பார்த்திபனின் கயல்விழியாள் 3

அத்தியாயம் 🌾 3 :

“அண்ணா… அந்த பக்கம் கரும்பு கொல்லைக்கு தண்ணி பாயுது பாருங்க… நாளைக்கு அறுவடைக்கு சொல்லியிருக்கு. இப்படி பூமி ஈரமான எப்படி கரும்பு வெட்டுறது” என்று சத்தமாகக் கேட்டபடி வரப்பில் வந்த கயல்விழி தானே மண்வெட்டியை கையில் லாவகமாக பிடித்து, மடையை திருப்பி விட்டாள்.

“என்னால கூட இவ்வளவு வேகமாக மண்ணை திருப்ப முடியாது கயலு” என்ற சிவம், அவளின் வேலை செய்யும் பாங்கில் வியந்து தான் போனான்.

சிவம் அந்த ஊரில் யாருமற்று தனித்து இருப்பவன். சித்தி வளர்ப்பில் வளர்ந்தவன் தன் சிறு வயதில் அவரால் பட்ட கொடுமைகள் விவரிக்க முடியாதவை. தந்தையும் இரண்டாவது மனைவியின் கொடுமை தாங்காது சொல்லிக்கொள்ளமல் எங்கோ சென்றிட, தோற்றத்தில் வளர்ந்த நிலையில் தனித்து வாழ முடிவு செய்து வேலையென்று சென்ற இடமெல்லாம் அவனின் சித்தி வந்து கண்டபடி பேசி ஒரு ஆட்டம் ஆடிவிட்டு செல்ல, அவனுக்கு வேலை கொடுக்கவே பலர் மறுத்தனர்.

சிவத்தின் நிலையை ஒருநாள் தனது பக்கத்து பண்ணையில் வைத்து அவனின் சித்தி திட்டும்போது பார்த்து அறிந்த கயல் மாணிக்கத்திடம் அவனைப்பற்றி விசாரித்து… அவனும் தங்களைப்போல் யாருமற்றவன் என்று தெரிந்து வயல் வேலைக்கு தனக்கு உதவியாக வைத்துக் கொண்டதோடு தனது உறவாகவும் நினைத்து அவனிடம் அன்பு காட்டினாள். பிறந்ததிலிருந்து அன்பு என்ற ஒன்றை அனுபவித்திடாத சிவம் கயலின் அண்ணனாகவே மாறிப்போனான்.

கயலைவிட இரண்டு வருடம் மூத்தவன். முதல் வருடத்தோடு கல்லூரி படிப்பை சித்தியின் வசவு பேச்சுக்களை கேட்க முடியாது நிறுத்தியிருந்தவனை தொலைதூர கல்வியின் மூலம் மீண்டும் கயல் படிக்க வைத்தாள்.

இப்போது அவர்களது பண்ணையின் கணக்கு வழக்கையெல்லாம் அவன் தான் பார்த்துக் கொள்கிறான்.

பண்ணையில் அமர்ந்திருக்கும் கயலின் ஓட்டு வீட்டில் தங்கி இருக்கின்றான்.

“என்னை உயர்வா பேசணுமுன்னு உங்களை குறைச்சிக்காதீங்க அண்ணா… உங்க வேலை நெளிவு சுலிவெல்லாம் எனக்கு வராது” என்றவள்… “நாளைக்கு கரும்பு வெட்ட ஆரம்பித்தால் எப்படியும் பத்து நாள் வேலை இழுத்துடுமில்லையா ண்ணா?” எனக் கேட்டாள்.

“ஆமாண்டா… இன்னைக்குள்ள வாழை தோப்பு இலை கிழிச்சிட்டா சிரமம் இருக்காது” என்று பதில் வழங்கினான்.

“முடியலன்னாலும் முடியுற வரை கூடயிருந்து பார்த்துக்கோங்கண்ணா முகில் வந்திருக்கான். ஒரு வாரத்தில் கிளம்பனும் சொல்லிட்டு இருக்கான். அவன் கிளம்புற வரை மாணிக்கம் மாமாவுக்கு வயலுக்கு வழியே தெரியாது” என்றுக்கூறி இதழ் விரித்தாள்.

“முகில் மேல அவருக்கு கொள்ளைப் பிரியம்.” சிவம் சொல்ல கயலிடம் ஆமென்பது போல் தலையசைப்பு மற்றும் மென் புன்னகை.

“எப்போ படிப்பு முடியுது?”

“இப்போ ஹவுஸ் சர்ஜன் பீரியட். அடுத்து மேல படிக்கப்போறானா இல்லை பிராக்டிஸ் பண்ணுவானா தெரியல. இன்னும் இதைப்பற்றி பேசல.”

இருவரும் பேசிக்கொண்டே காய்கறித் தோட்டம் பக்கம் வந்திருந்தனர்.

கத்தரி, வெண்டைச்செடி ஒரு புறம் பாத்தி அமைத்து நேர் வரிசையாக அமைந்து… காய்களை சுமந்து கொண்டு நிற்க… மற்றொரு புறம் நீண்டு பந்தல் அமைத்து, புடலங்காய், அவரை, பாகற்காய் போன்ற கொடி வகை காய்கள் காற்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன.

அதற்கு எதிர்புறம் புளிச்சைக்கீரை கொம்புகள் ஒன்றோடு ஒன்று உறவாடிக் கொண்டிருக்க அருகிலேயே அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, வெந்தியக்கீரை, வல்லாரை போன்ற கீரை வகைகள் தமதமவென்று வளர்ந்து பச்சையாகக் காட்சியளித்தன.

மற்றொரு பக்கம் மல்லிகை மற்றும் ரோஜா தோட்டமும், சாமந்தி, துளசி, சம்பங்கி, கோழிக்கொண்டை போன்ற மாலைக்கு பயன்படும் மலர் செடிகளும் பூத்து குலுங்கி கண்களுக்கு இதம் சேர்த்தன.

“இந்தமுறை காய்கறி எல்லாம் பறிச்சு முடிச்சதும் தோட்டத்தை உழுதுடலாம் ண்ணா.”

காய்கறித் தோட்டத்தை சுற்றி வந்தன கயலின் கண்கள். அவள் மனமோ வேறொரு சிந்தனையில் சுழன்றது.

“ஏம்மா?”

இவையனைத்தும் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பயிரிட்டு வளர்க்கப்பட்டவை. வெண்டை மற்றும் கத்தரி நாற்பத்தைந்து நாட்களில் அறுவடைக்கு தயாரிகிவிடும் என்றாலும் இரண்டு நாள் இடைவெளியில் ஆறு முறை தான் காய் பறிப்பு நடந்திருக்கிறது. கொடி வகைகள் மூன்று மாதத்திற்குள் பயனளித்து சருகத் தொடங்கிவிடும். அதற்குள் உழுது விடலாம் என்று சொல்ல காரணம் அறியவே வினவினான்.

“வேறு ஒரு திட்டம் இருக்குண்ணா. நடைமுறைப்படுத்த யோசிச்சிட்டு இருந்தேன். இனியும் யோசிக்காமல் இறங்கிடுறது நல்லதுன்னு தோணுது” என்றவளை கூர்ந்து கவனித்த சிவம்… “சிக்கலானதுன்னா இவ்வளவு தயக்கத்தோடு வேண்டாமேடா” என்றான்.

“நானும் மாணிக்கம் மாமாவும் உனக்கு உதவியா இருந்தாலும், முன்ன நின்னு ஒவ்வொரு பயிரையும் அக்கறையா கவனிக்கிறது நீதான். இதுக்கு மேலும் நீ கஷ்டப்படனுமா?” கயலின் உழைப்பை பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன? என்ன தான் கிராமங்களில் வயலில் இறங்கி பெண்கள் வேலை செய்தாலும், கயல் அவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவள்.

களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல் அது மட்டுமில்லாது கழனியில் ஆண்கள் செய்யும் வேலையையும் சற்றும் கடினம் பாராது செய்தவளுக்கு அது பழக்கமாகியும் போகிட… உழுதலை கூட சாதரணாமாக கையாளுவாள்.

விவசாயம் செய்பவரை மணம் முடிக்கவே யோசிக்கும் இந்த காலத்தில்… விவசாயத்தை மூச்சாய் நினைக்கும் அவளுக்கு மேற்கொண்டு எவ்வித கஷ்டமும் நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்கிற அன்பிலே கேட்டிருந்தான்.

“அப்படி கேளுங்கண்ணா!”

முகிலனின் குரலில் இருவருமே திரும்பிப் பார்க்க… கையில் உணவு பையுடன் வந்திருந்தான்.

அவனுக்கு பின்னாலே மாணிக்கம் ஓடி வந்தார்.

“வண்டியை நிறுத்துறதுக்குள்ள நீயெதுக்கு முகி கண்ணு பையை தூக்கிட்டு வந்த?” என்று மூச்சு வாங்க வினவிய மாணிக்கம் அவனின் கையிலிருந்து பையை வாங்கிக்கொண்டார்.

“இதுவொன்னும் அவ்வளவு கனம் இல்லை” என்றவன் அவரை முறைத்துப் பார்த்தான்.

“என்ன டாக்டர் சார்… இன்னும் சின்னப்புள்ள மாதிரி மூஞ்சியை தூக்கி வச்சிக்கிறீங்க?” முகிலனின் முகம் சிவம் கேட்பதைப்போல் தான் இருந்தது.

“நான் வந்ததுலேர்ந்து என் பின்னால் தான் சுத்துறாரு. சரளா அத்தையே அவருக்கு அவங்களா இல்லை நான் பொண்டாட்டியான்னு சந்தேகம் வந்திருக்கும்” என்று பொய்யாக அலுத்துக்கொண்டான்.

“உன்மேல அவ்வளவு பாசம் முகி.”

சிவம் முடிக்கவில்லை மாணிக்கம் பேசினார்.

“அப்படி சொல்லு சிவா… முகி வளர வளர அப்படியே அழகர் ஐயா மாதிரியே இருக்கான். அதான் எங்க ஐயா பின்னாலேயே திரியுறேன்” என்றார். அந்நொடி அனைவரிடமும் கனத்த அமைதி. ஒரு நிமிடம் அழகரை நினைத்து அவரின் மக்கள் வருந்தித்தான் போயினர்.

முகி அவனின் தந்தையை ஒத்தே தோற்றத்தில் இருக்க… மாணிக்கத்திற்கு தன் ஐயா தான் முகி என்கிற எண்ணம். அழகருடனே சுற்றி வந்த மாணிக்கம் இப்போது முகியுடன் சுற்றுவதில் மீண்டும் அழகருடனே பயணிப்பதைப்போல் மகிழ்ந்து போனார். அது மற்றவர்களுக்கு புரியவும் செய்தது. இருப்பினும் சில சமயங்களில் அவரை சீண்ட முகி வேண்டுமென்றே இவ்வாறு வம்பிழுப்பான்.

எப்போதும் அவனின் அந்த செயல் நகைச்சுவையில் முடியும். இன்று?

அதையும் மாணிக்கமே கலைத்தார்.

“அதான் டாக்டருக்கு படிக்குதே எதுக்கு காடு கழனின்னு வரப்புல நடக்கணும்” எனக் கேட்டார்.

அவரின் கேள்வியில் நினைவு மீண்ட கயல், “சும்மா பார்க்க வந்திருப்பான் மாமா” என்க…

“ஆமாம் பார்க்கத்தான் வந்தேன்” என்று அக்காவை அழுத்தமாக பார்த்தபடி கூறிய முகிலன் அவளின் அருகில் வந்து கையை பிடித்துக்கொண்டு…

“உன் கை எப்படியிருக்கு பாருக்கா! நீ இவ்வளவு உழைக்கணும் அவசியமில்லை” என்றவன் இன்னும் நான்கு மாதம் தான் அப்புறம் நான் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிடுவேன் நீ வயலில் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை” என்றான்.

அவனின் கைகளோ தமக்கையின் உள்ளங்கையினை தடவிக் கொண்டிருந்தது.

பெண்ணின் கை போன்று மென்மையாக மிருதுவாக இல்லாமல், சொரசொரப்பாக கடினமாக இருந்தது.

“நான் பணம் சம்பாதிக்கணும் எண்ணத்தில் விவசாயம் பண்ணல முகி… நான் ஒத்துக்குறேன், ஆரம்பத்தில் நாம் தனியா நின்னப்போ… அப்பா பேங்கில் விட்டுப்போன பணமும் கரையத் துவங்க… பணத் தேவைக்காகத்தான் அந்த வயதில் இதுல இறங்கினேன். ஆனால் இப்போ அப்படி இல்லை. எனக்கு இதில் ஒரு ஆத்ம திருப்தி. விவசாயம் எனக்குள்ள கலந்திட்ட உணர்வு. முழு நிறைவு. இது வார்த்தையால் சொன்னால் புரியாது.”

சில நொடி மௌனம்…

கயல் என்ன சொல்ல வருகின்றாள் என்று மூன்று ஆண்களும் அவளையே பார்த்திருந்தனர்.

“நாம்எதுக்காக வேலை செய்றோம் முகி?”

“எதுக்காகன்னு கேட்டால்” என்று சற்று இழுத்தவன் “பணம்… பணத்துக்காக” என்றான்.

“ஹோ… அப்படியா?” என்றவள், முகியின் சட்டை பையில் கைவிட்டு பணத்தாளினை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

முகி எதுக்கு என்று பார்க்க…

“இதை சாப்பிடு முகி” என்றாள்.

“அக்கா.” அதிர்ந்துவிட்டான்.

“ஏன் முகி பதட்டப்படுற. இப்போ நீதானே சொன்ன பணத்துக்காகன்னு. அப்போ பசிக்கும் நேரம் பணமிருந்தால் போதுமில்லையா. பசி போய் விடும். பணம் மட்டும் போதுமே பாலை வனத்திலும் உயிர் வாழலாம்” என்றவளின் பேச்சு இப்போது அவனுக்கு புரிந்தது.

“புரியுதுக்கா… பசிக்காகத்தான் நாம் வேலை செய்றோம். பணம் சம்பாதிக்கிறோம்.” சின்னதாகிப்போனக் குரலில் கூறினான்.

“எஸ்… அந்த பணத்துக்கே பசியென்கிற காரணத்தேவை இருக்கு. பணம் வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அவையெல்லாம் உயிர் வாழத் தேவையான ஆடம்பரமேத் தவிர அத்தியாவசியம் கிடையாது.

பசி மட்டுமில்லையென்றால் உணவின் அவசியமில்லை. அதற்கான தேவையான பணத்தேவையும் இருக்காது.

‘ஆதி மனிதன் பணமில்லாமலே வாழ்ந்தான். ஆனால் உணவில்லாமல் வாழ்ந்தானென்று சொல்ல முடியுமா?’

காலம் மாற மாற உணவுப்பொருட்கள் கிடைக்கக்கூடிய வழிமுறையும் மாறியது. அந்த வழி பணமாகிப்போனதுதான் இங்கு மனிதர்களின் ஓட்டத்திற்கு கரணமாகிப் போனது.

நீயில்லை, நானில்லை, சிறு எறும்பு வாழ வேண்டுமென்றால் கூட… உணவு வேண்டும். அந்த உணவை இயற்கை இல்லாமல் விவசாயம் இல்லாமல் வெறும் பணத்தை மட்டும் வைத்து பெரிய பெரிய கோடீஸ்வரர்களால் கூட உருவாக்கிட முடியாது.

அதற்கு விவசாயம் முக்கியம்.

நமக்கு தேவையான எல்லாம் இந்த பூமியில் இருக்கு முகி. அந்த பூமிக்குத் தெரியும் நமக்கு என்னத் தேவையென்று… அந்த பூமியே பச்சையா இருந்தால் தான் அழகு” என்று ரசிப்புத் தன்மையோடு சொல்லியவள்…

நம்மை வாழ வைக்கும் மூச்சு காற்று மாதிரிடா விவசாயம்.

ஆரம்பத்தில் அப்பாவுக்காக, அவர் கைப்பட்ட இந்த நிலமெல்லாம் வறண்டு போயிடக்கூடாது… அப்புறம் நம் தேவைக்காக அந்த வயதில் என்ன வேலை செய்யறது தெரியாம, இதில் இறங்கினேன்.

ஆனால் விவசாயம் தொழில் இல்லைன்னு அப்புறம் தான் புரிந்தது… அது நம்ம உடலில் ஓடுற ரத்தம் மாதிரி… நம் மனதோடு உறைந்திட்ட உணர்வு உயிரென்று கூட சொல்லலாம்.

நம்மை வாழ வைக்குற விவசாயத்துக்கு இப்போ எதாவது பண்ணனும் தோணுது முகி. எல்லாத் தொழிலை போல விவசாயமும் மக்கள் விரும்பி செய்யுற தொழிலா மாறனும். அதுக்கு என்னால் சிறு முயற்சியாவது செய்யணும் நினைக்குறேன்.

எல்லாரும் விவசாயம் செய்ய பயப்படும் காரணம்… யாரும் இதை உணவளிக்கும் தொழிலா பார்க்காம, பணம் ஈட்டும் தொழிலா பார்ப்பதால் தான். இதில் லாபமும் நஷ்டமும் சரிவிகிதத்தில் வரும். கஷ்டமும் அதிகம். அப்படி இதுவும் பணம் சம்பாதிக்கத்தான் அப்படின்னா என்னால இதிலும் மற்ற தொழில்களைவிட அதிகளவு லாபம் ஈட்ட முடியும்ன்னு என்னால் நிரூபிக்க முயற்சி செய்து பார்க்க போறேன்.

எல்லா உயிர்களுக்கும் ஆதாரமா இருக்கிறது விவசாயம் தான். அதனால் °விவசாயம் பண்ணுவோம்°.”

பேசி முடித்த கயலை மாணிக்கம் ஆவென்று பார்த்தாரென்றால், சிவா கைத்தட்டினான்.

“சாரிக்கா.” தானொரு விவசாயியின் மகன். விவசாயம் பார்த்து வந்த பணத்தில் படித்த போதும் அதனை விட சொல்லி சொன்னது கயலின் பேச்சினைக் கேட்ட பிறகு முகிக்கு குற்றவுணர்வாகிப் போனது.

“நீ வருத்தப்படவோ ஆதங்கப்படவோ இதில் ஒன்றுமில்லை முகி. இங்கு பணம் தான் பிரதானம். அது விவசாயத்தில் குறைவு. அதை வைத்தே இங்கு கஷ்டத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் விவசாயத்தில் நீயும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பா உன்னை டாக்டர் ஆக்கணும் நினைத்தார்.

அதனால் நீ மேல படி. அதுக்கான தேர்வுக்கு தயாராகும் வழியை மட்டும் பார். மேற்கொண்டு படிப்பை முடித்த பிறகு பிராக்டிஸ் பண்ணு. அதுவும் நம்ம கிராமத்தில். இலவசமா.”

அவ்வளவு அழுத்தம் கயலின் வார்த்தைகளில்.

அக்காவை அணைத்துக் கொண்டான்.

“நீயில்லைன்னா நானில்லைக்கா! நீ சொன்ன மாதிரி இலவசமாத்தான் மருத்துவம் பார்ப்பேன். டாக்டர் ஆசை உன்னோடதா இருக்கலாம். ஆனால் அதை சேவையா செய்றதுதான் என் விருப்பம்” என்ற தம்பியின் நெற்றியில் முத்தமிட்ட கயலின் முகத்தில் அத்தனை கனிவு.

“பேசி முடிச்சாச்சுன்னா சாப்பிடலாம்.” சிவா அவர்களின் நிலை மீட்க பேசினான்.

“வாழை தோப்பை ஒருமுறை பார்த்திட்டு வர்றேன். நீங்க சாப்பிடுங்க” என்றவள் அங்கிருந்து நகர, அவளின் கைபிடித்து இழுத்த முகில் “நேரம் என்னன்னு பாரு சாப்பிட்டு போலாம்” என்று அவளை இப்போது சிவா தங்கியிருக்கும் வீட்டின் திண்ணையில் அமர வைத்தான்.

மாணிக்கம் எடுத்து வைக்க சிவாவும், கயலும் சாப்பிடத் துவங்கினர்.

அந்நேரத்தில் முகில் தங்கள் வயல்களை சுற்றிவிட்டு வருவதாக சொல்லி பூந்தோட்டம் பக்கம் சென்றான்.

போகும் வழியில் பசுமையாய் காட்சியளித்த ஒவ்வொரு பயிர் செடியும் தமக்கையின் உழைப்பை அவனுக்கு காட்டியது. கயலை நினைக்கும் போது முகிக்கு பெருமையாக இருந்தது.

பல வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கின. காற்றில் ஒன்றோடொன்று உரசும் காட்சி கவிதையாய். அதில் முகிலன் மனம் லயித்து அங்கேயே நின்றது.

ரோஜா செடி ஒன்றின் அருகில் வந்தவன், தன்னுடைய அலைபேசியை எடுத்து பல்வேறு கோணங்களில் தன்னை சுயமி எடுத்துக்கொண்டான்.

புகைப்படம் போதுமென நினைத்தவன் எடுத்த சுயமிக்களை ஒவ்வொன்றாய் பார்க்க… அதில் அனைத்திலும் ரோஜா செடியைத்தாண்டி புதர் போன்று அடர்ந்த முல்லைச் செடி இருக்க அதன் பின்னால் முகம் தெரியாத பெண்ணின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு படத்தில் இடம் பெற்றிருந்தன.

“யாரது” என்று யோசித்தவன், மெல்ல செடி அருகில் செல்ல… அந்தப்பெண் அவனுக்கு முதுகுக்காட்டி முன்னோக்கி நடந்தாள்.

“ஹலோ.”

முகிலன் அப்பெண்ணை அழைத்த நேரம், சரியாக சற்று மேட்டிலிருந்த வரப்பில் கால் வைக்க சென்ற பெண்… திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து… வரப்பில் கால் இடறிட பின்னோக்கி சாய்ந்தாள்.

அப்பெண் விழுந்திடாதவாறு அவளின் முதுகை தன்னிரு கைகளில் நொடியில் தாங்கி பிடித்திருந்தான்.

இருவருள்ளும் சிறு அதிர்வு.

விழுந்து விடுவோமென்ற பயத்தில் கண்களை மூடியவள், திறந்ததும் தானொரு ஆணின் பிடியில் இருப்பதை உணர்ந்து பதறி விலகி நின்றாள்.

விழப்போனவளை பிடித்த பிறகுதான், தன் முகத்திற்கு கீழிருந்த அவளின் முகம் கண்டவன் தன் நெஞ்சில் இதத்தை உணர்ந்தான்.

“மலர்.” முகிலனின் உதடுகள் முணுமுணுத்தன.

ஆனால் அவனின் முகத்திலிருந்து இதம் அவளிடமில்லை. ஏகத்தும் கடுகடுப்பு. நொடி நேரம் முகிலனை உக்கிரமாக முறைத்தவள் வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள்.

‘ஒருமுறை என்னைத் திரும்பி பாருடி!’ அவனின் மனதின் குரல் அவளுக்கு எட்டியதோ, கழுத்தை மட்டும் திருப்பி அவனை வெட்டும் பார்வை பார்த்தவள் வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்ன முகி உன் ஆள பார்த்திட்ட போலிருக்கு.”

சிவாவின் குரலில் அதிர்ச்சியாக அவனை ஏறிட்ட முகி…

“உங்களுக்கு எப்படி?” என்று திணறினான்.

“நீ போன முறை ஊருக்கு வந்தப்ப.” உண்மையைக் கூறினான் சிவா.

“அப்பவேவா?”

“ம்ம்… ம்ம்…” தலையாட்டால் அவனிடம்.

“அக்காக்கிட்ட சொல்லிடாதீங்க!”

“சொல்லமாட்டேன்” என்ற சிவா, “இன்னும் சம்மதம் சொல்லலையா?” எனக் கேட்டான்.

“இல்லையே” என்று உதடு பிதுங்கிய முகி… ” எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரியலண்ணா” என்றான். பாவமாக அவன் முகம்.

“ஹேய் இதுக்கெல்லாம் போய்…” முகிலனின் சோக முகம் பிடிக்காத சிவா அவனின் தோளில் கைபோட்டு, “மாணிக்கம் மாமா பொண்ணு தானே, பொண்ணுக்கு சம்மதமில்லனாலும் அப்பாகிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கோ” என்று வழியொன்றை கூற முகி மறுப்பாகத் தலையசைத்தான்.

“அவள் அப்பாக்காக இல்லை… எனக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கணும்” என்று ஒருவித உறுதியோடு சொல்ல…

“நடக்குமா?” என்ற கேள்விதான் சிவாவிடம்.

error: Content is protected !!
Scroll to Top