பார்த்திபனின் கயல்விழியாள் 5

அத்தியாயம் 🌾 5 :

அவ்விடமே ஆட்கள் நிரம்பி வழிந்து காற்றில் எங்கும் சதக் சதக் என்ற அரிவாள் வெட்டும் சத்தமும் சர் சர்ரென்று காய்ந்த சருகு கிழியும் சத்தமும் நிறைந்திருந்தது.

அத்தோடு பெண்கள் அக்கம் பக்கத்து கதைகள் பேசும் கிசுகிசுப்பும்.

“சும்மா தொண தொணக்காம வேலையை பாருங்கக்கா. மதிய சாப்பாட்டு நேரம் வரதுக்குள்ள இன்னும் ஒரு லோடு ட்ராக்டரில் ஏற்றி இருக்கனும்” என்று சிவா வேலை செய்பவர்களை துரிதப்படுத்தினான்.

“அதெல்லாம் ஏத்திடலாம் சிவா. களைப்பு தெரியாம இருக்கத்தானே பேசுறோம்” என்று சிவாவிற்கு பதில் சொல்லிய பெண்… வெட்டி போட்ட கரும்பிலிருக்கும் சருகினை ஒதுக்க… மற்றொரு பெண் அடுக்கி கட்டி வைக்க… ஆண் ஒருவர் அதனை தலையில் வைத்து வரப்புகள் தாண்டி பாதையில் நின்றிருந்த டிராக்டரை நோக்கி கொண்டு செல்ல… வண்டியிலிருந்த ஒருவர் அதனை வாங்கி அடுக்கி வைத்தார்.

கரும்பினை வெட்டுவதும் வண்டியில் ஏற்றுவதும் ஆண்கள். அதனை அடுக்கி சுமை கட்டி வைப்பது பெண்கள்.

அதனை கயல் மேற்பார்வை செய்து கொண்டிருந்தாலும் அவ்வவ்போது கரும்புகளை கட்டியும் வைத்தாள்.

“பத்து மணிக்குலாம் சூரியன் சுள்ளுன்னு விழுறான்” என்று சொல்லிய ஆண் ஒருவர் நடு வயலில் நின்று குடிக்க தண்ணீர் கேட்க… சிவா கிணற்றில் அவ்வெயிலிலும் குளிர்ந்து கிடந்த நீரை கொண்டு வந்து கொடுத்தான்.

சிறிது நேரத்தில் சரளா கொடுக்க சொல்லி அனுப்பியதாக மலர் மோர் கொண்டு வந்து வேலை செய்யும் அனைவருக்கும் கொடுத்து முடித்து கயலுக்கு ஒரு குவளையை நீட்டினாள்.

“நீ காலேஜ் போகலையா?”

“இல்லைக்கா…” என்று தடுமாறியவள், “இன்டெர்னல் நடக்குதுக்கா, ஒருநாள் விட்டு ஒருநாள்” என்று சொல்லி கீழே கிடந்த கரும்பை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.

மலர் வயலுக்கு செல்வதை பார்த்த முகி அவளின் பின்னே சற்று இடைவெளிவிட்டு வந்திருக்க, கயலும் அவளும் பேசியதை கேட்டிருந்தான்.

மோரினை குடித்து முடித்த கயல், “நீ எழுந்திரு இன்டெர்னல் சொன்னியே வீட்டுக்கு போய் படிக்குற வேலையை பாரு” என்று மலரை கைபிடித்து எழுப்பி விட்டாள்.

அப்போது தான் முகி அங்கு நிற்பதை கண்ட கயல் “வாழை தோப்பில் ஆளில்லாம, நீ எப்போட வந்த?” என்று வினவினாள்.

“வாழை தோப்பு வேலை முடிஞ்சுதுக்கா. அதான் வீட்டுக்கு போயிட்டு இப்போ தான் வந்தேன்” என்றான். அவனின் பார்வை முழுக்க மலரிடம்.

“சரி சரி… வெயில் வேற ஜாஸ்தியா இருக்கு. மலரை வீட்டில் விட்டுட்டு நீயும் ரெஸ்ட் எடு. இன்னும் ஒருமணி நேரத்துல ஆளுங்க களைஞ்சிடுவாங்க” என்ற கயல் கீழே குனிந்து விட்ட வேலையை தொடர்ந்தாள்.

காலையில் ஏழு மணிக்கு தொடங்கிய வேலை… உச்சி வெயில் வருமுன், மதிய உணவுக்கு கிளம்பிவிடுவர். அடுத்து மறுநாள் தொடங்குவர். இல்லையெனில் வெயில் குறைந்ததும் மீண்டும் தொடங்கி அந்தி சாயும் வரை செய்வர்.

அவன் அக்காவின் பேச்சிற்கு சம்மதம் சொல்லி முன்னால் நடக்கத் துவங்க…

“நான் நடந்தே போயிக்குறேன்க்கா” என்று தலையை குனிந்து கொண்டு சொன்னாள் மலர்.

“நான் உன்னை அவனோடு போகச் சொன்னேன்” என்று சற்று சத்தமாக சொல்லிய கயல் அவளை நிமிர்ந்தும் பாராமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

மலரின் வார்த்தையில் தன் நடையை நிறுத்தியிருந்த முகி, கயலின் பேச்சில் தொடர்ந்திருந்தான்.

அவனுக்கு நன்கு தெரியும் கயலின் பேச்சிற்கு எதிர் பேச்சு மலரிடம் இருக்காதென்று. கயலென்றால் மலருக்கு அவ்வளவு அன்பு, மரியாதை.

முகியின் முதுகினை தொடர்ந்தவளுக்கு அவனின் அடக்கப்பட்ட புன்னகை அவனின் தோள் அதிர்வில் மலரால் நன்கு அறிய முடிந்தது.

“உன்னோடலாம் என்னால வர முடியாது. அக்கா கேட்டா உன்னோடதான் போனேன் சொல்லிடு” என்று அவன் சிரித்ததுக்கு கோபமாக பேசிவிட்டு முகியைத் தாண்டி வேகமாக பூமி அதிர நடந்தவள்… கால் வைத்த வேகத்திற்கு வரப்பில் சரிந்து கீழே விழுந்தாள்.

முகி சுதாரித்து பிடிப்பதற்குள் சேற்று வயலில் மல்லாக்க விழுந்திருந்தாள்.

அவளின் தோற்றம் சிரிப்பினை வரவழைத்த போதும்… அதனை மறைத்தவனாக அவள் எழும்ப கரம் நீட்டினான்.

‘உன் கையை நான் பிடிக்கணுமா?’ என்ற அலட்சியமாக முகம் திருப்பியவள் தானே எழ முயற்சிக்க, பரம்படித்து கிடந்த சேறு நன்கு ஆழ புதைய மீண்டும் நிலை தடுமாறி விழுந்திருந்தாள்.

முகி மிதப்பாக பார்த்து நின்றான்.

‘இந்த எருமை கை நீட்டின அப்போவே கையை கொடுத்திருக்கணும். இப்போ நான் தான் எருமை மாதிரி சேத்துல மிதக்குறேன்.’

எங்கே எழ முயற்சித்தால் மீண்டும் விழுந்து விடுவோமோ என்று அஞ்சியவள் அப்படியே அமர்ந்து விட்டாள். முகியிடம் உதவி கேட்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

அவளையே சில கணங்கள் பார்த்து நின்றவன், ‘இவளா வாய் திறக்க மாட்டாள்’ என சொல்லிக்கொண்டு அவள் முன்பாக தன் கரம் நீட்டினான்.

உச்சி வெயிலில் எவ்வளவு நேரம் தான் இப்படியே சேற்றில் அமர்ந்திருப்பது. சற்று நேரத்திற்கெல்லாம் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். தோன்றினாலும் அவனை முறைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள். அவளின் அடிகண்கள் முகியை கிழிப்பது போலிருந்தது.

“என் கையை பிடிச்சா எரிஞ்சா போயிடுவ?”

‘தன்னுடைய கையை தீண்டுவதற்கே இவ்வளவு யோசிக்கிறாளே’ என்று அவனுள் கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் கோபம் எட்டிப்பார்த்தது.

“உனக்குத்தான் வேண்டுதல் இந்த உச்சி வெயிலில் இப்படி குளுகுளுன்னு உட்கார்ந்திருக்கனுமுன்னு. எனக்கென்ன, இப்போ வரியா இல்லையா?” சற்று அதட்டலுடன் தான் கேட்டான்.

“இந்த அதட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத!” அவனைவிட அதிகமாக இவள் சீறினாள்.

“சரி இப்படியே இரு… நான் போய் அக்காவை கூட்டிட்டு வர்றேன்” என்று நகர முயன்றவனின் நீட்டியிருந்த கையை நொடியில் பற்றினாள்.

“இந்த உருட்டுற மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்ட மட்டும் தான் போல” கயலை சொல்லியதும் அவள் தன் கையை பாய்ந்து பிடித்ததை நக்கல் செய்தபடி அவளை மேலே இழுக்க… தன் முறைப்பான பார்வையை சற்றும் மாற்றிக்கொள்ளாத மலர் அவனை ஒரே இழுவையில் சேற்றில் விழ வைத்து தான் வரப்பில் ஏறியிருந்தாள்.

கண நேரம் என்ன நடந்ததென புரியாமல் வயலில் விழுந்த மறுநொடி எழுந்து நின்றவன் தன் தலையை இரு பக்கமும் உலுக்கி கண்களை கசக்கி பார்க்க…

மலர் கிணற்று மேட்டில் நின்றிருந்தாள்.

வேகமாக எழுந்து அவளருகில் வந்தவன், “எதுக்குடி என்னையும் வயலில் இழுத்து விட்ட” என்றவன் கேட்டு முடிப்பதற்குள்…

மோட்டர் தொட்டியில் இருந்த நீரினை அங்கிருந்த பக்கெட்டால் மோண்டு அவன் மீது விசிறியடித்தவாறு, “இந்த டி போடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்று கத்தினாள்.

முகத்தில் வழிந்த நீரை ஒரு கையினால் வழித்து… அதனை அவளின் முகத்திலேயே சுண்டி தெளித்தவன், “பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடாம, பக்கத்து வீட்டு ஆயாவையா கூப்பிடுவாங்க?” எனக் கேட்டு, அவன் பொண்டாட்டி என்று சொல்லியதில் அவள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாது… “சேற்றை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டதுக்கு தேன்க்ஸ்… சீக்கிரம் நீ கழுவிட்டு வா நான் வண்டிக்கிட்டே நிக்குறேன்” என முன்னே நடந்தான்.

அவன் சொல்லிய வார்த்தையில் திக்பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தவள், அவன் அழுத்திய வண்டியின் ஹாரன் ஒலியில் தான் சுயம் மீண்டாள்.

“இவனை இப்படியே விடக்கூடாது” என முணுமுணுத்தவள் வேகமாக உடலை சுத்தம் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக முகியின் முன் மூச்சுவாங்க நின்றாள்.

“உன் மனசில் நீ என்ன நினைச்சிட்டு இருக்க? நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டனே?” என விரல் நீட்டி பேசினாள்.

முகிலனோ அதனை சட்டை செய்யாது… அவள் முன்பாகவே தன் சட்டையை கழட்டிக் கொண்டிருந்தான்.

“ஏய் என்ன பண்ற?” என்றவள் கை கொண்டு தன் கண்களை மூடியபடி பதறினாள்.

“இதை போட்டுக்கோ” என்று அவளிடம் நீட்டியவன், அவள் அப்படியே நிற்க… “சரி நில்லு… ஆனால், என் பொண்டாட்டியை நான் மட்டும் தான் பார்க்கணும்” என்று குரலில் அழுத்தம் கொடுத்து கூறினான்.

பார்க்கணும் என்பதில் அவன் கொடுத்த அழுத்தத்தில் கண்கள் திறந்து தன்னை பார்த்தவள் தானிருந்த கோலம் கண்டு படப்படத்து, அவன் நீட்டியபடி இருந்த சட்டையை வேகமாக தன்னுடைக்கு மேலாக அணிந்து கொண்டாள்.

உடல் முழுக்க சேற்றில் விழுந்ததாலும் தண்ணீர் கொண்டு கழுவியதாலும்… ஈர உடையில் பெண்ணவளின் தேகம் மிளிர்ந்து காட்சியளித்தது.

சற்று முன்னர் நனைந்த அவனின் சட்டை அவளுக்காக காத்திருந்த வேளையில் சற்று உலர்ந்திருக்க, காதல் கொண்ட பெண்ணிடம் கண்ணியம் காக்க கழட்டி கொடுத்திருந்தான்.

அவன் முன்பு இப்படி நிற்க நேரிட்ட நிலையை எண்ணி உள்ளுக்குள் குமைந்தவள் நிமிரவே இல்லை.

மலரின் மனநிலை புரிந்தவன், அவளின் நிலையை மாற்ற எண்ணி முகத்தினை ஊடுருவி பார்த்தவாறு, “ஏன் இன்னைக்கு காலேஜ் போகல?” என்று வினா எழுப்பினான்.

“நீயெதுக்கு கேட்குற” என்றவளிடம் உடல்மொழியில் தடுமாற்றம்.

“நீயா சொல்றியா இல்லை நானா கண்டுபிடிக்கவா?” அழுத்தமாகக் கேட்டான்.

கயலிடம் சொல்லிய அதே காரணத்தை அவனிடமும் சொல்ல போனவளை கை காண்பித்து தடுத்தவன்,

“அக்காக்கிட்ட சொன்ன பொய்யை என்கிட்டவும் சொல்லாத!” என்றான்.

அதில் அப்பட்டமான அதிர்ச்சி அவளுக்கு. இருப்பினும் தன்னை சமாளித்தவள்,

“பொய்யில்லை” என்க, அவளை ஆழ்ந்து பார்த்து… “ஆஹான்… அப்புறம் எதுக்கு நேத்து காலேஜிலிருந்து வந்ததும் முத்தத்து தூண்ல சாஞ்சு அவ்வளவு அழுத” எனக் கேட்டான்.

கண்கள் விரிய அதிர்ந்தவள், ‘இவங்களுக்கு எப்படித் தெரியும்?’ என யோசித்தாலும்,

“நான் அழலையே!” என்க…

“நான் பார்த்தனே!” என்றான்.

“நான் தான் அழல சொல்றனே!” என்றவள் திரும்பி நடக்க, அவளின் கை பிடித்து இழுத்தான்.

இழுத்த வேகத்தில் அவனின் நெஞ்சில் முகம் மோத நெருங்கி நின்றாள்.

அவனின் முதல் நெருக்கம். நாசி தீண்டும் அவனின் வாசம். அப்போது தான், தான் அணிந்திருக்கும் அவனின் ஆடை கொடுக்கும் பாதுகாப்பினையும் சிறு கதகதப்பையும் அவளின் உடலும் மனமும் அறிந்தன. அவளுள் ஏதேதோ உணர்வுகள் அலையலையாய் ஆர்பரித்தன. தன்னை மறந்து அவனின் முதுகுக்கு பின்னால் தன் கைகளைக் கொண்டு சென்றவள்,

“சொல்லாம நீ போக முடியாது” என்ற முகியின் குரலில் தன்னை மீட்டு… அவனிடம் தன் மனம் நெகிழ்வதை தடுக்க முடியாது தன்மீது தனக்கே எழுந்த கோபத்தை அவனின் நெஞ்சில் கைவைத்து வேகமாகத் தள்ளி அவனிடம் காண்பித்தாள்.

அதற்கெல்லாம் முகிலன் அசைந்தானில்லை. நீ சொல்லித்தான் ஆகவேண்டுமென்கிற திடத்துடன், அவளையும் அங்கிருந்து நகர்ந்துவிடாது தடுத்து நின்றிருந்தான்.

நிமிடங்கள் இருவரின் பிடிவாதத்திலும் மௌனமாகக் கரைந்து கொண்டிருக்க, கரும்பு கொல்லையில் அன்றைய வேலை முடித்து ஆட்கள் கிளம்பும் சத்தம் கேட்டு இருவருமே அத்திசையை நோக்கினர்.

“அய்யய்யோ வண்டியை எடுங்களேன். அக்கா வந்தா இன்னும் ஏன் போகலை கேட்கும்” என்றவள், தான் அணிந்திருக்கும் அவனின் சட்டையை ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டாள்.

அவனோ பனியனோடு இருக்க, இந்நிலையில் யாரேனும் கண்டுவிட்டால் என்ற நினைப்பே பல கற்பனையான நினைவுகளுக்கு அவளை இட்டுச்செல்ல,

“வீட்டுக்கு வந்து நான் சொல்றனே” என்று அவனின் கைகளை பிடித்து மன்றாடினாள்.

“ஏமாத்தலான்னு நினைக்காத” என்றவன் வண்டியை உயிர்ப்பிக்க… அவனை உரசாதவாறு சர்வ ஜாக்கிரதையாக பின்னால் அமர்ந்தாள்.

அவர்கள் வீட்டிற்கு முன்பு ஓடும் பெரிய அகண்ட வாய்க்காலின் முன்பு வண்டியை நிறுத்தி அவளை இறங்கச் சொல்லியவன், “பத்து நிமிஷத்துல நீ மாடியில் இருக்கணும்” என்று சொல்லி வாய்க்கலின் குறுக்கில் நான்கடி அகலத்திற்கு போடப்பட்டிருந்த பனைமர பாலத்தின் மீது வண்டியை தள்ளியபடி வந்து பரந்திருந்த வீட்டு வாசலில் அதனை நிறுத்திவிட்டு, மலரை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

மலரும் சொல்லாமல் அவன் விடப்போவதில்லை என பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, அதே வாய்க்கலை கடந்து முகியின் வீட்டிற்கு அடுத்ததாக ஒட்டியவாறு இருந்த ஓட்டு வீட்டிற்குள் சென்றாள்.

எதிர்பட்ட சரளா மலர் அணிந்திருந்த ஆணின் சட்டையை பார்த்து மருண்டு நிற்க…

“இந்தம்மா வேற என்னான்னு தெரியாமலே அரண்டு போகும்” எனத் தலையில் தட்டிக்கொண்டு,

“ம்மா இப்போ எதுக்கு இப்படி நிக்குற, இது முகி மாமா சட்டை தான். சேத்துல விழுந்துட்டேன். உடம்பெல்லாம் ஈரமாகிருச்சு, இப்படியே எப்படி போவன்னு அவங்க சட்டையை கழுட்டி கொடுத்தாங்க” என்று விளக்கமாக சொல்லி சரளாவின் பயத்தை போக்கினாள்.

கயலும், முகியும் மாணிக்கம் மற்றும் சரளாவை அக்கா, மாமா என்று அழைக்க மலரும் சிறு வயதிலிருந்து முகியை மாமா என்றழைத்து பழகிவிட்டாள். இப்போது அவளுக்கு அவனிடம் மாமா என்ற விளிப்பு இல்லையென்றாலும், மற்றவர்களிடம் முகியை சொல்லும்போது தன்னைப்போல் அந்த சொல் வந்துவிடும். அதனை அவளும் மாற்ற விருப்பம் கொள்ளவில்லை.

அவ்வழைப்பு எத்தகைய உரிமையான ஒன்றென்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்.

இப்போதும் தானாக தன் வாய் உதிர்த்த மாமா என்ற வார்த்தையை நினைத்து புன்னகைத்தவாறு குளித்து உடை மாற்றினாள்.

மலரின் வீடு நடுவில் மழைநீர் விழுவதைப்போல் முற்றம் வைத்து இருக்கும். முகியின் வீட்டு முதல் தளத்திலோ அல்லது மொட்டை மாடியில் நின்றோ பார்த்தால் மலரின் வீட்டு உள் பக்கம் நன்றாகத் தெரியும்.

மலர் வீட்டிற்குள் நுழைந்ததுமே, எப்படியும் சரளா அவளிருக்கும் தோற்றம் கண்டு கேள்வி கேட்பார் என்று கணித்தவன், மலர் என்ன பதில் சொல்லி சமாளிப்பாள் என்பதை அறிய வேகமாக மாடியேறி தன்னறை சன்னல் பக்கம் வந்து நின்று அவர்கள் வீட்டு முற்றத்தின் வழியே நடப்பதை கவனித்தான்.

ஓரளவிற்கு அவள் உண்மையைத்தான் சொல்வாளென்று எண்ணியவன், நிச்சயம் தன்னை மாமா என சொல்வாளென்று எதிர்பார்க்கவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு அவன் பேச்சாலே மாமா என்ற அழைப்பை நிறுத்தியிருந்தவள், அது தன்னளவில் மட்டுமே என்று இன்று கண்டு கொண்டதில் அகம் மகிழ்ந்து போனான்.

அதே மகிழ்வோடு வீட்டின் மொட்டை மாடிக்கு வந்தவன் தென்னை மரத்தின் நிழல் படும் இடத்தில் நின்று மலரின் வருகைக்காகக் காத்திருந்தான்.

அரை மணி நேரம் கடந்தும் மலர் வரவில்லை.

அவளின் வீட்டு பக்கம் சென்று எட்டிப்பார்க்க, மலர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்த பெண் அவளின் தோழியென பார்த்ததும் கண்டு கொண்டான்.

கல்லூரி முடித்து நேராக மலரிடம் வந்திருப்பாள் போலும், கல்லூரி பை அப்பெண்ணின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது.

அப்பெண்ணின் முகம் கலவரத்தில் இருக்க… மலரின் முகம் பயத்தில் வெளுத்துப்போய் இருந்தது.

‘இவ(ள்) எதுக்கு இப்படி பயந்து போய் நிக்கிறாள்’ என்ற யோசனையோடு மதில் சுவற்றை நெருங்கி நின்றான். அவனின் நிழல் மலரின் வீட்டிற்குள் விழுந்தது.

முகியின் நிழல் கண்டு மேலே பார்த்த மலர்… ‘இப்படித்தான் நான் நேத்தும் அழுததையும் பார்திருப்பார் போல’ என்ற எண்ணத்தோடு தன் பிரச்சனைக்கு வழி கிடைத்து விட்டதென்ற நிம்மதியுடன் தனது தோழியை அனுப்பி வைத்தவள் வேகவேகமாக கயல் வீட்டு மொட்டை மாடிக்கு ஏறினாள்.

மலர் வந்ததும்…

“என்ன நடக்குது, உன் ஃபிரண்ட் என்ன சொன்னாள், எதுக்கு நீ பயந்திருக்க?” என்று முகியின் கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.

“நான் எல்லாமே சொல்றேன்” என்றவள் முகியை கூர்ந்து நோக்கியவாறு, “ஜஸ்ட் இது நான் உங்கக்கிட்ட கேட்கும் உதவி அவ்வளவுதான். இதுக்காக பதிலுக்கு என்னை நீங்க…”

“நிச்சயம் லவ் பண்ண சொல்லி கார்னர் பண்ண மாட்டேன்.”

அவள் கேட்பதற்குள் அவன் முடித்தான்.

“லவ் தானா வரணும்… நம்மளை ஒருத்தன் உருகி உருகி லவ் பண்றானேன்னு உள்ளுக்குள்ள போட்டுத் தாக்கணும். உன்னை என்னை நோக்கி தள்ளனும். அப்படி நீயா என்கிட்ட வர காதல் தான் எனக்கு வேணும்.”

முகியின் வார்த்தையில் மலரின் இதயம் உறைந்து நின்றது. காதலிக்கப்படும் சுகம் அவளின் மனமெங்கும் பரவியது. அவளுள்ளும் அவன்மீதான நேசம் அமிழ்த்தப்பட்டு உள்ளது. உணர்ந்தும் மறுக்கும் காரணம் அவள் மட்டுமே அறிந்தது. அவளின் நுண்ணுணர்வை அவளின் விழிகள் அவனுக்குக் காட்டிக்கொடுத்தது. இருப்பினும் அதை அவளாக உணர்ந்து சொல்ல வேண்டுமென ஆசை கொண்டவன் பேச்சை மாற்றினான்.

“என்னன்னு சொல்லு?”

மலர் சொல்ல சொல்ல கேட்டவனின் கழுத்து நரம்புகள் புடைத்து, கை முஷ்டி இறுக மூடியது.

முகியின் முகத்தில் தெறித்த ரௌத்திரத்தில் மலர் இரண்டடி பின் சென்றாள்.

error: Content is protected !!
Scroll to Top