பார்த்திபனின் கயல்விழி 38

அத்தியாயம் 🌾 38 :

இன்னும் தோப்பிற்குள் நடந்த நிகழ்விலிருந்து பார்த்திபனால் வெளிவர முடியவில்லை.

கயலின் தைரியம் அவன் அறிந்தது தான். ஆனால் பாம்பினை கையால் பிடிக்கும் அவளது துணிச்சல் வேறெந்த பெண்ணிடமும் அவன் கண்டிடாதது.

கயலின் அந்த திடம் இன்னமுமே அவனுக்கு வியப்பை அளித்தது.

பாம்பிற்கு அருகில் காலடி சத்தம் எழாதவாறு தரையில் கால் பதித்தும் பதிக்காத நிலையில் பாதம் வைத்து கயல் சென்றிட… அவளின் ஒவ்வொரு அடிக்கும் பார்த்திபனின் இதயம் அதி வேகத்தில் துடித்தது.

இதெல்லாம் கயலுக்கு சாதாரணம் என்பதைப்போல் அனைவரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க… பார்த்திபன் மட்டுமே அங்கு கயலை எண்ணி அச்சத்தில் உறைந்திருந்தான்.

அந்நொடி அவனுக்கு ஒன்று புரிந்தது…

‘கயலுக்கு ஒன்றென்றால் மட்டும் தன் திடம் யாவும் தொலைந்து அவளின் நலன் ஒன்று மட்டுமே முழு எண்ணமாகவும் மாறிவிடுகிறது.’

யாருக்காகவும் எதற்காகவும் அச்சம் கொள்ளாதவன்… பயம் கொள்ளும் ஒரே விடயம் கயல்.

உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் மட்டுமே உள்ளம் பதைப்பதைக்கும்.

அதனை உணர்ந்தவனுக்கு கயல் தன்னுடைய உயிருக்கும் மேலானவள் என்பது புரிந்தது.

“ஏன்டா இத்தனை ஆண்கள் இருக்கும்போது அவளை ஏன் விடுறீங்க?” மென்குரலில் வினவினான்.

“கயல் தானே பக்கத்தில் இருக்காள். அத்தோட அந்த அக்கா பாருங்க பாம்பை பார்த்ததில் எப்படி அரண்டு போய் நிக்குறாங்கன்னு” என்று பாம்பிற்கு அந்தப்பக்கம் மிக மிக அருகில் இருந்தவரை முகி சுட்டிக்காட்டினான்.

“இதெல்லாம் கயலுக்கு அசால்ட்டு தான்ப்பா” என்ற ஒருவரின் பேச்சு பார்த்திபனுக்கு கோபத்தையே கொடுத்தது.

எல்லா நேரமும் ஒன்று போல் இருக்காது என்பது அவனின் எண்ணம்.

ஆனால் அவனின் அத்தகைய பயம் தேவையில்லாத ஒன்றென்று கயல் சில விநாடிகளில் பாம்பின் கழுத்தினை பிடித்து தலையை இறுக்கி பிடித்துக் காட்டினாள்.

ஒரு நிமிடம் பார்த்திபனுக்கு மூச்சே நின்றுவிட்டது.

ஏதாவது கட்டையை எடுத்து பாம்பினை அவள் அடிப்பாள் என்று பார்த்திபன் எதிர்பார்த்திருக்க அவள் என்னவென்றால் எளிதாக கைகளில் பிடித்து நின்றாள்.

“ஹேய் கயல் என்ன பண்ற?”

சுற்றி அத்தனை பேரிடம் இல்லாத பதட்டம் அவனிடம்.

அவனின் கேள்வியில் அனைவரும் அவனை ஒரு மாதிரியாக பார்க்க,

“பாம்பு கடிச்சிடப்போகுது” என்று மீண்டும் பதறினான்.

அவளுக்கான அவனின் பதட்டம் இந்த பயமெல்லாம் கயலுக்கு சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. தன்மீது அவன் காட்டும் நலனின் முன் தானெடுத்த முடிவெல்லாம் காணாமல் போவதை உணர்ந்தவள்…

“கழுத்தை பிடிச்சிருக்கேன். அதனால ஒன்னும் செய்ய முடியாது!” என்று சொல்லி பாம்போடு சேர்ந்து நடந்தவள் தோப்பிற்கு வெளியில் சென்று அதனை விட்டுவிட்டு வந்தாள்.

“சரி சரி வேடிக்கை பார்த்தது போதும். எல்லாரும் வேலையை கவனிங்க” என்றவள் தோப்பிலிருந்து வெளியேற பார்த்திபன் அவள் பின்னால் சென்றான்.

“எதுக்கு கயல் இப்படியெல்லாம் செய்கற. அத்தனை பேர் நிக்குறாங்க அவங்க செய்யமாட்டாங்களா?”

“உங்களுக்கென்ன இவ்வளவு அக்கறை?”

அவளின் அந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. மௌனமாக நடந்தான்.

“தோப்பு நம்முடையது. அதில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாமதான் பொறுப்பு. யாரோ செய்யட்டுமுன்னு வேடிக்கை பார்க்கக்கூடாது” என்றவள் “காலுக்கு மருந்து போடல போலிருக்கு?” என்று வினவினாள்.

“என்மேல் உனக்கென்ன அக்கறை?”

“அதான் எனக்கும் தெரியல?”

அவனைப்போல் அவள் பதில் சொல்லாமல் இல்லை. ஆனால் அந்த பதிலில் அவனுக்குத்தான் ரத்த அழுத்தம் கூடியது. வேண்டுமென்றே கூறினாள் என தெரிந்தும்.

“அங்க வேலை நடக்குது நீயெங்கப்போற?”

தோப்பு வீட்டிற்குள் நுழைந்தவள் முகி பார்த்திபனிடம் கொடுத்துச்சென்ற கிண்ணத்துடன் வெளியில் வந்தாள்.

“இப்படி வந்து திண்ணையில் கால் நீட்டி உட்காருங்க!”

தான் கேட்டதற்கு பதில் அளிக்காது இருந்தவளை முறைத்துக்கொண்டே வந்தமர்ந்தான்.

“வேலையெல்லாம் முடிஞ்சுது. இனி லோட் ஏத்தனும் அவ்வளவுதான்” என்றவள் அவனின் விரல் இடுக்குகளில் மருந்தினை நோகாது பூசினாள்.

முன்புபோல் அவன் மறுக்கவில்லை. அவளும் தயக்கம் காட்டவில்லை.

இருவருக்குள்ளேயும் சொல்லப்படாத காதல் ஒருவருக்கொருவர் அறிந்ததாய்.

“காயுற வரை அப்படியே இருங்க… காய்ந்ததும் கழுவினா போதும். நைட் தூங்கும்போது போட்டுக்கோங்க. அப்போதான் நாளைக்குள்ள சரியாகும். திரும்ப வயலில் இறங்க முடியும்” என்றவள் மீண்டும் வாழைத்தோப்பை நோக்கிச்செல்ல…

“இதுக்குத்தான் வந்தியா?” எனக் கேட்டான்.

“போட்டிக்காக இருந்தாலும், என்னை நம்பி வந்திருக்க உங்க நலன் எனக்கு முக்கியமாச்சே!” என தன் காதலை அழகாக மறைத்தாள்.

“வெறும் அந்த எண்ணத்திலான மனிதாபிமானம் மட்டும் தான்” என்பதை அழுத்தமாகக் கூறினாள்.

“நீ முதல்ல சொன்னதே ஓகே. அடுத்து நான் எதுவும் கேட்கலயே” என்று சொன்னவனின் இதழ்கள் விரிந்ததோ. அவளுக்கு அப்படித்தான் தெரிந்தது.

அவள் சொல்லித்தான் அவனுக்கு தெரிய வேண்டுமென்றில்லை. எப்படி மறைக்க நினைத்தாலும் அவளையும் மீறி அவளது காதல் அவனது கண்களுக்கு பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

“தேவையில்லாம கற்பனையை வளர்த்துக்காதீங்க!” என்று கோபமாக சொல்வதைப்போல் சத்தமாக சொல்லியவள் மீண்டும் அவனேதும் பேசி தன் உள்ளத்தை பிடுங்கிவிடுவானோ என்று பயந்தே வேகமாக அங்கிருந்து சென்றாள்.

கயலின் நடையில் தெரிந்த வேகம்… அவளின் அலைபாயும் நிலையை அவனுக்குத் தெளிவாகக் காட்டியது.

வாழை குலைகள் லாரியில் ஏற்றப்பட்டிருக்க…

“கேரளாவுக்கு லோட் இறக்கியதும் எனக்கு கால் பண்ணுங்க சிவாண்ணா!” என்றாள்.

“சரிம்மா” என்ற சிவாவும் லாரியில் ஓட்டுநர் அருகில் ஏறி அமர வண்டி புறப்பட்டது.

அந்த லாரியின் பின்னே இன்னொரு லாரியும் தொடர்ந்து சென்றது.

“இந்த முறை லோட் கம்மியா தெரியுதே கயல்…?” முகி கேள்வியாக இழுத்தான்.

“காலையிலேயே ஒரு லோட் நம்ம ஊர் சந்தைக்கு போயிடுச்சு முகி” என்றார் மாணிக்கம்.

“ஏன் கயல் அந்த வியாபாரி தான் பணம் ஒழுங்கா கொடுக்க மாட்டேங்கிறார் சொன்னியே?”

“அப்பா வியாபாரம் செய்த இடம் முகி. முடிச்சிக்க மனசு வரல” என்ற கயல் வேலை செய்தவர்களுக்கு கையோடு கூலியையும் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்ல… முகி பார்த்திபனிடம் வந்தான்.

பார்த்திபன் மடிக்கணினியை வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.

லிண்டா அனுப்பியிருந்த கோப்புகளில் எல்லாம் ஒருமுறைக்கு இருமுறையாக சரி பார்த்து சைன் செய்து அனுப்பியவன், தேவராஜ் வருவதையும் தெரியப்படுத்தினான்.

“என்ன அத்தான் ஹெவி வொர்க் போலிருக்கே!”

“ஆமா முகி” என்றானேத் தவிர முகியை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவனின் கவனத்தை சிதறடிக்க வேண்டாமென்று முகி மௌனமாகி, மொபைல் நோண்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில்,

மலர் உணவு கொண்டுவர… பார்த்திபனும் வேலையை முடித்து மடிகணினியை மூடி வைத்தான்.

“வாம்மா” என்ற பார்த்திபனுக்கு புன்னகைத்த மலர்…

“இங்க உட்கார்ந்து வெட்டியா போன் நோண்டுறதுக்கு வீட்டுக்கு வந்து சாப்பாடு கொண்டு வந்திருக்கலாம்ல” என்று முகியிடம் சண்டைக்குத் தயாராகினாள்.

மலரின் நோக்கம் புரிந்தவன் பதில் சொல்லாது அமைதியாகவே இருந்தான்.

“வாங்கண்ணா சாப்பிடுங்க” என்ற மலர் இலையில் உணவினை பரிமாறி இருந்தாள்.

“இருக்கட்டும்மா நானே போட்டுப்பேன்” என்ற பார்த்திபன் சாப்பிட ஆரம்பிக்க…

“எனக்குடி?” என்றான் முகி.

இம்முறை அவள் வாய் திறக்கவில்லை.

பார்த்திபன் வாய்க்குள்ளே சிரித்துக்கொண்டான்.

“கேட்கிறேனே பதில் சொல்லு மலர்?”

“வீட்டுக்கு போய் சாப்பிடுங்க!” அலட்டிக்கொள்ளாமல் கூறியவள், “இன்னும் கொஞ்சம் கூட்டு வைக்கவாண்ணா. இது வீட்டுலே பண்ண வத்தல் சூப்பரா இருக்கும் சாப்பிடுங்க” என்று பார்த்திபனுக்கு ஒவ்வொன்றையும் வைத்தபடி முகியை வெறுப்பேற்றினாள்.

“மலர்…”

“என்னண்ணா இன்னும் வைக்கவா?”

“நான் கூப்பிடலம்மா. முகி” என்று கை காண்பித்தான் பார்த்திபன்.

“என்னடி லந்தா?”

“இல்லையே!”

இம்முறை கடுப்பின் உச்சத்தில் முகி.

“ரொம்ப ஓவரா போற மலர்.”

“அடுத்தவங்க முன்னால இப்படித்தான் நீ நடந்துப்பியா?”

மலர் வேண்டுமென்றே அவனை சீண்டிவிட்டு கேட்பது போலிருந்தது. பார்த்திபன் கண்டு கொண்டான்.

முகிக்கு அமைதியாக இருக்க கண்காட்ட அதற்குள் அவன் உலறியிருந்தான்.

“யாரு அடுத்தவங்க. அவர் தான் கண்ணத்தான்” என்று சொல்ல பார்த்திபன் இடது கையால் நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“அப்படி வாங்க வழிக்கு” என்ற மலர்,

“வந்ததிலிருந்து அவர் கூடவே ஒட்டிட்டு அலையுறீங்க. அதுவும் கயல் அண்ணிக்கு எதிரா வந்திருப்பவர்கிட்ட கோபம் வேண்டாம், மாறா பாசத்தை பொழியிறீங்களே! அதான் உங்க வாயாலே சொல்ல வைக்க அப்படி சொன்னேன்” என்று சொல்ல… முகி பார்த்திபனை மன்னிப்பு வேண்டும் பார்வை பார்த்தான்.

“கயல்கிட்டவும் நீயே சொல்லிடு முகி. எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்.” குரலில் கோபம் இல்லையென்ற போதும் முகிக்கு சங்கடமாகிப்போனது.

முகி அமைதியாகவே இருக்க…

“இன்னும் யாருக்கிட்ட சொல்லலாம் தின்க் பண்றியா?” எனக்கேட்டான் பார்த்திபன்.

“அதில்லை அத்தான்… இந்த மக்கு மலரே நமக்குள்ள ஏதோ இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கே, கயல் நோட் பண்ணாமலா இருக்கும்?” கன்னத்தில் கை வைத்தவாறு வினவினான்.

“எல்லாம் உன்னாலதான்டா” என்று பார்த்திபன் முகியை அடிக்க வர, முகி எழுந்து ஓட… அவனை துரத்திக்கொண்டு ஓடினான் பார்த்திபன்.

முகியை பிடித்தவன் வலிக்காது அடிக்க… அவனோ வலியில் அலறினான். நடித்தான் என்பது சரியாக இருக்கும்.

“எனக்கும் சேர்த்து ரெண்டு போடுங்கண்ணா, எப்போ பார்த்தாலும் படி படின்னு உயிரை வாங்குறாரு” என்று குற்றம் வாசித்தாள் மலர்.

“என்னடா முகி உன் மேல் க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே” என்ற பார்த்திபன்…

“ரொம்ப நொந்து போயிருப்ப போலிருக்கே மலர்” என்று அவளை பார்த்துக் கேட்டான்.

“ஆமாண்ணா” என்ற மலர் விளையாட்டுத் தனத்தை விடுத்து அவர்களிடம் வந்தாள்.

“எனக்கு நீங்க யாருன்னு தெரிஞ்சதால உங்களுக்கு பிராப்ளமா?” என்று பார்த்திபனிடம் கேட்டாள்.

“அப்படியில்லைம்மா… கயலுக்கு தெரியாம இருந்தால் போதும்” என்றான்.

“ஏன்?”

பார்த்திபன் என்ன எப்படி சொல்வதென்று அமைதி காத்தான்.

“எனக்குத் தெரியக்கூடாதா?”

பார்த்திபன் யாரென்று தெரிந்ததும் தன்னைப்போல் அவன் மீது ஒரு உரிமையுணர்வு மலருக்கு வந்திருந்தது. அதனால் அவளின் கேள்விகளும் நீண்டன.

“எப்படி சொல்லுறதுன்னு தான்…”

“அத்தான் இவளுக்காக எல்லாம் பீல் பண்ணாதீங்க… நான் சொல்லிக்கிறேன்” என்ற முகி, “நீவாடி முதலில்” என்று மலரை இழுத்துச் சென்றான்.

‘என்னுடைய காதல் கயலிடம் சொல்லுவதற்கு முன்பு இன்னும் யாருக்கெல்லாம் தெரியகிப்போகுதோ!’ என்று கயலிடம் சிந்தனையை சுழற்றிக் கொண்டிருந்தவன், தன்னுடைய அலைபேசியின் ஒலியில் கலைந்தான்.

டெல் தான் அழைத்திருந்தான்.

“யா டெல்…”

“ஹவ் ஆர் யூ பார்த்தி” என்று நண்பனாக அவனின் நலன் விசாரித்த டெல் அடுத்து பணியாளராக மாறி, தொழில் விடயத்தைப் பற்றி பேசினான்.

அனைத்தையும் கேட்டு அறிந்த பார்த்திபன், செய்ய வேண்டிய புதிய செயல்பாடுகளைக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அதன் பிறகு தான் நினைவு வந்தவனாக மீண்டும் டெல்லிற்கு அழைத்து… தேவராஜ் அங்கு வருவதையும், அவர் சிங்கப்பூர் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கூறியவன் அலைபேசியை வைக்க… அவனுக்கு பின்னால் மங்கை நின்றிருந்தார்.

“அப்போ நீ சம்மதிச்சிட்ட…”

“அவர் என்னோட சம்மதம் கேட்கவேயில்லை மாம். ஜஸ்ட் இன்போர்ம் பண்ணார்” என்று காலையில் இருவருக்கும் நடந்த உரையாடலை கூறியவன், “என்ன சொல்றார்?” எனக் கேட்டான்.

“கிளம்பியே ஆவேன்னு குதிச்சிட்டு இருக்கார். கயலும் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டாள். என்னவோ இவர் போகலன்னா அங்க வேலையை நடக்காத மாதிரி பில்டப் கொடுக்கார்.” மங்கை கடுப்பாகக் கூறினார்.

“டாட் விட்டு இருக்க முடியாதுன்னா நீங்களும் கிளம்புங்க” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்த மங்கை… “நான் போவேன்னு நீ நினைக்கிறியா?” எனக்கேட்டு, “இருபத்தி நாலு வருஷம் என் மண்வாசனையே இல்லாம இருந்துட்டேன். அதோட என் பிள்ளைங்களை விட்டுட்டு நான் எங்கயும் போவதா இல்லை” என்றார்.

புன்னகையோடு மங்கையை அணைத்துக்கொண்டான் பார்த்திபன்.

“சரிப்பா, இப்போவே கிளம்புறேன்னு நிக்கிறார். முகி காரில் கொண்டுவந்து சென்னை விடுறேன் சொல்லியும்… பரவாயில்லை, ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில் தூங்கிட்டே போய்டுவேன் சொல்றார்.” தேவராஜன் வீட்டில் செய்த அக்கப்போரை மகனிடம் அப்படியே ஒப்பித்தார்.

“விடுங்க மாம். முகியும் ரொம்ப நாள் அப்புறம் இப்போதான் வந்திருக்கான், அவனுக்கு இன்னும் ரெண்டு நாள் லீவ் இருக்கே அதற்குள் எதற்கு அலைச்சல்… முகியோட டவுனுக்கு நானும் போய் பஸ் ஏற்றிவிட்டு வர்றேன்” என்று மங்கையை தேவராஜன் பயணத்திற்கு சம்மதிக்க வைத்தான்.

“என்பேச்சை யார் கேட்கப்போறீங்க” என்ற மங்கையுடன் கயலின் வீட்டிற்கு பார்த்திபனும் சென்றான்.

இந்நேரத்தில் வயலுக்கு சென்றால் கயலிடம் ஏன் எதற்கென்று கேள்வி வரும். பார்த்திபனிடம் சொல்லாமல் கிளம்பவும் தேவராஜனுக்கு மனமில்லை. அதனை புரிந்துகொண்ட மங்கை, தேவராஜன் கிளம்புவதற்கு முன்பு கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாகச்சொல்லி பார்த்திபனிடம் வந்தார்.

இப்போது மங்கையுடன் பார்த்திபனும் வருவதை கண்ட கயல் கேள்வியாய் அவனை நோக்க…

“கோவிலுக்கு தம்பியும் வந்திருந்தது கயல், சிவாவும் இல்லையே… தனியாத்தானே இருக்கணும். சரி நைட் சாப்பிட்டிட்டே போகட்டும் நான்தான் கூட்டிவந்தேன்” என்று சரளமாக பொய் சொன்ன மங்கையை கயலைத் தவிர மற்றவர்கள் வாய்மேல் கைவைத்து அதிசயித்தனர்.

சிறிது நேரத்தில் தேவராஜன் முகியுடன் காரில் கிளம்ப…

“எனக்கு கொஞ்சம் தின்க்ஸ் வாங்கணும் நானும் வர்றேன்” என்று கயலுக்கு கேட்கும்படி காரணம் ஒன்றை சொல்லிய பார்த்திபன் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

பேருந்து நிலையம் வந்தவர்கள், சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்க பேருந்து வந்ததும் தேவராஜனை ஏற்றி, பேருந்து கிளம்பிய பின்னரே முகியும், பார்த்திபனும் வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்து உறக்கத்திற்கு படுத்த பின்னரும் பார்த்திபனுக்கு தேவராஜனின் நினைவாகவே இருந்தது.

என்னவென்று தான் அவனால் ஆராய முடியவில்லை.

தேவையில்லாது லூங்கின் முகமும் கண்ணில் தோன்றி மறைய பார்த்திபனின் தூக்கம் சுத்தமாக பறந்தோடியது.

அந்நேரத்திலேயே சிங்கப்பூர் போலீசில் உயர் பதவியில் இருக்கும் தனக்கு நெருக்கமானவருக்கு அழைத்தவன், லூங் சிறையில் இருப்பதை உறுதி செய்த பின்னரே ஆசுவாசம் கொண்டான்.

இருப்பினும் உள்ளுக்குள் ஓரிடத்தில் சிறு அலைப்புறுதல்.

தேவராஜனை தனித்து அனுப்பியிருக்கக்கூடாது என்று வருந்தும் நிலை வருமென்று தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கமாட்டானோ!

error: Content is protected !!
Scroll to Top