அத்தியாயம் 🌾 31 :
“சேலஞ்ச் அக்செப்ட் பண்ணதுமே, உங்க டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன்.”
‘வெரி ஸ்மார்ட்.’ தன்னுடைய பெயர் தெரியும் என்பதற்கு இயல்பாய் பதிலளித்த பார்த்திபனை உள்ளுக்குள் மெட்சிக்கொண்டான் முகி.
பணியாள் கொண்டு வந்து கொடுத்திட்ட பழச்சாற்றை மிக மிக மெதுவாக அருந்தினான்.
‘எவ்வளவு நேரம்டா. வந்த விஷயத்தை சொல்லுடா.’ வெளியில் சாதாரணமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்ட பார்த்திபன் உள்ளுக்குள் அலைந்திட்டான்.
கண்ணாடி தம்பளரை முகி டீபாயின் மீது வைத்தது தான் தாமதம்,
“நீங்க வந்த ரீசன்?” நேரடியாகக் கேட்டேவிட்டான்.
முகி சிரித்துக்கொண்டான்.
“எப்போ வர்றீங்க?”
“எங்கே?”
“எங்க கிராமத்துக்கு. சவால் மறந்து போச்சா?”
“யா… யா… நினைவிருக்கு. இங்கு எல்லாம் கொஞ்சம் அரேஞ் செய்ய வேண்டியது இருந்தது. நாளைக்கு வர பிளான் பண்ணிட்டேன் அல்ரெடி.”
“அங்கு சிவான்னு ஒருத்தர் இருப்பார். உங்களுக்கு எந்த உதவின்னாலும் அவர் செய்வார்.”
மொத்தமாக புதிய சூழலில் பார்த்திபன் கால் வைக்கின்றான், எவ்விதத்திலும் அவனின் நலன் குன்றிடக் கூடாது என்பதற்கே… சென்னை கிளம்பும் முன்னர் சிவாவை சந்தித்து, பார்த்திபனை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தினான். சென்னை வந்த பின்னர், பார்த்திபன் தான் தன்னுடைய அத்தான் எனத் தெரிந்தது முதல் அவனை நேரில் பார்த்திட வேண்டுமென்று உந்திய மனதின்படி பார்த்திபனின் இல்லம் வந்துவிட்டான்.
பார்த்திபன் என்ன விடயமென்று கேட்ட பின்னரே காரணமின்றி வந்த தன்னை மானசீகமாகக் கொட்டிக்கொண்டான்.
ஏதுவான காரணமாக இருக்க வேண்டுமென்றே, அவனின் வருகையைப் பற்றி கேட்டான்.
“நீங்க அங்கிருக்க மாட்டிங்களா?” முகியைப்பற்றி அனைத்தும் தெரிந்தே வினவினான் பார்த்திபன்.
“நான் இங்கதான் வொர்க் பண்றேன். சோ, என்னால் அங்கிருக்க முடியாது. அப்பப்போ வருவேன்” என்ற முகி “எதுக்கும் கொஞ்சம் யோசிங்க” என்று அக்கறையாகக் கூறினான்.
“இதையும் செய்து பார்த்திடலாம்” என்ற பார்த்திபனின் கரம் பற்றி குலுக்கிய முகி விடைபெற்றான். முகிக்கு பார்த்திபனை அணைத்து விடுவிக்க ஆவல் இருந்தபோதிலும் சந்தர்ப்பமின்றி தவிர்த்தான்.
வாசல்வரை சென்றவனை தடுத்தி நிறுத்தியது பார்த்திபனின் கேள்வி.
“ஹவ் இஸ் யூர் சிஸ்டர்?”
“அங்க போனதும் நேரிலே தெரிஞ்சிக்கோங்க.” இதழோரம் குறும்புப் புன்னகை.
‘எவ்வளவு நாள் மெயின்டெயின் பண்றீங்க பாக்குறேன்.’ செல்லும் முகி நினைத்துக் கொண்டான்.
‘பய நம்மளை கண்டுபிடிச்சிட்டானோ?’ பார்த்திபனின் மனது அப்படித்தான் என்றது.
‘அவன் தெரியும் சொல்லுறவரை இப்படியே மெயின்டெயின் பண்ணுவோம்.’ சன்னமாக சிரித்து வைத்தான்.
நாளைய விடியல் பார்த்திபனுக்கு அங்கு தான்.
******
நள்ளிரவில் தனித்து தன்னுடைய காரில் புறப்பட்டிருந்தான்.
‘அங்கு எப்படியிருக்கும்? கயல் சகஜமா பேசுவாளா? மாம் அண்ட் டாட் சொதப்பிடுவங்களா?’ ஏற்கனவே அவர்கள் அதை செய்துவிட்டனர் என்று அறியாது பல கேள்விகளுடன் காரினை செலுத்திக் கொண்டிருந்தான்.
அதிகாலை ஐந்து மணியளவில் முகி அழைத்திருந்தான்.
“தூங்கலையா நீ?”
“நைட் ட்யூட்டி அத்தான். இப்போதான் வீட்டிற்கு வந்தேன். நேத்தே உங்கக்கிட்ட பேசலையே அதான் பேசலான்னு கால் பண்ணேன்.”
“ஹ்ம்ம்… எதுக்கு ஸ்டெரெய்ன் பண்ணிக்குற முகி. படி, இல்லன்னா பிராக்டிஸ் பண்ணு.” அதீத அக்கறை அவனிடம்.
“இன்னும் ஒன் இயர் அத்தான்” என்றவன் முடியாது என்பதை மறைமுகமாக சொல்லியிருந்தான்.
“சரிடா… சொன்னா கேட்கமாட்ட. ஆனால் முடியலன்னா பிராக்டிஸ் விட்டு படி. அப்புறம் கன்ட்னியூ பண்ணிக்கலாம்.”
“ஆமா நீங்க எங்க போறீங்க? ட்ரைவிங் சவுண்ட் மாதிரி இருக்கு.” தெரிந்துகொண்டே வினவினான்.
“வன் இம்பார்டன்ட் வொர்க். அவுட் ஆஃப் ஸ்டேஷன் முகி. வர ஃபோர் மந்த்ஸ் ஆகும்.”
“ஹோ” என்ற முகி அந்த முக்கியமான வேலை என்னவென்று கேட்கவில்லை. அவனின் பாதுகாப்பை வலியுறுத்தி வைத்துவிட்டான்.
காலை ஏழு மணிக்கெல்லாம் பார்த்திபன் கயல் வீட்டின் முன்பு நின்றிருந்தான்.
கார் ஒன்று வந்து நிற்பதை பார்த்த சரளா தான், அருகில் வந்து யார் வேண்டுமெனக் கேட்டார். அதுவரை காருக்குள்ளேயே இருந்த பார்த்திபன், கதவினை திறந்து கீழிறங்கினான்.
காரும் அவனின் தோற்றமும் பெரிய இடம் என்பதை சொல்லாமல் சொல்ல, தேவராஜனுக்கு தெரிந்தவரோ என்று நினைத்தவர் “வாங்க தம்பி இப்படி திண்ணையில் உட்காருங்க, நான் உள்ள போய் ஐயாவை கூட்டிட்டு வர்றேன்” என்றவர் சென்றுவிட்டார்.
ஆள் நல்ல தோரணையா இருந்தாலும், யாரென்று தெரியாதவரை எப்படி உள்ளே அழைத்து உட்கார வைப்பதென்று தான் வெளியே திண்ணையில் அமர சொன்னார்.
ஆனால் பார்த்திபன் அவ்விடத்தையே தன்னுடைய லேசர் விழிகளால் அளந்து கொண்டிருந்தான்.
கண்ணில் படும் இடம் யாவும் பசுமையை ஏந்தி காட்சியளித்தன. வீட்டின் முன் ஓடும் பெரிய வாய்க்காலும், அதன் பின்னணியில் தெரியும் பரந்த வயல் வெளிகளும், மலை முகடுகளும் அந்த காலை நேரத்தில் மனதிற்கு அவ்வளவு இதத்தை அள்ளிக் கொடுத்தன.
வாழ்வில் முதல் முறையாக இப்படி பச்சை நிறத்தை ரசிக்கின்றான்.
வரும் வழியிலும் சாலையின் இரு பக்கமிருந்த வயல்கள் அவனை கவர்ந்திருந்தன. எப்போதுமே இதிலெல்லாம் ஈர்ப்பென்று இருந்ததில்லை. ஆனால் இன்று?
“பியூட்டிப்புல் பிளேஸ்.” தன்னைப்போல் கூறியிருந்தான்.
சரளா சென்ற சில நிமிடங்களில் யாரெனக் கேட்டுக்கொண்டே மங்கை வெளியில் வந்தார்.
அங்கு பார்த்திபனை கண்டதும் மங்கை சிலையாகியிருந்தார்.
‘வந்துட்டானா?’
அன்னையின் தோற்றம் கண்டு கண்களின் மலர்ச்சியை ரேபானுக்குள் மறைத்தான்.
“தம்பி வாங்க, இவுங்க தான் இந்த வீட்டம்மா.” சரளா அழைத்திட,
அருகில் வந்தவன் மங்கையை பார்த்து ஹாய் என்று கை அசைத்திட,
அவரோ வீட்டிற்குள்ளே குரல் கொடுத்தார்.
“உங்களை பார்க்க ஆள் வந்திருக்கு.”
“யாரு… நான் இங்க இருக்கேன்னு என் சர்க்கில் யாருக்கும் தெரியாதே!” என்று பேசியபடி வந்த தேவராஜன் மகனை பார்த்ததும், அப்படியே ரிவர்ஸில் உள் சென்றுவிட்டார்.
பின்னே சரளா முன்னால் உலறி வைத்துவிட்டால் யார் பேச்சு வாங்குவது என்ற பயம் தான்.
“எதுக்கும்மா ஐயா இப்படி ஓடுறார். யாரிந்த தம்பி” என்று கேட்ட சரளாவிடம், “எனக்கும் தெரியல சரளா” என்றார் மங்கை.
“ஐ வில் மீட் மிஸ் கயல்விழி.”
‘உன் இங்கிலீஷை உடைப்பில் போட’ என்று மகனை மனதிற்குள் வறுத்த மங்கை, “கயலை பார்க்கணுமா” என்று சரளாவிடம் கூறினார்.
“கயல் பாப்பாவை பார்க்க வந்தீங்களா? கயல் இப்போ தானே வயலுக்குப் போச்சு” என்றார் சரளா.
“இட்ஸ் ஓகே. அங்க போய் மீட் பண்ணலாமா?” பார்த்திபன் அவ்வாறு கேட்டதும் அவரால் தவிர்க்க முடியவில்லை.
“வயலுக்கே…” என்று இழுத்துவர், மாணிக்கத்தை அழைத்து…
“தம்பி கயலை பார்க்க வந்திருக்கு. வயலுக்கு கூட்டிட்டு போங்க” என்று பார்த்திபனை கூட்டிபோகச் சொன்னார்.
“வாங்க தம்பி.” வீட்டிற்கு வந்தவர் யாராக இருப்பினும் வரவேற்பது முறையாயிற்றே.
“டிவியில இருந்து வந்திருக்கீங்களா?” அவனின் டிப்டாப்பான உடையை பார்த்து வினவினார்.
“இப்படித்தான் எங்க கயல் பாப்பாவை பார்க்க பேசன்னு டிவியில இருந்து ஆளுங்க ரெண்டு மூணு தரம் வந்திருக்காங்க. அதான் கேட்டேன்” என்றவர் அவனின் பதிலைக்கூட எதிர்பார்க்காது “வாங்க தம்பி போவோம்” என்று முன்னே கை காண்பித்து நடந்தார்.
“காரில் போகலாமே!”
“இந்தா இருக்கு தம்பி வயலு” என்று கண்ணுக்குத் தெரியாத இடத்தை காட்டி சொல்லியவர் முன்னே நடக்க, பார்த்திபனும் வேறு வழியின்று அவரை பின் தொடர்ந்தான்.
“இந்த சரவுண்டிங் முழுக்க பார்ம்ஸ் தான் தொழிலா?” சுற்றியுள்ள வயல்களை பார்த்தவாறே வினவினான்.
“விளங்களையே தம்பி.”
“ஹோ, சாரி…” என்றவன், “இந்த பக்கமெல்லாம் விவசாயம் தானான்னு கேட்டேன்” என்றான்.
“ஆமா தம்பி. அதுவும் எங்க கயல் செய்யுற முறையை பார்த்திட்டு விவசாயத்தை விட்டு போனவனெல்லாம திரும்ப வந்து செய்யுறானுவ” என்று கயலைப்பற்றி பெருமையாகக் கூறினார்.
‘கயலுக்கு விளம்பரமே தேவையில்லை. இவரே போதும்.’
“பண்ணை வந்திடுச்சு தம்பி, இனி வரப்புல தான் நடக்கணும். கயல் அந்த பக்கம் ஆறு ஒட்டிய வயலில் இருக்கும்” என்று சொல்லியவர் இயல்பாக சாலையிலிருந்து கீழிறங்கி வரப்பில் நடக்கத் துவங்கினார்.
தடுமாறி ஒரு அடி வைத்த பார்த்திபன்,
“அங்கிள்… ஸ்லிப்பரியா இருக்கு” என்றான்.
“என்ன தம்பி?”
“அய்யோ அங்கிள் வழுக்குது” என்று மீண்டும் புரியும்படி கூறினான்.
“ஈரடி அப்படித்தான் தம்பி இருக்கும். இப்போதான் தண்ணி பாய்ச்சிருக்கு. கொஞ்ச நேரம் போனால் சரியாகிடும். இங்க செருப்பெல்லாம் போட்டு நடக்க முடியாது. கழட்டி வச்சிட்டு வாங்க” என்றவர் திரும்பியும் பார்க்காது அவன் வருகின்றான் என்று நினைத்து வேகமாக சென்று கொண்டேயிருந்தார்.
“என்னது செப்பல் ரிமூவ் பண்ணிட்டா?” அதிலேயே அவன் அதிர்ந்து நின்று விட்டான்.
‘வெறும் காலில் நடப்பதற்கு திரும்பி போய் விடலாமா? வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம்’ என நினைத்து வந்த வழியை திரும்பி பார்த்தவன், இது தன் குணமில்லையே என முன்னே அடி மேல் அடி வைத்து நடந்தான்.
அதற்குள் மாணிக்கம் கடைக்கோடிக்கு சென்றிருந்தார்.
“நீங்க பார்த்திபன் தானே!”
பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்க்க அஞ்சியவன், “கொஞ்சம் முன்னால் வந்து கேளுங்க ப்ளீஸ்” என்றான். எங்கே காலை சுழற்றி பின்னால் பார்த்தால் விழுந்து விடுவோமோ என்கிற பயம் தான்.
டக்கென்று வயலுக்குள் இறங்கிய சிவா பார்த்திபனுக்கு முன் வந்து வரப்பில் ஏறி நின்றான். இமைக்கும் கணத்தில்.
‘இவன் எப்படி இப்படி அசால்டா இறங்கி ஏறுறான்.’ நமக்குத் தெரியாத ஒன்றை வேறொருவர் செய்யும்போது வியப்பு தானே வரும். அதுவும் பார்த்திபன் அடியோடு வெறுத்த ஒன்று ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் வைத்து அவனுக்காகக் காத்திருக்கிறது.
“நீங்க?”
“சிவா… நீங்க வருவீங்கன்னு முகி சொன்னான். வாங்க போலாம்” என்று சிவம் எட்டி அடி வைக்க…
“சிவா” என்றழைத்து தயங்கி நின்றான்.
இதுவரை யாரிடமும் எதுவும் கேட்டிடாத அவனின் பழக்கம் தயங்கச் செய்தது.
ரோபோ மாதிரி நின்றிருந்தவனை பார்த்ததும் சிவாவிற்கு புரிந்திட, “என் கை பிடிச்சிக்கோங்க” என்று கை நீட்டிட பார்த்திபன் பற்றிக்கொண்டான்.
அவனுக்காக மெதுவாகவே சென்றான் சிவா.
“நான் தான் பார்த்திபன் எப்படி ஃபைண்ட் பண்ணீங்க?”
“நான் சொல்லுவேன் பட் நீங்க கோபப்படக்கூடாது” என்று சிவா சொல்லியதில் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாக பார்த்திபன் சரியென்றான்.
“நம்ம பண்ணைக்கு சம்மந்தமேயில்லாம, வெள்ளைக்காரன் மாதிரி ட்ரெஸ் போட்டுக்கிட்டு… பட்டப்பகலிலும் கருப்பு கண்ணாடி போட்டு யாரு வரங்களோ அவங்க தான் பார்த்திபன் அப்படின்னு முகி சொன்னான்” என்று சிரிப்பை விழுங்கியவாறு சொல்லிய சிவா, “அத்தோடு உங்களை டிவியில் பார்த்தேன்” என்றான்.
“ஹோ” என்ற பார்த்திபன் “டிவியில் பார்த்தேன் என்பதை மட்டும் சொல்லியிருக்கலாம்” என்றிட சிவாவால் சிரிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை.
“சிரிப்பு வந்தா சிரிச்சிடுங்க. ஏன் கஷ்டப்படுறீங்க?”
‘முகி என்னை இப்படி டேமேஜ் பண்ணி வச்சிருக்கியேடா’ என்று முணுமுணுத்தான்.
“இதோடு வரப்பு முடிஞ்சிருச்சுங்க. இனி தென்னந்தோப்பு. இந்த பரப்பு சமதளமா இருக்கும். நடக்கலாம்.”
“தேன்க்ஸ் சிவா.”
“நீங்க பழக ஸ்மூத்தா இருக்கீங்க. அப்புறம் ஏன் அன்னைக்கு கயல்கிட்ட அப்படி ஒரு ஆர்க்யூ.” தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.
“பார்க்கிறதெல்லாம் நம்பக்கூடாது சிவா” என்ற பார்த்திபன் இப்போ முன்னே நடந்தான்.
“கூல்…” தோப்பிற்கு நடுவில், இடையில் கை ஊன்றி நின்ற பார்த்திபன் சுற்றி பார்த்தவாறு கூறினான்.
“இங்கு எப்பவும் இப்படித்தான் ஏசி போட்ட மாதிரியிருக்கும்” என்று அவனருகில் வந்த சிவா, “அதோ கயல்” என்று தோப்பிற்கு மறுமுனையை காண்பித்தான்.
கயல் என்றதும் பார்த்திபனின் கண்கள் ஆர்வமாக தன்னவளைத் தேடி அவளில் நிலைத்தது.
பின்னணியில் மலை முகட்டில் எட்டி பார்த்த சூரியனின் கதிர்வீச்சு கயலின் முகத்திற்கு பொலிவை கொடுத்திருந்தது. ஒருவித இயற்கையின் தேஜஸில் அவளின் தேகம் மின்னியது.
‘ராட்சசி… கொல்லுறா!’ என உள்ளுக்குள் மருகிய பார்த்திபன், அருகில் சென்றான்.
பாவாடையையும், தாவணி முனையையும் ஒரு பக்கம் இடையில் ஏற்றி சொருகி… கத்தரி செடிகள் நடப்பட்டிருந்த பரப்பில், கைகளால் மண்வெட்டி பிடித்து பாத்திகளை சீரமைத்து நீர் பாய வழி செய்து கொண்டிருந்தாள்.
அனாயசமாக அலட்டிக்கொள்ளாது சீரான வேகத்தில் கைகள் பாத்தியை வெட்டிக் கொண்டிருந்தது. அதில் ஒரு நேர்த்தி.
பார்த்திபனின் புருவம் தன்னைப்போல் உயர்ந்தது.
‘பார்த்தி ஸ்டெடி டா ஸ்டெடி. இப்போ அவள் உன் ஆப்போசிட்டர். காதலெல்லாம் இந்த வயலுக்கு அப்பால் தான்’ என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவன் அவளுக்கு பக்கவாட்டில் வந்து நின்றான்.
தானொருவனை அழைத்து வந்தோம் என்பதையே மறந்தவராக, கொடி வகைத் தாவரங்களுக்கு அடிக்க… வேப்ப எண்ணையை சரியான அளவில் கலந்து கொண்டிருந்தார் மாணிக்கம்.
“மாமா நேற்று உழுத வயலில் மண்புழு உரம் கொஞ்சம் தூவி விடுங்க.” பேசிக்கொண்டே வேலையில் கவனமாக இருந்த கயல் அருகில் அரவம் உணர்ந்து, “அண்ணா கோவில் வேலை முடிஞ்சுதா?” என்று நிமிர்ந்து பாராமலே வினவினாள்.
“கோவிலில் ஏதோ ரெண்டு பிரிவுக்கு இடையில் தகறாராம் கயல். அதனால் கோயிலையே மூடிட்டாங்க.”
“வேற வேலையே இல்லை. எதைவைச்சு அடிச்சிக்கலாம் காத்துகிட்டே இருப்பாங்க போல” என்று சிவா சொல்லியதற்கு பதில் பேசிய கயல், குரல் வேறு திசையிலிருந்து வந்ததை உணர்ந்து தனக்கு அருகில் யாரென்று வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.
சூரிய ஒளி கண் கூசிட, கண்ணை தேய்த்து சற்று நகர்ந்து பார்த்தவள் நிச்சயம் பார்த்திபனை எதிர்பார்க்கவில்லை.
“என்ன மேடம் எப்படி இருக்கீங்க?” உண்மையிலே அவளின் நலமறியத்தான் கேட்டான். அவனின் பார்வை மேலிருந்து கீழ் அவளை ஆராய்ச்சியாய் அளந்தது.
கண்களிலிருந்த கூலர்சையும் தாண்டி அவனின் பார்வையின் குறுகுறுப்பை உணர்ந்தவள், இடையில் சொருகியிருந்த ஆடையை நீக்கி சரி செய்து கொண்டாள்.
‘தன்னை என்ன நினைத்து விட்டாள்.’ மெல்லிய கோபம் அவனிடம்.
“அம் நாட் தட் டைப் ஆப் கைய்.” சுள்ளெனக் கூறினான்.
“ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வளவுதான்.” மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
“ஓகே. நான் பர்ஸ்ட் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலை.”
“நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும் அவசியமில்லை.”
பார்த்திபனின் உண்மையான உயரம் அறிந்ததும் இந்த மாதிரி வேலைக்கெல்லாம் அவன் வர மாட்டான் என்றே நினைத்திருந்தாள் கயல். அத்தோடு அன்று தன் இயல்பை மீறி பார்த்திபனிடம் மட்டும் அவ்வாறு பேசியது அவளுக்கே வித்தியாசமாக இருந்திட… தேவையில்லாது வம்பு இழுத்துவிட்டோமென்று வருந்தியிருந்தவளுக்கு இப்படி பார்த்திபன் கண் முன் வந்து நிற்பது கோபத்தை தான் உண்டாக்கியது.
“ஏன் வந்தீங்க?”
“என்ன கேள்வி இது?”
“…”
“மீடியா முன்னாடி அப்படியொரு சவால் விட்டுட்டு ஏன் வந்தேன்னு கேக்குற? இதுல நான் குவிட் பண்ணா என்னோட நேம் என்ன ஆகுறது. ஜெயிக்குறனோ இல்லையோ ட்ரை செய்து பார்த்தடலான்னு வந்துட்டேன்.”
அவனின் பதில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்திட மேற்கொண்டு வாதிட அவளால் முடியவில்லை.
“சாரி…”
“எதுக்கு?”
“அன்னைக்கு அப்டியெல்லாம் பேசியிருக்கக்கூடாது. இங்கு உங்களுக்கு செட் ஆகாது. உடம்புக்கு முடியாமல கூட போகலாம்.” உண்மையிலேயே தன்னால் ஒருவன் வருந்துவது பிடிக்காது அக்கறையில் தான் கூறினாள்.
“தட்ஸ் மை பிராப்ளம். ஐ கேன் மேனேஜ்.” மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு சொன்னான்.
இந்த கயலையும் பார்த்திபனுக்கு அத்தனை பிடித்தது.
‘லவ் யூ டி. எப்போ உன்கிட்ட சொல்லுவன்னு இருக்கு.’
“எதாவது சொல்லுங்களேன்.” கிட்டத்தட்ட வேண்டாமென்று மன்றாடினாள்.
“நான் எங்கு ஸ்டே பண்ணனும்.”
“ப்ளீஸ் மிஸ்டர்.பார்த்திபன் புரிஞ்சிக்கோங்க. அது ஏதோ கோபத்தில் பேசியது.”
“நைட் ட்ராவல் பண்ணது. பிரஷப் ஆகணும்.” அவன் பிடியில் நிலையாய் நின்றான்.
“ரொம்ப அடம் பண்றீங்க. நீங்களே முடியலன்னு ஓடப்போறீங்க பாருங்க” என்றவள் முன் செல்ல அவன் அவளைத் தொடர்ந்தான்.
‘இவ்ளோ சாப்ஃட்டா நீ. உன்னை அவ்வளவு பேசிய எனக்காகவே இவ்வளவு யோசிக்குற.’
தென்னந்தோப்புக்கு நடுவிலிருந்து ஓட்டு வீட்டிற்கு அழைத்து வந்தவள், “இங்க சிவாண்ணா இருக்காங்க. அவரோட தங்கிக்கோங்க. ஒரு ரூம் பூட்டியிருக்கும். அதை யூஸ் பண்ணிக்கோங்க. சிவா அண்ணாவை கிளீன் பண்ணித்தர சொல்றேன்” என்றவள் “வீட்டுக்கு பின்னால் கிணறு பம்ப் செட் இருக்கு. நீச்சல் தெரியுமா?” எனக் கேட்டுக்கொண்டே அங்கு சென்றாள்.
“ஒய்?”
“இந்த கிணறு ரொம்ப ஆழம். நீச்சல் தெரியலன்னா கிட்ட வராதீங்க” என்று சொல்லியவாறே மோட்டார் வழியாக நீர் இறைத்துக் கொண்டிருந்த இடத்தில் கை கால்களை சுத்தம் செய்தவள், இரு கைகளாலும் தண்ணீரை பிடித்து முகத்தில் வாரி அடித்தாள்.
அக்காட்சி அவனுள் கவிதையாய் பதிந்தது.
“வொர்க் எப்போ ஸ்டார்ட் பண்ணனும்?”
“சார் இப்போ தானே வந்தீங்க. நாளைக்கு பார்க்கலாம்.”
பார்த்திபன் தோளை குலுக்கிக்கொண்டான்.
‘அவ்வளோ ஆட்டிட்யூடா உனக்கு. நீயா இங்கிருந்து போவ.’ மனதோடு சொல்லிக்கொண்டவள் அவனைப் பார்த்து உதட்டை இழுத்து வைத்து சிரித்தாள்.