அத்தியாயம் 🌾 35 :
பார்த்திபன் முகியை முறைத்து பார்க்க… அவனின் சிரிப்பும் நின்றது.
“உண்மையாவே உங்களுக்கு நெல் எப்படி விளையுதுன்னு தெரியாதா?” சிவா தான் கேட்டிருந்தான்.
“என்னோட மாம் வீட்டு டெரஸ் கார்டனில் செடி வைத்து பார்த்திருக்கேன். அவ்வளவுதான்.” தோளை குலுக்கினான்.
“அதுபோலில்லை நெல் விளைவிப்பது” என்ற கயல் முகியிடம், “என்ன திடீர்னு வந்திருக்க… வான்னு சொன்னா வேலையிருக்குன்னு சொல்லுவ?” என்று கேட்டாள்.
“ரொம்ப பிரஷரா இருக்கு கயல் அதான். வீக் எண்ட் காலேஜ் லீவ் தானே, ஹாஸ்பிடல் மட்டும் லீவ் போட்டு கிளம்பிட்டேன்” என்றான்.
“தம்பி மலர்…” நீண்ட நாள் மகளை பார்க்காத ஏக்கம் சரளாவிடம்.
“நேரா வீட்டுக்கு அனுப்பிட்டேன் அத்தை. கயல் இந்நேரம் வயலில் இருக்குமேன்னு நான் ரோட்டுலே இங்க இறங்கிட்டேன்” என்றவன், “எல்லாரும் இருக்கிறது தெரிஞ்சிருந்தா கூட்டிட்டே வந்திருப்பேன்” என்றான்.
“அதுக்கென்ன… வேலை முடிஞ்சுது வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்” என்ற மாணிக்கம் சரளாவுடன் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு சென்றார்.
“உங்களை பார்க்க ஓடி வந்துட்டு. அக்காவை பார்க்க வந்தானாம்! பயபுள்ள எப்படி பொய் சொல்லுது.” சிவா பார்த்திபனின் காதில் கிசுகிசுக்க பார்த்திபன் சத்தம் வராது சிரித்தான்.
“கை கால் கழுவிட்டு வா முகி சாப்பிடலாம்” என்று மங்கை சொல்ல அவன் கிணற்றுப்பக்கம் சென்றான்.
உண்டு முடித்த பார்த்திபனும் கை சுத்தம் செய்வதற்காக முகியின் பின்னால் சென்றான்.
தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு திரும்பிய முகிலன், பார்த்திபனை தாவி அணைத்திருந்தான்.
முகியின் அணைப்பை பார்த்திபன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முகியின் அணைப்பில் நின்றபடியே எட்டி நீரில் கையை கழுவியவன் தானும் அணைத்தான்.
முகியின் அணைப்பு இறுக்கம் கூட,
“என்னடா மலருன்னு நினைச்சிட்டியா?” என கிண்டல் செய்தான்.
“போங்கத்தான்” என்று அவனிடமிருந்து விலகிய முகியின் கண்கள் கலங்கியிருந்தது.
“இப்போ எதுக்கு அழற?” எனக்கேட்ட பார்த்திபன் தானே அவனின் கண்களை துடைத்துவிட்டான்.
“நான் தான் உன் அத்தான்னு சொல்லி நேரா வீட்டுக்கு வராம இதென்ன விளையாட்டு… பார்த்ததும் உரிமையா உங்கக்கிட்ட பேசக்கூட முடியல” என்று வருந்தினான்.
“நானும் இப்படிலாம் நடக்கும் எக்ஸ்பெக்ட் பண்ணல முகி” என்ற பார்த்திபன், “எனக்காகத்தான் வந்தியா?” எனக் கேட்டிட முகி ஆமென்றான்.
“அதான் நீங்க யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சுன்னு உண்மை உங்களுக்கு தெரியுமே! அதுவுமில்லாம உங்களுக்கு பழக்கமில்லாத வேலை. என்னதான் சிவாண்ணா பார்த்துபாங்கன்னாலும் என்னால அங்க இருக்க முடியல” என்று காரணம் கூறினான்.
“இன்னைக்கு கஷ்டமா இருந்துச்சா அத்தான்” என்று கேட்டுக்கொண்டே பார்த்திபனின் கையினை முகி அழுத்தி பிடிக்க… முகம் சுறுக்கிய பார்த்திபன் பட்டென்று கையினை உதறினான்.
“அத்தான் என்னாச்சு?” என்று முகி பார்த்திபனின் உள்ளங்கையினை பார்வையிட, சற்று நேரத்திற்கு முன்பு சிவந்திருந்த கையில் இரண்டு மூன்று தண்ணீர் கொப்புளங்கள் இப்போது காட்சியளித்தன.
“உங்களால முடியலன்னா சிவாண்ணாவை செய்ய சொல்லியிருக்க வேண்டியது தானே” என்ற முகி… “இந்த கையோட எப்படி சாப்பிட்டிங்க?” என்று வினவினான்.
“அதான் தயிர் மட்டும் சாப்பிட்டேன்” என்று பார்த்திபன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவர்களிடம் வேகமாக வந்த சிவா, “முகி கயல் வருது” என்று சொல்லிச் செல்ல… பார்த்திபனை விட்டு இரண்டடி தள்ளி நின்றான் முகிலன்.
அவர்களுக்கு அருகில் கயல் வந்துவிட…
“பர்ஸ்ட் டே வொர்க் சூப்பரா இருந்துச்சா எம்.டி சார்?” என்று பார்த்திபனை வம்புக்கு இழுப்பதுபோல் முகி கேட்பது கயலுக்கும் கேட்டது.
“உங்க புண்ணியத்துல ரொம்பவே நல்லா போச்சுங்க” என்ற பார்த்திபனும் கயலை பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“என்ன முகி இது. நீ இப்படி பேசுறது சரியில்லை” என்ற கயல் “இனி இந்த மாதிரி பேசாதே” என்றும் சொல்ல முகி மௌனமாக தலையாட்டிக் கொண்டான்.
“சரி வா. வீட்டுக்கு போகலாம்” என்ற கயல் மங்கையுடன் சென்றுவிட்டாள்.
புதிய வேலை… அத்தகைய சூழல் பார்த்திபனுக்கு கொஞ்சமும் ஒத்துவரவில்லை. தினமும் புதிதாக உடல் உபாதைகள் வந்தன.
மூன்று நாட்களுக்குப்பிறகு இப்போதுதான் கால் குணமாகியிருக்க, அடுத்து கையில் ஆரம்பித்திருந்தது.
பெண்களின் கையை விட மிருதுவாக இருந்த அவனின் கை… கயிற்றின் உராய்வுக்கு ரத்தமென சிவந்து, கொப்புளங்களை ஏற்படுத்தியிருந்தது.
இரவு சிவா வீட்டிற்கு வராததால் கயல் உணவு கொண்டு செல்வதாகக் கூறினாள். மங்கையும் கூடையில் பார்த்திபனுக்கும், சிவாவிற்கும் உணவு எடுத்து வைத்துக்கொண்டிருக்க… கயல் முகியின் அறை பக்கம் சென்றாள்.
“முகி.” கதவு சாற்றியிருக்க வெளியிலிருந்து குரல் கொடுத்தாள்.
மலர் தான் கதவினை திறந்திருந்தாள். மாலையே நல விசாரிப்புகள் முடிந்து இருந்தமையால் இப்போது புன்னகைத்துக் கொண்டனர்.
“முகி இல்லையா மலர்?”
“குளிக்கிறாங்க அண்ணி.” இப்போது கயலை மலர் அண்ணியென அழைக்க பழகியிருந்தாள்.
“ஹோ” என்று சொல்லும்போதே தலையை துவட்டியபடி முகி வந்தான்.
“என்ன கயல்.” இருவரும் பேசட்டுமென்று மலர் மங்கையிடம் சென்றாள்.
“கைக்கு போடுற ஆயின்ட்மெண்ட் இருக்கா முகி” என்றாள் கயல்.
“எதுக்கு?” கயலை அழுத்தமாகப் பார்த்து அர்த்தமாகக் கேட்டான்.
“ஏர் பிடிச்சது… கை கொப்புளம் வைக்குற மாதிரி இருக்கு” என்று முகியின் முகத்தை நேராக பார்த்திடாது கயல் சொல்ல… “கை காட்டு நான் பாக்குறேன்” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம். நீ மருந்து மட்டும் கொடு” என்று கையினைக்காட்டிட மறுத்தாள்.
“உனக்கு இந்த மாதிரி ஆகாதே கயல். என்ன புதுசா?” என்று கேட்டாலும் முகி களிம்பினை கொண்டு வந்து கொடுத்தான்.
வாங்கிக்கொண்டு சென்றவளை பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
கயல் உண்மையை சொல்லி வாங்கியிருந்தால் முகிக்கு சந்தேகமே வந்திருக்காது… பிறருக்கு உதவுவது அவளது குணம். அது யாராயிருந்தாலும் கஷ்டப்படட்டுமென்று அவள் அமைதியாக இருக்கமாட்டாள். அதனால் அதனை முகி சாதாரணமாகவே எடுத்துக்கொண்டிருப்பான். ஆனால் இப்போது கயல் பார்த்திபனுக்கு என்று சொல்லாது தனக்கென வாங்கியதுதான் முகியை யோசிக்க வைத்தது.
“எடுத்து வச்சிட்டிங்களா அத்தை” என்ற கயல் மங்கை கொடுத்த கூடையை வாங்கிக்கொண்டு பண்ணைக்கு சென்றாள்.
செல்லும்போதுதான் கயலும் ‘தான் எதற்காக பொய் சொல்ல வேண்டும். பார்த்திபனுக்குத்தான் மருந்தெனக் கேட்டிருந்தாலே முகி கொடுத்திருப்பான். எதற்கு இந்த பொய்’ என்று ஆராய்ந்தாள்.
காதல் வந்தால் கள்ளமும் ஒட்டிக்கொள்ளும். வெளிப்படையாக செய்த யாவையும் மறைத்து செய்ய வைக்குமென கயலுக்கு தெரியவில்லை.
தென்னந்தோப்பிற்குள் வந்தவள், அவ்விடத்தை ஒருமுறை பார்வையால் அலசிக்கொண்டாள்.
இதுநாள்வரை சிவா மட்டும் இருந்தபோது வந்திடாத தடுமாற்றம் பார்த்திபனும் இருக்கிறான் என்பதில் வந்திருந்தது.
சிவா கயலின் உறவுமுறை மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் பார்த்திபன் கயலுக்கு இடையில் என்னவென்று இன்னும் அகளுக்கேத் தெரிந்திடாத நிலையில் யாரேனும் தவறாக கதை திரித்துவிட்டால் அதற்காகவே இந்த எச்சரிக்கை.
‘இன்று அவருக்கு கை காயமாகியிருக்கு என்றதும் தானே உணவு எடுத்து வந்தாகிவிட்டது. இனி இரவில் மாணிக்கம் மாமாவைத்தான் அனுப்ப வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டாள்.
வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவள்…
“சிவாண்ணா… அண்ணா” என்று உள்நோக்கி அழைத்தாள்.
“சிவா இல்லையே கயல். இப்போதான் சாப்பாடு வாங்கிட்டுவறேன்னு அங்க கிளம்பினான்” என்றபடி வீட்டிற்குள்ளிருந்து சொல்லியவாறே பார்த்திபன் அவளுக்கு எதிரே இருந்த மற்றொரு திண்ணையில் அமர்ந்தான்.
“நான் காய்கறி தோட்டத்து வரப்பில் வந்தேன். அண்ணா வாழைத் தோப்பு பக்கமா போயிருக்கும்” என்றவள் “இந்தாங்க சாப்பாடு” என கூடையை அவன் பக்கமாக நகர்த்தி வைத்தவள்… “அப்போ நான் கிளம்புறேன்” என்று எழுந்தவள் செல்ல அடி வைத்திடாது தயங்கி நின்றாள்.
அவளையே பார்த்தபடி இருந்தான் பார்த்திபன்.
கீற்றாக தோப்பிற்குள் விழுந்த நிலவொளியில் தேவதையாக மிளிர்ந்த பெண்ணவளை ரசித்திக்கொண்டே இருக்க அவனுக்கு தெகிட்டவில்லை. இந்நொடி இப்படியே உறைந்துவிட வேண்டுமென்றே நினைத்தான்.
கள்வனின் பார்வை பாவையவளை வசியம் செய்திட அவனை திரும்பிப் பார்த்தாள்.
இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் உரசிக்கொள்ள… அழகாய் காதல் தீ பற்றியது.
உணர்ந்து கொண்டவனின் உணர்வுகள் பேயாட்டம் போட… உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வின் பொருளும், அவளவனின் பார்வையின் தாக்கமும் புரிந்துகொள்ளாது பெண்ணவள் தவித்து நின்றாள்.
அவனின் விழி வீச்சில் மொத்தமாக அவனிடம் சரணடைந்து நின்றிருந்த கயலிடம்…
“என்கிட்ட எதாவது சொல்லணுமா கயல்விழி?” எனக் கேட்டிருந்தான். விழி என்பது அழுந்த உச்சரித்தது போலிருந்தது.
அவளிற்கு அவனது விளிப்பே நிகழ் மறக்கச் செய்தது.
சுற்றி யாவும் மறைந்து போக… நட்சத்திரங்கள் ஜொலிப்பிற்கு நடுவே அவனும் அவளும் மட்டுமே நிற்பது போன்ற மாயை.
பார்த்திபன் அடிமேல் அடி வைத்து கயலை நெருங்கிட… அவள் சற்றும் எதிர்பார்த்திடாது… கயலின் கன்னம் தாங்கினான். அவனின் தொடுகையில் அவளின் விழிகள் தாமாக மூடிக்கொள்ள… அவளது இரு விழிமலர்களின் மீதும் தன் இதழ் கொண்டு முத்திரை பதித்தான்.
கயலின் உடல் முழுக்க சில்லென்று மின்சாரம் பாய்ந்திட்ட உணர்வு. பட்டென்று அதிர்ந்தவளாக நிஜம் மீண்டவள் மொத்தமாக வியர்வையில் நனைந்திருந்தாள்.
பார்த்திபன் அவன் அமர்ந்திருந்த அதே இடத்தில் தான் சற்றும் மாற்றமில்லாது இப்போதும் அமர்ந்திருந்தான்.
‘என்னதிது இப்படியொரு எண்ணம்’ என்று நினைத்தவள் தான் கண்ட காட்சியில் தன் மனம் விளங்கிட கலங்கிய விழிகளோடு பார்த்திபனை ஏறிட்டு பார்த்தாள்.
“கயல்…” அவளின் விழிநீர் கண்டு பதறியவனாக அருகில் வர… கைகாட்டி அவனை தடுத்தாள்.
“இந்தாங்க… இதை கைக்கு தடவிக்கோங்க. இலைன்னா கை காப்பு காய்ச்சிடும்” என்று மருந்தினை பார்த்திபனின் கையில் திணித்தவளாக அவனை திரும்பியும் பாராது வேகமாக சென்றிட…
“கயல் நில்லு நானும் வர்றேன்” என்றவன் அவளின் வேகத்திற்கு அவளுடன் சென்றவன்… ஊருக்குள் அவள் சென்ற பின்னே தான் திரும்பி வந்தான்.
‘என்னாச்சு இவளுக்கு’ என்று யோசித்துக்கொண்டே வந்தவனை திரும்பி வந்திருந்த சிவா உணவு உண்ண அழைத்ததெல்லாம் அவன் கவனத்தில் படவேயில்லை.
கயல் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் முகி வந்திருந்தான்.
“அவங்க சாப்பிடல முகி. கேட்டுப்பார்த்தேன். ஒன்னும் சொல்லல” என்ற சிவா உறங்கச் சென்றுவிட்டான்.
முகி பார்த்திபனின் அறைக்குள் எட்டிப்பார்க்க… கயிற்று கட்டிலில் கால்களை தொங்கவிட்டு அமர்ந்திருந்த பார்த்திபன், கயல் கொடுத்துச்சென்ற மருந்தினை கையில் தட்டிக்கொண்டு எதிரேயிருந்த சுவற்றினை வெறித்துக்கொண்டிருந்தான்.
உள்ளே வந்த முகி பார்த்திபனின் கையிலிருந்த மருந்தினை வாங்கி தானே அவனது உள்ளங்கையில் தடவியபடி… “கயல் எதுவும் சொல்லிடுச்சா அத்தான்” என்று வினவினான்.
“கயலோட உணர்வோடு நான் பிளே பண்ற மாதிரி தோணுது முகி.” வியர்வையில் நனைந்து கண்கள் கலங்கிட உடல் அதிர்ந்து நின்ற கயலின் முகம் நினைவிற்கு வந்தது.
“அப்படியெல்லாம் இருக்காது அத்தான்” என்ற முகி கயல் எப்படி பொய் சொல்லி தன்னிடம் மருந்து வாங்கி வந்தாள் என்று சொல்ல… பார்த்திபனிடம் கலக்கம் நீங்கி அழகிய புன்னகை.
“கயலும் விரும்ப ஆரம்பிச்சிட்டாள் நினைக்குறேன்” என்றான் முகி.
“அதுதான் எனக்கு கவலை” என்றான் பார்த்திபன்.
“ஏன்?”
“கயலை பொறுத்தவரை இப்போ நான் யாரோ தான். அவளோட மங்கை அத்தை மகனில்ல” என்றான்.
“எனக்கு புரியல!” குழப்பமாக எறிட்டான்.
“அழகர் மாமா டாடுக்கு எழுதிய லெட்டர் பற்றி டாட் என்கிட்ட சொன்னார்” என்ற பார்த்திபன் அதில் மற்றவற்றை தவிர்த்து அழகர் பார்த்திபன் கயலின் திருமணத்தைப்பற்றி எழுதியிருந்ததை சொல்லியவன்… “இது கயலுக்கும் தெரியும்” என்றதோடு, “இப்போ கயல் என் மேலுள்ள காதலா இல்லை அவள் அப்பாவின் இறுதி ஆசையா அப்படின்னு இரண்டுக்கும் நடுவில் தவிக்கப்போறாள்” என்றான்.
“அப்போ கயலுக்காக நீங்கி உங்க பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதா அத்தான்.” தன் சகோதரிக்காகக் கேட்டான்
“நிச்சயம் என்னால் முடியாது முகி” என்ற பார்த்திபன்… “என் காதலுக்காக மட்டும் தான் கயல் என்னை ஏத்துகிட்டதா இருக்கனும்.
பின்னாளில் அவங்க அப்பா சொன்னதுக்காகத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கிற எண்ணம் எனக்கு வந்திடும். அது ரெண்டு பேருக்குமே ஒத்து வராது” என்றான்.
“ம்ம். உங்களை கட்டிக்க என் அக்கா கஷ்டப்படணும் சொல்றீங்க அதானே” என்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு கேட்ட முகியின் முதுகிலே அடி வைத்தான் பார்த்திபன்.
“சரி இந்தநேரத்துக்கு நீயெங்க இங்க?”
“அதுவா… என் அத்தானை பார்க்கணும்போல இருந்துச்சு. அதான் வந்தேன்” என்றவன் “இன்னைக்கு நானும் இங்கதான் இருக்கப்போறேன்” என்று சொல்ல…
உள்ளே தான் படுத்திருந்த கயிற்று கட்டிலையும், பார்த்திபன் அறையிலிருந்து கட்டிலையும் கொண்டுவந்து தென்னை மரங்களுக்கு அடியில் போட்ட சிவா திண்ணையில் படுத்துக்கொண்டான்.
“நாங்க பேசுறதெல்லாம் கேட்டுட்டு தான் இருந்தீங்களா?”
“ராத்திரியில் உங்களை யார் சத்தமா பேச சொன்னது” என்று தன்னிடம் கேட்ட முகிக்கு பதில் கொடுத்த சிவா, பார்த்திபனிடம் “கயல், அளவுக்கு அதிகமா உங்க விஷயத்தில் கஷ்டப்படுதுன்னு தோணுச்சுன்னா நான் உண்மையை சொல்லிடுவேன்” என்றான் எச்சரிக்கையாக.
“உன்னைவிட தங்கச்சி பாசத்துல இவன் ரொம்ப பொங்குறான் முகி” என்ற பார்த்திபனுக்கு இந்த உறவுகளுக்கு இடையேயான நெருக்கமெல்லாம் அதிசயமாக இருந்தது.
மூவரும் படுத்துவிட்டனர்.
பல கதைகள் பேசியபடியே இருந்தனர்.
அப்போதுதான் நினைவு வந்தவனாக “அப்படியென்ன நான் கேட்டுட்டேன்னு மதியம் அவ்வளவு சிரிப்பு உங்களுக்கு?” எனக்கேட்டான் பார்த்திபன்.
மீண்டும் அந்த நினைவில் இருவரும் சிரித்துவிட…
“எனக்கு ஆன்சர் பண்ணிட்டு சிரிங்க” என்றான் கடுப்புடன்.
“ரைஸ் பிளாண்ட் நீங்க சொன்னதுதான் எங்க சிரிப்புக்கு காரணம்” என்றான் சிவா.
பார்த்திபன் புரியாது முகியை பார்த்திட…
“விதை நெல் வைத்து நாமதான் முளைக்க வைக்கணும் அத்தான். அதுக்கே நிறைய புராசஸ் இருக்கு. நீங்க சொன்ன மாதிரி இப்போலாம் அக்ரி ஃபார்ம்லயும் நாத்து சொல்லி வைச்சு வாங்கிக்கலாம். ஆனா அது அவ்ளோ நிறைவா இருக்காது” என்றான் பெருமூச்சுடன்.
“அடபோடா… இதுக்கே எனக்கு கண்ணை கட்டுது.” முகத்தை அழுந்த தேய்த்துக்கொண்டான் பார்த்திபன்.
“இதுக்கேவா…” என்ற சிவா சத்தமாக சிரித்திட…
“இப்போ எதுக்குடா சிரிக்குற” என்றான் கடுப்புடன்.
“நாளைய டாஸ்க் நினைச்சேன். சிரிச்சேன்” என்று சிவா சொல்ல…
“உங்களுக்கு மரம் ஏற தெரியுமா அத்தான்” என்று முகி கேட்டான்.
“மரம் ஏற நானென்ன மங்கியா?”
“அப்போ தெரியாதா?”
“எதுக்குடா?”
“நாளைக்கு தெரிஞ்சிடும்.” முகியும், சிவாவும் ஒரு சேர கூற… பார்த்திபனுக்கு கலக்கமாக இருந்தது.
“வாய் வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்.” வாய்விட்டே புலம்பினான்.
“இட்ஸ் டூ லேட்” என்று சொல்லிய முகியின் கட்டிலை காலால் எட்டித் தள்ளினான் பார்த்திபன்.
“போங்கடா நீங்க ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையை ஏதேதோ சொல்லி பயம் காட்டுறீங்க. நான் தூங்கப்போறேன்” என்ற பார்த்திபன் கண்களை மூடிக்கொண்டான்.
“இப்படியே கனவில் மட்டும் லவ் பண்ண வேண்டியது தான்.”
சொல்லிய முகிக்கு பார்த்திபன் பதில் அளிக்காது தன் வேலையைத் தொடர்ந்தான்.
அதாங்க… கயலை கனவில் காதல் செய்தான்.