அத்தியாயம் 🌾36 :
“வரப்பில் ஜாகிங் போயிட்டு வர்றீங்களா அத்தான்.”
அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்த முகி காலைநேர நடைப்பயிற்சி செய்து முடித்து வந்தமர்ந்த பார்த்திபனிடம் கேலியாக வினவினான்.
“இதையுமாடா டெலிகாஸ்ட் பண்ணுவ” என்று சிவாவிடம் கேட்ட பார்த்திபனின் முகத்தில் புன்னகையே படர்ந்திருந்தது.
“சொல்லணும் சொல்லலை. இவன் இருக்கானே” என முகியை கை காண்பித்த சிவா “நொடிக்கு ஒரு தரம் போன் போட்டு அத்தான் சாப்பிட்டாரா, அத்தான் தூங்கினாரா, அத்தான் என்ன பண்றாரு, அத்தான் இப்போ என்ன செய்றாரு, அத்தான் அத்தான் அத்தான் கேட்டே என்னை செத்தேன் ஆக்கிட்டான்” என்று புகார் வாசித்தான்.
அதற்கு பார்த்திபனிடம் அட்டகாசமான சிரிப்பு.
“உங்களை லவ் பண்ணி கயல் காட்ட வேண்டிய அக்கறையெல்லாம் இவன்(முகி) ஒட்டு மொத்தமா காட்டிட்டு இருக்கான். கயலுக்கு அடுத்து இவனும் பொண்ணா பொறந்திருந்தா உங்கபாடு திண்டாட்டமாகியிருக்கும்” என்று சிவா அலுத்துக்கொண்டான்.
“அச்சோ அண்ணா என்ன பேசறீங்க?” என்று முகி பதற…
“கயலை கட்டிக்கிப்போறவங்கிறதால கூட இந்த அக்கறை அன்பெல்லாம் இருக்கலாம்” என்று பார்த்திபன் வாக்கியத்தை முடித்து வைத்தான்.
அதில் முகி பார்த்திபனை முறைத்தான்.
“நீங்க யாருன்னு தெரியாமலே மேகசினில் உங்களைப்பற்றி ஆர்டிகள் படிச்சு அட்மயர் ஆனா ஆள் நான். உங்களை உங்களுக்காகவே ரொம்ப பிடிக்கும். இதில் அத்தை மகங்கிற உறவும் வராது” என்று கோர்வையாக பேசியவன் மூச்சு வாங்கினான்.
“என்னங்க இவன் கயல் பேச வேண்டிய வசனத்தையும் இவனே பேசுறான்.” சிவா சொல்லி முடிக்கவில்லை முகிக்கே சிரிப்பு வந்தது.
“சிரிச்சதெல்லாம் போதும்… வேலையை பார்க்கலாம் வாங்க.”
கயலின் குரல் கேட்டு திரும்பிய மூவரும், ‘எப்போ வந்தாள் தெரியலையே’ என்ற ஒன்றையே யோசித்தனர்.
“மலர் உன்னை வர சொன்னாள் முகி. வீட்டுக்கு போ” என்றவள் “அண்ணா ஆத்தங்கரையோரம் இருக்க மரங்களில் ஒடிச்சிக்கலாம்” என்க சிவா சரியென்றான்.
‘இன்னைக்கென்ன காஸ்டியூம் மாறியிருக்கு’ என்று கயல் அணிந்திருந்த சுடிதாரை குறிப்பிட்டு கேள்வி கேட்டுக்கொண்டவன்
“இன்னைக்கு என்ன டாஸ்க்?” என அவளிடம் உற்சாகமாகக் கேட்டான்.
அவனை மேலிருந்து கழுத்து வரை பார்த்தவள், “விவசாயம் செய்றது உனக்கு டாஸ்க் மாதிரியா இருக்கு?” எனக் கேட்டபோதும் அவனின் முகம் காண்பதை தவிர்த்தாள்.
இரவு அவள் மனதோடு நடத்திய போராட்டம்… பார்த்திபனின் முகம் காண்பதையே தடை செய்தது.
எப்போது எப்படியென்றெல்லாம் ஆராய அவசாயமில்லாமல் பார்த்த முதல் நாளே தன் மனதில் பார்த்திபன் தடம் பதித்துவிட்டான் என்பது அவளுக்கு புரிந்துதான் இருந்தது.
அன்று விழா அரங்கில் பார்த்திபன் உள் நுழையும்போதே அங்கு பெரிய சலசலப்பு… அதில் அவனின் உயரம் கண்டு பலர் எழுந்து நின்று வரவேற்க கயலின் பார்வை தன்னைப்போல் பார்த்திபனின் மீது படிந்தது.
உடலில் ஓடி அடங்கிய மெல் அதிர்வை அவளால் உணர முடிந்தது.
பார்த்த கணம் கயலின் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான். அவனிலிருந்து கண்களை அகற்ற முடியாது தவித்தவள் முகியின் தோடுகையிலே சுயம் பெற்றாள்.
பார்த்திபனை மீண்டும் பார்த்திட கண்களும் மனமும் ஒரு சேர படபடத்திட அவ்வுணர்வுக்கான காரணம் விளங்காமல் இருக்க அவளொன்று பதின்ம வயது பெண்ணில்லையே.
அத்தோடு சூழ்நிலையால் சிறு வயதிலேயே அனைத்திலும் முதுமையாய் இருந்து வளர்ந்தவளுக்கு தன் மனம் தெள்ளென தெரிந்தது.
மீண்டும் மீண்டும் பார்த்திபனின் புறமே கண்கள் செல்ல… அடக்குவதற்கு பெரும் பிரயத்தனப்பட்டாள்.
‘பார்த்ததும் காதலா? பெயர் கூட தெரிந்திடாத ஒருவனிடம் என் இதயம் செல்கிறதா?’ சிந்தித்த கணம், அழகரின் வார்த்தைகளும் அகத்தில் ஓடியது.
அந்நொடி தன்னிலை புரிய பார்த்திபனிடம் தாவும் மனதை கட்டுப்படுத்துவது அவளுக்கு அவ்வளவு கடினமாக இருந்திடவில்லை.
அதன் பின்னர் மேடையில் தான் பார்த்திபனை நேருக்கு நேர் பார்த்தாள்.
‘பார்த்ததற்கே சில நிமிடங்கள் தன்னை மறந்துவிட்டோம்… இதில் அவனது சபரிசம் பட்டால் மொத்தமாக அவனுள் உருகிவிடுவோம்’ என நினைத்தே… பார்த்திபன் கரம் குலுக்க நீட்டியபோதும், பதக்கம் அணிவிக்க வந்தபோதும் தவிர்த்திருந்தாள்.
அவனது கையால் விருது வாங்கியது உள்ளுக்குள் அத்தனை மகிழ்வை தந்திருந்தது.
விழா நிறைவு பெறவும்…
இனி அவனை பார்த்திடவே முடியாது என்கிற உண்மை முகத்தில் அறைய, வேண்டுமென்றே அவனிடம் சென்று மேடையில் பேசியதற்காக வம்பு பேசினாள். ஆனால் நிச்சயம் அவளும் இந்த போட்டியையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.
சவால் என்று பார்த்திபனும் ஒப்புக்கொண்டதும்,
அவன் தன்னுடனே இருக்க வேண்டுமென்கிற ஆசையில் தான் தனது ஊருக்கே வந்து விவசாயம் செய்ய சொல்லி தூண்டினாள்.
ஆனால் பார்த்திபன் வருவானென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பார்த்திபன் வரமாட்டானென்று வருந்தினாலும், வந்திடக்கூடாதேயென்று மருகவும் செய்தாள். அவனின் நலன் வேண்டி.
பார்த்திபனை தன்னுடைய வீட்டில் கண்டதும் எந்தளவிற்கு மகிழ்ந்தாளோ அதேயளவு வருத்தமும் கொண்டாள்.
‘தான் கொஞ்சம் வாயினை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.’
அவன் இங்கிருந்து சென்றிட வேண்டுமென்றே இரு நாட்கள் கண்டுக்காது இருந்தாள். ஆனால், அவனோ போட்டியில் வென்று காட்டிடுவேன் என்று முன்வந்து நிற்க அவளுக்கும் அவன் வழியிலேயே செல்வதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.
காதல் கொண்டதாலேயே அன்று எவ்வித தயக்கமுமின்றி பாதம் பிடித்து மருந்திட்டாள். அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதேயென ஒவ்வொரு நொடியும் அவனது செயல்களின் பின் துணை நிற்கின்றாள்.
பார்த்திபனிடம் தன்னையே முற்றும் முழுதாக தொலையும் போதெல்லாம் அழகரின் குரல் அவளை இறுக்கி பிடித்தது. இருந்தபோதும் நேற்றிரவு அவளே தன் மனதை கண்ணீரின் மூலம் வெளிப்படுத்திடுவோமென்று அவள் எதிர்பாரவில்லை.
வீட்டிற்கு சென்றவள் இது நடந்திடாதென வேதனை கொண்டு தன்னையே நிந்தித்தவளாக தூக்கம் துறந்தவள் அழுகையில் கரைந்தாள்.
பார்த்திபனா, தந்தையின் சொல்லா என்று மனதில் பெரும் போராட்டம் நடத்தியவள். முடிவில் தந்தையின் சொல்லுக்கே கட்டுப்பட்டு பார்த்திபனின் மீதுள்ள காதலை இதயத்தின் கடைசி பக்கத்தில் மூடி வைத்தாள்.
அதன் பின்னரே தெளிவாக உறக்கம் கொண்டாள்
பண்ணைக்கு வரும் வழியில்,
‘அவனின் முகம் பார்த்தால் தானே இந்த மனம் என் பேச்சைக் கேட்காது’ என நினைத்தவள் இனி பார்த்திபனின் முகத்தையே பார்த்திக் கூடாதென்ற முடிவுடன் தான் அங்கு வந்தாள்.
கயல் தன்னை தவிர்ப்பதை பார்த்திபனும் முதல் விலகளிலே உணர்ந்துகொண்டான்.
கயலின் காதலை முதல் நாள் இரவில், அவளின் கண்களில் வந்துபோன உணர்விலும் கண்ணீரிலும் கண்டுகொண்டவன், தனக்குள் போராடி மீண்டு வந்திருப்பவளை தான் மேலும் கஷ்டப்படுத்த வேண்டாமென்று அமைதியாக வேலையை பற்றி கேட்டான்.
“என் முகத்தை தான் பார்க்கமாட்ட… என்கிட்ட பேசக்கூடவாமாட்ட?”
தான் கேட்டதற்கு பதில் சொல்லாது நின்றிருந்தவளின் மௌனத்தை கலைத்திட முயற்சித்தான்.
தன்னை கண்டுகொண்டானே என்று திடுக்கிடலுடன் தன்னை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கலந்து கண் சிமிட்டினான்.
உருகத் தயாராகிய உள்ளத்தை கொட்டி அடக்கியவள், ‘இதுக்குத்தான் முகத்தை பார்க்காமல் இருந்தேன்’ என்று முணுமுணுத்திட கேட்க வேண்டியவனுக்கு கேட்டும் விட, சத்தமாக சிரித்தேவிட்டான்.
“என்னாச்சு?”
சிவாவும் முகியும் ஒன்றாகக் கேட்க, என்ன சொல்வதென்று பார்த்திபன் திருதிருக்க…
“நீயின்னும் போகலையா?” என்று முகியைக் கேட்டு திசைத்திருப்பினாள் கயல்.
“இதோ போறேன்” என்று சில அடிகள் சென்றவன் திரும்ப வந்து…
“என்ன வேலைன்னு சொல்லு கயல்… ஹெல்ப் பண்றேன்” என்றான்.
“என் வேலையை எனக்கு பார்த்துக்க தெரியும்” என்றவளிடம் “அப்போ அவருக்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்று அங்கேயே இருந்திட்டான்.
அவனை கயல் ஆராய்ச்சியாய் அளவிட, “ஜஸ்ட் ஹெல்ப்” என்று அசடு வழிந்தவன்,
மலருக்கு அழைத்து “தான் வர தாமதமாகும்” என சொல்லிவிட்டான்.
அடுத்து சிவாவும், கயலும் ஆற்றங்கரை நோக்கி சென்றிட மற்ற இருவரும் அவர்களை பின் தொடர்ந்தனர்.
“இப்போ எதுக்கு முகி இங்க?”
தெரியாமல் கேட்டான் பார்த்திபன்.
“வயலுக்கு தழையை உரமா போடுவாங்க அத்தான். அதுக்குத்தான் வேப்பிலை, வைனாரம் இலை, எருக்கம் செடியை கொண்டு வர போறோம்” என்றான் முகி.
சில அடிகள் முன் சென்றுகொண்டிருந்த கயல், நடையை நிறுத்தி, “இங்க ரெண்டு மரம் இருக்குல சிவாண்ணா, ஒன்னுல அவங்களை ஒடிச்சிக்க சொல்லுங்க” என்ற கயல் தோளில் கிடந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு சரசரவென்று வேப்பமரத்தில் ஏறியதோடு, அதே வேகத்தில் சிறு சிறு கிளைகளையும் வெட்டத் துவங்கினாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அவளின் செயலை வாய் பிளந்து பார்த்தான் பார்த்திபன்.
‘இதுக்குத்தான் இந்த ட்ரெஸ்ஸா?’ என நினைத்தவன்,
“மரம் ஏறத்தெரியுமா முகி?” எனக் கேட்டான்.
“என்னை கயல் வயல் பக்கமே விடாது அத்தான்” என்ற பதிலிலேயே முகிக்கு இந்த மாதிரியான வேலையெல்லாம் தெரியாது என பார்த்திபன் தெரிந்துகொண்டான்.
ஒருமுறை தனக்கு முன்னிருந்த வேப்ப மரத்தின் உயரத்தை தலையை உயர்த்தி பார்த்தவன்,
“ம்ப்ச், இது வேலைக்கு ஆகுறதில்லை” என்றவன் சிவாவை பார்க்க…
“போன முறை மரம் ஏறி அடிப்பட்டுடுச்சு… அதனால் கயல் என்னை ஏறவிடாது” என்றதோடு
கயல் வெட்டி போடுவதை எடுத்து அடுக்க ஆரம்பித்தான்.
“சுத்தம்” என்று தலையசைத்த பார்த்திபன், கயலை பார்த்தான்.
அவளோ தனக்கு வேண்டிய வேப்பம் இலைகளை வெட்டிக்கொண்டவள், அம்மரத்திலிருந்தே அருகிலிருந்த இரண்டு மரங்களில் தாவி தாவி நான்காவதாக இருந்த வைனாரம் மரத்தில் தாவியிருந்தாள்.
“மங்கி நம் முன்னோர்கள் என்பது சரிதான் போலிருக்கே” என்ற பார்த்திபன்,
“இந்தவூரில் மரம் ஏறத்தெரிந்த யாராவது கூட்டிவா முகி” என்றான்.
“பார்த்துட்டே இருந்தா வேலையாகுமா? இல்லை கீழே விழுற இலையை ஒவ்வொன்னா பொருக்குற உத்தேசமா” என்ற கயலின் சீண்டலில் தானே மரம் ஏற முயற்சித்து பார்ப்போம் என பார்த்திபன் செல்ல… முகி தடுத்தான்.
“சும்மா மாடிப்படி ஏறும் விஷயமில்ல அத்தான். கொஞ்சம் தவறினாலும் கை கால் முறியும்” என்றான்.
“நீவேற ஏன்டா பயம் காட்டுற?” என்ற பார்த்திபன் இடுப்பில் கை குற்றி அண்ணாந்து பார்த்தான்.
“இந்த இலைகளை போடாது செய்ய முடியாதா சிவா?”
“இதை போட்டுதான் பழக்கம்.” அத்தோடு சிவா பேச்சினை முடித்துக்கொண்டான்.
போதுமென்றளவுக்கு வெட்டிக்கொண்டு கீழேயிறங்கிய கயல், “மாணிக்கம் மாமா எருக்கச்செடி பிடுங்கிக்கொண்டு இருப்பார் அங்கப்போய் தூக்கிட்டு வாண்ணா” என்று சிவாவை அனுப்பி வைத்தவள்… ஆற்றில் நீர் அள்ளிப் பருகினாள்.
“உனக்கெப்படி மரம் ஏறத் தெரியும்?”
“பழகிக்கிட்டேன்.” பார்த்திபனை பார்க்காது சொன்னாள்.
“கத்துக்க எவ்வளவு நாள் ஆகும்?”
“அது உன்னுடைய திறமையை பொறுத்தது!”
“எப்படி ஏறனும்?”
கீழே குற்றி உக்கார்ந்து நீர் அருந்திய நிலையிலேயே அவனைத் திரும்பி பார்த்த கயலின் முகத்தில் என்ன இருந்ததென்று தெரியவில்லை.
‘தன்னால் தான் பார்த்திபனுக்கு இந்நிலையோ’ என்று வருந்தியவள், எதையும் கற்றுக்கொள்ள முயலும் அவனின் ஆர்வத்தில் வியந்தாள்.
எதுவும் சொல்லாது தோட்ட வீட்டை நோக்கிச் சென்றவள், ஐந்து நிமிடத்தில் நீளமான கழியுடன் பார்த்திபனின் முன்னால் நின்றாள்.
“இதுல பறிச்சிக்க சொல்லு முகி” என்று சிறு அரிவாள் நுனியில் கட்டப்பட்ட நீண்ட கழியை அவனிடம் கொடுத்தாள்.
“இதுல எப்படி?” கேள்வியாய் பார்த்தான் பார்த்திபன்.
முகியின் கையிலிருந்த வாங்கரிவாளை வாங்கியவள், அதன் மூலம் எப்படி சிறு சிறு கிளைகளை ஒடிக்க வேண்டுமென்று ஒடித்து காண்பித்தாள்.
அது கொஞ்சம் எளிதானதாகத் தெரிந்தது.
“நீயும் இப்படியே அறுத்திருக்கலாமே!”
“இதுல அறுத்து எப்போ வேலை முடியுறது” என்றவள் கட்டி வைத்திருந்த இலைகளை, முகியைத் தூக்கி தன் தலையில் வைக்கச் செய்தவள்…
“சீக்கிரம் வந்து சேருங்க” என்றபடி சென்றுவிட்டாள்.
கயல் ஒரு மணி நேரத்தில் முடித்த வேலையை பார்த்திபன் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகி செய்து முடித்தான்.
“கயல் தலையில் வைத்த மாதிரி என் தலையிலும் வை முகி.”
கட்டி வைத்திருந்த கட்டினை பார்த்து பார்த்திபன் கூற,
“அய்யோ அத்தான் வேண்டாம். உங்களால் ஒரு அடி கூட வைக்க. முடியாது இதைத் தூக்கிக்கிட்டு.” முடியவே முடியாதென்று முகி மறுத்தான்.
ஆனால் அவனுக்கு மேல் பிடுவாதம் பிடித்தான் பார்த்திபன். தான் தான் தூக்குவேனென்று.
“ரொம்ப கஷ்டம் அத்தான்.”
“கயல் தூக்கினாளே முகி.”
“அவளுக்கு பழக்கம். புதுசா செய்தால் கழுத்து வலி உயிர் போயிடும்.” கிட்டத்தட்ட மன்றாடினான்.
“போட்டின்னு வந்துட்டா எல்லாமே நம்முடைய பங்களிப்பா மட்டுமே இருந்தாதான் வெற்றியை அனுபவிக்க முடியும் முகி” என்ற பார்த்திபன் தன் பிடியில் நிலையாய் நின்றுவிட முகி கட்டினைத் தூக்கி பார்த்திபனின் தலையில் வைத்தான்.
சுமையைத் தூக்கியதும் நேராக ஊன்றி நிற்கவே சில கணங்கள் தேவைப்பட்டது அவனுக்கு.
கட்டினைத் தூக்க சிரமப்பட்டு தடுமாறும் இடங்களில் முகி துணை நின்றான்.
தான் உழுத வயலில் கொண்டு வந்து இலைகளை போட்டதும் ஏதோ மலையை பிரட்டிக்கொண்டு வந்த உணர்வு அவனுக்கு.
ஜிம்மில் அசால்ட்டாக எடையைத் தூக்குபவனுக்கு அது அதீத சிரமமில்லை என்றாலும், புதிய ஒன்று எதுவாக இருப்பினும் ஏற்படும் தடுமாற்றம் அவனிடமும்.
“வந்தாச்சா?” என்று கேட்டபடி அவர்களுக்கு அருகில் வந்த கயல், “சாப்பிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்” எனும்போதே சிவாவும், மாணிக்கமும் வந்து சேர்ந்தனர்.
அடுத்த கால் மணி நேரத்தில் சரளா கொண்டு வந்த உணவை உண்டுவிட்டு, அனைவரும் வயல் பகுதிக்கு வர, மங்கை மலரும் கூட வந்தனர்.
“என்ன எல்லாரும் வந்தாச்சு?” கயல் தான் கேட்டாள்.
மங்கையும் மலரும் முகியைத்தான் பார்த்தனர்.
“ஒரே ஆள் எவ்வளவுன்னு மிதிக்கிறது. அதான் வரச்சொன்னேன்” என்றான்.
கயல் எதுவும் சொல்லவில்லை. தம்பியை அழுத்தமாகப் பார்த்துச் சென்றாள்.
“நீயெனக்கு சப்போர்ட் பண்றன்னு அப்பட்டமா தெரியுதுடா!”
“தெரியட்டும் அத்தான். அதுக்காக நீங்க மட்டுமே செய்ங்கன்னு என்னால் இருக்க முடியாது” என்ற முகி கயலைப்போலவே கட்டினை பிரித்து தவறுதலாக இருந்த பெரிய கழிகளையெல்லாம் அகற்றி சிறு சிறு குச்சிகளாக இருந்த இலைகளை வயலில் பிரித்து போட்டான்.
இருவரும் செய்வதைப்பார்த்து பார்த்திபனும் அதைப்போலவே செய்தான்.
எல்லா வயல்களிலும் இலை தழைகளை போட்ட பின்னர்… வயலில் இறங்கி அவற்றை சேற்றில் உள் அழுந்துமாறு கால்கள் வைத்து மிதித்தாள்.
பார்த்திபனுக்கு துணையாக முகி, மலர், சரளா தழை மிதித்திட… கயலுடன் மங்கை, சிவா, மாணிக்கம்.
வெகுநேரம் சேற்றில் நிற்பது பார்த்திபனுக்கு ஒரு மாதிரியாக இருந்தபோதும் அதனை அசட்டை செய்தவன் வேலையைத் தொடர்ந்தான்.
சாதரணத் தரையில் நடப்பதற்கும் சேற்றில் நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தன. பார்த்திபனுக்கு பழக்கமில்லாத வேலை கால் வலியைக் கொடுத்தது. இருந்தபோதும் தன் வேலையை முயன்று முடித்தான்.
தழையுரமிட்ட பின்னர் கை கால்களை சுத்தம் செய்த பார்த்திபன் வீட்டுத் திண்ணையில் அப்படியே படுத்துக்கொண்டான்.
செய்த வேலை உடல் வலியை கொடுத்தது.
அடுத்த நொடி அசதியில் உறங்கியே விட்டான்.
கயலின் முன்பு அவனை நெருங்க முடியாது மங்கையும் முகியும் அவனின் நிலை கண்டு வருந்தினர்.
கயலுக்குமே வருத்தம் தான். அந்த வருத்தம் தன்மீதே அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
தன்னால் தன்னவன் வருந்துவது சுத்தமாக அவளுக்கு பிடிக்கவில்லை.
ஆனால் அவன்தான் சொல்வதைக் கேட்காது விவசாயம் செய்தே தீருவேன் என்று சட்டமாக நிற்கின்றானே!
கயலுக்கு கண்கள் கலங்கும் போலிருக்க… அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.
“இந்தண்ணாவுக்கு இது தேவையா” என்ற மலர், “வீட்டுக்கு வா மாமா” என முகியிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.
மாணிக்கமும் சரளாவும் ஏற்கனவே சென்றிருக்க… பார்த்திபனின் அருகில் வந்த மங்கை அவனின் சிகை கோதி…
“எல்லாத்திலும் பிடிவாதம்” என்று வலிக்காது கொட்டினார்.
“அத்தை எழுந்துக்கப்போறாங்க” என்ற முகி உள்ளிருந்து தலையணை ஒன்றை கொண்டுவந்து மெதுவாக பார்த்திபனின் தலைக்கு வைத்தான்.
“பேசாம கயல்கிட்ட இவன் யாருன்னு சொல்லிடலாம் முகி.”
“யாருன்னு சொன்னாலும் இதிலிருந்து பின்வாங்க மாட்டாங்க அத்தை” என்ற முகியின் வார்த்தை மங்கைக்கும் உண்மையென்றே பட்டது.
முதல் அடியிலேயே இவ்வளவு துவண்டு கிடப்பவன் அடுத்தடுத்த நிலையில் என்னவாகப்போகிறானோ என்கிற கவலை மங்கைக்கும் முகிக்கும் இப்போவே தோன்றியது.