யோ மங்கை, என்னை மன்னிச்சிடு மங்கை. ஒருமுறை நீ சொல்றதை கேட்டிருக்கலாமே?” அவரின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.
“நீ சொன்ன மாதிரி நான்தான் காரணம். அவனை பார்க்கக்கூட கொடுத்து வைக்கலயே!” தரையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அப்போதுதான் தேவராஜின் மனமும் மங்கைக்கு புரிந்தது.
அழகர் மீது அவர் வைத்த பாசத்தை கோபம் திரைக்கொண்டு மறைந்திருக்கிறது என்பதை. அதனை விலக்க தானாவது முயன்றிருக்க வேண்டுமென்று காலம் கடந்து யோசித்தார்.
‘கணவரின் பேச்சினை அப்படியே கேட்டு இருந்திருக்கக்கூடாதோ!’ தன் தவறை இப்போது ஆராய்ந்தார்.
தாய் தந்தையின் கண்ணீர் பார்த்திபனையும் விழிநீர் சிந்த வைத்தது.
‘தானும் சோர்ந்து போனால் அவர்களை யார் தேற்றுவார்’ என்று தன் துக்கம் மறைத்து அவர்களை ஆறுதல் படுத்தி தேற்ற முயன்றான். இறுதியில் ஓரளவு வெற்றியும் பெற்று, அவர்களை உண்ண வைத்து, மங்கைக்கு மருந்து கொடுத்து… இருவரும் உறங்கிய பின்னரே தன்னறை வந்தான்.
வந்தவனின் மனம் முழுவதும் கயலின் நினைவே.
அப்போதே அவளிடம் பேசிவிடும் வேகம். தன் கைச்சிறைக்குள் அவளை பொதிந்து பாதுகாத்திடும் வேட்கை. முடியாத தன்னிலையை அறவே வெறுத்தான்.
தன்னவளை நினைத்த தன் சோகத்தை எல்லாம்… பால்கனி இரும்பு கம்பியை பிடித்த பிடியின் அழுத்தத்தில் காண்பித்தான்.
உள்ளுக்குள் கூடிய வேதனை கண்களில் பிரதிபலித்தது. ரத்தமென சிவந்தது. கட்டுப்படுத்த முடியாது வாய் திறந்து சத்தமிட்டு கத்தினான். இருளை கிழித்துக்கொண்டு அவனின் குரலில் திசையெங்கும் எதிரொலித்தது.