அத்தியாயம் 🌾 32 :
வெய்யோன் புலர்ந்தும் புலரா வேளை.
கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்தவாறு ஓட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்தான் பார்த்திபன்.
விண்ணை முட்டிடும் உயரம் வளர்ந்து நின்ற தென்னை மரங்களின் கீற்று வழியே தோப்பிற்குள் விழுந்த சூரியனின் கதிர்கள் அவ்விடத்தை இளம் மஞ்சளாய் காட்சியளிக்க, அவ்வழகு கண்களை கொள்ளை கொண்டது.
சற்று தூரத்தில் சலசலக்கும் நீரின் சப்தம்… பட்சிகளின் கான இசை… காற்றில் அசையும் கீற்றுகளின் ஓசை… செவி நுழைந்து மனதிற்கு இதம் சேர்த்தன.
‘காலை நேர பரபரப்பான ஓட்டமின்றி இதுவும் நல்லாத்தான் இருக்கு.’ சொல்லிக்கொண்டவன் தோப்பை சுற்றி ஓடத் துவங்கினான்.
“விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டா இந்த உடற்பயிற்சியெல்லாம் தேவையே இல்லை.” அவனுக்கு பின்னால் தொடர்ந்து வந்த சிவாவின் பேச்சில் பார்த்திபனிடம் மென் புன்னகை.
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தவனின் ஓட்டம் சமதள பரப்பு முடிந்து வரப்பு தொடங்கியதும் நின்றது.
‘இதுமேல் நடக்கவே வரல, எப்படி ஓடுறது.’ இடுப்பில் கைகளைக்குற்றி யோசித்தபடி இருந்தான். நீண்ட வரப்பு முடிந்ததும் சிறிய அகலம் கொண்ட கரிய தார்சாலை. ஓட்டத்தை காரணமாக வைத்து கயலின் வீட்டிற்கு சென்று தாய் தந்தையை பார்க்க வேண்டுமென்பது அவனின் எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போ?
திரும்பி போகும் எண்ணமில்லை.
“இப்படியே நின்னுட்டு இருந்தா பின்னால் வரவங்களுக்கு யார் வழிவிடுவா?”
கயலின் குரல்.
கேட்டதும் கண்டுபிடித்துவிட்டான்.
வேகமாகத் திரும்பி கண்களுக்குள் சிறை வைத்திடத் துடித்தாலும், ஸ்லோ மோஷன் என்பார்களே அதுபோல் திரும்பினான்.
“நான் சிவான்னு நினைச்சேன்.”
“நம்பிட்டேன்.” பார்த்திபனை கடந்து வரப்பில் கால் வைத்தாள்.
“என்ன இவ்வளவு காலையிலே?”
“நேரம் காலம் பார்த்து செய்ய இதுவொன்னும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து பார்க்கும் வேலையில்லை.” தான் அவ்வளவு தூரம் இறங்கி வந்து கேட்டும், நெல் விளைவித்து காண்பிப்பேன் என்று நிற்பவனிடம் இனி தன்னுடைய மென்மை சரிவராதென்று நினைத்தவள், அப்போதிலிருந்தே பார்த்திபனிடம் சிடுசிடுப்பாக நடக்க முடிவெடுத்தாள். அதன் தொடக்கமே இந்த வெட்டு ஒன்று துண்டு ரெண்டானப் பேச்சு.
“காலையிலே ச்சில்லி எதுவும் சாப்பிட்டியா என்ன? இவ்வளவு காரமா பேசுற!” அவன் நக்கல் செய்வதாகத்தான் அவளுக்குத் தோன்றியது.
“மிளகாய் செடிக்குத்தான் தண்ணி பாய்ச்சிட்டு வர்றேன்.”
“அப்போ என்னோட கெஸ் சரிதான்.”
“வேண்டாம் என்கிட்ட ரொம்ப வச்சிக்காத… எக்குத்தப்பா எதாவது பண்ணிடுவேன்” என்றவள் “உன்னோட வெட்டிப்பேச்சு பேச எனக்கு நேரமில்லை” என்று நடக்கத் துவங்கினாள்.
“இதுல எப்படி இவ்வளவு ஃபாஸ்டா ஸ்டெப் வைக்குற?” தனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்தவர்கள் செய்யும்போது வரும் வியப்பு.
“எப்பவும் நடக்குற மாதிரி தான். இதுக்குன்னு ஸ்பெஷல் கோர்ஸ் முடிச்சிட்டா வருவாங்க.” ‘இப்போது அவள் தன்னை நக்கல் செய்கிறாளோ’ என நினைத்தான்.
“எனக்கு இதுல நடக்க வரல. அதான் கேட்டேன்.”
அவனின் முகத்தில் உண்மை இருக்க…
“செருப்பெல்லாம் போட்டு நடந்தால் நடக்க முடியாதுதான். கழட்டி வச்சிட்டு நட. பூமியில பெருவிரல் அழுந்த கால் வைக்கணும். அப்போதான் வழுக்காது. கால் இடறாது.” சொல்லியவள் முன்னே செல்ல… அவனோ வரப்பையும் தன் காலிலிருந்த காலணியையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
“இதுக்கே இம்புட்டு யோசிச்சிட்டு இருந்தா… சவாலில் ஜெயிக்கவெல்லாம் முடியாது. ரெண்டு நாளில் ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்.” கயலின் குரல் உரக்கக் கேட்டது.
பார்த்திபனுக்கு தன்னுடைய ஈகோவை தூண்டியதை போலிருக்க… கண்களை இறுக மூடிக்கொண்டு காலணிகளை கழட்டியவன், வரப்பில் கால் வைத்தான். தன்னுடைய முதல் அடியை பதித்தான்.
வரப்பிலிருந்த ஈரம் ஜிவ்வென்று அவனின் மூளை வரை தாக்க… உடல் அதிர்ந்து அடங்கினான். நாடி நரம்பெல்லாம் சில்லென்று தாக்கிய உணர்வு.
‘இதில் ஜெயித்தால் தான் காதலை சொல்வதில் கூட ஒரு அர்த்தம் இருக்கும்’ என்று எண்ணியவன்… கயலின் காதலை பெறுவதற்காக எதையும் செய்திட முடிவெடுத்தான்.
அது அவனிற்கு பிடிக்காத ஒன்றாக இருப்பினும் செய்திடும் வேகம் அவனுள் உருவானது.
ஐந்தாறு அடிகள் மெல்ல எடுத்து வைத்தவன், அடுத்த நான்கடிகளை வேகமாக வைத்து பட்டென்று கண்களை திறந்து வரப்பினை பார்க்காது நேர்கொண்ட பார்வையுடன் வளைந்து நீண்டு காணப்பட்ட வரப்பை கடந்து சாலையில் கால் வைத்தான்.
சில நிமிடங்கள் கடந்திட… மீண்டும் வரப்பில் இறங்கி நடந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், தென்னந்தோப்பிற்கும் சாலைக்கும் இடையிலிருந்த வரப்பில் மீண்டும் மீண்டும் நடந்தான்.
தன்னால் எவ்வித அசூயையும் இல்லாமல் காலணிகளின்றி வரப்பில் நடக்க முடியுமென்று அவனுள் திடம் பிறந்திடும் வரை நடந்தான்.
இப்போது காலணி இன்றி நடக்கும் அருவருப்பு அவனிடம் இல்லை.
வெறுங்காலுடனே வீட்டிற்கு சென்றான்.
“எங்க சார் போனீங்க? இவ்வளவு தூரமா நடந்தீங்க?” தெரிந்தே கேட்டான் சிவா.
“இங்க தான் வரப்போட நீள அகலம் அளந்துட்டு இருந்தேன்.” நீர் இரைத்துக் கொண்டிருக்க… கால்களை கழுவியன் அங்கிருந்த கல்லின் மீதே அமர்ந்தான்.
“நீங்க காலையில என்ன குடிப்பீங்க?”
“நான் குடிக்கிறது இருக்கட்டும். நீங்கலாம் என்ன குடிப்பீங்களோ, சாப்பிடுவிங்களோ அதையே எனக்கும் கொடுங்க. இங்கு இருக்கும்போது அதற்கு ஏத்த மாதிரிதானே இருக்கணும்” என்றான்.
“அது சரி தான்” என்ற சிவா, பார்த்திபனின் கையில் காபி அடங்கிய தம்பளரை வைத்தான்.
“நீ போட்டியா?”
“கயலு தான் கொண்டு வந்துச்சு. அநேகமா கயல் தான் போட்டிருக்கணும். சாப்பாடும் அங்கிருந்து கயலே கொண்டு வந்திடும்” என்ற சிவா, நீர் இரைத்துக் கொண்டிருந்த மோட்டாரை நிறுத்தினான்.
“இங்கிருக்கும் வயல் முழுக்க கயலுதா?”
“ம்ம்ம்… கயலு அப்பா ஒரு பன்னெண்டு பதிமூனு ஏக்கர் வச்சிருந்தார் போல… அப்புறம் வயலுக்கு சுற்றி யாரவது விக்க முடிவு செய்தால் கயலே வாங்கிக்கும். இப்போ இருபதுக்கு மேல இருக்கும் நினைக்குறேன்.”
“எப்படி மேனேஜ் செய்றீங்க.”
“எல்லாமே கயலே பார்த்துக்கும் சார். அது சொல்லுறதை நாங்க செய்வோம். அவ்வளவு தான்” என்றவனிடம்,
“கயல் வீடு வரை போயிட்டு வருவோமா?” எனக்கேட்டான் பார்த்திபன்.
“எதுக்கு சார்?”
“இந்த சாரெல்லாம் வேண்டாம் சிவா.”
“ம்.”
இருவரும் அப்படியே பேசியவாறு நடந்தனர்.
சாலையில் அவர்களுக்கு எதிரில் தேவராஜன்.
‘போச்சுடா!’ பார்த்திபனை பார்த்ததும் தேவராஜன் பின்னால் திரும்பிட…
“ஐயா” என்று சிவா அழைத்து அவரை நிறுத்தியிருந்தான்.
“இவர் கயலின் மாமா.” பார்த்திபனிடம் சொல்லியவன், அருகில் வந்துவிட்ட தேவராஜனிடம்… “நம்ம கயல்கிட்ட சவால்விட்டாரே, அவர் தான் இவர்” என்றான்.
தேவராஜன் திருதிருத்தார்.
‘எனக்கே என் பையனை அறிமுகம் செய்றானே.’
வெளியில் பார்த்திபனை பார்த்து ஈ என்று சிரித்து வைத்தார்.
“இவர் சிங்கப்பூரில் பெரிய பிஸ்னெஸ் மேன். ஹலோ சொல்லுங்க” என்றான் பார்த்திபனிடம்.
“ஹாய் சார்” என்று தேவராஜனிடம் கைகுலுக்க கை நீட்டினான் பார்த்திபன்.
தேவராஜனும் கை பற்றி விடுவித்தார்.
பார்த்திபன் அடி கண்களால் தந்தையின் திணறலை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தான்.
தேவராஜிற்கோ, எங்கு பேசினால் மகனென்று உளறிவிடுவோமென அஞ்சி வாயினை திறக்காது நின்றிருந்தார்.
“சார் எதுவும் பேசமாட்டாரா?” கேட்டது பார்த்திபன்.
அவரோ ஈ… ஈ… என தலையை ஆட்டியபடி இருந்தார்.
‘இன்னைக்கு இந்த ஐயாவுக்கு என்னாச்சு.’ நினைத்த சிவா, “வாக்கிங் வந்திங்களா ஐயா?” எனக் கேட்டிட அதற்கும் அதே தலையசைப்பு அவரிடம்.
“சரி நீங்க நடங்க” என்ற சிவா, “இவருக்கு இன்னைக்கு எதோ ஆச்சு, நீங்க வாங்க” என்று பார்த்திபனுடன் முன் நடந்தான்.
சில அடிகள் முன்னால் சென்ற பார்த்திபன், திரும்பிப் பார்க்க… தேவராஜனும் மகனைத்தான் பார்த்திருந்தார்.
பட்டென்று கண்ணடித்தவன் முன் திரும்பிக்கொள்ள,
“இந்த பாடு இன்னும் எத்தனை நாளுக்கோ” என்று பெருமூச்செறிந்தார்.
நேற்று காரினை எங்கு நிறுத்தியிருந்தானோ அங்கு அப்படியே நின்றிருந்தது.
பார்த்திபன் காரை நோக்கி சென்றிட, சிவா வீட்டிற்குள் சென்றான்.
காரினை அன்லாக் செய்தவன், பின்னாலிருந்து தன் உடைமைகள் அடங்கிய பெட்டி ஒன்றையெடுத்து வெளியில் வைத்தான்.
நேற்று கயலிடம் பேசிவிட்டு தோப்பு வீட்டிற்குள் சென்று படுத்தவன், பயண அலுப்பின் காரணமாக மாலை கவிழுந்து தான் எழுந்திருந்தான்.
சிவா கொடுத்த உணவினை… எவ்வித தயக்கமுமின்றி உண்டவன், தன்னுடைய பொருட்களை எடுக்க கயல் வீட்டிற்கு செல்ல வேண்டுமென சொல்ல… “இப்போ இருட்டிடுச்சே, வரப்பில் உங்களால் நடக்க முடியுமா?” என்ற சிவாவின் கேள்வி அப்படியே அவனை மீண்டும் படுக்கச் செய்திருந்தது.
“உள்ள வராமப்போர?.”
பெட்டியை எடுத்துக்கொண்டவன் மீண்டும் வயலை நோக்கி செல்ல முற்பட… கயல் அவனை அழைத்திருந்தாள்.
“இப்படியும் அழைக்கலாமோ!” என்று கேட்டவன், உரிமையுள்ளவன் போல வீட்டிற்குள் சென்று இருக்கையில் அமர்ந்தான்.
மகனை பார்த்த மங்கை… ‘இது உனக்கு தேவையாடா?’ என பார்வையாலேயே கேட்டார். இதழ் விரியா சிரிப்பை அவருக்கு பதிலாகக் கொடுத்தவன், கயலிடம்… “இவங்க உங்க அம்மாவா” என கேட்டிருந்தான்.
பார்த்திபனின் நடிப்பில் மங்கைக்கு நெஞ்சுவலி வரும் போலிருந்தது.
‘என்னம்மா நடிக்கிறான்?’ வாய்பிளந்தபடியே அடுக்கலைக்குள் சென்று மறைந்தார்.
“அத்தை.”
பார்த்திபனின் விழிகள் வீட்டை சுற்றி வலம் வந்தவன.
“வீடு நல்லாயிருக்கு.” மனம் திறந்து கூறினான்.
அவனின் பார்வை அங்கு மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் நிலைத்தது. எழுந்து சென்று கை உயர்த்தி அதனை வருடினான்.
ஏதோ உணர்வில் செய்துவிட்டான்.
கயல் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்தவன்…
“உன் அப்பா அம்மாவா கயல். இப்போ உயிரோடில்லையா?” என சாதரணமாகக் கேட்பது போல் தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டவன் அடுத்து மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை பார்த்தவாறு நின்றுவிட்டான்.
அதில் அழகரின் கையில் அவன்.
“கண்ணா!” அழகரின் அன்பான விளிப்பு அவனின் செவியை நிறைத்தது.
‘மாமா.’ அவனின் மனம் ஓலமிட்டது.
அவரின் நினைவே இல்லாமல் இருந்த தன்மீது அத்தனை கோபம் வந்தது.
சொல்ல முடியாத வேதனையில் அவனின் முகம் கசங்கியது.
‘ரொம்ப ஃபீல் பண்றான்!’
“ஹலோ… இறந்து போனது என்னோட அப்பா அம்மா. நீ ரொம்பதான் கவலைப்படுற?” கயலின் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.
“நான் எப்போ என் வொர்க் ஸ்டார்ட் பண்ணனும்?”
‘ஹோ உனக்கு அவ்வளவு திமிரா!’ நினைத்தவள், “நான் வயலுக்கு வந்து சொல்றேன்” என்றாள்.
“என்ன’ண்ணா பறிச்சாச்சா?”
“ஹ்ம். ஆச்சு கயல். எல்லாம் நெத்தாகிப்போச்சு நினைக்கிறேன். எண்ணெய்க்கு போட்டுக்கலாம்” என்றான்.
அவர்களின் பேச்சு பார்த்திபனுக்கு புரியவில்லை.
“என்னது?”
“வீட்டுக்கு பின்னால் நாலு தென்னை மரம் இருக்கு. காயெல்லாம் முத்திப்போச்சு. அதான் பறிச்சிப்போட்டு வர்றேன்” என்று விளக்கமளித்தான் சிவா.
“சரி போகலாமா?”
பார்த்திபன் சிவாவிடம் கேட்டான்.
“சாப்பிட்டு போங்க” என்ற கயலிடம், “நான் சாப்பிட நேரமாகும்” என சொல்லியவன் தன் பெட்டியைத் தூக்க, “அண்ணா நீங்க தூக்கிக்கோங்க” என்று சொல்லியவளிடம் சிறு அக்கறை பார்த்திபனின் மீது.
அது எதனால் என்று அவளுக்குத் தெரியவில்லை. தன்னைப்போல் கூறியிருந்தாள்.
பார்த்திபனின் முகத்தில் பிரகாசம்.
தான் சொல்லியதை அவன் அதீத உரிமை எடுத்துக்கொள்வதாக எண்ணிவிடக் கூடாதென்று நினைத்தவள், “அந்த வரப்புல வெறும் கையோடவே சாருக்கு நடக்கத் தெரியாது. இதுல இந்த பெட்டியையும் தூக்கிட்டு நடந்தால் கீழ தான் விழனும்” என்று தான் சொல்லியதன் பொருளை மாற்றினாள்.
பார்த்திபன் ஏதோ ஒரு வகையில் அவளை ஈர்க்கின்றான். அதனை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே அன்று அவனிடம் தேவையில்லாது வாக்குவாதம் செய்தாள். நேற்று அவனில் அக்கறை கொண்டு இந்த சவாலெல்லாம் வேண்டாமென்றாள்.
எதனால் அவன்மீது இந்த நாட்டம். அவளுக்கே தெரியவில்லை.
‘கண்ணாவை நீ கல்யாணம் செய்துக்கணும் கயல்.’ தேவையில்லாது அழகர் சொல்லியது நினைவுக்கு வந்தது. தானாக அவளின் மனம் இறுக்கம் பெற்றது.
“அவரை கொடி காய்க்கல இல்லை. இன்னைக்கு பூ போட்டு பார்ப்போம். அப்பவும் காய் வைக்கலன்ன, கொடியை அழிச்சிட்டு புது விதை போடுவோம். அதுக்கான ஏற்பாட்டை பாருண்ணா. நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று சிவாவை மட்டும் பார்த்துக்கூறிய கயல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
திடீரென இந்த விலகல் தன்மை எதனால் என்ற ஆராய்ச்சியுடன் சென்றான் பார்த்திபன்.
இவர்கள் சென்ற ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கயல் வயலுக்கு வந்துவிட்டாள்.
ஓட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த பார்த்திபன், தன்னுடைய பாதத்தை பிடித்துவிட்டபடி இருந்தான். புதிதாக பயின்ற நடை வேலையை காட்டத் துவங்கியிருந்தது. அரிப்புடன் கூடிய எரிச்சல்.
“அண்ணா ரெடியா?” என்ற கயல் பார்த்திபனை அழுத்தமாக பார்த்துவிட்டு சென்றவள், சிவாவுடன் அவரை கொடிக்கு பூ போடத் துவங்கினாள்.
இம்முறை ‘ஹேண்ட் பாலினேஷன்’ எனப்படும்.
ஒரு தாவரம் மலட்டுத்தன்மை உடையது என்றால் அதில் பூ வைத்து காய்க்காய்க்கும் நிகழ்வு நடைபெறாது. ஆனால் இதில் பூக்கள் நிறைய இருந்தும் காய் மட்டும் வைப்பதில்லை.
பொதுவாக பறவைகள் பூச்சிகள் செடிகளில் உட்கார்வதால், இடம்விட்டு இடம் தாவும் முறையில் பூக்களிடையே எளிதாக மகர்ந்தச்சேர்கை நடைபெற்று காய் காய்த்துவிடும். இங்கு இதுபோல் நடந்தும் பலனில்லை.
அதனால் ஆண் பூக்களை தேடி பறித்து, பெண் பூக்களில் வைத்து கைகளால் தேய்க்கும் போது அவற்றில் பாலினேஷன் நடைபெறுகிறது. அடுத்து அவை காய்க்காய்க்கும் தன்மையை பெறுகிறது.
அதையே சிவாவும், கயலும் இப்போது செய்கின்றனர்.
அதனை பார்த்தவாறு இருந்த பார்த்திபனின் பார்வை எப்போது கயல் மீது படிந்ததோ… தன்னை மறந்து மொத்தமாக அவளிடம் லயித்துவிட்டான்.
சிவா வேலையில் கவனமாக இருப்பதை கவனித்த கயல்… அவனின் கவனத்தை இழுக்காது, அங்கிருந்து நகர்ந்தவள் பார்த்திபனிடம் வந்தாள்.
இன்னமும் அவன் பாதத்தை தேய்த்தவாறு தான் இருந்தான்.
வீட்டிற்குள் சென்றவள், கிண்ணத்தில் எதுவோ எடுத்து வந்தாள்.
பார்த்திபனுக்கு அருகில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்தவள்,
“சுவற்றில் சாய்ந்து அமர்ந்து, காலை நீட்டுங்க” என்றாள்.
ஒருமுறை பன்மையில் அழைப்பவள், ஒருமுறை ஒருமையில் விளிக்கின்றாள். அவளின் மனமே விளங்கிடா நிலையில் அவள்.
அவனும் அதை உணர்ந்தே இருந்தான்.
எதுக்கென்றே தெரியாத போதும்… அவள் சொல்லியவாறு அமர்ந்தான்.
கயல் அவனின் பாதத்தை பிடிக்க… வேகமாக காலினை பின்னிழுத்தான்.
“ஹேய்… என்ன பண்ற?”
“கால் அரிக்குது தான?”
“ஆமா. அதுக்கு?”
“புதுசா சேற்று வரப்பில் கால் வைச்சு நடந்தா இப்படிதான் ஆகும். எனக்கும் ஆரம்பத்தில் இப்படிதான் இருந்தது” என்றவள் “கண்டுக்காம விட்டா, தோல் உரிந்து கொப்புளம் வரும்” என்றாள்.
அவளின் இந்த அக்கறை அவனுக்கும் பிடித்துதான் இருந்தது.
“சரி கொடு நானே போட்டுக்கிறேன்” என்றான்.
உடனே அவனது கையில் கிண்ணத்தை வைத்தவள், “சரி போட்டுக்கோ” என்று எழுந்துகொள்ள, அவனுக்குத்தான் ஏமாற்றமாகிப்போனது.
“இதை எப்படி போடுறது?”
“தெரியுதுல கொடு…” என்றவள் கிண்ணத்தை வாங்கி அதிலிருந்த தேங்காய் எண்ணெய் கலந்த மஞ்சளை தானே பூசிவிடத் தொடங்கினாள்.
அவளின் கையின் ஸ்பரிசம் அவனின் ஒவ்வொரு செல்லையும் தீண்டியதாய் உருகி தவித்தான். இமைகள் தானாக மூடிக்கொள்ள, அவளை இழுத்து அணைத்திடத் துடித்த மனதை கடிவாளமிட்டு தடுத்தான்.
இரு பாதங்களிலும் பூசி முடித்தவள் எப்போதோ சென்றிருக்க, அவளின் தொடுகையின் மிட்சம் எஞ்சி நின்றது அவனுள். இன்னும் அதை அனுபவித்தவனாக இமை அவிழ்க்க விரும்பாதிருந்தான்.