அத்தியாயம் 🌾 33 :
பம்ப் செட் தொட்டி சுவற்றின் மீது பார்த்திபன் அமர்ந்திருக்க… மங்கை அவனை முறைத்துக்கொண்டு நின்றார்.
“மாம் எனக்கு ஒன்னுமில்லை. ஜஸ்ட் அலர்ஜி.” அவன் அவரிடம் சாதரணாமாகத்தான் சொன்னான். மங்கையால் தான் ஏற்க முடியவில்லை.
தான் செடி வைப்பதற்கு மண்ணில் கை வைத்தாலே முகம் சுளிப்பவன் எப்படி விவசாயம் செய்யப்போகிறான் என்ற கவலையைத் தாண்டி மகனின் உடல்நிலையை எண்ணி அச்சம் கொண்டார்.
புதிய காற்று… புதிய மழையே புதிதில் ஒத்துக்கொள்வதில்லை. இதில் பார்த்திபனுக்கு இது முற்றிலும் மாறுபட்ட புதிய சூழல். பழக்கமில்லாத வேலை. அதுவே அவரின் பயத்திற்கான காரணம்.
“பாதம் எப்படி சிவந்திருக்கு பாரு கண்ணா!” மங்கை ததும்பினார்.
“கயல் இல்லையா?”
“பேச்சை மாத்தாதடா!”
“தெரியுதுல… இந்த டாபிக் விடுங்க மாம்.”
“யாரையோ பார்க்கணும் சொல்லி, கயலும் மாணிக்கமும் போயிருக்காங்க. அதான் நான் சாப்பாடு கொண்டு வந்தேன்” என்றவர் வாழை இலை அறுக்க சென்ற சிவா வருகிறானா என்றும் பார்த்துக்கொண்டார்.
“டாட் வரலையா மாம்.”
“அவருக்கு உன்னை சமாளிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருக்கு. யார் சொன்னாலும் மாத்திக்க போறதில்லை, நான் வந்து பேசினால் அவனுக்கு அப்பாவாதான் பேசுவேன். யாரோ மாதிரி நடந்துக்க முடியாது சொன்னார்.
நீங்க வரவே வேண்டான்னு வந்துட்டேன்.”
பார்த்திபனிடம் அட்டகாசமான சிரிப்பு.
“சிரிக்காதடா” என்று அதட்டிய மங்கை… “செருப்பில்லாம நடந்ததுக்கே இப்படி ஆகியிருக்கு” என்று வருந்திட சிவா அங்கு வந்து சேர்ந்தான்.
“வீட்டுக்குள்ளேவும் செருப்பு போட்டு நடக்குறவர்… அதான் ஒத்துக்கல, போகப்போக பழகிடும்.”
தங்களின் இலகுவானப் பேச்சிற்கு சிவா பதில் சொல்லியதை பார்த்திபன் ஆராயவில்லை.
“சரிப்பா சாப்பிடுங்க… நான் வர்றேன்” என்ற மங்கை பார்த்திபனை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றார்.
மங்கையின் வருத்தம்… அனைத்தையும் விரைந்து முடித்து, கயலிடம் காதலை முதலில் சொல்ல வேண்டுமென்ற வேகத்தை அதிகரித்தது.
ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று அடுத்தடுத்த நாட்கள் அவனுக்கு புரிய வைத்தது.
“இன்னைக்காவது நான் என்ன செய்யணும் சொல்றீயா?”
ஒரு ஐந்து நிமிடம் ஓரிடத்தில் சோம்பி உட்கார்ந்திடாத பார்த்திபனுக்கு கடந்த மூன்று நாட்களும் வெட்டியாக சென்றுவிட்டதாக, காலையில் வயலுக்கு வந்த கயலிடம் கோபமாகவே கேட்டிருந்தான்.
“ரெண்டு நாள் ஊரை சுத்தி பார்த்திட்டு கிளம்பிடுவிங்க நினைச்சேன்.”
“நான் வந்த வேலையை முடிக்காம போகமாட்டேன்.” அவனிடமிருந்த உறுதி அடுத்து கயலை பேசவிடவில்லை.
“அண்ணா பருத்தி போட்டிருந்த நாலு ஏக்கர் வயலில் இரண்டு ஏக்கர் இவர்கிட்ட காட்டுங்க” என்று சிவாவிடம் சொல்லிய கயல், பார்த்திபனிடம் திரும்பி “அதுல நீங்க நெல் பயிரிடலாம்” எப்போ ஆரம்பிக்குறீங்க சொல்லுங்க, நானும் மீதியிருக்க ரெண்டு ஏக்கரில் உங்களோட பயிர் செய்றேன். யாருக்கு அதிக விளைச்சல் வருது பார்ப்போம்” எனக்கூறினாள்.
“இதுதான் கரெக்ட்” என்ற பார்த்திபன், “சிவா வயலை பார்க்கலாமா?” என்றான்.
கயலின் அனுமதிக்காக அவளை ஏறிட்ட சிவா… கயலின் கண்ணசைவில் பார்த்திபனை அழைத்துக்கொண்டு கயல் சொல்லிய பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
வயலை சுற்றி பார்வையிட்ட பார்த்திபன்… “இதென்ன சிவா குச்சி குச்சியா நிக்குது?” எனக்கேட்டான்.
“இதெல்லாம் பருத்தி செடிங்க, போன வாரம் தான் அறுவடையாச்சு” என்றான்.
“இதை எப்போ கிளியர் பண்ணுவீங்க?”
வயல் முழுக்க காய்ந்து நின்று கொண்டிருந்த பருத்தி மிலாரினை காண்பித்து கேட்டான்.
“இதை அப்படியே மண்ணோடு சேர்த்து உழுதிட வேண்டியது தான். வேணுன்னா அடுப்பெரிக்க பொருக்கிட்டு போவாங்க” என்றான்.
“அப்போ என்ன பண்ணணுமோ பண்ணிடு சிவா.” எப்போதும் வேலை சொல்லியே பழக்கப்பட்ட பார்த்திபனுக்கு களத்தில் இறங்கி வேலை செய்யும் முறை எளிதில் வரவில்லை.
“சிவாண்ணா எதுக்கு செய்யணும், அவரா சவாலுன்னு வந்து நின்னாரு?” என்ற கயலின் குரலில் இருவரும் திரும்பிட…
“மேற்பார்வை மட்டும் பார்க்குறதுக்கு எதுக்கு சவால் விடணும்?” என்றாள்.
“ஃபைன்…” என்று கயலிடம் கூறியவன், “நாளைக்கு எனக்கொரு டிராக்டர் வேணும் சிவா. அரேஞ் பண்ணு” என்றான்.
“நம்மகிட்டவே ரெண்டு டிராக்டர் இருக்கு” என்று சிவா சொல்ல, “மாடு பூட்டி ஏர் உழுவ சொல்லுண்ணா. அப்போதான் சேத்துல வெறும் நாலு செடி நட்டு வைக்குற விவசாயியோட கஷ்டம் புரியும்” என்றவள் சென்றுவிட்டாள்.
இது அன்று தான் பேசியதற்கான பதிலடி என்று பார்த்திபனுக்கு புரிந்தது. சன்னமாக சிரித்துக்கொண்டான்.
“ஏரு மீன்ஸ்?”
விவசாயம் பிடிக்காத பக்கம் என்பதால். அப்பக்கம் தலையை கூட திருப்பியதில்லை அவன். ஆதலால் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் கேட்கும் நிலையில் பார்த்திபன் இருந்தான்.
சற்று யோசித்த சிவா, வீட்டிற்குள் சென்று பார்க்க… அப்போதுதான் நேற்று ஒருவர் உழுவதற்காக வாங்கிச் சென்றது நினைவுக்கு வந்தது.
“நிஜமா உங்களுக்கு தெரியாதா?”
பார்த்திபன் இல்லையென்று உதடு பிதுக்கி தோள் குலுக்கினான்.
“உங்கக்கிட்ட மொபைல் இருக்கா?”
“ம்” என்ற பார்த்திபன் அலைபேசியை அவனிடம் கொடுத்தான். கொடுத்த பின்னரே, அதில் தொடுதிரையில் கயலின் படம் இருப்பது நினைவுக்கு வந்தது.
“லாக் ஆகியிருக்கு.” சிவா பார்த்திபனிடமே மீண்டும் கொடுத்தான்.
நொடி நேரத்தில் பதட்டம் அடைந்திருந்தான் பார்த்திபன்.
உண்மையை சொல்வதில் அவனுக்கு ஒன்றுமில்லை. ஆனால் கயலிடம் காதலை சொல்லாது வேறு யாரிடமும் அவள்மீதுள்ள பிடித்தத்தை காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
“நீங்களே கூகிள் செர்ச் செய்து பாருங்க” என்ற சிவா, “உங்களுக்கு மாடு பிடிக்கத் தெரியுமா?” என்று கேட்க…
“வாட்.” பார்த்திபன் அதிர்ந்தான்.
இதுவரை மாட்டின் அருகில் கூட சென்று நின்றதில்லை. அவனிடம் மாடு பிடிப்பதைப்பற்றி கேட்டால் பாவம் என்ன செய்வான்.
அப்போதுதான் கூகுள் ஆண்டவர், தெளிவாக படத்தினை திரையில் காட்டிட…
“ஓ காட்… திஸ் இஸ்… இதுவா ஏர் பிடிக்கிறது” என்று தன் மொத்த அதிர்வையும் வார்த்தையில் காண்பித்தான்.
“இதுக்கே இவ்வளவு ஷாக்கா” என்ற சிவா, “இன்னும் போகப்போக நிறைய இருக்கே” என்றான்.
“இதை எப்படி சிவா பண்ணுவாங்க?”
பார்த்திபனிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் எவ்வித தயக்கமின்றி ஒவ்வொன்றையும் கேட்டான்.
சிவா எவ்வளவு பொறுமையாக சொல்லியும், தரையில் குச்சி வைத்து படம் வரைந்து விளக்கியும் பார்த்திபனுக்கு முழுதாக புரியவில்லை.
“ஏர் ஸ்டார்ட்டிங் பாயின்ட்டில் மாடுகளை கட்டணும் ரைட். நெக்ஸ்ட், மாடு… அதென்ன?…
ஹாங்… காட் இட். இட்ஸ் அ ரோப். அதை கையில் பிடிச்சிக்கிட்டா, மாட்டோட கன்ட்ரோல் நம்மகிட்ட இருக்கும். கரெக்ட்?”
பார்த்திபனுக்கு சொல்வதற்கே மூச்சு வாங்கியது.
“நாளைக்கு செம சீன் இருக்க போகுது” என்ற சிவா, “உங்களை பார்த்தால் எனக்கே பாவமா இருக்கு. பேசாம நீங்க கிளம்பி உங்க ஊருக்கு போயிடுங்களேன்” என்றான்.
“அது முடியாது.” பார்த்திபனின் அழுத்தம், உறுதியெல்லாம் சிவாவை ஆச்சரியப்படுத்தியது.
அன்று இரவு முழுக்க யூ ட்யூப்பே கதியென்று இருந்தான்.
ஏர் உழுவும் முறையை மீண்டும் மீண்டும் காணொளியாக பார்வையிட்டான்.
மனம் அழுத்தமாக இருந்தது.
தெரியாத வேலை… சரி வருமா வராதா என்ற குழப்பமே பார்த்திபனை சிந்திக்க விடாது தடை செய்தது.
யாரிடமாவது மனம் விட்டு பேசினால் நன்றாக இருக்குமென்று நினைத்தவன் முகிக்கு அழைத்திருந்தான்.
இங்கு நடப்பதையெல்லாம, பார்த்திபனின் அசைவு ஒவ்வொன்றையும் சிவாவின் மூலம் கேட்டறிந்து கொண்டுதானிருக்கிறான். வரப்பில் நடந்து பாதம் வலியென்பது வரை சிவா சொல்லியிருந்தான். கேட்டதும் பார்த்திபனுக்கு அழைத்து பேசிட துடித்தவன், அவனாக அழைக்காது சொல்லாது எப்படி எதைப்பற்றி பேசுவதென்று தெரியாது பார்த்திபனின் அழைப்பிற்காக காத்திருந்தான்.
“அத்தான் ஆர் யூ ஓகே?”
எடுத்ததும் முகியின் நலவிசாரிப்பு பார்த்திபனுக்கு அத்தனை அழுத்தத்தையும் பறந்து போகச் செய்தது.
“ம். குட்” என்று சொல்லியவனின் குரலில் தான் ஸ்ருதியே இல்லை.
“என்ன அத்தான் வாய்ஸ் ஒருமாதிரி இருக்கு?”
“இங்கு, அட்மாஸ்பியர் செட் ஆகல முகி” என்று உண்மையைத்தான் சொன்னான்.
“அவ்வளவு தானா?” அவன் உண்மையை சொல்லிவிட மாட்டானா என்று நினைத்தான் முகி.
“வந்த வேலை ரொம்பவே கஷ்டமாயிருக்கும் போல முகி.”
எத்தனை பெரிய தொழில் ஸ்தாபனத்தின் முதலாளி. எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்து இன்று இந்நிலையில் இருக்கின்றான். அவனே கஷ்டம் என்று சொல்லும்போது முகிக்கு வேதனையாக இருந்தது.
“அத்தான்.” முகியின் குரல் கரகரத்தது.
“ஹேய்… ஒன்னுமில்லை முகி. ஐ கேன் மேனேஜ். நீ ஃபீல் பண்ணாத.”
“அத்தான்…” என்று விளித்த முகி பேசாது அமைதியாயிருக்க, பார்த்திபன் அவன் பேசுவதற்காகக் காத்திருந்தான்.
“கஷ்டமாயிருந்தா முடியாதுன்னு சொல்லிடுங்க அத்தான். கயல்கிட்ட பேசிக்கலாம்.” உண்மையை பட்டென்று உடைத்தேவிட்டான் முகிலன்.
“முகி…” பார்த்திபனிற்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
“நீங்க தான் பார்த்திபன் அப்படின்னு எனக்குத் தெரியும் அத்தான்.”
“ம்…ஐ கெஸ்டு.”
“தெரிஞ்சுதான் உங்களை பார்க்க வந்தேன்.”
“அப்புறம் ஏன் உண்மையை சொல்லல.” கேட்டுக்கொண்டே வீட்டிற்குள்ளிருந்து வெளிவந்து தோப்பிற்குள் நடந்தபடி பேசினான்.
“நீங்களே சொல்லணும் நினைச்சேன்.”
“இப்போ ஏன் சொன்ன?”
“நீங்க கஷ்டமாயிருக்கும் சொன்னது ஒருமாதிரி இருக்கு அத்தான். அதான் உங்க பக்கம் நானிருக்கேன் துணை அப்படிங்கிற எண்ணமே பாதி கஷ்டத்தை குறைக்குமே அதான் சொன்னேன்.”
முகியின் பாசம் பார்த்திபனை நெகிழ்த்தியது.
“நான் இங்கு வந்ததுமே கயல் வேண்டாம் சொன்னா(ள்) முகி. நான்தான் கேட்கலை. இப்போ ஆரம்பிக்கும் முன்பே முடியாதுன்னு சொல்ல என்னால் முடியாது.
எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் முயன்று பார்ப்பதுதான் என்னுடைய குணம்.”
“புரியுது அத்தான். எதுவாயிருந்தாலும் சிவாகிட்ட கேளுங்க. அவனுக்கும் நீங்க யாருன்னு தெரியும்.”
“டேய்… என்னடா ஊர் முழுக்க சொல்லி வச்சிருக்க?” கிண்டலாகக் கேட்டான். இப்போது பார்த்திபனுக்கு புரிந்தது, காலை மங்கை அவனிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தும் சிவா இயல்பாக நடந்துகொண்டதற்கான காரணம்.
“இல்லை… இல்லை அத்தான்.
நீங்க ஊருக்கு கிளம்புறீங்க தெரிந்ததும், சிவாவிடம் உங்களை பார்த்துக்க சொல்லி சொன்னேன். நீங்க என்ன கேட்டாலும் செய்யணும் அப்படின்னு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சொல்லிட்டேன் போல… பயபுள்ள என்னை சந்தேகமா பார்த்து,
அவன் நம்ம கயலுகிட்ட அவ்வளவு திமிரா பேசி… வம்புக்குன்னு சவாலுக்கு வரான், அவனை எதுக்கு பார்த்துக்கணும். வரட்டும் ஓட விடுறேன்னு உங்கமேல் கோபமா இருந்தாங்க. அதான் நீங்க தான் மங்கை அத்தை பையன்னு மட்டும் சொன்னேன்” என்று இறங்கிப்போன குரலில் கூறினான்.
“அவ்வளவுதானே வேறொன்னும் சொல்லலயே?”
“ம்ஹூம்… நீங்க கயலை விரும்புறதையெல்லாம சொல்லவே இல்லை.” அப்பாவியாக பதில் தந்தான்.
“நினைச்சேன்… உனக்கெப்படித் தெரியும்?”
“சொன்னா நீங்க திட்டுவீங்க!”
“உன்னை நானெப்படி திட்டுவேன் முகி. உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்குமே!” உணர்ந்து கூறினான்.
“என்னையில்லை அத்தான் சொன்னவங்களை.”
“தெளிவுதான்” என்ற பார்த்திபன், “மாம் அண்ட் டாட், இவங்களில் யாராவது தான் சொல்லியிருக்கணும்” என்றான்.
“நீங்க எதுவும் சொல்லிடாதீங்க. உங்களுக்கு அத்தை மாமா ரொம்ப பயப்படுறாங்க.”
முகி சொல்லியதில் பார்த்திபனால் சிரிப்பினை கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவ்விடமே அதிர சிரித்துவிட்டான்.
வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த சிவா என்னவோ ஏதோவென்று வெளியில் ஓடி வந்தவன், பார்த்திபன் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை கவனித்து விட்டு உள் சென்றான்.
“ஆமா… ஆமா… ரொம்ப பயந்தவங்க தான்” என்ற பார்த்திபனுக்கு மனம் லேசான உணர்வு.
“தேன்க்ஸ் முகி. ரொம்ப டென்ஸ்டா இருந்தேன். நௌ ஓகே.”
“என்னாச்சு அத்தான். வேலை ஆரம்பிச்சிட்டிங்களா? வேணும்னா நான் கிளம்பி வரட்டுமா?” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்” என்ற பார்த்திபனுக்கு முகி அவ்வாறு கேட்டதே, தனக்காக வருகிறேன் என சொல்லியதே போதுமாக இருந்தது.
“நாளைக்கு தான் முகி பர்ஸ்ட் டே வொர்க். ஏதோ ஏர் உழ..உழு…”
“உழுவனும்…” பார்த்திபன் அவ்வார்த்தை வராது தடுமாற முகி சொல்லியிருந்தான்.
“எஸ்… கரெக்ட். அதை பண்ணனுமா. சிவா சொன்னான் தான் பட் எனக்கு புரியல.”
“டிராக்டர் இருக்கே அத்தான். அதை யூஸ் பண்ணுங்க. ஈஸியா இருக்கும்.”
“சிவாவும் இதைத்தான் சொன்னான்” என்ற பார்த்திபன் அதற்கு கயல் கொடுத்த கொட்டினையும் சொன்னான்.
“சாரி அத்தான்” என்று கயல் பேசியதற்காக தான் மன்னிப்பு கேட்ட முகி, “கயல் இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் டைப் கிடையாது அத்தான். யார்கிட்டவும் இப்படியெல்லாம் பேசியதில்லை. உங்கக்கிட்ட மட்டும்தான் இப்படி பிகேவ் பண்றாள்” என சுருங்கிய குரலில் கூறினான்.
“எனக்கு இது பிடிச்சிருக்கு முகி. யாருக்கிட்ட வேணாலும் எளிதில் சிரித்து பேசிவிடலாம். ஏன், தெரியாத நபரை கூட கடந்து செல்லும்போது நேருக்கு நேர் பார்த்தால் சின்ன ஸ்மைல் வரும். ஆனால், கோபம் இதை உரிமையா நினைக்கிறவங்க கிட்டதான் காட்ட முடியும்.
யார் மேலும் கோபப்படாத கயல் என்கிட்ட மட்டும் கோபப்படுறாள் அப்படின்னா நான் அவளுக்கு உரிமையா தெரியுறேன்னு தானே அர்த்தம். சோ, எனக்கு பிடிச்சிருக்கு.”
முகிக்கு அவனது விளக்கத்தில் எங்காவது சென்று தலையை முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
“அய்யோ அத்தான் முடியல” என்ற முகி, “காதலிக்குற பொண்ணு கத்தியால் குத்தினாலும் வலிக்காதுன்னு இப்போதான் தெரியுது” என்றவன் சிரித்துவிட, அவனோடு பார்த்திபனும் இணைந்து கொண்டான்.
“ஓகே முகி… இட்ஸ் கெட்டிங் லேட். நீ தூங்கு. குட் நைட்” என்ற பார்த்திபன் அழைப்பினை வைத்த மறு நிமிடம் முகியிடமிருந்து ஒரு காணொளி வந்தது.
அது கயல் மாடுகளை ஏர்பூட்டி கழனி உழுவும் காட்சி.
கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் பலமுறை பார்த்த பார்த்திபனின் கண்கள் எப்போது கயலை காதலாக பார்க்க ஆரம்பித்ததென்று அவனே அறியவில்லை.
மனதில் ஆயிரம் முறை கயலிடம் காதலை கூறிவிட்டான்.
கண்களில் ரசனை கூடிக்கொண்டே போனது.
“பித்து பிடிக்க வைக்குறடி.” வாய்விட்டே புலம்பினான்.
“ரொம்ப பேசறடி. என்னை எதிர்த்து என் முன்னவே நின்னு பேசுறவங்கள நான் சும்மா விட்டு வைத்ததே இல்லை. அப்படிப்பட்ட நான் உன் முன்னால் அடங்கியிருக்கேன். எனக்கே ஆச்சரியமா இருக்கு.
என்னை இங்கு… இங்கு என்னவோ பண்ணறடி நீ” என்றவன் தன் இதயப்பகுதியை குத்திக்கொண்டான்.
அப்படியே உறங்கியும் போனான்.
அவனது காதல் நாயகியும் அவனின் நினைவில் தான் சுழன்று உறங்காதிருந்தாள்.
“ரொம்ப படுத்துறமோ?” தனக்குத்தானே கேட்டுக்கொண்டவளே பதிலும் வழங்கினாள்.
“இன்னும் ஆரம்பிக்கவேயில்லையே! அதுக்குள்ள பாவம் பார்ப்பதா? பேசுன பேச்சுக்கு அனுபவிக்கட்டும்.”
‘இதெல்லாம் ரொம்ப தப்பு கயல்.’ அவளின் மனம் சாடியது.
“நான் வேண்டாம் சொல்லிட்டேன். வீம்புக்கு பண்ணா நானும் தான் வச்சு செய்வேன்” என்றவளின் ஆழ் மனம் பார்த்திபனிடம் இப்படி வாதம் செய்வது ஏட்டிக்கு போட்டியாக பேசுவதை ரசித்தது.
அவள் மனம் அவள் அனுமதியின்றியே பார்த்திபனுக்கு வழி கொடுத்தது. உள்ளத்தில் வாசம் செய்திட.
*****
மறுநாள் காலையிலேயே ஷார்ட்ஸ் மற்றும் டீஷர்ட் அணிந்து தயாரான பார்த்திபன், சிவா கொடுத்த காபியை குடித்ததும்…
“ஏர் மற்றும் மாடுகள் வேணும் சிவா” என்றான்.
அவனின் உற்சாகம் சிவாவிற்கும் தொற்றிக்கொள்ள…
வாங்கிச்சென்றவர் இரவு கொண்டு வந்து கொடுத்திருந்த ஏரினை பார்த்திபனிடம் கொடுத்துவிட்டு…
“நான் கயல் வீட்டுக்கு போய் மாடு ஓட்டிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி நகர்ந்தான்.
இரண்டடிகள் வைத்திருப்பான் அவ்வளவே, எதிரே மாணிக்கம் மாடுகளை அழைத்து வந்து கொண்டிருந்தார். உடன் கயல்.
“மாடு வந்தாச்சு. ரெடியா?”
பார்த்திபனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து வினவினாள்.
“நீங்க ரெடியா?” தான் தயார் என்பதை மறைமுகமாகத் தெரியப்படுத்தினான்.
கயலிடம் சவால் விட்டு பார்த்திபன் நெல் விளைவிக்க போவதை அறிந்து ஒருசிலர் பார்த்திபனை பார்க்கவே அங்கு வந்திருந்தனர்.
“என்னா கலருடி!” கூட்டத்தில் இளம் பெண் ஒருத்தி, தன்னை ஒத்த பெண்ணிடம் கூற, அவளோ திறந்த வாய் மூடாது அவனை பார்த்திருந்தாள்.
“ஏசிக்குள்ளவே இருக்கிறவங்க போல.” மற்றொரு குரல்.
“ரெண்டு நாளில் இந்த வயலில் நிக்குறதுக்கு கருத்திடும்.”
எல்லோரும் பார்த்திபனின் அழகை வைத்தே பேசிக்கொண்டிருக்க, கயலுக்கு எல்லோரையும் துரத்தி விடத் தோன்றியது.
“இப்போ என்ன பார்க்காததை பார்த்திட்ட மாதிரி கும்பல் கூடுறீங்க. இவ்வளவு பேர் இருந்தால் மாடு மிரளும். அப்புறம் எப்படி ஏரோட்டுறது?” மூண்ட எரிச்சலை வெளிக்காட்டிடாது தன்மையாகவே சொல்ல, வந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
அப்போதுதான் அங்கு வந்த ரத்தினம், பார்த்திபனிடம்…
“எங்க கயல் ஏரோட்டுறதை பார்க்கவே அவ்வளவு கூட்டம் கூடும். நீயென்னப்பா அதுகிட்ட போட்டி போடன்னு வந்திருக்க?” என்று பார்த்திபனை சாதாரணமாக நினைத்துக் கேட்டார்.
“கயலுக்கு மூத்த தலைமுறை, கயலைவிட விவசாயத்தில் அனுபவப்பட்ட என்னாலே கயலை முந்த முடியல… நீ ஜெயிச்சுக்காட்டிடுவியா?” என்று எள்ளலாகக் கேட்டார்.
அவர் பேசுவது கயலுக்கே பிடிக்கவில்லை. முகம் சுளித்து நின்றாள்.
தன்னை பெருமையாகக் காட்டிக்கொள்ள மற்றொருவரை சிறுமை படுத்தக்கூடாது என்பது கயலின் எண்ணம்.
அதனால் கயல் பார்வையாலே பார்த்திபனிடம் ரத்தினத்தின் பேச்சினை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று மன்னிப்பு கேட்டாள்.
கண்கள் மூடி திறந்து கயலை அமைதிப்படுத்திய பார்த்திபன் ரத்தினத்திடம் திரும்பி…
“நீங்க இதுவரை கயல் விவசாயம் செய்து மட்டும் தான் பார்திருக்கீங்க போல” என்றான்.
அதில் ‘என்னை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்’ என்ற மறைபொருள் ஒளிந்திருந்தது.