பார்த்திபனின் கயல்விழியாள் 24

அத்தியாயம் 🌾 24 :

“மீனெல்லாம் குளத்துக்கு போயிட்டா வத்தவாய்க்கால் பிடித்து நெல்லு அறுத்தடலாம் கயல்.” அன்று காய்கறித் தோட்டம் சீரமைத்துக் கொண்டிருந்தனர். காய்ப்பு முடிந்துவிட்டதால், பழைய செடிகளை அகற்றி, புதிய செடிகள் பதியம் வைத்துக்கொண்டு இருந்தனர்.

கைகள் அதன் போக்கில் வேலை செய்தாலும், அடுத்து என்பதை வாய் பேசிக்கொண்டே இருந்தது. மனம் திட்டங்கள் வகுத்துக்கொண்டே இருந்தது.

“ஆமா சிவாண்ணா, கதிர் சாய இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள வயல் காயணும்” என்று பதில் அளித்த கயலின் குரலில் ஏதோ யோசனை.

“என்ன கயலு யோசிக்குற…”

“சுற்றி மீன் வளர்ப்புக்காக வெட்டிய ரெண்டடி ஆழம் இருப்பதால், வண்டி விட்டு அறுக்க முடியாதுண்ணா.”

இப்போதெல்லாம் கையால் அறுப்பது என்பது முற்றிலும் குறைந்து விட்டது. மொத்தத்தில் கையறுப்பு இல்லை என்பதே சரியாகஇருக்கும். கூலிக்கு ஆட்கள் வருவார்களா என்ற பெரும் யோசனை அவளுள். யோசனையை மீறி சிறு கவலை. அது அவளது முகத்திலும், சோர்ந்து ஒலித்த குரலிலும் தெளிவாகத் தெரிந்தது.

“நீயெதுக்கு கண்ணு வெசனப்படுற, வண்டிலாம் இப்போ பத்து பாஞ்சி வருசமத்தானே! அதுக்கு முன்னடிலாம் கையாலத்தான இருக்கும். வண்டி வந்த பிறகு, எங்களுக்குத்தான் நெல்லறுப்பு வேலை போய், நெல்லு அடிக்குற வேலையும் இல்லாம அதுக்கும் வண்டி வந்து வெறும் வைக்க அல்லுற வேலை தான் கிடைக்குது” என்று ஒரு வரிசையில் செடி பதியமிட்டபடி இருந்த பெண்மணி ஒருவர் கூற, “நாங்க அறுப்புக்கு வர்றோம் கயலு நீ கவலைப்படாத” என்று மற்றொரு ஆள் கூறினார்.

இன்றும் கிராமத்தில் மட்டுமே, கேட்பதற்கு முன் உதவிக்கு கரம் நீட்டும் குணம் அரிதாகக் காணப்படுகிறது.

அப்போதெல்லாம் நெல் அறுவடை என்பதே ஒரு திருவிழாத்தான். மூன்று நாள் கொண்டாட்டம் அது. முதல் நாள் காலை துவங்கும் நெல் அறுப்பு, பாட்டு, பேச்சு, கிண்டல், கேலிகளுக்கு நடுவில் பெண்கள் நெல் அறுக்க, ஆண்கள் அதனை கட்டுகட்டி களம் கொண்டுவந்து சேர்க்க மாலை கவிழ்ந்திடும்.

அடுத்த நாள் கட்டி வைத்த கதிர்களையெல்லாம், வைக்கப்பிரி கொண்டு திரித்த கயிறால் கதிரை சுற்றியெடுத்து கைகளால் லாவகமாக சுழற்றி, முதுகுக்கு பின்னால் உயர்த்தி பிடித்து, முன்னிருக்கும் கல்லில் அடித்து, நெல் மணி சிந்தி மண் சேரும் காட்சியை பார்க்க கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லோரும் கூடி செய்திட்ட விவசாயம் இன்று செய்வதற்கு ஒருவர்கூட முன் வருவதில்லை என்பதே கசப்பான உண்மை.

மூன்றாம் நாள் அடித்து சேர்த்த நெல்மணிகளை, காற்று வரும் வேகம் அறிந்து, அதற்காக காத்திருந்து, முறம் வைத்து தூற்றி தூசிகளகற்றி மூட்டைகள் பிடித்து அடுக்கி வைக்கும்போது வரும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. வார்த்தைகளற்ற பூரிப்பு. கண்கள் நிறைந்திடும்.

அத்தோடு வேலை செய்தவர்களுக்கு பணத்தோடு, அவர்கள் செய்த வேலைகளுக்கு தகுந்தவாறு இத்தனை மூட்டை, இத்தனை மரக்கால் என்று உடனளிக்கும் நெல்லினை கொடுக்கும்போது கொடுப்பவருக்கும், வாங்கும்போது வாங்குபவருக்கும் இடையில் தோன்றும் மனநிறைவு வேறெதிலும் கிடைத்திடாது.

விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல, அது இயற்கைக்கும் மனிதனுக்கும் நடுவில் இருக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம். தாய்க்கும் சேய்க்கும் உள்ள தொப்புள் கொடி உறவை போன்றது.

தான் சிறுவயதில் பார்த்திட்ட நெல் அறுவடை நாளை நினைத்து பார்த்த கயலுக்கு அன்றைய நாள் திரும்ப வருமா என்றொரு ஏக்கம் இருக்கத்தான் செய்தது.

காலம் மாறுகையில் நாமும் மாற வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் நம் மனதினை, நம்மோடு பிணைக்கப்பட்டவைகளை ஒதுக்கி மறந்து சுயம் தொலைத்து ஒரு வளர்ச்சி வேண்டுமா?

வளர்ச்சி என்பது பழையதை அழித்து மேலேறுவதில்லை, பழையதை விட்டுத்தராது உடன் வைத்து புதியதிற்கு இணை சேர்த்து முன்னேறுவது. இங்கு புதிதென்று ஒன்று வந்துவிட்டால் பழையதுக்கு மதிப்பென்பதை விட, நினைவென்பதே காணாமல் போய்விடுகிறது என்பதே நிஜம்.

அப்படித்தான் நம் விவசாயமும் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறது.

கயலால் உள்ளுக்குள் புலம்பத்தான் முடிந்தது.

‘தன்னால் முடிந்தவரை உயிர் போகும் நிலை வந்தாலும், விவசாயத்தை விட்டுக்கொடுத்திடக் கூடாது’ மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

“அப்புறம் என்ன கயலு அடுத்தவாரம் அறுத்துடலாமா?”

நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின்னர் நெல் அறுப்பிற்காக அரிவாள் பிடிக்கப்போகும் மகிழ்வு அந்த பெண்மணியிடம் இப்போதே தெரிந்தது.

“திரும்பத் திருவிழாதான்.” உரமிட்டுக்கொண்டிருந்த மாணிக்கம் உற்சாகமாகக் கூறினார்.

“முகியையும் மலரையும் வர சொல்லணும் சிவாண்ணா. பார்த்து ரொம்ப நாளுச்சு. அவனுக்கும் இதெல்லாம் பிடிக்கும்ல” என்று தம்பியை பார்த்திடாத ஏக்கத்தோடு கயல் கூற, அதனை சிவா தலையாட்டி ஆமோதித்தான்.

“இப்போ மீனெல்லாம் எப்படி கயலு குளத்துக்கு போகும். மீனை பிடிச்சு குளத்துக்குள்ள விடுணுமா?”

“ரெண்டு வேலையாவுள்ள இருக்கும் போல, இப்போ ஒருவாட்டி பிடிச்சு… அப்புறம் ஒருவாட்டி பிடிக்கணுமா?”

ஒருவர் கேள்விகேட்க, இன்னொரு பெண்மணி சந்தேகமாகக் கேட்டார்.

“அச்சோ பொன்னி அத்தை, இப்போ ஏரியில தண்ணீ குறைய ஆரம்பிச்சா, மீனெல்லாம் தண்ணியிருக்க குட்டைய நோக்கித்தானே போகும். அது மாதிரித்தான். வயலுக்கு அந்தப்பக்கமிருக்க அதாவது நாம வெட்டி வைச்சிருக்க குளத்து பக்கம் வரப்பை வெட்டி வச்சிட்டு கழனிக்குள்ள தண்ணி போற மடையை அடைச்சிட்டா போதும். உள்ள தண்ணி வத்த வத்த மீனெல்லாம் தானா குளத்துல இறங்கிடும்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

“படிச்ச புள்ள அதான் இவ்வளவு அறிவு.” கேட்டுக்கொண்டிருந்த காத்தாயி வாய் மேல் கை வைத்தார்.

“உன்னையும் நீ செய்யுற விவசாயத்தையும் பார்க்கும்போது எம் புள்ளையையும் விவசாயம் படிக்க வைக்கணும் தோணுது தாயீ.” வீரம்மாள் அக்கா நெகிழ்ந்து கூறினார்.

‘இந்த வார்த்தைதான் தன் முயற்சிக்கு உண்டான உண்மையான வெற்றி’ என்று அத்தனை உவகை அடைந்தாள் கயல்.

அத்தகைய விகசிப்பான முகத்தைக் கண்ட சிவா… அதனை உடனே படம் பிடித்து முகிக்கு அனுப்பி வைத்தான்.

என்னதான் கயலை தனித்துவிட்டு அவ்வளவு தூரத்தில் இருந்தாலும், அவளின் சிறு அசைவையும் சிவாவின் மூலம் நன்கு தெரிந்து வைத்திருந்தான் முகி.

அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த முகி, வாட்ஸப்பில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டதும் எடுத்து திறந்து பார்த்தவனின் முகத்திலும் கயலின் சந்தோஷ முகம் கண்ட சந்தோஷம்.

“என்ன டாக்டர் சார் இவ்வளவு நேரம் காலேஜூக்கு போக நேரமாச்சுன்னு அந்த குதி குதிச்சிட்டு இருந்தீங்க. இப்போ என்னடான்னா போனை பார்த்து பல்பு எரிஞ்சிட்டு நிக்குறீங்க.” கல்லூரிக்கு கிளம்பித் தயாராக வந்த மலர் அவனை சீண்டினாள்.

அலைபேசியை மலரின் முகத்திற்கு நேராகக்காட்டிய முகி, “அடுத்த வாரம் எப்படியாவது ஊருக்கு போகணும் மலர். அன்னைக்கு டிவியில் கயல் அப்பா அம்மாவைப் பற்றி சொல்லும்போது உள்ளுக்குள்ள எவ்வளவு உடைஞ்சான்னு என்னால ஃபீல் பண்ண முடிந்தது. அப்போ அவளோட இல்லையேங்குற ஆதங்கம் கயலை நேரில் பார்த்தால் தான் தீரும்” என்று சொல்லியவனும் அன்றைக்கு நிகராக இன்றும் உடைந்தான்.

“அய்யோ லூசு மாமா. இதுக்கெல்லாமா கண்ணை கசக்குவாங்க. வேணுன்னா லீவ் போட்டு இன்னைக்கே கிளம்புவோம்” என்றவள் முகியின் கண்களை தன் துப்பட்டா நுனி கொண்டு துடைத்தாள்.

“இப்போ போனா சுருக்க வரணும் மலர். அடுத்தவாரம் ரெண்டு நாள் லீவ் வருது. வியாழன், வெள்ளி. புதன் நைட் கிளம்பிடலாம்” என்றவன் அப்போது தான் உணர்ந்தான் தன்னிருவரின் நெருக்கத்தையும். முகியின் கலங்கிய விழிகளை துடைப்பதற்காக மலர் அவனை நெருங்கியிருந்தாள்.

அதனை உணர்ந்த மலரும் அவஸ்தையாக நெளிய…

“இது வேலைக்காகது. நீ நல்ல பையனை கெடுக்க பாக்குற” என்றவாறு பேக்கினை எடுத்து தோளில் மாட்டியபடி வேகமாக வெளியில் சென்றான் முகி.

“மக்கு மாமா. கிட்ட வந்தா அப்படியே கிஸ் அடிக்காம பயந்து விழுந்தடிச்சு ஓடுது. இதுகிட்ட நானெப்படி குப்பை கொட்டப்போறேன்னு தெரியலையே ஆண்டவா” என்று இரு கையையும் மேல்நோக்கி விரித்து புலம்பிய மலர் வீட்டை பூட்டிவிட்டு, காத்திருந்த முகி தயாராக ஸ்டார்ட் செய்து வைத்திருந்த இருசக்கர வண்டியில் அவனுக்கு பின்னால் அமர்ந்தாள்.

“மலர் கீப் டிஸ்டன்ஸ். ரெண்டடி தள்ளியே உட்காரு” என்றான்.

“நான் அதுக்கு கீழத்தான் விழனும்” என்று நொடித்தவள், இருபக்கமும் காலிட்டு அவனின் முதுகோடு ஒட்டி அமர்ந்தாள்.

‘மனுஷனை படுத்தி எடுக்கனே பண்றாள்.’ அவனால் உள்ளே சூடாகத்தான் முடிந்தது.

முதலில் அமைதியாக தானுண்டு தன் வீட்டு வேலை படிப்பென இருந்த மலர் நாளுக்கு நாள் முகியிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருந்தாள். வெளிப்படையாக காதலை அவனுக்கு உணர வைக்க முயன்றாள்.

முன்பு அவள் பின்னால் காதலை வேண்டி முகி வந்தபோதெல்லாம் தெரியாத ஒன்று இப்போது அவனின் அவசியமான விலகளில் அவளுக்குத் தெரிந்தது.

‘தான் வேண்டுமென்றே அவனை ஒதுக்கியபோது அவனுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்’ என்ற குற்றவுணர்வு முகியின் மீது நாளுக்கு நாள் காதலை அதிகரிக்கச் செய்ய… அவளின் சீண்டலில் முகி தான் திண்டாடி நிற்கின்றான்.

அவனால் அவளை கடிந்துகொள்ளவும் முடியவில்லை, அவளின் சேட்டைகளை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை. அல்லாடிக் கொண்டிருக்கின்றான்.

இப்போதும் அவனை அல்லாட வைத்துக் கொண்டிருந்தவள், அவனின் இடையில் கை வைக்க…

“மலர் டோன்ட் டச்” என்று அலறினான். ஒரு நொடி வண்டி ஆடி, சாலையில் சீரானது.

“நீ போற வேகம் பயமா இருக்கு மாமா. அதான் உன்னை பிடிச்சிக்கிட்டேன்.” அப்பாவியாக அவள் கூறுவது அவனுக்கு தலையில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

அவனின் அவஸ்தை அவனுக்கு.

“யாரு நானு… ரொம்ப ஸ்பீடா போறேன்.” அவ்வளவு நக்கல் அதில்.

“ஆமா மாமா” என்றவள் அவனை இன்னும் நெருங்கி அமர்ந்தாள்.

“மலர் ப்ளீஸ் டி. நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்குடி. அதுவுமில்லாம இப்போதாண்டி உனக்கு இருபது வயசே ஆகுது. கொஞ்சம் பொறுமையா இருடி.” கிட்டத்தட்ட கண்ணாடியில் தெரிந்த அவள் முகம் பார்த்து வண்டியை ஓட்டியவாறு கெஞ்சினான்.

“அது தாலி கட்டுறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கணும்” என்று வேகமாகக் கூறியவள், “இப்போலம் உன்னை இன்னும் நிறைய பிடிக்குது மாமா” என்று இறங்கிவிட்ட குரலில் கூறினாள்.

கேட்டவனுக்கு சிவ்வென்று இருந்தாலும், ‘சிறுபெண்ணின் மனதை சலனப்படுத்துகிறோம்’ என்று எண்ணினான்.

“நான் இருபது வயசு சின்னப்பொண்ணில்லை மாமா. உன் பொண்டாட்டி” அழுத்தமாகக் கூறினாள்.

“சரி… காலேஜ் வந்திடுச்சு இறங்கு” என்றவன், “என்னை ரொம்ப சோதிக்குற மலர். படிப்பு முடியுற வரை வேற நினைப்பே இருக்கக்கூடாது” என்றான் அவள் சொல்லிய அதே அழுத்தத்துடன்.

“இதுகெதுக்கு கல்யாணம் கட்டணும். இப்போ உள்ளே போனதுமே, அவ அவளும் அவ அவ ஜோடியோட காதலுன்னு சுத்திட்டு இருப்பாளுங்க. நான் மட்டும் லைசன்ஸ் வச்சிருந்தும் ஒரு பார்வைக்கே ஏங்கி போய் கிடக்குறேன்” என்று புலம்புவதைப்போல் வேறெங்கோ பார்த்துக்கொண்டே அவனிடம் கூறினாள்.

“சரி நீ படிக்க வேணாம். ஊருக்கு கிளம்பு. என்கூட இருந்தாதான கண்ட நினைப்பு வருது. என்னைவிட்டு போ.” அவன் தீவிரமாகத்தான் சொல்லுகிறான் என்பது அவனது முகத்திலேயே தெரிந்தது.

“மாமா…” அவளுக்கு கண்ணில் குளம் கட்டிவிட்டது.

“பின்ன என்னடி. எனக்கும் ஆசையெல்லாம் இருக்கு. உன்னைவிட அதிகமா இருக்கு. உன் காதலை விட என் காதலுக்கு காலம் அதிகம். எதிர்பார்க்காம கல்யாணம் ஆகிப்போச்சு. அதுக்காக உடனே வாழ்ந்து ஆகணும் அவசியமில்லை. ரெண்டு பேருக்குமே வாழ்க்கையோட பக்குவத்தை தெரிஞ்சுக்குற சரியான வயசில்லை. எனக்கு இருபத்தி ரெண்டு இப்போதான் முடியப்போகுது. அதுக்குள்ள எப்படி மலர்.”

‘எல்லாம் இப்போதே பேசிவிட வேண்டும். இனியும் மலரின் காதல் விளையாட்டில் அவஸ்தை அடைய முடியாது’ என்று நினைத்தவன் இருக்கும் இடம் மறந்து அவளுக்கு புரிய வைக்க பேசிக்கொண்டிருந்தான்.

“புரியுது மாமா. நீங்க சொல்லுறவரை இனி உங்கக்கிட்ட பேச மாட்டேன்.” கண்ணில் நிறைந்துவிட்ட நீரை அவனுக்கு காட்டிடாது தலை கவிழ்ந்தவாறு சொன்னாள்.

“பேசக்கூடாதுன்னு நான் சொல்லல மலர்.”

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“இப்போவே கல்யாணம் பண்ணிக்கிட்டு இதுக என்ன பண்ணப்போகுதோ தெரியல.”

“அன்னைக்கு ஆறுதலுன்னு கயல்கிட்ட நம்மவூர் கிழவி பேசனதுதான் மலர் என் காதில் கேட்டுட்டே இருக்கு.”

அன்று அவர்களின் மறு திருமணம் கோவிலில் நடந்தபோது ஒரு பாட்டி கயலிடம் பேசியதை முகியும் கேட்டிருந்தான். இப்போது அதைத்தான் அவளிடம் கூறினான்.

“இந்த கல்யாணத்தால நாம் படிப்பை விட்டுட்டோம். வாழ்க்கையை தொலைச்சிட்டோம் அப்படின்னு யாரும் சொல்லிடக்கூடாது மலர்.”

முகியின் வார்த்தைகள் அவளை யோசிக்க வைத்தது. தான் சிறுபிள்ளையாக அவனுடன் விளையாடிவிட்டோம் என்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது.

“அந்த கெழவி அப்படி சொன்னதை நான் கேட்காம இருந்திருந்தாலும், நான் இப்படித்தான் இருந்திருப்பேன் மலர். ஏன்னா வாழ்க்கையை நாம தொடங்க இது சரியான காலமில்லை.

முன்னாடி உன் பின்னால் சுற்றிய போது மட்டும் அந்த வயது, காலமெல்லாம் சரியா இருந்தததான்னு நீ கேட்கலாம். ஆனால் அப்போ எனக்கு நீயும் என்னை விரும்புறியான்னு தெரிஞ்சிக்கணும் அப்படின்னு ஒரு நோக்கம் இருந்துச்சு. ஆனால் இப்போ அது எனக்கில்லை.

ஏன்னா நீ என்னை எவ்வளோ லவ் பண்றன்னு என்னால் பீல் பண்ண முடியுது மலர்.

அதே மாதிரி உன்னால என் லவ் பீல் பண்ண முடிஞ்சா மட்டும் போதும். இப்போதைக்கு இந்த பீல் ரெண்டு பேருக்கும் போதும்.

ஒவ்வொருமுறையும் வார்த்தையால் சொல்லிக்கிட்டே, செயலால் உணர்த்திக்கிட்டே இருக்கணும் அவசியமில்லை” என்றவன்,

“ஐ லவ் யூ டி” என்று அவளின் தலையில் கை வைத்து ஆட்டினான்.

“போயா… இப்படி நீயே டெம்ப்ட் பண்ணிட்டு… அப்புறம் முழு நீளத்துக்கு வசனம் பேசுவ. எதுக்கும் நீ கொஞ்சம் தள்ளியே இரு” என்றவள் அவன் பேசியதால் உண்டான தெளிவுடன் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு அவனை சகஜமாக்கிட விளையாட்டாய் பேசியபடி ஓடிவிட்டாள்.

*******

“நீயும் வா கண்ணா.”

மங்கை இரண்டு நாட்களாக பார்த்திபனுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறார். அவனும் மறுத்துக் கொண்டிருக்கிறான்.

“மாம் ப்ளீஸ். ட்ரை டூ அண்டர்ஸ்டேண்ட் மை சிட்டுவேஷன்.” கிட்டதட்ட தாயிற்கு புரிய வைத்திட சற்று குரல் உயர்த்தினான்.

“மங்கை விடும்மா. அவனுக்குத்தான் வேலையிருக்கே. முடிந்ததும் வரப்போறான்.” கணவரின் சமாதானத்தையெல்லாம் மங்கை ஏற்கவேயில்லை.

“மாம், டாடும் உங்கக்கூட வராங்க. அவரும் இல்லாம எல்லாம் நான் தான் பார்க்கணும்.” ஆயாசமாகக் கூறினான்.

“டெல்கிட்ட கொடுத்துட்டு வா. பொறுப்பு எல்லாத்தையும். அவன் பார்த்துப்பான்.”

“மாம்… ” பார்த்திபன் முடியாது பற்களைக் கடித்தான்.

கயலைப்பற்றி தெரிந்துகொண்ட பின்னர்… வீட்டின் சூழல் சற்று மாற்றம் பெற்றதும், “உன் வேலையெல்லாம் முடிஞ்சிட்டா என்னை இந்தியா கூட்டிட்டு போ கண்ணா” என பார்த்திபனிடம் கேட்டிருந்தார் மங்கை.

அவரின் குரலே அவரின் இத்தனை வருட ஏக்கத்தை அவனுக்கு பறைசாற்றியது.

மங்கை கயலை பார்க்கத்தான் இந்தியா கூட்டிப்போகச் சொல்கிறார் என்பதை அறிந்தவன், ‘தன்னால் தான் நினைத்ததும் முடியவில்லை தன்னுடைய அன்னையாவது தன்னவளை காண நேரிடட்டுமே’ என்று சிந்தித்தவன்,

“டாட் இப்பவும் உங்களுக்கு இந்தியா போக கஷ்டமா இருக்கா?”என்று தேவராஜனிடம் நேரடியாகக் கேட்டான்.

அவர் அழகரின் நினைவில் சோகம் சுமந்த விழிகளுடன் இல்லையென தலையாட்டிட, அடுத்த ஒரு வாரத்தில் அவர்களை மொத்தமாக இந்தியா செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான்.

தேவராஜ் கூட, “எங்களை கயல் ஏத்துப்பாளானே தெரியல. இதில் இங்கிருந்து மொத்தமா எங்களை அனுப்பி வைக்கிற பார்த்திபா, நாங்க எப்படி திரும்பி வரது” என்று வினவினார்.

“கயல் ஏத்துக்கலனாலும், அவளை ஏத்துக்க வைக்க வேண்டியது தான் இனி உங்க வேலை. கயல் நம்மை தேடியதை பார்த்தால், அவள் ஏத்துக்குவான்னுதான் தோணுது. இனியும் யாருமில்லைன்னு என் கயல் பீல் பண்ணக்கூடாது டாட்” என்றவனிடத்தில் ஏதோ ஒன்று. அதனை தேவராஜனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“திறப்பு விழா முடிந்ததும் நான் வர்றேன். அப்படி கயல் உங்களை அந்நியமா பார்த்தா, சென்னை வீட்டில் தங்குங்க”  என்றவனிடம், “முதல் முதலா போறோம் நீயில்லாம எப்படி?” என அவனில்லாமல் போகமாட்டோமென்று அடம் பிடித்த மங்கையை சரிகட்டி விமானம் ஏற்றிய பின்னரே மூச்சுவிட்டான்.

நான்கரை மணிநேரத்தில் இந்தியா சென்றிடுவார்களென்று கையிலிருந்த ரோலக்ஸை திருப்பி பார்த்தவன், சென்னை சென்று அவர்கள் கயல் வீட்டிற்கு செல்லும் வரையிலான அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக செய்திருந்தான்.

கயல் ஏற்பாளா? பாராமுகம் காட்டுவாளா?

error: Content is protected !!
Scroll to Top