பார்த்திபனின் கயல்விழியாள் 46

அத்தியாயம் 🌾 46 :

வெளியூருக்கு உறவினர் வீட்டு விசேடத்திற்கு சென்றிருந்த மாணிக்கமும் சரளாவும் அன்று தான் வந்திருந்தனர்.

மாணிக்கம் வந்ததும் வராததுமாக…

“கரும்பு ஊனும் நேரம் பார்த்து இந்த விசேஷம் வரனுமா? எம் புள்ள தனியா கஷ்டப்பட்டுச்சோ” என்று புலம்பியபடியே கயலிடம் வந்தவர் அதைப்பற்றி விசாரித்துவிட்டு வயலை பார்ப்பதற்கு சென்றுவிட்டார்.

“வந்ததும் வராததும் ஓடுறளவுக்கு இவர் தான் வயலை தலையில தூக்கி வச்சு பதுசு பன்ற மாதிரி நினைப்பு” என்ற சரளா கயலையும் மங்கையும் பார்த்து பேசிவிட்டு வர மலர் அழைத்திருந்தாள்.

“அம்மா…” மலரின் குரல் உடைந்திருந்தது.

மகளின் தழுதழுப்பான குரல் மங்கையை பதற வைத்தது.

“மலரு… என்னாச்சும்மா?”

“அம்மா…” என்ற மலர் விசும்பலின் அதிகமானதே தவிர வார்த்தை வரவில்லை.

“முகியிடம் போனை கொடு மலர்” என்ற சரளாவிடம்… அதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாதென,

“ஊருக்கு வந்திட்டு இருக்கேன்ம்மா. சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்திடுவேன். அப்பாவை பஸ் ஸ்டாப் அனுப்புங்க” என்றவள் போனை வைத்துவிட்டாள்.

காரணம் சொல்லாது அவள் மட்டும் வருகிறாளென்ற செய்தி சரளாவிற்கு உவப்பானதாக இல்லை. முகி, மலருக்கு இடையே ஏதோவொன்றென்று நினைத்த சரளா கயலைத் தேடிச் சென்றார்.

“கயல் இல்லையா அக்கா” என்று கேட்ட சரளாவின் குரல் கலங்கியிருப்பதை கவனித்த மங்கை,

“நீ வா வந்து இப்படி உட்காரு” என்று அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

தண்ணீரை மறுத்த சரளா…

“கயலுகிட்ட பேசனும் அக்கா” என்றார்.

அப்போதுதான் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்தான்.

“எப்போ சித்தி வந்தீங்க?” எனக் கேட்டவனை கலங்கிய விழி கொண்டு பார்த்தவர்,

“இப்போ தான்ப்பா வந்தோம்” என்றார்.

பார்த்திபன் என்னவானதென மங்கையிடம் கண்களால் வினவ, எனக்கும் தெரியாதென மங்கை ஜாடை செய்தார்.

“மங்கை பார்த்தி எங்க போயிட்டான்?” எனக்கேட்டபடி வந்த தேவராஜன், பார்த்திபனே அங்கு இருக்க “போன் வச்சிட்டு போயிட்டியாடா. முகி கால் பண்ணிட்டே இருக்கான்” என்று அவனிடம் அலைபேசியை கொடுத்தார்.

அதற்குள் அழைப்பு நின்றிருந்தது.

பார்த்திபன் முகிக்கு அழைக்க…

“மலருக்கும் தம்பிக்கும் ஏதோ தகராறு போல” என்ற சரளா, மலர் போன் செய்ததை சுருக்கமாகக் கூறியிருந்தார்.

“மலருக்கு லீவ் இருந்திருக்கும். அனுப்பி வைத்திருப்பான்” என்று சரளாவிற்கு ஆறுதலாக பேசிய மங்கைக்குமே மலர் அழுததாக சரளா சொல்லியதை ஏனென்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

“எதுவாயிருந்தாலும் சரி செய்திடலாம் சித்தி” என்று பார்த்திபன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முகி அழைப்பை ஏற்றிருந்தான்.

“அத்தான் மலர் ஊருக்கு வராள்” என்று அங்கு பேருந்து ஏற்றிவிட்ட நேரத்தையும் ஊருக்கு வந்து சேரும் நேரத்தையும் சொல்லியவன், மேற்கொண்டு எதுவும் பேசாது… பார்த்திபனையும் பேச விடாது “பேஷன்ட்ஸ் வெயிட்டிங் அத்தான்” என்று அலைபேசியை வைத்துவிட்டான்.

“என்னப்பா சொல்லுச்சு தம்பி?”

சரளா ரொம்பவே பயந்து போயிருந்தார்.

“மலர் வரட்டும் சித்தி பேசிக்கலாம்” என்ற பார்த்திபன்… “நானே கூட்டிட்டு வரேன்” என்றவனும் “கவலைப்படாம வேலையைப் பாருங்க” என்று வயலுக்கு சென்றுவிட்டான்.

அங்கு சிவா கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தான்.

“என்னடா இங்க நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” என்ற பார்த்திபன் அவனின் முதுகிலே ஒரு அடி வைத்தான்.

“கயல் என்ன எந்த வேலையும் செய்ய விடாம அதுவே பாக்குது” என்றவனிடம் அத்தனை சோகம்.

மாணிக்கமும் கயலும் சேர்ந்து விதை நெல் மூட்டைகளை நீர் நிரம்பிய கிணற்றுத் தண்ணீர் தொட்டியில் போட்டு மேலெழும்பாதவாறு கட்டைகளையும் பெரிய கற்களையும் அதன்மேல் வைத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன செய்யுறாங்க?”

“விதை நெல்லு முளைக்க போடுறாங்க!”

“ஹோ” என்ற பார்த்திபன்… “இதுலே வயல்ல நடுற அளவுக்கு முளைத்து வந்திடுமா?” என தனது சந்தேகத்தைக் கேட்டான்.

“ரெண்டு நாள் தண்ணில ஊறப்போட்டு வெளியில் வைக்கணும். முளைப்பு வந்ததை நாத்தாங்கால் ரெடி பண்ணி வச்சிருக்கோமே… அதுல பரவலா விதைக்கணும்” என்ற சிவா “இன்னும் நிறைய ப்ரோசஸ் இருக்கு” என்றான்.

“நாமளும் அப்போ விதை நெல் தண்ணில போடனும்ல” என்ற பார்த்திபனிடம் “நமக்கும் சேர்த்து தான் போட்டிருக்கு” என்றான் சிவா.

“இந்த மூட்டையை தூக்க கூட கயல் விடல தெரியுமா?” என சொல்லிய சிவா வெகுவாக கலங்கியிருந்தான்.

“அப்புறம் யார் தூக்குனா?”

“மாணிக்கம் மாமா தான்” என்றவன் கயலை நோக்கிச் சென்றான்.

“கயல் நான் பண்ணது தப்பு தான். என்கிட்ட பேசு கயல். நீ பேசாம இருக்கிறது திரும்ப என்னை அனா…” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னர் அங்கே சிவா, அண்ணா என கயல் மற்றும் பார்த்திபனின் குரலில் ஓங்கி ஒலித்தது.

“என்ன வார்த்தைடா சொல்ல பார்த்த” என்று அவனருகில் வந்த மாணிக்கம், அவனை முறைத்து நின்றார்.

“பின்ன என்ன மாமா நான் வந்தாலே என் முகத்தைக்கூட பார்க்க மாட்டேன்னு விலகி போகுது. சாப்ட்டியான்னு கேட்டு ரெண்டு நாளாவுது. எனக்குன்னு இருக்கிறது கயல் தானே! கயல் வழிதானே நீங்கலாம் எனக்கு. அப்போ நான் அனாதை தானே” என்ற சிவாவை பட்டென்று அறைந்திருந்தான் பார்த்திபன்.

“இன்னொருமுறை இதை சொன்ன” என்று சிவாவை விரல் நீட்டி எச்சரித்த பார்த்திபன், கயலிடம் திரும்பி…

“மருதுவை கடத்தியது மட்டும் தான் சிவாவுக்கு தெரியும். அவனை நான் என்ன பண்ணேன், என்ன தண்டனை கொடுத்தேன் எதுவும் சிவாவுக்கு தெரியாது. அவனை நான் மருதுவை வைத்திருந்த அறை பக்கமே விடல. அவனுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவன்கிட்ட பேசு” என்றான்.

சிவா அனாதை மாதிரி தோணுது என்று சொல்லியதுமே கயலுக்கு மனம் பதைத்து போனது. அதிலும் சிவாவின் வருத்தம் அவளைத் தாக்கிட… அவன்மீதான கோபம் கூட விலகியது.

சிவாவை நெருங்கிய கயல்…

“இவங்க யாருன்னு தெரிஞ்சதையும் நீங்க என்கிட்ட சொல்லலை. இப்போ மருதுவை… அதையும் சொல்லலை. அந்த கோபம் தான். இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா நானே பேசியிருப்பேன். இதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம்… இனி இப்படி சொல்லாதண்ணா” என்றவள் கலங்கியிருந்த சிவாவின் கண்களை துடைத்து விட்டாள்.

“ரொம்பத்தான் அண்ணன் தங்கை பாசத்தை பொழியிறீங்க” என்று பார்த்திபன் கேலி செய்ய சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தனர்.

“மருது வந்துட்டானா?” என்ற மாணிக்கம், “கயல் நீ பார்த்து சூதானமா இருக்கனும்” என்றார்.

“அவன் எழுந்திருக்க முடிஞ்சாதான” என்று சிவா நமட்டு சிரிப்பு சிரிக்க…

கயல் பார்த்திபனை முறைத்தாள்.

“என்னை எதுக்கு இப்போ இப்படி பாசமா பாக்குற… அவனுக்கு இதெல்லாம் கம்மி தான்” என்ற பார்த்திபனை,

“இரக்கமே இல்லாத உங்களுக்கு இப்படித்தான் தோணும். ஹாஸ்பிடலில் அவன் இன்னும் கண் விழிக்கல. ஒரு உயிரை இப்படி வதைத்திருகோமேங்கிற குற்றவுணர்வு கொஞ்சமாவுது இருக்கா உங்களுக்கு?” என்ற கயலிடம் என்னயென மாணிக்கம் கேட்க, பார்த்திபன் மருதுவை கடத்தியது கொடுமை படுத்தியதென எல்லாம் கூறினாள்.

“தம்பி பண்ணது சரிதான்.”

“என்ன மாமா நீங்களும்?”

“அவன் அப்போ ஊரிலிருந்திருந்தா நானே வெட்டி போட்டிருப்பேன்” என்ற மாணிக்கம், “தப்பு செய்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தண்டனை கிடைத்து தான் ஆகும் கயல். அது பார்த்தி தம்பி கையால் அவனுக்கு கிடைச்சிருக்கு. இதுக்கு போய் ரொம்ப அலட்டிக்காத” என்று மாணிக்கம் சென்றுவிட, கயலும் பார்த்திபனும் பேசிக்கொள்ளட்டுமென சிவாவும் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்த கயல் எதுவும் பேசாது நகர்ந்திட,

“இப்போ என்னடி உனக்கு” என அவளைத் தடுத்தவனாகக் கேட்டிருந்தான் பார்த்திபன்.

“என்ன… ஒன்னுமில்லையே?”

“பொய் சொல்லாத. கோபம் போகலையா?”

“நீங்க செய்தது சரின்னு நியாயப்படுத்தினாலும் ஒரு உயிரை வதைக்கிறது தப்பு தான்” என்றாள்.

“இப்போ நான் என்ன பண்ணட்டும்?”

“இனி இந்த மாதிரி எதுவும் பண்ணாம இருந்தாலே போதும்” என்றவள், “எனக்காக நீங்க என்னவும் செய்வீங்க அப்படிங்கிறது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் அது இப்படி வேண்டாம்” என்றாள்.

“ஓகே” என்ற பார்த்திபனுக்கு தன்னைக் குறித்தே ஆச்சர்யம் தான்.

யாருக்காகவும் தன்னை தன்னுடைய நிலையை உயரத்தை இடத்தை விட்டுக் கொடுத்திடாதவன், ஆரம்பத்திலிருந்து கயலிடம் மட்டும் விரும்பியே சுயம் தொலைக்கின்றான்.

இப்போது அவளின் பேச்சிற்கு உடனடியாக தலையாட்டியதும் அவனுக்கு ஒருவித இதத்தையே கொடுத்தது.

விரும்பியே அவளிடம் தொலைகிறான். தொலைந்து போகிறான்.

காதலில் மட்டுமே சுயம் இழப்பது இன்பத்தை கொடுக்கும். அத்தகைய இன்பத்தில் பார்த்திபன் திளைத்தான்.

அவனின் பார்வை கயல் மீது எப்போது காதலாக மாறியதோ? அதில் அவனையே பார்த்திருந்த அவள் தான் தவித்துப்போனாள்.

“கண்ணை காட்டியே கவுத்திட வேண்டியது. இதுக்குத்தான் அந்த கண்ணை பார்க்கிறதே இல்லை” என்ற அவளின் முணுமுணுப்பு அவனிடம் அட்டகாசமான சிரிப்பை உண்டாக்கியது.

“சிரிக்காதீங்க” என்றவளின் பேச்சிற்கு கட்டுப்படுவதைப்போல் தனது புன்னகையை மீசைக்கடியில் ஒளித்தான்.

அதையும் அவளின் பார்வை கண்டு கொண்டது.

“ஒருநாள் இல்லை ஒருநாள் அந்த மீசையை பிடிச்சு வெட்டி விடுறேன் இருங்க” என்க,

“இப்போவே பிடியேன்” என்றவன் அவளருகில் நெருங்கி வந்தான்.

“பிடிச்சு இழுக்கமாட்டேன்னு தைரியமா?”

“இழுத்துதான் பாரேன்.” அவனும் அவளுக்கு இணையாக குறும்பு செய்தான்.

எப்படியும் அவள் செய்ய மாட்டாளென்றே அவன் நினைத்து விளையாடினான். ஆனால் அவளோ அவன் உணரும் முன் அவனது மீசை நுனியை பிடித்து வேகமாக இழுத்துவிட்டு ஓடிவிட்டாள்.

வலியோடு சேர்ந்த இன்பமான அவனின் சத்தம் அவளை பின் தொடர்ந்தது.

அதன் பின்னர் கயலின் நினைவோடு தோப்புகளையும், வயல்களையும் சுற்றி வந்த பார்த்திபன் லிண்டாவிடமிருந்து அழைப்பு வர அதில் மூழ்கிப்போனான்.

அடுத்தடுத்து மடிகணினியின் உதவியோடு தனது வேலைகளை பார்த்தவன், அனைத்தும் முடித்து நிமிரும் போது மாலையாகியிருந்தது. அவனையே பார்த்தபடி சிவா கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தான்.

“என்ன மச்சான் என்னையே பார்த்திட்டிருக்க… உன் தங்கச்சிக்கு தெரிந்தால் அவ்வளவு தான்” என்ற பார்த்திபனை முறைத்த சிவா,

“எவ்வளவு நேரம் உங்களை கூப்பிடறது?” என்றான்.

“என்னைக் கூப்பிட்டியா எதுக்கு?”

“எதுக்கா, மணியை பாருங்க. அந்த பொட்டியைத் தூக்கிக்கிட்டு நீங்க உட்காரும் போது மணி பன்னெண்டு. இப்போ?” எனக் கேட்டான்.

“சாரிடா… ஒரு ப்ரொஜெக்ட் ரிலேட்டடா சின்னதா மீட்டிங்” என்றவன் அவனிடம் சொல்லிக்கொண்டே மணியை பார்க்க, ஐந்தை நெருங்க இன்னும் இருபது நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது.

“அப்புறம் பேசுவோம். மலரை பிக்கப் பண்ண போகனும்” என்றவன் மடிகணினியை சிவாவிடம் கொடுத்து உள்ளே வைக்க சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தவன் கயலிடம் சொல்லிக்கொண்டு டவுன் பேருந்து நிலையத்திற்கு விரைந்தான்.

அப்போதுதான் மலர் வருவதே கயலுக்கு தெரியும்.

“ஏன் என்னோட சொல்லல” எனக் கேட்டவளிடம், “ஏன் வரான்னு தெரியாதப்போ வரதை சொல்லி உன்னையும் குழப்ப வேண்டான்னு தான் சொல்லலை. மலர் வந்தா தெரியப்போகுது” என்று மங்கை கயலை சமாதானம் செய்தாள்.

“அவளை ஏன் தனியா அனுப்பியிருக்கான்?”

“எங்களுக்கும் பதில் தெரியாது” என்ற தேவராஜன் “கொஞ்சம் பொறுமையா இரு கயல், இப்போ வந்திடுவாங்க” என்றார்.

பார்த்திபன் பேருந்து நிலையம் செல்லவும், மலர் வரும் பேருந்து வந்து சேரவும் சரியாக இருந்தது.

பேருந்திலிருந்து இறங்கிய மலர் பார்த்திபனை அங்கு எதிர்பார்க்கவில்லை.

அவளின் தோற்றம் பார்த்திபனுக்கு ஏதோ பெரியதாக ஒன்று நடந்துள்ளது என்பதை உணர்த்தியது.

அழுது வீங்கிய முகத்தோடு கண்களெல்லாம் சிவந்து இருந்தன.

கிட்டத்தட்ட ஏழு மணி நேர பயணம், அழுது ஆறுதல் தேட கூட ஆளில்லாது தவித்தவள் பார்த்திபனை நெருங்கியதும் அவனை கட்டிக்கொண்டாள்.

“அண்ணா” என்று தஞ்சம் அடைந்தவளை தனக்குள் வைத்து ஆறுதல் செய்தவன்,

“ஒன்னுமில்லை மலர். எதுவாயிருந்தாலும் சரி செய்திடலாம். அழாத!” என்று கூறி அவளை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்தவன் கார் கதவினை திறந்து அவளை அமர வைத்தான்.

ஊருக்கு அருகில் சென்றவன் சிறிது தொலைவிலேயே காரினை நிறுத்திவிட்டு மலர் புறம் திரும்பினான்.

“என்ன பிரோப்ளேம். முகி எதுக்கு உன்னை அடிச்சான்?”

கேட்டவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

‘தான் சொல்லாது முகி அடித்தது இவருக்கு எப்படித் தெரியும்?’

அவள் மனதில் கேட்டுக்கொண்டவளுக்கு அவன் பதில் வழங்கியிருந்தான்.

“உன் கன்னத்தில் விரல் தடம் தெரியுது.”

பார்த்திபன் கண்டு கொண்டு கேட்டதும், முகத்தை கைகளால் மூடியவள் குலுங்கி அழுதாள்.

“மலர்… மலர்… என்னம்மா? எதுக்கு இப்போ இந்த அழுகை” என்றவன் அவளை தன் தோள் சாய்த்தான்.

“அவருக்கு ஏதோ பெரிய பிரச்சனைண்ணா” என்றவள் அன்றொரு நாள் நடந்ததை கூறினாள்.

முகிக்கு அன்று மருத்துவமனையில் வேலை குறைவாக இருக்க நேரமே வீட்டிற்கு வந்தவன் மலரை கூட்டிக்கொண்டு கடற்கரைக்குச் சென்றான்.

மலருக்கு அவ்வளவு சந்தோஷம். முதல் முறையாக கணவனுடன் வெளியில் வந்திருப்பது. அவனின் கையை பற்றிக்கொண்டு அவ்விடத்தையே சுற்றி வந்துவிட்டாள். பிடித்த அவனின் கையை விடவே இல்லை. அவள் கேட்டதையெல்லாம் சந்தோஷமாக வாங்கிக்கொடுத்தான். தன்னுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்தி காதலனாக அவள் கை பிடித்து நடக்க அவனுக்கும் பிடித்திருந்தது.

அங்கிருந்து ஹோட்டலிற்கு சென்றவர்கள் இரவு உணவையும் முடித்து… நைட் ஷோ சினிமாவிற்கு சென்றுவிட்டு நள்ளிரவு கடந்து வீட்டிற்குள் நுழைய கூடத்தில் ஓர் உருவம் விழுந்து கிடந்தது.

இருட்டில் நிழலுறுவை கண்டு மலர் அஞ்சி அலற, அவளின் வாயினை பொத்திய முகி வேகமாக விளக்கினை ஒளிரச் செய்தான்.

கை கால்களில் எல்லாம் அடிப்பட்டிருக்க… முன் நெற்றியில் ரத்தம் வழிய திடகாத்திரமான ஒருவன் மயங்கிக் கிடந்தான்.

அவன் யாரென்று தெரிந்திடாத போதும், முகி உடனடியாக ஒரு மருத்துவனாக செயல்பட்டான்.

துரிதகதியில் அவனுக்கு சிகிச்சையளித்த முகி, நெற்றி காயத்திற்கு கட்டிட்டு நிமிர,

“இவர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”எனக் கேட்டாள் மலர்.

தெரியல என்ற முகி… “கண் விழிக்கட்டும் கேட்டு அவங்க வீட்டுக்கு தகவல் கொடுப்போம்” என்றான்.

“ஆமாம் இவரெப்படி இங்கு வந்திருப்பார்?” மலர் சந்தேகம் கொள்ள…

“மாடி கதவை பூட்டாம இருந்திருப்ப. அந்த வழியா வந்திருப்பான்” என்ற முகி மலரை உறங்கச் செய்துவிட்டு அவனுடன் அமர்ந்து கொண்டான்.

மறுநாள் அவன் கண் விழிக்கும்போது முகியின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் அவனை சூழ்ந்து நின்றிருந்தனர்.

மலர் அதிர்ச்சியாக… முகிக்கு அப்படி எந்தவொரு அதிர்ச்சியும் இல்லை.

வந்திருந்த காவல்துறை அதிகாரியில் ஒருவர், “இவனை பிடிக்க உதவியதற்கு நன்றி டாக்டர்” என்று முகிக்கு கை குளுக்கிட… அவனின் மொத்த கோபமும் முகியின் பக்கம் திரும்பியது.

“ரொம்ப தப்பு பண்ணிட்ட டாக்டர்” என்றவன் பற்களை கடிக்க…

“எங்க முன்னாடியே மிரட்டுரியா வாடா” என்று போலீஸ் அவனை இழுத்துச் சென்றனர்.

அதன் பிறகு நான்கு நாட்கள் முகி சாதரணமாகவே நடந்துகொள்ளவில்லை. எதையோ மனதில் வைத்து மறுகுகின்றான் என்று மலருக்கு புரிந்து அவள் கேட்டதற்கு முகி பதில் செல்லவில்லை.

அவனிடம் புதிதாக தடுமாற்றம். எதையோ நினைத்து ஒரு பயம். எப்போதும் ஏதொ யோசனையில் மூழ்கியிருந்தான்.

இன்று மருத்துவமனை சென்றவன், சிறிது நேரத்தில் அடித்துப்பிடித்து மலரின் கல்லூரிக்கு சென்று அவளை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தவன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு தான் மூச்சு விட்டான்.

“நான் போக மாட்டேன். உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க. சேர்ந்து சமாளிப்போம்” என்று மலர் அடம்பிடிக்க… பேருந்தில் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாது அடம்பிடிக்கும் மலரை கன்னத்தில் அறைந்திருந்தான்.

அதன் பின்னர் பேருந்து கிளம்பும் வரை அழும் மலரையே பார்த்தவாறு வெளியில் நின்றவனை கவலை படிந்த முகத்தோடு ஏறிட்டிருந்தாள் மலர்.

நடந்த அனைத்தையும் சொல்லிய மலர்,

“அவர் எதையோ மறைக்கிறார் அண்ணா” என்று அவன்மீதே சாய்ந்து கண்ணீர் சிந்தினாள்.

“நான் என்னன்னு பார்க்கிறேன் மலர். நீ இப்படி அழாத. முகிக்கு ஒண்ணுன்னா நம் குடும்பத்தை யோசித்துப்பார். லீவ் அதனால வீட்டுக்கு வந்திருக்கேன் சொல்லு. மத்ததையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்ற பார்த்திபன், மலரிடம் தண்ணீர் போத்தலை கொடுத்து முகம் கழுவி வர செய்தவன், அவள் சற்று தெளிந்ததும் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

என்ன ஏதென்று விசாரித்த அனைவரிடமும் பார்த்திபன் சொல்லியதையே சொன்னவள் சோர்வாக இருப்பதாக தனதறைக்குள் புகுந்து கொண்டாள்.

“இவள் ஒருத்தி… செத்த நேரத்தில் பயம் காட்டிட்டாளே” என்று சரளா நிம்மதி கொள்ள… அதே நிம்மதி அனைவரிடமும் தெரிந்தது.

இரவு உணவிற்கு பின்னர்…

“ஒரு முக்கியமான வேலை. நான் போனாதான் சரிசெய்ய முடியும். இப்போவே கிளம்புறேன்” என்று அனைவருக்கும் பொதுவாக சொல்லிய பார்த்திபன் சென்னையை நோக்கி பயணமானான்.

error: Content is protected !!
Scroll to Top