பார்த்திபனின் கயல்விழியாள் 4

அத்தியாயம் 🌾 4 :

ஹோட்டலில் சிறிது நேரம் இருந்தவன்… அனைத்தும் அங்கு சரியாக இருப்பதை உறுதி செய்து அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்ததாக பார்த்திபன் தன் கால் பதித்த இடம் இன்ஃபோடெக். அவனின் ஆசை, கனவு எல்லாம் மென்பொருள் துறை தான்.

தங்களது ஹோட்டல் பிஸ்னெஸை உலகின் பல மூலைகளுக்குக் கொண்டுச் சென்றவன், தன் கனவை நோக்கி அடியெடுத்து வைத்த இரண்டு வருடங்களில் அதிலும் சாதித்து காண்பித்தான். போன ஆண்டு அந்நாட்டில் சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருதினை அரசாங்கத்தால் பெற்றவன்… இந்தியாவை பூர்விகமாக கொண்டதாலும்… உலகம் முழுவதும் அவனின் ஹோட்டல் பெயரோடு சேர்த்து இந்திய இளைஞன் எனும் பெயரும் பரவி விரவியதோடு பார்த்திபனின் ஹோட்டல் பிஸ்னெஸ் இந்தியாவிலும் பல மூலைகளில் வளர்ந்து நிற்பதால் இந்திய அரசால் யூத் ஐகானிக் விருதினை பெற்றதோடு, சிறந்த தொழிலதிபருக்கான விருதையும் பெற்றிருந்தான்.

தன் திறமையின் மீதும் வளர்ச்சியின் மீதும் கர்வம் கொண்டிருப்பவனுக்கு தான் பெற்ற விருதுகளின் மீது துளியும் பெருமை இருந்தது இல்லை.  தன்னுடைய உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றளவில் அதனை ஏற்றுக்கொள்பவன் ஒருபோதும் அதனின் புகழ் செருக்கை தலைக்கு ஏற்றுக்கொண்டது இல்லை.

தானுண்டு தன் தொழிலென்று இருப்பவனை சீண்டுவோருக்கு அழிவின் பக்கத்தை முற்றும் முழுதாய் காட்டி விடுவான். தன் திறமையின் மீது கொண்ட நம்பிக்கையால் மற்றவர்களிடம் தன்னை தனித்துக்காட்டிட தனக்கென தனிவழி அமைத்து யாவற்றிலும் ஒதுங்கி சிங்கமென நிற்கும் அவனின் குணம் திமிராகவே தெரியும் பல பேருக்கு. அந்தத்திமிரும் அவனுக்கு அழகு தான். உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு இத்திமிர் கூட இல்லையென்றால் என்ன என்று தன்னை நெருங்க வருவோரை பார்வையால் தள்ளி நிறுத்திடுவான்.

தானாக யாரையும் தனக்கு எதிரியென்று அவன் நிர்ணயத்தது கிடையாது. ஆனால் தன்னை போட்டியாகக் கருதி எதிரில் நிற்க துணிந்தோரை சும்மா விட்டுவிடும் அளவிற்கு நல்லவனும் இல்லை.

அப்படித்தான் பார்த்திபனுக்கு இன்று நியோ எதிரியாகிப் போனான்.

சிங்கப்பூரில் மட்டுமில்லாது இன்னும் பிற நாடுகளில் உள்ள பார்த்திபனின் பல ஹோட்டல்களுக்கு உணவுப்பொருட்கள் காய்கறிகள் மற்ற பழங்கள் நியோவின் ஃபார்மிலிருந்து தான் செல்கின்றன.

பார்த்திபனுக்கு தொழிலில் போட்டியாக இருக்கும் மற்றொரு ஹோட்டல் தொழிலின் அதிபர் லூங். நியோவிடம் டீல் பேச, அது தெரிந்ததற்கே பார்த்திபன் நியோவின் 250 ஏக்கர்ஸ் ஃபார்மினை தீக்கு இறையாக்கி ஒன்றுமில்லாமல் செய்திருந்தான்.

நியோவிற்கு அது பெரிய இழப்பு இல்லை. சரி செய்யக்கூடியது தான். ஆனால் தன்னை அவ்வளவு சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே பார்த்திபன் தன்னிலை இறங்கி அடித்திருந்தான்.

தன்னுடைய மென்பொருள் அலுவலகத்தில் நுழைந்த ஐந்து நிமிடத்தில், அடுத்த வாரத்தில் பெரிய ப்ரொஜெக்ட் ஒன்றிற்கான டெண்டர் விடப்படுகிறது… கிட்டத்தட்ட பல கோடிகள் மதிப்பிலானது. அதற்கான கொட்டேஷன் தயார் செய்வதில் பார்த்திபன் மூழ்கிப்போயிருந்த சமயம், டெல்வினிடமிருந்து வந்த அழைப்பை தாங்கி ஒலித்தது பார்த்திபனின் அலைப்பேசி.

“யா… டெல் மீ டெல்வின்.”

எதிர்புறம் என்ன சொல்லப்பட்டதோ… பார்த்திபனின் முகம் கடுமையை பூசியது. கை முட்டியை இறுக மூடி தன்னை நிலைப்படுத்தியவன், அடுத்து தான் செய்ய வேண்டியவற்றை  செய்து முடித்த பின்னரே ஆசுவாசமாக மூச்சினை ஆழ்ந்து சுவாசித்தான்.

அன்றைய நாளுக்கான ஓட்டம் முடிய… கையில் அணிந்திருந்த விலையுயர்ந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,

“ஓ ஷிட்” என்று தலையில் தட்டிக்கொண்டு வேகமாக தன் காரை நோக்கிச் சென்றான்.

காரில் ஏறி அமர்ந்தவன் தன் அன்னைக்கு அழைத்து வீட்டிற்கு வர தாமதமாகும் என்றவன், அவர் தனக்கு சரியென்று கூட சொல்ல வாய் திறக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளாது… அலைபேசியை அணைத்திட, அவனின் கைகளில் கார் வேகமெடுத்தது.

அதி வேகத்தில் வந்தவனின் கார் அவனுடைய ஹோட்டல் முன்பு பாய்ந்து நின்றது.

பார்ட்டி நடக்கும் பகுதிக்குச் சென்றவன் அங்கிருந்து மேடையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினான்.

அவனை கண்டதும் முகம் திருப்பிய பெண்ணின் கன்னத்தை பிடித்து திருப்பியவன்,

“அதான் வந்துட்டேனே!” என்று சாதரணமாக சொல்ல…

“என்னது வந்துட்டியாவா?” என்று அவளுக்கு அருகில் நின்றிருந்த ஒருவன் அதிர்வாக வினா எழுப்ப, மற்றொருவன் “ஒரு மணி நேரம் நீ லேட்” என்க ஒருத்தி “கேக் டேஸ்ட்டே மாறியிருக்கும்” என்றாள்.

“நீ வராம எங்களையும் கேக்குல கை வைக்கக் கூடாது சொல்லிட்டா(ள்)டா மச்சான்” என்று ஒருவன் நெஞ்சில் கை வைத்து சோகமாக சொல்ல…

“கேக் தானடா” என்று கேட்ட பார்த்திபன் அடுத்த பத்து நிமிடத்தில் மற்றொரு புதிய கேக்கினை வரவழைத்திருந்தான்.

பிறந்தநாள் பெண்ணிடம், மற்றொரு பெண் ஜாடை காட்ட… அவள் பார்த்திபனை மயக்கமாக ஏறிட்டு புன்னகைத்துக் கொண்டாள். அவள் லீனா. மற்றொருத்தி ஸ்ருதி. ஆண்கள் மூவர் டெல்வின், விஷ், ராஜேஷ். பார்த்திபனோடு சேர்த்து மொத்தம் எழுவர். இவர்கள் தான் பார்த்திபனின் நட்பு வட்டம். இதில் மிகவும் நெருக்கமானவன் டெல்வின். அதனாலே அனைத்திலும் தன்னுடன் வைத்துக் கொண்டான். சிங்கப்பூர் குடிமகன். தாய், தந்தை பிரிவில் தனித்து நின்றவன்.

தொழில் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் நண்பனாகவே டெல்வினிடம் நடந்து கொள்வான்.

லீனாவிற்கு மற்ற அறுவர் வாழ்த்துக்கூற, கேக்கினை வெட்டியவள் முதல் துண்டை பார்த்திபனுக்கு ஊட்ட எடுத்துச்செல்ல… லாவகமாக தடுத்து கையில் வாங்கிக்கொண்டான்.

சோசியல் டச் என்ற விதத்தில் பெண்களை தொட்டு பேசினாலும், நண்பர்களாவே இருந்தாலும் சில உரிமைகளை அவர்களுக்கு கொடுத்திட மாட்டான். மங்கையின் வளர்ப்பு அது.

ஆண்கள் நான்கு பேரும் கையில் ஜூஸ் அடங்கிய குவளையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

“இதெல்லாம் அநியாயம்ரா” என்று மதுவகை இல்லையென ராஜேஷ் புலம்ப… டெல்வின் சத்தமாக சிரித்தான்.

அவனை பார்வையாலே அடக்கிய பார்த்திபன்… “இது ஒரு பொண்ணு கொடுக்கும் பார்டிடா, ஏன் இப்படி சீப்பா பிஹேவ் பண்ற” என்று பற்களை கடித்து வார்த்தைகளை துப்பினான்.

“ஹா ஹா…” என்று சிரித்த விஷ், “உனக்காகத்தான் அவள் ட்ரிங்க்ஸ் அரேஞ் பண்ணல” என்றான்.

பார்த்திபன் ஏனென்று பார்க்க…

“பின்ன என்னடா… பிஸ்னெஸ் மீட்டுக்கு போனா ட்ரிங்க்ஸ் கிளாஸை கூட தொடாம வரும் உன்னை வச்சிக்கிட்டு அதெல்லாம் அரேஞ் பண்ண முடியுமா?” எனக் கூறினான்.

“எனக்கு பிடிக்கலன்னா என்ன உங்களுக்கு வேணும்னா அவகிட்ட கேட்க வேண்டியது தானே” என்ற பார்த்திபனை பார்த்து “உனக்கு பிடிக்காததை அவள் செய்யமாட்டாளாம்” என்று மூவரும் ஒரு சேர ஒன்றாக நக்கல் செய்தனர்.

பார்த்திபனுக்கு அவர்களின் பேச்சு புரியாத நிலை.

அந்நேரம் அதுவரை ஸ்ருதியிடம் பார்த்திபனிடம் எப்படி தன் காதலை சொல்வதென்று பலவாறு சொல்லி பார்த்த லீனா கையில் ஒற்றை ரோஜாவுடன் பார்த்திபனின் முன் வந்து நின்றாள்.

பார்த்திபன் என்னவென்று யோசிக்கும் முன்… அவ்வறையில் விளக்குகள் அணைந்து மங்கலான வெளிச்சமும் இசையும் பரவியது. ஒற்றை காலால் மண்டியிட்டு அமர்ந்த லீனா… “ஐ லவ் யூ பார்த்தி” என்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சிவப்பு நிற ரோஜாவை தன் பின்னாலிருந்து எடுத்து… இறுதியில் இரு கைகளிலும் ஒன்றாக இணைத்து பிடித்து, அவனுக்கு முன்னால் நீட்டி தன் காதலை வெளிப்படுத்தியிருந்தாள்.

லீனா காதலை சொல்லியதும் மற்ற நண்பர்களிடமிருந்து உற்சாக கூச்சல் அவ்வறை முழுக்க எதிரொலித்தது.

காலினை சற்று அகட்டி, இடது கையை இடுப்பில் வைத்து வலதுகை பெருவிரலால் தன் புருவம் நீவியவன் சிறிதும் யோசியாது தன்னை ரசனையாக பார்த்தபடி நின்றிருந்த லீனாவின் கண்களை நேருக்கு நேராக அழுத்தமாகப் பார்த்து,

“அம் நாட் இன்ட்ரெஸ்ட்டட்… யூ ஆர் மை ஃபிரண்ட்… ஜஸ்ட் ஃபிரண்ட். பட், இனி ஃபிரண்டா கூட என் முன்ன வந்துடாதே” எனக்கூறி விடுவிடுவென அந்த ஹாலில் இருந்து வெளியேறினான்.

எதிர்பட்ட ஊழியர்களின் கவனத்தை கூட மனதில் பதியாது தன் காரில் வந்து ஏறியவன், ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டான்.

அவனின் மூடிய கண்களுக்குள் வில்லென வளைந்த இரு புருவங்களுக்கு கீழே அவனின் இதயத்தை குத்தி கிழிக்கும் கூர்மையான கருநிற விழிகள் ஓடும் இரு அகண்ட இமை படபடக்கும் கண்கள் தோன்றி இம்சித்தன. அதனூடே “கண்ணா” என்ற விளிப்பு எங்கோ தூரத்தில் மனதின் அடி ஆழத்தில் ஒலிப்பதைப் போன்று இருக்க படக்கென கண்களை திறந்தவனின் மனம் நிலையில்லாமல் தவித்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கை முதல் முதலாக பார்த்திபனின் திருமண பேச்சினை எடுத்த அன்று அவன் கண்களுக்குள் காட்சி சிதறலாகத் தோன்றிய கண்களும், கிணற்றின் ஆழத்திலிருந்து ஒலிப்பதைப்போன்று செவி தீண்டிய விளிப்பும் அவனை இன்றளவும் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல விடாது தடை செய்கிறது.

அதன் பின்னரான ஒரு இரவும் இவையின்றி அவனுக்கு கடந்ததில்லை. இன்று லீனா காதல் சொல்லும்போது கூட பார்த்திபனுக்கு அந்த காந்த கண்களுக்கு உரித்தான பெண்ணின் முகம் எப்படி இருக்குமென்கிற எண்ணம் தான். அதனால் உடனடியாக லீனாவிற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு வந்தான். இருப்பினும் லீனாவை தோழியின் நிலைத்தாண்டி அவனால் யோசிக்கவும் முடியாது.

கண்ணா என்கிற குரல் சிறு வயதில் கேட்டதைப்போல் நினைவு எழும்பும். ஆனால் அந்த கண்கள்? யோசிக்க யோசிக்க தலை வெடித்துவிடும் அளவுக்கு அவனுள் உணர்வுகளின் பிடியில் சிந்தனை வயப்பட்ட நிலையில் வீடு வந்து சேர்ந்தான்.

மங்கை அவனுக்காக ஹால் கோச்சில் அமர்ந்திருக்க… அவரை கண்டதும் அவனின் யோசனைகள் யாவும் பின்னுக்கு தள்ளப்பட்டது.

“நான் வர லேட்டாகும் சொன்னனே மாம்” எனக் கேட்டவன் அப்போதுதான் தந்தையும் தனக்காகக் காத்திருப்பதை பார்த்தவன், ‘விஷயம் ஏதோ இருக்கு’ என்றவாறு மங்கையின் பக்கம் வந்தமர்ந்தான்.

ஆனால் அவனின் முகம் தேவராஜை நோக்கி இருந்தது.

கண்களாலே என்னவென்று கேட்டான். அந்தோ பாவம், அவர் எவ்வளவு முயற்சித்தும் பார்த்திபனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மங்கையின் பார்வை முழுக்க கணவனிடத்தில்.

“வாட் ஹேப்பன்ட் மாம்?”

அன்னையின் தோளில் கரம் பதித்து அவன் வினவ, மகனின் கையை கோபமாகக் தட்டி விட்டவர் அதே வேகத்துடன் எழுந்து நின்று,

“இந்த பாவப்பட்ட கையால் என்னைத் தொடாதே!” என்றார்.

“மாம்”, “மங்கை” என்ற குரல்கள் ஒன்றாக ஒலித்தன.

“உன்னால எப்படிடா இப்படி செய்ய முடிந்தது. அந்தளவுக்கு கல் நெஞ்சம் கொண்ட மனிதனா நீ?”

சத்தியமா பார்த்திபனுக்கு அன்னையின் பேச்சிற்கான காரணம் விளங்கவில்லை.

“என்னாச்சு மாம்? சொன்னாதானே தெரியும்?”

“பாக்குற பார்வையிலேயே என்னன்னு சகலமும் தெரிஞ்சுக்கும் உனக்காப்பா புரியல?”

“டாட்… என்னதிது?” பார்த்திபனுக்கு அன்னையிடம் கோபம் கொண்டுவிடுவோமோ என்கிற பயம்.

“ஈவ்வினிங் நியோ வந்திருந்தான் ப்பா.” தேவராஜ் சொல்லியதும் அன்னையின் பேச்சு மற்றும் நடைவடிக்கைக்கான காரணம் பார்த்திபனுக்கு விளங்கிற்று.

“மாம் அவன் சொல்றதை கேட்டு… ம்ப்ச்… அவன் ஒரு ஃபிராடு” என்றான்.

“அப்போ நீ ஃபார்மை எரிக்கலையாப்பா?” மகன் இல்லையென்று சொல்லிவிட மாட்டானா என்று அவனின் முகத்தை பார்த்தார்.

“நான் எரிச்சது உண்மை தான் மாம். பட் நான் அதை வாண்டடா செய்யல” என்று மேலே சொல்ல வந்தவனை தடுத்த மங்கை, “ஒரு செடியை பிடுங்கிறதும், குழந்தையை கொல்லுறதும் ஒன்னு தான். இதற்கு நீ எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை” என்றவர் திரும்பி நடக்க, அன்னையை எப்படி சமாதானம் செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.

“மாம் என்கிட்ட பேசாமப்போனா… இனி வன் செக் கூட நான் இங்க இருக்கமாட்டேன்.”

பார்த்திபனின் வார்த்தைகளில் மங்கையின் நடை தானாக நின்றது.

வேகமாக ஓடி வந்தவன் அன்னையை இறுக அணைத்துக் கொண்டான்.

“உங்க கோபம், பாராமுகம் இதெல்லாம் ரொம்ப வலியை கொடுக்குது மாம். நான் பண்ணது தவறா இருந்தா அம் சாரி” என்றான்.

அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் தன் மகன் தனக்காக அவனின் இயல்பை துறந்து கீழிறங்கி நிற்பது அத்தாயிற்கு அவ்வளவு உவகையை கொடுத்தது.

இருப்பினும், “நீ சாரி நியோகிட்ட கேட்கணும்” என்றார் சற்றும் அசையாது.

“எந்தவொரு பாவமும் உன் கைகளில் படிய கூடாதுப்பா.”

“மாம்” என்று அவரிடம் விலகியவன்,

“அந்த லூங் என்னை அழிக்க வழி தெரியாம நியோவை வைத்து கட்டம் கட்ட நினைத்திருக்கான். லூங் அதிக பணம் தரேன் சொன்னதும் இன்னைக்கு நம்ம ஹோட்டல்ஸ் எதுக்கும் அவன் உணவுப்பொருட்கள் சப்ளை செய்யவே இல்லை. அவனுக்கு பணம் வேணும்னா என்னிடம் கேட்டிருக்கலாம் அதைவிட்டு லூங்குடன் சேர்ந்து பின்னால் குத்தினான்.

கோம்ப் ஹைட் பண்ணா கல்யாணம் ஸ்டாப் ஆகிடும் சொல்ற மாதிரி இருக்கு அவங்க பிளான்.

நான் வேற பிளான் பண்ணி உணவுப்பொருட்கள் சரியான நேரத்துக்கு கிடைக்கிற மாதிரி செய்துட்டேன். ஒருவேளை என்னால் முடியாமப்போயிருந்தா, தி வாரியர்… நேம், பிராண்ட், ரெப்புடேஷன் என்னவாகியிருக்கும். இந்த பிராண்ட் உருவாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன். அந்த பெயரை அழிக்க நினைத்தவனை நான் சும்மா விடலாமா? அதான் நியோவிற்கு ஒரு சாம்பிள் காண்பித்தேன். உருவாக்கியதை அழித்தால் அந்த வலி எப்படியிருக்குமுன்னு.”

பார்த்திபனின் கண்கள் பழிவெறியில் மின்னியது.

“அப்போ லூங்?” தேவராஜ் அதிர்ச்சியாக வினவினார்.

நியோவிற்கே இத்தகைய பெரிய தண்டனை என்றால், அவனை மகனுக்கு எதிராக திருப்பிவிட்ட லூங்கின் நிலையை எண்ணி அச்சம் கொண்டவராக தேவராஜ் கேட்டார்.

“என்ன டாட் பழைய நட்பு மேல் பாசமா?” என்று கிண்டலாகக் கேட்டவன், “உங்களுக்காக உங்க இந்த பயத்துக்காகத்தான் அவனை இன்னும் விட்டு வைத்திருக்கேன்” என்றான். தந்தைக்காக அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற கோபம் பார்த்திபனிடம்.

“இனியொரு முறை எனக்கு எதிரா யோசிக்கக்கூட அவன் தயங்கனும். நியோவிற்கே இந்த நிலை என்றால், எய்திய தனக்கு என்ன வைத்திருக்கிறானோ என்று அந்த லூங் ஒவ்வொரு நாளும் பயப்படணும். அதுதான் அவனுக்கான தண்டனை.”

“என்னயிருந்தாலும் நீ செய்ததை என்னால் ஜீரணிக்க முடியலப்பா?” இருக்கையில் ஓய்ந்து அமர்ந்தார் மங்கை.

“பிஸ்னெசில் எல்லாம் நீங்கள் தலையிடாதிங்க மாம்” என்றவன் தன்னிரு காதுகளையும் பிடித்து மன்னிப்பு வேண்டிட அதற்குமேல் அந்தத் தாயாள் மகனிடம் கோப முகம் காட்ட முடியவில்லை.

“இனி எந்தவொரு உயிர்க்கும் உன்னால் ஆபத்து வரக்கூடாது” என்று அழுத்தமாகக் கூறினார்.

“மாம் ஒரு உயிரை கொல்லுற அளவுக்கு நான் மிருகம் இல்லை.”

“இயற்கைக்கும் உயிர் இருக்குப்பா. உன்னால எத்தனை செடி கொடிகள், தாவரங்களோட உயிர் இன்னைக்கு போயிருக்குத் தெரியுமா?”

‘விட்டால் அன்னை விடிய விடிய இதைப்பற்றியே பேசுவார்’ என நினைத்தவன்,

“லீனா ப்ரொபோஸ் பண்ணினாள் மாம்” என்றான். முகம் சுளித்தவனாய். அன்னையின் பேச்சினை மாற்றுவதற்காக அதனை கூறினான். அவனை பொறுத்தவரை வேண்டாததைப் பற்றி எப்போதும் பேச மாட்டான்.

“நீ சரி சொல்லிட்டியா?” மங்கை மகன் சரியென்று சொல்லியிருக்க வேண்டுமென்கிற ஆர்வத்தோடு வினவினார்.

“நோ… இது சரி வராது மாம்.”

“அடப்போடா… உனக்கு கல்யாணம் நடக்குறதுக்குள்ள…”

அன்னையின் வாயினை தன் கரம் கொண்டு மூடியவன்,

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான்.

“என்னங்க இவன் இப்படியிருக்கான். இவனும் யாரையும் லவ் பண்ணமாட்றான். லவ் பண்றன்னு சொல்லுற பொண்ணையும் வேண்டாங்கிறான்” என்று கணவரிடம் குறைப்பட்டார்.

“மாம் எனக்கு உங்களை மாதிரி ஒரு தமிழ்நாட்டு பெண் தான் வேணும். அங்கிருக்க கேர்ள்ஸ்கிட்ட ஒரு தனி அழகு இருக்கு மாம். அதெல்லாம் இந்த அல்ட்ரா மார்டன் கேர்ள்ஸ்கிட்ட எதிர்பார்க்க முடியாது” என்றவனை தேவராஜ் கூர்ந்து நோக்கினார்.

“என்னடா ஏற்கனவே ஆள் செட் பண்ணிட்டு பேசுற மாதிரி இருக்கு.”

“அய்யோ டாட்” என்று அலறிய பார்த்திபன் மங்கையை பாவமாகப் பார்க்க…

“இதுக்குத்தான் பிஸ்னெஸ் பாக்குறேன்னு அடிக்கடி இந்தியா போறீயா” என்று கேட்டு மேலும் அவனை அதிர வைத்தார் மங்கை.

“ரெண்டு பேரும் ஆளை விடுங்க. அப்படி யாரையாவது லவ் பண்ணா உங்கக்கிட்ட தான் முதலில் சொல்வேன்” என்றவனின் மனக்கண்ணில் மீண்டும் அவ்விரு விழிகளின் காட்சி. உடன் கண்ணா என்ற குரல்.

“சரிசரி ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்” என்று மங்கை அழைக்க மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசியவாறு உண்டு முடித்தனர்.

இருவரிடமும் சொல்லிக்கொண்டு மாடியேற மின்தூக்கி நோக்கி சென்றவன் நின்று சற்று தயங்கி,

“என்னோட சின்ன வயசில் என்னை யாரும் கண்ணா அப்படின்னு கூப்பிடுவாங்களா டாட்?” என்று தேவராஜிடம் வினவினான்.

மங்கை உணவு பாத்திரங்களை அடுக்கலையில் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்ததால் அவருக்கு பார்த்திபன் கேட்டது கேட்கவில்லை.

பார்த்திபனின் கேள்வியில் தேவராஜின் உடல் மொத்தமும் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. அடுத்ததாக சிறு பதட்டம் முடிவில் பெரும் கோபம்.

அனைத்தையும் அவதானித்தபடி நின்றிருந்தான் பார்த்திபன்.

error: Content is protected !!
Scroll to Top