பார்த்திபனின் கயல்விழியாள் 45

அத்தியாயம் 🌾 45 :

பார்த்திபனின் விழிகள் கயலின் மீது கூர்மையாகப் படிந்தது.

“அது… மருதுவை காணோமாம்.”

“அதுக்கு?”

“இல்லை…”

“என்ன இல்லை இருக்கு. கேட்க வந்ததை ஓப்பனா கேளுடி” என்று அதட்டினான்.

“நான் உங்ககிட்ட மருதுவைப் பற்றி சொன்ன அடுத்த நாளிலிருந்து தான் அவனை காணோம் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…”

“சோ, நான் தான் ஏதும் பண்ணியிருப்பேன்னு உனக்கு சந்தேகம்… ம்?”

முதலில் ஆமாமென்று மேலும் கீழும் தலையாட்டியவள் அவன் முறைப்பது கண்டு இல்லையென இட வலமாக அசைத்தான்.

அவளின் பாவனையில் சத்தமில்லாது இதழ் பிரித்தவன்…

“லவ் யூ டி” என்றான்.

“நான் கேட்டதுக்கு இது பதிலில்லை” என்றவள் முகம் திருப்பிக் கொண்டாள்.

“கயல் இங்க பாரு.”

“முடியாது. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.”

வலுக்கட்டாயமாக கயலின் முகத்தை தன் பக்கம் திருப்பியவன்…

“இப்போ சொல்லுறதுதான் கயல். திரும்பத்திரும்ப சொல்ல வைக்காதே” என்றவன் அவளின் கண்களை பார்த்துக்கொண்டே,

“இதுக்கே முகத்தை திருப்பினா என்ன அர்த்தம்? இன்னும் நம்ம வாழ்க்கை போக வேண்டிய தூரம் ரொம்ப நீளமானது. அதில் என்ன வேணாலும் நடக்கலாம். இருவருக்கும் சண்டை கூட வரும். ஆனால் அப்போலாம் இந்த மாதிரி முகத்தை திருப்பக்கூடாது. எதுவாயிருந்தாலும், நானே தப்பு பண்ணாலும் என் முகத்துக்கு நேரா தான் கேட்கணும்” என்று அழுத்தமாகக் கூறியவன், “என்னை பார்க்க பிடிக்கலையா?” எனக் கேட்டான்.

பதறியவள்… “அய்யோ இல்லை” என்றதோடு, “நீங்க பேச்சை மாத்துறீங்க” என்றாள்.

“நீ கேட்டு நான் பதில் சொல்லலன்னா எனக்கு சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம்.”

“அப்போ… மருதுவை… நீங்க…?”

ஒவ்வொரு வார்த்தையாக தடுமாறினாள்.

“இருக்கலாம்” என்றவன் தோள் குலுக்களோடு எழுந்து கொண்டான்.

“நீங்க பொய் தானே சொல்றீங்க?” அவளால் அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை, அதே சமயம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பின்னே அவள் மீது அவன் கொண்ட காதல் அப்படிப்பட்டதே. அவளுக்காக அவனின் வசதி தொழில் அனைத்தும் விட்டுவிட்டு வந்திருப்பதிருப்பதோடு, அவளின் காதலுக்காக அவனுக்குரிய இடத்திலிருப்போருக்கு இயற்கையாகவே இருக்கும் ஈகோவெல்லாம் பாராது அவளிடம் கெஞ்சி திரிந்ததிலேயே தெரிந்து கொண்டாளே.

அதனால் தான் அவளுக்காக இதனை செய்திருப்பானோ என்று சந்தேகம் கொண்டு கேட்டாள்.

ஆனால் அவன் இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்வான் என்று அவள் நினைக்கவில்லை.

“எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்லமாட்டேன். அதுவும் உன்கிட்ட… சொல்ல முடியாது” என்றவன், “அப்போ நீங்க யாருன்னு சொல்லாம மறைச்சீங்களேன்னு நீ கேட்கலாம். உண்மையை நானா மறைக்கல. நீ என்னை தெரிஞ்சிக்க முயற்சிக்கலங்கிறதே சரியா இருக்கும். நீ என்னை தெரிஞ்சிக்க நினைக்கிறேன்னு நினைச்சிருந்தாலே என்னைப்பற்றி எல்லாம் நான் சொல்லியிருப்பேன். நான் யாருன்னு நீ கேட்கல… சோ, நான் யாரும் என்னைப்பற்றி உன்னிடம் சொல்லக்கூடாது சொன்னேன்” என்று அதற்கும் சேர்த்து விளக்கம் கொடுத்திருந்தான்.

“இது தப்பு அத்தான்.”

“சோ வாட்?”

“அவனை எங்கு வச்சிருக்கீங்க?”

….

அவனிடம் பெருத்த மௌனம்.

“விட்டுடுங்க.”

“முடியாது.”

“ஏன்?”

“அதுக்கு அவன் உயிரோடு இருக்கனுமே!”

“அத்தான்.” பண்ணையே அதிரும் அளவிற்கு அதிர்ந்திட்டாள்.

“சில் பேபி” என்று அவளின் கழுத்தைச் சுற்றி கைபோட்டு தன்னோடு இறுக்கியவன்…

“என் கயலை அழ வைத்தவனை நான் சும்மா விட்டுடுவேனா?” எனக் கேட்டவன் அவளின் உச்சந்தலையில் முத்தம் வைத்தான்.

“என்னயிருந்தாலும் இது ரொம்ப தப்பு. தண்டிக்க நாம யாரு?” எனக் கேட்டவளின் குரல் தழுதழுத்தது. கன்னம் தொட்ட கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“அவனுக்காக உன் கண்ணீரை வேஸ்ட் பண்ணாத அம்முலு.”

“நான் அவனுக்காக அழல… உங்களை நினைச்சுதான் அழறேன்” என்று விசும்பினாள்.

“நான் தான் உன் பக்கத்திலே இருக்கனே!” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு தோன்றியது ஒன்று தான்.

‘என்ன மேக் இவங்க!’

தான் செய்திருக்கும் காரியத்தின் விபரீதத்தை உணராது இருக்கின்றானேயென்று ஆயாசமாக இருந்தது.

“நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கு புரியலையா?” எனக்கேட்ட கயலின் கண்ணீர் இப்போது நின்று இருந்தது.

“நீங்க பண்ணதுக்கு பெயர் ஆள் கடத்தல், கொலை” என்றவள் அவனிடமிருந்து விலகி நின்றாள்.

“எனக்கு சரின்னு தோணுங்கிறதை மட்டும் தான் நான் செய்வேன்.”

“அப்போ நீங்க பண்ணது தப்பில்லையா? ஒரு உயிரை கொல்லுறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?”

“இந்த பாவம் அநியாயம் எல்லாம் எனக்குத் தெரியாது கயல். அவன் என் பொண்டாட்டியை அசிங்கப்படுத்துவான், நான் அவனை ஒன்னும் செய்யாம கொஞ்சனும் சொல்றியா?”

“இன்னும் பொண்டாட்டி ஆகல.”

“நீதான் என் வாழ்க்கைன்னு நான் முடிவு பண்ண அந்த நொடியே என் பொண்டாட்டி ஆகிட்ட.”

இருவருக்கும் விவாதம் காரசாரமாக இருந்தது.

“உங்க தப்பு உங்களுக்கு புரியலையா?”

“நான் தப்பே பண்ணல… தப்பு செய்தவனுக்கு தண்டனை கொடுக்கிறேன்.”

“உயிரை எடுக்கிறது தான் தண்டனையா?”

இருவருக்குமே ஒருவரையொருவர் தன்னை புரிந்து கொள்ளாமல் பேசிகிறாளே(னே) என்ற கோபம் எழுந்தது.

‘என்ன சொன்னாலும் இப்படித்தான் குதிப்பாள்’ என நினைத்த பார்த்திபன், விவாதம் செய்வதை நிறுத்தியிருந்தான்.

“பதில் சொல்லுங்க?”

“என்ன பதில்?”

“நிஜமா மருது உயிரோடில்லையா?”

“இருக்கான்.”

“ஊஃப்” என ஊதிக்கொண்ட கயலுக்கு இப்போதுதான் மூச்சு வந்தது. ஆனால் அடுத்த நொடியே அவளின் அந்த நிம்மதியை குலைத்திருந்தான் பார்த்திபன்.

“ஆனால்… ஏன்டா வாழுறோமுன்னு அவன் நினைக்கிற அளவுக்கு செய்துட்டேன். இதற்கு சாவதே மேலுன்னு நிச்சயம் நினைத்திருப்பான்.” இதனை சொல்லும் போது பார்த்திபனின் கண்களில் ஒருவித பளபளப்பு. தன்னவளை வதைத்தவனை தான் சிதைத்துவிட்ட குரூர சந்தோஷம்.

அதனை அப்பட்டமாக அவனின் முகம் பிரதிபலித்தது.

“நீங்க இவ்வளவு கல் நெஞ்சமா இருப்பீங்கன்னு நான் நினைக்கல” என்ற கயல் பொங்கி வந்த கண்ணீரை அடக்கியவளாக அவனை திரும்பியும் பாராது செல்ல…

திடீரென கேட்ட அலறல் ஒலி கயலை நடுங்கச் செய்திட… அவளின் நடை தடைபட்டது.

திரும்பி பார்த்திபனை நோக்கியவள்…

“மருது தானே?” எனக் கேட்டாள்.

“ம்” என்று தலையசைத்த பார்த்திபன் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.

“என்னை விட்டுடு… என்னை விட்டுடு… இந்த இருட்டு… நீ… எனக்கு பயமா இருக்கு. என்னை கொன்னுடு. என்னை கொன்னுடு” என்று இரவை கிழித்துக்கொண்டு விட்டு விட்டு ஒலித்தது மருதுவின் குரல்.

மூன்று நாட்களாக தண்ணீர் உணவென்று எந்தவொரு ஆகாரமும் உள் சென்றிருக்காது இருக்க… பார்த்திபன் காட்டும் சித்திரவதை விட பசியின் வலி அவனை உயிரோடு கொன்றது.

வாழ்வதைக்காட்டிலும் சாவதே மேல் எனும் நிலையில் குற்றுயிராக கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் சக்தியையெல்லாம் திரட்டி அனத்திக் கொண்டிருந்தான்.

கயல் வருவதற்கு முன்பு பார்த்திபன் கொடுத்த வலியில் மயங்கியிருந்தவன் இப்போது தான் கண் திறந்திருந்தான்.

இமை பிரிந்த மறுநொடி… வலியை உடல் முழுக்க உணர்ந்தவன் கத்த துவங்கியிருந்தான்.

பகலிலும் கத்திக்கொண்டும் காப்பாற்ற சொல்லி கெஞ்சிக்கொண்டும் தான் இருப்பான். ஆனால் பகலில் அவனின் சத்தம் அங்கேயே உறைந்துவிடும். ஆனால் இரவின் பெருத்த ஆழ் அமைதி அவனின் சத்தத்தை உள்வாங்கி வெளியே சிதறடிக்கும்.

“இங்கு தான் வச்சிருக்கிங்களா?”

அவனிடம் பதிலில்லை.

“நீங்க இங்கயே இருக்கும்போது எதுக்கு வீட்டை பூட்டுனீங்க?” எனக் கேட்டுக்கொண்டே அவன் முன்பு சாவிக்காக கையை நீட்டினாள்.

“நீ போ… நான் அவனை விட்டுடுறேன்.”

பார்த்திபனை நம்பாத பார்வை பார்த்தாள்.

மருதுவின் ஓலம் அதிகரித்துக் கொண்டே இருக்க… கயலின் நெஞ்சம் பதப்பதைத்தது.

“ஐ ஸ்வேர்… நான் அவனை அனுப்பிடறேன்.”

“நீங்க சாவியை கொடுங்க நானே திறந்து விட்டுட்டு போறேன்” என்று அவளும் அவனுக்கு நிகரான பிடிவாதத்துடன் நின்றாள்.

“இதென்ன பிடிவாதம் கயல்” என்ற பார்த்திபன் “நான் சொன்னா செய்வேன்… அதுவும் உன்கிட்ட சொன்னா கண்டிப்பா செய்வேன்” என்றான்.

அவனின் உடலில் தன்னை நம்ப மறுக்கிறாளே என்கிற கோபத்தில் ஒரு விறைப்புத்தன்மை. வார்த்தையில் அதீத அழுத்தம். பார்வை கூர்மையாய்.

அவனது அப்போதைய தோற்றத்தில் என்ன கண்டாளோ…

“என் கண்முன்னே விடுங்க” என்றவள் “உங்களை நம்பாம இல்லை… இதுக்குமேலும் நீங்க அவனை எதுவும் செய்திடக்கூடாதே… அவன் உங்களை பழிவாங்குறேன்னு கிளம்பிடக்கூடாதேன்னு பயம்” என்றாள்.

“அவனுக்கு யார் அவனை இப்படி செய்தாங்க எதுக்காக செய்தாங்கன்னு கூடத் தெரியாது. அதனாலதான் உன்னை போன்னு சொல்றேன்” என்ற பார்த்திபனிடம்…

“இதுக்கு நீங்க அவனை கொன்னேயிருக்கலாம்” என்று கத்திவிட்டு அவனை முறைத்தபடி அங்கிருந்து சென்றிருந்தாள்.

எதற்காக தண்டனையென்று தெரியாது அதனை அனுபவிக்கும் நிலையில் ஒருவரின் மனநிலை எந்தளவிற்கு அழுத்தத்திற்குள்ளாகும் என்பது தெரிந்தே மருதுவை வதைத்திருந்தான் பார்த்திபன்.

‘அவனுக்கு இதுவே குறைவு தான். அவன் கை வைத்தது என் உயிர் மேல்’ என செல்லும் கயலிடம் மனதால் உரைத்தவன்… மருதுவிடம் சென்றான்.

காலடி தடம் கேட்டதுமே… மருது தானாக அரண்டு கத்தினான்.

“வேண்டாம்… வேண்டாம்… என்னை எதுவும் செய்யாத. நான் கத்த மாட்டேன்” என்ற மருது நாற்காலியோடு ஒன்றினான்.

அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியில் தன் முகம் மறைத்தவனாக சென்று அமர்ந்த பார்த்திபன்…

“உன்னை விடலாம் முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

அந்நொடி மருதுவிடம் ஒரு நிம்மதி.

அந்த நிம்மதி பார்த்திபனுக்கு அடங்கியிருந்த கோபத்தை கிளப்பிவிட…

“அதுக்கு முன்னால ஒரே ஒரு முறை” என்று பாக்கெட்டிலிருந்து குண்டூசி ஒன்றை எடுத்தவன்… மருதுவின் கையை பிடித்து ஒவ்வொரு நகக்கண்ணிலும் மெதுவாக ஆரம்பித்து வேகமாக குத்தி குத்தி எடுத்தான்.

மருதுவின் அலறல் பார்த்திபனின் செவி நுழைய… அவனுள் சந்தோஷம். சொல்லப்படாத மகிழ்ச்சி.

மருதுவை கடத்திய முதல் நாள் இரவு…

மருது வலியில் துடிக்க துடிக்க, அவனின் நகத்தை ஒவ்வொன்றாக பிடுங்கியிருந்தான். அதன் பின்னர் அவனை அடிக்கவில்லை, குத்தவில்லை, உதைக்கவில்லை… ஒரேயொரு குண்டூசி அவனை வதைக்க… வலியில் துடிக்கச் செய்திட அவனுக்கு போதுமானதாக இருந்தது.

இதைவிட பெரியதாக மருதுவை பார்த்திபனால் செய்திருக்க முடியும் ஆனால் ஒவ்வொரு நொடியும் அவன் வலியை அனுபவிக்க நினைத்தான்.

மூன்று நாளும் வைத்து செய்துவிட்டான்.

பெரிய  கட்டையால் அடித்திருந்தால் கூட மருதுவிற்கு அத்தனை வலி தெரிந்திருக்காது. மூன்று நாட்களும் தண்ணீர் கூட தராது அவனுக்கு சாவென்றால் என்னவென்று அறிந்துகொள்ளச் செய்துவிட்டான்.

தாகமெடுக்கும் சமயம்… தண்ணீர் இல்லையென்றால் அந்நொடி எப்படியிருக்குமென்று வார்த்தையால் வரையறுக்க முடிந்திடுமா? பசியின் வலியை உணர்ந்தவர்களுக்கேத் தெரியும். உலகில் அதைவிட பெரிய வலியொன்று இல்லையென்று.

உலகில் வாய்விட்டு சொல்லிட முடியாத கொடுமை ஒன்றென்றால் பசி தான்.

எல்லாவற்றிற்கும் தீர்வு பல வகையில் உள்ளபோது… பசிக்கான ஒரே தீர்வு உணவு மட்டுமே. பசிக்கும் நேரம் கண்டிப்பாக உணவு வேண்டும். இல்லையென்றால்… ஜெகத்தில் வரையறுத்திட முடியாத ஒன்று அது.

அதனை மருதுவிற்கு மனதில் அழுத்தமாகக் கொடுத்திருந்தான் பார்த்திபன்.

மருதுவை டவுனில் இருக்கும் மருத்துவமனை வாயிலில் கொண்டு சென்று இறக்கிவிட்டவன் வீட்டிற்கு சென்று கயலை பார்க்கும் மனநிலை இல்லாததால் பண்ணைக்கே வந்திருந்தான்.

மறுநாள் ஊர் முழுக்க காணாமல் போன மருது கிடைத்துவிட்ட விடயம் தான் பேச்சாக இருந்தது.

“மூன்று நாளாக தண்ணீ கூடத் தராம கட்டிப்போட்டு வச்சிருந்தங்களாம்.”

“எதுக்காக கடத்தியிருப்பாங்க?”

“அவனுக்கு இதெல்லாம் தேவை தான்.”

“இன்னும் கூட அவன் அனுபவிப்பான்.”

மக்கள் தங்கள் யூகத்திற்கு ஏற்றவாறு பேசினர்.

மருதுவிற்கு பார்த்திபன் செய்தது அதிகப்படி என்றே கயலுக்குத் தோன்றியது. இரண்டு நாட்களாக பார்த்திபனை பார்ப்பதையே தவிர்த்திருந்தாள். அவன் அரவம் தென்பட்டாலே அறைக்குள் சென்று முடங்கினாள். பார்த்திபனுக்கு துணையாக இருந்தது சிவாயென்று தெரிந்து அவனோடும் பேசுவதை நிறுத்தியிருந்தாள்.

வேலையிடத்தில் சிவா அவளின் முகத்தையே பார்த்திருக்க… அதனையெல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. தன் வேலையில் கவனமாக இருப்பவள், வேலை முடிந்ததா அங்கிருந்து உடனே கிளம்பியிருந்தாள். முன்னரென்றால் அவன் சாப்பிடும் வரை இருந்துவிட்டு தான் செல்வாள். ஆனால் இப்போது முழுவதுமாக பார்த்திபனுடன் சேர்த்து சிவாவையும் தவிர்த்தாள்.

கயல் ஒதுங்கி ஒதுங்கி செல்ல… வீட்டிலிருக்க முடியாது தோப்பிற்கு வந்திருந்தான் பார்த்திபன்.

அவனுக்கு மேல் சோகமாக சிவா வானத்தை வெறித்தவனாக வரப்பில் அமர்ந்திருந்தான்.

“ப்லீங்ஸ் அதிகமா இருக்கும் போலையே” என்றவனாக, வாய்க்காலில் ஓடும் நீரில் கால் வைத்து வரப்பில் சிவாவிற்கு அருகில் அமர்ந்தான் பார்த்திபன்.

“கயல் பேச மாட்டேங்குது மாப்ள. சாப்பிட்டியான்னு கூட கேட்க மாட்டேங்குது” என்று சொன்ன சிவா விட்டால் அழுதுவிடும் நிலையில் இருந்தான்.

“நாம் பண்ணது தப்பு தானே!”

காலுக்கு கீழ் ஓடிக்கொண்டிருந்த நீரினை பார்த்தபடியிருந்த பார்த்திபன்…

“கயல் மட்டும் வராம இருந்திருந்தால் அவனை சாவடிச்சிருப்பேன்” என்றான்.

அதிர்ந்த விழிகளோடு ஏறிட்ட சிவாவிடம்…

“கயலுக்கு அவன் பண்ணது நினைத்துப்பார். நாம் பண்ணதெல்லாம் ஒன்னுமேயில்லை” என்றான்.

எட்டு மாதங்களுக்கு முன்பு…

மருது அவ்வூரின் தனக்காரர் துரையின் மகன்.

அவனுக்கு கயல் மீது எப்போதும் ஒரு கண். கயலிடம் அடிக்கடி வம்பு செய்து வாங்கிக்கட்டிப்பான். பலமுறை கயலை நெருங்க முயற்சி செய்திருக்கிறான். ஆனால் எப்போதும் கயலுடன் மாணிக்கம் அல்லது சிவா இருந்துகொண்டே இருக்க அவனின் எண்ணம் ஈடேறவில்லை.

அவர்கள் இல்லாத சமயங்களில் சரளா இருப்பது இன்னும் அவனுக்கு எரிச்சலை கொடுத்தது.

கயலிடம் அவன் தன் விருப்பத்தைக்கூற… நாகரிகமாக நல்ல முறையிலேயே கயல் மறுத்து வந்தாள். இருப்பினும் அவனின் தொல்லை அதிகமாகியதே தவிர குறையவில்லை.

அவன் தன் உறவினர்களுடன் முறையாக சென்று பெண் கேட்டும் கயல் மறுத்திட… முகி ஒரு ஆட்டம் ஆடிவிட்டான்.

“உனக்கு என் கயல் கேட்குதா? யாருக்கு யாருடா மாப்பிள்ளை. இனியொருமுறை பார்த்தேன் வெட்டிடுவேன்.”

அதன் பின்னர் ஊர்க்காரர்கள் சேர்ந்து முகியை அடக்க வேண்டியதாகியது.

அன்று வரப்பில் கயல் தனியாக வருவதை பார்த்த மருது… அவளுக்கு எதிரே சென்று வழி மறித்து நின்று…

“என்னை கட்டிகிட உனக்கு என்னடி கசக்குது. உன் தம்பி அந்த குதி குதிக்கிறான். இப்போ உன்னைத் தூக்கிட்டு போய் தாலி கட்டப்போறேன் எவன் வந்து தடுக்குறான் பார்க்கிறேன்”என்றவன் அவளின் கையை பிடிக்கப்போக…

பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று கொடுத்திருந்தாள்.

“ஏய்” என்று மருது அவளின் தாவணியில் கையை வைக்க போக, வாழையிலை கிழிக்க இடுப்பில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து அவனின் கையை கிழித்திருந்தாள்.

“சூப்பர் கயல்” என்று அவளுக்கு பின்னால் வந்து நின்ற சிவா…

“நானா இருந்திருந்தா காலில் போட்டிருப்பதை கொண்டு அடித்திருப்பேன்” என மருதுவை முறைத்துக்கொண்டு சொல்ல மாணிக்கமும் வந்து சேர்ந்தார்.

அன்றிலிருந்து கயல் மீதான ஆசை அவனுக்கு வெறியானதோடு அவளின் மீது வன்மம் வளர்ந்திருந்தது.

தன்னை அடித்து அவமானம் செய்த கயலை அனைவர் முன்பும் அவமானப்படுத்த வெறியோடு காத்திருந்தான்.

அவனுக்கான நேரமும் வந்தது.

ஒருநாள்…

ஊருக்குள்ளிருக்கும் மளிகைக்கடைக்கு கயல் சென்றிருக்க… அங்கு எதிரிலிருக்கும் கந்தன் தேநீர் கடையில் ஏற்கனவே மருது அமர்ந்திருந்தான்.

“என்ன மருது கயல் வரது தெரிஞ்சுதான் இங்க வந்தியா? வம்பு வளக்காம கிளம்பிடு” என்று கந்தன் சொல்ல…

“சரி கிளம்புறேன்” என்றவன்…

பொருட்களை வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியில் வந்த கயலின் முன்பு சென்று நின்றான்.

“அன்னைக்கு வாங்குனது மறந்து போச்சா?” என்ற கயல் அவனைத்தாண்டிச் செல்ல முற்பட…

“அதுக்கு திருப்பிக் கொடுக்கலாம் தான் வந்திருக்கேன்” என்றவனை கயல் அடிக்க கையை ஓங்கிட… நொடியில் அவளின் கையை தடுத்து பிடித்தவன்

“அன்னைக்கு ஏதோ சூதானம் இல்லாம இருந்துட்டேன் நீயும் பொசுக்குன்னு அடிச்சிட்ட… ஆனால் இன்னைக்கு” என்றவன் “நான் உனக்கு திருப்பித்தர வேண்டாம்” என கண்களில் பழிவெறியோடு கேட்டுக்கொண்டே கயல் சுதாரிப்பதற்கு முன்பு, அவளின் இடையில் சொருகியிருந்த தாவணியின் நுனியை பிடித்து மொத்தமாக உருவியிருந்தான்.

மருது கயலை மறித்து பேசவுமே அங்கு இருந்த ஒரு சிலர் அவர்களுக்கு அருகில் வருவதற்குள் அதனை செய்திருந்தான்.

நடந்துவிட்ட நிகழ்வினை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை.

கைகளைக் கொண்டு தன்னை மறைத்த கயல் கண்ணீரோடு உடலைக் குறுக்கிக்கொண்டு கால்களை இடுக்கிக்கொண்டு தரையில் அமர்ந்தவள் அங்கிருப்போரை நிமிர்ந்து பார்க்கவே கூசிப்போனாள்.

பொன்னி அக்கா வந்து தன் கையிலிருந்த துண்டால் கயலின் மேல் போர்த்திவிட… அங்கிருந்த ஆடவர் மருதுவை அடிக்க வர, பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னை யாரும் நெருங்கவிடாது தடுத்தவன், கயலின் உருவிய தாவணியை தன்னுடைய கையில் சுற்றியபடி சென்றுவிட்டான்.

பொன்னி அக்கா கயலை வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டு நடந்ததை சரளா மற்றும் மாணிக்கத்திடமும் சொல்லிச்செல்ல வீட்டில் அனைவரும் இடிந்து போயினர்.

கயலால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் கண்ணீரை நிறுத்தும் வழி தெரியவில்லை.

“முகிக்கு சொல்றேன்” என்ற சரளா மற்றும் மாணிக்கத்தை, “மருது பெண் கேட்டு வந்ததுக்கு அந்த ஆட்டம் ஆடியவன் இது தெரிந்தால் அவனை எதுவும் செய்திடுவான். அதுக்கு அப்புறம் முகியோட படிப்பு வாழ்க்கை?” எனக்கூறி கயல் தடுத்துவிட்டாள்.

கேரளாவிற்கு வாழைத்தார் கொண்டு சென்ற சிவா மறுநாள் தான் வந்தான். விடயமறிந்து மருதுவின் வீட்டிற்கே அவனது படுக்கை அறைக்குள் சென்று அவனை அடித்து துவைத்துவிட்டான்.

“இனியொருமுறை உன்னை ஊரில் பார்த்தேன் அங்கேயே வெட்டிடுவேன்” என்றவன் மருது படுத்திருந்த கட்டிலில் கிடந்த கயலின் தாவணியை எடுத்து வந்து கயலின் முன்பே கொளுத்தியிருந்தான்.

வாடி வதங்கி எதிலுமே நாட்டமில்லாது எப்போதும் எதையோ இழந்ததைப்போல் அமர்ந்திருக்கும் கயலை அவளுக்கு பிடித்த விவசாயத்தில் அதை செய் இதை செய்யென்று எதையாவது கூறி அவளை வேலை செய்ய வைத்தே சகஜ நிலைக்கு திருப்பியிருந்தனர் சிவாவும் மாணிக்கமும். சரளாவும் அவளை தன் கண்ணுக்குள் வைத்து தேற்றினார்.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த முகிக்கு விடயம் தெரியவர… மருதுவின் நல்ல நேரம், சிவா அடித்ததை பார்த்த துரை… இதில் முகிக்கும் தெரிந்தால் என்னாகுமோயென்று இருவருக்கும் பயந்தே தன் மகனை வெளியூருக்கு அனுப்பி வைத்திட்டார்.

அவனது அன்றைய நல்ல நேரம் இன்று பார்த்திபனால் கெட்ட நேரமாகியிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top