பார்த்திபனின் கயல்விழியாள் 49

அத்தியாயம் 🌾 49 :

கயலின் செய்கை றெக்கையின்றி பறக்கும் உணர்வை கொடுத்திட்ட அதே கணம் அவளின் செய்கையை காதலாய் ரசிக்கவும் வைத்ததும்.

தன் மனதிற்கினியவளின் சிறு செயல் இதயத்தை புரட்டிப்போட்டிட… இதழில் பூத்த குறுநகையை மீசைக்கடியில் ஒளித்தவனாக இடது கையால் வலது பக்க மீசை நுனி திருகி விடுத்தான்.

அவனின் கல்லூரும் பார்வையில் நிலைக்கொள்ள முடியாது தவித்தவள் அவன் திருகிய மீசையில் சுருண்டுகொள்ள தவித்தாள்.

தன்னவன் தன்னை கண்டு கொண்டானே என்ற எண்ணம் உதிக்க… அவனின் முகத்தை பார்க்க நாணம் கொண்டவளாக அங்கிருந்து சடுதியில் மறைந்திருந்தாள்.

அறைக்குள் வந்தவள் மூடிய கதவில் சாய்ந்து நின்றாள். கையிலிருந்த தம்பளரை இரு கைகளாலும் பிடித்தவள் வெட்கப் புன்னகையோடு நெற்றியில் தட்டிக்கொண்டாள்.

நடந்திட்ட சிறு நிகழ்வு ஏற்படுத்திய இதம் இருவருக்குள்ளும் கொண்டுள்ள காதலில் காதல் சேர்த்திட… முகத்தில் பரவிய மலர்ச்சியோடு உறக்கத்திலும் ஒருவரின் நினைவு மற்றவரை ஆட்கொள்ள சுகமாக மூழ்கிப்போயினர்.

வழக்கம்போல் அதிகாலை கண்விழித்த கயல், குளித்து முடித்து, வாசலில் கோலமிட்டு வீட்டிற்கு பின்னாலிருக்கும் மாட்டு தொழுவத்திற்கு சென்றாள்.

சரளா ஏற்கனவே தொழுவத்தை சுத்தம் செய்து, தீனிப்போட்டு பால் கறந்திருக்க… மாணிக்கம் கறந்த பாலினை எடுத்துக்கொண்டு பால் நிலையம் சென்றிருந்தார்.

“இந்தபுள்ள மெட்ராஸ் போய் ரொம்ப கெட்டுப்போச்சு… எழுப்பிவிட்டா, நடு ராத்திரி சொல்லி திரும்ப உறங்குறாள்” என்று மலரை திட்டிக்கொண்டே புண்ணாக்கினை கரைத்துக் கொண்டிருந்தார்.

தொழுவத்தை ஒட்டியிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிய கயல்,

“மலர் எழுந்துக்கும் போது எழட்டும். எதுக்கு திட்டுறீங்க” என்க, சரளா தன் பேச்சினை நிறுத்தினார்.

வீட்டிற்காக எடுத்து வைத்த பாலினை சரளா கொடுக்க… கயல் வாங்கிக்கொண்டாள்.

“நானும் அத்தானும் மட்டும் தான் அத்தை இவ்வளவு பால் வேண்டாம்” என்றவள் தேவையானவற்றை சொம்பில் ஊற்றிக்கொண்டு மீதியை சரளாவிடமே கொடுத்தாள்.

பார்த்திபன் சரளாவையும் மாணிக்கத்தையும் எவ்வாறு அழைப்பதென்று தடுமாறிட… மங்கை தான் அவனை சித்தி சித்தப்பா என்று அழைக்க வலியுறுத்தினார்.

பார்த்திபன் சித்தி என்றழைக்கும்போது நீ அத்தைன்னு கூப்பிடு கயல் என்று சரளா சொல்லிட கயலும் அவ்வாறு அழைக்க பழகிக்கொண்டாள்.

“நானும் வீட்டுக்கு கொஞ்சம் எடுத்து வச்சிட்டேன் கயல்… இப்போ இந்த மீதி பாலை ஸ்டோருக்கும் கொண்டு போக முடியாது” என்ற சரளா, “தயிருக்கு உரை ஊற்றி வைப்போம்” என்று யோசனை வழங்கியவராக சென்றிட கயலும் வீட்டிற்குள் நுழைந்தாள்.

பாலினை அடுப்பில் பாத்திரத்தில் ஊற்றி வைத்தவள்…

தாய் தந்தை படத்திற்கு பூக்களிட்டு, தீபம் ஏற்றி வணங்கிய பின்னர் தேநீர் போட்டு தம்பளிரில் எடுத்துக்கொண்டவள் எப்போதும் போல் காலை நேர இயற்கை சுகந்தத்தை அனுபவித்திட வாசல் திண்ணையில் வந்து அமர்ந்தாள்.

புலர்ந்தும் புலராத மங்கிய இருள் கவிழ்ந்த மெல்லிய வெளிச்சம் அந்த அதிகாலை பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருக்க… இயற்கையோடு சேர்த்து மனதில் தோன்றிய பார்த்திபனின் முகத்தையும் ரசித்தவளாக தேநீரை ருசித்திருந்தாள் கயல்.

“எனக்கெல்லாம் டீ இல்லையா?” என்று கேட்டபடி அவளின் அருகில் வந்தமர்ந்தான் பார்த்திபன்.

காலைநேர ஓட்டத்திற்கு ஏதுவாக இருந்தது அவனின் தோற்றம்.

“இப்போ தான் போறீங்களா?”

இரவின் தாக்கம் துளி மிச்சமிருக்க அவளின் பார்வை அவனின் மார்பைத் தாண்டி மேலே செல்லவில்லை.

“நீ கோலம்போட ஸ்டார்ட் பண்ண அப்பவே போயிட்டேன். ஜாக்கிங் ஓவர்” என்றான்.

“அப்போ இருங்க… டீ கொண்டு வரேன்” என்று தன்னுடைய கையிலிருந்த தம்பளரை கீழே வைத்தவள், எழுந்திருக்க… அவளின் கை பிடித்து தடுத்தான்.

“என் முகத்தை பார்த்து பேசமாட்டியா?”

“உங்க முகத்தை பார்த்த அப்புறம் எப்படி பேசறதாம்” என்ற அவளின் மெல்லிய முணுமுணுப்பு அவன் செவி நுழைந்திட… “என்ன பண்ணுதாம் என் முகம்” என்று புன்னகையோடு அவளை போலவே பேசி வம்பு செய்தான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது” என்ற கயல் அவனின் பிடியிலிருந்து விடுபட முயற்சிக்க… அவனது பிடி தளர்வதாக இல்லை.

“சொன்னா போகலாம்.” சட்டமாகக் கூறினான்.

பார்த்திபனின் பிடிவாதம் அவளுக்கு மலைப்பாக இருந்தது. பதில் சொல்லும் வரை அவன் விடப்போவதில்லை என உணர்ந்தவள்…

“உங்க முகம் பார்த்தா எல்லாமே மறந்து போகுது.” அவள் சொல்லியது அவளுக்கே கேட்டிருக்காது. ஆனால் கேட்க வேண்டியவனக்கு தெளிவாக கேட்டது.

“எல்லாமேன்னா?”

“அச்சோ விடமாட்டிங்களா?” அவனின் அருகில் தவித்து நின்றாள். தவிப்பும் துடிப்பும் அவனருவே ஒருங்கே எழுவது பெரும் அவஸ்தையாய் அவளுள்.

தன்னவளின் செந்நிறம் ததும்பும் அவஸ்தையான முகம் அவன் ரசிப்பதாய். துளி தேனாய் அவனுள் சுவை சேர்ப்பதாய். இமைக்க மறந்தான்.

அவளின் படபடத்து அசையும் கருவிழிகளில் சுருண்டு போக சித்தம் கொண்டான்.

தன்னவளின் அருகில் மட்டும் ஆர்ப்பரிக்கும் உள்ளக்கிடங்கை அமைதிப்படுத்தும் வழி தெரியாது பட்டென்று அவளின் கையை விடுவித்தான்.

இவ்வளவு நேரமும் விட்டால் போதுமென்று அவன் முன் தவித்து நின்றவள்… இப்போது ஏன் விட்டானென்று சோர்ந்து போனவளாக உள் சென்றாள்.

காதலில் மட்டுமே உணர முடியும் விந்தை இது. வேண்டுமென்பது வேண்டாம் என்பதாய். வேண்டாம் என்பது வேண்டுமென்பதாய். ஆனால் விரும்பியே ஏற்றுக்கொள்ளப்படும் குழப்பம். குழப்பத்தில் ஒரு தெளிவு. தெளிவிலும் ஒரு தடுமாற்றம். காதலில் மட்டுமே!

அடுக்கலைக்குள் சென்ற கயல் முற்றிலும் தன்னை ஆசுவாசப்படுத்தி நிலை கொண்டு பார்த்திபனுக்கு தேநீர் கொண்டு வந்தாள்.

அவனோ அவள் குடித்துவிட்டு வைத்துச் சென்ற தம்பளரிலிருந்த தேநீரை சுவைத்துக் கொண்டிருந்தான்.

“அச்சோ அது நான் குடிச்சது.”

பதறியவளாக பார்த்திபனின் அருகில் வந்தவள், அவனிடமிருந்த தம்பளரை வாங்க முற்பட…

“நீ குடிச்ச தானே?” என்ற அவனின் அமைதியான கேள்வியில் அப்படியே அமர்ந்தாள்.

அவன் இரவு தான் செய்ததை சொல்கிறான் என்றதும் அழையாது இளநகை ஒன்று அவளின் இதழோரம் குடி கொண்டது.

இடது கையில் தம்பளரை வைத்திருந்தவன், அவளின் இடது கை விரல்களுக்கு நடுவில் தன்னுடைய வலது கை விரல்களை நுழைத்து இறுக்கி கோர்த்துக் கொண்டான்.

இருவரின் பார்வையும் தூரத்து மலை முகட்டில் மெல்ல ஆதிக்கம் செலுத்தும் கதிரவன் மீது படிந்திருந்தது.

“இந்த விரல்களுக்கு நடுவில் என் விரல்களை கோர்த்து பிடிச்சிக்கணும். எத்தனை நாள் ஆசை தெரியுமா கயல்.

என் கைக்குள்ள இருக்க இந்த கையை எப்பவுமே விட்டுடக் கூடாதுன்னு எனக்குள்ள ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கு.

இதுக்காக… ஐ மீன் உனக்காக என்ன வேணாலும் செய்யலாமுன்னு இங்க… இங்க” என்று கோர்த்திருந்த கயலின் கையோடு தன்னுடைய இதயப்பகுதியை தட்டி “அழுத்தமா துடிக்குது” என்றவன் அவளின் புறங்கையில் மென்மையிலும் மென்மையாய் இதழ் ஒற்றினான்.

பார்த்திபன் பேசும் போது அவனின் முகத்தில் பதித்த பார்வையை அவனின் செய்கையில் நாணம் கொண்டு சட்டென்று விலக்கி… வேகமாக தன் கையை உருவியவள், காதல் தரும் இன்பத்தை அடி நெஞ்சில் பத்திரப்படுத்தினாள்.

“நாற்று விடணும். வயலுக்கு போவோமா?” என கயல் கேட்க…

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என பார்த்திபன் கேட்டிருந்தான். அவளுடனான இனிமையான தனிமை அவனின் இளமை உணர்வுகளை உடலின் ஒவ்வொரு செல்களிலும் கடத்திக் கொண்டிருக்க… அவனால் இனியும் கயலின்றி இருந்திட முடியாது என்கிற நிலை அப்படி கேட்க வைத்தது.

“இன்னும் நீங்க வந்த வேலை முடியல.” அவன் கேட்டதில் அப்படியொரு பூரிப்பு கயலிடம். அதனை மறைத்தவளாக.

“வந்ததே உனக்காகத்தான்.” அப்படியொரு அழுத்தம். அழுத்தத்திலும் அவ்வளவு மென்மை.

“என்னோட டீ காலி” என்றவள் முகத்தில் நிலைத்துவிட்ட செம்மையை மேலும் ஜொலிக்கவிட்டபடி எழுந்து சென்றாள்.

சிறிது நேரத்தில் மலர் வர, திண்ணையில் பார்த்திபனை கண்டதும் வேகமாக வந்து அவன்முன் நின்றாள்.

ஏற்கனவே அலைபேசி வாயிலாக பார்த்திபன் நடந்ததை சொல்லியிருந்தாலும், அவள் முகம் பார்த்து “எல்லாம் முடிஞ்சுது” என்று பார்த்திபன் சொன்னதும் தான் மலரின் முகம் ஒளிர்ந்தது.

“உன் ஆளுகிட்ட பேசலையா?”

“இல்லை” என்று தலையாட்டிய மலர் “ஒன்னுக்கு நாளா திருப்பி கொடுத்த அப்புறம் தான் பேச்செல்லாம்” என்றாள்.

“அதிரடியான காதல் தான்” என்ற பார்த்திபன் சிரித்திட…

மலர் அவனுக்கு நன்றி தெரிவித்தாள்.

“என் தங்கச்சிக்கு நான் செய்தேன்” என்று அவளின் நன்றியை மறுத்தவன்,

“எப்போ சென்னை போகலாம் சொல்லு. அனுப்பிவிடுறேன்” என்றான்.

“ரெண்டு நாளாகட்டுண்ணா” என்றவள் கயல் வருவதைக் கண்டு…

“அம்மா சாப்பாடு செஞ்சுட்டாங்க அண்ணி. இப்போ கொண்டுவரவா இல்லை பொறுத்து வயலுக்கு கொண்டுவரவா?” என வினவினாள்.

“இன்னைக்கு நாற்று விடுற வேலை மட்டும் தான் மலர். கொஞ்ச நேரத்தில் முடிஞ்சிடும். வீட்டுக்கு வந்து பார்த்துக்கிறோம்” என்ற கயல், “சிவாண்ணாக்கு மட்டும் கொடு. கொண்டு போறேன்” என்றாள்.

“விதை மூட்டை பிரிக்கனும் அப்பா போனாங்க அண்ணி. போகும்போது எடுத்துட்டு போயிட்டாங்க” என்று மலர் சொல்ல… அவர்கள் பேச்சு ஆரம்பிக்கும் போதே உள் சென்றிருந்த பார்த்திபன் உடை மாற்றி முட்டி வரையிலான ஷார்ட்ஸோடு வந்தான்.

மலரிடம் சொல்லிக்கொண்டு இருவரும் வயலுக்கு செல்ல… மாணிக்கமும் சிவாவும் முளைத்து வந்திருந்த விதை நெல் மணிகளை கையில் பிடிக்க ஏதுவான மூங்கில் புட்டிகளில் எடுத்து தயாராக வைத்திருந்தனர்.

“எப்போ மாப்ள வந்தீங்க?”

“நைட்டே வந்துட்டேன் மச்சான்.”

தன்னை கண்டதும் விசாரித்த சிவாவிற்கு பதில் சொன்னான்.

இருவரும் உறவு சொல்லி அழைப்பதை கயல் இருவரையும் அர்த்தமா பார்த்திட…

“அது கயல்…” என்று சிவா என்ன சொல்வதென்று தடுமாறினான்.

அந்த தடுமாற்றம் பார்த்திபனிடம் இல்லை போலும்.

“அவன் தங்கச்சியை நான் கல்யாணம் செய்துகிட்டா அவன் எனக்கு மச்சான் தானே” என்று சொன்னவனின் குறும்பில் கயல் தான் சுயமிழந்து நிற்க வேண்டியதாயிற்று.

“அம்மாடி கயலு” என்ற மாணிக்கத்தின் அழைப்பில் நிஜம் மீண்டு… “வந்ததிலிருந்து நீங்க சரியேயில்லை. என்ன பேசினாலும் கல்யாணத்துலே வந்து நிக்கிறீங்க” என்று மெல்ல அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லியவள், “இதையெல்லாம் வெளிப்படையா என்கிட்டவே கேட்டா நானென்ன சொல்றது. செய்தா வேண்டான்னா சொல்லப்போறேன்” என்றுவிட்டு மாணிக்கத்திடம் சென்றாள்.

பார்த்திபனுக்கு அருகிலேயே நின்றிருந்த சிவா…

“மாப்ள” என்ற கூவலோடு பார்த்திபனை கட்டிக்கொண்டு குதித்திட…

கயல் சொன்னதையே அசைபோட்டிருந்தவன் “என்னடா சொல்லிட்டு போறாள். நீயேன் இப்படி குதிக்குற?” எனக் கேட்டான்.

“புரியலையா?”

“ம்ஹூம்…”

“கயல் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு போகுது” என்றான்.

“சம்மதத்தை இப்படியும் சொல்லலாமா?” என்ற பார்த்திபன்,

“கயல் அம் சீரியஸ்” என தான் நிஜமாகக் கேட்கிறேன், விளையாட்டுக்கில்லை என்பதை அவளுக்கு தெளிவுப்படுத்தினான்.

சற்று தூரத்தில் மாணிக்கத்திடம் நின்று நெல்லின் முளைப்பை ஆராய்ந்து கொண்டிருந்த கயல் பார்த்திபனின் குரலில் திரும்பி…

“நானும் சீரியஸ் தான் அத்தான்” என்று சிரிப்போடு கத்தியிருந்தாள்.

“அப்போ டும் டும்…”

“ஓகே தான்.”

இப்போது பார்த்திபனும் சிவாவை கட்டிக்கொண்டு குதித்தான்.

“இப்போ யாருன்னா உங்களை பார்த்தால் பெரிய பிஸ்னெஸ் மேன் சொன்னாலும் நம்ப மாட்டான்.” சிவா கேலி செய்தான்.

“இந்த லைஃப் எனக்கு பிடிச்சிருக்கு சிவா” என்ற பார்த்திபனுக்கு முன்பு தானிருந்த நிலை மனதில் தோன்றி இப்போதிருக்கும் நிலையை ஆராய்ந்து வேறுபாடுகளை கண்டறிந்தது.

தன்னை நினைத்து தனக்குள்ளே சிரித்தும் கொண்டான்.

அன்று இருநூற்றி ஐம்பது ஏக்கர் நிலங்களை சாதாரணமாக எரித்தவனால்… இன்று ஒரு செடியை பிடிங்கிட முடியாது. அன்று வெறுத்த ஒன்று இன்று வாழ்வின் அடியை கற்று தந்தது. கற்று கொண்டிருக்கிறான்.

“அப்புறம் ரெண்டு பேரும் விளையாடுங்க. இப்போ முதலில் நிலத்தில் இறங்குங்க” என்ற மாணிக்கம் பார்த்திபனின் கையில் முளைத்த நெல்லை கொடுக்க…

“கயலை பார்த்து செய்ங்க” என்றான் சிவம்.

ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நாற்றங்காலில் இறங்கி நின்றிருந்த கயல்…

“மெதுவா இறங்குங்க” என்றிட பார்த்திபனும் மென் அடிகளை வைத்து சேற்றில் இறங்கி நின்றான்.

கையிலிருந்த கூடையிலிருந்து மற்றொரு கை முழுவதும் நெல்லினை அள்ளிய கயல், “நான் விசுறுற மாதிரி பரவலா விசுறுங்க” என்று சொல்லியதோடு காட்டியும் கொடுத்தாள்.

“நடந்துகிட்டே நாலா பக்கமும் விசுறுங்க. இல்லன்னா ஒரே இடத்தில் விதை விழுந்து நாற்று குமிஞ்சி முளையும்” என்றாள்.

கயல் செய்வதையே சில கணங்கள் பார்த்த பார்த்திபன் தானும் அப்படியே செய்திட… இருவரின் கூடையிலும் விதை காலியாக காலியாக கயலுக்கு மாணிக்கமும், பார்த்திக்கு சிவாவும் விதையை கொண்டு வந்து கொடுத்தபடி இருக்க… வேலையும் விரைந்து முடிந்தது.

“இப்போ தண்ணி விட வேண்டாம் அண்ணா. விதை சேற்றில் ஊனி முளையட்டும். நாளைக்கு இந்நேரம் தண்ணி விட்டுக்கலாம். இப்போ இதிலிருக்கும் தண்ணீர் போதும்” என்று சிவாவிடம் கயல் சொல்வதை கேட்ட பார்த்திபன், “விதை வைத்தால் தண்ணீர் விடணும் தானே?” என்று சந்தேகம் கேட்டான்.

“இப்போ தான் நெல்லு போட்டிருக்கோம். இன்னும் சேற்றில் சரியா புதைந்துகூட இருக்காது. உடனே தண்ணீர் விட்டால் எல்லாம் அடிச்சிட்டு போய் ஒரே இடத்தில் முளைக்கும். அப்படி முளைத்தாலும் பரவாயில்லை, கும்பலா குமிஞ்சி அழுகி போயிடும். விதை முளைக்காது” என்று விளக்கம் கொடுக்க பார்த்திபனின் சந்தேகம் தீர்ந்தது.

“கயல் இன்னைக்கு வேற வேலை ஒன்னுமில்லை. பொழுதுக்கு சும்மா கிடக்கமா, மண்புழு உரத்தை விசிறிடலாமே” என்றார் மாணிக்கம்.

சற்று யோசித்த கயல் பார்த்திபனிடம் திரும்பி… “உங்களுக்கு ஓகேவா. இன்னும் கொஞ்ச நேரம் சேற்றில் நிற்க முடியுமா” என அவனின் நலன் வேண்டினாள்.

“செய்து பார்த்தாதானே முடியுமா இல்லையான்னு தெரியும். செய்யலாம் கயல். முடியலன்னா சிவா செய்வான்” என்று சொல்ல கயலும் மாணிக்கத்திடம் சரி என்றாள்.

“அப்போ வாங்க போய் உரத்தை தூக்கிட்டு வரலாம்” என்று கயல் சொல்லிட நால்வரும் தென்னந்தோப்பினை கடந்து உள் சென்றனர்.

நான்கடி உயரத்திற்கு சில நீண்ட தொட்டிகள் அங்கிருந்தன.

“இங்க நான் வந்ததே இல்லையே” என்ற பார்த்திபன்…

குச்சி தட்டியால் மூடியிருந்த தொட்டி ஒன்றை திறந்திட…

கருப்பு மணலில் பல லட்சங்களில் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து நெலிந்து கொண்டிருந்த மண்புழுக்களை ஒரே இடத்தில் காணவும் அவனுக்கு அடி வயிற்றிலிருந்து பிரட்டிக்கொண்டு வந்தது.

சட்டென்று மற்றைய பக்கம் திரும்பிய பார்த்திபன்…

காலையில் குடித்த தேநீர் மொத்தத்தையும் தாண்டி ரத்தம் வருமளவிற்கு வாயால் எடுக்க… அவனிடம் வேகமாக ஓடி வந்த கயல் அவனின் தலையை அழுந்த பிடித்தாள்.

சிவா தண்ணீர் கொண்டுவர…

வாயினை துடைத்து, முகத்தில் நீரை அடித்து கழுவியவன்…

“ஐ கான்ட்… இது… இதை என்னால் முடியாது” என்றவன், மீண்டும் அதனை பார்க்கும் திடமின்றி அங்கிருந்து நகர்ந்தான்.

“சரி அத்தான்… நீங்க செய்ய வேண்டாம்” என்று அவனை அங்கிருந்த நீர் தொட்டியின் சுவற்றின் மீது உட்கார வைத்தவள், சிவா மற்றும் மாணிக்கத்தை பார்க்க… அவர்கள் மண்புழு உரத்தை வயலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்திட அவர்களிடமிருந்து நகர்ந்தனர்.

தன் தாவணி தலைப்பைக் கொண்டு பார்த்திபனின் முகம் துடைத்தவள்…

“ரிலாக்ஸ் ஆகுங்க அத்தான். நீங்க பண்ண வேண்டாம்” என்று அவனை ஆசுவாசம் கொள்ளச்செய்தாள்.

“இதை எப்படி கயல் கையால்?” கேட்கும் போதே மீண்டும் அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

“அத்தான் அதை நினைக்காதீங்க” என்றவள் அவன் அருந்த நீர் கொடுத்தாள்.

“இதெல்லாம் செய்துதான் ஆகணும் அத்தான்.

முன்னெல்லாம் இயற்கை உரங்கள் மட்டும் தான். ஆனால் இப்போ எல்லாம் செயற்கை ஃபெர்ட்டிலைசர்ஸ். அதெல்லாம் பூச்சியை மட்டுமா அழிக்குது. பயிரையும் சில நேரம் விவசாய மண்ணுக்கு சக்தியை கொடுக்குற இந்த மாதிரி மண்புழுவையும் அழிக்குது. அப்போலாம் மண்ணை கையால் பிரட்டினாலே மண்புழு நிலத்தில் ஊரும். இப்போ, நாலடியில் கூட மண்ணில் மண்புழு இருப்பதில்லை. மண்புழு இல்லாத விவாசய நிலம் மலட்டுத்தன்மையை சீக்கிரம் அடைஞ்சிடும். அதான் இப்படி மண்புழு உரம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு” என்று பொறுமையாக கயல் எடுத்து சொல்ல பார்த்திபனும் புரிந்து கொண்டது போல் தலையாட்டினான்.

“அதுக்காக நீங்க இதை செய்யணும் சொல்லல. தெரிஞ்சிக்கணும்” என்றவள் பார்த்திபனின் கண்களுக்கு பலபடி உயர்ந்து தெரிந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top