பார்த்திபனின் கயல்விழியாள் 27

அத்தியாயம் 🌾 27 :

மெத்தையில் படுத்திருந்த கயலுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அவள் இதயத்திலிருந்த பெரும் பாரம் ஒன்று இறங்கியிருந்தது.

‘இனி யாருமற்ற பிள்ளைகள்’ என்று யாரும் சொல்லிட முடியாதல்லவா. அந்த எண்ணமே சொல்ல முடியாத நிம்மதியை கொடுத்தது.

அவளுடைய தந்தையின் ஆசையில் ஒன்று நிறைவேறிய நிறைவு.

மங்கை மற்றும் தேவராஜனின் வருகையை நினைத்து சந்தோஷம் கொள்ளும் அதே தருணம், தந்தை தன்னிடம் இறுதியாக பேசிய வார்த்தைகளும் கயலின் எண்ண அலைகளில் மேல் வந்தன.

பள்ளி செல்ல கிளம்பிய கயல் அழகரை காண அவரின் அறைக்கு வந்தாள்.

“ஸ்கூல் போயிட்டு வர்றேன் ப்பா.”

“பார்த்து போயிட்டு வாடா” என்ற அழகர் என்ன நினைத்தாரோ, எதை நினைத்து பயந்து தேவராஜனிற்கு கடிதம் எழுதினாரோ அதை அப்போதே கயலிடம் கொடுக்க சொல்லி மனம் உந்தித்தள்ள,

“உன் அத்தை, மாமா எங்க இருக்காங்கன்னு தெரியலடாம்மா. அவங்களை நீதான் கண்டுபிடிக்கணும். நானில்லைனாலும் தேவராஜன் வந்தா இதை கொடு” என்று கையில் கடிதத்தை கொடுத்தார்.

தந்தை சொல்லிய நானில்லை என்கிற வார்த்தை சிறுமிக்கு அவ்வளவு வலியை கொடுத்தது. தந்தையிடம் வலி தந்த கோபத்தோடு பேசிய கயல் கடிதத்தை அவருடைய மேசை இழுவையிலேயே வைத்துவிட்டு வெளியேற, மகளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தார் அழகர்.

“என்னவோடா மனசே சரியில்லை” என்றவர், கயலின் கன்னம் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்தவர்… “முகியை நீதான் பார்த்துக்கணும். எந்த சூழ்நிலையிலும் அவனை விட்டுடாதே” என்றதோடு, கண்களில் ஒளி கூட, பிரகாசமான முகத்தோடு… “கண்ணா நிச்சயம் என்னைத்தேடி வருவான். எனக்கு கண்ணாவை எவ்வளவு பிடிக்கும் உனக்குத் தெரியுமில்லையா கயல்” எனக்கேட்டு… “என் கண்ணாவுக்கும் உனக்கும் தான் கல்யாணம் ஆகணும்டா. அதை பார்க்க எனக்கு கொடுத்து வைக்குதான்னு தெரியல. இது என்னோட கடைசி ஆசையா கூட இருக்கலாம்” என்றவரின் கண்ணில் கண்ணீர் இறங்கிட, கயலுக்கு தெரியாது துடைத்துக் கொண்டார்.

இப்போது இதையெல்லாம் ஏன் பேசுகிறார் என்று புரியவில்லை என்றாலும் அவர் மனம் அமைதி கொள்ளும் வகையில் கயல் பதில் பேசினாள்.

இறப்பு கண் முன்னே வந்து நிற்பதை அவரால் உணர முடிந்ததோ!

“முகியை நான் நல்லா பார்த்துப்பேன் ப்பா. கூடவே உங்களையும் அம்மாவையும் நல்லா பார்த்துப்பேன். அத்தை மாமாவை கண்டுபிடிச்சு கண்ணத்தானையும் உங்க முன்னாடி கல்யாணம் பண்ணிப்பேன்.” மகளின் பதிலில் அவளை அணைத்துக்கொண்ட அழகர் உணர்வு குவியலாக மாறி நின்றார்.

“என் கண்ணாவை ஒருமுறை பார்த்துட்டா போதும்டா” என்றவர் தன்னை சீர் செய்து மகளை விலக்கி நிறுத்த, “அக்கா வா” என்று வாயிற்புறமிருந்து முகியின் குரல் கேட்டது. அவளும் தம்பியின் குரல் கேட்டதும் அழகருக்கு கை அசைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அழகர் கயலிடம் பேசிய இறுதி வரி அதுவே. அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் பசுமரத்தாணிபோல் அவளின் நெஞ்சத்தில் பதிந்து போனது.

கண்ணில் துளிர்த்த நீரை துடைத்து விட்டு தூங்க முயற்சித்தவள் மங்கையின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.

“அத்தை என்னாச்சு?”

மங்கையின் பதற்றம் கயலையும் தொற்றிக்கொண்டது.

“உன் மாமா திடீர்னு மயக்கம் போட்டுட்டாரு கயல். என்ன பண்ணறது தெரியல.” கைகளை பிசைந்தவாறு மங்கை.

“வாங்க அத்தை” என்ற கயல் முன்னே செல்ல, கணவரை அப்படி பார்க்க அஞ்சியவராக உள்ளே செல்ல பயந்து மங்கை அறைக்கு வெளியவே நின்றார்.

கயல் தண்ணீர் தெளித்து தேவராஜனிடம் எவ்வித அசைவுமில்லை.

வெளியே வந்த கயலுக்கு உள்ளே சிறு பயம் இருந்தாலும், மங்கையை கருத்தில் கொண்டு தன்னை திடமாகக் காட்டியவளாக மாடிப்படிகளில் ஏறி முகியின் அறைக்கு நேரே நின்றாள்.

கதவை தட்ட கையை உயர்த்தியவள் சற்று யோசித்து தட்டினாள்.

கதவினை திறந்த முகி, கதவுக்கு வெளியே நின்ற கயலை பார்த்து

“என்னக்கா ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மலரும் சத்தம் கேட்டு எதிர் அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

மலர் வருவதை பார்த்த கயலுக்கு ‘இன்னும் தனியாத்தான் இருக்காங்களா?’ என்ற எண்ணம் சிந்தையில் உதித்தாலும் அதனை புறம் தள்ளியவளாக “மாமா மயங்கி கிடக்கிறார் முகி. தண்ணி தெளிச்சு பார்த்துட்டேன் அப்படியே அசைவு இல்லாம இருக்கார். எனக்கு பயமா இருக்குடா?” என்றாள்.

கயலின் பதற்றம் முகிக்கு இல்லை.

உள்ளே சென்றவன் அவசரத்துக்கு உதவுமென்று அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வைத்திருக்கும் தன்னுடைய மெடிக்கல் கிட்டை கொண்டு வந்தவன் விரைந்து தேவராஜனின் அறைக்குள் சென்றான். அவன் பின்னோடு கயல் மற்றும் மலர்.

அவரை பரிசோதித்த முகி… மயக்கம் தெளிவதற்கான மருந்தினை ஊசியின் மூலம் உட்செலுத்தி, “பயப்பட ஒன்னுமில்லை அத்தை பிபி ஷூட்டப் ஆகிருச்சு. அதான் இந்த மயக்கம். இப்போ கண் முழிச்சிடுவார்.” முகி சொல்லும்போதே தேவராஜனிடம் அசைவு. அடுத்த ஐந்து நிமிடங்களில் நன்றாக எழுந்து அமர்ந்தார்.

‘அப்பாவின் கடிதத்தால் தான் மாமாவுக்கு இப்படி ஆகிவிட்டதோ!’ கயலால் அவ்வாறு நினைக்காமல் இருக்க முடியவில்லை.

‘சற்று பொறுத்து கொடுத்திருக்கலாம்.’ இப்போது இவ்வாறு யோசிப்பது தவறென்று அவளுக்கே புரிந்தது.

“என்ன மாமா அத்தையை இப்படி பயமுறுத்திட்டீங்களே!” என்று அவரின் அருகில் வந்த கயல், “எதையும் நினைச்சு குழப்பிக்காதீங்க மாமா. இனியாவது எங்களுக்குன்னு நீங்க வேணும்” என்று முகியையும் தன்னையும் சேர்த்துக்கூறினாள்.

“சாரிடாம்மா… கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” என்றவர், “உங்களை விட்டு போகவே மாட்டேன்” என கயலையும் முகியையும் இரு பக்கம் அணைத்துக் கொண்டார்.

அவர் மனம் முழுக்க அழகர் நிறைந்திருந்தார்.

மலர் சூடாக கருப்பட்டி தேநீர் கொண்டு வந்து கொடுக்க… அந்நேரத்திற்கு அது அவ்வளவு இதமாக இருந்தது அவருக்கு.

“உனக்கு இந்த நேரத்தில் வேலை வைச்சுட்டேன். சாரிம்மா.”

“நீங்களா கேட்டீங்க, நானாதானே போட்டுக்கொண்டு வந்தேன். இதுக்கெல்லாம் சாரி சொல்லுவீங்களா பெரியப்பா” என்ற மலரின் பேச்சு சூழ்நிலையை இயல்பாக்கியது.

மூவரும் தத்தம் அறைக்கு சென்றதும் கணவரின் அருகில் வந்த மங்கை, மௌனமாக அவரின் தோள் சாய்ந்து கொண்டார்.

வார்த்தையால் சொல்லிடாத அவரின் கலக்கம் தேவராஜிற்கு நன்றாகவே புரிந்தது.

இருவரும் எதுவும் பேசிடவில்லை. அந்த கடிதத்தில் என்னயிருந்ததென்று மங்கை கேட்டுக்கொள்ளவில்லை. அது எதுவாக இருந்தாலும், அதில் என்ன இருந்தாலும் தன் கணவர் மனதில் தன் அண்ணன் துரோகம் செய்துவிட்டார் என்ற எண்ணம் முற்றிலும் நீங்கினால் போதுமென்று நினைத்தார்.

“கண்ணாவை வரச்சொல்லி கயலுக்கும் அவனுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் மங்கை.”

‘என்ன திடீரென’ என்று நினைத்தாலும் மங்கை வாய் திறந்து கேட்கவில்லை.

“அழகர் என்கிட்ட கேட்ட ஒரே விஷயம் இதுதான் மங்கை. இதையாவது அவனுக்கு நான் செய்யணும்.” பனித்த கண்களை துடைத்துக் கொண்டார்.

“கண்ணா கயலை விரும்புறாங்க. அதனால் அவன் பக்கம் ஓகேதான். ஆனால், கயலுக்குன்னு ஆசை இருக்குமே! அதை முதலில் கேட்போம். அவளுக்கும் சரின்னா கண்ணாவை சீக்கிரம் வர சொல்லலாம்” என்ற மங்கைக்கு, தங்கள் ஏற்பாடென்றால் நிச்சயம் பார்த்திபன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்றே தோன்றியது.

‘தான் காதலை சொல்லி கயல் தன்னை ஏற்க வேண்டுமென்று இருப்பவன் இதனைக் கேட்டால் என்ன செய்வானோ’ எண்ணிய மங்கை, “காலையில் பேசிக்கலாம் படுங்க” என்று தேவராஜனை உறங்க வைத்தவருக்கு மகனின் பிடிவாதத்தை நினைத்து தூக்கம் தூரப்போயிருந்தது.

மறுநாள் கயலின் வீட்டில் தான் அவ்வூர் மக்களின் விடியல் இருந்தது.

மங்கை, தேவராஜனை பார்த்து நலம் விசாரித்து, அழகரின் இறப்புப்பற்றி பேசி கயலுக்காக வருத்தம் தெரிவித்தென்று பல பேசிச் சென்றனர்.

ரத்தினம் கூட வந்து பார்த்துச் சென்றார்.

“இவர் எப்படி கயல் நல்லவரானாரு?” மங்கைக்கூட வியந்துக் கேட்டார்.

“அதுவொரு பெரிய கதை” என ஆரம்பித்து, ரத்தினம் கயலுக்கு கொடுத்த குடைச்சல் அனைத்தையும் சிவா சொல்லி முடிக்க… கேட்டுக்கொண்டிருந்த மங்கைக்கே மலைப்பாக இருந்தது.

“ஆனால் இவரு நல்லவர் ஆன கதை தான் எனக்கும் தெரியல” என்ற சிவா, “எனக்குத்தெரியாம கயலு அவருக்கு ஏதோ பண்ணியிருக்கு. அதான் ரத்தினம் கயலுக்கு பிரண்ட் ஆகிட்டாரு” என்று சீரியஸான குரலில் சொல்ல “அப்படியா கயல்” என்று முகி கேட்க கயலிடம் புன்னகை மட்டுமே.

அவளின் அந்த புன்னகையே சிவா சொல்லுவதைப்போல் ஏதோ நடந்திருக்கு என்று அனைவராலும் யூகிக்க முடிந்தது.

அன்றைய தினம் ஊர் மக்கள் வருவதும் போவதுமாக நல விசாரிப்பில் கழிந்தது.

இரவு பார்த்திபன் அழைத்திருந்தான்.

மங்கை தேவராஜன் சொல்லியதை சொல்ல… தந்தையிடம், “நானா சொல்லும் வரை திருமணப் பேச்சினையே எடுக்கக்கூடாது, மொத்தத்தில் என்னைப்பற்றிய பேச்சே இருக்கக்கூடாது” என்று அழுத்தமாக சொல்லிவிட்டான்.

அத்தை மகனாக அறிமுகம் ஆவதைவிட, முதலில் கயலின் காதலனாக அறிமுகம் ஆகவேண்டும் என நினைத்தான். அத்தை மகன் என்றால் தன்னை எளிதாக ஏற்றுக் கொள்வாள். அத்தோடு அவளின் மனம் தெரியாமல் போய்விடும் என்று நினைத்தான்.

கயல் யாரென்றே தெரியாது அவள்மீது தான் காதல் கொண்டதைப்போல் கயலும் தன்னை தனக்காக மட்டுமே ஏற்க வேண்டும் என ஆசைக்கொண்டான்.

பார்த்திபனின் ஆசை இப்படியிருக்க… இருவருக்குமிடையே வெடிக்கும் மோதலுக்கு நேரம் காலம் நெருங்கி வந்தது.

பார்த்திபனிடம் பேசிவிட்டு வைக்கும்போது நாளை மீன் பிடிப்பு இருக்கும் விடயத்தை சொல்ல… மங்கை வைத்ததும், பார்த்திபன் முகிக்கு அழைத்திருந்தான்.

“சொல்லுங்க அத்தான்.”

முகி அழைப்பை ஏற்று பேசியதும் பார்த்திபன் நேரடியாக விடயதத்திற்கு வந்தான்.

“நாளைக்கு இன்ஸ்டா லைவ் வருவியா முகி?”

பார்த்திபன் கேட்டதும்… “இன்ஸ்டா லைவ்…” என்று யோசித்த முகி அப்போதுதான் மீன்பிடி நினைவு வந்தவனாக, “ஆமா மாமா” என்றான் ஒருவித உற்சாகக் குரலில்.

“லாஸ்ட் டைம் இன்ஸ்டா லைவ் கமெண்ட்ஸ் பார்த்தியா?”

“இல்லையே அத்தான். போஸ்ட் போடுவதோடு சரி கமெண்ட்ஸ் பார்க்கல்லாம் நேரம் எங்க இருக்கு” என்றான் சலிப்பாக.

“ஹோ… ஓகே. அப்போ கமெண்ட்ஸ் செக் பண்ணிட்டு கால் பண்ணு” என்று வைத்துவிட்டான்.

முகிக்கு பார்த்திபன் சொல்ல வருவது புரியவில்லை என்றாலும், கமெண்ட்ஸ் செக் செய்தான். நல்ல விதமான கருத்துக்கள் பல இருந்தாலும், கயல் பெண் என்பதையும், அவளின் அழகை வைத்தும் பல கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. அவை யாவும் முகிக்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது.

‘இதுநாள் வரை இதையெப்படி கவனிக்காம விட்டோம்’ என்று நெற்றியை நீவிக்கொண்டவன், ‘கயலுக்கு இவையெல்லாம் தெரிந்தால் எவ்வளவு வேதனை படுவாள்’ என்று மிகவும் வருந்தினான்.

பார்த்திபனுக்கு அழைக்கும்போது அவ்வளவு தயக்கம் அவனிடம்.

எடுத்ததும் முகி பார்த்திபனிடம் மன்னிப்பை வேண்டினான்.

“நீ மன்னிப்பு கேட்க வேண்டியது என்னிடமில்லை முகி” என்ற பார்த்திபன், “நாலு பேர் தப்பா பேசுறாங்க அப்டிங்கிறதுக்காக பெண் எதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லுற பெண் அடிமைவாதி நானில்லை. அந்த நாலு பேரும் பேச இடம் கொடுக்காது நம்மளுடைய வளர்ச்சி இருக்கணும். இந்த வீடியோலாம் போட்டுதான் கயல் செய்யறது உலகுக்கு தெரியணும் அவசியமில்லை. இந்த டெக் வசதியெல்லாம் இல்லாமலே சாதிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. கயலோட திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும், முயற்சிக்கும் விளம்பரம் தேவையில்லை முகி. விளம்பரமில்லாமலே அவளோட முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்” என்றான்.

பார்த்திபன் சொல்லுவதிலுள்ள உண்மை முகிக்கு நன்கு புரிந்தது.

“நாளைக்கு நான் இன்ஸ்டா லைவ் போகமாட்டேன் அத்தான்.”

“உன்னோட விருப்பத்துக்கு நான் தடை விதிக்கல முகி. இன்ஸ்டா லைவ் போனாலும், கயல் இல்லாம… அவளுடைய பெயரை மட்டுமே கூட பாப்புலர் ஆக்கலாம்” என்ற பார்த்திபனின் பேச்சு முகிக்கு தெளிவை கொடுத்தது.

“கயல் முகம் தெரியாம பார்த்துக்கிறேன் அத்தான்.”

“தட்ஸ் குட்” என்ற பார்த்திபன், “சாதிப்பது நம் பெயரின் அடையாளத்துக்குத்தான் முகி, முக அடையாளத்திற்கு இல்லை” என்றான்.

மேலும் சிலவற்றை பேசி வைத்த பின்னர், முகிக்கு பார்த்திபனை அதிகமாகப் பிடித்தது.

அடுத்த நாள் மீன்பிடி திருவிழா போல் நடந்தது. கயல், முகி, சிவா, மாணிக்கம், மலர், சரளா என்று அனைவரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

லைவ் சென்ற முகி, கயலின் முயற்சி வெற்றி அடைந்ததை சொல்லி… வயலில் மீன் பிடிக்கும் காட்சியை ஒளிபரப்பு செய்தான். எந்தவொரு காட்சியிலும் கயலின் முகம் தெரியாது பார்த்துக்கொண்டான்.

அன்று கயலை நேர்காணல் செய்த தொலைகாட்சியிலிருந்து இன்றும் வந்திருந்தனர். மீன்பிடிக்கும் காட்சியை செய்தியாக படம்பிடித்து தங்களது சேனலில் ஒளிபரப்பு செய்தனர்.

பல வருடங்களுக்கு பிறகு பார்க்கும் இக்காட்சி, மங்கை மற்றும் தேவராஜனுக்கு ஆச்சரியமாகவும், பூரிப்பாகவும் இருந்தது.

சுற்றி இருக்கும் கிராமங்களிலிருந்து வந்து மீன் வாங்கிச் சென்றனர். மீன் பிடிப்பு கிட்டத்தட்ட ஆறு நாட்கள் நடைபெற்றன. சந்தைக்கு செல்லாமலே அன்றைய தினம் பிடிக்கும் மீன் முழுவதுமாக விற்பனை ஆகியது. செயற்கை உணவுகளின்றி வளர்ந்த மீன்கள் என்பதால் மக்கள் நேரடியாகவே வந்து வாங்கிச் சென்றனர்.

கூடையில் மீன்களை கயல் அள்ளிக்கொட்டுவதை படம் பிடித்து மகனுக்கு அனுப்பி வைத்தார் மங்கை.

புகைப்படத்தை பார்த்ததும், ‘அய்யோ இவள் இந்த வேலையை விடமாட்டா(ள்) போலிருக்கே’ என்று ஆயசமாக உணர்ந்தான் பார்த்திபன்.

பார்த்திபனுக்கு கயலை எந்தளவிற்கு பிடித்திருக்கிறதோ அதே அளவிற்கு அவள் செய்யும் விவசாயம் பிடிக்கவில்லை.

“லவ் சொல்லிட்டு அப்புறம் இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்” என்று சொல்லிக்கொண்டவன் தன் வேலைகளில் மூழ்கிப்போனான்.

நாட்கள் விரைவாகக் கடந்தன…

கயல் தன்னுடைய அத்தை மாமாவுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டாள். அவர்களாலும் கயலின்றி இருக்க முடியாதென்று ஆகிவிட்டது. இதனால் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு பார்த்திபன் அழைத்தும் கயலை விட்டு தங்களால் வர முடியாதென இருவருமே சிங்கப்பூர் செல்லவில்லை.

இவர்கள் ஒரு பக்கம் நெருக்கமாக முகியும், பார்த்திபனும் மற்றொரு பக்கம் மிகவும் நெருக்கமாகிவிட்டனர்.

எதுவாயிருந்தாலும் முகி பார்த்திபனிடம் கேட்டுச் செய்யும் நிலைக்கு அவர்களது நெருக்கம் இருந்தது.

இதில் பார்த்திபன் முகியிடம் மறைத்தது தன்னுடைய முகத்தை மட்டுமே! முகி எத்தனையோ முறை புகைப்படம் கேட்டும் நேரில் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டான்.

அத்தோடு அழகரின் வழியாக எல்லோரும் பார்த்திபனை கண்ணா என்றே விளிப்பதால் அவனின் பெயர் கண்ணனாக இருக்குமென்று முகியும், கயலும் அனுமானித்துக் கொண்டனரேத் தவிர, அது செல்லப்பெயராக இருக்கும்… அவனுக்கென்று ஒரு பெயர் இருக்கும் என்பதை யாரிடமும் கேட்கவில்லை என்பதை விட கேட்க வேண்டுமென்று நினைக்கவில்லை. அவர்களுக்கும் கண்ணாவாகவே இருந்துவிட்டான்.

முகியுடன் தினமும் அலைபேசியில் பேசும் பார்த்திபன், இதுநாள்வரை ஒருமுறை கூட கயலிடம் பேச முயற்சித்தது இல்லை. அவளாக அழைத்திட மாட்டாளா என்று தினமும் எண்ணுபவனுக்கு தானாக அழைத்திட மனம் வரவில்லை.

காதலை சொல்லி அவள் ஏற்ற பிறகே எல்லாம் என்று இருக்கின்றானோ?

ஹோட்டல் திறப்பு விழா முடிந்ததும் பார்த்திபன் இந்தியா வராமலிருப்பதை மங்கை கேட்டிட, “ஹோட்டலின் தலைமையகத்தை சென்னைக்கு மாற்ற முயற்சி செய்துட்டிருக்கேன். முடிந்ததும் மொத்தமா அங்குதான்” என்று பேச்சினை முடித்துவிட்டான்.

வேலை வேலை என்று ஓடினாலும் கயலின் நினைவின்றி பார்த்திபனால் அந்நாளை கடக்க முடியவில்லை. ஆதலால் கயலை பார்த்த பின்னர், அவளைவிட்டு மீண்டும் பிரிந்திருப்பது முடியாத காரியமென்று நினைத்தே தி வாரியரின் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு மாற்றுவதற்கு வேலைகள் செய்து கொண்டிருக்கிறான்.

இதில் அவனுடைய மென்பொருள் நிறுவனம் வேறு உள்ளது. எப்படியும் இரண்டையும் அலைச்சலின்றி அவனால் செய்ய முடியாது அதனாலேயே இந்த ஏற்பாடு. மேலும் சென்னையில் உள்ள மென்பொருள் கிளையை இன்னும் வளர்ச்சி அடைய வைத்த பிறகே, அதனை தலைமையாக மாற்றி சிங்கப்பூரில் உள்ளதை கிளையாக மாற்ற முடியும். அதுவரை ஏற்படும் அதீத அலைச்சலை தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு.

இந்த வேலை அவ்வளவு எளிதாக இல்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓடியிருந்தன.

*******
இதோடு முதல் பாகம் முடிந்தது.

error: Content is protected !!
Scroll to Top