அத்தியாயம் 🌾 30 :
“அத்தை நிஜமாவா?” என்று மீண்டுமொரு முறை உறுதிபடுத்திட கேட்ட முகியிடம், ஆமென்று தலையசைத்தார் மங்கை.
“முன்னவே சொல்லியிருக்கலாமே! இப்போவே கயல்கிட்ட சொல்றேன். இந்த சவால் அதெல்லாம் வேண்டாம்” என்ற முகி வேகமாக அங்கிருந்து செல்ல முற்பட,
“கண்ணா கயலை லவ் பண்ணுறான் முகி” என்ற மங்கை அவனைத் தடுத்தார்.
“கயல் யாரென்று தெரியாத அப்போவே… சென்னையில் ஒருமுறை பார்த்து, அப்போதிருந்தே அவளை விரும்புறான்.”
மங்கை சொல்வது உண்மையா எனும் விதமாக முகி தேவராஜனை பார்த்திட அவர் ஆமென்றார்.
“அப்புறம் ஏன் உண்மையை சொல்லல?” எனக் கேட்டான்.
“அவன் யாருன்னு தெரிந்தா அத்தை பையன் அப்டிங்கிறதுக்காக ஏத்துக்க சான்ஸ் இருக்காம். அதெல்லாம் அவனுக்கு வேண்டாமாம். அவனை அவனுக்காக மட்டும் ஏத்துக்கணும்மாம்.” மங்கை சலிப்பாகக் கூறினார்.
மலரை காதலிப்பதால், பார்த்திபனின் கூற்றை முகியால் ஏற்க முடிந்தது.
முகியும் மலரின் காதலுக்காக காத்திருந்தவனாயிற்றே. அவனுக்கு பார்த்திபனின் மனம் புரியாதா என்ன?
“பேசாம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவோம். அப்புறம் முட்டிக்கிட்டு நிக்கமாட்டாங்க.” மங்கையின் யோசனை தேவராஜிற்கும் சரியெனப்பட்டது.
“வேண்டாம்.” முகி மறுத்திட்டான்.
“காதல்… அத்தான் சொல்ற மாதிரி அவங்களுக்காக மட்டுமே வரணும். இப்போ அத்தான் கயலை விரும்புற மாதிரி, கயலும் அத்தானை விரும்பி கல்யாணம் செய்துகிட்டாத்தான் அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். அது அவங்க வாழ்க்கை… அதை அத்தானோ இல்லை கயலோ, ரெண்டு பேர்த்துல யாரோ தீர்மானிக்கட்டும். நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம்” என்ற முகி, “என்கிட்ட நீங்க உண்மையை சொல்லிட்டீங்கன்னு உங்க பையன்கிட்ட சொல்லிடாதீங்க” என்றான்.
“உங்க பையனுக்கு மட்டும் தான் மிரட்டத் தெரியும் நினைக்காதீங்க. நானும் நல்லாவே மிரட்டுவேன்.”
“என்னடா ஆளாளுக்கு உண்மையை சொல்லக்கூடாதுன்னு மிரட்டுறீங்க.”
“அப்படியே நீங்க பயந்துட்டாலும்” என்ற முகி, “இவ்வளவு நாள் உங்க மகன் சொன்னதை கேட்டிங்கல்ல… இப்போ மருமகன் சொல்லுறதையும் கேளுங்க” என்றான்.
“ஆமாம் நீயென்ன பண்ணப்போற?”
“அத்தான் இவ்வளவு நாள் என்கிட்ட விளையாண்டாறு இல்லையா, இப்போ நான் விளையாடுறேன்” எனக்கூறி சிரித்தான்.
“பார்த்திபனும் கயலும் கல்யாணம் பண்ணி விளையாடுறதுக்கு வழி சொல்லாமா, நீ அவனோட விளையாடி என்ன பிரயோஜனம்.” தேவராஜன் பெருமூச்சு விட்டார்.
“ஏன்னா… அத்தானை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்ற முகி மங்கையின் கைகளை பிடித்துக்கொண்டு குதித்திட…
“டேய் டேய்… என் பொண்டாட்டியை விடுடா” என்று தேவராஜன் முகியை அதட்டினார்.
அவர்களின் சத்தம் கேட்டு உள்ளே வந்த கயல்… முகி செய்து கொண்டிருபயத்தை கண்டு,
“என்னடா செய்யுற?” எனக் கேட்டாள்.
மற்றொரு கையால் கயலின் கையையும் சேர்த்து பிடித்தவன், குதிப்பதில் அவளையும் இணைத்துக்கொண்டான்.
“என்னாச்சு முகி.”
“தெரியல கயல். ஏதோ ஹேப்பி ஃபீல்.”
இவ்வளவு நேரமும் பார்த்திபனை நினைத்து பயந்து கொண்டிருந்த முகிக்கு, அவன் தன்னுடைய அத்தான் என்றும்… அவன் காதலிப்பது கயல், அவனால் கயலுக்கு ஆபத்து நேரிடாது என்றும் தெரிந்ததும்… அவனின் பயம் கலக்கமெல்லாம் எங்கோ சென்றிருந்தது.
“என்ன ஹேப்பி.”
“சொல்ல முடியாது. நீயா தெரிஞ்சிக்கோ” என்றவன் மொத்தமாக சிறுவனாக மாறியிருந்தான்.
முகி இப்படியெல்லாம் துள்ளி குதித்து மகிழ்ந்து கயல் பார்த்தது இல்லை. இன்று அவனின் இந்த மகிழ்வில் பூரித்துப்போனாள்.
முகி என்னவென்று சொல்லவில்லையென்றாலும், கயலுக்கு முகியின் சந்தோஷம் ஒன்றே போதுமானதாகத் தோன்றியது.
“சரிடா உனக்கு லீவ் எப்போ முடியுது?”
“இன்னும் டூ டேஸ் கயல்.”
“ம்ம்… அந்த சிங்காரம் என்னை பார்க்கணும் சொன்னாராம். மாணிக்கம் மாமா சொன்னார்.”
கயல் சொல்லியதில் முகி தன் விளையாட்டை நிறுத்தி யோசனையில் ஆழ்ந்தான்.
“ஆமா கயல் நேத்து, நாலஞ்சு பேர் வந்து… உன்னை சிங்காரம் கூட்டிவர சொன்னதா சொன்னாங்க” என்று இப்போது மங்கையும் கயலிடம் விடயத்தைக் கூறினார்.
“எதுக்காக இருக்கும் கயல்?”
“தெரியல முகி…”
“மலர் விஷயமாகவா?” கயலுக்கும் இதில் குழப்பம் தான். அதையே முகியும் கேட்டிட, சிறு பயம் சூழ்ந்தது. இருப்பினும் முகியை தேற்றும் விதமாக பேசினாள்.
“மலர் காரணமா இருந்தால், இப்போ ஐந்து மாதம் கழித்து… இருக்காது முகி. வேறெதாவது காரணம் இருக்கும்.” அப்படித்தான் இருக்க வேண்டுமென்று கயல் மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
“இன்னொரு முறை வந்தால் பார்த்துக்கலாம். இப்போ நாமாக போக வேண்டாம்” என்றான் முகி.
“வாங்க சாப்பிடலாம்.” மலரின் அழைப்பிற்கு எல்லோரும் உணவு கூடம் சென்றனர்.
மங்கை மலரிடம் நேற்று கத்தியதற்கு மன்னிப்பு வேண்டிட,
“அச்சோ பெரியம்மா என்னதிது. நீங்க உரிமையா கோபப்பட்டது எனக்கு சந்தோஷமாத்தான் இருந்தது. இப்போ நீங்க மன்னிப்பு கேட்பது தான் அந்நியப்படுத்துது” என்று மலர் சிறுப்பிள்ளையாய் கோபம் கொள்ள மலரின் கன்னம் வழித்த மங்கை அவளை அணைத்து விடுவித்தார்.
“அப்புறம் கயல் உன் ஃபிரண்ட் எப்போ வர்றாராம்?” உணவு உண்டபடி மங்கை கயலிடம் வினவினார்.
“என் ஃபிரண்ட்…” கயலுக்கு மங்கை யாரை கேட்கிறார் என்று விளங்கவில்லை.
“அத்தை பார்த்திபனை சொல்லுறாங்க கயல்.” முகி தெளிவுபடுத்தினான்.
“அவங்க என் ஃபிரண்டெல்லாம் இல்லத்தை. எவ்வளவு திமிர் தெரியுமா அத்தை அவங்களுக்கு. என்கிட்டே விவசாயத்தை பற்றி தப்பா பேசினா விட்டுடுவேனா அதான் புடிச்சு ரெண்டு வாங்கு வாங்கிட்டேன்” என்ற கயலுக்கு நேற்றைய கோபம் மீண்டும் முளைத்தது.
‘அய்யோ சும்மா இருந்தவளை சுரண்டி விடுறாங்களே!’ தேவராஜனின் மைண்டவாய்ஸ்.
“மாமா உங்க மைண்டவாய்ஸ் எனக்கு கேட்குது.”
இட்லியை எடுத்து வாயில் அடைத்தவர், முகியை பார்த்து… “ஆர் யூ ஹேப்பி” என்று பார்வையாலே வினவ, அவனும் சிரித்துக்கொண்டே “ம்ம்” என்றான்.
“இதுக்கு முன்னாடி உன்கிட்ட இப்படி பேசனவங்கட்டலாம் நீ சண்டைக்கு போனதில்லையே.” முகி அர்த்தமாகக் கூறினான்.
அப்போதுதான் கயலுக்கே அது உரைத்தது.
‘அவனிடம் மட்டும் ஏன் அப்படி பேசினோம்.’ யோசித்தவளுக்கு பதில் கிட்டவில்லை.
‘சரி நாம் ஏன் மண்டையை போட்டு உடைச்சிக்கணும். அவனாவது இங்கு வரதாவது’ என்று நினைத்த கயல், “சிவாண்ணாக்கு சாப்பாடு கொடு மலர். வயலை பார்த்து ரெண்டு நாளாகுது” என்ற கயல், வேகமாக உண்டுவிட்டு, மங்கையிடம் சொல்லிக்கொண்டு பண்ணைக்கு விரைந்தாள்.
போகும் கயலையே மங்கை பார்த்திருந்தார்.
“என்ன மங்கை… கயலையே பார்த்திட்டு இருக்க?”
“கயல் வயலை பார்க்கலைங்கிறதையே அவ்வளவு ஏக்கமா சொல்லிட்டு போறா(ள்). ஆனால் பார்த்தி… நான் செடி நடுறன்னு போனாலே அந்த முறை முறைப்பான்.
இவங்க ரெண்டுக்கு பேத்துக்கும் ஒத்து வருமாங்க?”
மங்கைக்கு அண்ணன் பெண் மருமகளாக வரவேண்டுமென்று ஆசை தான்… அதற்காக எதிரும் புதிருமாக இருப்பவர்களை சேர்த்து வாழ்க்கை கடினமாக இருந்துவிடக் கூடாதே என மங்கை நினைத்தார்.
“எதிர்வினை ஒன்றையொன்று ஈர்க்கும் என்பது தான் மங்கை உண்மை. நிச்சயம் இவங்க ஒன்னு சேர்ந்தால் நல்லாயிருப்பாங்க.” தேவராஜனின் வார்த்தைகள் மங்கையிடமிருந்த கவலையை ஓடிபோகச் செய்தன.
******
“என்னடா முடிவே பண்ணிட்டியா?”
….
“நான் கேட்டுட்டே இருக்கேன். இப்படி சைலன்ட்டா இருந்தால் என்ன அர்த்தம்?”
“அதான் தெரியுதுல. அப்புறம் என்னடா?”
“இப்போ எதுக்கு நீ கோபப்படுற…”
டெல் பாவமாக வினவினான்.
அவனால் இன்னமும் பார்த்திபன் விவசாயம் செய்ய போவதாக சொன்னதை நம்ப முடியவில்லை.
மேற்கொண்டு அவனிடம் பேசாது வீட்டை விட்டு வெளியில் கார்டனிற்குள் சென்ற பார்த்திபன் அங்கு சுற்றி விழிகளை ஓட்டினான்.
ஒரு மூலையில் தோட்டக்காரர் இரும்பு கம்பியை வைத்து தரையில் கொத்திக் கொண்டிருந்தார்.
அவருக்கு அருகில் சென்றவன்,
“என்ன செய்றீங்க?” எனக் கேட்டான்.
என்றுமே பேசிடாத முதலாளி இன்று தானிருக்கும் இடம் வந்து பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்த தோட்டக்காரர்,
“அருகிலிருந்த ரோஜா செடியை காண்பித்து… கிளை பரப்ப ஆரம்பிச்சிடுச்சுங்க… அதான் அதுல ஒடிச்சு பதியம் போடலான்னு” என்று இழுத்தார்.
“பதியம் மீன்ஸ்?”
“தம்பி…?”
“இப்போ பதியம் சொன்னீங்களே அப்படின்னா என்ன?” எனக் கேட்டான்.
பார்த்திபனை மேலும் கீழும் பார்த்தவர், “ஒருசில செடியை வேரோடு நேரடியா மண்ணுல வைக்குறதுக்கு பெயர் நடுதல் சொல்லுவோம். ஆனால் இந்த மாதிரி ஒரு செடியோட பகுதியை ஒடித்து மண்ணில் படுக்க வைத்து வேர்பிடிக்க ஊணுவது பதியம் சொல்லுவோம் தம்பி” என்று விளக்கமாகக் கூறியதில் பார்த்திபனுக்கு ஒன்றும் புரியவில்லை.
புரிந்திருந்தால் தான் ஆச்சரியம்.
“என்னடா செடி வைக்குறதுக்கே இவ்வளவு சொல்லுறாரு!”
பார்த்திபன் டெல்லிடம் புலம்பினான்.
“அதான் எல்லாம் தெரிந்தவன் இங்கு எவனுமில்லை” என்று பார்த்திபனை சரியான நேரம் பார்த்து வாறினான் டெல்.
“நக்கலு… உனக்கு இருக்கு ஒருநாள்” என்று டெல்லை விரல் நீட்டி எச்சரித்த பார்த்திபன், தோட்டக்காரரிடம் திரும்பி “நான் வைக்கட்டும்மா? சொல்லித்தறிங்களா?” எனக் கேட்டிருந்தான்.
இதுதான் பார்த்திபன். நிறைய தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவன், தெரியாததை யாரிடமிருந்தும் தெரிந்துகொள்ள நினைப்பவன். கேட்டுத் தெரிந்துகொள்வதில் தயக்கம் காட்டிடமாட்டான்.
பார்த்திபன் கேட்டதும் தோட்டக்காரர் டெல்லை திரும்பிப் பார்த்தார்.
“நீ கேட்டதை அவராலே நம்ப முடியல. எப்படி முழிக்கிறார் பாரு!” டெல் பார்த்திபனின் காதில் கிசுகிசுத்தான்.
“என்ன சொல்லித்தறிங்களா இல்லையா?” அதையும் தோரணையாகத்தான் கேட்டான்.
“வாங்க தம்பி” என்றவர், கையிலிருந்த கம்பியை பார்த்திபனிடம் நீட்டினார்.
அவர் பிடித்திருந்த இடம் தவிர்த்து மற்ற இடங்களில் கம்பி முழுக்க சேறு படிந்திருக்க அதனை பார்ப்பதற்கே பார்த்திபனுக்கு என்னவோ போலிருந்தது.
அவனின் எண்ணவோட்டம் புரிந்த டெல்…
“இதுக்கே யோசிக்கிற… இதுல எங்கிருந்து சவாலில் ஜெயிக்குறது” என்று பார்த்திபனின் ஈகோவை தூண்டும் வகையில் பேசிட, கண்களை இறுக மூடியவன் தோட்டக்காரரிடமிருந்து கம்பியை வாங்கியிருந்தான்.
சேறின் குளுமை அவனின் உள்ளங்கையில் பரவிய போதும் அவனுள் ஏதோ அசூயை. அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. முதல் முறையாக மண்ணில் கை வைக்கிறான். ஏதோ அருவெறுப்பு உடலெங்கும் பரவியது.
கையில் நரநரவென்று சேற்று துகள்கள் உறுத்திட அய்யோ என்றானது.
பார்த்திபனின் முகச்சுளிப்பே அவனின் மனநிலையை காட்டிட, “பிடிக்கலன்னா விடு பார்த்தி, கஷ்டப்பட்டு செய்தா வெறுப்புதான் அதிகமாகும்” என்றான் டெல்.
டெல்லின் பேச்சு பார்த்திபனின் திடத்தை அதிகமாக்கியது.
கண்களை மூடி ஆழ்ந்து மூச்சினை வெளியேற்றியவன்,
“எங்கு வைக்கணும்?” என தோட்டக்காரரிடம் வினவினான்.
அவர் காட்டிய இடத்தில் அவர் ஏற்கனவே மண்ணை பறித்து வைத்திருக்க அதனை தவிர்த்தவனாக அருகிலேயே தன் கைப்பட மண்ணை கம்பியால் பறித்து அவர் சொல்லிய விதத்தில் ரோஜா செடியை பதியமிட்டான்.
பார்த்திபனின் இந்த அழுத்தம் டெல்லிற்கு பயத்தைதான் கொடுத்தது. இது எப்போதும் எதிராளியை அழிக்க நினைத்து திட்டம் வகுக்கும்போது அவனிடமிருக்கும் அழுத்தம்.
முடிவு செய்துவிட்டான். இனி பிடித்தம் பிடித்தமில்லாது என்கிற பேச்சிற்கே இடமில்லை. இறங்கிவிட்டான். இரண்டில் ஒன்று பார்த்த பின்னரே வெளியேறுவான்.
பதயமிட்டு நிமிர்ந்தவன் டெல்லை பார்த்த பார்வையில் என்ன இருந்ததென்று பார்த்திபன் மட்டுமே அறிவான்.
ஒன்றில் இறங்கிட வேண்டுமென்று நினைத்து முடிவு செய்த பின்னர், கால் வைக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்கே அவனிடத்தில் இடமில்லை. அப்படிப்பட்டவன் இதில் மட்டும் பின்வாங்கிவிடுவானா என்ன?
அங்கிருந்த குழாயில் கையை கழுவியவன், கையை ஒருமுறை நுகர்ந்து பார்த்துக்கொண்டான்.
டெல் என்ன என்பதைப்போல் பார்வையால் வினவ…
“மட் ஸ்மெல் எப்படியிருக்கு பார்த்தேன்” என்று சமாளித்தான். உண்மையில் கையில் கழுவிய பின்னரும் சேற்றின் வாசனை வருகிறதா என்றே ஆராய்ந்தான்.
‘பரவாயில்லை லைட்டா தான் வருது.’
“எதுக்கு இப்படி கஷ்டப்படணும்.”
பார்த்திபன் பார்த்த பார்வையில் டெல் கப்சிப்.
“நான் இன்னும் இரண்டு நாளில் கிளம்பிடுவேன். நீதான் பார்த்துக்கணும் டெல். பீ கேர்ஃபுல்” என்ற பார்த்திபன் வேகமாக தனதறை குளியலறைக்குள் புகுந்து ஹேண்ட் வாஷ், சோப் பயன்படுத்தி கைகளை கழுவிய போதும்… சானிடைசர் உபயோகித்த பின்னரே ஆசுவாசம் அடைந்தான்.
“உன் பொழப்பு இப்படி அகிடுச்சே பார்த்திபா… இதுக்கே மூச்சு முட்டுதே.” வாய்விட்டே புலம்பினான்.
அன்று முழுக்க அவனால் அந்த கையினால் சாப்பிடக்கூட முடியவில்லை. அத்தனை யோசித்தான். ஸ்பூனால் சாப்பிட முயற்சித்த போதும் ஏதோ ஒவ்வாமை. பழச்சாறு மட்டும் குடித்து பசியை போக்கினான்.
‘ஒரு செடி நட்டதுக்காட இத்தனை அக்கப்போர்.’ டெல்லால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் அவ்வளவு சிரிப்பு.
“இந்த க்ளொவ்ஸ் போட்டு பண்ணக்கூடாதா டா?”
“என்ன கேட்குற பார்த்தி… புரியல?”
“உனக்கு என்னதான் புரிஞ்சிருக்கு?” சிடுசிடுத்த பார்த்திபன்,
“அதுதான்டா சேற்றில் கை வைக்கும்போது க்ளொவ்ஸ் போட்டுக்கலாம் தானே?” எனக் கேட்டான்.
“எதே… க்ளொவ்ஸ்ஆஆஆஆ…” என்று சற்று வியப்பைக் காட்டிய டெல், “நோ எக்ஸ்பீரியன்ஸ் மச்சான். நீதான் பர்ஸ்ட் ட்ரை பண்ணப்போற, எப்படின்னு நீதான் சொல்லணும்” என்று அவனின் பந்தை அவனுக்கே திருப்பி அனுப்பினான்.
“உன்னைக் கேட்டேன் பார்” என்ற பார்த்திபன், அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிட்டான். அவனின் பார்வையில் ஒரு தீவிரம்.
‘அப்படியென்னத்த பார்க்கிறான்’ என்று நினைத்த டெல், சற்று எட்டி பார்த்தவன் சத்தமாக சிரித்துவிட்டான்.
“How to do farming without putting your hand in the mud?” (சேற்றில் கை வைக்காது விவசாயம் செய்வது எப்படி?) என்று கூகுளில் டைப் செய்து கொண்டிருந்தான்.
டெல்லின் வெடி சிரிப்பில் அலைபேசியை டக்கென்று பாக்கெட்டில் போட்டுகொண்ட பார்த்திபன் எதுவுமே நடக்காததைப்போல் சாதாரணமாக விசில் அடித்துக்கொண்டே நடந்து சென்றுவிட்டான்.
பார்த்திபனை பார்க்கும்போது டெல்லிற்கு பாவமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் செய்வதற்கு ஒன்றுமில்லையே.
‘இவன் வாயினை வைத்துக்கொண்டு கொஞ்சம் சும்மா இருந்திருக்கலாம்.’
அறைக்குள் வந்த பார்த்திபன்… “ஓவரா தின்க் பண்ணாத பார்த்திபா… எல்லாம் அங்கு போய் நேரில் பார்த்துக்கலாம்” என்று அப்போதைக்கு விவாசயம் செய்யப்போகும் எண்ணங்களை ஒத்திவைத்தான்.
அடுத்த இரண்டு நாட்களும் தான் இல்லாமலும் வேலைகள் ஒழுங்காக நடக்கும் வகையில் அனைத்தையும் சீரமைத்தவன், இரண்டாம் நாள் மாலை அலுவலக அறைக்குள் இருந்த சமயம்…
“பார்த்தி உன்னை பார்க்க முகி வந்திருக்கார்” என்று டெல் வந்து அழைத்தான்.
“முகி… எப்படி இந்த அட்ரெஸ்?” யோசித்தவனாக கீழிறங்கி வந்த பார்த்திபன், முகி அமர்ந்திருந்த நீளிருக்கைக்கு முன்னிருந்த ஒற்றை இருக்கையில் முகியை வரவேற்றவனாக சென்று அமர்ந்தான்.
அங்கிருக்கும் குக்கிடம் முகிக்கு பழச்சாறு கொண்டு வர சொல்லியவன், முகியிடம் திரும்பி…
“சொல்லுங்க முகி…” என்றான்.
“நான் என் பெயர் சொல்லவில்லை. எப்படித் தெரியும்?” முகி அப்படி கேட்கும்போது தான், அன்றும் பார்த்திபன் சரியாக தன்னை முகிலா என்று சொல்லியதும் நினைவிற்கு வந்தது.
முகியின் கேள்வியில்… தடுமாற்றம் என்றாலே என்னவென்று தெரிந்திடாத பார்த்திபன் என்ன சொல்வதென்று தடுமாறி இருந்தான்.
‘என்ன சொல்லி சமாளிக்க போறீங்க அத்தான்?’ முகி ஆவலானான்.