அத்தியாயம் 🌾 29 :
“பாஸ் நிஜமாவே விவசாயம் செய்யப்போறீங்களா?”
டெல் அதிர்ந்த நிலையில் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
“அதையும் ஒரு கை பார்த்திடலாம் டெல்.”
அந்நேரம் நியோ சொன்ன வார்த்தைகள் தான் பார்த்திபனுக்கு நினைவிற்கு வந்தது.
“ரொம்ப ஆடாத பார்த்திபன். உன்னை அடக்கவும் ஒரு ஆள் வருவாங்க. வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு” இதழ் நெலியாது சிரித்துக் கொண்டான்.
‘பார்த்த முதல் நாளே அவ பேச்சுக்கு தலையாட்ட வச்சிட்டாளே!’ மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், வெளியே “இண்ட்ரெஸ்டிங்” என்று சொல்ல டெல் அவனை பார்த்து மீண்டும் அதையே கேட்டான்.
“இப்போ உனக்கு என்னடா பிராப்ளம்?” சட்டென்று கோபத்திற்கு தாவிவிட்டான் பார்த்திபன்.
“எனக்கு ஒண்ணுமில்லைடா. ஒரு கன்பெர்மேஷன் அவ்வளவுதான்” என்று சொல்லி திரும்பிக்கொண்ட டெல்லிற்கு பார்த்திபனை குறித்து எதையும் கணிக்க முடியவில்லை.
விழா நடந்த அரங்கிற்கு வெளியே அவனுக்கும் கயலுக்கும் நடந்த பேச்சினையே டெல் அசைபோட்டபடி இருக்க…
“ஃபார்ம்ஸ் பற்றி டாப் மோஸ்ட் பாட்டனிஸ்ட் எழுதிய புக்ஸ் எல்லாம் வேணும்” என்றான் பார்த்திபன்.
“எதே.” அத்தனை அதிர்வாக பார்த்தான் டெல்.
‘இதெல்லாம் படித்து செய்வதில்லை என்று அவனுக்கு யார் புரிய வைப்பது.’ டெல்லால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை. உள்ளே புலம்ப மட்டுமே முடிந்தது.
“மச்சான் அப்போ இதுக்குத்தான் சென்னையிலே செட்டில் ஆனியா?”
எதற்காக இந்த இடமாற்றம் என்று தெரியாது, அவனிடம் நேரடியாக கேட்கவும் முடியாது காரணம் அறியாது இருந்த டெல் இப்போது கேட்டேயிருந்தான்.
“இதுக்காகன்னு சொல்ல முடியாது. பிகாஸ் இது நானே எதிர்பார்க்காதது. பட் நான் வந்தது அவளுக்காகத்தான்” என்ற பார்த்திபனின் குரலில் அத்தனை காதல்.
“வெட் ஃப்ளோரில் கால் வைக்கவே அவ்வளவு யோசிப்ப… நீயெப்படிடா ஃபார்ம்லாம் மெயின்டெயின் பண்ணுவ?”
டெல் கேட்ட அதே கேள்வியை தான் பார்த்திபனும் பலதடவை தனக்குள்ளே கேட்டபடி இருக்கின்றான். ஆனால் பின்வாங்கிட முடியாதே. எப்போதும் முன் சென்றே பழகியவன், பிடித்தமில்லாதது என்ற ஒன்றிற்காக பின் சென்றிட முடியாதென உறுதியாக நினைத்து, கயலிடம் விட்ட சவாலில் ஜெயித்துவிட வேண்டுமென முடிவு செய்துவிட்டான். இனி அவனின் முடிவை அவனே மாற்றிக்கொள்ள மாட்டான்.
கயலை மாற்ற நினைத்தவன் அவளுக்காக தான் முற்றிலும் மாறிவிடுவோம் என்று தெரிந்தே சொல்லிய வார்த்தையை காப்பாற்ற தீர்மானித்துவிட்டான்.
“பார்த்துக்கலாம் விடுடா. பழகிக்கலாம்.”
“என்னது பழகிக்கலாமா? என்னவோ சூப் சாப்பிட போலாங்குற மாதிரி கூலா சொல்லுற.”
டெல்லிடமிருக்கும் தயக்கம் பயமெல்லாம் பார்த்திபனிடம் இல்லை.
‘இறங்கியாச்சு மேல ஏறித்தான் ஆகணும்’ என்று நினைத்துக்கொண்டான்.
“நான் வரவரை நீதான் எல்லாம் பார்த்துக்கணும். இப்போ இருக்க சூழலில் அப்பாவையும் ஹோட்டலில் உட்கார வைக்க முடியாது. டெக் பார்க்கை லிண்டாவிடம் பார்த்துக்க சொல்லிட்டு, நீ ஹோட்டல்ஸ் மேனேஜ் பண்ணிக்கோ. டெய்லி ரிப்போர்ட்ஸ் எனக்கு மெயில் பண்ணிடு. நான் இல்லைங்கிறதே அங்கு யாருக்கும் தெரியக்கூடாது” என்றான்.
டெல்லிற்கு தலையை அசைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
“ஹோட்டல் ஹெட் ஆபீஸ் இப்போ சென்னையில் தானே பார்த்தி இருக்கு. அங்கிள் இங்கு பார்த்துகிட்டால் அங்கு சிங்கப்பூரில் நான் மேனேஜ் பண்ணிப்பேன்.” டெல்லிற்கு பார்த்திபன் முடித்துவிட்டு வருவரை அலைய வேண்டுமா என்று ஆயசமாக இருக்க, அதற்கு எளிதாக ஒரு வழியை கண்டுகொண்டவனாகக் கூறிட அவனை பார்வையாலேயே எரித்தான்.
“இதுக்கெதுக்கடா பாசமா பார்க்குற?” பயமிருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் வினவினான்.
“டாட் இப்போ கயல் வீட்டிலிருக்கிறார்.”
“ஒய்?”
“அவர் வைஃப் வீட்டில் அவர் இருக்கார்.”
“???”
“கயல் என் மாமா பொண்ணு.”
“வாட்.” டெல்லிடம் உச்சபட்ச அதிர்ச்சி.
“எஸ்… ஷீ இஸ் மை மாமா பொண்ணு டா.”
“என்னடா சொல்லுற?”
பார்த்திபன் எல்லாவற்றையும் சொல்லிட, டெல் வெளிப்படையாகவே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
“அதான், இப்போ அப்பா வாரியர் பார்த்துக்க வந்தால் அவளுக்கு டவுட் வராது?”
“டேய் பார்த்தி… அவள் உன் மாமா பொண்ணுடா. எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. நீ லவ் சொல்லாமலே அவளை கட்டிக்கலாம். அப்படியிருந்தும் லவ் சொல்லி கயல் அக்செப்ட் பண்ணனும் சொல்லுறது கூட ஏதோவொரு வகையில் ஏத்துக்கலாம். ஆனால் இந்த சவால்… இது கொஞ்சம் ஓவரா இருக்குடா. லவ் பண்ணுற பொண்ணை எப்படிடா போட்டியா பார்க்க முடியும்?” தனக்கு தோன்றியதை எல்லாம் சொல்லி இந்த சவாலெல்லாம் வேண்டாம் என்று டெல் பேசினான்.
“ஐ க்னோவ் டெல். ஐ லவ் ஹெர். அதனால் தான் அவள் சவலான்னு கேட்கும்போது மறுக்க முடியாது ஓகே சொன்னேன்.”
பார்த்திபன் சொல்லும் அர்த்தம் டெல்லிற்கு புரியவில்லை.
“பர்ஸ்ட் டைம் என் முன்னால் நின்னு அவ்வளவு திமிரா கேட்கும்போது எப்படி மறுக்க முடியும்.”
இப்போதும் டெல்லிடம் விளங்காத்தன்மை.
“லவ் பண்ணு புரியும்.”
டெல் தலைக்குமேல் கை குவித்து கும்பிடு போட்டான்.
“அதை பண்ணிட்டு கெத்தா சுத்திட்டு இருந்த நீயே இப்படி ஆகிட்ட… நானெல்லாம் முழு மென்டல் ஆகிடுவேன்.”
“அப்போ என்னை அரை மென்டல் சொல்லுறியா?”
“ச்ச…ச்ச… அதை நான் வேறு சொல்லணுமா.”
பார்த்திபன் டெல்லை நன்றாக முறைத்தான்.
“பின்ன என்னடா லவ் பண்ணா… அதை சொல்லி கல்யாணம் பண்றதை விட்டு, அவகிட்ட ஈகோ பார்த்து நீயென்னவோ சொல்லி பதிலுக்கு அவள் உன்மேல் பாய்ஞ்சு கடைசியில சவாலுன்னு வந்து நிக்குறீங்க. இதெல்லாம் எங்க போய் முடியுமோ” என பேசிக்கொண்டே சென்ற டெல் அப்போதுதான் நினைவில் உதித்ததாக…
“ஆமாம் நீயேன் உன்னை அங்கை ஆன்ட்டி சன் அப்படின்னு சொல்லிக்காம இருக்க?” எனக் கேட்டான்.
“கயல் என்னை ஏத்துக்கிட்டா அது என்னை இந்த பார்த்திபனை பார்த்திபனாகவே, அவனுடைய நிறை குறையோட ஏத்துக்கணும்.
நான் அவளுடைய அத்தை பையன்னு தெரிஞ்சிட்டா… என்னையும் என் லவ்வையும் சாதாரணமா ஏத்துப்பா. அப்படி ஏத்துகிட்டா அதிலென்ன இண்ட்ரெஸ்ட் இருக்கு டெல்.
அவக்கூடவே இருந்து நான் தான் அங்கை பையன்னு தெரியாமலே என்னை தெரிஞ்சிக்க வைக்கணும், லவ் பண்ண வைக்கணும் நினைச்சிருந்தேன். அதுக்கு எப்படி எந்த வழியில் அவளை நெருங்குவதுன்னு யோசிக்கும்போது அவளே வழி அமைத்துக்கொடுத்தால் அதை விட்டுடுவேனா என்ன?”
பார்த்திபன் யாருக்கும் இவ்வளவு விளக்கம் சொல்லியதில்லை. அது அவனின் இயல்புமில்லை. ஆனால் இதில் அவனுக்கே ஒரு தெளிவு வேண்டியிருக்க, தன் எண்ணத்தை தான் நினைத்திருப்பதை டெல்லிடம் ஷேர் செய்வதைப்போல் தனக்கே சொல்லிக்கொண்டு தெளிவு பெற்றான்.
காதலை அவர்கள் மீது எழும் காதலுக்காக மட்டுமே ஏற்க வேண்டும். இங்கு பார்த்திபனும் அதைத்தான் நினைத்தான். அதனால் தன்னை தன் உறவின் அடையாளத்தை கயலிடம் மறைத்துக்கொண்டான்.
“அடுத்தென்னடா?”
டெல் கேட்க வீடு வந்து சேர்ந்தது.
இவ்வளவும் அரங்கிலிருந்து வரும் வழியில் காரில் நடந்தவை.
நேரத்தை பார்த்த டெல் முகிக்கு அழைத்துக்கொண்டே, “இந்த நேரத்தில் என்ன பண்றது, தூங்க வேண்டியது தான்” என்று வீட்டிற்குள் நுழைந்து தனது அறை பால்கனியில் சென்று நின்றான்.
அந்தப்பக்கம் முகி எடுத்ததும்…
யாரென கயல் கேட்பதும், அத்தான் என்று முகி சொல்வதும் பார்த்திபனுக்கு நன்கு கேட்டது.
“சொல்லுங்க அத்தான் சாப்டிங்களா?”
“ஃபினிஷ்டு” என்ற பார்த்திபன், “பன்க்ஷன் ஓவரா முகி. கிளம்பிட்டிங்களா?” என தெரிந்துகொண்டே வினவினான்.
“ஓவர் அத்தான். இப்போ தான் பஸ் ஏறினோம். மார்னிங் ரீச் ஆகிடுவோம். உங்களுக்கு பிக் அனுப்பத்தான் மொபைல் எடுத்தேன். நீங்களே கால் பண்ணிட்டிங்க.”
“ஹ்ம்ம்…. டேக் கேர் முகி. ரீச் ஆகிட்டு மெசேஜ் பண்ணு” என்ற பார்த்திபன் காலினை கட் செய்யப்போக… “அத்தான்” என வேகமாக அழைத்து முகி தடுமாறினான்.
முகியால் கயல் செய்ததை ஏற்கவே முடியவில்லை. அவள் விவசாயத்தில் கால் வைத்தது முதல், எத்தனையோ பேர் பார்த்திபன் பேசியதை போல் அவளை நேரடியாக மறைமுகமாக பேசியிருக்கின்றனர். அப்போதெல்லாம் என் செயல் அவர்களுக்கு பதில் சொல்லும் என்று அமைதியாக கடந்துவிடுபவள், இன்று பார்த்திபனிடம் சரிக்குசரி வாதிட்டதும், அவனை போட்டிக்கு அழைப்பது போல் சீண்டி சவாலிட்டதும் முகிக்கு என்னவோ போலிருந்தது. மிகவும் பொறுமையான கயல் இப்படி ஏன் நடந்துகொண்டாள் என்ற கேள்வி தோன்றிய போதும், அதனை அவளிடம் நேரடியாகக் கேட்க அவனுக்கு விருப்பமில்லை. அத்தோடு அவளின் செயலை நினைத்து கடிந்து கொள்ளவும் மனமில்லாதவன், நடந்ததை உள்ளுக்குள் வைத்து… பார்த்திபன் என்ன செய்திடுவானோ என்று மருகி அழுத்தம் கூடிப்போயிருந்தான்.
இதற்கு காரணமான கயலிடமே ஆறுதல் தேடும் விருப்பம் அவனுக்கில்லை.
ஆதலால் நடந்ததை பார்த்திபனிடமே ஷேர் செய்து மன அழுத்தத்தை குறைக்க விரும்பியவன் அவனை அழைத்து விட்டானே தவிர எதுவும் பேசாது மௌனமாக இருந்தான்.
பார்த்தியை கால் கட் செய்திடாது தடை செய்த பின்னரே இதனை சொன்னால் கயலைப்பற்றி அவன் என்ன நினைப்பான், அழகரின் ஆசை அவனுக்கும் தெரியுமல்லவா அதனால் கயலை அவனின் அத்தான் தவறாக புரிந்துகொள்வதை முகி விரும்பவில்லை.
“முகி… ஆர் யூ தேர்?”
“யா… “
“எனித்திங் ஹெல்ஸ்.”
“நத்திங் அத்தான்.”
“ஆர் யூ ஷ்யூர்?”
“ஷ்யூர்…”
“…”
பார்த்திபனின் மௌனம் முகியை என்னவோ செய்தது.
“அத்தான்…”
“வச்சிடுறேன்.”
“கோபமா அத்தான்.”
“அதெல்லாம் இல்லைடா. அதுக்கும் உரிமை வேணுமில்லையா!”
கயலுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வதோடு, இருவரும் ஆர்க்யூ பண்ணும்போது தன்னால் கயலுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பதறிய முகியை அத்தனை பிடித்தது பார்த்திபனுக்கு. அதோடு இந்த ஐந்து மாதங்களாக நடக்கும் அனைத்தையும் தன்னிடம் சொல்லுவதற்காகவே தான் அழைக்காவிட்டாலும், அவனாக அழைத்து பல நிமிடங்கள் பேசுவதும்… அக்கறையாக “சாப்டிங்களா அத்தான்” என்று விசாரிக்கும் முகியை அவனுக்காகவே அவ்வளவு பிடித்தது. தன்னிடம் எதையும் பேசிடத் தயங்காதவன் சொல்ல அழைத்துவிட்டு சொல்லாமல் ஒன்றுமில்லை என்றது பார்த்திபனை அவனிடமிருந்து விலகி நிறுத்துவதை போல் உணர்ந்தவன் அதனை வெளிப்படையாகக் கூறியும் விட்டான்.
பார்த்திபன் சொல்லியதில் முகிக்கு குற்றவுணர்வாகிப் போனது.
“சாரி அத்தான்” என்ற முகி கயல் பார்த்திபன் இடையே நடந்த நிகழ்வை விவரித்து பார்த்திபனின் பின்புலம் பற்றி தான் பயப்படுவதை பார்த்திபனிடமே சொல்ல… பார்த்திபனுக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
“இதை சொன்னால் நீங்க அக்காவை மிஸ்அண்டர்ஸ்டெண்ட் பண்ணிப்பீங்களோன்னு தான்…”
முகி முடிக்கும் முன்னே,
“எனக்கு புரியுது. பட் கயல் பேசினது எனக்கு தப்பா தெரியலை. நமக்கு பிடிச்ச ஒன்றை பற்றி யாரவது தவறா சொன்னா வர நியாயமான கோபம் தானே அது. இதுக்கா பீல் பண்ற?” என்றான்.
“அச்சோ அத்தான் அவள் சவால் விட்டிருக்க ஆள் அப்படி” என்ற முகி பார்த்திபனை பற்றி மேகசினில் படித்ததை சொல்லி, அவனின் வளர்ச்சி பற்றி சிலாகிக்க…
‘நான் யாருன்னு தெரியாம என்கிட்டவே எனக்கு ரசிகர் மன்றம் வைக்கிறானே’ என மௌனமாக சிரித்தான்.
“ஹேய்… டோண்ட் வொர்ரி முகி. அந்த பார்த்திபன் என் ஃபிரண்ட் தான். நான் பேசிக்கிறேன்” என புலம்பும் முகியை சமாதானம் செய்தான்.
“நிஜமாவா அத்தான். அவர் உங்க ஃபிரண்டா?”
“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…”
“அப்போ அவரிடம் இந்த சவாலெல்லாம் வேண்டாம் சொல்லுங்க அத்தான்” என்று முகி சொல்ல சொல்ல, இங்கு பார்த்திபனால் சிரிப்பினை கட்டுப்படுத்த முடியாது…
“மார்னிங் பேசலாம் முகி” என்று டக்கென்று வைத்தவன், சத்தமாக சிரித்தான்.
“நான் யாருன்னு தெரிந்தால் முகி என்னை ஓடவிட்டு அடிக்கப்போறான்” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்ட பார்த்திபனின் உதடுகள் இன்னும் சிரிப்பில் விரிந்திருந்தன.
அந்நேரம் மங்கை அழைத்திட…
‘டிவியில் பார்த்திட்டு கூப்பிடுறாங்க போல… இப்போ அட்டெண்ட் பண்ணால் விடிஞ்சிரும், நாளைக்கே பேசிக்கலாம்’ என நினைத்தவன்…
‘அம் இன் பெட் மாம். ஃபீல் ஸ்லீப்பி. கால் யூ டுமாரோவ்.” மெசேஜ் அனுப்பியவன் கயல் பேசியதையே நினைத்தபடி உறங்கிப்போனான்.
*****
காலையில் நகர பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய கயல் முகிக்காக தேவராஜன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அவர் வரும்போது கொண்டு வந்திருந்த கார் இருக்க… மங்கை தான் அழைத்துவர அனுப்பிவிட்டார்.
“நீங்க ஏன் மாமா வந்தீங்க? எவ்வளவு குளிரா இருக்கு?” எனக்கேட்ட கயலை,
‘இந்தப்பெண்ணா பார்த்திபனிடம் அப்படி தோரணையாக பேசியது’ என்று அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்ததை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
‘பார்த்திபன் யாருன்னு சொல்லிடலாமா?’ ஒரு கணம் யோசித்தவரின் கண் முன்னே, “டாட்” என்று அழுத்தமாக முறைக்கும் மகனின் முகம் வந்து போக அந்த எண்ணத்தை கை விட்டவர்… ‘அவனிடம் யார் பேச்சு வாங்குவது’ என்று தலையை உலுக்கிக் கொண்டார்.
“நீங்க ஆட்டோ பிடித்து தானே வரணும். அதான் நான் வந்தேன்” என்றவரிடம் கார் சாவியை வாங்கிய முகி டிரைவர் சீட்டில் சென்று அமர்ந்திட மற்ற இருவர் அமர்ந்ததும் அடுத்த சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
தன்னுடைய அறைக்கு வந்த முகி, அங்கு உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்த மலரை பார்த்து சிரித்து விட்டான்.
“இப்போ எதுக்கு ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி உட்கார்ந்திருக்க” என்ற முகி குளியலறைக்குள் புகுந்திட்டான்.
அவன் குளித்து முடித்து வரும் வரையிலுமே மலர் அப்படித்தான் அமர்ந்திருந்தாள்.
“என்னடி உன் பிரச்சனை?” இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவன் கேட்ட தோரணையே ‘இப்போ நீ வாய் திறக்கவில்லை என்றால் நான் திறக்க வைப்பேன்’ என்று சொல்லுவதைப்போலிருக்க…
“உங்க அத்தை என்னைத் திட்டிட்டாங்க?” என்றாள்.
“ஏன் உன் பெரியம்மா இல்லையா? இத்தனை நாளா அவங்க பின்னாடியே தானே சுத்திட்டு இருந்த?” என்றான்.
அதற்கு அவள் பதில் சொல்லாது இருக்க…
“சரி நீயென்ன பண்ண?” எனக் கேட்டான்.
அவள் நடந்ததை சொல்ல…
“அவங்க கயலை நினைத்து பயந்து இருப்பாங்க மலர். அதில் நீவேறு கயல் செய்ததை ஆதரிப்பதுபோல் பேசவும் டென்சன் ஆகியிருப்பாங்க” என்று விளக்கம் கூறினான்.
“நான் அவங்களை தப்பா நினைச்சு சொல்லல… என்கிட்ட கத்திட்டு உள்ளே போனவங்க நைட் சாப்பிடக்கூட வரல” என்று கவலையாக சொல்ல… முகி நேராக மங்கையின் அறைக்குச் சென்றான்.
அங்கு மங்கை வருத்தமாக அமர்ந்திருந்தார். தேவராஜன் சமாதானம் செய்வதைப்போல் இருந்தது.
“இதையே நினைத்து கவலைப்படாத மங்கை. எல்லாம் உன் மகன் பார்த்துப்பான்” என்ற தேவராஜன் வாயிலில் நின்றிருந்த முகியை பார்த்துவிட்டு,
“உள்ள வா முகிலா” என்றார்.
“ஏன் அத்தை கவலையா இருக்கீங்க?” என்றவாறே மங்கையின் அருகில் முகி அமர்ந்தான்.
“கயலை ஏன் முகி அவ்வளவு பேசிவிட்ட நீ?”
மங்கையின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே முகிக்குத் தெரியவில்லை.
“அவன் பேசினதும் கொஞ்சம் அதிகம் தானே அத்தை.” முகிக்கே கயல் பேசியது அதிகப்படி என்ற போதும் அவளை விட்டுக்கொடுக்க அவனால் முடியவில்லை.
“அச்சோ முகிலா…” மங்கை வாய் வரை வந்துவிட்டதை சொல்ல முடியாது கைகளை பிசைந்தபடி இருக்க… தேவராஜன் பார்வையாளராக நின்றிருந்தார்.
‘தான் வாய் திறந்தால் உளறிவிடுவோம். அப்புறம் பார்த்திக்கிட்ட யார் திட்டு வாங்குறது’ என்கிற எண்ணம் தான் அவருக்கு.
“இதுக்கா ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க அத்தை. அவனெல்லாம் பார்ன் வித் சில்வர் ஸ்பூன் மெட்டிரியல் அத்தை. சுற்றி மீடியா இருக்கேன்னு கயல் கேட்டதுக்கு சரின்னு சொல்லிட்டான். அவனாவது இங்கு வந்து விவசாயம் செய்வதாவது” என்ற சொல்லிய முகிக்கும் அவன் அப்படி வராமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்றே தோன்றியது.
“அவன் கண்டிப்பா வருவான் முகி.” மங்கையின் அழுத்தமான குரலில் விளங்காத பார்வை முகியிடம்.
“அதெல்லாம் வரமாட்டான் தோணுது அத்தை.”
“நிச்சயம் வருவான்.”
“அதெப்படி அத்தை அவ்வளவு உறுதியா சொல்றீங்க. அவனைப்பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அவளுக்கு தெரியாம வேறு யாருக்கு அவனைப்பற்றி நன்கு தெரிந்துவிடப்போகிறது?” – தேவராஜன்.
“அத்தைக்கு எப்படி மாமா தெரியும்?”
“அவனை பெத்ததே அவள் தானே!”
“பார்த்திபன் எங்க மகன்.”
தேவராஜனும், மங்கையும் ஒரு சேர கூறிட… அதனை தெளிவாக உள்வாங்கிடவே முகிக்கு சில கணங்கள் தேவைப்பட்டது.
மூளை கிரஹித்ததும் உடலில் தோன்றிய உச்சபட்ச அதிர்வில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன், விரிந்த விழிகளுடன், தடுமாறும் நாவினால்…
“பார்த்திபன் தான் கண்ணத்தானா?” எனக் கேட்டிருந்தான்.
இருவரின் தலையும் ஆமோதிப்பாக ஆட,
தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் முகிலன்.