அத்தியாயம் 🌾 48 :
முகிலன் பார்த்திபனை ஆரத் தழுவியிருந்தான். நிமிடங்கள் பல கரைந்தும் முகிலன் விலகுவதாக இல்லை.
கிட்டத்தட்ட ஒரு வாரங்களாக மனதோடு புழுங்கிய புழுக்கத்தின் அளவு அவன் மட்டுமே அறிந்தது.
தனக்குள் மருகி தனக்குள் அரண்டு தனக்குள் அழுத்தி என்று அந்த நாட்கள் மனதால் அவன் கொண்ட துன்பம் எளிதில் சொல்லிட முடியாது.
“கிளம்பு முகி.”
தன்னிலிருந்து பிரித்த முகிலனிடம் கூறினான் பார்த்திபன்.
“எங்க அத்தான்?”
“சொன்னாதான் வருவியோ?”
பார்த்திபன் அவ்வாறு கேட்ட பின்னர் முகி ஒரு வார்த்தை வாய் திறக்கவில்லை. மௌனமாக அவனுடன் சென்றான்.
“ஊருக்கு அழைத்து செல்கிறாரோ?” என்று நினைத்தவன், கார் செல்லும் சாலையை வைத்து எங்கென்று கண்டுகொண்டான்.
அங்கிருக்கும் தன்னுடைய கடற்கரை பங்களாவிற்கு தான் அழைத்து வந்திருந்தான்.
“உங்களுக்கு வொர்க் இருக்கா அத்தான்” என்ற முகியிடம் அதற்கான பதில் சொல்லாது…
“உனக்கு எந்த ரூம் பிடிச்சிருக்கோ தங்கிக்கோ” என்ற பார்த்திபன், “மாம் அண்ட் டாட் வந்திட்டு இருக்காங்க. அவங்க உன் படிப்பு முடியும் வரை உன்னோட இருப்பாங்க. இனி நீ படிப்பை மட்டும் பார்த்தா போதும். ஜாப் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான்.
இதை செய்கிறாயா என்றில்லாமல் இதைத்தான் நீ செய்ய வேண்டுமென்ற நிலையில் அனைத்தையும் பார்த்திபன் கூற, முகி தங்கியிருந்த வீட்டை காலி செய்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் பார்த்திபன் ஏற்பாடு செய்த ஆட்கள் கொண்டு வந்து இறக்கினர்.
முகிக்கு மறுத்து பேசிட பார்த்திபன் வாய்ப்பே கொடுக்கவில்லை.
‘முகி தனக்கிருக்கும் கஷ்டத்தை கூட வெளியில் சொல்லிட முடியாது எவ்வளவு தவித்திருப்பான்’ என நினைத்த பார்த்திபன்… ‘அவனுடன் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இருந்திருந்தால் உள்ளுக்குள்ளே வைத்து மருகியிருக்க மாட்டானோ’ என்று எண்ணம் எழ அவனுடன் தங்களில் யாராவது உடனிருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
திருமணம் முடிந்துவிட்டாலும் மலரும் சிறு பெண் தானே. முகியும் மனதாலும் சரி வயதாலும் சரி முதுமை அடைந்தவனில்லையே.
ஆதலால் மங்கை மற்றும் தேவராஜனை அவர்களுடன் தங்க வைத்திட ஏற்பாடு செய்தான்.
அத்தோடு சிங்கப்பூரில் லிண்டாவினால் தனியாக அனைத்தையும் சமாளிக்க முடியாது திணறிக் கொண்டிருக்கிறாள் என்பது அவள் சொல்லாவிட்டாலும் தினசரி நிகழ்வுகளை அவள் பகிர்வதிலேயே பார்த்திபன் அதனை உணர்ந்தான்.
தேவராஜன் முகியுடன் சென்னையில் தங்கிக்கொண்டால், இங்கு தொழிலை அவர் பார்த்துக்கொள்ள டெல்லை சிங்கப்பூர் அனுப்பி வைத்திடலாமென்று ஒரே செயலில் இரு தீர்வுகளுக்கு வழி செய்தான்.
அதன்படி முகியின் விடயத்தை தேவராஜனிடம் மட்டும் தெரிவித்து தன் யோசனையைக் கூறிட தேவராஜனும் சென்னை வர ஒப்புக்கொண்டார்.
தேவராஜன் வந்தால் மங்கையும் உடன் வந்திடுவார் என்பது பார்த்திபனின் கணிப்பு. அது பொய்யாகவுமில்லை.
மங்கையிடமும் உண்மையை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் அடுத்து மனதில் போட்டு வருத்திக்கொள்வார். அதனாலேயே தந்தையின் வாயிலாக தாயையும் வர செய்திருந்தான்.
பார்த்திபன், தான் சென்னை வந்ததையையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான்.
முக்கியமாக நடந்து முடிந்த விடயம் கயலுக்குத் தெரியக்கூடாதென்று நினைத்தான். முகிக்கு ஒன்றென்றால் கயலின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
தான் வந்த வேலை முழுதாக சரி செய்திட ஒருவர் தொழிலிடத்தில் உடனிருக்க வேண்டும். இப்போது அது பார்த்திபனால் முடியாது. அவன் கிராமத்திற்கு சென்ற வேலை இன்னும் நிறைய உள்ளது. அத்தோடு டெல்லும் சிங்கப்பூர் சென்றிட வேண்டும். சென்னையை தலைமையிடமாக மாற்றியிருந்தாலும், பல வருடங்களாக சிங்கப்பூர் வாரியர் தான் முதன்மை என்பதால் அதனை எளிதில் யாரிடமோ விட்டுவிட முடியாது. தேவராஜன், மங்கை சென்னை வருவதற்கு, டெல் சென்றால் தான் சிங்கப்பூரில் சரிவருமென்றும், சென்னையில் பார்த்துக்கொள்ள தேவராஜன் இங்கு வரவேண்டுமென்றும் தன் தொழிலை காரணமாக கயலிடம் கூறினான்.
தேவராஜன் சென்னை செல்கின்றாரென்றதுமே… ஏற்கனவே அவரை தனித்து சிங்கப்பூர் அனுப்பி வைத்து தான் பட்டது போதுமென்று பார்த்திபன் எதிர்பார்த்தைப்போல் மங்கையும் உடன் கிளம்பி விட்டார்.
தேவராஜன் மற்றும் மங்கையை தனித்து விட முடியாதென்று அவர்களை காரணம் காட்டி, முகியை அவர்களுக்குத் துணையாக தங்க வைப்பதாக கயலிடம் சொல்லி முகியின் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான்.
சில மணி நேரங்களில் தனக்காக யோசித்து பலவற்றை கணக்கிட்டு திட்டங்கள் வகுத்த பார்த்திபனை அந்நொடி முகிக்கு ரொம்பவே பிடித்தது.
முக்கியமாக கயலுக்கு நோகக்கூடாது என்பதற்காக, அதே சமயம் அவளிடம் பொய்யும் சொல்லாது சமாளித்தவனின் அக்கறை மிகவும் பிடித்தது.
“தேங்க்ஸ் அத்தான்.”
“நீ என் மச்சான் டா. உன்னை விடமாட்டேன்” என்ற பார்த்திபன் “இனி எந்தவொரு பிரோப்ளேம் வந்தாலும், என்கிட்ட சொல்லிடணும் மறைக்கக்கூடாது” என்றான்.
“சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒண்ணுன்னா வெளியில் சொல்ல தோணாது அத்தான்.
காலேஜ் லைஃப் என்ஜாய் பண்ணும் வயதில் கயல் எனக்காகத்தான் வயலில் இறங்கினாள். அவளை கஷ்டப்படுத்திடக் கூடாது என்பதற்காக எது நடந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன்.
இப்போதான் நீங்க இருக்கிங்களே. இனி எனக்கென்ன கவலை.”
அந்நேரம் பார்த்திபனுக்கு முகியை தன் பிள்ளையாக நினைக்கத் தோன்றியது.
மனதிலிருக்கும் சோகத்தைக்கூட பகிர்ந்துகொள்ள துணையில்லாத வாழ்வு என்ன வாழ்வு.
துன்ப நிலையில் உடன் நானிருக்கிறேன் என்று பிடித்துக்கொள்ள கரம் கொடுக்க ஆளிருப்பது எத்தகைய ஆறுதல் அளிக்கும். இனியெப்போதும் அத்தகைய ஆறுதலை முகிக்கு தான் கொடுத்திட வேண்டுமென்று முடிவு செய்தான் பார்த்திபன்.
“ஈவ்னிங் வந்திடுவாங்க முகி.”
பார்த்திபன் சொல்லிக் கொண்டிருக்கும் போது டெல் வீட்டிற்குள் நுழைந்தான்.
“நீ எப்போடா வந்த? வரேன்னு சொல்லவேயில்லையே” எனக்கேட்ட டெல்லிடம்,
“டாட் வருவாங்க. டீடெயில்ஸ் எல்லாம் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு நீ சிங்கப்பூர் கிளம்பு.
அங்க லிண்டாவால் ஹேண்டில் பண்ண முடியல” என்றான்.
விட்டால் போதுமென்று நினைத்திருந்த டெல்லும் சரியென உடனடியாக ஒப்புக்கொண்டான்.
டெல்லிற்கு புதிய இடம் புதிய சூழல்… உணவு முறை என்று எதுவுமே ஒத்து வரவில்லை. பழகிக்கொள்ளலாம் என்றாலும், அவனின் ஆணி வேர் வேறல்லவா! இங்கு ஊன்றி நிற்க முடியவில்லை.
சிங்கப்பூர் செல்லென்றதும் டெல்லின் முகத்தில் வந்துபோன ஒளி, ‘தேவையில்லாது தனக்காக டெல்லை வதைத்துவிட்டோமோ’ என நினைத்த பார்த்திபன்,
“சாரிடா… இங்க உனக்கு செட்டாகுமான்னு நான் தின்க் பண்ணாம விட்டுவிட்டேன்” என தன் தவறுக்கு வருந்தினான்.
“என்னடா புதுசா சாரியெல்லாம்” என்ற டெல்… “உனக்காக செய்யாம யாருக்காக செய்யப்போறேன்” என்றவனாக முகியை பார்த்து நலம் விசாரித்து சில நிமிடங்கள் அவனுடன் பேசிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்றான். டெல் அங்குதான் தங்கியிருக்கின்றான்.
டெல் சென்றதும் பார்த்திபனின் முகத்தை தயங்கி தயங்கி ஏறிட்ட முகி…
“அத்தான்” என்று விளித்து எதுவும் கூறாது அவனின் முகம் பார்த்தான்.
முகி கேட்க வருவது புரிந்த போதும் நீயாகக் கேள் என்பதைப்போல் பார்த்திபன் அமர்ந்திருந்தான்.
“மலர்… வரலையா?”
ஒரு வழியாகக் கேட்டு விட்டான்.
“காலேஜ் லீவ் சொல்லியிருக்காள். உடனே வந்தா கயலுக்கு டவுட் வரலாம். ஒரு ரெண்டு நாள் கழித்து அனுப்பி வைக்கிறேன்” என்ற பார்த்திபன்,
“இனியொரு முறை மலர் மேல் கை வைக்கிறது முன்ன ஆயிரம் முறை யோசிக்கணும். மாணிக்கம் சித்தப்பா உன்னை எதுவும் கேட்கமாட்டாருன்னு தைரியமா” என்று அவன் கேட்ட தோரணையிலேயே முகி இரண்டடி பின் சென்றான்.
“அது வந்து அத்தான். அன்னைக்கு டென்ஸ்ட்… ஐ லாஸ்ட் மை கன்ட்ரோல். அவளும் பிடிவாதம் பிடித்தாள். அதான்…” பார்த்திபனின் முகம் காணாது தலையை குனிந்தவாறு கூறினான்.
“பெண்ணை அடிப்பதெல்லாம் வீரமில்லை முகி. அது ஒரு ஆணா வெட்கப்பட வேண்டியது. ஆணின் பலம் பெண்ணை பாதுகாப்பதற்கு தான். அடக்குவதற்கு இல்லை.
அடித்து தான் உன் பேச்சை கேட்க வைக்க வேண்டுமென்றில்லை” என்றவன் “மலருக்கு உன்னால ஒரு கஷ்டம்னா கேட்க நானிருக்கேன்” என்றான்.
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உறவுகளை பார்த்து பார்த்து தாங்கும் குணம் எளிதில் யாருக்கு வரும்.
தேவராஜனை லூங்கிடமிருந்து மீட்க பார்த்திபன் செய்த அதிரடியை நினைத்து பார்த்த முகிக்கு அக்கணம் பார்த்திபன் விந்தையாகத்தான் தெரிந்தான்.
புயலாக சுழன்று அடிப்பவனிடம் உறவுகளுக்கான இத்தகைய மென்மையை முகி எதிர்பார்க்கவில்லை.
ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்தல்லவா செய்கின்றான்.
அன்று மாலை தேவராஜனும், மங்கையும் வந்துவிட… அவர்களுடனே இரு நாட்கள் இருந்த பார்த்திபன் டெல்லிடமிருந்த பொறுப்புகளை தந்தையிடம் மாற்றி கொடுத்து… வேலைக்கான விளக்கங்களையும் குழப்பமில்லாது தெளிவாக்கிவிட்டு டெல்லை சிங்கப்பூர் அனுப்பி வைத்து, அங்கு தனக்கிருந்த வேலைகளையும் முடித்துக்கொண்டு இரண்டாம் நாள் மாலை கிராமத்திற்கு புறப்பட்டு விட்டான்.
இந்த இரண்டு நாளும் கயலுக்கு அவன் அழைக்கவில்லை.
டெல் சிங்கப்பூர் செல்வதால், அங்கு பார்க்க வேண்டிய வேலைகளைப்பற்றி பேசி பல முடிவுகள் எடுப்பதற்கே பார்த்திபனுக்கு நேரம் சரியாக இருந்தது.
இத்தனை நாள் அவள் முகத்தில் விழித்து அவள் முகித்திலேயே அன்றைய நாள் முடிவதென கயலுடனே பயணித்த அவனுக்கு அந்த இரு நாட்களும் எப்போதடா கடக்கும் என்ற நிலைதான்.
ஆதலால் வேலைகள் முடிந்த நொடி, மூவருக்கும் ஆயிரம் பத்திரங்கள் சொல்லியதோடு காவலுக்கும் ஆட்களை நியமித்துவிட்டு தன்னவளை காண கிளம்பியிருந்தான்.
செல்லும் வழி யாவும் கயலின் நினைவோடு தான் பயணித்தான்.
“இந்த ரெண்டு நாளே உன்னை பார்க்காம என்னவோ செய்யுதே. இத்தனை வருஷங்கள் நீயில்லாம எப்படி போச்சுன்னே தெரியல” என வாய்விட்டே புலம்பிக்கொண்டான்.
“இந்நேரம் கிளம்பி பாதி நைட்டுக்கு போய் சேருவ. பொறுத்து நைட்டு சாப்பிட்டு கிளம்பு” என்று சொல்லிய மங்கையின் பேச்சை கேட்காது கிளம்பியவன் அவர் சொல்லியதை போலவே நள்ளிரவில் ஊர் வந்து சேர்ந்தான்.
இருளிலும் அத்தனை ரம்மியமாக இருந்தது கயலின் வீடிருந்த சூழல்.
வாய்க்காலில் ஓடும் நீரின் சலசலப்பு தாளமின்றி தவழும் இசையாய் காதினை குளிர்வித்தது.
அதனை ரசித்தபடி நின்றிருந்தவன் திண்ணையில் படுத்திருந்த மாணிக்கத்தை எழுப்பி, வீட்டிற்குள் சென்று படுக்கக் கூறினான்.
“வந்துட்டிங்களா?” என்று கேட்டவாறே எழுந்தவர்,
“முன்ன மாதிரி இப்போலாம் இந்த வாடைக்காத்து ஒத்துக்கிறது இல்லை தம்பி. மலரு அம்மா கூட படுக்குறேன்னு அங்க போயிட்டாள். கயல் ஒத்தையில இருக்குமேன்னு திண்ணையில் படுத்தேன்” என்றவர் அருகிலிருக்கும் தன் வீட்டிற்கு சென்றார்.
அவர் சென்று கதவடைக்கும் வரை பார்த்திருந்தவன், கயல் வீட்டின் கதவை இரண்டு முறை தட்டிவிட்டு நின்றிருந்தான்.
உள்ளிருந்து அரவமின்றிப் போக…
அலைபேசியை எடுத்து கயலுக்கு அழைத்தான்.
அடித்து ஓய்ந்து போகும் வேளையில் திரையை கூட காணாது அழைப்பை ஏற்றவளின் அரை உறக்க குரல் கூட அவனுள் போதையாய் இறங்கியது.
“ஹேய் பொண்டாட்டி கதவை திறடி… வெளிய நிக்கிறேன்.” ஹஸ்கி குரலில் கூறினான்.
அவனின் கிசுகிசுப்பான குரலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளின் மொத்த தூக்கமும் முழுவதுமாக கலைந்தது.
நேரத்தைப் பார்க்க… ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
முகத்தை தாவணி நுனியால் தேய்த்துக்கொண்டவள் உறக்கத்தில் கலைந்து முன்நெற்றியில் புரண்ட முடி கற்றைகளை சரி செய்தபடி எழுந்து சென்றாள்.
கயல் கதவை திறக்க… பயண களைப்பின் காரணமாகவும், நெடுந்தூரம் கார் ஓட்டி வந்த அலுப்பிலும் சோர்ந்து போன தோற்றத்திலும், நெற்றி தொட்ட கேசம் இரவு காற்றில் அலை அலையாய் அசைந்தாட முகம் கொள்ளா புன்னகையுடன் நின்றிருந்த பார்த்திபனின் முகம் கண்டதும், சூரியனை கண்ட திசையில் மலரும் சூரியகாந்தி மலராக மலர்ந்து நின்றாள் பார்த்திபனின் கயல்விழியாள்.
“அத்தான்” என்றவளின் குரலில் இரண்டு நாட்களாக அவனை காணாத ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
“கயல்” என்றவனின் அழைப்பிலும் அவளுக்கு நிகரான ஏக்கம்.
ஒருவரின் ஏக்கம் மற்றவரை தாக்கிட… ஒருவரது பார்வையில் ஒருவர் காதலை கொட்டிக்கொண்டு நின்றனர்.
அணைக்கத் துடித்த மனதை இருவருமே கட்டுப்படுத்தியபடி.
தாய் தந்தையை முகிக்கு துணையாக ஏற்பாடு செய்யும் போது கூட… இங்கு தானும் கயலும் ஒன்றாக தனித்திருக்க நேருமென்ற எண்ணம் சற்றும் அவனுக்கு நினைவில் வரவில்லை.
மாணிக்கம், கயல் ஒத்தையில இருக்கு என்று சொல்லிய பின்னரே நினைவு வந்தவனாக… ஆர்ப்பரிக்கும் காதலை அடக்கிக்கொண்டு அவள் முன் நிற்கின்றான்.
பெரியவர்கள் தங்கள் மீதுள்ள நம்பிக்கையிலேயே தாங்கள் தனித்து இருப்பதை பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என்று இருவருக்கும் புரிந்திருக்க… அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றிட வேண்டுமென்ற எண்ணமே மனதில் முதன்மையாகத் தோன்றியது.
தோன்றிய நொடி இருவருமே தங்களை மீட்டுக்கொண்டனர்.
“வாங்க அத்தான்” என்றவள் “எப்போ கிளம்புனீங்க இந்நேரம் வந்து நிக்கிறீங்க?” எனக் கேட்டாள்.
“உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு கயல். அதான் வேலையெல்லாம் முடிஞ்சதும், உடனே கிளம்பிட்டேன்” என்றவனின் காதல் பார்வை மட்டும் மாறவில்லை.
மனதை கட்டுப்படுத்தியவனால் நெஞ்சம் நிறைந்த காதலை கொட்டி கவிழ்ந்திடும் கண்களை ஒன்றும் செய்திட முடியவில்லை.
பார்த்திபனின் வார்த்தையும், காதலும் அவளுள் சில்லென்று இறங்கிட பெண்ணவள் மனதோடு துவண்டுப் போனாள்.
தன்னை மறைத்தவளாக,
“நைட் சாப்டிங்களா?” எனக் கேட்க,
“உன்னை சீக்கிரம் பார்க்கணுங்கிற எண்ணமே என்னை எங்கும் காரை நிறுத்தவிடல” என்று அப்போதும் தன் மனதை மறைக்காது உண்மையைக் கூறினான்.
“இவங்க கொஞ்சம் பேசாம இருக்கலாம்” என்று அவன் கூட்டும் காதல் அவஸ்தையில் வாய்விட்டே புலம்பினாள்.
அவளின் முணுமுணுப்பு கேட்டதும் அவனிடம் அட்டகாசமான சிரிப்பு.
“அச்சோ அத்தான்” என்றவள் வேகமாக அவனை நெருங்கி வாயில் கை வைத்து மூடினாள்.
“எதுக்கு இந்த நேரத்தில் பேய் மாதிரி சிரிக்கிறிங்க” என்றவள் கொஞ்சம் எட்டி சரளாவின் வீட்டை பார்த்தாள்.
“முதல்ல உள்ள வாங்க” என்றிட,
“அதுக்கு முதல்ல நீயென் வாயிலிருந்து கை எடுக்கணும்” என்றதோடு “சீக்கிரம் எடுத்திடு… இல்லைன்னா கிஸ் பண்ணிடுவேன்” என்று சொல்ல வேகமாக தன் கையை எடுத்துக் கொண்டு அவனையே அதிர்ந்துப் பார்த்தாள்.
“இப்போ வழியை விடணும்” என்றவன் அவளை இடையோடு கையிட்டு தூக்கி நகர்த்தி நிற்க வைத்து உள் நுழைந்தான்.
தாவணியின்றிய வெற்றிடையில் பட்ட அவனின் தொடுகை உள்ளுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்த சட்டென்று அவளின் முகம் செம்மை பூசிக்கொண்டது.
அதனை அவனுக்கு மறைக்கும் பொருட்டு அவன் முன்னிருந்து வேகமாக ஓடிவிட்டாள்.
கயலின் நிலையில் மென் புன்னகை சிந்தியவன், கதவை தாழிட்டுவிட்டு தனது அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கட்டிலில் விழ… அறையின் கதவு தட்டப்பட்டது.
கயலாகத்தான் இருக்கும் என்பது திண்ணம். இப்போது வீட்டில் அவர்கள் இருவர் மட்டும் தானே!
“காதல் இம்சை.” தனிமையில் அவளுடன் நிற்பது காதல் அலைகளை அவனுள் பேயாட்டம் போட வைக்க… அவள் அறைக்கே வருவது அவனை செல்லமாக திட்ட வைத்தது.
“லாக் போடல கயல்” என்றவன் அவள் முன் குதிக்கும் காதலை மறைக்கும் பொருட்டு அலைபேசியை கையில் எடுத்து தீவிரமாக ஆராய்வது போல் பாவனை செய்தான்.
உள்ளே வந்த கயலுக்கும் அவனுக்கு நிகரான படபடப்பு.
அதற்காக அவனை பட்டினி போட முடியாதே… அத்தோடு பசியில் உறக்கமும் வராது என்று நினைத்து வந்தவளின் கையில் பாலும் வாழைப்பழமும் இருந்தது.
“சொல்லு கயல்.”
அருகில் அவள் வந்தததை உணர்ந்தவன், நிமிர்ந்து முகம் காணாது கேட்டான்.
“பால் அத்தான்” என்று அவன் முன் அவள் நீட்ட… அவளை ஏறிட்டு பார்த்தவனிடம்,
“அன் டைம்… நீங்க சாப்பிடுவிங்களா தெரியாது அதான் பால்” என்றதோடு, “சாப்பிடுவிங்கன்னா தோசை வார்த்து எடுத்து வரவா” என அக்கறையாகக் கேட்டாள்.
ஆனால் அவனுக்கு அவளிடம் தென்பட்டதெல்லாம் வெளிப்படையான காதல் மட்டுமே.
“இதுவே போதும்” என்றவன், அவளின் விழிகளின் ஆழம் பார்த்தபடி பருகி முடித்து குவளையை அவளது கையில் வைத்தான்.
“பழம்.”
“அங்க வை… பசி ஃபீல் பண்ணா எடுத்துக்கிறேன்” என்று அவன் மேசையை காண்பிக்க… பழத்தை அங்கு வைத்தவள்,
“குட் நைட் அத்தான்” என்று சொல்லிச் சென்றாள்.
கயல் சென்றதும் கதவடைக்க எழுந்து வந்தவன், கீழே கயலின் கொலுசொலி கேட்க… மேலிருந்து முற்றத்தின் கீழ் எட்டிப்பார்த்தான்.
அப்போதுதான் கடைசி படியிலிருந்து இறங்கி கூடத்திற்கு வந்த கயல் தலையை உயர்த்தி அவன் குடித்துவிட்டு தந்த குவளையில் அடியில் மிச்சமிருந்த இரு சொட்டு பாலை… தன் வாயில் சரிக்க…
கீழ் பார்த்திருந்த அவனின் பார்வையும், மேல் அண்ணாந்து இருந்த அவளின் பார்வையும் ஒன்றையொன்று கவ்விக்கொண்டது.