பார்த்திபனின் கயல்விழியாள் 44

அத்தியாயம் 🌾 44 :

கரிய காரிருள் சூழ் நேரம்…

அடர்ந்த மரங்களின் கிளைகள் காற்றில் உரசும் பேரலை சத்தமும், பெரிய பெரிய ராட்சத புதர்களுக்கு நடுவிலிருந்து ஒலிக்கும் நாய்களின் ஓலமும், நரிகளின் ஊளையும் அவ்டத்தை மேலும் பயங்கரமாகக் காட்டியது.

ஆங்காங்கு எரியும் பிண்டங்களும்… மணல் மேடுகளும்… சுற்றி சுழலும் புகை மண்டலமும் அவ்விடத்தை மயானம் என்று பறைசாற்றியது.

அவ்விடத்தின் நடுவில் ஓங்கு தாங்காக உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் பருத்த தண்டில் கட்டப்பட்டிருந்த மருதுவிற்கு உடல் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது.

என்ன தான் தைரியம் உள்ளவர்களாக இருந்தாலும்… கேட்டதும் பயம் கொள்ளச் செய்யும் ஓரிடம் மயானம். அதன் மையத்தில் ஆளரவமற்று தனித்து விடப்பட்டோரின் நிலையை சொல்லவும் வேண்டுமோ?

திடீரென கேட்ட கொலுசின் ஒலி மருதுவின் சப்த நாடியையும் அடக்கி ஒடுக்கியது.

ஊதுபத்தி மணத்தோடு சேர்ந்து மல்லிகையின் மணமும் காற்றில் கலந்து நாசி நுழைய உயிர் போய் வந்தது.

படங்களில் பார்த்த கோரமான பேய் உருவங்களும், கிராமத்தில் சொல்லப்பட்ட பல கட்டுக்கதைகளும் அந்நேரம் அழையா விருந்தாளியாக நினைவில் நர்த்தனம் ஆடிட… மேலும் கிலி பிடித்தது அவனுக்கு.

இரவு நேர காவலுக்கு வயலுக்கு சென்ற மருது… அங்கிருந்த கயிற்று கட்டிலில் படுத்தது தான் நினைவு இருந்தது.

நடு இரவில் கேட்ட அலறல் சத்தத்தில் கண் விழித்தவன் தானிருக்கும் இடம் அறிந்து தப்பிக்க வழியின்றி கட்டப்பட்டிருக்க தன்னிலை குறித்து எழுந்த பயத்தில் காப்பாற்ற வேண்டி கத்திக் கொண்டிருந்தான்.

சட்டென்று அவன் முகத்திற்கு நேரே மரத்தின் உச்சியிலிருந்து கயிறு ஒன்று விழ… அதன் நுனியில் கட்டப்பட்ட விரலின் நீண்ட நகத்தில் ரத்தம் சொட்டியது. அச்சத்தில், இருந்த நிலையில் அப்படியே மயங்கியிருந்தான்.

சில நிமிடங்களில் இரண்டு உருவம் அவனைத் தூக்கிச் சென்றது.

காலையில் மருது கண் விழிக்கும்போது இரவு படுத்த கட்டிலிலேயே படுத்திருந்தான்.

எழும்போதே அவனிடம் ஒரு திடுக்கிடல். மனதில் பதிந்த திகில் அப்படி.

‘அப்போ கண்டதெல்லாம் கனவா?’ தன்னைத்தானே வலிக்கும் மட்டும் கன்னத்தில் அறைந்து சுயம் ஆராய்ந்தான்.

‘இல்லையே எல்லாம் கண் முன் நடந்த மாதிரியே இருக்கே!’ குழம்பித் தவித்தவனுக்கு தலை வின்வினென்று தெறித்தது.

அன்றைய நாள் முழுக்க அதிலே உழன்றான்

யாரோ அவனுடன் இருப்பதாகவே மனதால் நினைத்தான். சிறிய கல் இடறினால் கூட கண்ணுக்குத் தெரியாத ஒன்று தள்ளிவிட்டதாகவே நினைத்தான்.

மருதுவிற்கு பேய் என்ற வார்த்தையே அவ்வளவு பயம் கொடுக்கும். எவ்வளவு தைரியமான ஆளாக இருந்தாலும் பயம் கொடுக்கும் விடயமென்று ஒன்று அவர்களுக்கும் இருக்கும். அந்த பயம் அவனை குலைத்திருந்தது. மொத்தத்தில் இரவு நடந்தது அவனது ஆழ் மனதை பாதித்திருந்தது.

“அவனுக்கு இதெல்லாம் கம்மி மச்சான்…”

நடந்ததை நினைத்து சத்தமாக சிரித்துக்கொண்டிருந்த சிவாவிடம் பார்த்திபன் கூறினான்.

“ஆனால் இதுக்கே அவன் இந்த அலறு அலறுறான். மாட்டு சங்கிலி சத்தத்துக்கும் கொலுசு சத்தத்துக்கும் வித்தியாசம் தெரியல. என்னா கத்து. இதுல ஹைலைட்டே அவன் மயக்கம் போட்டது தான். அவன் பயத்தில் மயங்கிடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை மாப்ள.”

நடந்ததை சொல்லி சொல்லி சிவா சிரித்துக் கொண்டிருந்தான்.

“இவனெல்லாம் எதுக்கு கெடா சைசில் மீசை வச்சிருக்கான்” என்ற சிவா, “அவனை விட்டிருக்கக்கூடாது மாப்ள. இன்னும் நாலு நாள் வச்சு செஞ்சிருக்கணும்” என அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.

“எனக்கும் வச்சு செய்யத்தான் ஆசை மச்சான். தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கனும். எதுக்காகன்னு காரணம் தெரியாமல் அவன் அலையனும். அதான் விட்டேன்” என்ற பார்த்திபன், “அவனுக்கு பேய்ன்னா பயன்னு நீ சொன்னப்போ கூட அவன் இந்தளவுக்கு பயப்படுவான்னு நான் எதிர்பார்க்கல” என்ற பார்த்திபனுக்கு மருதுவின் மீது கோபம் கொழுந்துவிட்டு கனன்றது.

“இது ஜஸ்ட் சேம்பிள் தான். அவனை மரண அடி அடிக்கனும். எழுந்துக்கவே முடியாத அளவுக்கு அடிக்கனும்” என்ற பார்த்திபன் சிவாவை கூட்டிக்கொண்டு காரில் கிளம்பினான்.

மருது மாலை யாருமற்ற ஊருக்கு ஒதுக்கு புறமாக நடந்து சென்று கொண்டிருந்தான். காலடித் தடங்கள் அவனை பின் தொடர்வதாக உணர்ந்தவன்… தன்னுடைய நடையை எட்டிபோட்டான்.

சில அடிகளில் பின்னால் திரும்பி பார்த்திட…

தூரத்தில்… அதிவேகத்தில் கார் ஒன்று வருவது தெரிந்தது.

காருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றவனின் பார்வை மட்டும் சுற்று புறத்தை அலசியது. இரவில் ஏற்பட்ட அனுபவம் மனதை விட்டு நீங்காது… அவனை இம்சித்தது. எதையும் அவனால் ஒன்றி செய்ய முடியவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவனை அருகில் உரசியவாறு நெருங்கிய காரிலிருந்து இரும்பென இரு கரங்கள் அவனை இழுத்து உள்ளுக்குள் சுருட்டிப்போட்டது.

பார்த்திபன் காரினை செலுத்திக்கொண்டிருக்க… சிவா மருதுவை தூக்கியிருந்தான்.

இருவருமே முகத்தை மறைத்தவாறு கைக்குட்டையால் கட்டியிருக்க… அவர்கள் யாரென்று மருதுவிற்கு தெரியவில்லை.

திமிறிய மருதுவின் கரங்கள் இரண்டும் சிவாவிடமிருக்க… ஏற்கனவே பயத்தால் சோர்ந்திருந்தவனால் சிவாவை எதிர்க்க முடியவில்லை. சிவாவின் பிடி உடும்பென இருக்க… மருது அடங்கிப்போகும் நிலை.

“டேய் யாருடா நீங்க?”

ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்த பார்த்திபன் பின்னால் திரும்பிய வேகத்தில் மற்றொரு கையால் மருதுவின் முகத்தில் ஒரு குத்து விட்டிருந்தான்.

அடி பலமாக விழுந்துவிட்டது போல,

மருதுவின் உதடு கிழிந்து தொங்கியது.

“இப்போ எதுக்குடா அடிச்ச…?”

“என்னது திரும்பவும் டா’வா” என்ற பார்த்திபன் இம்முறை மருதுவின் மூக்கை உடைத்திருந்தான்.

“டா சொன்னத்துக்கா இந்த அடி?” என்று மருது அழ…

“டா சொன்னதுக்கே அடி இடி மாதிரி வருதே… நீ செஞ்சதுக்கு?” என்று ராகமாக இழுத்த சிவா தலையை உலுக்கிக்கொண்டான்.

“அப்படி என்ன நான் பண்ணேன்.” அப்பாவியாகக் கேட்டான் மருது.

“இன்னொரு குத்து ஓங்கி குடு மாப்ள… என்னா பண்ணேன்னு கேட்குறான். எவ்வளவு தைரியம்.”

“அங்க நம்ம இடத்துக்கு போய் பார்த்துக்கலாம் மச்சான்.”

“நீங்க ரெண்டு பேரும் மாமா மச்சானா?” ஜாக்கிரதையாக முகத்தை மூடிக்கொண்டு கேள்வி கேட்டான்.

“அதை தெரிஞ்சு நீயென்ன பண்ணப்போற” என்ற பார்த்திபன் மருதுவின் வயிற்றிலேயே ஓங்கி குத்தியிருந்தான். வலியில் சுருண்ட மருது, கண்கள் சொருகி சீட்டில் சாய்ந்திருந்தான்.

“எவ்வளோ கேள்வி கேட்குறான்” என்ற சிவா, “இந்த கனம் கனக்குறான். தீனி நிறைய திண்பான் போலிருக்கு” என்றதோடு…

“இவனை கொண்டு போய் என்ன பிளான் மாப்ள?” எனக் கேட்டான்.

“போனா தெரிஞ்சிடும்” என்ற பார்த்திபன் வந்தது என்னவோ அவர்களது பண்ணை ஓட்டு வீட்டிற்கு தான்.

“அச்சச்சோ இங்கையா?” எனக்கேட்ட சிவா, “கயலுக்கு தெரிஞ்சிடுமே… அப்புறம் நம்மள காப்பாத்தா ஒருத்தர் வேணும்” என அலறினான்.

“இவனை இங்க வைக்கிறது தான் சேஃப்” என்ற பார்த்திபன், மருதுவின் மயக்கத்தை உறுதி செய்துகொண்டு காரிலிருந்து இறங்கி சுற்றி நோட்டம் விட்டான்.

மாலை நேரம் என்பதால் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் எல்லாம் கலைந்திருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமில்லை.

“நீ போய் அந்த நெல் மூட்டை அறையை திறந்து வை சிவா” என்ற பார்த்திபனிடம் தன் அதிர்வை அப்பட்டமாகக் காட்டினான் சிவா.

“நிலவரையா?”

“ஆமா.” பார்த்திபனிடம் சிறிதும் இலக்கம் இல்லை.

“மாப்ள கொஞ்சம் யோசிடா… அது பூமிக்கடியில் இருக்கு. காற்று அவ்வளவா இருக்காது. மூச்சு முட்டியே செத்துப்போய்டுவான்.”

சிவா எவ்வளவோ எடுத்து சொல்லியும் பார்த்திபன் தன்னிலையில் நின்றான்.

“அவன் செத்துப்போயிட்டா பெரிய பிரச்சனை ஆகிடும்.”

“எனக்கு அதான் வேணும். அவன் சாகணும்” என்ற பார்த்திபனிடத்தில் அப்படியொரு கோபம். முகம் ரத்தமென சிவந்திருந்தது.

பார்த்த சிவாவுக்கே அச்சம் எழ, எதுவும் சொல்லாது பார்த்திபன் சொல்லியதை செய்தான்.

மீண்டும் ஒருமுறை சுற்றுப்புறத்தை அலசி,

கார் கதவை திறந்தவன், அனாயசமாக மருதுவைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

நிலவரை திறந்த சிவாவுக்கு அதிர்ச்சி…

அவ்விடத்திலிருந்த விதை நெல் மூட்டைகள் மற்றும், பிற தானிய விதைகள், காய்கறி விதைகள் அடங்கிய மூட்டைகள் யாவும் அகற்றப்பட்டு காலியாகக் காணப்பட்டது. நடுவில் ஒரே ஒரு மர நாற்காலி மட்டும் கிடந்தது.

அழகர் விதைகளை சேமிப்பதற்காக அவ்வீட்டிற்குள் பூமிக்கு கீழே அவ்வறையை பயன்படுத்தி வந்தார். கயலும் அதை மாற்றாது அங்கேயே விதைகளை பாதுகாத்து வைக்க உபயோகித்தாள்.

ஆனால் இப்போது அவ்வறை வெறிச்சோடி காணப்பட்டது.

“எப்போ இந்த வேலையை பார்த்தாங்க தெரியலையே… நானும் கூடவே தானே இருந்தேன்” என்று முணுமுணுத்த சிவாவின் பேச்சு கேட்டாலும் அதனை பார்த்திபன் கண்டுகொள்ளவில்லை.

“செம ஸ்ட்ரென்த்… அவனை என்னால் என்மேல் சாய்த்துக் கொண்டிருக்கவே முடியல” என்று பார்த்திபன் ஒற்றை தோளில் அவனை போட்டு வந்ததை பார்த்து அதிசயத்தான் சிவா.

ஏணி வடிவில் மரத்தாலிருந்த படிகளில் இறங்கி நிலவரைக்குள் சென்ற பார்த்திபன் இருக்கையில் அவனை உட்கார வைத்து சங்கிலியால் நன்கு இறுகக் கட்டினான்.

பார்த்திபனின் உயரத்திற்கு தான் அவ்வறை இருந்தது. அவனின் முடி மேல் தளத்தை உரசியது.

அறையை பார்வையால் சுற்றியவன், கையோடு கொண்டு வந்திருந்த சிறு கடப்பாரையால் தலைக்கு மேல் வலது பக்கமாக ஒரு அடி நீளத்திற்கு சுவற்றை கொத்தினான்.

இப்போது கீற்று போல் மங்கலாக வெளிச்சம் உள்ளே எட்டி பார்த்தது.

“இது போதும்” என்ற பார்த்திபன் மேலே ஏற,

“காத்து இருக்காது மாப்ள” என்று திணறினான் சிவா.

“அதுக்குத்தான் இது” என்று தன்னால் சுவற்றில் ஏற்பட்ட ஓட்டையை காண்பித்த பார்த்திபன்,

“இது வழியா எவ்வளவு காற்று வருதோ… அதை மட்டும் அவன் ப்ரீத் பண்ணால் போதும்” எனக்கூறி மேலே ஏறிவிட்டான்.

கட்டப்பட்டிருந்த மருதுவையும், அந்த சிறு ஓட்டையையும் மாறி மாறி பார்த்தபடி… எச்சிலைக்கூட்டி விழுங்கியவாறு சிவா அங்கேயே நின்றிருக்க…

“நீயும் அவனுக்குத் துணையா இருக்கப்போறியா என்ன” என்ற பார்த்திபனின் குரலில் அடித்து பிடித்து மேலேறியிருந்தான் சிவா.

பார்த்திபன் தரை தளத்திலிருந்த நிலவரையின் கதவை இழுத்து மூடி இரும்பு பூட்டினால் பூட்டியவன் சாவியை தன்னிடம் பத்திரப்படுத்தினான்.

“சாவியை என்கிட்ட கொடுங்க.” சிவா.

“எதுக்கு?”

“அவனுக்குத் தண்ணி சாப்பாடெல்லாம் நேரத்துக்கு கொடுக்க வேண்டாமா?”

“அப்படியே ஜூஸ், இளநீர் எல்லாம் கொண்டு போயேன்” என்ற பார்த்திபன், “அவனையென்ன பிக்னிக்கா கூட்டி வந்திருக்கோம்” என்றதோடு… “என்னை கேட்காம உன் பார்வைக்கூட அந்த கதவில் படக்கூடாது” என்றான்.

கிட்டத்தட்ட சிவாவுக்கு பார்த்திபன் மிரட்டியது போல் தான் இருந்தது.

கிணற்று மேட்டில் சென்று அமர்ந்த பார்த்திபன்… இன்று கரும்பு ஊனிய வயல்களைப் பார்த்திருந்தான்.

அவனுக்கு பின்னால் தொடர்ந்த சிவா,

“உங்களை ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன். இப்படி நாயகன் கமல் மாதிரி இருப்பீங்கன்னு தெரியாது” என்றான்.

சிவா பார்த்திபனை ஆன்ட்டி ஹீரோ என்று சொல்வது பார்த்திபனுக்கு புரியவில்லை.

“என்னுடைய பிஸ்னெஸில் இதெல்லாம் சாதாரணம் சிவா. நாம் அங்க வில்லனா இல்லைன்னா நம்மை மிதித்து நசிக்கிடுவாங்க” என்றவன், “இதெல்லாம் உனக்கு புரியாது” என்றான்.

சில நிமிடங்களுக்கு பின்னர்…

“பிளான் என்ன?”

“என்ன?”

“மருதுவை கொண்டு வந்து கட்டிப்போட்டாச்சு… அடுத்து என்ன?”

“நாலு நாளுக்கு அப்புறம் அவனை வெளிவிடனும்.” கூலாகக் கூறினான் பார்த்திபன்.

“அப்போ அதுவரை…?”

“எல்லாமே சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும் மச்சான்” என்ற பார்த்திபன், “நான் சாப்பிட்டுட்டு உனக்கும் சாப்பாடு கொண்டு வரேன்” என்றவனாக வீட்டிற்கு சென்றான்.

சிவாவிற்கு வீட்டிற்குள் செல்லவே பயமாக இருக்க திண்ணையோடு இருந்து கொண்டான்.

நன்கு இருள் சூழ்ந்த பின்னரே மருது கண் விழித்தான்.

இருக்குமிடம் எதுவென்று தெரியவில்லை. எதற்காக கடத்தப்பட்டோம் தெரியவில்லை. பித்துப்பிடித்த நிலையில் அவன்.

நா வறண்டிருந்தது…

தொண்டை தண்ணீருக்காக தவித்தது.

முதலில் இருளை பார்த்து தடுமாறியவனின் விழிகள் மெல்ல இருளுக்கு பழகியிருக்க… சுற்றி பார்த்தான். அவனைத் தவிர சிறு எறும்பு கூட அங்கில்லை.

நேரம் கூடிக்கொண்டே போக… முன்தின இரவு நினைவில் தோன்றி மருதுவை பயம் கொள்ள செய்தது. பயம் மனதில் ஏறி உட்கார… அவனின் மொத்த திடமும் காணாமல் போனது.

நொடிக்கு நொடி அவனின் பயம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

கத்தினான்… கதறினான்…

தன்னை விடுவிக்க சொல்லி ஒவ்வொரு நாழிகையையும் கடக்க முடியாது கடந்தான்.

அந்த இருளின் நிசப்தத்தில் மருதுவின் அலறல் கேட்கத்தான் செய்தது. சிவா காதில் பஞ்சினை வைத்துக்கொண்டு உறங்க முயன்றான். உறக்கம் வந்தால் தானே!

இதே நிலை தான் மருதுவிற்கு.

இரண்டு நாட்கள் கடந்திருந்தன.

நள்ளிரவில் வரும் பார்த்திபன் சிவாவை அனுமதிக்காது தான் மட்டும் சென்று மருதுவை பார்ப்பான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து தான் வெளியில் வருவான்.

வரும்போது அவன் விரல்களிலெல்லாம் ரத்தம் படிந்திருக்கும்.

அந்நேரம் சிவாவுக்கே பார்த்திபனை காண அரண்டு வரும். பயத்தில் ஒன்றும் கேட்டுக்கொள்ள மாட்டான்.

மூன்றாவது நாள் மெல்ல தன் பயத்தை விழுங்கிய சிவா பார்த்திபனிடம்…

“இன்னைக்காவது அவனுக்கு சாப்பாடு கொடுக்கலாமே” என்க,

“கயலுக்கு அவன் பண்ணதுக்கு இதெல்லாம் போதாது” என்றவன், “அவன்மீது இரக்கம் வரும்போதெல்லாம் கயலை நினைத்துப்பார்” என்றான்.

************

அன்றைய இரவு…

மருதுவின் கத்தல் அதிகமாக இருந்தது.

“இப்படி பண்றதுக்கு என்னை கொன்னுடு” என்று அழுகையுடன் அவன் கத்திய கத்தலில் சிவாவிற்கு நெஞ்சு வற்றிவிட்டது. உறங்க முடியாது புரண்டு படுத்தவன் எழுந்து கயலின் வீட்டிற்கு சென்றுவிட்டான்.

“என்னடா இப்போதான சாப்பாடு கொடுத்துட்டு வந்தேன்” என்ற பார்த்திபனிடம், “என்னால அங்கு இருக்க முடியாது. எனக்கு பயமா இருக்கு” என்றவன் வீட்டிற்குள் சென்று தாழ்வாரத்தில் கழுத்தில் கிடந்த துண்டை விரித்து படுத்துவிட்டான்.

“சரி நானும் வரேன் வா போகலாம்.” பார்த்திபன் அழைத்ததை சிவா காதிலே வாங்கவில்லை.

‘என்னா கத்து கத்துறான்’ என்று மனதிற்குள் மருதுவின் அலறலை எண்ணியவனாக கண்களை மூடிக்கொண்டான்.

“இன்னைக்கு என்ன புதுசா பயம்” கேட்ட மங்கைக்கு பதில் சொல்லாது திரும்பிப் படுத்துக்கொண்டான்.

“அய்யோ அண்ணா இங்க ஏன் படுக்குறீங்க? உள்ள போய் படுங்க” என்று கயல் ஒரு அறையை காட்டிட…

“எனக்கு இதுதான் வசதி” என்றவன் எழவேயில்லை. எங்கே எழுந்தால் பார்த்திபன் தன்னை அங்கு இழுத்துச் சென்றிடுவானோ என்கிற பயம்.

“அவன் தூங்கட்டும். அங்க காவலுக்கு நான் போறேன்” என்ற பார்த்திபன் பண்ணைக்கு சென்றுவிட… அடுத்த அரை மணி நேரத்தில் கயலும் அங்கு சென்றிருந்தாள்.

கயல் அங்கு வந்த சமயம் பார்த்திபன் வீட்டை பூட்டிக் கொண்டிருந்தான். அவனது கை விரல்களில் எல்லாம் ரத்தம்.

பூட்டி விட்டு திரும்பியவன் கயலை எதிர்பார்க்கவில்லை.

உடனடியாக கைகளை முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டவன்,

“நீயெதுக்கு வந்த?” என்று கோபமாகக் கேட்டான்.

இரண்டு நிமிடத்திற்கு முன்னால் கயல் வந்திருந்தால் அவன் செய்தது தெரிந்திருக்கும். அதனால் எழுந்த கோபமே இது.

பார்த்திபன் கோபம் கொண்டதும் கயலின் முகம் சட்டென்று சுருங்கியது. தலை கவிழ்ந்து நின்றவளின் கண்கள் கலங்கியது.

அந்நொடியை பயன்படுத்தியவன் அருகில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் கைகளை கழுவி இருந்தான்.

கயல் அப்படியே தான் நின்றிருந்தாள். அவளுக்கு அருகில் சென்றவன்,

“சாரிடி… இந்த நேரத்தில் தனியா வந்திருக்கியேன்னு கொஞ்சம் கத்திட்டேன்” என்றான்.

“நான் இது மாதிரி பலமுறை இங்க வந்திருக்கேன். ஒருநாளும் இருட்டுன்னு நினைச்சு பயந்ததில்லை” என்றவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.

அவனின் அக்கறை புரிய சமாதானம் ஆகியிருந்தாள்.

“சரி இப்போ எதுக்கு வந்த?”

“உங்களை பார்க்கணும் போலிருந்துச்சு” என்றவள் அங்கிருந்த கயிற்று கட்டிலில் அமர, அவனும் இடைவெளி விட்டு அமர்ந்தான்.

“வீட்டில் பார்த்ததான!”

“சரியான ட்யூப் லைட்.”

“நீ சொன்னது கேட்டுச்சு.”

“என்ன கேட்டுச்சு… ஹாங்… லவ் பண்ணுன்னு எவ்வளவு கெஞ்சுனிங்க. இப்போ ஓகே சொன்னதும் கண்டுக்கிறதே இல்லை” என்று புகார் வாசித்தாள்.

“அதுக்கு?”

“அதான் இப்போ நிறைய பேசலாம் வந்தேன்” என்றவளின் மடியில் தலையை வைத்தவன் “பேசு” என கண்களை மூடிக்கொள்ள…

அவனின் சிகையை கோதிக்கொண்டே…

“அந்த… அந்த…”

“என்னடி திக்கி திணறிட்டு இருக்க?”

“மருதுவை நீங்க ஒன்னும் செய்யலையே?” என மெல்ல கேட்க, அவன் வேகமாக அவளின் மடியிலிருந்து எழுந்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top