பார்த்திபனின் கயல்விழியாள் 42

அத்தியாயம் 🌾 42 :

காலை நேர ஓட்டத்திற்காக அதிகாலையில் வீட்டை விட்டு வெளியில் வந்தான் பார்த்திபன்.

வாயில் கதவு திறந்திருக்க…

‘இந்த நேரத்தில் யார் வெளியில்’ என்றவாறு கையில் கட்டியிருந்த சுமார்ட் வாட்சினை திருப்பி பார்த்தான்.

நேரம் ஐந்தெனக் காட்டியது.

வெளியில் வந்தவனுக்கு ஆச்சரியம்.

புத்தம் புது மலராய் அவனது தேவதை காட்சியளித்தாள்.

தலைக்குத் தண்ணீர் ஊற்றியிருப்பாள் போலும், நுனி முடியில் போடப்பட்டிருந்த முடிச்சில் நீர் சொட்டியது.

நெற்றியில் விழுந்த முடியை புறங்கை கொண்டு காதோரம் ஒதுக்கியவளாக, சாணமிடப்பட்ட மண் தரை வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

புலர்ந்தும் புலரா மெல்லிய விடிவெள்ளியின் குறை வெளிச்சத்தில், இயற்கையின் பின்னணியில் ஒரு கால் குத்திட்டு மற்றொரு கால் மடக்கி தரையில் அமராது, இரு விரல்களுக்கிடையே மெல்லிய கீற்றாக அரிசி மாவினை விட்டவளாக அவனவள். பார்க்கும் காட்சி கவிதையாய் கண்ணில் பதிந்து இதயத்தில் இறங்கி இதம் சேர்த்திட… டிராக் பேன்ட்டிலிருந்து அலைபேசியை எடுத்தவன் மனதுக்கு இதம் சேர்த்த காட்சியை நிழலாக சேமித்துக்கொண்டான்.

“போட்டோ எடுத்து முடிச்சிட்டன்னா கொஞ்சம் விலகி வழிவிட்டு நில்லுடா?”

மங்கையின் குரலில் கோலத்திலிருந்து முகத்தை உயர்த்தி பார்த்திபனை கண்ட கயலின் நயனங்கள் சட்டென்று குடை கவிழ்ந்தன.

அவனை பார்த்தால் கோபம் கரையாமல் கரைந்து விடுமென்று அவளுக்கு நன்கு தெரியும் அதனாலே பார்த்திபனின் முகம் காணவே மறுத்தாள்.

பார்த்திபனை இடித்துக்கொண்டு அவனைத் தாண்டி சென்று திண்ணையில் அமர்ந்த மங்கையின் கையில் இரு கோப்பை தேநீர்.

“யாருக்கு மாம் டீ?”

“எனக்கும் என் மருமகளுக்கும் தான்டா!” என்றவர், “கயலும் முகியும் இந்த நேரத்தில் இங்கு உட்கார்ந்து பேசிக்கிட்டே குடிப்பாங்க… எனக்கும் பழகிருச்சு” என்றார்.

“ஓகே மாம் நான் ஜாகிங் போயிட்டு வரேன்” என்றவன் மெல்ல ஓடத் துவங்கினான்.

பெரிய வாய்க்காலுக்கு முன்னிருக்கும் சிறிய கேட் பூட்டியிருந்தது.

“மாம் கேட் லாக் ஆகியிருக்கு.”

“கயல் அதை கொஞ்சம் திறந்துவிட்டு வாம்மா” என்ற மங்கை கயல் பாதியில் நிறுத்திய கோலத்தை முடித்து வைக்கத் துவங்க… கயல் கையிலிருந்த கோலமாவு கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்று கேட்டின் சாவியைக் கொண்டு வந்து திறந்தாள்.

“மேடம் பேச மாட்டிங்களா?”

கயலிடம் பதிலில்லை.

“பார்க்கக்கூட மாட்டிங்களா?”

அவனை முறைத்து பார்த்தவள் நொடி நேரத்தில் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

“கோபம் போயிடும் பயமா?”

அவனது கேள்வியில் விலுக்கென நிமிர்ந்தாள்.

“இல்லை என் முகத்தை பார்த்தா என் மேலிருக்கும் லவ்வில் உன் கோபம் போயிடுமேன்னு நினைக்கிறியா?” என்று விளக்கமாகக் கேட்டான்.

“ம்க்கும். நினைப்புதான்.”

“என் நினைப்பு தானே!”

“உங்கக்கிட்ட என்னால் பேச முடியாது.”

“ஏன்?”

“நீங்க என்னை ஏமாத்தி இருக்கீங்க.” சொல்லும்போதே கண்களில் நீர் கோர்த்து விட்டது.

“கயல்… லெட் மீ எக்ஸ்பிலைன்.” அவளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

“வேண்டாம். நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் எதுவும் கேட்க வேண்டாம். நமக்குள்ள எந்த பேச்சும் வேண்டாம்.” கயலின் இந்த பிடிவாதம் அவளுக்கே புதிது.

“அப்போ லவ் இல்லையா?”

“விடுங்க…” தன்னுடைய கையை விடுவிக்க போராடினாள்.

“பதில் சொல்லு விடுறேன்.”

“முடியாது.”

“நானும் முடியாது.” அவளிடம் இப்படி விளையாடுவது அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

“விடப்போறீங்களா இல்லையா?”

“உனக்கு கோபப்படக்கூடத் தெரியல கயல்.”

“பிடிச்சவங்ககிட்ட கோபப்பட முடியாது.”

“அப்போ என்னை உனக்கு பிடிச்சிருக்கு ரைட்.”

மௌனமாக இருந்தாள். வாயினை அழுந்த மூடிக்கொண்டாள்.

“இதை கேட்டா மட்டும் வாய் திறக்காதே!” என்றவன், “உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்” என்க… கயல் பார்த்திபனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கவ்வி நிற்க… உள்ளே காதல் தீ பற்றி எரிந்தது.

“இந்த கண்ணு… இந்த முகம் தான்… என்னை கட்டி சுருட்டி உன் காலடியில் போட்டது” என்று கயலின் முகதைச்சுற்றி ஆள்காட்டி விரலால் வட்டமிட்டுக் கூறினான்.

அவளுக்கு இன்ப அவஸ்தையாக, அவனிடமிருந்து ஓடிவிட்டால் போதுமென இருந்தது.

“சரி சொல்லு?”

“என்ன சொல்லணும்?”

“லவ்… இருக்கா இல்லையா?”

…..

“என்னை பிடிச்சிருக்கா இல்லையா?”

…..

“எனக்கு பதில் வேணும் கயல்.”

அவனின் அழுத்தம் பதில் சொல்லாது விடமாட்டானென்று உணர்த்தியது.

“உங்களுக்கேத் தெரியும்.”

அவன் மீது கோபம் இருப்பினும் பொய்யாகக் கூட உன்னை பிடிக்காது, உன்மேல் காதலில்லை என்று அவளால் சொல்ல முடியாது போக… அவனது யூகத்திற்க்கே விட்டாள்.

“இது போங்கு… ஓப்பனா சொல்லு.” அவனின் பிடிவாதம் வலுத்தது.

“இருக்கு.” பற்களைக் கடித்துக்கொண்டு கூறினாள்.

“என்னது… கோபமா? அது எக்கச்சக்கமா இருக்குன்னு எனக்கேத் தெரியும்.”

“தெரியுதுல விடுங்க…” அவனது கைகளிலிருந்து தன்னுடைய கைகளை உருவ முயன்றாள்.

“தெரியும்… என்னை ரொம்ப அதிகமா விரும்புறேன்னு நல்லாவே தெரியும். அன்னைக்கு நைட் அழுதுகிட்டே சொன்னியே எவ்வளவு க்யூட் தெரியுமா?” எனக் கேட்டவனின் கண்கள் அந்நொடியை நோக்கி காட்சிகளை நகர்த்தியது. அவனது முகத்தில் இன்ஸ்டன்ட் ரசனை குடிகொண்டது.

அவனது முகம் பார்த்த கயலுக்கே சிவ்வென்று இருந்தது. சொல்ல முடியாத உணர்வொன்று பட்டென்று உடலின் ஒவ்வொரு செல்லையும் தாக்கியது.

“நான் அழுதது உங்களுக்கு க்யூட்டா?” நினைவு மீள முறைத்தபடி கேட்டாள்.

“அந்த அழுகை எனக்காக… சோ க்யூட் தான். ஐ லவ்ட் இட்.”

“சரி ஓகே சொல்லு. இந்த கோபமெல்லாம் இல்லாம. எல்லாத்தையும் தள்ளி வச்சிட்டு நிறைய நிறைய லவ் பண்ணலாம்.

உன்னை அவ்வளவு லவ் பண்ணனும் தோணுது. மொத்த வாழ்க்கையும் உன் லவ்வோடு மட்டுமே வாழனும் தோணுது. உனக்காக மட்டுமே என் உலகம் இருக்கணும் தோணுது.”

இரு கைகளையும் அகல விரித்து… வானோக்கி முகம் உயர்த்தி கயலுக்கு மட்டும் கேட்கும் மென் குரலில் அவன் சொல்ல… அவளுக்கு அனைத்து கோபங்களையும் துறந்து அவனை அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் மறைய துணிந்த கோபத்தை முயன்று இழுத்துப் பிடித்தாள்.

‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் பேசியே மயக்கிடுவான்’ என நினைத்தவள்…

“இன்னும் கோபம் அப்படியேதான் இருக்கு” என்றவளாகத் திரும்பி நடக்க…

“ஒரு நாள் வாழ்க்கையா இருந்தாலும் உன்னோடதான் வாழனும்” என்ற பார்த்திபனின் அதீத காதல் வார்த்தையில் கயலின் கால்கள் நடையை நிறுத்தி பிறகு தொடர்ந்தன.

பார்த்திபன் மெல்ல ஓடியபடி ஊருக்குள் செல்ல அனைவரின் கண்ணும் அவன் மீதுதான்.

இதுநாள்வரை பண்ணைக்குள்ளே இருந்தவன் இன்றுதான் அந்த கிராமத்தைப் பார்க்கிறான்.

கண்ணில் பட்ட எல்லோரும் நலம் விசாரித்துச் செல்ல… அவர்களை யாரென்று தெரிந்திடாத போதும் சிறு சிரிப்புடன் கடந்தான்.

“அழகர் மருமகனா நீங்க?”

“மாமன் மவகிட்ட யாருன்னு சொல்லாமலே விளையாடியிருக்கிங்களே!”

“கயலுகிட்ட விளையாடம யாருக்கிட்ட விளையாடுவாங்க?”

“உரிமையிருக்கு. விளையாடி பார்க்க அசைப்பட்டிருக்கும்.”

விடயம் அறிந்த எல்லோரும் பார்த்திபனை அழகரின் மருமகனாகத்தான் அங்கு பார்த்தனர். ஒவ்வொருவரின் வார்த்தையும் அவனுக்கு புன்னகை தான் கொடுத்தது.

அங்கிருந்த தேநீர் கடை பெஞ்சில் பார்த்திபன் அமர… கடைக்காரர் வெளியில் வந்து “அழகரும், தேவராஜனும் இங்க வந்துதான் டீ குடிப்பாங்க” என்றதோடு இருவரின் நட்பை பற்றி பல கதைகள் பேச அதையெல்லாம் ஒருவித சுவாரஸ்யத்தோடு கேட்டுக்கொண்டான் பார்த்திபன்.

அந்நேரம் பார்த்திபன் அமர்ந்திருந்த பெஞ்சை உரசியவாறு இருசக்கர வாகனம் ஒன்று வந்து நிற்க…

“என்ன மருது ஆளு இருக்கிறது கண்ணு தெரியலையா. ரோட்டைப் பார்த்து ஓட்டு” என்ற கடைக்காரர் கடைக்குள் செல்ல…

“பார்த்துதான் வந்தேன்” என்ற மருது,

“நீங்க தான் அந்த வெளிநாட்டு ஆளா?” என பார்த்திபனிடம் கேட்டான்.

பார்த்திபன் பதிலேதும் சொல்லாது அவனையே அளவிட்டபடி இருந்தான்.

“வந்த வேலை முடிஞ்சதும் கிளம்பிட்டே இருக்கணும். இந்த அத்தை மகன் உறவெல்லாம் சொல்லிக்கிட்டு இங்கயே நின்னுடக் கூடாது” என்றபடி பார்த்திபனை உருத்து விழித்துச் சென்றான் மருது.

கடைக்காரர் தேநீர் கொண்டு வந்து கொடுக்க…

அதனை வாங்கிக்கொண்ட பார்த்திபன்,

“யாரு இது?” என்று மருதை பற்றி வினவினான்.

“அவன் இந்தவூரு தனக்காரர் துரையோட மகன் தம்பி. அவர் தான் ஊர் தலைவரும்” என்றவர் கூடுதல் தகவலாக, “இவனுக்கு நம்ம கயலு மேல ஒரு கண்ணு தம்பி” எனக் கூறியதோடு,

“கொஞ்ச நாளா ஊருக்குள்ள இல்லாம இருந்தான். கயல் நிம்மதியா இருந்துச்சு. அப்பனோட சண்டை போட்டுக்கிட்டு வேலை பார்க்கிறேன்னு மெட்ராஸ் போனவன் ஏழு மாசத்துக்கு அப்புறம் நேத்து தான் வந்திருக்கான். நல்ல பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கான். ஆனால் கயல் விஷியத்தில் கிறுக்குத்தனமா நடந்துக்கிறான்” என்று மருது பற்றிய எல்லாம் கூறியிருந்தார்.

“ம்” என்றவன் தேநீருக்கான பணத்தை அவர் மறுத்தபோதும் கொடுத்துவிட்டு வீடு திரும்பினான்.

ஓட்டத்தை முடித்தபடி வந்து சேர்ந்த பார்த்திபன் திண்ணையில் அமர்ந்திருந்த டெல்லை கண்டு… அப்போதுதான் அவனும் தங்களோடு இங்கு வந்தது நினைவு வந்தவனாக டெல்லின் அருகில் சென்றான்.

“ஹேய் டெல் சாரி மேன். உன் நினைவே இல்லை” என்றான்.

“போடா… நல்லவேளை கயல் தான் என்னை வெல்கம் பண்ணி, ரூமெல்லாம் கொடுத்து பார்த்துக்கிட்டாங்க. உன்னையெல்லாம் நம்பி வந்தால் அவ்வளவு தான்” என்று கோபமாக பேசியவன் பார்த்திபனின் கழுத்தை நெறிப்பதை போல் கையை கொண்டு செல்ல…

“விடுடா… ஏதோ தாட்டில் (thought) உன்னை மறந்துட்டேன்” என்ற பார்த்திபன் டெல்லை அணைத்து சமாதானம் செய்தான்.

அப்போது அங்கு வந்த கயல் டெல்லிடம் மட்டும் பிளாக் டீ அடங்கிய தம்ளரை கொடுத்துவிட்டுச் செல்ல…

“எனக்கெல்லாம் இல்லையா?” எனக்கேட்டான் பார்த்திபன்.

“இப்போதானே கந்தன் கடையில் குடிச்சிட்டு வர்றீங்க” என்றவள் உள்ளே நுழைந்து கொண்டாள்.

“என்னை வாட்ச் பன்றாள்” என்றவன் இதழ்கள் விரிந்திருந்தன.

“கொடுத்துவச்சவன் டா மச்சான் நீ” என்ற டெல்… “லவ் பன்ற பொண்ணு வீட்டுலே தங்குற சான்ஸ் எத்தனை பேருக்கு கிடைக்கும்” என கேலி செய்தான்.

“நீவேற கடுப்பேத்தாதடா… பேசவே மாட்டேங்கிறாள். அட்லீஸ்ட் என் முகத்தைக்கூட பார்ப்பேனான்னு ரொம்ப படுத்துறாள். எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல” என்று புலம்பும் பார்த்திபனை பார்த்து டெல் அட்டகாசமாக சிரித்தான்.

“ஆஹா… ஆஹா… இது என் பாஸ் பார்த்திபன் தானா” என்று அவனை சுற்றி சுற்றிப் பார்த்த டெல்… “நியோ சொல்லியது பளிச்சிடுச்சு போலிருக்கே” என்றான்.

“யா… அவன் சொன்னதை கயலை பார்த்ததுமே நினைத்துப் பார்த்தேன்.”

“அப்போ கயலிடம் தோத்துட்ட… அப்படித்தானே!”

“நான் தோற்கும் இடம் அவள் மட்டுமே!.”

“ஆஹா… கவிதை… கவிதை..” என்று கிண்டல் செய்த டெல்லை முறைக்க முடியாமல் முறைத்து சிரித்து வைத்தான்.

“உங்களுக்கு இந்த ஃபார்ம்… பீல்டு வொர்க் இதெல்லாம் கஷ்டமா இல்லையாடா?”

டெல் பார்த்திபனை ஆறு வயதிலிருந்து பார்க்கிறான். அவனை பொறுத்தவரை பார்த்திபன் செல்வ செழிப்பில் செல்லமாக வளர்ந்தவன். அதுவும் அவனுக்கு பிடிக்காத ஒன்று இப்போது அவன் செய்து கொண்டிருப்பது. அதனாலேயே வினவினான். அத்தோடு நேற்று பார்த்திபன் வயலுக்கு சென்று அங்கு அவன் செய்ததையெல்லாம் அவனது பின்னோடு சென்று பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

கயல் தன் முகம் கூட பார்ப்பதில்லை என்ற அவளின் மீதே தன் கவனத்தை வைத்திருந்தவனால் டெல்லை கருத்தில் கொள்ள முடியவில்லை.

முதலில் வேலையை முடித்து வெளிவந்த கயல் தான்… தோப்பில் ஓரமாக நின்றபடி பார்த்திபன் செய்வதையே பார்த்திருக்க…

‘இவர் அவங்க கூட வந்தவராயிற்றே’ என்று நினைத்த கயல்… அத்தோடு அன்று விழாவிலும் பார்த்திபனுடன் டெல்லை பார்த்த நினைவில் அவனிடம் வந்து பேசினாள்.

“நீங்க…?”

“பார்த்திபன் ஃபிரண்ட்.”

“வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றவளுடன் செல்லாது டெல் பார்த்திபனை பார்க்க…

“அவர் வேலையை முடிக்க நேரமாகும். அதுவரை இங்கவே நிக்கப்போறீங்களா?” என்றவளின் கேள்வியில் அவளுடன் சென்றான்.

செல்லும் வழியில்…

“பார்த்திபனுக்கு இதெல்லாம் புதுசு. தெரியாததும் கூட.” டெல் தான் முதலில் பேச்சினை ஆரம்பித்தான்.

“நான் வேண்டாம் சொல்லிட்டேன்.”

“அவனுக்கு கொஞ்சம் பிடிவாதம் அதிகம்.”

“கொஞ்சமில்லை. ரொம்பவே.”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“எப்படியாவது அவங்களை அங்க உங்க வேலையை காரணம் காட்டி கூட்டிட்டு போயிடுறிங்களா?”

கயல் இப்படி சொல்லுவாளென்று டெல் எதிர்பார்க்கவில்லை.

“அவன் உங்ககிட்ட யாருன்னு மறைத்து பொய் சொன்னதால கோபமா சொல்றிங்களா?”

“ஆங்… நிச்சயமா அது காரணமில்லை. நீங்களே இப்போ பார்த்திங்களே… இது அவருக்கு கஷ்டம் தான!”

கயல் சொல்லுவதை டெல்லும் தலையசைத்து ஒப்புக்கொண்டான்.

“பட் அவன் பிடிவாதத்தை மீறி நாம ஒன்றும் செய்ய முடியாது. ஒரு விஷயத்தில் இறங்கிட்டா முடிவு தெரியாம பின்வாங்க மாட்டான்.”

“நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க.”

“எதே நான் வளர்த்தேனா…!”

கயல் சொல்லியதில் அதிர்வோடு சிரித்தான் டெல்.

வீடு வந்துவிட அப்போதுதான் அவனை பார்த்த மங்கை… கவனிக்காமல் விட்டதற்காக மன்னிப்பு வேண்டி அவனை சாப்பிட வைத்தார்.

கயல் அறையை காட்டிட… இரண்டு நாள் அலைச்சலில் படுத்து உறங்கிவிட்டான். இரவு உணவிற்கு கூட வரவில்லை.

பாதி நேரத்தில் எழுந்து பார்க்க… அவன் படுத்திருந்த கட்டிலிற்கு அருகில் சிறு மேசையில் உணவும் சிறு காகிதமும் இருந்தது.

“I came to invite you to eat. You was sleeping well so I didn’t disturb you. There is food in the dish, eat it.” (சாப்பிட அழைக்க வந்தேன். நன்றாக தூங்கிக்கொண்டிருந்ததால் தொந்தரவு செய்யவில்லை. பாத்திரத்தில் உணவு இருக்கு சாப்பிடுங்க.) டெல் தமிழ் பேசுகிறான் ஆனால் படிக்கத் தெரியுமோ தெரியாதோ என ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள்.

கயலின் குணத்தை வியந்தபடி உணவினை உண்டவன் மீண்டும் உறங்கிப்போனான்.

நடந்ததை பார்த்திபனிடம் சொல்லிய டெல்… “ஷீ இஸ் ஆன் ஏஞ்சல் டா” என்றான்.

“ஐ க்னோவ்.”

“பேசி முடிச்சிட்டா சாப்பிட வாங்கடா” என்ற மங்கையின் குரலில் இருவரும் உள் சென்றனர்.

சாப்பிடும்போது,

“எப்போடா கிளம்புற?”

தன்னை துரத்த நினைப்பவனை கோபமாக ஏறிட்டான் டெல்.

“என்னடா?”

“நீ மட்டும் சுத்தமான காற்றை சுவாசித்து… இயற்கையை ரசிச்சிட்டு ஜாலியா இருக்கணும். நான் மட்டும் அங்கு போகனுமா?” என்றான் டெல்.

“நீயும் இங்கிருந்தா அங்க வேலையை யாருடா பார்ப்பா?”

“அப்போ நீங்க கிளம்புங்க?” பட்டென்று சொல்லியிருந்தாள் கயல்.

“நான் வந்த வேலை இன்னும் முடியல.” அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே பார்த்திபன் சொல்ல… தோளில் முகத்தை இடித்தவளாக அங்கிருந்து நகர்ந்திருந்தாள் கயல்.

“மாம் உங்க மருமகள் ரொம்ப ஓவரா போறாள். கொஞ்சம் என்னன்னு கேளுங்க” என்றவனிடம், “நீயாச்சு அவளாச்சு… நடுவில் எங்களை இழுக்காத மகனே” என சொல்லியது என்னவோ தேவராஜன் தான்.

மதியம் போல் டெல்லை பேருந்து நிலையம் சென்று சென்னை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த பார்த்திபன் கயலை தேடிச் சென்றான்.

கயலும் சிவாவும் அந்த மாத வரவுகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். அதோடு அவர்களின் பேச்சு கரும்பு ஊனுவதை பற்றி இருந்தது.

“எப்பவுமே இந்த செடி நடுறது… காய் பறிக்கிறது இதுதானா மச்சான்?” என்று கேட்டபடியே சிவாவின் அருகில் பார்த்திபன் அமர, கயல் சிவாவை முறைத்தாள்.

“அவரா தான் கயல் கூப்பிடுறார்” என்ற சிவா கையிலிருந்த கணக்கு நோட்டில் குனிந்து கொண்டான்.

“யாரோ எப்படியோ கூப்பிட்டா எனக்கென்ன” என்றவள் சிவாவிடம் கவனத்தை வைத்தாள்.

சில நிமிடங்கள் அவர்களோடு சேர்ந்து கணக்குகளை சரி பார்த்த பார்த்திபன் அந்த வேலை முடிந்து கயல் எழும்பவும்…

“மருது யார்?” என்று கேட்டிருந்தான்.

கயல் பதில் சொல்லுவதற்கு முன்…

“என்ன கயல் திரும்ப வம்பு ஏதும் பண்ணானா? அவன் அதுக்கு அப்புறம் ஊரிலே இல்லையே, திரும்ப வந்துட்டானா?” என்று சிவா படபடத்தான்.

‘அப்போ அவன் இங்கிருந்து போகக் காரணமே கயலிடம் ஏதோ பிரச்சினை செய்திருக்கான்.’ பார்த்திபன் தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது…

அங்கு வேகமாக ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் ரத்தினம்.

மூச்சு வாங்கிட நின்றவரின் தோற்றம் ஏதோ விபரீதம் என்று சொல்லாமல் சொல்லியது.

error: Content is protected !!
Scroll to Top