பார்த்திபனின் கயல்விழியாள் 34

அத்தியாயம் 34 :

பார்த்திபனையும் அவனின் பேச்சினையும் பார்க்கும்போது சாதரணமாகத் தோன்றவில்லை.

காலம் காலமாக விவசாயத்தை மட்டுமே உயிர் மூச்சாக செய்துவருபவர்களாலே இவ்வளவு திடமாக நம்பிக்கை வைத்து பேசிட முடியாது.

ஆனால் பார்த்திபனோ…

முதல் முறை…

விவசாயத்தைப்பற்றிய அறிச்சுவடியே அறியாது இவ்வளவு உறுதியாக பேசுவதில், அவன் செயலில் காட்டுபவன் என்பது ரத்தினத்திற்கு மட்டுமல்ல, இருவரது காரசாரமான பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்த கயலுக்கும் புரிந்தது.

ரத்தினம் மேற்கொண்டு எதுவும் பேசி பார்த்திபனின் கோபத்தை தூண்டி விட்டுவிடுவார் என்று அஞ்சிய கயல்…

“உச்சிக்கு வெயில் வரதுக்குள்ள முடிக்கணும்” என்று ரத்தினத்திடம் கூற,

“நீ ஆரம்பி கயல் என்னுடைய ஆதரவு உனக்குத்தான். வெளிநாட்டுக்காரன் எப்படி உன்னை ஜெயிக்குறான் பார்க்கிறேன்” என்று மீசையை நீவிக்கொண்டார்.

“நான் வளர்ந்தது தொழில் செய்யுறதெல்லாம் வெளிநாடா இருக்கலாம். ஆனால் நான் பிறந்தது இதே மண்ணு தான்…” என்று நிறுத்தியவனை ரத்தினம் ஆச்சரியமாகப் பார்க்க, “தமிழ் மண்ணு” என்று சமாளித்தான்.

“நம் நாட்டோட முதுகெலும்பே விவசாயம் தான் படித்திருக்கேன். அப்போ இந்தியாவில் பிறந்த எனக்கு விவசாயம் செய்ய சொல்லித்தரனுங்களா என்ன?” என்றவன், நேற்று பயிற்சி செய்ததன் பலனாக சிவாவின் கழுத்தில் கிடந்த துண்டினை உருவி எடுத்து… தோரணையாக தன்னுடைய தலையில் கட்டியபடி மாடுகளை நோக்கிச் சென்றான்.

கயலுக்கே அவனின் செயல் ரசிப்பு மிக்கதாக இருந்தது.

சிவா உள்ளுக்குள் சபாஷ் போட்டுக்கொண்டான்.

“இவனுக்கு ஒன்னும் தெரியாது நினைத்தால், எல்லாம் தெரியும் போலிருக்கே கயல். வேடு (தலையில் வெயில் படாதவாறு துணியை கட்டும் முறை) கட்டுற தோரணையே பலமா இருக்கே!” என ஆச்சரியப்பட்டுப் போனார் ரத்தினம்.

“ஒன்னுமே தெரியாதவங்ககிட்ட போட்டி போடுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்” என்று சொல்லிய கயலும் டராக்டரில் ஏறி அமர்ந்தாள்.

‘இனி இங்க நின்னு என்னத்த வேடிக்கை பார்க்கிறது’ என்று ரத்தினம் கிளம்பிவிட்டார்.

இதுநாள் வரை கயலை பகையாளியாக பார்த்தவர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவள் அவருக்கு செய்த உதவியால்… அவளுக்கு தான் கடமைப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு… அதனை எவ்வகையிலாவது தீர்த்திட வேண்டுமென்று காத்திருப்பவர், இந்த சவால் விடயத்தில் அவளுக்கு துணையாக இருந்து வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவனை ஓடவிட வேண்டுமென்று நினைத்தே இங்கு வந்து பார்த்திபனை சீண்டினார்.

ஆனால் பார்த்திபனோ… அவருக்கே சவால் விடும் தொனியில் பேசி, அவரின் வாயினை அடைத்துவிட்டான்.

அந்நொடி பார்த்திபனை எப்படியாவது இதில் தோல்வியுறச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தார்.

தன்னை குறைத்து மதிப்பிட்ட ரத்தினத்திடம் தான் சளைத்தவனில்லை என்பதை காட்டிடவே எல்லாம் தெரிந்ததைப்போல் பேசினான். இப்போது மாடு பிடிக்கக்கூடத் தெரியாது திணறி நின்றான்.

பார்த்திபன் பாவமாக சிவாவை திரும்பிப் பார்த்திட, அவனருகில் வேகமாக வந்த சிவா… மாட்டின் கயிற்றினை லாவகமாக வளைத்து பிடித்து காண்பிக்க… பார்த்திபனும் மற்றொரு மாட்டினை அவ்வாறே பிடித்தான். மெதுவாக கவனமாக கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் முறையாக செய்தான்.

“இவ்வளவுதானா?” என்று பார்த்திபன் கேட்டு முடிக்கும் முன்பே அவனது கையிலிருந்த மாடு சீறிக்கொண்டு கயிற்றினை விடுவிக்க தன் தலையை ஆட்டி கொம்புகளை தரையில் குற்றி கிழித்தது.

பார்த்திபன் பயந்தே விட்டான்.

தனது கண்ணசைவிலேயே எதிரிகளுக்கு உயிர் பயம் காட்டுபவன் வாயில்லா ஜீவனின் முரட்டுத்தனத்தில் அரண்டு நின்றான்.

“அய்யோ சிவா என்னதிது?”

அவன் அலறிய அலறலில் டிராக்டரில் அமர்ந்திருந்த கயல் ஓடிவந்த பார்த்திபனின் கையிலிருந்த மாட்டின் கயிற்றை பறித்து இறுக பிடித்தாள்.

“நீங்க புதுசுங்கிறதால் மாடு மிரளுது. கயிறை இறுக்கி பிடித்து, கழுத்து, வால்ல தடவிக் கொடுங்க” என்று கயல் சொல்ல… சிவா செய்து காட்டினான்.

பார்த்திபனும் அவ்வாறு செய்ய… பத்து நிமிடங்களில் மாட்டிற்கு பார்த்திபனால் தனக்கு ஒரு ஆபத்தும் வராது என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ இப்போது அவனது கைகளில் மிரளாது அமைதியாக நின்றது.

“வாவ்… சூப்பர் சிவா” என்று உற்சாகமாகக் கூறிய பார்த்திபனுக்கும் அது பிடித்திருந்தது.

“அன்பு தான் சார் எல்லாம்” என்ற சிவா, “நாம் கொடுப்பது தான் நமக்கு கிடைக்கும்” என்றான்.

சிவா எதற்காக அதனை சொன்னானோ, பார்த்திபன் தன் காதலுக்காக சொல்லியதாகத்தான் நினைத்தான்.

‘அப்போ நான் காதலை காட்டினால் நீயும் திருப்பிக்கொடுப்பியா கயல்.’ அவள் விழி பார்த்து மனதால் கேட்டான்.

அவனது அப்பார்வையில் கயல் ஒரு கணம் தடுமாறித்தான் போனாள்.

நொடியில் தன்னை மீட்டவள், “நின்னுட்டேயிருந்தா நெல்லு தானா விளைஞ்டுமா?” என்றவாறு நகர்ந்தாள்.

சிவா ஏர்க்கலப்பையை கொண்டுவர…

மாணிக்கம் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

“வாழைத் தோப்புக்குள் காட்டுப்பன்றி நுழைஞ்சிடுச்சு” என்றிட… ஏர்க்கலப்பையை பார்த்திபனின் கைகளில் திணித்த சிவா, “நீங்க உழுதுகிட்டே இருங்க வந்துடுறேன்” என்று ஓட்டு வீட்டை நோக்கி மின்னலென ஓடியவன்… இரண்டு ஈட்டிகளை எடுத்து ஒன்றை மாணிக்கத்தின் கையில் தூக்கி எறிந்தவனாக வாழைத்தோப்பு பக்கம் விரைந்தான்.

“எதுக்கு இவ்வளவு ஓட்டம்?”

அவனுக்கு புரியவில்லை.

“காட்டுப்பன்றி வயலை சேதப்படுத்திடும். மண்ணைத் தோண்டி வாழை மரத்தை சாய்ச்சிடும்” என்று பதில் சொல்லிய கயல் வண்டியை ஸ்டார்ட் செய்து கழனிக்குள் இறங்கியிருந்தாள்.

அவள் எளிதாக வயலை உழுவதை சில நிமிடங்கள் அதிசயித்துப் பார்த்த பார்த்திபன்… தன் கையிலிருக்கும் ஏரில் மாடுகளை பூட்ட முயன்றான்.

எவ்வளவோ முயற்சித்தும் அவனால் முடியவில்லை. கயிற்றின் முடி அதற்கேற்றவாறு போட சுத்தமாக நிக்கவில்லை. அவிழ்கிறது இல்லையென்றால் தளர்வாக உள்ளது.

இடிப்பில் கை வைத்து அப்படியே நின்றுவிட்டான்.

“பார்த்திபா இது நீ நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை போலிருக்கே” என்று சொல்லிக்கொண்டவன், “போட்ட சவாலில் மட்டும் நீ ஜெயிச்சிட்டா அது உலக சாதனைதான்” என்று சொல்லிக்கொண்டான்.

‘சிவா இருந்திருந்தால் அவனிடம் கேட்டு செய்திருக்கலாம்’ என்றவன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

கயலிடம் கேட்கலாம் ஆனால் போட்டியில் எதிராளிக்கு சொல்லித்தரும் பக்குவம் அவளிடம் இருக்கிறதா என்பது அவனை குழப்பிவிட, தானே மீண்டும் முயற்சித்து பார்த்தான்.

பார்த்திபனின் மீது கண் வைத்தவாறே உழுது கொண்டிருந்த கயலுக்கு அவனின் நிலை நன்கு புரிந்திட… உழுது கொண்டிருந்த வயல் பரப்பை முடித்து டிராக்டரோடு வெளியேறியவள்… பக்கத்து பண்ணைக்குச் சென்று ஒரு ஏர்கலப்பையைக் கொண்டு வந்தாள்.

அனாயசமாக தோளில் ஏரினை சுமந்து வந்தவளை பார்த்தவன்… அப்போதுதான் தன் கையிலிருந்த கலப்பையின் கனம் (எடை) உணர்ந்தான்.

பெருமூச்சுடன் தலையை ஆட்டிக்கொண்டான்.

காலையிலே மேய்ச்சலுக்காக சரளா மற்ற மாடுகளையும் அழைத்து வந்திருக்க… அவை பண்ணையைத் தாண்டிய கரம்பில் மேய்ந்து கொண்டிருந்தன.

இங்கிருந்தே சரளாவிற்கு குரல் கொடுத்த கயல் உழவு மாடு ஜோடியை இழுத்து வர சொல்ல… சரளாவும் கொண்டுவந்து விட்டுச் சென்றார்.

பார்த்திபன் வாய் திறந்து எப்படி செய்வதென்று கேட்டிருந்தால் அவளும்  சொல்லிக்கொடுத்திருப்பாளோ என்னவோ… இப்போது அவன் கேட்காததால் அவளும் அவனிடம் பேசாது, அவனை அழுத்தமாக பார்த்தபடி ஏரில் மாட்டினை பூட்ட ஆரம்பித்தால்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு அவளின் செயலின் காரணம் புரிய சிறு புன்னகையுடன்… அவனுக்கு புரிய வேண்டுமென்று மிக மிக மெதுவாக அவள் செய்திட, அதனை அவன் பின்பற்றினான்.

ஏர் கலப்பையில் மாடுகள் சுமக்கும் கழியைத் தூக்கி தோளில் வைத்தவள் அதன் இரு முனைகளிலும் கயிறு கொண்டு மாட்டின் கழுத்தோடு சேர்த்து கட்டினாள்.

அவள் போடும் முடியை போன்றே பார்த்திபனும் போட… இம்முறை உறுதியாகவும் கலப்பை நகராதும் நின்றது.

அடுத்து கலப்பையை அதாவது இரு மாடுகளுக்கும் குறுக்கே இருக்கும் கழியில் ஏரின் முனையை சொருகினாள்.

பார்த்திபனும் அதன்படி செய்ய… அடுத்து ஏர் உழ தயாராகினர்.

“சேற்றில் முள் கூட இருக்கும்… பார்த்து அடி வைங்க” என்று அவனை முதலிலேயே எச்சரிக்கை செய்தவள்… ஆடையை ஏற்றி சொருகினாள்.

சுள்ளென்ற சூரியனின் ஒளி அவளின் இடை அழகை அவனது கண்களுக்கு பளீரென விருந்தாய் அமைத்திட, ஒரு நொடி சுற்றம் மறந்து அவளின் அழகில் கிறங்கி நின்றான். காதல் மனம் வஞ்சனையின்றி அவனை பார்க்க வைத்தது.

அவனது பார்வையின் மாறுபாட்டை அறிந்தவள்…

“வந்த வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்” என்று கோபமாக முறைத்தாள்.

“அழகை பார்க்கலாம் தப்பில்லை” என்று அவன் கண் சிமிட்டி சொல்ல, இதே வேறு யாராவது இருந்திருந்தால் அவனின் கன்னம் பழுத்திருக்கும்.

ஆனால் பார்த்திபனை கண்டது முதலே அவளின் மனம் அவன்பால் ஈர்க்கப்பட்டிருக்க, அவன் இங்கு வந்தது முதல் அவனின் சிறு சிறு செயல்களும் அவளை அறியாமலேயே அவனை ரசித்திட வைத்ததோடு… அவளின் அனுமதியின்றியே அவனின் மீது நேசத்தையும் அவளின் மனதில் தடம் பதிக்கச் செய்தது.

அதனாலேயே அன்று எவ்வித தயக்கமுமின்றி கயலால், வேறு ஆணென்று ஒதுக்கிட இயலாது தயங்காது பார்த்திபனின் பாதம் பிடித்து மருந்திட முடிந்தது.

இப்போதும் அவள் அறிந்திடாத அவன்மீதான் நேசமே, அவனிடம் கோபத்தை காட்டிட தடையாக அமைந்திட சிறு முறைப்போடு வேலையில் கவனமானாள்.

அவளின் முறைப்பிற்கு அவன் தந்த பதிலில் வந்த குறுநகையை அழகாய் அவனுக்கு காட்டாது மறைத்துக்கொண்டாள்.

மாடுகளோடு சேர்ந்து கலப்பையில் கட்டப்பட்ட கயிற்றை கைகளில் இறுகப்பிடித்து… மாடுகளை வயலில் முன்விட்டு, ஏரின் முனையை சேற்றில் அழுந்தக் குற்றி… மாடுகளை முன் ஓட்டினாள்.

மாடுகள் முன் செல்ல செல்ல, ஏரின் முனை சேற்றில் கிழித்துக்கொண்டு, அடி மண்ணை மேலேற்றியவாறு சென்றது.

உன்னிப்பாக கயல் செய்வதை கவனித்த பார்த்திபனும் இப்போது சேற்று வயலில் மாடுகளோடு இறங்கி ஏரினை குற்றி தன்னுடைய உழவினை ஆரம்பித்தான்.

மண்ணின் ஈரம் அவனுள் இறங்கிட… ஏதோ சொல்லப்படாத உணர்வில் சிக்கிக்கொண்டான்.

ஏரின் கிழிப்பிற்கு ஏற்றவாறு ஈர களிமண் பிரண்டு வரும் காட்சி அவனது கண்களுக்கு அத்தனை நிறைவை தந்தன.

ஒவ்வொரு பரப்பும் முடியும் போதும் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டனர். அந்நேரத்தில் மாடுகளுக்கு தண்ணீர், புல்லென்று உணவு அளித்து சோர்வடைய விடாமல் செய்தனர்.

இதெல்லாம் உனக்கு பிடிக்குமென்று பத்து நாட்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் அவர்களை அடித்து வீழ்த்தியிருப்பான் அல்லது அட்டகாசமான சிரிப்போடு கேலி செய்திருப்பான்.

ஆனால் இப்போது…

இதெல்லாம் அவனுக்கும் பிடிக்கும் போலிருந்தது.

பாதி வயல்கள் உழுது முடித்து சற்று இளைப்பாறும் நேரம்… பார்த்திபனிடம் வந்தவள் ஒரு சொம்பினை நீட்டி “குடி” என்றாள்.

“என்னதிது?”

“என்னன்னு சொன்னாதான் குடிப்பியா?” என்றவள் “விஷம்” என்றாள்.

“கயல் கையால் விஷம் கொடுத்தாலும் குடிக்கலாம்” என்று காதல் வசனம் பேசியவன் அவளை பார்த்துக்கொண்டே குடித்து முடித்தான்.

உள்ளிறங்கிய பழுநீரின் ஜில்லிப்போடு சேர்ந்து கயலின் அழுத்தமான பார்வையின் சூடும் அவனுள் மெல்ல இறங்கியது.

“இப்போவாவது சொல்லு என்னதிது?” எனக்கேட்டவன், “ஜூஸ் குடிச்ச மாதிரி நல்ல ரெஃப்ரெஷிங்கா இருக்கு. இவ்ளோ நேரமிருந்த டயர்ட் ஃபீல் நொடியில் காணாமப்போன மாதிரியிருக்கு” என்றான்.

“ம்ம்ம்… நீராகாரம்” என்றாள்.

“அப்படின்னா?”

“நேத்து நைட்டு வடிச்ச சாதத்தில் ஊற்றி வைத்த தண்ணீர்” என்று விளக்கமளிக்க பார்த்திபன் முகம் சுளித்தான்.

“என்னது” என்று அதிர்வாக கேட்டவனுக்கு குமட்டும் போலிருந்தது.

“இதெல்லாம் குடிப்பாங்களா?” என்று ஒருமாதிரியாக முகம் வைத்து அவன் கேட்டிட,

“ஏன் உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதா இது” என்று வெடுக்கென கேட்டு… “உங்க பீட்சா பர்கரை விட இது உடம்புக்கு அவ்வளவு நல்லது. இப்போ நீங்களே சொன்னீங்களே புத்துணர்ச்சியா இருக்குன்னு” என்றவள், “இதை ஒரு டம்ளர் குடிச்சிட்டு பத்து மணிநேரம் கூட களைப்பு இல்லாம வேலை செய்யலாம். இப்போலம் இதைக்கூட  ஹோட்டலில் விக்கிறதா கேள்விப்பட்டேன். இன்னும் உங்க ஹோட்டலுக்கு வரல போல” என்று மூச்சுவிடாது பேசிட… “அம்மா தாயே போதும்” என்று அவன் கையெடுத்து கும்பிட்டான்.

“அது” என்றவள் மற்றொரு குவளையில் வைத்திருந்த நீரை அருந்திவிட்டு வேலையைத் தொடர்ந்தாள்.

பன்றியை தோப்பிலிருந்து திசை திருப்பிவிட்டு, சிறிது நேரம் காவலுக்கு இருந்துவிட்டு, அங்கு வந்து சேர்ந்த சிவா… கயலிடம் தான் உழுவதாகக் கேட்டிட, அவளோ பார்த்திபனை கண் காட்டினாள். சிவாவும் புரிந்தது என்பதைப்போல் பார்த்திபனிடம் சென்று…

“உங்களுக்கு கஷ்டமா இருந்தா கொஞ்ச நேரம் உட்காருங்க நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“இல்லை வேண்டாம் சிவா. இது எனக்கு பிடிச்சிருக்கு” என்று சிவாவின் உதவியை பார்த்திபன் மறுத்துவிட்டான்.

அப்போது அங்கு உணவு கொண்டுவந்த மங்கை மகனின் பேச்சைக்கேட்டு விழிவிரித்தார்.

‘சேற்றில் கால் வைக்க யோசிப்பவனை, இது ஹைஜீனிக் இல்லையென்று சொல்பவனை… தன்னையே செடி நடுவதெல்லாம் வேலையாயென்று திட்டுபவனை… ஒரே நாளில் பிடித்திருக்கிறது என்று சொல்ல வைத்துவிட்டதே’ என்று ஆச்சரியமாக மகனை பார்த்த மங்கை யாருக்கும் தெரியாது மகன் ஏர் உழுவதை காணொளியாகவும் எடுத்துக்கொண்டார்.

அவர்கள் உழுது முடிக்க மதிய உணவு நேரமாகியது.

கிணற்றடிக்கு வந்து இருவரும் தங்களை சுத்தம் செய்துகொள்ள பார்த்திபன் அப்போதுதான் கவனித்தான் அவனது உள்ளங்கை இரண்டும் நன்கு சிவந்திருந்தது.

புதிதாக கயிற்றினை பிடித்தபடி இருந்ததால் அப்படி ஆகியிருந்தது.

கயல் அதனையே சொல்லவும் செய்தாள்.

“ஹோ” என்றவன் “இதுக்கு மருந்து எதுவுமில்லையா?” என்று குறும்பாகக் கேட்டிட… “கத்தியெடுத்து ரெண்டு கீறு கீறி விடுறேன் வாங்க” என்றாள் பற்களை கடித்தபடி.

“நீ செய்தாலும் செய்வ” என்றவன் அவளுக்கு பயப்படுவதைப்போல் ஓடிவிட்டான்.

மாடு மேய்த்துக்கொண்டிருந்த சரளாவும், அவற்றை நீர் காட்ட அழைத்து வந்திருக்க… எல்லோரும் தென்னை மரத்தடியில் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டனர்.

“அவ்வளவுதானா?” பார்த்திபன் கேட்டதும், மங்கை மீண்டும் சாப்பாடு வைக்கவர…

“நான் இதை கேட்கலை” என்றவன் “உழுதாச்சு… அதுக்கு அப்புறம் என்னன்னு கேட்டேன்” என்றான் தெளிவாக.

“இதை முதலிலே தெளிவா கேட்டிருக்கலாம்” என்று மாணிக்கம் சொல்லி சிரித்தார்.

“இதுக்கு அப்புறம் தழை உரம் மிதிக்கணும், பரம்படிக்கணும்” என்று சிவா மேலும் சொல்லப்போக அவனை தடுத்தி நிறுத்தியிருந்தான் பார்த்திபன்.

“இன்னைக்கு இது போதும்” என்றவன், “முடியல” என்றிட,

“அப்போ தோத்துட்டேன்னு ஒத்துக்கோங்க” என்று வேகமாகக் கூறினாள் கயல்.

“நான் தோற்பதில் எவ்வளவு சந்தோஷம்” என்று பார்த்திபன் சொல்லிட…

“கஷ்டப்படுறியேன்னு சொன்னா ரொம்பத்தான்” என்று சத்தமில்லாது முணுமுணுத்திட அது பார்த்திபனுக்கு நன்கு கேட்டது.

அவளின் அக்கறையை வெளிப்படையாக அவனால் உணர முடிந்தது.

காலையிலிருந்து அவனும் அவனுக்காக அவள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதை பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றான்.

ஆனால் அது எதனால் என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதாபிமான அடிப்படையில் என்றால்  அத்தகைய அக்கறை அவனுக்கு வேண்டாம். அவளாக அவன்மீது கொள்ளும் காதலை மட்டுமே அவன் அவளிடம் எதிர்பார்கின்றான்.

அவன்மீதுள்ள காதலை அவளே உணராது அவள் எப்படி காட்டிடுவாள்.

வெகு நேரமாக பார்த்திபன் உண்ணாது கயலையே பார்த்திருப்பதை கவனித்த மாணிக்கம்…

“என்ன தம்பி பார்க்குறீங்க?” என்றார்.

உடனடியாக பேச்சினை மாற்றும் பொருட்டு பார்த்திபன் கேட்ட கேள்வியில் அனைவரும் அடக்கமாட்டாது சிரித்துவிட்டனர். அதில் மங்கையும் அடக்கம்.

“இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி சிரிக்குறீங்க…” என்ற பார்த்திபன், “நான் கேட்டதில் என்ன தப்பு… இப்போவே நர்சரியில் சொல்லி வைத்தால் தானே நாம் நடுவதற்கு பஃட்டி பிளான்ட் ரெடி செய்து தருவாங்கா” என்று மீண்டும் அதையே கேட்டிட அனைவரும் கண்ணில் நீர்வர சிரித்தனர்.

கயலுக்கு உணவுடன் புரையேறிவிட… அப்போதும் அவள் சிரிப்பு நிற்கவில்லை.

“சொல்லிட்டு சிரிங்களேன்.” முடியாமல் பார்த்திபன் கத்தியே விட்டான்.

அவனது கத்தலில் அனைவரும் டக்கென்று சிரிப்பினை நிறுத்திவிட… ஒருவரது சிரிப்பு மட்டும் நிற்காது அவர்களுக்கு பின்னால் ஒலித்தது.

யாரது என்று அனைவரும் பார்க்க அங்கு முகி நின்றிருந்தான்.

‘நீயுமாடா’ பார்வையாலேயே வினவிய பார்த்திபன், தான் ஏதோ மிகவும் சொதப்பிவிட்டோம் என்பது அவனுக்கு நன்கு புரிந்தது.

error: Content is protected !!
Scroll to Top