பார்த்திபனின் கயல்விழியாள் 25

அத்தியாயம் 🌾 25 :

ஆயிற்று நெல் அறுவடை முடிந்து இரண்டு நாட்கள்.

தனக்காக உதவிய அனைவருக்கும் பழைய முறையில் கூலியோடு சேர்த்து நெல்லையும் கொடுத்தாள் கயல். விதை நெல்லுக்கென நான்கு மூட்டைகளை நிறுத்தியவள், வீட்டுத் தேவைக்காக பத்து மூட்டை அவியலுக்கு அனுப்பினாள்.

மற்ற அனைத்தையும் விற்று வந்த பணத்தை அப்படியே முகியின் வங்கி கணக்கிற்கு எப்போதும்போல் அனுப்பி வைத்துவிட்டாள்.

கயல் தனக்கென்று எதையும் சேர்க்கவில்லை. அவளுக்கு எல்லாம் முகி தான். அதனால் அவளது உடமைகளும் அவனுக்கே உரித்தானது அவளிடம். முகியும் கயல் செய்வதை ஆமோதித்ததில்லை. ஆனால் அவள் அனுப்பும் தொகையில் தனக்கு வேண்டுமளவு வைத்துக்கொண்டு மீதியை அவளுக்கே அனுப்பி விடுவான். கயலுக்கும் தம்பி கையால் வாங்கிக்கொள்வது அவ்வளவு நிறைவு.

“எனக்கு வேணுங்கிற அளவு மட்டும் போடு கயல்.” ஒருமுறை சொல்லியதற்கு, “அம்மா , அப்பா இருந்திருந்தா அவங்ககிட்டதானே முகி கொடுத்திருப்பேன். அதேபோல் தான் இதுவும்” என்று அவனின் வாயினை அடைத்து விட்டாள்.

அந்த வட்டத்தில் கயல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால், அவளின் பயிர்களுக்கு மவுசு அதிகம். நெல் அறுக்கும் போதே, வியாபாரிகள் அவளைத்தேடி வந்துவிடுவர். இன்னும் சிலபேர் தாமே மூட்டை பிடித்துக்கொள்வதாகச் சொல்லி அனைத்தையும் அவர்களே செய்து கயலின் கையில் பணத்தை கொடுத்துவிடுவர்.

ஆதலால் கயலுக்கு வியாபாரியைத் தேடி பிடித்து விற்கும் அலைச்சல் இல்லை.

“அடுத்த போகம் நெல் விவசாயம் செய்யும் போது, நாங்களும் இந்த முறையில் பயிர் செய்றோம்” என்று கயலிடம் ஒருசிலர் முன் வந்தனர்.

அனைவருக்கும் இதிலுள்ள நெளிவு சுலிவுகளையெல்லாம் சொல்லித் தருவதாக கயல் சொல்ல, அவர்களுக்கும் கயலை போல் மகிழ்வு உண்டானது.

இதில் ரத்தினம் தன்னிடம் உள்ள மொத்த ஏக்கரில் முக்கால் பகுதியை இம்முறையில் பயிர் செய்யப்போவதாக சொல்ல… கயலுக்கே ஆச்சரியம் தான்.

அந்த ஊரே இந்த விடயத்தில் ஒன்றாக நின்றனர்.

“சின்னப்பொண்ணு, அவளே விவசாயத்துக்காக பாடுபடும்போது, காலம் காலமா விவசாயம் பார்த்த நாமும் விரும்பி செய்வோம்” என்று விவசாயம் விடுத்து மற்ற தொழிலுக்கு போன நடுத்தர வயதினோர்… இனியும் இதில் கஷ்டப்பட முடியாதென்று விவசாயத்தை விட முடியாதுவிட்ட மூத்த தலைமுறையினரும் முன் வந்தனர்.

கயல் ஆசைப்பட்டது இதைத்தான்.

தன்னால் ஒரு நாலு பேராவது விவசாயம் செய்ய முன் வர வேண்டுமென ஆசைப்பட்டாள். ஆனால், அக்கிராம மக்கள் பெரும்பாலானோர் வந்தது கயலுக்கு பேருவகையை அள்ளித்தந்தது.

“ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா.”

முதல் முறையாக தன்னுடைய மகிழ்வை வாய் வார்த்தையாக சிவாவிடம் பகிர்ந்துக்கொள்கிறாள்.

“உன் நல்ல மனசுக்கு நீ ஆசைப்பட்டது கண்டிப்பா நடக்கும் கயல்” என்ற சிவாவிற்கும் கயலின் மகிழ்வு ஒட்டிக்கொண்டது.

கயல் இல்லையென்றால் அவனில்லையே. அதனால் கயல் எதுவாக இருக்கிறாளோ அதுவாக சிவா பிரதிபலித்தான்.

“நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. நாளைக்கே மீன்பிடி வச்சுக்கலாம். இன்னைக்கு சாயங்காலம் சுற்றி இருக்கும் கிராமத்திலும் இங்கு மீன் பிடி நடக்குதுன்னு தண்டோரா போட சொல்லணும். நீங்க அதை கொஞ்சம் தண்டோரா போடும் மாரிமுத்துகிட்ட சொல்லிடுங்க.” கயல் எப்போதும் இப்படித்தான். ஒன்று முடிந்தால் அடுத்து என்று முன்னே போய்க்கொண்டே இருப்பாள். கொஞ்ச நேரமும் சோம்பி உட்கார்ந்திட மாட்டாள்.

உழைப்பு மட்டுமே தன்னை உயர்த்தும் என்பதில் அதீத நம்பிக்கை உடையவள்.

“வியாபாரியிடம் சொல்லி சந்தையில் விற்பனை செய்யலாமே கயல். இப்போதான் நம்மவூர் ஏரியில் மீன்பிடி நடந்ததே. மக்களே நேரடியா வந்து வாங்குவாங்களா?” சிவா தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள்.

“வியாபரியை தேடிப்பிடித்து சந்தை படுத்துவது கொஞ்சம் அலைச்சலான வேலை. அதோட முதல்முறை, நாம் இப்படி செய்வது இதனை விளம்பரப்படுத்துற மாதிரி இருக்கும். அடுத்தடுத்து நாம் இதை செய்யும்போது, வியாபாரி நம்மைத்தேடி வருவாங்க” என்றாள்.

கயல் சொல்லுவது சிவாவுக்கும் சரியெனப்பட கயல் சொல்லியதை செயல்படுத்தச் சென்றான்.

அந்தவூர் பெரிய தனக்காரர் ரத்தினம் என்பதால் அவரிடம் சொல்லி, அவர்தான் தண்டோரா போட அனுமதி கொடுக்க வேண்டும். சிவா விடயத்தை சொல்லியதுமே மாரிமுத்துவை அழைத்து சொல்ல… அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் ரத்தினமே கொடுக்க… அதனை மறுத்த சிவா, “கயல் கொடுத்துவிட்டிருக்குங்க” என்றபடி சட்டை பையிலிருந்து பணத்தை எடுத்து மாரியிடம் கொடுத்தவன்… வந்த வேலை முடிந்ததெனக் கிளம்பிவிட்டான்.

******

சென்னையிலிருந்து கயலின் கிராமம் நோக்கி அந்த கார் பயணித்துக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஏழு மணி நேராமாக இல்லாத ஓர் கலக்கம், தயக்கம், வருத்தம் எல்லாம் அவர்களை தற்போது சூழ்ந்தது.

நான்கரை நேர பயணமாக சென்னை வந்து சேர்ந்த மங்கை, தேவராஜன் தம்பதியினர் அங்கிருக்கும் தங்களுடைய கெஸ்டவுஸிற்கு சென்று சேர, அடுத்த இரண்டு மணி நேரத்தில், இப்போதே கிராமத்திற்கு செல்ல வேண்டுமென மங்கை அடம் பிடிக்க, நாளை போக வேண்டிய அவர்களின் பயணம் இன்றே ஆரம்பமானது.

அண்ணன் உயிருடன் இல்லை. அண்ணியும் இல்லாமல் தன்னுடைய அண்ணனின் மக்கள் எப்படியெல்லாம் தவிக்கின்றனரோ என்ற எண்ணமே மங்கையை இருக்க விடவில்லை.

அவர்கள் தங்களை ஏற்கின்றனரோ இல்லையோ, ஒரே ஒருமுறை கண்ணால் கண்டு விட்டால் போதுமென்று உள்ளே மௌனமாக கதறியபடி இருந்தார் மங்கை.

பார்த்திபனுக்கு அழைத்து தாங்கள் வந்துவிட்டதையும், இன்றே கிராமத்திற்கு சென்று கொண்டிருப்பதையும் தெரிவித்த தேவராஜன் இருக்கையில் சாய்ந்து கொண்டார். அவரின் மனம் முழுக்க சொல்லொண்ணா துயரம் ஆழ்கடலென ஆர்ப்பரித்திருந்தது.

தன் தவறால் தான் அழகரின் இறுதி காரியத்தில் கூட அவனின் முகம் காண தனக்கு கொடுத்து வைக்காது அந்த இறைவன் தன்னை தண்டித்துவிட்டதாக முழுதாய் நம்பினார். அந்த எண்ணம் அழகரின் மீது தவறு இருக்காதென காலம் கடந்த நம்பிக்கையை அவருள் விதைத்தது.

தேவராஜனால் மங்கையின் முகத்தை காண முடியவில்லை. விட்டால் இப்போதே அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து விடும். அக்கண்ணீரை காணும் சக்தியில்லாமல் மனைவியிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாது மௌனமாக இருந்தார்.

துக்கம் மங்கையின் நெஞ்சத்தை அடைப்பது போலிருந்தது.

“என் பசங்க ஏத்துபாங்களாங்க?”

உதடு துடிக்க தன் கையினை இறுக்கமாக பற்றியபடி வினவிய மனைவியின் முகத்தை ஏறிட்ட தேவராஜன்,

“என்ன நடந்தாலும், எல்லாம் நான் சரி செய்றேன் மங்கை” என்று மனைவிக்கு ஆறுதல் அளித்தார்.

என்ன முயன்றும் மங்கைக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. டிரைவர் இருப்பதால் சதமில்லாது கேவியபடி வந்தார்.

கயல் பேட்டியளித்த சேனலின் தனிப்பட்ட செயலியில் தேவராஜன் அதனை பார்த்திருந்தார். கயலின் நெகிழ்வானப் பேச்சில், ‘தாங்கள் உடனிருந்திருந்தால் பிள்ளைகளுக்கு இத்தனை வேதனை இருந்திருக்காதோ’ என்று அவரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அந்த வீடியோவின் தாக்கத்தால் அப்படியே கண்களை மூடிக் கொண்டார்.

பிரதான சாலையிலிருந்து அவ்வூருக்கு செல்லும் கிளை சாலையில் வண்டி திரும்பியதும், மங்கையின் உடல் அதிர்ந்து இயல்புக்கு மீண்டது.

பழைய நினைவுகள் எல்லாம் ஆதி முதல் அந்தம் வரை இருவரின் மனதிலும் உலா வந்தன. சந்தோஷத் தருணங்களின் சுவடுகள் எத்தகைய இன்பத்தைக் கொடுத்ததோ அதைவிட பல மடங்கு வலியை, இங்கிருந்து சென்ற இறுதி நாட்கள் கொடுத்தன.

சென்று கொண்டிருந்த வண்டி சிறு ஆட்டத்தோடு நின்றது.

வண்டியின் குலுக்களில் நினைவு மீண்டு கண் திறந்த தேவராஜன், வண்டி செல்லாததை அறிந்து என்னவாயிற்று என்று வினவிட, வண்டியை திரும்பத்திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சித்த டிரைவர், காரிலிருந்து கீழிறங்கி வண்டியின் எஞ்சின் பகுதியை திறந்து எதையோ ஆராய்ந்தார்.

“சார் மெக்கானிக் வந்துதாங்க சரி செய்ய முடியும். என்ன பிரச்சனை தெரியலங்க” என்றார்.

அடுத்து இங்கிருந்து எப்படி செல்வது என்று தேவராஜன் யோசனையில் இருக்க…

“சார் ஒரு டாக்சி வருது லிப்ட் கேட்கட்டுமா?” என்க தேவராஜன் சரியென்றார்.

வந்து கொண்டிருந்த டாக்சி அவர்களை நெருங்கியதும் டிரைவர் கைகாட்டிட, நின்றது.

டிரைவர் பக்கம் வந்தவர், “பெரியவங்க ரெண்டு பேர்… வண்டி நின்னுப்போச்சு கொஞ்சம் டிராப் பண்ணிட முடியுமா?” என்று தன்மையாகக் கேட்டார்.

“சவாரி இருக்குங்க” என்றுகூறிய டாக்சி டிரைவர், பின்னால் இருக்கையை திரும்பிப் பார்த்தார்.

அங்கு அமர்ந்திருந்த முகி, “இந்த பக்கம் வண்டிங்க வரது கஷ்டம் தான். அவங்களையும் கூப்பிட்டுக்கலாம். எங்களுக்கு ஓகே” என்றான்.

அறுவடைக்கே முகி வருவதாக இருந்தது. ஆனால் அவனால் வார நாளில் விடுப்பு கிடைக்காததால், மீன் பிடிப்பிற்கு கண்டிப்பாக வந்துவிடுவதாக கயலிடம் சொல்லியிருந்தான். அதற்காகவே இன்று அவனின் வருகை.

முகி சம்மதம் சொல்லியதும், தேவராஜனும், மங்கையும் முகிக்கும் மலருக்கும் நன்றிகூறி டாக்சியில் ஏறிக்கொள்ள, அவர்களது டிரைவர் லக்கேஜினை கொண்டு வந்து பின்னால் டிக்கியில் வைத்தார்.

தேவராஜன் முன்னால் அமர்ந்திருக்க, மங்கை மலரின் பக்கத்தில் அமர்ந்தார். கார் பயணிக்கத் தொடங்கியது.

திடீரென தீவிரமாக மாறிய முகியின் முக மாற்றத்தில், “என்ன மாமா என்ன யோசனை?” என்ற மலரிடம்… “இவங்களை ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு மலர்” என்றான்.

“ஊருக்கு புதுசு போலிருக்கு மாமா. பார்க்கவே ரொம்ப பெரிய இடமா தெரியுது. இவங்களை எங்க நீ பார்த்திருக்கப்போற?” என்று மலர் முகியின் யோசனையை தடை செய்தாள்.

“நீங்க அந்த ஊர் தானாம்மா?”

அமைதியாக வருவது மங்கையின் மனதை பழைய நினைவுகளுக்கு இட்டுச்சென்றிட, அழுகை வரும் போலிருந்தது. மூன்றாம் மனிதர்கள் முன்பு அழுதுவிடுவோமோ என்கிற பயத்தில் மனதினை மாற்றும் பொருட்டு மங்கை மலரிடம் பேச்சுக்கொடுத்தார்.

“ஆமாங்க.”

“புதுசா கல்யாணம் ஆனவங்களா? பார்த்தாலே தெரியுது” என்ற மங்கையின் பேச்சிற்கு மலரிடம் சிறு வெட்கப் புன்னகை.

அவள் சொல்லாமலே மங்கை தான் கேட்டது சரியென புரிந்துகொண்டார்.

“தம்பி என்ன பண்றீங்க? பார்க்க ரொம்ப அமைதியா தெரியுறீங்க?”

முகியை திரும்பிப் பார்த்த தேவராஜன் இயல்பாகக் கேட்டிருந்தார். முகியின் முகம் மனதிற்கு நெருக்கமாகத் தோன்றியதால் இருக்கலாம்.

“டாக்டர் அங்கிள்” என்று பதில் சொல்லிய முகியின் முகம் மீண்டும் யோசனையில் மூழ்கியது.

தெரியாதவர்களிடம் சட்டென்று யாரெனக் கேட்டிட அவனுக்கு வரவில்லை. அதனால் அவர்கள் யாராக இருக்குமென்று உள்ளத்தோடு உழன்றபடி இருந்தான்.

அதனால் டிரைவர் தேவராஜனிடம் எந்தபக்கம் செல்ல வேண்டுமென்று கேட்டதையோ, அவர் சொல்லிய வழியையோ முகி கவனிக்கவில்லை என்றால், மலர் இன்னும் வெட்கத்திலிருந்து மீளாததால் அவளின் உலகம் வேறெங்கோ பயணித்துக்கொண்டிருக்க… அவர்களின் பேச்சு அவளின் கருத்தில் பதியவில்லை.

கயலின் வீட்டிற்கு முன் வண்டி சென்று நின்றது.

பெரிய வாய்க்காலை தாண்டாது சாலையிலே வண்டி நிற்க, நிகழ் திரும்பிய முகி வண்டியிலிருந்து கீழிறங்கி… “நான் வழி சொல்லவேயில்லையே! சரியா வந்துட்டீங்க” என்று டிரைவரிடம் கேட்டதோடு, வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தவாறே… “இவங்களை அவங்க சொல்ற இடத்தில் இறக்கிவிடுங்க” என்றவன் வாய்க்காலின் மீதிருந்த சிறு மர பாலத்தில் நடந்து செல்ல… மலர் அவன் பின் சென்றாள்.

முகி இறங்கியது முதல் பேசியதையெல்லாம் கேட்ட… மங்கைக்கும் தேவராஜிற்கும் புலன்கள் செயலிழந்த நிலை.

கயலை டிவியில் தெளிவாக பார்த்திருக்கின்றனர். ஆனால் முகியை எங்கும் பார்த்திராததால் அவன் யாரென்று அவர்களால் யூகிக்க முடியவில்லை.

“ஒருவேளை முகியா இருக்குமோ!” இருவரும் ஒரு சேர கேட்டுக்கொண்டனர்.

“போனா தெரிந்திடும் மங்கை” என்ற தேவராஜனும் மனைவியுடன் இறங்கிட டாக்சி கிளம்பியது. அது சென்ற புழுதி அடங்கும் வரை சாலையிலே நின்றிருந்தவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு கடினப்பட்டு கால்களை நகற்றி அடி வைத்தனர்.

ஒவ்வொரு அடிக்கும் இதயம் டொம் டொம்மென்று அதிர்ந்தது. அது தன் உறவுகளை எதிர்கொள்ளப்போகும் அச்சத்தின் வெளிப்பாடு.

“எதுவா இருந்தாலும் சமாளித்துதான் ஆகணும் மங்கை” என்றவர் மனைவியின் கரம் பற்றி அழைத்துச் சென்றார்.

வாய்க்காலினை கடந்து வீட்டிற்கு முன்னிருந்த பெரிய சமதள பரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் பார்வை அவ்விடத்தையே அலசியது.

வீட்டைச் சுற்றி பசுமை மட்டுமே. அன்று போலவே இன்றும் அதன் பழமையை சுமந்து நின்றது.

பின்னபக்கமிருந்து வீட்டைச் சுற்றியவாறு பக்கவாட்டில் முன் பகுதிக்கு வந்த கயலுக்கு சற்று நேரத்திற்கு முன்பு உள் சென்ற முகி மற்றும் மலரின் வருகை தெரியவில்லை.

கையிலிருந்த களைக்கொத்தியை திண்ணையில் வைத்தவள் பின்பக்கமிருக்கும் தோட்டத்தை சீரமைத்திருப்பாள் போலும். ஏற்றி சொருகியிருந்த பாவாடையை இறக்கிவிட்டவள் அப்போதுதான் வீட்டின் முன் நின்றிருந்த இருவரையும் கவனித்தாள்.

தேவராஜனால் கயல்விழியை நிமிர்ந்து பார்த்திட முடியவில்லை. அழகரையே பார்ப்பதைப்போல் இருந்தது. மங்கைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கயல் என்கிற அழைப்பு குரல்வளைத் தாண்டி வெளியேறிட சண்டித்தனம் செய்தது. கண்கள் குளம் கட்டி நிற்க… “கயல்” என உதடுகள் மெல்ல அசைந்தன.

கயல் இருவரையும் பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தாள்.

வீட்டிற்குள் சென்ற முகி உள்ளே கயல் இல்லையென்றதும்… பின்பக்கம் சென்றவன் அங்கும் இல்லையென முன்னால் வந்தான். அவன் பின்னால் சென்றபோதுதான் கயல் முன்பகுதிக்கு வந்திருந்தாள்.

உள்ளிருந்து வந்த முகிக்கு முதுகுக்காட்டி நின்ற கயலிடம்,

“கயல் இங்கு இருக்கியா? உன்னை வீடு முழுக்க தேடிட்டு வர்றேன்” என்றபடி வந்தவன் தங்களுக்கு முன் நின்றிருந்தவர்களைப் பார்த்து…

“நீங்க போக வேண்டிய இடத்துக்கு போகலையா? டிரைவர் உங்களையும் இங்கயே இறக்கிவிட்டுட்டாரா?” என்று கேட்டவன், “இங்கிருந்து ஊருக்குள் போக இன்னும் அரை கிலோமீட்டர் இருக்குமே! நீங்க யார் வீட்டுக்கு வந்தீங்க?” என்றான்.

இருவரும் அமைதியாகவே நின்றிட…

“இவங்க கார் வழியில் ரிப்பேராகி… நான் வந்த டாக்சியில் தான் கயல் வந்தாங்க. நம்மவூருக்கு தான் யார் வீட்டுக்கோ வந்திருக்காங்க” என்று கயலிடம் சொல்லியவனுக்கு மூவரின் அமைதியும் குழப்பத்தைக் கொடுத்தது. அதனை அவன் முகம் தெளிவாக பிரதிபலிக்கவும் செய்தது.

நிமிடங்கள் கடந்திட,

தன்னை மீட்டுக்கொண்ட கயல் பொங்கிய உணர்வுகளை அடக்கியவாறு… கண்ணிலிருந்து வழிந்த நீரை அவசரமாக துடைத்திட,

“ஏய் கயல், இப்போ எதுக்கு அழற” என்ற முகியை தவிர்த்தவளாக…

“உள்ள வாங்க அத்தை, மாமா நீங்களும் வாங்க” என்று வரவேற்றவளின் அழைப்பு இருவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திட… அவர்களின் அருகில் வந்தவள் மங்கையின் கையிலிருந்த பையினை தான் வாங்கிக்கொண்டாள்.

முகியின் குழப்பம் அதிகரித்தது.

தம்பியை பார்த்தவள், “என்னடா பார்த்திட்டு நிக்குற மாமா கையிலிருக்கும் பையை வாங்கு” என்றாள்.

“ஆங்… ஹான்…” என்று திணறிய முகி வேகமாக வந்து, “பையை கொடுங்க மாமா” என்று தேவராஜனிடமிருந்து வாங்கிக்கொண்டான்.

“நாங்க யாருன்னு தெரியுதாப்பா?”

தேவராஜன் முகியிடம் கேட்டிட, அவனோ விழித்தவனாக தன் தமக்கையைப் பார்த்தான்.

கயல் மாமா என்று அடையாளப்படுத்தியதால் அவனும் மாமா என்று சொல்லியிருந்தானே தவிர அவர்களை அவனுக்குத் தெரியவில்லை.

அவனின் பார்வையை வைத்தே உணர்ந்து கொண்ட தேவராஜன், கயலை ஆதுரமாக நோக்கிட…

“எனக்கு நல்லாவே தெரியுது மாமா” என்றதோடு முகியிடம், “மங்கை அத்தை, தேவராஜன் மாமா” என்று அறிமுகம் செய்தாள்.

முகி ஆச்சரியம் மேலோங்க பார்த்திட…

மங்கை கயலை வாரி அணைத்துக் கொண்டார்.

வீட்டில் மாட்டியிருக்கும் புகைப்படத்தை தினமும் சில நிமிடங்களாவது பார்த்தபடி நின்றிருக்கும் கயலுக்கு அவர்களை கண்டதும் அடையாளம் தெரிந்தது. இத்தனை வருடங்கள் கழித்து வந்தவர்களின் மீது கோபமென்று எதுவுமில்லையென்றாலும் சிறு வருத்தம் எழத்தான் செய்தது. ஆனால் தன் முகத்தில் அவ்வருத்தம் தெரிந்தால் அவர்கள் வருந்துவரென்று சாதாரணமாகவே அழைத்திருந்தாலும் அவளுக்குள்ளிருந்த அழகரின் ஒற்றைத் தங்கை, தன் தந்தையின் நண்பர் என்கிற பாசம் தானாக எழத்தான் செய்தது.

மங்கையின் அணைப்பிலிருந்த கயலால் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாது கண்களில் திரண்ட ஆனந்த கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது.

“இப்போதான் உங்களுக்கு எங்க நினைவு வந்ததா அத்தை?”

கேட்கக்கூடாதென்றுதான் நினைத்தால், ஆனால் மனதில் தங்கிய நீண்ட வருட வருத்தம் அவளையுமறியாது வெளி வந்திருந்தது.

கயலின் ஒற்றை கேள்வி…

தங்களை அவள் எந்தளவிற்கு தேடியிருக்கிறாள் என்பதை தேவராஜனுக்கும், மங்கைக்கும் உணர்த்திட தங்களின் பெரிய தவறு புரிந்து மன்னிப்பு கேட்கக்கூட முடியாதிருக்க… மங்கை கண்ணீரோடு கயலின் நெற்றில் முத்தம் பதித்து,

“இந்த அத்தையை மன்னிச்சிடுடா” என்று கயலின் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து அழுகையில் கரைந்தார்.

error: Content is protected !!
Scroll to Top