அத்தியாயம் 🌾 43 :
மூச்சு வாங்க ஓடி வந்த ரத்தினம் விடயத்தை சொல்லாது மூவரையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
“உங்க வயலுக்குள்ள காட்டு பன்றி பூந்துருச்சா என்ன? பயந்து இப்படி ஓடி வர்றீங்க?” சிவா கேலி செய்தான்.
“அண்ணா சும்மா இருங்க. அவர் சொல்லட்டும்.”
வாயில் விரல் வைத்து சரியென தலையசைத்த சிவாவை பார்த்து பார்த்திபனுக்கு அத்தனை சிரிப்பு.
சிவா யாரையும் இப்படி கிண்டல் செய்து பார்த்திபன் கண்டதில்லை.
அதனால், “யார் சிவா இது. நீயா பாக்குற நேரமெல்லாம் வம்புக்கு இழுக்குற” என்று சிவாவின் காதில் மென் குரலில் வினவினான்.
“அது ரொம்ப பெரிய கதை மாப்ள. அப்புறம் சொல்றேன்” என்றான்.
இருவரும் கயல் மற்றும் ரத்தினத்தின் மீது கவனம் வைத்தனர். அவர் ஏதோ தீவிரமாக கயலிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“பக்கத்து ஊர் கோவில் ஜாதி பிரச்சினை காரணம் காட்டி மூடியதுக்கு பின்னால் பெரிய திட்டமே இருக்கு கயல்.”
“அப்படி என்ன திட்டம்?” சிவா தான் கேட்டிருந்தான்.
“அந்த கோவிலுக்கு சொந்தமான முந்நூறு ஏக்கர் நிலத்தில் ஏதோ கார் பேக்ட்ரி வருதாம்” என்று ரத்தினம் கூறியதும், “அவ்வளவு பெரிய கோவில் இந்த வில்லேஜிலா?” என்றான் பார்த்திபன்.
“அட என்ன இப்படி கேட்டுட்டிங்க… இந்த ஜில்லாவிலே ரொம்ப பெரிய கோவில் தம்பி. வெளிநாட்டுக்காரங்கலாம் கூட சுற்றுலா வருவாங்க. சோழர்கள் காலத்துல கட்டுனது. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் எக்கச்சக்கம். எல்லாம் ஊர் காரங்கதான் விவசாயம் பார்த்து, கோவிலுக்கு இவ்வளவுன்னு கொடுத்துட்டு நிலத்தை ஆண்டாங்க. இப்போ எவனோ வந்து கார் தயாரிக்குற கம்பெனி கட்டப்போறானாம்” என்று தனக்குத் தெரிந்ததைக் கூறினார்.
“எவனோ எங்கேயோ எதையோ கட்டுனா நமக்கென்ன. போய் வேலையைப் பாருங்க” என்று சிவா சொல்ல…
“இதனால் நமக்கு ஏதும் பாதிப்பு வருமோன்னு நினைச்சு வந்து சொன்னேன். அந்த ஊருக்கும் நமக்கும் பொதுவா நடுவுல ஒரு ஆறு மட்டும் தானே!” என்றவர், “ஏதாவது முயற்சி செய்தா என்கிட்டயும் சொல்லு கயல்” என்றவாறு சென்றுவிட்டார்.
“அவனுங்க பேக்ட்ரி கட்ட கோவில் இடைஞ்சலா இருக்குன்னு எப்படி பிளான் செய்து மூடியிருக்கானுங்க பாரு” என்ற சிவா, “நீ வீட்டுக்கு போ கயல், நாளைக்கு கரும்பு ஊனனும்” என்றதோடு “நான் அந்த வயலுக்குலாம் தண்ணி பாய்ச்சனும்” என்று சொல்லியவாறு கிணற்று பக்கம் சென்றுவிட்டான்.
கயல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சிவா சொல்லியதையோ, சென்றதையோ அவள் கருத்தில் கொள்ளவில்லை.
அவளையே பார்த்திருந்த பார்த்திபன்…
“என்ன கயல் டீப் திங்க்கிங்?” எனக் கேட்டபோதும் அவள் சிந்தனையிலிருந்து மீளவில்லை.
இரண்டு மூன்று முறை பெயர் சொல்லி விளித்தவன், அவளின் தோள் தொட்டு உலுக்கினான்.
அதில் கலைந்தவள்,
அவனை பார்த்து விழிக்க…
“ஆர் யூ ஓகே?” என்று வினவிய பார்த்திபனிடம்,
“ஹாங்… ஒன்னுமில்லை அத்தான்” என்று அவள் சுயமின்றியே பதில் வழங்கிவிட்டு திரும்பி நடந்தாள்.
முதல் முறையாக அவனை உறவுமுறை சொல்லி அழைத்திருக்கிறாள். பார்த்திபனுக்குள் ஐஸ் மலையின் குளுமை. மீண்டும் மீண்டும் அவ்வார்த்தையை அவள் வாய்மொழி கேட்டிட நெஞ்சம் ஏங்கியது. ஆனால் அவனும் உணர்ந்தே இருந்தான். சுயத்தில் இருந்திருந்தால் அவ்வளவு எளிதாக உச்சரித்திருக்க மாட்டாள் என்று. இருப்பினும் தன்னை அறியாமல் வார்த்தை வருகிறதென்றால் அவ்வழைப்பு எந்தளவிற்கு அவளின் அடி மனதில் வேர் விட்டிருக்க வேண்டும். அதுவே அவனின் இன்பத்திற்கு காரணம்.
வேகமாக அவளை நோக்கி ஓடியவன், கை பிடித்து நிறுத்தியிருந்தான்.
வயல்கள் கடந்து சாலையில் இருந்தனர்.
“விடுங்க!”
“முடியாது” என்றவன் “எப்போ கோபம் போகும்?” எனக் கேட்டான்.
“போட்ட சவாலில் முதலில் ஜெயிக்க பாருங்க” என்றவள் விடாப்பிடியாக அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டாள்.
“சரி சண்டை போட்டுகிட்டே லவ் பண்ணலாம்” என்றவன் அவளுடன் இணைந்து நடந்தான்.
“லவ்வெல்லாம் ஒன்னுமி…”
“ஹாங்… இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்.”
“நீங்க ரொம்ப பன்றீங்க!”
“இன்னும் ஒன்னுமே பண்ணல. இதுக்கேவா!”
“இப்போ என்ன வேணும்?”
“நீதான். நீன்னா, உன்னை சுற்றி எல்லாமே!”
…..
“சரி உன்கிட்ட நான் மறைச்சதுக்கு தான் இப்போ கோபமா?” இப்போதே பேசி முடித்திட வேண்டுமென பேசினான்.
“நீங்க எதுவும் சொல்ல வேணாம். இப்போ வந்து காரணம் சொன்னா நான் ஏத்துக்கணுமா? எனக்குள்ள எவ்வளவு வலி தெரியுமா. எங்க நீங்க எனக்கு கிடைக்காம போயிடுவிங்களோன்னு தூங்காம எவ்வளவு அழுதிருக்கேன் தெரியுமா? நீங்க யாருன்னு தெரியுற வரை நான் நானாவேயில்லை. உங்க மேல லவ் இருந்தும் சொல்ல முடியாம, அப்பாவுடைய ஆசையையும் நிறைவேத்த முடியாம போயிடுமோன்னு எத்தனை நாள் தேவையில்லாத பயம் எனக்கு. இதெல்லாம் உங்களால் தான். ஆனால் நான் எதுவுமே நடக்காத மாதிரி நீங்க சொல்லும் காரணத்தை அக்செப்ட் பண்ணிக்கிட்டு உங்கக்கிட்ட பேசனுமா?” என்று கோபமாக தன்னுடைய மனதிலிருப்பதைக் கொட்டியவள் மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனை அழுத்தமாகப் பார்த்திருந்தாள்.
அவனோ அலட்டிக்கொள்ளாது…
“ஐ லவ் யூ” என மொழிந்தான். கயல்விழியின் விழிகளை விழுங்கியவாறு.
அவனது பார்வை வீச்சில் குலைந்தவள், மொத்தமாக தன்வசம் இழந்தாள்.
அவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டு கோபத்தை பிடித்து வைத்திருந்தவளால் அதற்கு மேல் முடியாது போக…
“கோபப்பட கூட முடியல” என்று மெல்ல முணுமுணுத்தாள்.
“ஏனாம்?” அருகிலேயே நின்றவனுக்கு அவளின் மென் குரல் கேட்கத்தான் செய்தது.
“பதில் தெரிஞ்சிகிட்டே கேட்டா என்ன சொல்றதாம்.” இப்போது அவளிடம் அவன் கொண்ட காதல் மட்டுமே.
“நேரடியா சொல்லனும் அர்த்தம்.”
“முடியாது” என்றவள் திரும்பி நடக்க,
அவளை நெருங்கி தோளில் கை போட்டு தன்னோடு நெருக்கியவன்…
“ப்ளீஸ் டா. வன் டைம்” என கண்கள் சுருக்கி வினவினான்.
தன் தோளில் உரிமையாக கிடந்த அவனின் கரத்தை கீழ் கண்களால் பார்த்தவளின் மனதில் குறுகுறுப்பு. அவனின் முதல் தீண்டல். முதல் ஸ்பரிசம். காதல் கொண்டவளை என்னவோ செய்தது.
அவனின் கையிலிருந்த பார்வையை சற்று மேலே உயர்த்தி தனக்கு மிக நெருக்கமாக இருந்த பார்த்திபனின் முகத்தை பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. அவ்வளவு நெருக்கத்தில் அவன். விலக நினைத்தாலும் மனம் விரும்பியது.
பட்டாம்பூச்சியாய் படபடத்த இமைகளை மூடிக்கொண்டாள்.
அவனுக்குள் அவள் அடங்கி நின்ற காட்சி அழகோவியமாய்.
“கயல்.”
“ம்.” அவளுக்கு குரலே எழும்பவில்லை.
“வன் டைம் சொல்லும்மா?”
பார்த்திபன் அவ்வாறு கேட்டதும் தான் அவளுக்கு தாங்கள் இருக்கும் நிலையே புரிந்தது. அதுவும் சாலையோரம். யாராவது பார்த்துவிட்டால் என்கிற எண்ணம் தோன்ற, பட்டென்று அவனிடமிருந்து விலகி சுற்றி பார்வையை பதித்தாள்.
“யாருமில்லை.”
பார்த்திபன் சொல்லியதும், தாவணி முனையால் முகத்தை துடைத்தவள்…
“என்னை என்னவோ பன்றீங்க. உங்க பார்வையே சரியில்லை” என்று படபடத்தாள்.
“ஹேய் கயல் சில் டா. நான் தானே!”
“நீங்க மட்டும் அப்படியென்ன ஸ்பெஷல்.”
கயல் நடக்கத் தொடங்கியிருக்க அவளுக்கு இணையாக அவனும்.
“நீதான் சொல்லனும்.”
“தோணும் போது சொல்லுவேன்.”
“இப்போ தோணலையா?”
“விடமாட்டிங்களா?”
“கோபம் போயிடுச்சா?”
“இருந்தால் தானே போறதுக்கு.”
“அப்போ வேணுன்னு தான் சுத்தல்ல விட்டிருக்க.”
சத்தமில்லா சிரிப்பு அவளிடம்.
இருவருக்கும் இப்படி ஒருவருக்கொருவர் புரிந்தும் புரியாமல் பேசிக்கொள்வதும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
இணையாக நடந்தாலும் இடையிலிருந்த இடைவெளியை பார்த்த பார்த்திபன், கயலை நெருங்கி அவளின் கை விரல்களோடு தன் விரல்களை கோர்த்து இறுகப் பற்றிக்கொண்டான்.
அவனது உள்ளங்கையின் சூடு அவளின் தேகத்தோடு மெல்ல பரவி இதம் சேர்த்தது.
“யாராவது பார்த்திடுவாங்க” என்றவளும் அவனின் கையை விடுவிக்க முயற்சிக்கவில்லை.
“எத்தனை நாள் ஆசை தெரியுமா கயல்” என்றவன், “இப்படி உன் கைக்குள் என் கை கோர்த்து ஒரு வாக். நிறைய நாள் இமேஜின் பண்ணியிருக்கேன்” என்றவனது குரலில் அப்பட்டமான காதல்.
கயல் அவனை ஏறிட்டு முகம் பார்க்க…
“இந்த கண்ணு தான் கயல். உன்னை எனக்கு காட்டிக்கொடுத்துச்சு. ஐ லவ் இட் மோர்” என்றவன் பேச்சோடு அவளின் விழியில் இதழ் ஒற்றினான்.
கயல் அதிர்ந்து நின்றுவிட…
“இதுக்கே இப்படி ஷாக் ஆனா எப்படி பேபி. இன்னும் நிறைய லவ் பண்ணனும். எனக்குள்ள எவ்வளவோ இருக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.
அந்நொடி கயல் நினைத்தது ஒன்று தான்.
‘இவர் அளவுக்கு என்னால் காதலிக்க முடியுமா?’
“நோ பிரோப்ளேம் பேபி. உனக்கும் சேர்த்து நானே லவ் பண்ணிக்கிறேன்.”
கயல் மனதில் கேட்டுக்கொண்ட கேள்விக்கு பார்த்திபன் பதில் சொல்லியிருந்தான்.
அவள் அசையாது அவனை பார்த்தபடி அப்படியே நிற்க,
“எனக்கும் உன்னை இப்படியே பார்த்திட்டே இருக்க ஆசை தான். ஆனால் இது ரோடு பேபி” என்றான்.
அதில் தன்னுணர்வு பெற்றவள்,
“என்னை அடிக்கடி ப்ரீஸ் பண்ணிடுறீங்க” என்றாள்.
அவனோ அட்டகாசமாக சிரித்தான்.
அவனின் அந்த சிரித்த முகம் அவளின் இதயத்தில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ள இமைக்கமறந்து வெளிப்படையாக ரசித்தாள். அவன் சிரிப்பு நின்ற பிறகும் அவளின் ரசிப்பு நிற்கவில்லை.
“என்ன பேபி அத்தான் அம்சமா இருக்கனா?” கயலின் காதுக்கு அருகே குனிந்து கிசுகிசுப்பாகக் கேட்டான்.
தன்னைப்போல் அவளின் தலை ஆமென்று அசைந்தது.
“அப்போ இப்படி பார்த்துட்டே இருக்க போறீயா?”
“வாழ்க்கை முழுக்க.” இதழ் பிரித்து கூறியவள் இவ்வுலகிலேயே இல்லை.
“ஆனால் லவ் யூ சொல்ல மட்டும் மனசு வரமாட்டேங்குது” என்றவனின் ஏக்கமான குரலில் மீண்டவள்,
“உங்க பக்கத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்” என சொல்லி வேகமாக ஓடினாள்.
“கயல்” என்ற பார்த்திபனின் புன்னகை கலந்த அழைப்பு காற்றோடு கலந்தது.
“என்ன கயல் இப்படி ஓடிவர?”
முற்றத்தில் அமர்ந்திருந்த தேவராஜன் கேட்க,
“அது வந்து மாமா… ஒன்னுமில்லை” என அறைக்குள் ஓடிவிட்டாள்.
கயல் சென்ற இரண்டு நிமிடங்களில் பார்த்திபனும் பூரித்த முகத்தோடு வீட்டிற்குள் வர, தேவராஜன் அருகிலிருந்த மனைவியை அர்த்தமாகப் பார்த்தார்.
“என்ன மை சன் முகத்தில் ஒரு ஒளிவட்டம்” என்றார்.
தன் தாடையை தடவிக்கொண்டவன், “அப்படியா தெரியுது?” என்க அவனது பெற்றோர் ஒருங்கே ஆமென்றனர்.
“லவ் பண்ணா அப்படித்தான் இருக்குமாம்” என அசராது சொல்லியவன் அடுத்து அவர்கள் பேச இடமின்றி நகர்ந்துவிட்டான்.
இரண்டு நாட்களாக கயலின் கவலை முகத்தையும், பார்த்திபனின் ஏக்கம் சுமந்த முகத்தையும் பார்த்திருந்த இருவருக்கும் இப்போது தான் மனம் நிறைவாகியது.
****
இரவு நேரம்…
உணவிற்கு பிறகு மொட்டை மாடியில் நின்றிருந்த பார்த்திபன் அன்றைய நாளிற்கான நிகழ்வுகளை கேட்டபடி லிண்டாவிடம் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.
பால் கொடுப்பதற்காக பார்த்திபனின் அறைக்கு மேல் தளத்திற்கு வந்த கயல், அவன் அறையில் இல்லாததும் திரும்பி செல்ல முற்பட… மாடிபடியின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அவளும் மொட்டை மாடிக்குச் சென்றாள்.
பார்த்திபன் அவளுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தான்.
கயலின் கொலுசு ஒலியில் திரும்பியவனிடம் பால் தம்பளரை காட்டியவள் அதனை சுவற்றின் மீது வைத்துவிட்டு திரும்பிச் செல்ல…
“கயல் டூ மினிட்ஸ்” என்றான்.
அவன் காத்திருக்க சொல்லியதும் கீழே போகாது, சுற்று சுவரில் கைகளை ஊன்றி தூரத்து மலை முகட்டை இருளில் தேடியவளாக கயல் நின்றிட பேசி முடித்து அவளது அருகில் வந்தவன், சுவற்றில் குதித்து அமர்ந்தான். கயலை இடித்தவாறு.
பாலினை ஒரே மூச்சில் குடித்து முடித்து தம்பளரை வைத்தவன்,
“மருது யாரு?” எனக் கேட்டான்.
“அவனை பற்றி பேச வேணாம்.” கயலிடம் அப்படியொரு கோபம்.
“ஹேய் கூல். இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என்றவன் காலை மருதுவை டீ கடையில் பார்த்ததையும், அவன் சொல்லியதையும் கூறினான்.
“என்கிட்டவே வந்து அப்படி பேசினான். அதான் தெரிஞ்சிக்கக்கேட்டேன்” என்றவனிடம் மருதுவைப்பற்றி எப்படி ஆரம்பிப்பதென்று தான் கயல் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அவனது பெயரை பார்த்திபன் சொல்லிய நொடியே கயலிற்குள் ஒரு விறைப்புத்தன்மை தானாக வந்திருந்தது. அதனை பார்த்திபனும் உணர்ந்தே இருந்தான்.
அடுத்து பார்த்திபன் மருது சொல்லியதாக சொல்லவும் கயலின் உடல் வெளிப்படையாக நடுங்கவேத் தொடங்கிவிட்டது. சடுதியில் உடல் முழுக்க வியர்வை பெருகியது.
கண்கள் சொருக… பார்த்திபன் சுதாரிப்பதற்குள் அவன்மீதே சரிந்திருந்தாள்.
“கயல்… கயல்…” என்று பதற்றத்தோடு அவளின் கன்னம் தட்டியவன், அவளிடம் அசைவின்றி போகவும் தூக்கிக்கொண்டு தனதறைக்கு வந்து மெத்தையில் கிடத்தியவன். பூந்துவாலையை தண்ணீரில் நனைத்து, கயலின் முகத்தை அழுந்தத் துடைத்தான்.
அதன் பிறகே கண் விழித்த கயல் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பார்த்திபனை தாவி அணைத்துக் கொண்டாள்.
“என்னைவிட்டு போயிடாதீங்க அத்தான். எனக்கு பயமா இருக்கு” என்று அரற்றினாள்.
“கயல் இங்க பாருடா… நான் உன்னோடதான் இருக்கேன். உன்னைவிட்டு எங்கடா போகப்போறேன்” என்று பார்த்திபன் அவளை தேற்றுவதற்காக பேசிக்கொண்டே இருக்க… மீண்டும் மயக்கத்தில் விழுந்தாள் கயல்.
அவளை படுக்க வைத்தவன்… மங்கையை அழைத்துவர எழ, அவனின் கை கயலின் இறுகிய பிடியில் இருந்தது.
“என்னைவிட்டு போயிடாதீங்க அத்தான்” என்று மயக்கத்திலும் அரற்றினாள்.
இம்முறை நீரை வேகமாக கயலின் முகத்தில் அடித்து மயக்கத்தை தெளிய வைத்தான்.
எழுந்தமர்ந்த கயல் நிகழ் புரியாது மலங்க மலங்க விழித்திருக்க…
“எதுவும் சொல்ல வேணாம். நீ தூங்கு” என்றான் பார்த்திபன்.
“கீழப்போறேன்.”
“ஷ்யூர்.”
“ம்.”
செல்லும் கயலை பார்த்திபனின் விழிகள் துளைத்தன.
நள்ளிரவில் கயலின் அறைக்குள் நுழைந்த பார்த்திபன் அவளின் உறக்கத்தை உறுதி செய்த பின்னர் தான் தன்னுடைய அறைக்கு வந்து நித்திரையில் ஆழ்ந்தான்.
பார்த்திபனுக்கு தெரிந்தவரை கயல் தைரியமான பெண். அச்சம் என்பதே அறிந்திடாதவள். அப்படிப்பட்டவள் மருது என்ற பெயருக்கே இப்படி நடுங்குவது பார்த்திபனை யோசனையில் ஆழ்த்தியது.
காரணம் பெரிதாக இருக்க வேண்டுமென்று அவனது உள்மனம் கூறியது.
தேநீர் கடைக்காரர் மருதுவைப் பற்றி சொல்லிய போதே அவனுடன் கயல் சம்மந்தப்பட்ட விடயம் ஏதோவொன்று இருப்பது பார்த்திபனுக்கு புரிந்தது. அவர் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் விட்டதாகத்தான் இப்போது தெரிந்தது.
அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியுமென்றாலும், கயல் விடயம் அவளே சொல்ல வேண்டுமென்று நினைத்தான்.
இருப்பினும்… மீண்டும் கேட்டாள் எங்கே பதட்டம் கொள்வாளோ என தயங்கினான்.
இதே யோசனையில் கட்டிலில் பார்த்திபன் அமர்ந்திருக்க…
காலை எழுந்ததும் அவனிடம் வந்தாள் கயல்.
கதவினை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள் கைகளை பிசைந்துகொண்டு அவனின் முகம் பாராது நின்றிருந்தாள்.
கயலின் நிலையை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
‘நடந்த ஒன்றை வெளியில் சொல்ல முடியாது உள்ளுக்குள்ளே வைத்து மருகுகிறாள்.’ தன்னவளை நினைத்து வேதனையின் சாயல் பார்த்திபனின் முகத்தில்.
கயலின் கையை பிடித்து தனகருகில் அமர வைத்தவன், அவள் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்தான். கயலின் முகம் காண வசதியாக.
கயலின் முகத்தை தனது கைகளால் அழுந்த துடைத்து, நெற்றியில் புரண்ட முடியை காதோரம் சொருகியவன்…
அவளது கைகளை தன்னுடைய கைகளுக்குள் பொத்திக்கொண்டவனாக,
“நீயெதுவும் சொல்ல வேண்டாம் பேபி. உன்னை வருத்துற எந்தவொரு விஷியமும் எனக்குத் தெரிய வேண்டாம்” என்று அவளுக்காக சொல்லிய போதும் அது என்னவென்று அறிந்து அதனை கலைந்திட வேண்டுமென்று அவனின் மனம் துடித்தது.
“உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்லை அத்தான். எப்படி சொல்றது…” தடுமாறினாள்.
“ரிலாக்ஸ் பேபி. உனக்கு சொல்லனுன்னா மெதுவா சொல்லிக்கலாம். நீ டென்ஸ்ட் ஆகாத” என்றவன் அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்த கொடுத்தான்.
குடித்து முடித்தவள் கையிலிருந்த போத்தலை வாங்கி வைத்தவன்,
“வயலுக்கு போகலையா?” எனக் கேட்டு அவளை திசைத்திருப்ப முயன்றான்.
“போகனும்” என்றவளது விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
“சரி வா போகலாம்” என்று எழுந்தவன் அவளின் நடுக்கத்தை உணராமல் இல்லை.
எழுந்தவனை எழ விடாது அமர வைத்தவள்,
“நான் இங்க சாஞ்சிக்கவா?” என்று பார்த்திபனின் தோளைக் காட்டி கேட்டிருந்தாள்.
கயல் கேட்டதுதான் தாமதம், கயலை தன்னுடைய நெஞ்சுக்குள் அவளின் தலையை அழுத்தி புதைத்துக் கொண்டான். மெல்ல கயலின் பின்னந்தலையை தடவிக்கொடுத்தான். தானாக அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.
சில கணங்களுக்கு பின்னர் கயல் சொல்ல சொல்ல… பார்த்திபனின் உடல் இறுக்கம் பெற்றது. நரம்புகள் புடைத்து பார்க்கவே ஆக்ரோஷமாகக் காட்சியளித்தான்.