அத்தியாயம் 🌾 50 :
“வீட்டுக்கு போறீங்களா?”
பார்த்திபன் இன்னும் மண்புழு நெலிந்ததை தன் சிந்தையினில் அகற்றாது… நினைப்பதும் குமட்டுவதுமாக இருக்க… கயலுக்கு அவனை அப்படி பார்க்க பாவமாக இருந்தது.
அதனால் வீட்டிற்கு போகுமாறு கூறினாள்.
அதனை மறுத்தவனிடம் இப்போது சிறு திடம்.
“என் வேலையை நான் தானே பார்க்கணும்” என்றவன் வயலை நோக்கிச் சென்றான்.
“அத்தான் சொல்லுறதை கேளுங்க. அதான் உங்களுக்கு அதை பார்க்கவே பிடிக்கலையே?” என்றாள்.
“நாளைக்கு நான் வின் பண்ண பிறகு… உனக்கு பதில் இந்த வேலையை நான் தான் செய்தேன். சோ, இந்த வெற்றியில் பாதி ஷேர் எனக்கும் இருக்குன்னு சொல்லிட்டின்னா” என்றவனுக்குள் சிறு அச்சம் இருக்கத்தான் செய்தது. பார்க்கவே ஒப்பாத ஒன்றை எப்படி கையில். நினைக்கவே முகம் சுளித்தான்.
இருப்பினும் தன் வேலையை தான்தான் செய்ய வேண்டுமென்ற அவனின் எண்ணம் உந்தித் தள்ள வயல் பிரிவிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர்.
ஆனால், சிவாவும் மாணிக்கமுமே வேலையை முடித்திருந்தனர்.
தனக்கு பதிலாக சிவா செய்திருக்கிறான் என்ற போதும் பார்த்திபனுக்கு மனதில் சிறு நிம்மதி எழத்தான் செய்தது. அது அவனிடம் பெருமூச்சாகவும் வெளியேறியது.
பார்த்திபனின் மனநிலை கயல் அறிவதாய்.
கயல் ஏதோ பேச வர,
“எல்லாம் முடிந்தது கயல்” என்ற சிவா,
“எனக்கு அடுத்த வாரம் எக்ஸாம் கயல். இன்னைக்கு ஹால் டிக்கெட் கலெக்ட் பண்ண சொல்லி மெசேஜ் வந்திருக்கு” என்றான்.
“சரிண்ணா போயிட்டு வாங்க” என்றவள், மாணிக்கத்திடம் திரும்ப…
“அப்போ நானும் கிளம்புறேன் கயல்” என்றவர் சென்றுவிட்டார்.
“சிவா இன்னும் படிப்பை முடிக்கலையா?” என்ற பார்த்திபனிடம்…
“சிவாண்ணா இங்க வரும்போது ஸ்கூல் தான் முடிச்சிருத்தாங்க. என்னைவிட ஒரு ரெண்டு வயது அதிகம் அவ்வளவு தான். அவருக்கு படிப்பில் விருப்பமிருக்கும் எனக்குத் தெரியாது.
நான் கடைசி வருஷம் எக்ஸாமிற்கு ப்ரிப்பேர் பண்ணும் போதுதான்… இப்படியும் வீட்டிலிருந்தே படிக்கலாமான்னு கேட்டார். அப்போ அவர் முகத்தில் தெரிந்த ஆர்வம். அடுத்த வருஷமே அவரை கரஸில் சேர்த்தாச்சு” என்றவள், “இப்போ மாஸ்டர் கடைசி வருஷம்” என்றாள்.
“சிவாண்ணா இங்க வந்து எட்டு வருஷம் ஆகுது. அவரும் என்னோடவே இருந்து கஷ்டப்படாம வேலைக்கு போகனும். அப்புறம் நீங்களும் நானும் சேர்ந்து சிவாண்ணாக்கு கல்யாணம் செய்து வைக்கணும்” என்று சொல்லியவள், பார்த்திபனை கீழே தலையை சாய்க்குமாறு சைகை செய்தாள்.
அவன் என்னவென்று சாய்த்திட…
“சிவாண்ணாவை ஒரு பொண்ணு லவ் பண்ணுது. ஆனால் இவர் தான் வெறப்பா சுத்திட்டு இருக்காரு” என்று அவனின் காதில் ரகசியம் சொன்னாள்.
நீங்களும் நானும் சேர்ந்து தான் சிவாவுக்கு கல்யாணம் செய்யனும் என்று கயல் சொன்னதின் பொருளுணர்ந்தவனுக்கும் முகத்தில் அழகிய வெட்கம். அதுவும் அவனுக்கு நன்றாகத்தான் இருந்தது.
அவ்வார்த்தைகள் தந்த தித்திப்பில் இருந்தவனுக்கு கயல் சொல்லியது ஆச்சர்யமாக இருந்தது. அவனது கண்கள் அகல விரிந்தன.
“சிவாவுக்கு லவ்வா?”
“அதான் தெரியல. அந்தப்பொண்ணு தான் அண்ணா பின்னாடி சுத்துது. இவர் கண்டுக்கவே மாட்டேங்கிறார்” என்றால் கவலையாக.
“நீ அந்த பொண்ணுக்காக ஃபீல் பன்றேன்னா… நல்ல பொண்ணா தான் இருக்கும். பார்த்துக்கலாம்” என்றவன் “அப்போ ஏதோ சொல்ல வந்தியே என்ன?” எனக் கேட்டான்.
அவள் எப்போ என்று சிந்திக்க…
“வெர்மிகம்போஸ்ட் நானே போடுறேன் சொன்னனே அப்போ” என்று பார்த்திபன் நினைவூட்டினான்.
“அதுவா” என்றவள் அவனின் முகம் பார்த்தாள்.
இருவரும் பேசிக்கொண்டே வயல்களை கடந்து வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்திருந்தனர்.
“உங்கக்கிட்ட சவால் போட்டேன் தான். அதுக்கு காரணம் தெரியுமா உங்களுக்கு” என்றவள் அவனது இல்லையென்ற பாவனையில் தானே தொடர்ந்தாள்.
“நான் சொல்லுவேன் நீங்க சிரிக்கக்கூடாது.” ஒரு விரல் நீட்டி பத்திரம் காட்டினாள்.
“பில்டப் அதிகமா இருக்கே!”
“நான் சொல்ல மாட்டேன் போங்க” என்றவள் வேகமாக எட்டுக்கள் வைத்து முன் செல்ல… அவளை இரண்டே எட்டில் பிடித்தவன்,
“நான் எதுவும் கமெண்ட் பண்ணமாட்டேன் சொல்லு” என்றான்.
“நிஜமா?”
“ஐ ஸ்வேர்.”
“நீங்க அன்னைக்கு பேசினது கோபம் வந்துச்சு தான். ஆனால் அதுக்காக எல்லாம் உங்களோட சண்டை போடல” என்ற கயல் பார்த்திபனின் முகத்திலிருந்து பார்வையை நகற்றி சாலையில் வைத்து நடக்க… அவனும் அவளுக்கு இணையாக நடக்கத் துவங்கினான்.
“நீங்க ஹாலுக்குள்ள வரும்போதே எனக்குள்ள ஏதோ ஒன்னு. உங்களை பார்த்துட்டே இருக்கணும் போலிருந்துச்சு. அப்போ எனக்கு என்னன்னு புரியல… ஆனால் விழா முடிஞ்சு கிளம்பும்போது தான் இனி உங்களை பார்க்கவே முடியாதுன்னு அப்டியொரு தவிப்பு… அதான் மேடையில் என்கிட்ட நீங்க பேசியதை வைத்து உங்ககிட்ட சண்டை போடுற மாதிரி பேசினேன். கொஞ்ச நேரம் உங்க பக்கத்தில் இருக்கும் நேரத்தை அதிகமாக்கினேன். ஆனால் நானே எதிர்பார்க்காதது இந்த சவால். நீங்க ஒத்துக்கமாட்டிங்கன்னு நினைச்சேன் பட் ஓகே சொன்னீங்க. அப்போதான் இதை சாக்கா வைத்து ஒரு மூன்று மாதம் உங்களோட இருக்கலான்னு நான் தரும் என்னோட வயலில் வேலை பார்க்கணும் சொன்னேன்” என்று அன்று தான் நடந்து கொண்டதற்கான அவன் அறிந்திடாத தன்னுடைய பக்கத்தை விளக்கியவள்,
“எதுக்கு இப்போ இதை சொல்றேன்னா…
என்னோட நீங்க இருக்கனும் நினைத்துதான் இந்த சவால் போட்டேன். அதனால நீங்க ஜெயித்தாலும் தோத்தாலும் எனக்கு கவலை இல்லை. உங்களுக்கு பிடிக்காததை கஷ்டப்பட்டு செய்ய வேண்டாம்” என்றாள்.
கயல் இறுதியாக சொன்னதையெல்லாம் பார்த்திபன் கருத்தில் கொள்ளவே இல்லை.
தன்னை பார்த்த அன்றே தன்மீது அவளுக்கு தன்னைப்போல் காதல் மலர்ந்துள்ளது என்பதிலேயே அவன் மனதிற்குள் குத்தாட்டம் போடத் துவங்கியிருந்தான்.
“கயல் அப்போவேவா?” எனக் கேட்டவனிடம்…
“நீங்க எனக்காக வந்திருந்தாலும், நான் தான் நீங்க இங்க வர காரணம்” என்றாள்.
கயல் தன்னை விரும்புகிறாளென்று பார்த்திபனுக்கு தெரியும் ஆனால் பார்த்த முதல் நாளிலிருந்தே என்று அவன் நினைக்கவில்லை.
அவள் வாயிலாகாவே தன்மீது கொண்ட காதலை சொல்ல கேட்டவன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.
கயலை தூக்கி சுற்ற வேண்டும்போல் அவனின் கைகள் பரபரத்தன. மனம் எம்பி அவளின் காலடியில் ஒளிந்து கொள்ளும் மாயம்.
“கயல்” என்று தன் உணர்வுகளை அடக்கிட முடியாது கத்தியவன் தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்து மின்னலென அவளை அணைத்து விடுத்திருந்தான்.
“லவ் யூ டி” என்றவன் அவளின் கையோடு கை கோர்த்திட… வீடு வந்தது.
வாசலிலே சரளா நின்றிருக்க…
“அய்யோ அத்தை” என்றவள் அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு வேகமாக சரளாவிடம் சென்றாள்.
“சீக்கிரம் இவள் கழுத்தில் தாலி கட்டணும்… ஒரு கை கூட நிம்மதியா பிடிக்க முடியல” என்று முணுமுணுத்தவனாக வீட்டிற்குள் சென்றவன், அடுத்த நொடி அ
மங்கைக்கு அழைத்திருந்தான்.
“இன்னும் வரலையேன்னு பார்த்திருந்தேன் கயல். சாப்பாடெல்லாம் எடுத்து வைத்திருக்கேன், போட்டு சாப்பிடுங்க” என்ற சரளா… “இன்னும் ரெண்டு நாளில் மலரு பிறந்தநாள் வருதுல… அவளை கூட்டிட்டுப்போய் புது துணி எடுத்துட்டு வரேன்” என்று தான் மலரை அழைத்துக்கொண்டு டவுனிற்கு செல்வதாக சொல்லிச் சென்றார்.
கயல் வீட்டிற்குள் வரும்போது பார்த்திபன் மங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“மாம் ப்ளீஸ் மாம். அவளை பக்கத்துல வச்சுக்கிட்டு தள்ளி நிக்கிறது கொடுமையா இருக்கு மாம். மேரேஜ் பண்ணி வைங்க” என்றவனின் முகம் ஒன்றை கேட்டு அடம் செய்யும் சிறுவனின் பாவனையாக இருந்தது.
“அம்மாகிட்ட பேசுற பேச்சாடா இது?” மங்கை கடிந்து கொண்டாலும் அவர் பேச்சில் புன்னகை.
“உங்கக்கிட்ட சொல்லாம யாருக்கிட்ட சொல்றது. எனக்குத் தெரியாது இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம் நடக்கணும். இல்லை நானே செய்துப்பேன்.”
முதலில் கெஞ்சியவன் இப்போது மிரட்டினான்.
மங்கைக்குத்தான் மகனை பற்றி நன்கு தெரியுமே. சொன்னால் செய்திடுவானே!
அதனால் தன்மையாகப் பேசினார்.
“அவசரத்தில் செய்ற விஷயமில்லை பார்த்தி… கயல் ஓகே சொல்லனும்…”
“அதெல்லாம் அவளுக்கும் ஓகே தான்.”
மங்கை முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.
“என்னை பேச விடுடா.”
எப்போதும் இதுதானென்று பிறரிடம் விறைப்பாக கட்டளையிட்டு சுழன்று கொண்டிருப்பவன் இன்று மாறாக சிறுப்பிள்ளையென அடம் பிடித்து நிற்பது மங்கைக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்கு முதல் பிள்ளைங்கடா. அதனால் எல்லாம் பொறுமையா நேரம் காலம் பார்த்துதான் செய்யணும். அதோட உனக்கு இருபத்தி எட்டு ஆகுது. இருபத்தி ஒன்பதில் தான் பண்ணனும். இப்படி ரெட்டையில் பண்ணலாமான்னு தெரியல. பொறுமையா இரு. நான் அப்பாகிட்ட பேசுறேன்” என்றவர் அவன் மேலும் ஏதும் சொல்லி வாதிடும் முன் அவனுக்கு பயந்தே வேகமாக போனை வைத்திருந்தார்.
பார்த்திபனுக்கு பின்னால் நின்று அவர்களின் பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த கயல் சத்தமாக சிரித்திட…
அவள் புறம் திரும்பியவன்,
“என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா?” எனக் கேட்டு… “இதோ இப்போ நீ சிரிக்கும் போது… அப்படியே கிஸ் பண்ணனும் தோணுது. ஆனால் அது இப்போ முடியாதே. உன் பக்கத்தில் வந்தாலே, இன்னும் மேரேஜ் ஆகலடா… கன்ட்ரோல்… கன்ட்ரோல் பார்த்தின்னு எனக்கு நானே சொல்லிக்க வேண்டியதா இருக்கு” என்று புலம்பினான்.
அவனின் தவிப்பு அவனோடு.
“இதில் மாம் வேற இப்போதைக்கு மேரேஜ் இல்லைங்கிற மாதிரி சொல்றாங்க…” என்று அவன் தன்போக்கில் பேசிக்கொண்டே இருக்க… அவனை மெல்ல நெருங்கினாள்.
“கிட்ட வராத கயல். அப்புறம் நான் எக்குத்தப்பா எதாவது செய்திடுவேன்.” கிட்டத்தட்ட அருகில் வராதே என்று அவளை மிரட்டினான்.
அவளருகில் அவனின் இளமை உணர்வுகளின் வேட்கையை அவன் தானே அறிவான். பெரும் அவஸ்த்தையல்லவா அவனுள்.
“கிட்ட வராத போடி…” என்று அவன் திரும்பிய கணம்… அவனின் ஒரு கன்னத்தை ஒற்றை கையால் பற்றி, மற்றைய கன்னத்தில் தன் உதடுகள் அழுந்த முத்த வைத்தவள் பட்டென்று அவனிடமிருந்து விலகியும் இருந்தாள்.
“கிஸ் பண்ணனும் தோணுச்சுன்னா கொடுத்திடனும் அத்தான். இப்படி புலம்பிட்டு இருக்கக்கூடாது” என்று கயல் சொல்லிக்கொண்டே அங்கிருந்து வேகமாக சென்றிட… அவள் கொடுத்த முதல் முத்தம் அதிர்விலிருந்து மீள முடியாது மொத்தமாக அவளுள் மூழ்கிட ஆசைகொண்டவனாக சிலையாகியிருந்தான்.
******
தன் வீட்டில் கூண்டுப் புலியாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் மருது. அவனுள் அப்படியொரு கோபம்.
யாரென்று தெரிந்திடாது அவனுக்குள் கனன்றது.
“யாருன்னு கண்டுபிடிக்க முடியலையா மருது.” மகனிடம் அவனுக்கு இணையான கோபத்துடன் கேட்டிருந்தார் துரை.
தன்னுடைய மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை கொன்று போடும் வெறி.
மூன்று நாட்களாக காணாது. எங்கும் தேடியும் கிடைத்திடாது… மகனை நினைத்து கண்ணீர் சிந்தும் மனைவியை சமாதானம் செய்திட முடியாது… குற்றுயிராய் மருத்துவமனை படுக்கையில் மகனை கண்ட நொடி அதற்கு காரணமாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன் கையால் தான் மரணம் என்று துரை சூளுரைத்துக்கொண்டவரின் வெறி அவன் யாரென்றே தெரியாத இக்கணம் மிக மிக அதிகமாகியது.
“ஆறடிக்கு மேலிருப்பான். அதற்கு மேல் அவனைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை” என்ற மருதுவிற்கு என்ன யோசித்தும் தானிருந்த இடத்தினை அனுமானிக்க முடியவில்லை.
“ஆனால் நிச்சயம் நம்ம ஊர் தான்.”
பார்த்த தந்தையிடம்…
“அந்த அறையில் காற்று வருவதற்கு சின்ன துவாரம் மட்டும் தானிருந்தது…
அது வழியா பார்க்கும் போது மலையின் பாதி தெரிந்தது. ஆற்றில் நீர் போகும் சத்தம் கேட்டுட்டே இருந்தது. தென்னை மரங்கள் நிறைய தெரிந்தது. எல்லாமே அடி பகுதி தான் தெரிந்தது.”
தனக்கு தெரிந்ததை மருது சொல்ல துரையின் முகம் தீவிரம் காட்டியது.
“ஆறு நம்ம ஊரில் மட்டுமில்லை… நம்ம சுத்துப்பட்டு கிராமம் எல்லாமே ஆறை சுற்றி தான்.”
துரையின் பேச்சு சரியென்று மருது சிந்திக்கத் தொடங்கிய சமயம், அவனுள் மின்னலென ஒரு முகம்.
“ரத்தினம் தென்னந்தோப்பில் மரம் ஏறுவானே ராசு. அவன் தென்னை மரம் ஏறுறது தெரிந்த மாதிரி இருக்கு” என்றான். யோசனையால் சுருங்கிய முகத்துடன்.
“ரத்தினம் நம்ம பங்காளி ஆச்சே மருது.”
‘உறவுக்காரர்களுக்குள் என்ன பூசலாக இருக்கும். அதுவும் தனக்கு தெரியாமல் ரத்தினம் இம்மாதிரி செய்யமாட்டானே.’ நினைத்த துரைக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘ரத்தினத்திற்கு தன்னால் என்ன தவறு நேர்ந்திருக்கும். அதுவும் என் மகனை கடத்தும் அளவிற்கு.’ துரையின் யோசனை இப்படித்தான் இருந்தது.
ஆனால் மருது…
“ரத்தினம் பண்ணைக்கு பக்கத்து பண்ணை தானே கயலுடையது.”
மருது அவ்வாறு கேட்டதும் தான் துரைக்கும் அந்நினைவு வந்தது.
மருது கயலிடம் வம்பு செய்தன்று… சிவா வீடு தேடி அடித்த போது, மகன் மீது தவறிருக்கும் போது தான் சீறிக்கொண்டுச் சென்றால் ஊரில் தன் மதிப்பு இறங்கிடுமென்ற காரணத்தால் தான் துரை அவசர அவசரமாக மருதுவை வேலையை காரணமாக வைத்து வெளியூருக்கு அனுப்பியிருந்தார்.
மாதங்கள் பல கடந்து எல்லோரும் நடந்த நிகழ்வை மறந்திருப்பர் என்ற எண்ணத்தில் தான் மீண்டும் மருதுவை ஊருக்கு வரவழைத்திருந்தார்.
ஆனால் இப்படி நடக்குமென்று அவரே எதிர்பார்க்கவில்லை.
மருது வந்த அன்று…
“திரும்ப கயல் பின்னாடி சுத்தாத… இப்போ அவளுக்கு சொந்தமின்னு ஊரிலிருந்து ஆளுங்க வந்திருக்காங்க. கொஞ்சம் அடங்கியிரு. நான் பொறுமையா கயலிடம் பேசுறேன்” என்று மருதுவை அடக்கித்தான் வைத்தார்.
முகி மருத்துவம் படித்திருக்க… கயலை தன்னுடைய பையனுக்கு கல்யாணம் செய்துவிட்டால் அவளின் பண்ணை மொத்தமும் தன் வசமென்று துரை கணக்கிட்டிருந்தார். அதற்கு மருதுவின் கயலின் மீதான ஆசையும் தூபமிட… நேரடியாகவே பெண் சென்று கேட்டார்.
அவர்கள் மறுப்பார்கள் என்று துரை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அன்று முகி நடந்து கொண்டது அவரை அவசரப்படாது பொறுமை காக்க வைத்தது.
மகனிற்கு கயலை மணம் முடிப்பதைவிட… கயலின் பண்ணை தான் அவரை உறுத்திக் கொண்டிருக்கிறது. அதற்காகவே முகி அவமானப்படுத்திய போதும் அமைதியாகவே இருந்தார்.
ஆனால் அன்றைய வன்மம் இன்று திருப்பி தாக்குமென்று அவர் சற்றும் நினைக்கவில்லை.
“கயல் தான் செய்திருக்கணும் தோணுதா?”
தன் நினைவுகளை ஒதுக்கி வைத்தவராக துரை மருதுவிடம் கேட்டிருந்தார்.
“கயலில்லை… ஆனால் அவளுக்கு நான் செய்ததற்கான தண்டனை தான் இதுன்னு தோணுது” என்றான்.
“அன்னைக்கும் அந்த சிவா தான் ரொம்ப துள்ளுனான். இன்னைக்கும் அவனாத்தான் இருக்கும். நீ எப்போ திரும்ப வருவன்னு காத்திருந்திருப்பான் போல…”
துரை சொல்லியதற்கு மறுப்பாக தலையாட்டிய மருது…
“அவனில்லை” என்றான்.
“அவன் இல்லைன்னா. அப்புறம் யாரு. அந்த முகியும் ஊரில் இல்லை” என்றார்.
“எனக்கு அது யாருன்னு தெரிஞ்சுப்போச்சு. அது போதும். அவனை நான் பார்த்துக்கிறேன்” என்ற மருதுவின் கண்களுக்குள் முகத்தை மூக்கு வரை கைக்குட்டையாலும், கண்களை கூலர்ஸ் அணிந்தும் மறைத்தவாறு… பாதி இருளில் தோரணையாக தன் முன்னே நடந்து வரும் ஆறடி கட்டுக்கோப்பான தேகம் கொண்ட உருவத்திற்கு…
தான் கடத்தப்பட்ட நாளிற்கு முதல் நாள் கந்தன் கடையில் பார்த்திட்ட… பார்த்திபனின் முகத்தை பொருத்தி பார்த்திட தீ கங்குகள் கொழுந்திட்டன.
இன்னும் விரல்கள் வலியை கொடுத்துக்கொண்டிருக்க… சுவற்றை இரு கை விரல்கள் கொண்டும் பிராண்டினான்.
“டேய் என்னடா பண்ற… நகம் வர சில மாதங்கள் ஆகும் சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள காயத்தை அதிகப்படுத்தாதே.” ஒரு விரலில் கூட நகங்கள் இல்லாது… அவன் பிராண்டியதால் கசியும் ரத்தத்தை பார்த்தவாறு துரை கத்த… அவருக்கு மேல் வெறிப்பிடித்தவன் போல் கத்தியிருந்தான் மருது.
“எனக்கு இந்த வலி வேணும். அவனை என் கையால் திருப்பி செய்யும்வரை இந்த வலி இருந்துட்டே இருக்கணும். வலி குறைந்தால் கோபம் குறைஞ்சிடும். அது கூடாது” என்று அரற்றினான்.
மருதுவிடம் தெரிந்த பழிவாங்கல் நிறைந்த முகம் துரைக்கே பயத்தை கொடுத்தது.
‘என்னை ஒரு சொட்டு தண்ணிக்கும்… ஒரு வாய் சோத்துக்கும் தவிக்க வைச்சுட்டல… மூணு நாளா இயற்கை அழைப்பிற்கு கூட என்னை அவஸ்தை பட வைச்சுட்ட… பார்த்திபா உன் சாவு என் கையால் தாண்டா…’
கழுதைப்புலியின் பளபளப்பு அவனது கண்களுக்குள்.