அத்தியாயம் 🌾 37 :
இரவு நன்கு உறங்கி எழுந்தபோதும் பார்த்திபனின் உடலில் அத்தனை சோர்வு.
‘இந்த சோர்வு தன்னை வேகத்தில் ஆமையாக்கிவிடும்’ என்று உணர்ந்தவன் சோர்வை விரட்டிட தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, பண்ணையைச் சுற்றியே ஓடினான்.
உடலில் புத்துணர்வு வரும்வரை நிற்காமல் ஓடினான்.
தனக்குள்ளே புது வேகம் வருமளவிற்கு அவனின் ஓட்டம் இருந்தது.
‘இனி எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் சோர்ந்து அமர்ந்திடாது இருக்க வேண்டும்’ என்று உருப்போட்டபடி ஓடிக்கொண்டிருந்தான்.
“பார்த்தி…”
தந்தையின் குரலில் ஓட்டத்தை நிறுத்தியவன், நின்ற இடத்திலேயே மென்மையாக ஓடியபடி,
“என்ன டாட் பையன் ஞாபகம் வந்திருச்சா?” எனக்கேட்டு கேலி செய்தான்.
தினமும் உணவு கொண்டுவரும் சாக்கில் மங்கை ஒருமுறையாவது மகனை பார்க்க வந்திடுவார். ஆனால் தேவராஜன் அவன் வந்தன்று பார்த்தது. இன்றுதானே பிள்ளையை காண வந்திருக்கிறார்.
“நான் சிங்கப்பூர் போகட்டுமா பார்த்தி?”
கேள்வியாய் தந்தையை ஏறிட்டான்.
“லிண்டாவால் அங்க மேனேஜ் பண்ண முடியலன்னு நினைக்கிறேன்.” தனக்குத் தோன்றிய பொய்யைக் கூறினார்.
“டெய்லி ரிப்போர்ட்ஸ் நான் செக் பண்ணிட்டு தான் டாட் இருக்கேன்.” அவனின் விழிகளில் கூர்மை.
“பிளீஸ் பார்த்தி. புரிஞ்சிக்கோ.” ஒரு மன்றாடல் அவரிடம்.
“இப்போ நீங்க என்ன சொல்லிட்டு போவீங்க டாட்.” அவரின் அமைதியிலேயே முடிவு செய்துவிட்டார். மாற்றிக்கொள்ள மாட்டார். புரிந்தவன் அதற்கு தகுந்த கேள்வியை கேட்டான்.
“பிஸ்னெஸ் பார்க்கணும் தானே பார்த்தி.”
“அதுதான் ரிஸனா?”
“என்னால் உன்னை இப்படி பார்க்க முடியல பார்த்தி.” கண்கள் கலங்கினார்.
“தரையில் கால் வைக்கவே யோசிக்கும் ஆள். நீ இப்படி…” வார்த்தைகளை நிறுத்திவிட்டார்.
“சேற்றில் இறங்கி வேலை செய்றது தானே!” என்று அவர் முடிக்காது விட்ட வார்த்தைகளைக் கூறியவன்,
“இப்போ எனக்கு பிடிச்சுதான் டாட் செய்றேன். கயல் செய்யும்போது நான் செய்யக்கூடாதா?” எனக்கேட்டான்.
“கயலுக்கு பழக்கமிருக்குடா.”
“நானும் பழகிக்கிறேன் டாட்” என்றவன், “இன்னும் விவசாயத்தை முழுசா நான் பார்த்திடவில்லை… ஆனால் முதல் அடிகளே இவ்வளவு வலுவானதா இருக்கும் அப்படின்னு நினைக்கல… சாப்பாடு நினைத்ததும் கைக்கு வந்துவிடும் நிலையில் இருந்ததால், கைக்கு வரும் உணவுக்கு பின்னால் எத்தனை உழைப்பு இருக்கிறது என்பது தெரியாமலே இருந்துட்டேன். இப்போ தெரிஞ்சுக்கிறேன் டாட்” என்றான்.
“நீயா பார்த்தி இப்படி பேசுற?”
“எந்த வேலையும் குறைச்சல் இல்லைங்கிறதை வந்த ஒரு வாரத்தில் எனக்கு புரிய வைத்துட்டாள் டாட்” என்றவன் கயலை எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.
“உன்கிட்ட இந்த மாற்றத்தை நான் எதிர்பார்க்கல.”
“பட் அம் எக்ஸ்பெக்கிட்டிங் திஸ்…”
“உனக்கு செட் ஆகாது. முதலில் கால் அலர்ஜி, கையில் காயம், நேற்று முழுக்க சேற்றில் நின்றிருக்க, அது எதை கொண்டு வரப்போகுதோ!” என்று அங்கலாய்த்தவர் பார்வை பார்த்திபனின் காலில் படிய, திரும்பி நின்று கால் விரல்களை அவருக்கு மறைத்தான்.
“ஏன் மறைக்கிற?” என்றபடி அவனுக்கு முன்னால் வந்து நின்றவர் பார்த்திபனின் கால் விரல்களை பார்த்து அதிர்ந்து போனார்.
“என்னடா இப்படியாகிருக்கு?” என்றவர் தரையில் அமர்ந்து அவனின் கால்களை ஆராய்ந்தார்.
“நத்திங் டாட்” என்றவன், “எப்படியும் உன் மருமகள் இதுக்கும் ஒரு மருந்தை கொண்டுவருவாள்” என்றவன் அதனை எளிதாகக் கடக்க தேவராஜனால் அப்படி முடியவில்லை.
கண்கள் மொத்தமாக கலங்கிப்போனது அவருக்கு.
தழை உரம் மிதிக்க… சேற்றிலேயே விரல்கள் மூழ்கி இருந்ததால் பழக்கப்படாத சேறு… அத்தோடு கால் வைக்குமிடமெல்லாம் ஏசி என்று இருந்தவனுக்கு ஒற்றுக்கொள்ளாமல் சேற்றுப்புண் வந்திருந்தது.
விரல்களுக்கு இடையே சதைகள் ஊறி… தோள் உரிந்து, நன்கு சிவந்திருந்தது.
“ஹாஸ்பிடல் போகலாம் பார்த்தி.”
“வேண்டாம் டாட். முகியிடம் பார்த்துக்கிறேன்” என்றவன் தந்தையின் மனதை தன்னிலிருந்து மாற்றும் பொருட்டு, “எப்போ கிளம்புறீங்க?” என்றான்.
“போக வேண்டாம் சொன்ன?”
“மாம் அளவுக்கு நீங்க திடமில்லை டாட்.”
அவனின் பேச்சு புரிந்தது என்பது போல் பேசினார்.
“நானிங்கிருந்தால் உன்னை விவசாயம் செய்யவிடாம தொந்தரவு செய்வேன்னு துரத்தப் பார்க்குற. ரைட்.”
“எஸ் கரெக்ட் டாட்.”
“உன் ஆறு வயது வரை நாம் கஷ்டப்பட்டிருந்தாலும் அதற்கு அடுத்து ஒரு நொடி கூட உன்னை வருத்தி நான் பார்த்தில்லை பார்த்தி. சிறு கஷ்டம் கூட, ஏன் அந்த வார்த்தையே தெரியாத அளவுக்கு வளர்ந்தவன் நீ. என்னால் இதையெல்லாம் பார்க்க முடியல. அப்புறம், இதெல்லாம் வேண்டாம்னு கயலிடம் நானே உண்மையை சொல்லிடுவேன். அதற்குத்தான் இங்கிருந்து கிளம்புறேன். அத்தோட என் மகன் எதையும் பாதியில் விட்டவனா இருக்கக்கூடாது. இதிலும் வெற்றியை தொட்டுடு. அதுக்கு தடையா நான் இருக்க விரும்பவில்லை” என்றவர் பார்த்திபனின் தோளில் தட்டிவிட்டுச் சென்றார்.
செல்லும் அவரிடம் “கயல்கிட்ட என்ன பிஸ்னெஸ் சொல்லுவீங்க?” எனக் கேட்டான்.
அவரும் சென்றவாறே “என்ன பிஸ்னெஸ் சொன்னதில்லை. அதனால் இப்பவும் அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கிறேன்” என்றார்.
“ஓகே. நீங்க சென்னை போங்க. மத்ததெல்லாம் டெல் பார்த்துப்பான்” என்றவனுக்கு தலையாட்டியிருந்தார்.
தேவராஜ் சென்ற பின்பும் ஒரு மணி நேரத்திற்கு ஓடியவன், வீட்டுத் திண்ணையில் வியர்வை வழிய அமர்ந்தான்.
வாழைத்தோப்பில் இலை அறுப்பதால் சிவா அங்கு சென்றிருந்தான்.
சிறிது நேரம் அமர்ந்திருந்தவன்…
‘சரி நாமும் குளிச்சிட்டு அங்க போவோம்’ என்று நினைத்து எழ,
“அத்தான் என்றபடி முகி வந்தான்.
“வா முகி” என்றவன் “அதென்ன கையில்” எனக்கேட்டான். முகியின் கையிலிருந்த கிண்ணத்தை பார்த்தபடி.
“இது உங்க காலுக்கு” என்ற முகி பார்த்திபனிடம் கிண்ணத்தை நீட்டினான்.
“நீயென்ன ஆயர்வேதிக் டாக்டரா?”
கயல் கொண்டு வராத கோபம் அவனுக்கு.
“நானில்லை. கயல் தான். இது வீட்டு மருந்து” என்ற முகி, “உங்களுக்கு கண்டிப்பா சேற்றுப்புண் வந்திருக்கும் கயல் தயார் பண்ணுச்சு” என்றதோடு, “எங்க காலை காட்டுங்க வந்திருக்கா பார்ப்போம்” என்றான்.
“எல்லாம் வந்திருக்கு”என்று முணுமுணுத்த பார்த்திபன் “இட்ஸ் பர்னிங் மேன்” என்று முகம் சுருக்கினான்.
“அப்படிதான் இருக்கும் அத்தான். இதை போடுங்க ரெண்டு நாளில் சரியாகிடும். இங்கிலிஷ் மெடிஸின் விட பவர்புல்” என்றவன், “வேப்பெண்ணெய், எள்ளு சேர்த்து அரைத்தது” எனக்கூறினான்.
“ம்” என்று முறைத்தபடி வாங்கிக்கொண்டவன், “கயல் வரலையா?” எனக்கேட்டான்.
“ரொம்ப தேடுறீங்க போல” என்று சிரித்தவனிடம்,
“அவளை பார்க்கலைன்னா டே தொடங்கவே மாட்டேங்குது” என்றான்.
“இதுதான் லவ்வு.”
“எங்களுக்கும் தெரியும். வாய் மூடிட்டு கிளம்பு.”
“நான் வாழைத்தோப்பு போறேன். அங்கதான் கயல் இருக்காள். இன்னைக்கு வேலை அங்க சரியா இருக்கும். நீங்க மருந்து தடவிக்கிட்டு ரெஸ்ட் எடுங்க” என்றவன் தோப்பு இருக்கும் திசை நோக்கி நடந்தான்.
“அக்கறை இருக்கவ(ள்) நேரா வந்திருக்க வேண்டியது தானே” என்றவன் கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டான்.
இன்றும் அவளே மருந்து போட்டுவிடுவாளென்று எதிர்பார்த்தானோ.
காதலில் எழும் சிறு எதிர்பார்ப்பும் நேசம் தானே. தனக்கான இணையிடம் மட்டும் தோன்றும் உரிமை அது.
முகி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பார்த்திபனும் வாழைத்தோப்பில் இருந்தான்.
நிறைய பேர் இலை அறுத்துக் கொண்டிருந்தனர். கயலும் அவர்களிடம் வேலை வாங்கியவாறு மரத்தில் முற்றியிருந்த இலைகளை கிழித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
கயலின் கையையும், குரலும் மட்டும் தான் பார்த்திபனுக்கு தெரிந்தது, கேட்டது.
சிவாவும் மாணிக்கமும் வெட்டும் இலைகளை சமமாக கிழியாதவாறு அடுக்கி… சிறு சிறு கட்டுகளாகக் கட்டிக்கொண்டிருந்தனர்.
“எதுக்கு சிவா இது?”
பார்த்திபனின் குரல் செவியில் நுழைந்ததும்… வாழை மரத்திற்கு பின்னிருந்து அவனை எட்டிப்பார்த்தாள்.
கயல் பார்த்ததை பார்த்திபனும் பார்த்துவிட… சில நொடிகள் பார்வையால் கவ்வியபடி.
“எல்லாம் சாப்பாட்டுக்குதான். பெரிய பெரிய ஹோட்டல், கல்யாண மண்டபம். சுத்துவட்டாரத்தில் எல்லா இடத்துக்கும் நம்ம தோப்பிலிருந்து தான் போகுது” என்ற சிவாவின் பதிலில் மோனை நிலை கலைந்து வேலையைத் தொடர்ந்தாள் கயல்.
‘அய்யோ கயல் இப்படியா பார்த்து வைப்ப. அவங்களை பார்த்தாலே எல்லாம் மறந்துடுற. பார்க்கக்கூடாதுன்னு தானே மருந்தைகூட முகியிடம் கொடுத்து அனுப்பின’ என்று மனதிற்குள் புலம்பியவள், ‘மருந்து போட்டாங்களா இல்லையான்னு தெரியலையே’ என மீண்டும் அவனிடத்திலேயே அவன் மீதான அக்கறையிலேயே வந்து நின்றாள்.
‘கிட்ட போனாதானே தெரியும். எப்படி போறது?’ சிந்தித்தவளாக இருக்க, கை அதன்போக்கில் வேலை செய்தது.
“அரிவாள் இருந்தால் கொடு சிவா. நானும் இலை அறுக்கிறேன்.”
“அதெல்லாம் வேண்டாம்.”
சிவா பதில் கொடுக்கும் முன் கயல் வேகமாக சொல்லியிருந்தாள்.
“ஏன் கயல்” என்ற மாணிக்கம், “தம்பி இருக்க உயரத்துக்கு எம்பாமலே சாதாரணமா அறுத்திடும்” என்றார்.
“புதுசு தானே மாமா. தெரியாமல் முற்றியதையெல்லாம் அறுதிட்டா அதுக்குத்தான்” என்று தடுமாறியபடி பதில் சொல்லியவள், “நீங்க பாத்தி கரை மேல் ஏறி நில்லுங்க” என்றாள். அதிலிருந்த கட்டளை பார்த்திபனுக்கு நன்கு புரிந்தது.
“ரொம்ப தான் அக்கறை.”
அவனின் வாயசைவு என்ன சொன்னான் என்பதை கயலுக்கு காட்டிக்கொடுத்தது.
‘எங்களுக்கில்லாமலா?’ மனதில் பதில் கொடுத்தவளுக்கு அப்பட்டமான அதிர்வு.
எவ்வளவுதான் கட்டுப்படுத்தி வைத்தாலும், பார்த்திபனை கண்டதும் அவனிடம் தாவும் மனதை என்ன செய்வதென்று தெரியாது மனதளவில் சோர்ந்து போனாள்.
“முகி எங்க சிவா?”
“அவன் அந்தப்பக்கம் இலை கிழிச்சிட்டு இருக்கான்.”
“இலையை விற்பது ஓகே. எதுக்கு இதை கிழிச்சிவிடணும்?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“மரத்தைவிட இலைகள் எடை கொடுக்கும் தம்பி. அப்போ காற்று கொஞ்சம் பலமா வீசினாலும், மரம் சாஞ்சிடும். அதற்குத்தான் இலையை கிழிப்பது. இப்போ காற்றை தடுக்குற பலம் இலைக்கு இருக்காது” என்று மாணிக்கம் கூறினார்.
விவசாயத்தில் சிறு புல்லின் செயலில் கூட ஆயிரம் அர்த்தம் உள்ளது என்பது அப்போது அவனுக்குத் தெரிந்தது.
ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்று அவனை பிரம்மிக்க வைத்தது.
இலைகளோடு சேர்த்து முற்றிய வாழை குலைகளையும், வாழைப்பூக்களையும் வெட்டி தனித்தனியாக சேமித்தனர்.
குலை வெட்டிய மரத்தையும் வெட்டி, அதற்கடுத்து அடி முளைக்கும் கன்றுக்கு வழவிட்டனர்.
இலைகளை அடுக்கி முடித்த சிவா வெட்டிய மரத்திலிருந்து தண்டுகளை பிரித்தெடுக்க ஆரம்பித்தான்.
சிவா எடுப்பதை பார்த்த பார்த்திபன் தானும் எடுப்பதாக முன்வர,
“நீங்க போட்டிருக்க வெள்ளை டீஷர்ட் காபி கலரில் மாறிடும் பரவாயில்லையா” எனக்கேட்டு அவனைத் தடுத்தான்.
“எவ்வளவு நேரம் டா சும்மா வேடிக்கை பார்க்கிறது?”
இருபத்தினான்கு மணிநேரமும் போதாது வேலை வேலையென ஓடுபவனால், மற்றவர்கள் வேலை செய்வதை மட்டும் பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை.
“நான் எதாவது செய்றேன்டா.”
“அவங்க வந்த வேலையை மட்டும் பார்த்தா போதும் சிவாண்ணா.” அவனை முறைத்துக்கொண்டே கூறியவள், பார்த்திபனின் பார்வை தன்மீது விழுந்ததும் வேறுபுறம் திரும்பிக்கொண்டாள்.
“நீங்க நேத்து சோர்ந்துபோய் படுத்திருந்ததையே கயல் வெகுநேரம் பார்த்திருந்துச்சு. அது முகமே வாடிப்போச்சு. அதான் பரம்படிப்பதை கூட ரெண்டு நாள் போட்ட தழையெல்லாம் ஊறனுமுன்னு காரணம் சொல்லி தள்ளி வச்சிடுச்சு. அப்புறம் உங்களை மத்த வேலை எதையும் செய்யவிடக்கூடாது சொல்லிடுச்சு” என்று சொல்லிய சிவா, “கயல் உங்களை போட்டியா பார்க்கல… நீங்க சிரமப்படக்கூடாதுன்னு நினைக்குது” என்றான்.
“ஆனால் இதுல கயல் உங்கமேல் வைத்திருக்கும் காதல் தான் எனக்குத் தெரியுது” என்று அருகிலிருக்கும் மாணிக்கத்திற்கு கேட்டுவிடாது, பார்த்திபனின் காதில் கிசுகிசுத்து சிரித்தான்.
சிவாவின் விலாவிலே குத்திய பார்த்திபன், “உனக்கெல்லாம் புரியுது?” என்றான்.
“எனக்கு புரிஞ்சு என்ன? சொல்ல வேண்டிய ரெண்டு பேரும் தள்ளி நிக்கிறீங்களே” என்றான் சலிப்பாக.
“அதுக்கு நீயேண்டா இப்படி சோககீதம் வாசிக்கிற?”
“எனக்குத் தெரிஞ்சு கயல் எதுக்கும் ஆசைப்பட்டதில்லை. சூழ்நிலை காரணமாத்தான் கயல் விவசாயமே செய்ய ஆரம்பிச்சுது. அடுத்து அதையே தனக்கு பிடிச்சதா மாத்திக்கிடுச்சு. அப்புறம் முகி ஆசைதான் அதோட ஆசைன்னு இருந்துச்சு. அதுக்காக முதன் முதலா ஆசைப்படுறது நீங்கதான். கயலோட சந்தோஷம் உங்கக்கிட்டதான் இருக்குன்னு என்னால் புரிஞ்சிக்க முடியுது.
கயல் உங்களை சீக்கிரம் கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கிறது நான் பார்க்கணும் தோணுது.
ஆனால் நீங்க ரெண்டு பேரும் பண்றதுக்கு அது அவ்வளவு சீக்கிரம் நடக்காதுன்னு தான் இந்த சோககீதம்.”
நெகிழ்வாய் பேசிக்கொண்டிருந்த சிவா இறுதியில் பார்த்திபனை முறைத்துக்கொண்டு பேச்சை முடித்தான்.
“விடு மச்சான், உன் தங்கச்சியை கண் கலங்காம பார்த்துகிறது என் பொறுப்பு” என்று சிவாவை தேற்றினான்.
தன்னை மச்சான் என்று சொல்லியதிலேயே சிவா அகம் மகிழ்ந்து போனான். கண்களில் நீர் கூட திரண்டுவிட்டது.
“நான்… மச்சானா?”
“ஆமா கயலுக்கு அண்ணன்னா எனக்கு மச்சான் தானே மச்சான்” என்றவன், “கயல், முகி ரெண்டு பேருமே உன்னை வெறும் வார்த்தைக்கு மட்டும் அண்ணான்னு கூப்பிடலன்னு தெரியும். அப்படியிருக்கும் போது நான் மட்டும் உன்னை வேறா பார்ப்பேனா” என்றான்.
தனக்கு யாருமேயில்லை என்கிற ஏக்கம் சிவாவிடமிருந்து முற்று முழுதாக ஓடியது.
“என்னாச்சுண்ணா…?”
சிவா கண்களை துடைப்பதை பார்த்தபடி அவர்களின் அருகில் வந்த கயல் கேட்க, சிவா என்ன சொல்வதென்று தெரியாது திருதிருத்தான்.
“இவங்க எதாவது சொன்னாங்களா அண்ணா” என்று பார்த்திபனை கைக்காட்டி கேட்டவள், அவனிடமே திரும்பி “என்ன சொன்னீங்க” எனக் கேட்டாள்.
“எதுவும் சொல்லலை. கேட்டேன்” என்றான்.
“என்ன கேட்டிங்க?”
….
பார்த்திபனிடம் பதிலில்லை.
“என்ன கேட்டிங்க, சொல்லுங்க?”
சிவா கண் கலங்கி கயல் பார்த்ததில்லை. யாருமற்று தனித்து கயலிடம் வந்து சேர்ந்த போதும் கூட திடமாகத்தான் இருந்தான். அவன் இப்போது கண்ணை கசக்கியதை பார்த்ததும் பதறித்தான் போனாள்.
“சொல்லப்போறீங்களா இல்லையா?”
“எனக்கு அவன் தங்கச்சியை பிடிச்சிருக்கு. கல்யாணம் செய்து வைக்க கேட்டேன்” என்று கூறியவன் அசராது நின்றான்.
“ஆங்…” அவள் தான் அதிர்ந்து நின்றாள்.
பார்த்திபன் சொல்லியதன் பொருள் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த முகிக்கு புரிந்துவிட, கயல் புரியாது…
“என்ன உளர்ற?” என்றாள்.
‘அய்யோ இந்த அக்கா இவ்வளவு தத்தியா இருக்க வேண்டாம்.’ முகி மனதில் புலம்பிக்கொண்டான்.
“சிவாண்ணா உங்களுக்கு என்னைத் தவிர்த்து தங்கச்சி வேற யாரும் இருக்காங்களா?” அவள் குரல் தேய்ந்து வந்தது.
அப்போதும் கயலுக்கு பார்த்திபன் சொல்லியது விளங்கவில்லை. சிவாவிடம் தான் உரிமை உணர்வு தொன்றியது. அவனுக்கு தான் மட்டுமே தங்கை எனும் எண்ணத்தில்.
“அச்சோ… இல்லை கயல். அவரு பொய் சொல்றாரு. கண்ணுல தூசி விழுந்திருச்சுன்னு தேய்த்தேன். தண்ணீ வந்திருச்சு” என்று சிவா சமாளித்தான்.
இல்லாத தூசினை ஊதிவிட்ட பின்பே கயல் தெளிவானாள்.
பார்த்திபனை முறைத்துக்கொண்டே கயல் அங்கிருந்து நகர்ந்திட…
“இந்த மக்கு அக்கா உங்களுக்கு வேண்டாம் அத்தான்” என்றான் முகி.
ஏன் என்பதைப்போல் பார்த்திபன் முகியை பார்க்க…
“இவ்வளவு தெளிவா உங்க காதலை சொல்லியும் கயலுக்கு புரியலையே!” என்றான்.
அப்போதுதான் பார்த்திபனுக்குமே தான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
‘அளவில்லா காதல் இருப்பதால், வார்த்தைகளில் தன்னைப்போல் வெளிப்படுகிறது’ என நினைத்து சன்னமாக இதழ் விரித்தவன்,
“கோணலா இருந்தாலும் என்னுடையதுங்கிற மாதிரி… மக்கா இருந்தாலும் என்னுடையவளாக்கும்” என்று விளம்பர வசனத்தை பேசிய பார்த்திபனை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்து வைத்தான் முகி.
“வேலை முடிந்ததா?”
முகியை சமாதானம் செய்தவனாகக் கேட்டான்.
“அய்யோ அக்கா பாம்பு” என்று கயல் கத்தியதில் எல்லோரும் சத்தம் வந்த இடத்தில் கூடிவிட்டனர்.
பெண்மணி ஒருவர் இலை அறுத்துக்கொண்டிருக்க அவரின் காலடியில் பாம்பொன்று தலை தூக்கி ஆடிக்கொண்டிருந்தது.
பார்த்ததும் அதிர்ச்சியில் தன்னை மறந்து கயல் கத்திவிட்டாளே தவிர அடுத்த கணம் சுதாரித்திருந்தாள்.
“அக்கா அசையாதீங்க” என்ற கயல் பாம்பின் அருகில் செல்ல…
“கயல் பாம்பு கடித்துவிடும்” என்று பதறியவனாக பார்த்திபன் முன் வந்தான்.
“ஷ்… கத்தாதீங்க” என்று வாயில் விரல் வைத்து பார்த்திபனை தடுத்தவள், “இவரை பிடிடா முகி” என்று தம்பியிடம் கூறினாள்.
முகியும் பார்த்திபனை பிடித்துக்கொள்ள… பாம்பின் அருகில் சென்றுகொண்டிருக்கும் கயலை பார்த்து அவனுக்கு பதட்டம் அதிகமாகியது.