பார்த்திபனின் கயல்விழியாள் 47

அத்தியாயம் 🌾 47 :

நள்ளிரவு கடந்த வேளையில் பார்த்திபன் சென்னை வந்து சேர்ந்தான்.

வரும் வழியில் பலமுறை முகிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனான்.

பார்த்திபனின் அழைப்பென்றால் எத்தகைய வேலையாக இருந்தாலும் முதல் ரிங்கிலேயே எடுத்துவிடும் முகி இன்று பல அழைப்புகள் சென்றும் ஒன்றிற்கு கூட பதில் அளிக்கவில்லை.

அதுவே முகி பெரிய ஆபத்து ஒன்றில் சிக்கியுள்ளான் என்பதை பார்த்திக்கு அறிவுறுத்தியது.

அந்நேரத்திலும் உறங்க முடியாது கூடத்தின் நீள் இருக்கையில் அமர்ந்திருந்த முகியின் மனமும் சிந்தனையும் எங்கோ இருந்தது.

எதை எதையோ நினைத்து பயந்தவனாக அமர்ந்திருந்தான்.

பார்த்தியின் அழைப்புகள் யாவும் கண்டிருந்தாலும் அதனை ஏற்கும் மனநிலை சுத்தமாக அவனுக்கு இல்லை.

எப்போதும் முகத்தில் நிறைந்திருக்கும் அவனது புன்னகை இன்று உறைந்திருந்தது.

இதற்கு மேலும் உறங்காது இருந்தால் மருத்துவமனையில் கவனம் சிதறுமென்று எண்ணியவனாக இருக்கையிலிருந்து எழுந்து படுக்கை அறையை நோக்கிச் செல்ல… காலிங் பெல்லின் சத்தம் அவனை திடுக்கிடச் செய்தது.

யாரென்று யோசிக்கும் முன்னரே அவனின் மனதை பயம் கவ்வி பிடித்தது.

இரண்டு மூன்று முறை ஒலித்த காலிங் பெல்லின் அழைப்பு நின்றிருக்க… முகி மூச்சினை சீராக வெளியெடுக்க, கதவினை தட்டும் சத்தம் அவனின் மனதை நடுங்கச் செய்தது.

எதற்கு இந்த பயமென்று தெரியாமலே பயந்து கொண்டிருந்தான். மொத்தத்தில் அவன் அவனாகவே இல்லை. ஏதோ அவனை ஆட்டுவித்தது.

அந்நேரம் முகியின் அலைபேசியும் அதிர்ந்து சத்தமிட வெளிப்படையாகவே நடுங்க அலைபேசியை கையில் எடுத்தவன் பார்த்திபனிடமிருந்து அழைப்பு என்றதும் ஆசுவாசம் கொண்டவனாக எச்சிலைக் கூட்டி தொண்டை ஏறி இறங்கிட விழுங்கியவன்… பார்த்திபனிடம் பேசும் மனநிலை சுத்தமாக இல்லாததால், ஒளி(லி)ரும் அலைபேசியையே வெறித்தவனாக கைகளில் இறுக்கியபடி பார்த்திருந்தான்.

முழுதாக ஒலித்து ஓய்ந்துபோன அலைபேசி இப்போது குறுந்தகவல் வந்ததற்கு அடையாளமாக மிளிர்ந்து அணைய…

அதனை திறந்து பார்ப்பதற்கே அஞ்சியவன் மொத்தமாக வியர்வையில் நனைந்திருந்தான்.

நோட்டிபிக்கேஷன் பாப் அப்பில்… பார்த்திபனின் பெயர் தெரிய, தளர்ந்து போனவனாக அதனை திறந்து பார்த்தான்.

“ஓப்பன் தி டோர் முகி.”

பார்த்திபன் அனுப்பியிருந்தான்.

உடனே பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்க… அவனின் அலைபேசி ஒலி கதவுக்கு உள்ளேயிருந்த முகிக்கும் கேட்டதும்.

இருப்பினும் கதவினை திறக்க அவனால் முடியவில்லை. கடந்த நாட்கள் அவனை எளிதில் எதையும் நம்ப விடவில்லை.

பார்த்திபன் அழைப்பினை ஏற்றதும்…

“அத்தான் நீங்க தானா?” என நடுங்கிய குரலில் வினவினான்.

“ஹேய் முகி நான்தான். எதுக்கு பயம்” என பார்த்திபன் கேட்டு முடிக்கும் முன் கதவினை திறந்த முகி பார்த்திபனை கட்டிக்கொண்டான்.

“அத்தான்” என்று அரற்றிய முகியின் கண்களில் ஈரம். தான் அணிந்திருந்த சட்டையின் வழி நெஞ்சில் ஈரத்தை உணர்ந்த பார்த்திபன், முகியை தன்னிலிருந்து பிரித்து…

“என்னடா இது சின்ன பிள்ளை மாதிரி” எனக் கேட்டவாறு முகியின் கண்களை துடைத்தவன்… “இப்போ நீ அழற அளவுக்கு என்னாச்சு?” என வினவினான்.

இத்தனை நாள் யாரிடமும் சொல்ல முடியாது மனதோடு போட்டு அழுத்திக் கொண்டிருந்தவன் பார்த்திபனை கண்டதும் பட்டென மனதில் ஏற்பட்ட நிம்மதியில் தன்னை மறந்தவனாக அவனை அணைத்திருந்தான்.

இந்நொடி பார்த்திபன் கேட்ட கேள்வியில் சுதாரித்தவன்,

“நத்திங் அத்தான். பார்த்து ரொம்ப நாளாச்சா அதான்” என்று சமாளித்தான்.

முகியின் சமாளிப்பு பார்த்திபனுக்கு புரியாமல் இல்லை. அவனின் குரலில் இருந்த தடுமாற்றமே அதனை உணர்த்தியது.

“சரி எவ்ளோ நேரம் இப்படி வெளியவே நிக்கிறது. பேசாம நான் திரும்பிப் போயிடவா” என்று பார்த்திபன் சூழலை இலகுவாக்க பேசிய பின்னரே,

“அச்சோ… சாரி அத்தான் உள்ள வாங்க” என்று பார்த்திபனை வீட்டிற்குள் அழைத்த முகி, “இந்த அறையில் ரெபிரஷ் பண்ணிக்கோங்க அத்தான். நான் டீ கொண்டு வரேன்” என்று பார்த்திபனுக்கு ஒரு அறையை காட்டிவிட்டு கிச்சனிற்குள் சென்றான்.

முகி தேநீர் கலப்பதற்கு முன்பு தன்னை சுத்தப்படுத்தி ஆடை மாற்றி வந்த பார்த்திபன் முகியைத் தேடி அடுக்கலைக்குள் வந்திருந்தான்.

“இங்கயே வந்துட்டீங்களா?” என்ற முகி, “ஹாலில் உட்காருங்க அத்தான் கொண்டு வரேன்” என்றான்.

ஆனால் பார்த்தி கூடத்திற்கு செல்லாது, அடுக்கலையில் இருந்த மேடையில் அமர்ந்தான்.

முகி தேநீர் வார்ப்பதில் கவனமாக இருக்க… பார்த்திபன் பல கதைகள் பேசினான். இடைப்பட்ட நாட்களில் நடந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டான். மருதுவை கடத்தியது முதல் அவனை விட்டது வரையிலான யாவும் கூறினான்.

முகியிடம் “ம்” என்பதை தவிர வேறெந்த பேச்சுமில்லை.

மருதுவை பற்றி சொல்லிய போதும் அவனிடம் அதே அமைதி தான். பழைய முகியாக இருந்திருந்தால் மருது என்ற பெயர் கேட்டதுமே அவனிடம் அனல் தெறித்திருக்கும்.

ஆனால் இப்போதோ?

பார்த்திபன் பேசுவது அவனின் கருத்தில் பதிந்ததா என்பதே சந்தேகம் தான். அவன் தனக்குள் எதையோ நினைத்து உழன்று கொண்டிருந்தான்.

அதனையெல்லாம் பொருட்படுத்தாது பேசிக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு முகியிடம் என்னவோ சரியில்லை எனத் தோன்றிய போதும் பேசுவதை நிறுத்தவில்லை.

பார்த்திபனின் கையில் தேநீர் கோப்பையை கொடுத்த முகி…

“ஹாலுக்கு போகலாம் அத்தான்” என்று சென்றுவிட… செல்லும் முகியை ஆராய்ச்சியாய் பார்த்தான் பார்த்திபன்.

முகி கொடுத்த தேநீரை ஒரே மடக்கில் விழுங்கியவன் குவளையை சிங்கில் போட்டுவிட்டு முகிக்கு எதிரே வந்து அமர்ந்தான்.

“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க அத்தான்” என்ற முகி தானும் எழுந்து செல்ல முற்பட…

“என்ன பிரோப்ளேம் முகி?” என நேரடியாகக் கேட்டிருந்தான் பார்த்திபன்.

அவனின் கேள்வியில் அதிர்ந்தாலும்,

“எனக்கு என்ன பிரோப்ளேம் அத்தான். ஒன்னுமில்லையே!” என்றான். வரவழைக்கப்பட்ட நிதானத்துடன்.

“எதுவுமில்லைன்னா ஓகே தான்” என்ற பார்த்திபன்… “மலரை அடிக்குற அளவுக்கு என்னாச்சு உனக்கு?” எனக் கேட்டிருந்தான்.

“அது… அது வந்து அத்தான்” என திணறிய முகி, “பெர்சனல் அத்தான்” என்று பார்த்தியின் முகம் காணாது குனிந்தபடி கூறினான்.

“ஹோ… பெர்சனல்” என்ற பார்த்திபன், “சொல்லு நானும் தெரிஞ்சிக்கிறேன்” என்று பிடியாக நின்றான்.

பெர்சனல் என்று சொன்னால் பார்த்திபன் விட்டுவிடுவானென நினைத்து தான் முகி அவ்வாறு கூறினான். ஆனால் பார்த்திபன் தனக்கு தெரிந்தே ஆகவேண்டுமென்கிற தோரணையில் அவன் முன் பிடிவாதமாக நின்றிருந்தான்.

“சொல்லாம உன்னை விடப்போறதில்லை” எனும் தீவிரம் பார்த்திபனிடம்.

“எதாவது இருந்தா சொல்லப்போறேன். எதுவுமே இல்லாதப்போ சொல்லு சொல்லுன்னா என்னத்த சொல்லுறது” என்று முகி குரல் உயர்த்தினான்.

“இவ்வளவுதான் உன்னால் கத்த முடியுமா முகி” எனக்கேட்ட பார்த்திபன் அதன் பின்னர் அவனிடம் எதுவும் கேட்காது அறைக்குள் நுழைய…

பார்த்திபனை பின்னிருந்து அணைத்திருந்தான் முகி.

“சாரி அத்தான். சாரி. உங்ககிட்ட நான் கத்தியிருக்கக்கூடாது” என்ற முகி “இதிலிருந்து எப்படி வெளிய வரதுன்னே தெரியல அத்தான். உங்களையும் இதில் மாட்டிவிட வேண்டான்னு தான் இப்படி” என்றவன் தான் சிக்கியிருக்கும் சூழலைக் கூறினான்.

முகி சொல்வதை எவ்வித குறுக்கீடும் இல்லாது கேட்ட பார்த்திபன்… முகியை துன்னுடனே படுக்க வைத்துக் கொண்டான்.

பார்த்திபனிடம் எல்லாம் சொல்லி விட்டதாலோ என்னவோ பல நாட்கள் முகியை நெருங்கிடாத உறக்கம் அவனை ஆட்கொண்டது.

முகியை பார்த்திபனுக்கு அவ்வளவு பிடிக்கும். எவ்வித காரணமும் எதிர்பார்ப்புமின்றி அவனை அவனுக்காகவே ஏற்ற உறவல்லவா அவன். பார்த்திபன் மீது முகி கொண்ட அன்பு சுயநலமற்றது.

முகியை உறக்கம் தழுவிட… பார்த்திபனின் உறக்கம் எங்கோ சென்றிருந்தது.

அத்தனை நேரம் கார் ஓட்டிய அல்லுப்பும் சோர்வும் இருந்த போதும் அவனை தூக்கம் நெருங்கவில்லை.

முகியின் பாரம் இறங்கிட… பார்த்திபனிடம் குடிகொண்டது.

அதனை சரிசெய்து எப்படி முகியை வெளிக்கொண்டுவர என்ற சிந்தனையிலேயே உறக்கம் மறந்த பார்த்திபன் பொழுது நன்கு புலரும் வேளையில் ஒரு தீர்வினை கண்டு கொண்டவனாக தன் வேகத்தில் அதனை கையாண்டான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் முகிக்கு எவ்வித பாதிப்புமின்றி அவனை அதிலிருந்து மீட்டிருந்தான் பார்த்திபன்.

*****

தன் வீட்டில் உடலில் ஏற்பட்ட காயங்களுடன் அடிப்பட்டு கிடந்த நபர் யாரென்று தெரியாத போதும் முகி தானொரு மருத்துவனாக செயல்பட்டு அந்நபருக்கு மருத்தவம் பார்த்திருந்தான்.

அவர் கண் விழிக்க காத்திருந்தவன் உறக்கம் வராது தொலைக்காட்சியை ஆன் செய்து சேனல்களை மாற்றியபடி இருக்க… செய்தி சேனல் ஒன்றில் “போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி தப்பி ஓட்டம்” என்று அந்நபரின் புகைப்படம் ஒளிபரப்பாக முகி அரண்டு விட்டான்.

தான் சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கும் நபர் போலீஸ் தேடும் குற்றவாளியென தெரிந்ததும் முகி காவலர்களுக்கு தகவல் கொடுத்திட்டான்.

முகியின் உதவியோடு குற்றவாளி கைது செய்யப்பட… அதன் பின்னர் தான் முகிக்கு தலைவலி ஆரம்பமானது.

முகி பிடித்துக்கொடுத்தது… பல குற்றங்களுக்கு காரணமாக இருக்கும் மிகப்பெரிய கேங் ஒன்றின் தலைவன்.

அவன் யாரென்று முழுதாக தெரிந்தால் மலர் பயப்படுவாளென்று முகி மலரிடம் அவனொரு குற்றவாளியென மட்டும் கூறினான்.

மறுநாள் வீட்டை மலர் சுத்தம் செய்யும்போது கூடத்திலிருந்த டீபாயிக்கு அடியில் ஒரு பென் ட்ரைவ் கிடந்தது.

முகியுடையதாக இருக்குமென அதனை எடுத்து அவனது மருத்துவ குறிப்பேடுகள் இருக்கும் கப்போர்டில் பத்திரப்படுத்தியிருந்தாள்.

அன்று கல்லூரி முடித்து மருத்துவமனைக்கு வந்த முகியை பார்ப்பதற்கு நோயாளி போன்று மூவர் வந்திருந்தனர்.

அவர்களிடம் உடலில் என்னவென்று அவன் கேட்க…

“பென் ட்ரைவ் எங்க?” என்று அவர்கள் சம்மந்தமில்லாது கேட்டனர்.

முகி ஒன்றும் புரியாது குழம்பினான்.

“சும்மா நடிக்கத டாக்டர். எதுவுமே தெரியாமலா எங்க தலைவனை போலீசில் பிடிச்சு கொடுத்த” என்று அவர்கள் முகியை பலவாறு மிரட்ட…

அப்போதுதான் முகிக்கு புரிந்து… வந்தவர்கள் நேற்று அவன் போலீசில் பிடித்துக்கொடுத்தவனின் ஆட்கள் என்று.

“இப்போ நீங்க போறீங்களா இல்லை நான் போலீசுக்கு கால் பண்ணவா” என முகி கேட்டதும்…

“நம்ம பாஸை வெளிய கொண்டுவர நாம வெளியில் இருக்கணும்” மூவரும் அங்கிருந்து சென்றிருந்தனர்.

“அவர்கள் கேட்ட பென் ட்ரைவ் என்னவாக இருக்கும்” என்ற யோசனையோடு வீட்டிற்கு வந்த முகி… நேற்று அந்த குற்றவாளியிடமிருந்து இங்கே வீட்டில் விழுந்திருக்கலாம் என்று தோன்ற கூடத்தையே தலைகீழாக புரட்டி போட்டு தேடினான்.

சத்தம் கேட்டு ஹாலிற்கு வந்து பார்த்த மலர்…

“என்ன மாமா வீட்டை இப்படி குப்பை மேடா மாத்திட்ட” எனக்கேட்டு, “திரும்பவும் வீட்டை பெருக்கனுமா?”என்று சொல்ல…

அப்போதுதான் முகிக்கு நேற்றும் வீட்டை சுத்தம் செய்ய பெருக்கியிருப்பாள் என்று நினைவில் வந்தது.

“எதாவது பென் ட்ரைவ் கிடைத்ததா மலர்” என்றான்.

“நேத்து டீபாயிக்கு அடியில் இருந்து எடுத்தேன். உங்க கப்போர்டில் வச்சேன். நீங்க பார்க்கலையா?” என்றபடி எடுத்து வந்து கொடுத்தாள்.

அதனையே சில கணங்கள் பார்த்த முகி… மலர் தன்னை ஆராய்வது கண்டு, “இதுதான் நான் தேடிய பென் ட்ரைவ்வான்னு பார்த்தேன்” எனக்கூறி அறைக்குள் புகுந்து கொண்டான்.

மடிக்கணினியில் அதனை பொருத்தி பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் தெறித்து விழுந்தன.

இளம் பெண்களை போதை பொருட்களுக்கு பழக்க படுத்தி… அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்து தவறான முறையில் காணொளி எடுத்து வைத்து அதில் வியாபாரம் செய்து வருவதற்கான அனைத்து விதமான தகவல்களும் அதில் இருந்தது.

அத்தோடு அதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதோ அவர்களின் பெயர்களும்… அவர்களுக்கு இதிலிருக்கும் சவாகாச அளவுகளும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் பல பெரும் புள்ளிகளும் அடக்கம்.

அத்தோடு அதில் பல கோடிகள் சம்மந்தப்பட்டிருப்பதும் தெரிய முகிக்கு அதிர்ச்சி.

மனதில் பெரிய பாரம் ஏறிய உணர்வு.

சில விடயங்கள் தெரியாதவரை தான் நம் மனதிற்கு நிம்மதியும் அமைதியும். தெரியக்கூடாத ஒன்றை தெரிந்து கொண்டுவிட்டால் நம் சுயமே தொலைந்தது போலாகிவிடும்.

இங்கு முகியும் அப்படித்தான் சிக்கிக்கொண்டான்.

அதில் பல அரசியல்வாதிகள் முதல் அவர்களுக்கு கையாட்களாக காவல்துறை அதிகாரிகளே இருக்க யாரிடம் சென்று புகார் கொடுப்பதென்று முகி குழம்பிப்போனான்.

அத்தோடு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் புதிதாக சில பெண்களை கடத்தியிருப்பதாகவும், அவர்கள் பாம்பே கொல்கத்தா போன்ற வேற்று இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டிருக்க அவர்களையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைத்த முகிக்கு எப்டியென்று வழி தான் தெரியவில்லை.

அதில் அவனுள்ளே அழுத்தம் ஏற்பட தன்னைச் சுற்றி நடப்பதையே கவனிக்கத் தவறினான்.

அடுத்தநாள் முகி கல்லூரி மருத்துவமனை இரண்டிற்கும் செல்ல பிடிக்காது வீட்டிலேயே இருந்தான்.

கேட்ட மலரிடம் விடுமுறையென பொய்யுரைத்தான்.

விடுமுறை நாட்களில் கூட மருத்துவமனை சென்றுவிட்டு வருபவன் இன்று வீட்டிலிருப்பது உண்மையைதான் சொல்லுகிறான் என்று மலரும் அதற்கு மேல் ஒன்றும் கேட்காது கல்லூரி கிளம்பிவிட்டாள்.

அன்று மதியம் போல் முகியின் வீட்டிற்கு மருத்துவமனைக்கு வந்த மூவர் வந்திருந்தனர்.

வீட்டையே இரண்டாக புரட்டிபோட்டு பென் ட்ரைவ்வை தேடியவர்கள்…

முகியின் அரண்ட முகத்திலே கண்டுகொண்டு அவனை விசாரித்தனர்.

முகி தன்னிடம் இல்லையென எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடவில்லை.

“நாளைக்கு திரும்ப வருவோம். போலிஸ் கிட்ட போகனும் நினைக்காத அங்க முக்கால்வாசி பேர் எங்க ஆளுங்கதான்” என்று எச்சரித்து சென்றனர்.

இப்போது போலிஸிடமும் நம்பி செல்ல முடியாத நிலை அவனுக்கு. கடத்தியிருக்கும் பெண்களை அப்படியே விட்டுவிடவும் அவனுக்கு மனம் வரவில்லை.

தனக்குள்ளே உழன்று மருகினான்.

மாலை வீட்டிற்கு வந்த மலர் ,

“ரெண்டு நாளா உனக்கு என்னாச்சுன்னே தெரியல. எதாவது காணோம் தேடனுன்னா இப்படியா வீட்டை மாத்துவாங்க” என்று புலம்பிக்கொண்டே கலைந்து கிடந்த வீட்டை ஒதுக்கி வைக்கத் தொடங்கினாள்.

தவறு நேர்வது தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத தன்னிலையை வெறுத்தவனாக நிகழ் புரியாது திரிந்தான்.

மறுநாள் மருத்துவமனைக்கு சென்ற முகிக்கு அலைபேசியில் சில படங்கள் யாரோ அனுப்பியிருந்தன.

அவை யாவும் காலை முதல் மலரின் தினசரி நடவடிக்கைகள் நிழற்படங்களாக.

முகிக்கு பெருத்த அதிர்வு.

கூடவே அழைப்பும் வர,

“பென் ட்ரைவ்வை நீயா கொண்டு வந்து கொடுத்திடு… இல்லை உன் பொண்டாட்டியும் பார்சல் ஆகிடுவா(ள்)” என்று மிரட்டினர்.

அடுத்த நொடி மலரின் கல்லூரிக்கு கிளம்பியவன் அவளை ஊருக்கு அனுப்பி வைத்த பின்னர் தான் தன் கையிலிருக்கும் பொருளின் வீரியம் உணர்ந்தான்.

இப்போது பிரச்சினை என்னவென்றால் முகியிடம் அந்த பென் ட்ரைவ் இருக்கும் வரை தான் அவனின் உயிருக்கு பாதுகாப்பு. கொடுத்த நிமிடமே தங்களைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொண்டவனை அவர்கள் உயிருடன் விட்டு வைப்பார்களா என்ன?

தனக்கு ஒன்றென்றாலும் கூட அதில் மாட்டியிருக்கும் பெண்களை காப்பற்ற முடியாதது தான் முகியை பெரிதும் வருத்தியது.

பார்த்திபனின் செல்வாக்கிற்கு முன்பு இதெல்லாம் ஒரு விடயமே இல்லையென்பது அந்நேரம் அவனின் மூளையில் உதிக்காது போனது முகியின் விதி.

தெரிந்திருந்தால் இத்தனை நாட்கள் மன உளைச்சல் முகிக்கு இல்லாது இருந்திருக்கும்.

முகி உறங்கியதும் தனக்குள் திட்டம் தீட்டிய பார்த்திபன் தன்னுடைய உயரத்தை உபயோகித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவில் உயர் பதிவியில் இருக்கும் சிறப்பு அதிகாரியை மத்திய மந்திரி ஒருவரின் உதவியில் அனுகியவன் முகியிடமிருந்த பென் ட்ரைவ் பற்றி கூறி அதனை அவரிடம் ஒப்படைத்தும் இருந்தான்.

அவர்களுக்கே அதிலிருந்த விடயங்கள் அதிர்ச்சியே. இந்தளவிற்கு அவர்களே எதிர்பார்க்கவில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சீக்ரெட் மிஷன் ஒன்றை செய்து அக்கூட்டத்தையே மொத்தமாக கைது செய்திருந்தனர்.

வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தயாராக வைத்திருந்த பெண்களையும் மீட்டனர்.

இதற்கு காரணமாக இருந்த பார்த்திபனை அந்த அதிகாரி நன்றி சொல்லி பாராட்டிட…

“நான் இதில் சிக்கியிருக்கும் என்னுடைய மச்சான் உயிரை காப்பாற்ற நினைத்து சுயநலத்தோடு தான் இதை உங்களுக்கு தெரியப்படுத்தினேன்” என்று உண்மையைக் கூறினான் பார்த்திபன்.

“இந்த கூட்டம் பிடிபட காரணம் என்னுடைய மச்சான் டாக்டர் முகிலன் தான்” என்று மொத்த கிரடிட்டையும் முகிக்கு சேர்ப்பித்தான்.

முகியின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தை முற்றும் முழுதாக சரிசெய்து… முகிக்கு பெருத்த நிம்மதியை கொடுத்திருந்தான் பார்த்திபன்.

இப்படி தன்னைச் சார்ந்தவர்களுக்கு வரும் துயரங்களை சரி செய்து… பல எதிரிகளை தான் சம்பாரிப்பதை பார்த்திபன் உணர்ந்தே இருந்தான்.

ஆனால் அதற்கெல்லாம் அஞ்சுபவன் இல்லையே இந்த பார்த்திபன்.

இதுவரை அதிரடியாக அனைத்தும் செய்து கொண்டிருந்த பார்த்திபன் இனி முற்றாக கயலின் காதலானாக மட்டுமே!

error: Content is protected !!
Scroll to Top