பார்த்திபனின் கயல்விழியாள் 28

பாகம் 2.

❤️நெஞ்சை பூப்போல் கொய்தவன்(ள்)💐

அத்தியாயம் 🌾 28 :

அரங்கம் முழுவதும் பலத்தொழில் பிரபலங்களால் நிரம்பி வழிந்தது.

தொழிலில் தங்களுக்கென்று தனி முத்திரை பதித்தவர்கள்… வளர்ந்த மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும்… மூத்த தொழிலதிபர்கள் முதல் இளம் தொழிலதிபர்கள் வரை அங்கு கூடியிருந்தனர்.

ஒவ்வொரு வருடமும் தொழில் செய்பவரை ஊக்குவிக்கும் வகையில் பல துறைகளை தொழில் என்ற முறையில் ஒன்றுபடுத்தி நம் நாட்டின் அரசால் இவ்விருதுகள் அந்தந்த துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

அனைத்து துறைகளிலும் அந்த வருடத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது கொடுப்பது முடிவடைய… இறுதியாக ஒட்டு மொத்த துறைகளிலுமிருந்து இளஞர்களை ஊக்குவிக்கும் வகையில் யூத் ஐகான் விருது வழங்குவது வழக்கம்.

அவ்விருது மட்டுமே எஞ்சியிருக்க…

நிகழ்ச்சி தொகுப்பாளர் கூட்டத்தை பார்த்து ஒலிவாங்கியில் பேச ஆரம்பித்தார்.

“இம்முறையும் உங்களுக்குத்தான் சார்.”

ஏற்கனவே தன்னுடைய தொழிலில் சிறந்து விளங்கியதற்கான விருதினை தொடர்ந்து மூன்று முறை பெற்றவன்… கடந்த ஆண்டு யூத் ஐகான் விருதையும் சேர்த்தே வாங்கியிருந்தான்.

இம்முறையும் ஹோட்டல் தொழிலுக்கான சிறந்த விருதுக்கான பதக்கத்தை வாங்கிக்கொண்டு தனக்குரிய இடத்தில் சற்றே திமிருடன் தன் உயரத்திற்கு நிமிர்ந்து அமர்ந்திருந்தவனின் கவனம் தன்னிடம் பேசிய டெல்லிடம் இல்லை.

இளம் மஞ்சள் வண்ணத்தில் அதற்கேற்ற வெளிர் பச்சையில் முழுக்கை சட்டையில் புடவை அணிந்து, கழுத்தில் மெல்லிய சங்கிலி, வலது கையில் ரிஸ்ட் வாட்ச், காதில் ஒற்றை முத்து தோடு, நெற்றியில் அளவான அரக்கு நிற பொட்டிட்டு, எவ்வித செயற்கை ஒப்பனையுமின்றி ஒரு நிமிர்வுடன் அமர்ந்திருந்த அவளின் மீதே அவனின் பார்வை நிலைத்திருந்தது.

அவளின் விழியில் விழுந்தவன் எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தான். விரும்பியே அவ்விழிகளில் சிக்கிக்கொள்ளத் துடித்தான். தனது இதயம் வெளியே எம்பி குதித்து அவளின் பின்னால் ஓடுவதை அவனால் உணர முடிந்தது.

கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக அவளை அவனுக்குத் தெரியும். பார்த்த முதல் நொடி முதல் அவனின் நெஞ்சத்தில் குடி கொண்டு காதல் கொண்டவனை காதலால் வஞ்சித்துக் கொண்டிருக்கிறாள்.

காதல் சொல்லிட ஒரு நிமிடம் போதும் அவனுக்கு. ஆனால் அவளின் பதில் என்னவாக இருக்கும்? மறுப்பாக இருந்து விட்டால்? நிச்சயம் அதனை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

அவளுக்காகவே தன் தொழில் சாம்ராஜ்யத்தை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மாற்றிக்கொண்டு வந்தவன் இன்னும் தன்னை அவளிடம் அடையாளபடுத்திக் கொள்ளாமல் இருக்கின்றான்.

அவன் நினைத்ததை முடிக்க நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட, பார்த்திபன் இந்தியா வருவதற்கு அடுத்த நாள் அந்த வருடத்திற்கான விருது வழங்கப்படுகிறதென விருது வழங்கும் இந்திய கமிட்டியிடமிருந்து அவனுக்கு அழைப்பிதழ் சென்றது.

சரியாக அந்நேரம் டெல், விருது பெறுவோர் பெயர் பட்டியலில் கயல் பெயரும் இருப்பதை தெரிவிக்க, அது கயல்விழி தானா என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பார்த்திபன், தங்களின் சந்திப்பையும் அந்நாளிற்கு ஒத்தி வைத்தான்.

அவர்களின் காதல் ஆட்டம் சூடு பிடிக்க… விதியும் அந்நாளை எதிர்நோக்கியது.

திகட்ட திகட்ட காதலை கொட்டிக்காட்டிட வேண்டுமென்று இருப்பவன், அவளுக்கு எதிராக நிற்கப் போகின்றான். காதல் களத்தில் கொஞ்சும் பறவைகளாக சிறகு விரித்து பறக்க வேண்டிய பறவைகள், விவசாயத்தை யுத்த களமாக்கி ஆடவிருக்கின்றனர்.

அனைத்து துறைகளுக்கான விருது வழங்கி முடித்து இறுதியில் எஞ்சி இருந்தது அந்த வருடத்திற்கான யூத் ஐ கான் விருது. அது யாரென்று பார்ப்பதற்கே அத்தனை பேரும் ஆர்வமாகக் காத்திருந்தனர்.

“இந்தமுறையும் நீங்க தான் பாஸ்.” டெல் சொல்லியதற்கு பார்த்திபனிடத்தில் மர்மமான புன்னகை. அந்த புன்னகைக்கு அர்த்தம் அவன் மட்டுமே அறிந்தது.

“யூத் ஐகான் ஆஃப் திஸ் இயர் கோஸ் டூ, ஒரு பெண்ணாக இருந்து, நம் பழங்கால முறையில் விவசாயத்தில் மறந்து போன ஒன்றை முயற்சித்து விவசாயத்தில் புதுமை செய்து வெற்றி அடைந்த மிஸ்.கயல்விழி. அவங்களை வயல்விழி என்று சொல்வதே சரியாக இருக்கும், அவங்க விவசாயத்தில் கால் வைக்கும் போது 19 வயது மட்டுமே” என்று கூறி சிறு அறிமுகம் கொடுத்த தொகுப்பாளினி கயலினை மேடைக்கு அழைத்ததோடு, “கடந்த ஆண்டு இதே விருதினை பெற்ற தி வாரியர் எம்.டி மிஸ்டர்.பார்த்திபனை ஸ்டேஜிற்கு வருமாறு அழைக்கின்றேன்” என்றார்.

‘கயல்விழி… ஏற்ற பெயர் தான். என்னா கண்ணுடா. ஓ காட் இட் ட்ரைவ்ஸ் மீ கிரேஸி.’ தனக்குள் சொல்லிக்கொண்டவன் மேடையின் மையத்தில் நின்றிருந்தவளை பார்த்தவாறே ஒவ்வொரு படிகளாக மேலேறினான்.

கயல்விழியை புதிதாக பார்ப்பதைப்போல் அத்தனை ரசனையாகப் பார்த்தான். அவனின் காதல் மயக்கத்தை ரேபான் அழகாக மறைத்தது.

அவளின் அருகில் வந்தவன், ஹாய் சொல்லி கை குலுக்குவதற்கு கரம் நீட்டிட, அவளோ இரு கரம் குவித்து வணக்கம் வைத்தாள். அதில் சற்று எரிச்சல் அடைந்தான் பார்த்திபன்.

‘உன்னைத்தொட எனக்கு உரிமையில்லையா?’ மனதில் மட்டுமே கேட்க முடிந்தது.

தொகுப்பாளினி கண் காட்டிட மற்றொரு பெண் விருதினை ஒரு தட்டில் கொண்டு வந்து பார்த்திபனிடம் கொடுத்தாள்.

“யூத் ஐகான் ஆஃப் திஸ் இயர். கங்கிராட்ஸ்” என்று சொல்லியவன் பதக்கத்தினை அவளின் கழுத்தில் அணிவிக்க போக சற்று தள்ளி நகர்ந்து யாருக்கும் அறியாத வகையில் தவிர்த்து கையில் வாங்கிக்கொண்டாள்.

அவளின் செயல் சற்று நேரத்திற்கு முன் அவளின் பின்னால் சென்ற மனதை கட்டுப்படுத்தி அவ்விடத்தை கோபம் பிடித்துக் கொண்டது. காதல் மலையளவு இருந்தபோதும், விவசாயம் அவள் தொழில் என்பதில் பிடித்தமில்லாமல் இருப்பவன் சற்று முன் அவள் செயலால் எழுந்த கோபத்தை அதற்கும் சேர்த்து தன் வார்த்தையில் காட்டினான்.

“திமிர் தான். சேற்றில் ஒன்றிரண்டு செடியை நட்டு வைப்பதெல்லாம் சாதனையாகத் தெரிந்தால் இந்த திமிர் வரத்தான் செய்யும்.” அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் பற்களை கடித்துக்கொண்டு கூறியவன்… விருதுக்கான சுற்றப்பட்ட படிவத்தை அவளின் கையில் கொடுத்துவிட்டு கூட்டத்தை பார்த்து புன்னகைத்தவாறு வேகமாக கீழிறங்கிவிட்டான்.

செல்பவனிடம் ஒலிவாங்கியை கொடுத்து பேச சொன்ன போதிலும் அதனை தவிர்த்தவனாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தவனின் கோபம் மட்டும் குறையாது பல்கிப்பெருகியது.

“பாஸ் மேடமுக்கு தான் இந்த அவார்டுன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” டெல்லின் கேள்விக்கு பதில் அளிக்காது,

மேசையில் குத்தியவன்…

“இது எப்போ முடியும் டெல். இட்ஸ் இரிடேட்டிங்” என்று முணுமுணுத்தான்.

“இட்ஸ் கோயிங் டூ எண்ட் பாஸ்…”

கயல்விழி மேடையிலிருந்து கீழிறங்கிட, முகி ஓடிச்சென்று தன் தமக்கையினை அணைத்து மகிழ்வை வெளிப்படுத்தினான்.

அப்போதுதான் முகியும் கயலுடன் வந்திருப்பதே பார்த்திபனுக்கு கருத்தில் பதிந்தது.

‘இவளை நினைச்சா சுற்றி என்ன நடக்குது, யார் இருக்கான்னு கூட தெரியமாட்டேங்குது.’ நெற்றியை நீவிக்கொண்டான்.

சற்று நேரத்தில் விழா முடிய அரங்கிலிருந்து வெளியேறினான் பார்த்திபன்.

டெல் காரினை கொண்டு வந்து அவன்முன் நிறுத்த…

“ஹலோ மிஸ்டர்…”

காரில் ஏறப்போனவனை கயலின் குரல் தடை செய்தது.

யாரென்று திரும்பிப் பார்த்தவன் கயலென்றதும் ஒற்றைக்கால் மடக்கி காரில் சாய்ந்து தோரணையாக நின்றான்.

“நீங்க ஹோட்டல் பிஸ்னெஸ் தானே பண்றீங்க?” தெரியாததைப்போல் வினவினாள்.

“அதான் தெரிந்திருக்கே!” அடுத்து அவள் என்ன பேசப்போகிறாள் என்பதை யூகித்தவனாக பதில் அளித்தான்.

“நாங்க இல்லைன்னா நீங்கன்னு இல்லை யாருமே தொழில் பண்ண முடியாது. தெரியும்ல. அப்புறம் இந்த ஹோட்டல் பிஸ்னெசில் அவார்டெல்லாம் வாங்க முடியாது.

அதுமட்டுமில்லாம உங்க ஓட்டலில் சாப்பாடு செய்து நீங்க சம்பாதிக்கவே, நாங்க சேற்றில் நீங்க சொன்ன நாலு செடியை நட்டு வைத்தால் தான் முடியும். எல்லோரையும் வாழ வைப்பதே நாங்க தான். அப்போ எனக்கு திமிர் இருக்கத்தானே செய்யும்” என்றாள்.

கயலுக்கு அவன் தனக்கு திமிர் என்று சொல்லியதில் எவ்வித வருத்தமோ கோபமோ இல்லை. ஆனால் விவசாயத்தை தாழ்த்தி சொல்லியதே அவளின் கோபத்திற்கான காரணம்.

மேற்கொண்டு அவனை பார்க்க பிடிக்காது திரும்பி நடக்க இப்போது அவளின் நடையை தடை செய்வது அவனின் முறையாயிற்று.

“ஓய் ராங்கி…”

“யாருடா ராங்கி…” அவன் ராங்கி என்று அழைத்ததும் வேகமாக அவனுக்கு அருகில் வந்தவள் உறுத்து விழித்து வினவி மூச்சினை இழுத்து வெளியேற்றினாள்.

“ஹோட்டலில் சாப்பாடு மட்டும் நாங்க செய்றது இல்லை. இட்ஸ் செவன் ஸ்டார்ஸ் ஹோட்டல். அங்கு என்னென்ன இருக்குன்னு தெரியுமா?” நக்கல் குரலில் வினவினான்.

“சாப்பாடு போடாம வெறும் பாஷ் என்றளவில் பெரிய பெரிய அறைகளில் எல்லா வசதிகளுடன் சூட் மட்டும் இருந்து என்ன பயன் மிஸ்டர்.” உனக்கு சற்றும் சலைத்தவள் நானில்லை எனும் விதமாக கயலின் பேச்சு இருந்தது.

“அச்சோ கயல் என்னதிது. வா போகலாம்.” பார்த்திபனை பற்றி பத்திரிக்கைகளிலும், மேகசினிலும் படித்து தெரிந்து வைத்திருந்த முகி அவனின் உயரம் கண்டு அஞ்சியவனாக கயலை அப்புறப்படுத்த முயற்சித்தான்.

ஆனால் அவள் விலக பார்த்திபன் அனுமதிக்க வேண்டுமே. வேண்டுமென்றே அவளை சீண்டினான். இருவருக்குமிடையேயான இந்த விளையாட்டு பார்த்திபனுக்கு அத்தனை பிடித்தது.

காதலை சொல்ல தவித்துக் கொண்டிருப்பவன், அதனை விடுத்து அவளுடன் விளையாடிப்பார்க்க முடிவு செய்து விட்டான். அவனின் மனம் நண்பனாக டெல்லிற்கு தெள்ளென விளங்கிட, புன்னகையோடு வேடிக்கை பார்த்திருந்தான்.

“இப்போ எல்லாம் ஃபார்ம்ஸ் அண்ட் ஃபார்மர்ஸ் பற்றி மூச்சு முட்ட பேசுறது ட்ரெண்ட் ஆகிடுச்சு.” அவளை நேரடியாகவே சீண்டி நக்கல் செய்தான்.

“என்னவோ உங்களால் மட்டும் தான் உலகம் இயங்குதுன்னு நினைப்பு.”

“இல்லைன்னு சொல்லுவீங்களா?” மார்பிற்கு குறுக்கே கைகளைக்கட்டி அடி கண்ணால் அவனை முறைத்தபடி வினவினாள்.

‘அடங்கமாட்டாள் போலிருக்கே!’

“சும்மா நாலு காயை வெட்டிபோட்டு தண்ணியில் கொதிக்க வைக்குற வேலையில்லை. அந்த காயே நாங்க உருவாக்கினால் தான் உங்களுக்கு வேலை.”

“ஹாஹாஹா…” அடக்கமாட்டாமல் சிரித்தவன், “என்னவோ நீயொருத்தி தான் விவசாயம் பண்ணுற மாதிரி பேசுற… நீயில்லன்னா எங்களால் அதை செய்ய முடியாதா?”

“செய்ய முடியுங்கிறீங்களா?”

“ஏன் முடியாதா?”

“அப்போ செய்து காட்டுங்க!” சவால் விடும் தொணி அவளிடம்.

இருவரும் வெகுநேரம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை போலிருக்க விழாவிற்கு வந்திருந்த மொத்த மீடியாவும் அவர்களை சூழ்ந்து கொண்டது.

சுவாரஸ்யமான செய்தி கிட்டினால் சும்மா விட்டு விடுவார்களா என்ன?

“அச்சோ கயல் சும்மா இரு. அவரோட உயரம் தெரியாம பேசாத.” பார்த்திபன் கோபத்தில் கயலை பழிவாங்க என்று ஏதேனும் செய்து விடுவானோ என முகி பயந்தான். அத்தோடு மீடியா வேறு இல்லாததை கதை கட்டி விடுவார்களே, அதற்கு காரணம் பார்த்திபனின் உயரம் அவன் அறிந்ததால்.

இரண்டு மாதங்களுக்கு முன் வந்திருந்த வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றில் பார்த்திபனை பற்றி அவ்வளவு விரிவாக எழுதியிருந்தனர். அதில் தன்னை எதிர்த்த லூங், வில், நியோ ஆகியோருக்கு எதிராக நடந்த நிகழ்வுகளுக்கு பார்த்திபன் தான் காரணமாக இருப்பான் என்று மறைமுகமாக எழுதியிருந்தனர்.

ஒரு பிஸ்னெஸ்மேனாக அந்த கட்டுரையின் வாயிலாக பார்த்திபன் முகியை கவர்ந்திருந்தாலும், அவனின் அதிரடி முகிக்கு அச்சத்தையே கொடுத்தது. பெரிய இடங்களில் இதெல்லாம் சாதாரணம் என்று அதனை ஒதுக்கியவனுக்கு… தன் தமக்கை பார்த்திபனிடம் நேரடியாக மோதுவது அச்சத்தைத்தானே கொடுக்கும்.

அதனாலே பார்த்திபனிடம்,

“சாரி சார். அவள் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசிட்டு இருக்காள்” என்று மன்னிப்பு கூறியவன் அவர்களுக்கிடையேயான பேச்சினை முடித்து வைக்க பேசினான்.

ஆனால் எதிலும் முடிவு என்பதை பார்த்திபன் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.

‘உன் அக்காவை இவ்வளவு ப்ரொடெக்ட் பண்றியா நீ.’ கயல் மீதான முகியின் அக்கறை பார்த்திபனுக்கு முகியை இன்னும் பிடிக்கச் செய்தது.

அதனால்,

“இட்ஸ் ஓகே. உங்களுக்காக விடுறேன்” என்று பார்த்திபன் அங்கிருந்து நகர,

“விவசாயம் பண்ண சொன்னதும் பயம் போல…” இப்போது கயல் பிடிவாதமாக அவனிடம் வம்பு செய்தாள்.

கயல் சொல்லியது பார்த்திபனின் ஈகோவை அசைத்து பார்த்தது.

“எல்லாத்தையும் போல் விவசாயமும் ஒரு தொழில் தானே! அது மட்டும் என்ன ஸ்பெஷல்” என்ற பார்த்திபன், “சாரி முகிலன் உங்க அக்கா என்னை வாண்ட்டடா சீண்டுற மாதிரி இருக்கு. சோ, நான் விடுவதா இல்லை” என்றான்.

முகிக்கு எங்கேயாவது முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

“விவசாயம் மட்டுமென்ன ஸ்பெஷல்” என்ற பார்த்திபனின் வார்த்தைகள் விவசாயத்தையே மூச்சாகக் கொண்ட கயலின் உணர்வை தூண்டியது.

“பயிர் செய்து அறுவடை முடியும் போது மனதிற்குள் வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அது வேறெந்த தொழில் செய்தாலும் கிட்டாது. பல பேருடைய பசியை நான் தீர்த்து வைக்கிறேன் அப்படிங்கிற நிறைவு தரும் சந்தோஷம் அது.” அப்படியொரு கோப முகத்துடன், அழுத்தமாகக் கூறினாள்.

அவள் முகத்தில் வந்துபோன கலவையான உணர்வுகளையே அவதானித்தபடி இருந்தவனிடம்…

“என்ன சார் செயலில் இறங்க சொல்லியதும் பயமா இருக்கா?” மீண்டும் பயம் என்பதை சொல்லியே அவனின் ஈகோவை தட்டி எழுப்பினாள்.

‘யாருக்கு பயம்?’ அவளின் சிறுப்பிள்ளைத்தனமான கேள்வியில் தனக்குள் சிரித்துக்கொண்டவன்,

“நீங்க சொல்லும் சந்தோஷம் என்னவென்று நானும் தெரிந்துக்கொள்கிறேன்” என பதில் வழங்கினான்.

“அப்போ கயலின் சவாலை நீங்க அக்செப்ட் பண்றீங்களா மிஸ்டர்.பார்த்திபன்?” மைக்கினை அவன் முன்னால் நீட்டியபடி ஒருவர் கேட்க, கயலை அழுத்தமாகப் பார்த்தபடியே ஆமென்று தலையசைத்தான்.

“இது கம்ப்யூட்டர் முன்னாடி ஏசி காற்றில் உட்கார்ந்து உங்க ஹோட்டல் கணக்கு வழக்கு பார்க்கிற வேலையில்லை.” சற்று அழுத்தமாகவேக் கூறினாள்.

“வுமன் உன்னாலே செய்ய முடியுதே என்னால் கண்டிப்பா முடியும்?” தானொரு ஆண் என்கிற மிதப்பு அவனிடம். அது சற்று முன் கயல் தூண்டிவிட்ட அவனின் ஈகோவின் பிரதிபலிப்பு. அந்த நொடி அவளின் மீது அவன் வைத்திருக்கும் காதலெல்லாம் எங்கோ சென்றிருந்தது.

“சவாலென்று வந்துட்டால் ஆண் பெண் பேதமில்லை சார்.”

“இதை சவால்ன்னா சொல்ற?”

“ஆமா சார். அப்போதானே பாதியில் ஓடாம இருப்பீங்க.” அவளின் உதடு கேலியாக வளைந்ததோ.

“எதிலும் பின்வாங்குவது எனக்கு பிடிக்காது. எதையும் செய்து பார்த்திடும் கட்ஸ் என்கிட்ட இருக்கு.”

“அப்போ எங்க ஊரில் பார்க்கலாம் சார்.”

“உங்க ஊர் எதுக்கு?”

“என்ன சார் சவால் அதற்குள் மறந்துப்போச்சா? நீங்க பாட்டுக்கு விவசாயம் பண்ணுறேன்னு சொல்லிட்டு உங்க ஊரில் போய் உட்கார்ந்துட்டு… வேற யாரோ பண்ணத நான்தான் செய்தேன்னு சொல்லிட்டா! அதற்குத்தான். எங்க ஊருக்கு வந்து என் வயலிலே விவசாயம் செய்து காட்டுங்க!.” அவளின் அறிவில் ஒரு மெச்சுதல் அவனிடம்.

“சரி அப்படி நான் விவசாயம் செய்து காட்டிட்டா?” அவன் கேள்வியாய் இழுத்தான்.

“உங்களால் செய்ய முடியாமல் போகும்போது விவசாயத்தின் மீது உங்களுக்குள் தானாக ஒரு மதிப்பு வரும். அது போதும் எனக்கு.” நிச்சயம் அவனால் முடியாதென்று எண்ணினாள் பாவை.

“நான் ஜெயிச்சிட்டா?” மீண்டும் தன் கேள்வியிலே நின்றான்.

“நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்.”

அவளின் பதிலில் அவனிடம் விஷம சிரிப்பு.

அவன் அவளையே அல்லவா கேட்க ஆசை கொண்டுள்ளான்.

“அப்புறம் பேச்சு மாறமாட்டீங்களே!” விஷமச்சிரிப்பு அவனிடம்.

“நிச்சயமா” என்ற கயல் அங்கு சூழ்ந்திருந்தவர்களை கடந்து முன் செல்ல, பார்த்திபனையே கெஞ்சும் பார்வை பார்த்தபடி முகி கயலின் பின் சென்றான்.

அன்று முழுக்க அங்கு நடைபெற்ற விருது விழாவினை விட, கயல் மற்றும் பார்த்திபனின் விவாதம் மற்றும் சவால் பேச்சு தான் மீடியாக்களில் ஊர்வலம் வந்தன. அன்று அவர்களுக்கு இரை இவர்கள் இருவரும் தான்.

டிவியில் இதனை பார்த்த மங்கை மற்றும் தேவராஜன் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டனர்.

அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து பார்த்திருந்த மலர்,

“அவருக்கு நல்லா வேணும். நம்ம கயல் அக்காக்கிட்ட சவாலா! நிச்சயம் இங்கு வந்து ஓடத்தான் போகிறார்” என்று தன்னைப்போல் பேச,

“நீ வேற சும்மா இரு மலர்” என்று மங்கை கத்தியே விட்டார்.

error: Content is protected !!
Scroll to Top