அத்தியாயம் 🌾 41 :
“உங்களுக்கு ஒன்னுமில்லையே?”
தனக்கு முன்னால் நின்றிருந்த கணவரை கண்களில் நீரோடு, இரு கைகளாலும் தொட்டு உணர்ந்தபடி கேட்டார் மங்கை.
“அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் மங்கை. நம்ம மகன் பார்த்திபன் இருக்கும்போது நானெதுக்கு பயப்படனும். எனக்கு ஒண்ணுமாகாது” என்று சொல்லிய தேவராஜன் அப்போதுதான் நினைவு வந்தவராக, மங்கைக்கு பின்னால் நின்றிருந்த கயலை பார்த்தபடி உதட்டை கடித்து பேச்சினை நிறுத்தினார்.
பார்த்திபனை பார்த்து, தெரியாமல் உளறிவிட்டதாக பார்வையால் இரைஞ்சினார்.
“அதெல்லாம் அக்காவுக்கு நேத்தே தெரியும் மாமா” என்ற முகி , “இனி அத்தான் பாடு தான் திண்டாட்டம் நாம ஜாலியா என்டர்டெயின் பண்ணலாம்” என்று சொல்லி சிரித்தான்.
முகியின் முதுகிலேயே அடி ஒன்றை வைத்த பார்த்திபன், “நான் அவகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது உனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கா?” என மெல்ல கிசுகிசுத்தான்.
“உங்க நிலைமையை விட என்னோடது அதிக கவலைக்கிடம் அத்தான். நீங்க போனதுலிருந்து கயல் இன்னும் என்கிட்ட பேசவேயில்லை. கிட்ட போகவே பயமா வருது.” மென் குரலில் கூறினான்.
பார்த்திபன் தேவராஜனை தேடி இங்கிருந்து புறப்பட்டதும், முகி கயலைத் தேடிச்சென்றான்.
“கயல்” என்று சொல்ல முற்பட்டவனை கை காண்பித்து தடுத்தவள், அவனை கடந்து மங்கையிடம் சென்றுவிட்டாள்.
என்னதான் ரத்த உறவுகளாக இருந்தாலும், முகி அவர்கள் பக்கம் நின்று தன்னிடம் உண்மையை மறைத்தது கயலுக்கு வருத்தத்தை கொடுத்தது. அதனாலேயே முகியை தவிர்த்தாள்.
மங்கையை அந்நிலையில் அவளால் ஒதுக்க முடியாது போக, தேற்றி நேரத்திற்கு சாப்பிட வைத்து சோர்ந்து போகாது பார்த்துக்கொண்டாள். மலரிடம் மட்டுமே அவளின் பேச்சென்று அமைதியாக இருந்துகொண்டாள். மலருக்கும் ஏற்கனவே தெரியுமென்று தெரிந்தால்?
சரளாவும், மாணிக்கமும் நெருங்கிய சொந்தத்தில் ஒரு திருமணம் என்று முன்தினமே கிளம்பியிருக்க இன்னும் வரவில்லை.
தேவராஜன் காணாமல் போய்விட்டார் என்கிற சோகம் அவர்கள் நால்வருக்குள் இருந்துவிட… சிங்கப்பூர் சென்ற பார்த்திபனிடமிருந்தும் எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில் மங்கைக்கு ஆறுதல் அளிக்கவே மற்ற மூவருக்கும் நேரம் சரியாக இருந்தது. அதனால் பார்த்திபன் தான் கண்ணா என்பதைப்பற்றி கேட்கவோ விளக்கம் கொடுக்கவோ அங்கு யாருக்கும் நேரமில்லை.
அதனை சற்று தள்ளி வைத்தனர்.
தேவராஜனின் நலனே அந்நேரம் அவர்களுக்கு பிரதானமாக இருந்தது.
இப்போது அவரை நேரில் கண்டவுடன் தான் கயலுக்கு அனைவரும் தன்னிடம் உண்மையை மறைத்திருக்கிறார்கள் என்ற நினைவு மீண்டு பார்த்திபனை காண்பதையே தவிர்த்தவளாக நின்றிருக்கிறாள்.
அங்கு அனைவருக்கும் கயலிடம் சூழல் கொஞ்சம் கவலைக்கிடம் தான்.
“சரி எவ்வளவு நேரம் தான் இப்படி இங்கவே எல்லாரும் நிக்கப்போறீங்க. வாங்க உள்ள போகலாம்.”
ஒவ்வொருத்தரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடி அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றிருக்க எப்போதும் போல் மலர் தான் சகஜமாக்கினாள்.
“சூழல் பிரீஸ் ஆனா சரியா மாத்திடுற மலர்” என்ற முகி கயலின் முறைப்பில் சத்தமின்றி உள்ளேச் சென்றான்.
மங்கையும் தேவராஜனும் “எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எவ்வளவோ சொல்லியும் அவன் தான், நான் யாருன்னு சொல்லக்கூடாது சொல்லிட்டான். சொன்னா அவ்வளவுதான்னு மிரட்டல் வேற. முகியையும் எங்களை மாதிரி தான் மிரட்டி வைத்திருப்பான். உன் கோபம் எதுன்னாலும் அவனோட மட்டும் வச்சுக்கோ. சும்மா லேசில் அவனை விட்டுடாத” என்று தங்களுடன் சேர்த்து முகியையும் காப்பாற்றிவிட்டு, மொத்தமாக பார்த்திபனை மட்டும் மாட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.
பார்த்திபன் என்ன சொல்வதென்று தடுமாறி கயலை பார்த்தபடி நிற்க…
அவளின் பார்வை முற்றும் முழுதும் அவனைத் தவிர்த்தவளாய்.
“கயல்… நான் எக்ஸ்பிளைன் பன்றன்னு சொல்லிட்டுதான போனேன்” என்று பார்த்திபன் பேச்சினைத் துவங்க,
“இப்போ நீங்க சொன்னாலும், உங்க மேலிருக்கும் கோவத்தில் சரியா புரியாது” என்றவள் அவனை உள்ளே அழைக்கக்கூட இல்லாது சென்றுவிட்டாள்.
கயல் அறைக்குள் நுழைந்ததும், மறைந்திருந்த முகி வெளியில் வந்து…
“நான் கூட சேதாரம் அதிகமாகும் நினைத்தேன் அத்தான் பட் தப்பிச்சிட்டீங்க” என்றவனாக பார்த்திபனை உள்ளே அழைத்து வந்தான்.
“அவள் எதாவது பேசியிருந்தால் கூட பயம் இருந்திருக்காதுடா. ஆனால் அவளோட இந்த அமைதி தான் ரொம்ப பயத்தைக் கொடுக்குது” என்றான் பார்த்திபன்.
முகி சட்டென சிரிக்க…
அவனை என்னவென்று முறைத்தான்.
“உங்க பிஸ்னெஸில் நீங்க யாரு? உங்க எதிரிங்களுக்கு ஹண்டர். ஆனால் கயலோட ஒத்த பார்வைக்கு இப்படி அடங்கிப்போறீங்களே” எனக்கூறி மீண்டும் சிரித்தான்.
“எல்லாம் என் நேரம்” என்ற பார்த்திபனை மேலே அழைத்துச்சென்ற முகி… அங்கிருந்த ஓர் அறையை காண்பித்து, “இனி இங்க தங்கிக்கோங்க. உங்க தின்க்ஸ் எல்லாம் ஷிஃப்ட் பண்ணிட்டேன்” என்றான்.
“ஏன்?”
“அதான் நீங்க யாருன்னு தெரிஞ்சிருச்சே. அப்புறமும் ஏன் அங்க இருக்கணும். உங்களுக்கு கயிற்று கட்டில், நைட் பூச்சி சத்தம், பனி இதெல்லாம் சேரலன்னு தெரியும்.”
“கயல் எதுவும் சொல்லலையா?”
இடுப்பில் கைக்குற்றி நின்ற முகி,
“அப்போ கயல் சொன்னா மட்டும் தான் கேட்பீங்க” என்று இழுத்தான்.
“அதில்லை முகி… கயலுக்கு இன்னும் நான் சரியான விளக்கம் எதுவும் கொடுக்கலையே!”
“மார்னிங் நீங்க வர்றீங்கன்னு சொன்னதும் கயல் தான் எடுத்துட்டு வந்து வைக்க சொன்னாள். நீங்க அங்க இருப்பதால் அவங்க சிவா அண்ணா வெளி திண்ணையில் குளிரில் படுக்குறாராம். அப்புறம் அவங்க அத்தை ஃபீல் பண்ணுவாங்களாம். என்கிட்ட சொன்ன காரணம் இதுதான்” என்ற முகி சன்னமான சிரிப்புடன் வெளியேறியிருந்தான்.
சிறிது நேரத்தில் சிவா அழைக்கும் குரலில் கயல் வெளியில் வந்தாள்.
“கயல் வண்டி லோடு அடிச்சதுக்கு அப் அண்ட் டவுன் ரெண்டுக்கும் செட்டில் பண்ணது போக, வாழை தாருகளுக்கு வியாபாரி கொடுத்த மொத்த பணம்.”
அப்போதுதான் கேரளா சென்றிருந்த சிவா வந்திருந்தான்.
“பணத்தை பேங்கில் போட்டுடுங்கண்ணா” என்ற கயல் சோர்ந்து தெரிந்தாள்.
“என்ன கயல் உடம்பு சரியில்லையா?”
“அதெல்லாம் இல்லை. ரெண்டு நாள் வயலுக்கு போகல” என்றவள் நடந்ததை சொல்ல… சிவாவிற்கும் குற்றவுணர்வாகிப் போனது.
“சாரி கயல்” என்றவன், “எதுக்கு சாரிண்ணா” எனக்கேட்ட கயலிடம், “எனக்கு அவர் இங்க வரதுக்கு முதல் நாளே அவர் தான் மங்கை அம்மா மகன்னு தெரியும். முகி பார்த்துக்க சொல்லி சொல்லும்போது உன்னோட போட்டி போட வர ஆளை நான் எதுக்கு பார்த்துக்கணும், வரட்டும் ஓட விடுறேன்னு சொன்னேன். அதனால முகி என்கிட்ட அப்போவே சொல்லிட்டான்” என்றான்.
அப்போதுதான் கயலுக்கு ஒன்று புரிந்தது. சிவா எப்படி பார்த்திபனை ஏற்றுக்கொண்டு அவனிடம் சகஜமாக இருந்தானென்றும், முகி வந்தது முதல் பார்த்திபன் பின்னே சுற்றியதும் விளங்கியது.
“சுத்தி நடப்பது கூடத் தெரியாம இருந்திருக்கேன்” என்ற கயலிடம் விரக்தி சிரிப்பு.
“நீங்களும் என்கிட்ட மறைச்சிட்டீங்கள்ல” என்ற கயல் அடுத்த நொடி தன்னை நிலைப்படுத்தியிருந்தாள்.
“பரம்படிக்கணு(ம்)ண்ணா… தழை போட்டு மூனு நாளாகிருச்சு” என்ற கயல் அப்படியே வயலை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டாள்.
அப்போது அறையிலிருந்து வெளிவந்த முகி… மேலிருந்து கீழ்வந்த பார்த்திபன் இருவரும் அசையாது வெளியே பார்த்து நின்றிருந்த சிவாவின் தோளில் கைப்போட்டு…
“எப்படா வந்த?” எனக் கேட்டான் பார்த்திபன்.
சிவா பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருக்க…
“பதில் சொல்லுண்ணா” என்றான் முகி.
“என்ன சொல்லணும் அவன். எல்லாம் உன்னால் பார்த்திபா. கயல் எவ்வளவு வருந்துறாள் தெரியுமா? யாருமே அவகிட்ட உண்மையை சொல்லாம அவளை ஒதுக்கி வச்சிட்டோம் நினைக்கிறாள்” என்றபடி அங்கு வந்த மங்கை மகனின் தோளில் பட்டென்று இரண்டடி வைத்தார்.
“மாம் வலிக்குது.”
“வலிக்கட்டுமே… கயல் வருத்தத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு வலியா?”
பார்த்திபனுக்கும் கயலின் மனநிலை புரிந்தது.
அன்று இரவு தன்னுடைய மனதின் போராட்டத்தையெல்லாம் கயல் சொல்லியபோது ஒவ்வொரு வார்த்தைகளிலும் இருந்த வலியை அவனால் இப்போது உணர முடிந்தது.
‘முன்பே சொல்லியிருக்க வேண்டுமோ?’ இப்போது யோசித்து என்ன பயன்.
‘தன் மீது காதல் வந்த பின்னர்… தனக்கும் அழகரின் வார்த்தைக்கும் இடையில் எப்படி அல்லாடியிருப்பாள்.’ அவளின் உணர்வுகளை ரொம்பவே காயப்படுத்திவிட்டோம் என்று அந்நொடி வருந்தினான்.
“அம் ரியலி சாரி மாம். என்னோட லவ் பற்றி மட்டும் தான் அப்போ தின்க் பண்ணேன். கயலோட பீலிங்ஸ் ஹர்ட் ஆகும் நினைக்கலை” என்றான்.
“கயலை எப்படி சரி செய்யப்போற” என்ற மங்கை “அப்பா தூங்க போறேன்னு போனார். தூங்கிட்டாரா பார்க்கணும்” என்றபடி நகர்ந்தார்.
“மச்சான்…”
“நான்தான் சொன்னனே கேட்டிங்களா? நீங்களுமான்னு கயல் கேட்கும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா? கயல் இல்லைன்னா எனக்கு சாப்பாடு, இடம், இப்போ படிக்குற படிப்பு எதுவுமே இல்லை. என்னை சந்தோஷமா வச்சிக்கிட்ட கயல் கஷ்டப்பட நானும் காரணமா இருந்துட்டேன் நினைக்கவே கஷ்டமா இருக்கு” என்ற சிவா “சீக்கிரம் வயலுக்கு வந்து சேருங்க” என சென்றுவிட்டான்.
“என்ன அத்தான் அப்படி பார்க்குறீங்க. சவால் இன்னும் அப்படியேதான் இருக்கு. கிளம்புங்க” என்று பார்த்திபனின் முதுகில் கைவைத்து வெளியே தள்ளினான் முகி.
“நீ வரலையா?”
“நான் சென்னை கிளம்புறேன் அத்தான். போட்ட லீவ் முடிஞ்சிருச்சு.”
“ஹோ…” என்ற பார்த்திபன், தேவராஜன் மங்கையோடு அங்கு வரும்போது கொண்டு வந்த காரினை முகியை வைத்துக்கொள்ளக்கூறி சாவியையும் அளித்தான்.
வேண்டாமென மறுத்த முகியை மங்கை மற்றும் தேவராஜனை கொண்டு சம்மதிக்க வைத்தான்.
******
பார்த்திபன் வயலுக்கு வரும்போது கயல் டிராக்டர் வைத்து பரம்படித்துக் கொண்டிருந்தாள்.
உழுத வயலை சமன் செய்வது பரம்படிப்பதாகும்.
பரம்படித்த ஒரு வயலில் சிறு பகுதியை சிவா சிறிய வரப்புகள் அமைத்து சீரமைத்துக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்ற பார்த்திபன்…
“இது எதுக்கு?” என்று வினவினான்.
அவனை நிமிர்ந்துப் பார்த்த சிவா, மீண்டும் நிலத்தில் விழிகளை வைத்தவனாக,
“நாத்து விட” என்று பதில் சொன்னான்.
வண்டி ஓட்டிக்கொண்டிருந்த கயல் பார்த்திபனை கண்டுகொள்ளவே இல்லை.
“ரொம்ப பன்றாள்.” முணுமுணுத்தான்.
“நீங்க பண்ணதுக்கு முன்னாடி இது கம்மிதான்.” சிவாவிடமிருந்து வெறும் குரல் மட்டும் வந்தது.
சிவாவிற்கும் தன்மீது வருத்தம் என்பது பார்த்திபனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
“நானும் இதை செய்யணுமா?”
“அப்புறம் எப்படி சவாலில் ஜெயிக்குறது.”
“ம்ம்ம்…”
அதற்குள் தன்னுடைய வயல்களில் வேலை முடித்து டராக்டரோடு வெளியேறிய கயல்…
“அவங்களை அடிச்சிக்க சொல்லுங்கண்ணா” என்று சொல்லிவிட்டு நீர் இறைத்துக் கொண்டிருந்த பம்ப் செட் நோக்கி சென்றாள்.
டிராக்டரில் ஏறி அமர்ந்த பார்த்திபன்…
“இதெப்படி… ஆங் ஏதோ சொன்னியே சிவா” என்று யோசித்தவன், “பரம்… பர…” என்று அந்த வார்த்தை வராது திக்கினான்.
“பரம்படிக்கணும்.”
“யா… கரெக்ட்.”
டிராக்டருக்கு பின்னால் வந்த சிவா… சமமான செவ்வக வடிவமுடைய மரத்தினாலான பலகை பொருத்தியிருப்பதை காட்டி… “வயல்ல இறங்கியதும் உங்களுக்கு பக்கத்திலிருக்கும் கருப்பு பட்டனை அழுத்தினா இந்த பலகை வயலை தொட்டு கீழிறங்கும். அப்புறம் நீங்க வண்டியை நேரா ஒரே சீரா ஓட்டினா போதும். பலகை சேற்றை சமன் செய்துடும்” என்று விளக்கினான்.
“இது ஈஸியா இருக்கே!”
“மாடு கட்டி செய்தால் ஈஸியா கஷ்டமான்னு தெரிந்திருக்கும்.” மெல்ல முனகியவாறு சிவா வரப்பில் ஏறி நின்றுகொள்ள… பார்த்திபன் டிராக்டரை ஆன் செய்தான்.
முதல் முறையாக டிராக்டரை இயக்குகிறான். முதலில் தடுமாறினாலும், சில நிமிடங்களில் கற்றுக்கொண்டான்.
பார்த்திபன் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை சமன் செய்து முடிக்கும் வரை சிவா பார்த்திபனுடன் தான் இருந்தான்.
அதற்குள் கயல் வீட்டிற்கு சென்றிருந்தாள். கிளம்பும்போது சிவாவிடம் வந்து சொல்லிவிட்டேச் சென்றாள்.
‘இதே முன்பென்றால் தான் முடிக்கும் வரை உடனிருந்து வழிகாட்டியிருப்பாள். அத்தோடு விவசாயத்தின் தார்ப்பரியம் புரிய வேண்டுமென்று பழைய முறையான மாடுகளை வைத்து பரம்படிக்கச் செய்திருப்பாள்’ என்று பார்த்திபனின் உள்மனம் கூறியதை அவனும் ஏற்றிருந்தான்.
“அடுத்தென்ன மச்சான்.”
பார்த்திபன் மச்சான் என்று அழைப்பது சந்தோஷமாக இருந்தாலும்… கயலின் இந்த வருத்தத்திற்கு பார்த்திபன் தான் காரணம் என்பதால் பார்த்திபனிடம் சரியாக முகம் கொடுக்க சிவாவால் முடியவில்லை.
“நான் கயல் வயலில் பண்ணது போல நீங்களும் பண்ணனும்.”
“சொல்லிக்கொடு மச்சான்.”
சிவா எந்தளவிற்கு ஒதுக்கம் காண்பித்தானோ அந்தளவிற்கு பார்த்திபன் அவனிடம் நெருக்கம் காட்டினான்.
“வாங்க” என்ற சிவா முன்னால் செல்ல… பார்த்திபன் அங்கேயே நின்றான்.
திரும்பி பார்த்த சிவா, “வாங்க” என்றழைக்க…
“உனக்கு என்மேலிருக்க கோபம் நியாயம் தான். உன் தங்கச்சியை நான் காயப்படுத்திட்டேன் தான் இல்லைன்னு சொல்லல. ஆனால் நீ என்கிட்ட விலகிப்போனா கயல் சரியாகிடுவாளா?”
“கில்ட்டியா பீல் பண்ற அளவுக்கு நீ எதுவும் செய்யல. கயலை என்னால் சரி பண்ண முடியும். அவள்தான் கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் சொன்னா(ள்). “
“அதுக்காகத்தான் எந்தவொரு விளக்கமும் கொடுக்க முயற்சி பண்ணாம அமைதியா இருக்கேன். உன் தங்கச்சியை பழையபடி சந்தோஷமா நான் மாத்திடுவேன் சிவா. ஆனால் நீ இப்படி ஒதுங்கி போறது கஷ்டமாயிருக்கு” என்ற பார்த்திபன் சிவாவைத் தாண்டிச் சென்றிட, பார்த்திபனை பின்னாலிருந்து தழுவியிருந்தான் சிவா.
“எனக்கு எல்லாமே கயல் தான் மாப்ள. அது வருந்துறது பிடிக்காம… சாரி” என்றான்.
“நான் கயலுக்கு அண்ணனா உன்னை பாக்குறதுக்கு முன்னாடி என் நண்பனா பாக்குறேன் சிவா” என்ற பார்த்திபனின் குரலிலிருந்த ஏதோ ஒன்று சிவாவை நெகிழ்த்தியது.
அதன் பின்னர் பார்த்திபனிடம் முன்பு போல் நெருக்கம் காட்டிட சிவாவிற்கு தடையெதுவும் இருக்கவில்லை.
சிவா சொல்ல சொல்ல பார்த்திபன் தன் கைப்படவே நாற்றங்கால் அமைத்தான்.
வேலை முடித்து நிமிர்ந்த பார்த்திபனுக்கு அப்பாடா என்றிருந்தது.
எப்பேற்பட்ட வல்லவனுக்கும் விவசாயம் சவால் நிறைந்த ஒன்றென்று அக்கணம் அனுபவத்தின் மூலம் உணர்ந்தான்.
பார்த்திபன் வீட்டிற்கு கிளம்பும்போது சிவாவையும் உடன் அழைத்தான்.
“கயல் சாப்பாடு கொண்டும் வரும். இன்னும் ரெண்டு நாளில் கரும்பு நடனும் சொல்லுச்சு. அதுக்கு வயலை சரி பண்ணனும்” என்று உடன் செல்வதை சிவா மறுத்தான்.
“நான் இனியும் இங்கவே தங்கினா மாம் பேசியே கொன்னுடுவாங்க சிவா. அதான் வீட்டுக்கு” என்ற பார்த்திபனிடம் சிவா புரிந்தது என்பதுபோல் தலையசைத்தான்.
“நீயும் அங்க வீட்டிலே தங்கிக்கலாமே!”
கேட்ட பார்த்திபனிடம்,
“கயல் என்ன கூப்பிட்டிருக்காதுன்னு உங்களுக்கு தோணுதா?” என்ற சிவா, “இங்க வயலுக்கும் காவல் வேணும் தான. நானும் அங்க வந்துட்டா இரவு காவலுக்கு நான் போறேன்னு கயல் கிளம்பிடும் அதுக்கு நான் இங்கிருப்பதே நல்லது” என்றான் சிவா.
அந்த நொடி சிவாவை பார்த்திபனுக்கு அத்தனை பிடித்தது.
“எனக்கு முகியும் கயலும் தான் உறவே” என்றவனின் அன்பு நெகிழ வைப்பதாக.
“அப்போ நானில்லையா” என சிவாவின் மனநிலையை மாற்றும் பொருட்டு பார்த்திபன் விளையாட்டாகக் கேட்க…
“கயல் உங்களை கல்யாணம் செய்துக்கட்டும். அப்புறம் உங்களையும் சேர்த்துக்கிறேன்” என அதே விளையாட்டோடு சிவா கூறினான்.
அந்நேரம் முகி பார்த்திபனுக்கு அழைத்து, ஊருக்கு கிளம்புவதாக சொல்லி சிவாவையும் அழைத்து வருமாறுகூற, முகி அழைக்கிறான் என்றதும் சிவாவும் பார்த்திபனுடன் வீடு நோக்கிச் சென்றான்.
“கூப்பிடறவங்க கூப்பிட்டாத்தான் வருவீங்க” என்று அதற்கும் பார்த்திபன் சிவாவை கிண்டல் செய்தான்.
“அய்யோ போதும்… இனி நீங்க எங்க கூப்பிட்டாலும் வரேன்” என்ற சிவாவுக்கும் பார்த்திபனுடன் இப்படி பேசுவது பிடித்திருந்தது.
அவர்கள் இருவரும் வீட்டிற்கு வர,
முகியும் மலரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.
செல்வதற்கு முன் முகி கயலிடம் பேச எத்தனையோ முறை முயன்றும் அத்தனையும் பலனின்றி போனது.
முகியை நேருக்குநேர் சந்திப்பதையே கயல் தவிர்த்தாள்.
பலமுறை விளக்கம் சொல்ல வந்த முகியை பார்வையாலே எட்ட நிறுத்தியிருந்தாள்.
முகிக்கே அந்நிலை என்றால் பார்த்திபனுக்கு?