பார்த்திபனின் கயல்விழியாள் 39

அத்தியாயம் 🌾 39 :

“மலர்… மலர்…” முகியின் அழைப்பினை அவள் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை.

“அவன் ரொம்ப நேரமா கூப்பிட்டுகிட்டே இருக்கான். நீ காதுலே வாங்காம உட்கார்ந்திருக்க. எழுந்து போ மலர்” என்றாள் கயல்.

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக ஐந்து நிமிட இடைவெளியில் கயலுடன் வெளித்திண்ணையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த மலரை முகி அழைத்துக் கொண்டிருக்கிறான். அவள் எழுந்து செல்வேனா என அத்தனை அடமாக அமர்ந்திருக்கிறாள்.

“கூப்பிட்டாருன்னு போனாக்கா படிக்க சொல்லுவாங்க அண்ணி” என்று முகம் சுளித்து சொல்லிய மலர் சிறு பிள்ளையென கால்களை தரையில் உதறிக்கொண்டு சென்றாள்.

மற்றவர்கள் முன்னிலையில் தான் இந்த விலகலெல்லாம். மற்ற நேரங்களில் முகி மலரை எப்படித் தாங்குவான் என்று அறிந்திருந்த கயலுக்கு, கணவன் மனைவியாக ஆன பின்பும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத அவர்களின் காதல் ஆட்டங்கள் சிரிப்பைத்தான் வரவழைத்தது.

அதிலும் சொல்லாமலே மலரும், முகியும் ஒருவரையொருவர் விரும்பியது… ‘அளவுக்கு அதிகமான அன்பு கொண்ட பிறகு… வெளிக்காட்டிடாது, விலகியிருக்க முடியுமா?’ என்று தான் தோன்றியது.

‘நான் இந்த மாதிரிலாம் இருக்கமாட்டேன். பார்த்திபனிடம் காதலை சொன்னதும், ஒளித்து மறைத்தெல்லாம் இல்லாம… திகட்ட திகட்ட தெவிட்டாத காதலை கொடுத்து, அதே அளவு காதலை திரும்ப வாங்கி அனுபவித்து காதல் பண்ணுவேன்.’ மனம் சென்ற போக்கிலும், சொல்லிய பெயரில் திடுக்கிட்டவளுக்கு நொடிப்பொழுதில் உடல் தெப்பமாக வியர்வையில் நனைந்தது.

சில்லென்று வீசிய இரவு நேரக்காற்றும் குளுமை அளிக்கவில்லை. சட்டென்று இன்னதென்று புரியா படபடப்பு.

இவ்வளவு நாள் உள்ளுக்குள்ளே புதைந்திருந்த காதல்… இன்று தன்னுடைய ஆழ்மனம் கடந்து தன்னைப்போல் பேச்சில் வெளிவருவது கண்டு… பார்த்திபன் மீது கயல் கொண்ட நேசத்தின் அளவு அவளே அறிவதாய்.

புறங்கை கொண்டு நெற்றி கன்னம் என வியர்வையைத் துடைத்தவளுக்கு இன்னமும் படபடப்பு நீங்கவில்லை.

அவளுக்கே தெளிவாகத் தெரிந்துபோனது… பார்த்திபனை விட முடியாதென்று.

அந்நேரம் மனதின் ஓரம் அழகர் சொல்லிய வார்த்தைகளும் முணுக்கென்று நினைவில் சுழல… பார்த்திபனா? தந்தையின் வார்த்தைகளா? பெண்ணவள் கலங்கிப்போனாள்.

எவ்வளவு நேரம் தனக்குள்… தனக்குள் முளைத்திருக்கும் காதலில் சிக்குண்டு குழம்பி உழன்றாளோ?

“இன்னும் தூங்கபோகலயா கயல்” என்ற மங்கையின் குரலில் தன்னை சீர்ப்படுத்த முயன்றும் முடியாது… அவரை ஏறிட்டு பார்க்காது வேகமாக எழுந்து வீட்டிற்குள்ளே தனது அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

தன்னுடைய அறையில் மாட்டப்பட்டிருக்கும் அழகரின் புகைப்படத்துக்கு கீழே சுவற்றில் சாய்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தவள், மடியில் புகம் புதைத்து கண்ணீர் சிந்தினாள்.

பார்த்திபன் மீதுள்ள காதலை உணர்ந்த நொடி முதல்… தனக்குள்ளே உருப்போட்டபடி வேண்டாமென்று பலமுறை முயற்சித்து விட்டாலும் அவனைக் கண்டுவிட்டால், பூனைக்குட்டியாய் அவனது காலடியில் சுருண்டுகொள்ளும் மனதினை அடக்கும் மார்க்கம் தெரியாமல் தவித்தாள்.

காதலில் கட்டுப்பாடற்ற தன்மீதே அத்தனை கோபம் கயலுக்கு.

இதில் அழகரின் இறுதி ஆசை… அவளை பாடாய்ப்படுத்தியது.

எதில் நிலையாக நிற்பதென்று தெரியாது தனக்குள்ளே போராடியவள் நேரம் என்ன என்பதையும் பாராது வீட்டை விட்டு வெளியேறி பண்ணையை நோக்கி வேக எட்டுக்கள் வைத்துச் சென்றாள்.

*****

அறைக்குள் நுழைந்த மலரை கதவின் பின்புறமிருந்து அணைத்திருந்தான் முகி.

எதிர்பார்க்காது நடந்த நிகழ்வில் ஆவென்று கத்த வாய் திறந்த மலரின் இதழ்களை தனது இதழ்களால் மூடியிருந்தான்.

பட்டென்று அவனளித்த, தேகம் மற்றும் இதழ் அணைப்பில் மலரின் கண்கள் சாசர் போன்று அகல விரிந்தன.

மலர் கத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவனின் கைகள் அவளின் உடலை பிடித்திருக்க இதழோடு இதழ் பொறுத்தினான். ஆனால் அவள் வதனத்தின் மென்மை, அவனை சித்தம் கலங்க வைத்து, தன்னை மறந்து தேன் பருகச்செய்திட… அவளது இதழில் தன்னை தொலைத்து மீள முடியாது நீண்டுகொண்டேச் சென்றான்.

முதலில் அதிர்ந்தவளும் அவனளித்ததை விரும்பியே ஏற்க… ஒருகட்டத்தில் இருவரும் மூச்சுக்கு ஏங்கிட… சுயம் தெளிந்த முகி பதறி விலகினான்.

மலருக்குத்தான் தன்னை மீட்பது வெகு சிரமமானது.

நெஞ்சில் கை வைத்து, அவள் தன்னை ஆசுவாசப்படுத்த முயல…

படிப்பு முடியும்வரை விலகியிருக்க வேண்டுமென்று சொல்லிய தானே அத்துமீறி, அவளின் விருப்பமின்றி நடந்துகொண்டதை எண்ணி வருந்தியவனாக மலரின் முகம் காண மறுத்து, எதற்காக அவளை அழைத்தோம் என்பதையும் மறந்து தரையை பார்த்து… நெற்றியை நீவியவனாக,

“சாரி” என சொல்லி கட்டிலில் படுத்து… கையினை கண்களுக்கு குறுக்கே வைத்துக் கொண்டான்.

அவனின் மன்னிப்பு வேண்டலில் மலரின் மொத்த உணர்வுகளும் வடிந்து அங்கே கோபம் பீடிக்க… முகிக்கு அருகே வந்து நின்றவள்,

“யோவ் எழுந்திரு” என்று அதட்டினாள்.

முகி அசையாது படுத்திருக்க…

“நீயின்னும் தூங்க ஆரம்பிக்கல… எழுந்திரு” என்று இம்முறை சற்று உரக்கவே கத்தியவள் அவனை படுக்கையிலிருந்து தூக்கிவிட முயற்சித்தாள்.

“நானே எழும்புறேன்” என்றவன் சலிப்பாக எழுந்து அமர்ந்து… “ஏதோ என்னை மீறி… ம்ப்ச்… அதான் சாரி சொல்லிட்டனே! அப்புறம் என்னடி?” என்று பாவமாகக் கேட்டான்.

இன்னமுமே அவனின் உணர்வுகள் அடங்காது ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தன.

‘ஒற்றை இதழ் முத்தம் இத்தனை உணர்வுகளை ஆசைகளை கிளப்பிவிடுமா?’ என்ற கேள்வியைத்தான் தனக்குள் கேட்டுக்கொண்டிருந்தான்.

“சாரியா, எதுக்கு?”

“அது… அது வந்து…” என்று சொல்லமுடியாது திணறியவனின் பார்வை மலரின் இதழில் படிந்தது.

“நான் யாரு?”

அவளின் இந்த கேள்வியில் அவனது கண்கள் அவளின் விழிகளை நோக்கியது.

“என்னடி கேள்வியிது?” முறைத்தான்.

“சொல்லுங்க நான் யாரு?” அவள் பிடியில் உறுதி.

“என் பொண்டாட்டி.”

“உண்மைதானே?”

இக்கேள்வியில் முகிக்கு கட்டுக்கடங்கா கோபம் கிளர்ந்தது.

“அப்படியே ஒன்னு கொடுத்தேன் வைய்… கன்னம் வீங்கிடும்” என்றவன் கட்டிலிலிருந்து இறங்கியிருந்தான்.

“அப்புறம் எதுக்கு இந்த சாரி. உங்க மனைவிக்குத்தானே கிஸ் பண்ணீங்க. யாரோ ரோட்டுல போற பொண்ணுக்கு இல்லையே!” என்று அவனை அழுத்தமாக ஏறிட்டு வினவினாள்.

அவள் கேட்பதே இப்போதுதான் அவனுக்கு புரிந்தது.

“அதில்லை மலர்… உன் படிப்பு முடியட்டும் சொன்ன நானே, உன்னை பயம்காட்டத்தான் பின்னாலிருந்து பிடித்தேன். ஆனால் என்னை மீறி… உனக்கு விருப்பமில்லாம பண்ணிட்டனேன்னு தான் சாரி சொன்னேன்” என்று தன் பக்க விளக்கம் கொடுத்தான்.

“எனக்கு பிடிக்கலன்னு நான் சொன்னனா மாமா?”

“மலர்?”

“நல்லாயிருந்துச்சு மாமா” என்றவள் அவனின் இடையோடி கைகளிட்டு கட்டிக்கொண்டாள்.

அவளின் அணைப்பு விவரிக்க முடியா இதத்தை அவனுள் சேர்ப்பித்தது.

“மலர்…”

“ம்ம்ம்.” அவனின் அழைப்புக்கு அவளிடம் மென் முனகல்.

“நாம நம்ம கட்டுப்பாட்டைக் கொஞ்சம் தளர்த்திக்கலாமா?” குரலில் ஏக்கம் அப்பட்டமாக வழிந்தது.

“மாமா…!” முகியின் அணைப்புக்கூட, அவன் கேட்டதில் மலரிடம் அதிர்வு.

“முழுசா இல்லைடி. அப்பப்போ இந்த மாதிரி குட்டி ஹக் அண்ட் கிஸ். மத்ததெல்லாம் நீ படிச்சு முடிச்ச பிறகுதான்” என்று கறார் பேசினான்.

‘என்ன பண்ணாலும் இந்த டாக்டர் படிப்பிலே வந்து நிக்குறார். ஏட்டி மலரு உனக்கு வாச்சது அவ்வளவுதான்.’ மனதோடு புலம்பியவள் தன்னுடைய ஏக்கத்தை மறைக்க… முகியை அணைத்தபடியே,

“எதுக்கு கூப்டிங்க?” எனக்கேட்டாள்.

“அதுவா” என்றவன் அவளை விலக்கி மெத்தையில் அமர்ந்து தனக்கு அருகில் கைவைத்து “வந்து உட்கார் மலர்” என்றான்.

‘அப்படியே பேசியிருக்கலாம்.’ முணுமுணுத்தவள், அவனருகில் சென்று அமர்ந்தாள். பெருமூச்சோடு.

“அத்தானைப்பற்றி முன்னாடியே சொல்லலைன்னு உனக்கு கோபமா மலர்?” தங்களுக்குள் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்று சொல்லிய தானே அதனை சொல்லாது மறைத்துவிட்டோமே என்று உண்மையாக வருந்தியே கேட்டான்.

“அண்ணா (பார்த்திபன்) யார்கிட்டவும் சொல்லாத சொல்லியிருக்கும்போது நீங்க எப்படி சொல்லுவீங்க. எனக்கு கோபமெல்லாம் இல்லை” என்று முகியை புரிந்து பேசினாள். மனைவியின் புரிதலில் அவனுக்கு அவள்மீதான காதல் இன்னும் பெருகியது.

“பண்ணையிலிருந்து வந்ததிலிருந்து என்கிட்டவே வரலையா, அதான் கோபமா இருக்கியோன்னு நினைச்சிட்டேன்” எனக்கூறி…

“தேன்க்ஸ் மலர்” என்றவன் சிறு நடுக்கத்தோடு அவளின் கன்னம் பற்றி நெற்றியில் இதழ் ஒற்றி விலகினான்.

“இனி ரொம்பவெல்லாம் விலகியிருக்க முடியும் தோணல மலர்” என்றவன், அவளுக்கு முதுகுக்காட்டி படுத்து விட்டான்.

“யார் இப்போ இவரை கன்ட்ரோலா இருக்க சொன்னது. முடியலன்னா முடியுறத பண்ண வேண்டியதுதானே” என்று அவனுக்கு கேட்கும்படியே முனகியவள் அவனுக்கு மறுபக்கம் வந்து படுத்துக்கொண்டாள்.

முகியிடம் நீண்ட இதழ் விரிப்பு.

******

நிலவொளியில் வயலைச்சுற்றி நடந்தவள்… தன் கவனத்தை போடப்பட்டிருக்கும் பயிர்கள், செடிகளில் திசைத்திருப்பினாள்.

காய்கறி செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் என்று கணித்தவள், நீர் காட்டிட தோப்பு வீட்டிற்கு அருகிலிருக்கும் கிணற்றில் மோட்டார் எடுத்துவிட்டாள்.

வாய்க்காலில் நேராக சிறு அலையாக ஓடும் நீரினை கண்டவள், காய்கறித் தோட்டத்திற்கு நீர் பாய்வதைப்போல் மடை திறந்தவள்… எல்லா பாத்திக்கும் சீராக தண்ணீர் செல்லுமாறு பாத்தியை மண்வெட்டியால் வெட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த நிசப்த நேரத்தில்… நீர் இரைக்கும் சப்தம் உறக்கத்தை கலைத்திட பார்த்திபன் எழுந்து வெளியில் வந்தான்.

“சிவாவும் இல்லையே. இந்த நேரத்தில் யாரு மோட்டார் ஆன் பண்ணது” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்ட பார்த்திபன்… நீர் ஓடும் வரப்பே நடந்து செல்ல… அங்கு கயல் மண்வெட்டியோடு நின்றிருந்தாள்.

“இந்த நேரத்தில் தனியா என்ன செய்ற?”

குரலே யாரென்று காட்டிக்கொடுத்திட… ‘இவனிருக்கும் நினைவில்லாது வந்துவிட்டோமே’ என்று தன்னைத்தானே மானசீகமாக தட்டிக்கொண்டவள்… பார்த்திபனை திரும்பியும் பார்த்திடாது,

“பார்த்தால் தெரியல. கத்தரி செடிக்கு தண்ணீ பாய்ச்சுறேன்” என்றாள்.

“அது தெரியுது. ஏன் நைட்டில் தான் அதை செய்யணுமா?” இந்நேரத்தில் இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கின்றாளே என்ற கோபம் அவனிடம்.

“இதுக்கு முன்னாடியும் இப்படித்தான்.”

பதில் மட்டுமே கொடுத்தவள் அவனை பார்ப்பதை முழுதாக தவிர்த்தாள்.

“இப்பவே செய்ற அளவுக்கு அப்படியென்ன அவசரம். காலையில் செய்திருக்கலாம்.”

“எதுக்கு இப்போ என் வேலையில தலையிடுறீங்க?” தொண்டை கரகரத்தது.

“என்னைப் பார்த்து பேசு கயல்.”

“போ.” சொல்லியவளின் கைகளில் அவ்வளவு வேகம். மண்வெட்டி கதறும் அளவுக்கு இருந்தது.

“என்னை வெட்டுற மாதிரியிருக்கு கயல்.”

பட்டென்று மண்வெட்டியை கையிலிருந்து கீழே போட்டவள், அவன் புறம் திரும்பி நின்றாள்.

“என்னை என்போக்கில் விடமாட்டிங்களா? உள்ளுக்குள்ள தான் என்னை ஆட்டி வைக்குறீங்கன்னு பார்த்தா, இப்போ நேரிலும் உங்க இஷ்டத்துக்கு இருக்க சொல்றீங்க. இத்தனை வருஷம் நான் செய்ததுதான. இப்போ மட்டும், எங்கிருந்தோ வந்து எதுக்கு இந்த அக்கறையெல்லாம் காட்டுறீங்க. என்னால் எனக்குள்ளே போராட முடியல. இந்த நேரத்தில் இங்க நான் இப்படி நிற்க காரணம் நீதான். நீ மட்டும் தான். எதுக்குடா என் கண் முன்னாடி வந்த. மனசுல எந்த சஞ்சலமும் இல்லாம சீரா இருந்தேன். உன்னை எப்போ பார்த்தனோ அப்போலிருந்து என் மனசே நான் சொல்றதை கேட்க மாட்டேங்குது. என் மேலே கோபம் கோபமா வருது. அந்த கோபத்தை யார்மேல காட்டுறது. நியாயமா உன்கிட்ட தான் காட்டணும். ஆனால் அது முடியாதே. உனக்கு வலின்னா அது என்னை கலங்கடிக்குதே. உன் கை காய்ச்சா, கால் வீங்கினா எனக்கு பதறுது. நான் என்ன செய்றது. உள்ளுக்குள்ள போட்டு குடையுற டா. உன்னை நிறைய நிறைய காதலிக்குற அதே மனசு, உன்னை வேண்டான்னும் சொல்லுதே. படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது. வேணான்னு முடிவெடுக்குற அதே சமயம் உன்னை மட்டுமே நினைக்குதே இந்த பாழாப்போன மனசு. நான் நானாவேயில்லை. இதுக்கெல்லாம் நீதான் காரணம். ப்ளீஸ் இங்கிருந்து போயிடேன். போ! இந்த போட்டி எதுவுமே வேணாம். நான் நானா இருக்கணும் போயிடு ப்ளீஸ்.”

இத்தனை நாள் மனதிலேயே போராடி போராடி கலைத்தவள் மொத்தமாக பார்த்திபனிடம் கொட்டி கவிழ்த்திருந்தாள்.

அவள் பேச பேச… அவளின் கண்ணீரோடு சேர்ந்த வார்த்தைகள் அவனுள் சுகத்தை பரப்பியது.

அவ்வார்த்தைகள் யாவும் அவன் அவளிடம் கேட்டிடத் துடித்தவை. கண்ணீர் அவன்மீது அவனுடைய கயல் வைத்திருக்கும் காதலின் ஆழம். இன்பத்தை கொடுக்கத்தானே செய்யும்.

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சிறு புன்சிரிப்போடு தன்னவளின் அப்பட்டமான காதலை அவள் சொல்லியே கேட்டுக்கொண்டு நின்றிருந்தவன்… இறுதியாக அவள் சொல்லியதை. அவளிடமே திருப்பிக் கேட்டான்.

“போகட்டுமா?”

விலுக்கென பார்த்திபனை நிமிர்ந்துப் பார்த்தவள்…

அவன் நெஞ்சிலே சரமாரியாக அடி வைத்தாள்.

தன்னவள் அளித்த அடிகளை இன்பமாக வாங்கியவன், அடித்து ஓய்ந்தவளை தனக்குள் புதைத்துக்கொண்டான். முதலில் திமிறியவள், அவனின் பிடி இறுகவே அவனுள் வாகாய் பொருந்தி நின்றாள்.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, அவர்களின் நிலையில் மாற்றமில்லை.

இப்படி சீக்கிரம் கயல் தன் மனதை தன்னிடம் காட்டுவாள் என்று பார்த்திபன் எதிர்பார்க்கவில்லை.

அதே சமயம் தனக்குள்ளே மருகுபவளை விலக்கி வைக்கவும் அவனால் முடியாது. அதனால் தன் மனதையும் அணைப்பின் மூலம் வெளிப்படுத்தினான்.

தன்னைப்பற்றிய உண்மையை சொல்லாமல் காதலை சொல்வது சரியா தவறா என்றாலும்… சொல்லி உருகுபவளின் காதலை ஏற்காது தவிர்த்திட முடியா நிலையில் அவன். காதலை சொல்லிடாது ஏற்றவன், சொல்ல நினைத்தான்.

“நான் இந்தியா வந்ததே உனக்காகத்தான் கயல்” என்றவனின் வார்த்தையில் முகத்தை அவனின் மார்பிலிருந்து முகத்திற்கு மாற்றினாள்.

பார்வையில் கேள்வி தொக்கி நின்றது.

புரிந்தவன், கயலை தன்னுடைய ஹோட்டலில் கண்டது… அதற்கு முன்பு கலங்களாக அவனவளின் விழிகள் தாங்கிய முகத்தை கனவில் கண்டது என்று சொல்லி… “லவ் யூ கயல்” என எவ்வித பூசல் வார்த்தைகளும் இன்றி நேரடியாகக் கூறினான்.

பார்த்திபனின் காதல் சில்லென்று இதயத்திற்குள் இறங்கிய அதே கணம் அழகரின் வார்த்தைகளும் செவிகளை நிறைத்தது.

பட்டென்று அவனை தள்ளிவிட்டவளாக விலகியவள்… பார்த்திபனை ஏக்கத்தோடு கண்களில் சில நொடிகள் நிறைத்துக்கொண்டு பொங்கி வரும் கேவலோடு அங்கிருந்து ஓடிவிட்டாள்.

********

காலையில் கண்விழித்த மங்கை முதல் வேலையாக தேவராஜனுக்கு அழைத்தார். அவரின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒலித்தது.

அடுத்து டெல்லிற்கு அழைத்தவர்…

“நைட் அவருக்கு பிளைட் எப்போ?” எனக் கேட்டார்.

“அங்கிள் டயர்டில் மொபைல் ஆன் பண்ணாமலே தூங்கியிருக்கலாம் ஆண்ட்டி” என்று மங்கையை சமாதானம் செய்து வைத்தான்.

இருந்தும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், மனம் கேட்காது… வீட்டு வாட்ச்மேனிற்கு அழைத்தார். அழைப்பு எடுக்கப்படாமலே கட் ஆகியது.

மங்கைக்கு கலக்கம் சூழ்ந்தது.

தேவராஜன் இப்படியெல்லாம் மனைவியிடம் தன் நலன் தெரிவிக்காது அசட்டையாக எப்போதும் இருந்ததில்லை.

ஆனால் இன்று,

கணவரைப் பற்றிய விவரம் ஒன்றும் தெரியாது மங்கை அச்சம் கொண்டார்.

தேவராஜனை, டெல் சிங்கப்பூர் பிலைட்டில் அனுப்பி வைத்த நேரத்தைக் கணக்கிட்டால் இந்நேரம் அவர் வீட்டிற்கே சென்றிருக்க வேண்டும்.

நேரம் பல மணியைத் தாண்டியிருந்தது.

மங்கைக்கு யாரின் மூலம் எப்படி தெரிந்துகொள்வதென்று தெரியவில்லை.

இரவு பார்த்திபனிடம் தன்னை அறியாது மனதை வெளிப்படுத்திவிட்டு வந்த கயல் தன்னையே நொந்து கொண்டவளாக பண்ணைக்குச் சென்றால் பார்த்திபனை சந்திக்க நேரிடுமென்று அறைக்குள்ளே சுருண்டிருந்தாள். அதனால் மங்கையின் தவிப்பு அவளுக்கு தெரியாது போனது.

மங்கையும் கணவரைப்பற்றிய தகவல் இல்லை என்கிற கவலையில் ஓரிடத்தில் சோகமாக அமர்ந்துவிட்டார்.

அறையிலிருந்து வெளியில் வந்த முகி…

முற்றம் தூணில் தலை சாய்த்து அமர்ந்திருந்த மங்கையின் தோற்றமே என்னவோப்போலிருக்க, அவரைத் தொட்டு உளுக்கினான்.

“அத்தை… ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?”

பதட்டத்தோடு தான் கேட்டிருந்தான்.

“முகி… அவர்… பார்த்தி அப்பாக்கு கால் பண்றேன் ஸ்விட்ச் ஆஃப் வருதுடா! வெளியூர் எங்கப்போனாலும் போனதும் எனக்கு சொல்லிடுவாறு” என்று அடைத்த தொண்டையை சரிசெய்தவாறு கூறினார்.

“மறந்திருப்பார் அத்தை” என்ற முகியும், டெல் சொல்லிய அதே காரணத்தை சொல்லி… மீண்டும் ஒருமுறை வீட்டு காவலாளிக்கு அழைத்தான்.

இம்முறை அழைப்பு ஏற்கப்பட்டது.

வாட்ச்மேன் அழைப்பினை ஏற்றதும் மங்கையிடம் அலைபேசியை நீட்டினான்.

மங்கை கணவரைப்பற்றிக் கேட்டிட…

“சார் வராங்களா மேம். எப்போ?” என்று அவன் திருப்பிக் கேட்டதில் அவரின் சர்வமும் அடங்கியது.

அருகிலிருந்த முகியின் கைகளிலேயே தொய்ந்து சரிந்தார்.

தேவராஜனின் நிலை அங்கு என்னவோ?

error: Content is protected !!
Scroll to Top