பார்த்திபனின் கயல்விழியாள் 26

அத்தியாயம் 🌾 26 :

வந்திருப்பவர்கள் இதுவரை தாங்கள் தேடிக்கொண்டிருந்த, தங்களுக்கென இருக்கும் ஒரே உறவுகளான அத்தை, மாமா என்று தெரிந்ததும்… தானொரு மருத்துவன் என்பதை மறந்து சிறுவனாக மாறி தேவராஜை அணைத்துக் கொண்டான்.

“ஏன் மாமா எங்களை விட்டு போனீங்க?”

தேவராஜனிற்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

தங்களை பார்த்ததும், “இப்போ எதுக்கு வந்தீங்கன்னு கேட்காது, இப்போ தான் வரணும் தோனுச்சான்னு” கேட்ட கேள்வியிலே பிள்ளைகள் உறவுக்காக எந்தளவிற்கு ஏங்கி நின்றிருக்கிறார்கள் என புரிந்த இருவருக்கும் மன்னிப்பைத் தவிர என்ன கேட்பதென்று தெரியவில்லை.

“இனிமேல் உங்களை விட்டு எங்கும் போகமாட்டோம் முகிலா… மாமாவை மன்னிச்சிடு.”

தேவராஜனின் மன்னிப்பு என்ற வார்த்தையை அதிசயத்தை பார்த்ததைப்போல் பார்த்தார் மங்கை.

‘ஊருக்கே ராஜா என்றாலும் தன் பிள்ளைகளிடம் குட்டிகர்ணம் அடிக்கும் நிலை வந்தால் அடித்துதான் ஆகணும்.’ மனதில் புன்னைகையோடு கூறிக்கொண்டார்.

“பல வருசம் கழித்து வந்தவங்களை, அக்காவும் தம்பியும் பாசத்துல அழுதே துரத்தி விட்டுடுவீங்க போலிருக்கே. வீட்டுக்குள்ள வந்து பாசப்படம் ஓட்டுங்க.” சூழ்நிலையை சீரமைக்கும் விதமாக அங்கு நடந்ததை பார்த்தபடி வந்த மலர் பேசியதிலே நால்வரும் உணர்வின் பிடியிலிருந்து வெளிவந்தனர்.

“வாங்க அத்தை… வாங்க மாமா…”

கயலும், முகியும் ஒன்றாக அழைக்க… வரும்போது இருந்த கலக்கம், வருத்தம் எதுவுமின்றி நிறைந்த மனதோடு இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.

வரவேற்பறையில் சட்டத்தில் மாலையோடு மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைக் கண்டதும், ஏற்கனவே தெரிந்த விடயமாக இருந்தாலும்… நிதர்சனம் கண்ணில் பட மங்கைக்கு நெஞ்சம் விம்ப கண்ணீர் கரை புரண்டது.

தேவராஜன் புகைப்படத்திற்கு அருகில் சென்று, சிரித்துக் கொண்டிருந்த அழகிரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டி இரு சொட்டு கண்ணீர் சிந்தினார்.

“எத்தனை வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்கீங்க. உங்க அண்ணன் பசங்ககிட்ட சந்தோஷமா பல வருஷ கதையை பேசாம இப்படி நடந்து முடிந்ததை நினைத்து அழுத்துட்டே இருக்கீங்க. அழுதா போனவங்க வந்துடுவாங்களா? நீங்க சந்தோஷமா இருந்தாதானே அவங்களுக்கு மேல அங்கு நிம்மதியா இருக்கும்.” கயல் அன்னை தந்தையின் நினைவில் கண்ணீரில் கரைந்திடும் நேரம் அவளைத் தேற்றுவதற்காக எப்போதும் சரளா பேசும் வார்த்தைகள் அவை. அதனை இப்போது மலர் பேசினாள்.

மலர் சொல்லுவதும் சரியென நினைத்தவர்கள், மலர் கொடுத்த தேநீரை சந்தோஷமாக இல்லையென்றாலும்… மனதோடு நிறைந்திட்ட துக்கத்தை ஒதுக்கி வைத்தவர்களாக ஒருவித அமைதியோடு பருகினர்.

முகி கண்களாலே தன்னவளுக்கு நன்றி கூறினான்.

அடுத்து பல கதைகள் பேசினர். அதில் பாதி மங்கையின் மன்னிப்பு கோரும் வார்த்தைகளே. தேவராஜனிற்கு கயலையும், முகியையும் அத்தனை பிடித்தது. இந்த பிள்ளைகளுக்காகவாவது அவர்களின் கஷ்ட காலத்தில் இறைவன் தங்களை ஒன்று சேர்த்திருக்கலாமே என்று வருந்தினார்.

மலர் இரவு உணவை சமைத்து முடித்து உணவு உண்ண அழைக்கும் வரை பேசியபடியே இருந்தனர்.

அதில் எப்படி தாங்கள் கயலை கண்டறிந்து வந்தோம், அதற்கான காரணம் அந்த டிவி நிகழ்வு தானென்று அனைத்தும் பேசினர்.

சிங்கப்பூரில் ஹோட்டல் பிஸ்னெஸ் என்று மட்டும் சொன்னவர்கள், அதனை விரிவாகவோ அல்லது ஹோட்டலின் பெயரையோ சொல்லவில்லை. அது அவ்வளவு முக்கியமானதாக அவர்களுக்கு படவில்லை.

பார்த்திபன் அவர்களை அனுப்பும் போதே கயலிடம் தன்னைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது. நேரில் வந்துதான் என்னைப்பற்றி நானே சொல்லுவேன் என்று பெற்றோரிடம் சொல்லியிருக்க அவர்களும் அவனைப்பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.

உண்டு முடித்ததும் வீட்டு பின்னால் மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் இருக்கும் மாமரத்திற்கு அடியில் கயிற்று கட்டில் போடப்பட்டிருக்க, அதில் முகியும் தேவராஜனும் அமர்ந்திருக்க… மரத்து வேரில் கயலும், சிறு கல்லில் மங்கையும் அமர்ந்து… சில்லென்ற காற்றில் கதைகள் பேசியபடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் பேசுவதற்கும், சொல்லுவதற்கும், கேட்டுக்கொள்ளுவதற்கும் நிறைய இருந்தன.

அவர்களுக்கு தனிமை கொடுத்து மலர் வீட்டிற்குள்ளே இருந்துகொண்டாள்.

“முகிக்கு கல்யாணம் ஆகிருச்சா?” இவ்வளவு சின்ன வயதில் என்ன அவசரம் என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது.

கயல் முகியின் திருமணம் எப்படி நடந்தது என்பதைப்பற்றி சொல்லியதும் அங்கு சிறு மௌனம். அதனை கலைக்கும் விதமாக தேவராஜன் பேசினார்.

“அந்த நேரத்தில் நீ செய்தது சரிதான் முகிலா… அழகர் இருந்திருந்தா உன்னை நினைத்து பெருமை பட்டிருப்பான்.”

முகிக்கு தன் தந்தையே தன் தவறை ஏற்றுக்கொண்டதாகத் தோன்றியது.

“தேன்க்ஸ் மாமா.” முகி வெகுவாக நெகிழ்ந்திருந்தான்.

“மாணிக்கம் எங்க? வந்ததிலிருந்து ஆளே காணோம். அவனுக்குத்தான் பெரிய நன்றி சொல்லணும்” என்றார் தேவராஜன்.

“ஆமா கயல் மாணிக்கத்திற்கு நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம்.”

மங்கை பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு மாணிக்கம் வேகமாக ஓடி வந்தார்.

“அக்கா… அக்கா…” மாணிக்கத்தின் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.

“எங்க கயலு மங்கை அக்கா. மலர் சொல்லுச்சு. இப்போதான் தண்ணி கட்டி முடிச்சேன். வீட்டுக்கு வந்தா எம்பா பெரிய சந்தோஷமான விஷயத்தை மலரு சொல்லுது” என்று பேசியபடியே அருகில் வந்தவர் மங்கையையும் தேவராஜனையும் பார்த்து தன் மகிழ்வை அவர்களின் கரம் பற்றி தெரிவித்தார்.

மாணிக்கத்தின் பின்னோடு வந்த சரளா அமைதியாக தள்ளி நிற்க,

“இது சரளா தானே. உன் அக்கா பொண்ணு” என்று கேட்டார் மங்கை.

“அய்யோ அண்ணி உங்களுக்கு என்னை யாருன்னு தெரியுதா?” என்று முகத்தில் மகிழ்ச்சியை காட்டி அருகில் வந்த சரளாவை அணைத்து விடுவித்தார் மங்கை.

“நீங்க ரெண்டு பேரும் இல்லைன்னா, என் பிள்ளைங்க நிலை… ரொம்ப நன்றி.” மங்கை மாணிக்கம் மற்றும் சரளாவை பார்த்து கைக்கூப்பி வணங்கி நின்றார்.

“அக்கா என்னதிது. நீங்களும், அழகர் ஐயாவும் எனக்கு செய்ததுக்கு இது ஈடாகுமா” என்ற மாணிக்கம் மங்கையின் கையை கீழிறக்கினார்.

“உங்க கோபமெல்லாம் போயிடுச்சுங்களா ஐயா?” மாணிக்கம் தேவராஜனிடம் கேட்டார்.

“கோபத்தால் நான் இழந்தது ரொம்ப பெருசுடா மாணிக்கம்” என்று விரக்தியாக சொல்லியவர், “நடந்ததையே மறக்க முயற்சிக்கிறேன்” என்றார்.

“இதுக்கு அப்புறம் எங்களை விட்டு போயிடாதீங்க ஐயா… அழகர் ஐயாவும் இல்லாம ரொம்ப தவிச்சிட்டோம்” என்ற மாணிக்கத்திடம்,

“என் மருமகளே போங்கன்னு துரத்தினாலும், இனி இங்கிருந்து போவதா இல்லை மாணிக்கம்” என்றார் மங்கை.

“ரொம்ப சந்தோஷம் அக்கா” என்ற மாணிக்கம் அவர்கள் பேசட்டுமென்று சரளாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

“என்ன கயல் நாங்க இங்கயே தங்கலாமா?” மங்கை விளையாட்டாகக் கேட்டார்.

“இது நீங்க பொறந்த வீடு அத்தை. உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீங்க எங்களை போன்னு சொல்லாம இருந்தா சரி” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, மங்கை கயலின் காதை செல்லமாகத் திருகினார்.

அப்போதுதான் நினைவு வந்ததாக, “அத்தான் வரலையா?” என்று முகி கேட்டான்.

“வேலையெல்லாம் விட்டுட்டு உடனே வர முடியாதில்லையா? வந்துடுவான்.” மங்கை தான் பதில் கூறினார்.

அதற்கு மேல் அவனைப்பற்றி என்ன கேட்பதென்று முகிக்கு தெரியாததால் அமைதியாகிவிட்டான்.

‘அவனைத்தான் நீ கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’ என அழகர் தன்னுடைய இறுதி மூச்சில் சொல்லியிருக்க… இப்போது தான் எதாவது அவனைப்பற்றிக் கேட்டால், முகிக்கு அதிகப்படியாகத் தோன்றிடுமோ என்று கயலும் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் அவர்களின் பேச்சிற்கு காரணமானவே அவர்களை அலைபேசி வாயிலாக அழைத்திருந்தான்.

“ரொம்ப நேரமா அடிச்சிட்டே இருந்தது. எமர்ஜென்சியா இருக்குமோன்னு கொண்டு வந்தேன்” என்று அலைபேசியை மங்கையிடம் கொடுத்த மலர் திரும்பிச்செல்ல அவளின் கைபிடித்து தங்களுடன் இருத்திக் கொண்டார் மங்கை.

திரையில் ஒளிர்ந்த பெயரை வைத்து,

“கண்ணா தாங்கா” என்று கணவரிடம் சொல்லிய மங்கை எடுத்து பேசத் துவங்கினார்.

“மாம்… அங்கு போனதும், உங்க மருமகளை பார்த்ததும் மகனை மறந்துட்டீங்க.” எடுத்ததும் புகார் வாசிக்கும் மகனின் பேச்சில் மங்கை சத்தமாக சிரித்தார்.

“கண்ணா ஏதோ மங்கைகிட்ட விளையாடுறான்.” தேவராஜன் மற்ற மூவரையும் பார்த்துக்கூறினார். அவர்களிடம் சிறு தலையசைப்பு.

“என்ன மாம், உங்க சிரிப்பு சத்தத்தை கேட்கும்போது கயல் உங்களை அச்செப்ட் பண்ணிக்கிட்டா போலிருக்கே” என்று தெரிந்துகொண்டே கேட்டான்.

வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் கூறிய மங்கை, “நீயும் இப்போவே வந்திருக்கலாம். முகி கூட உன்னைக் கேட்டான்” என்று குறைப்பட்டுக் கொண்டார்.

“வந்திடுறேன் மாம்” என்று அவன் சொல்லும்போதே, “கயல்ட்ட பேசுறியா கண்ணா” என்று கயலை பார்த்தபடியே கேட்டவர், அவளின் வேண்டாமென்ற தலையாட்டலையும்… பார்த்தியின் “நோ மாம்” என்ற வார்த்தையையும் அசட்டை செய்தவராக கயலிடம் அலைபேசியை நீட்டினார்.

மறுத்தால் சரியாக இருக்காதென்று கயல் அதனை வாங்கி காதில் வைத்திட,

“உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா” என்று கண்களால் மனைவியை வினவினார் தேவராஜன்.

“உங்க பையன் லவ் சொல்லுற வரைக்கும் எனக்கு பொறுமை இல்லை.” கணவனின் காதில் கிசுகிசுத்தார் மங்கை.

“ஹலோ…”

கயலின் ஒற்றை வார்த்தை, மெல்லிய குரல்… பார்த்திபனின் செவி நுழைந்து மூளையில் பதிந்து இதயத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.

அவனிடமிருந்து பதிலின்றி போக, மீண்டும் கயல் “ஹலோ” என்றாள்.

சுதாரித்தவன், “ஹாய்” என்று பதிலுக்கு சொல்லியவனுக்கு என்ன பேசுவதென்று சுத்தமாகத் தெரியவில்லை.

‘இந்த மாம் ஏன் இப்படி பண்ணாங்க. அய்யோ பேசவே வரலையே.’ பார்வையாலே அத்தனை பேசுபவன் வாய் வார்த்தைகளற்று தடுமாறி நின்றான்.

“நான் கயல்…”

“டிவியில் பார்த்தேன்.”

அடுத்து என்ன பேச? இருவரிடமும் மௌனம்.

“கொடுக்கா… நான் பேசுறேன்” என்று முகி கயலிடமிருந்து அலைபேசியை பிடுங்கியிருந்தான்.

“ஹாய் அத்தான். நான் முகி.” அவனின் உற்சாகம் பார்த்திபனையும் தொற்றிக்கொண்டது.

கயலிடம் தடுமாறியவன் முகியிடம் சரளமாக பேசினான். முகி என்ன செய்கிறான், அவனின் படிப்பு , வேலை, திருமணம் என்று அவர்களின் பேச்சு நீண்டது.

இறுதியாக “நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?” என்று முகி கேட்ட கேள்விக்கு , சிறு இடைவெளிவிட்டு “இங்கு ஒரு சாஃப்ட்வெர் கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்கேன்” என்றான் எவ்வித அலட்டலுமின்றி.

“வாவ் அத்தான் சூப்பர். நீங்க அவ்வளவு பெரிய ஆளா” என்று வியந்து கூறிய முகி மேலும் சிறிது நேரம் பேசியபடி இருக்க… “கொடுங்க நானும் எங்க அண்ணாகிட்ட கொஞ்சம் பேசுறேன்” என்று மலர் வாங்கி பேசினாள்.

மலரைப்பற்றி மங்கையே சொல்லியிருக்க… அவளிடம் பேச பார்த்திபனுக்கு எந்த தடையுமில்லை. நன்றாகவே பேசினான்.

இப்படி மாற்றி மாற்றி எல்லோரும் பார்த்திபனிடம் பேசிக்கொண்டிருக்க, அங்கு வெறும் பார்வையாளராக நின்றிருந்தாள் கயல்.

“சரி சரி பேசனது எல்லாம் போதும். இங்கதானே இருக்கப்போறாங்கா, காலையில் பேசிக்கலாம்” என்றபடி வந்த சரளா எல்லோருக்கும் பால் கொடுத்து உறங்க அனுப்பி வைத்தார்.

மங்கை மாடியேற முடியாதென்க கீழேயே ஒரு அறையை சுத்தம் செய்து ஒதுக்கி கொடுக்க, தேவராஜனும் மங்கையும் அதில் தங்கிக்கொண்டனர்.

முகியும், மலரும் உறங்கச் சென்றதும், தயங்கியபடி தேவராஜனிடம் வந்த கயல், ஒரு கடிதத்தை நீட்டி… “உங்ககிட்ட அப்பா கொடுக்க சொன்னது மாமா” என்றாள்.

கனத்த மனதோடு அதை வாங்கிய தேவராஜன் அறைக்குள் வந்து, மேசை மீது அக்கடிதத்தை வைத்தவர் பார்த்தபடியே நின்றிருந்தார்.

அழகர் தன்னுடைய இறுதி நாளில் அதனை கயலிடம் கொடுத்திருந்தார். அதில் என்ன எழுதியிருக்கு என்பது கயலுக்கும் தெரியாது. இதுவரை கயல் அதனை படித்ததில்லை. அது அவள் தந்தை அவரின் நண்பருக்கு எழுதியது அதை படிக்கும் உரிமை தனக்கில்லை என்று அதனை பத்திரப்படுத்தி வைத்திருந்தவள் இன்று உரிய இடத்தில் சேர்த்திருந்தாள்.

“அதுல என்னயிருக்கு? வச்ச கண்ணை  எடுக்காம பார்த்துக்கிட்டிருக்கீங்க?” என்ற மங்கை கடிதத்தை எடுத்து பிரிக்க முயல,

“அழகர் எழுதியது. கயல் கொடுத்துச்சு” என்று அமைதியாகக் கூறினார் தேவராஜன்.

பிரித்ததை நிறுத்திவிட்டு கணவரின் கையில் வைத்த மங்கை, “எதுவாயிருந்தாலும் திடமா படிங்க” என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டார்.

நடுங்கும் விரல்களுடன் மெல்ல பிரித்தார்.

“அன்புள்ள தேவாவுக்கு,”

அன்புள்ள என்கிற அழகரின் முதல் வார்த்தையே மனதை கனக்கச் செய்தது.

“நல்லாயிருக்கியாடா?” குரல் தழுதழுத்தது. அழகரே முன்னால் நின்று கேட்பதை போலிருந்தது.

“என்னன்னு தெரியலடா ரெண்டு மூனு நாளாவே மனசு சரியில்லை. உன்னை பார்த்திடமாட்டேனா! நீயிருக்கும் இடம் தெரிந்துவிடாதான்னு ஒரே ஏக்கமா தவிப்பா இருக்கு. எனக்கென்னவோ ஆகிடும் தோணுதுடா.” இந்த இடத்தில் மேற்கொண்டு படிக்க முடியாது, தேவராஜன் கண்களை மூடிக்கொண்டார்.

தன்னை சமன் செய்து மீண்டும் வாசித்தார். அழகர் எழுதிய நாளுக்கு காலம் சென்றிருந்தது.

“இது என் பிரம்மையா கூட இருக்கலாம். ஒருவேளை நானில்லாமப் போயிட்டால்? அதுக்குத்தான் உனக்காக எழுதுறேன். உனக்கு பணம் கொடுத்ததை நான் யார்கிட்டவும் சொல்லலைடா. அந்த தனக்காரரிடம் நிலத்தை அடமானம் வச்சு தான் உனக்காக பணம் வாங்கினேன். அப்பவும் உனக்காகன்னு அவர்கிட்ட கேட்கல. உன்னோட சூழல் தெரிஞ்சு அவரே யூகிச்சிட்டார் போல, அது நமக்குள்ள பிரிவினையை கொடுத்திருச்சு. இந்த இடது பக்கம் தோள் பட்டையை பயங்கரமா வலிக்குதுடா. அப்பப்போ நெஞ்சுல சுரீர்ன்னு வலி வந்து வந்து போவுது. எனக்கிருக்க கவலையெல்லாம், உன்னை பார்க்காம போயிடுவேனோன்னு தான். நானில்லைனாலும் மீனா புள்ளைங்களை நல்லா பார்த்துக்கும். இருந்தாலும் நீயிருக்கன்னா எனக்கு கொஞ்சம் தெம்பா இருந்திருக்கும். எனக்கு அல்ப்பாயிசுன்னு இருக்கு போல. உன்கிட்ட கடைசியா பேசணும் நினைச்சதெல்லாம் பேசிட்டேன்டா. எப்போ வந்து சேர்ந்தாலும், பிள்ளைகளை கை விட்டுடாதடா! அப்புறம் என் கடைசி ஆசை ஒன்னேயொன்னு நிறைவேற்றி வைடா. கண்ணாக்கும் கயலுக்கும் கல்யாணம் நடக்கணும்டா. என் கண்ணா இப்போ பெருசா வளர்ந்திருப்பா(ன்)ல. என் கண்ணாவுக்கு என் நினைவிருக்குதாடா? அவன் மாமான்னு கூப்பிடுறது காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கும்டா.”

அழகர் எழுதிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் இதயத்தில் சுரீரென்ற வலி… மெல்ல இடது பக்கம் பரவுவதை போலிருக்க… எழுதிய காகிதத்தை மடித்து கவருக்குள் போட்டு ஒட்டியவர், பள்ளி செல்வதற்கு தந்தையிடம் சொல்லிக்கொண்டு செல்ல வந்த கயலிடம்…

“நானிருந்தாலும், இல்லைன்னாலும் எப்போவாவது உன் மாமாவும் அத்தையும் நம்மைத்தேடி வந்தாங்கன்னா இதை உன் மாமாகிட்ட கொடுத்திடும்மா” என்றார்.

கயலுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், “அச்சானியமா பேசாதீங்கப்பா, இதை நீங்களே மாமாகிட்ட கொடுப்பீங்க” என்று சொன்னவள் அழகரின் அறையிலிருந்த மேசை இழுவையில் வைத்துவிட்டு முகியையும் அழைத்துக்கொண்டு பள்ளிச்சென்றாள். அவர்கள் மாலை வீட்டிற்கு வந்தபோது அழகரும், மீனாட்சியும் உயிரற்ற கூடாக வீட்டின் நடு கூடத்தில் படுத்திருந்தனர்.

கயல் சென்றதும், உடலில் எழுந்த வலியை தண்ணீர் குடித்து பொறுத்தவர் வயலுக்குச் சென்றார்.

அன்று மாணிக்கத்தை அழகர் நெல் வியாபாரியை பார்த்துவர அனுப்பியிருந்ததால், உடனில்லை.

அழகர் மட்டுமாக வயல்களை பார்வையிட்டபடி வந்து கொண்டிருந்தார்.

கிணற்றுக்கு அருகில் வந்த போது… மீண்டும் வலி, கழுத்தில் தொடங்கியது இடது தோள்பட்டையை பலமாக ஊடுருவி, இதயத்தில் சுள்ளென்று வேகமாக பரவியது. தடுமாறி உடல் வியர்வையால் நொடியில் நனைய, கிணற்று மேட்டில் அப்படியே அமர்ந்தவர், மேலும் எழும்பிய வலி பொறுக்காது கண்கள் சொருகிட மயக்கத்தில் வீழ்ந்தவர், கிணற்றின் உள்ளேயும் வீழ்ந்திருந்தார்.

அந்நேரம் அழகருக்கு மதிய உணவு கொண்டு வந்த மீனாட்சி, தூரத்தில் வரப்பில் நடந்து வரும்போதே கிணற்று மேட்டில் அழகர் அமர்ந்திருப்பதை கண்டுவிட்டு அவரை நோக்கி வர, கிட்ட நெருங்கிய சமயம் அழகர் உள்ளே விழுவதை பார்த்து பதறி… உணவு வைத்து அடுக்கி கொண்டு வந்த கூடையை அப்படியே போட்டுவிட்டு கணவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.

அழகருக்கும் மீனாட்சிக்கும் நீச்சல் நன்றாகவேத் தெரியும். வலியோடு மயக்கத்தில் இருந்ததால் அழகரால் நீந்த முடியாது… மெல்ல நீருக்குள்ளே சென்று கொண்டிருந்தார். கணவரை எட்டி பிடிக்க முயற்சித்த மீனாட்சியும், அழகரின் உயிர் ஒன்றே முக்கியம் என்ற நினைவோடு ஆழத்தில் மூழ்கிக்கொண்டே செல்ல… ஒருகட்டத்தில் அவராலும் மூச்சினை அடக்க முடியாது வாயினை திறந்து நீரினை விழுங்கிவிட… மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே வர முடியாது மாட்டிக்கொண்டார். அந்நிலையிலும் அழகரின் கையை எட்டி பிடிக்க முயன்று கடைசி நொடியில் பிடித்திருக்க… மீனாட்சியின் கண்களும் மூடிக்கொண்டன.

உச்சி நேரம் என்பதால் காக்கை குருவி கூட அங்கில்லை. இடமே மயான அமைதியில் இருந்தது.

வியாபாரியை சந்தித்துவிட்டு நேராக அழகரைத்தேடி வந்த மாணிக்கம், கிணற்றுக்கு பக்கத்து வயலில் உணவு கூடை சிதறி கிடப்பதைக் கண்டு கிணற்றில் எட்டிப்பார்க்க, அழகரும் மீனாட்சியும் நீரில் மிதந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆன்மா எப்போதோ விண்ணுலகம் சென்றிருந்தது.

இன்று…

கடிதத்தை படித்த தேவராஜன் எவ்வித உணர்வுமின்றி கடிதத்தில் முகத்தை புதைத்து மண்டியிட்டு அமர்ந்தவர் அப்படியே மயங்கி தரையில் கிடந்தார்.

error: Content is protected !!
Scroll to Top