அத்தியாயம் 🌾 51 :
“சென்னை வரலையா மலர்?”
“திரும்ப அடிச்சு விரட்டவா?”
மூன்று தினங்கள் ஆச்சு. மலர் முகியிடம் பேசி. அவன் அழைத்தாலும் எடுப்பதில்லை. பல முறை மன்னிப்பு வேண்டி புலனம் வழி தகவல் அனுப்பியும், பதிலில்லை. பார்த்துவிட்டதற்கு அடையாளமாக நீல குறியீடு காட்டியதும் புலனம் வழி காணொளி அழைப்பு விடுத்தும் பலனில்லை.
நாளை மறுநாள் மலரின் பிறந்தநாள்.
திருமணத்திற்கு பிறகான முதல் பிறந்தநாள். தன்னுடன் இருக்க வேண்டுமென்று ஆசைகொண்டான்.
திருமணம் தான் முடிந்துவிட்டதே தவிர… ஒருநாள் ஒருபொழுதும் கணவனாக பேசியதுமில்லை பார்த்ததுமில்லை. அவளின் அருகாமையையே தவிர்த்து தான் அவளுடன் இருந்திருக்கிறான்.
மலருடன் உட்கார்ந்து கதைத்தாலோ… அவளுடன் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருக்க நேர்ந்தாலோ தன் கட்டுப்பாடுகள் தளர்ந்திடுமோ. தன்னையும் மீறி அவளிடம் கணவனாக நடந்துகொள்வோமோ என்று அஞ்சியே விலகி தான் இருந்தான்.
அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணம் சாப்பிடும் நேரம் மட்டும் தான்.
இருந்தபோதும் மலரின் மீதான காதலை மனதோடு வைத்து அக்கறையும், அன்பாகவும் அவளை ஒவ்வொரு நொடியும் தாங்கினான்.
அவனே எதிர்பாராதது… மலரை அவன் அடித்தது.
அதனை அவனாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்நேரம் மலரை அங்கிருந்து எப்படியாவது அனுப்பி வைத்திட வேண்டுமென்பதே அவனது எண்ணமாக இருந்திட… என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே மலரை அடித்திருந்தான்.
மலரின் கண்களில் கண்ணீரை கண்ட பிறகே தான் செய்தது புரிந்திட தன்னையே நிந்தித்துக் கொண்டான்.
முகி காதலென்று மலரின் பின்னால் சுற்றும் போது… முறைக்கும் கண்கள். அவன் காதலை சொல்லும் போது அலட்சியம் காட்டும் கண்கள். சில நேரங்களில் வெறுப்பை கூட அந்த கண்களில் நேரில் கண்டிருக்கிறான். ஆனால் அவனால் அவள் கண்கள் கண்ணீர் சுமந்ததை முகியால் ஏற்கவே முடியவில்லை.
ஏற்கனவே மலரை அடித்துவிட்டோமே என்ற குற்றவுணர்வில் இருந்தவனை பார்த்திபன் சொல்லிய “பொண்ணை அடிக்கிறவனெல்லாம் ஆணில்லை” என்ற வார்த்தைகள் மேலும் வருந்தச்செய்தது.
அந்நொடி முதல் தான் செய்ததற்காக மலரிடம் மன்னிப்பு வேண்டி நிற்கின்றான். அவள் தான் மன்னிக்க தயாரில்லை.
இப்படியே விட்டால் அவளது பிறந்தநாளுக்கு தன்னிடம் வரமாட்டாளோ என பயந்து போனான். ஏனோ தன்னவள் பூமிக்கு வந்த நாள் அவனுக்கு ஸ்பெஷலாகத் தோன்றியது. அந்நாள் அனைத்தும் மறந்து அவளது சிந்தையில் தான் மட்டுமே இருக்க வேண்டுமென்று பேராசை கொண்டான்.
கல்லூரிக்கு விடுப்பு எடுக்க முடியாத சூழல் என்பதால் நினைத்ததும் அவனால் கிராமத்திற்கு வரவும் முடியவில்லை.
‘இனியும் அவளிடம் கெஞ்சி பலனில்லை’ என நினைத்தவன் சரளாவிற்கு அழைத்து… “மலர் போன் ரீச் ஆகல… நீங்க கொஞ்சம் கொடுங்க” என்று அவர் மூலமாக தன்னிடம் பேச வைத்தவன் முதலில் கேட்டது எப்போ வருகிறாய் எனத்தான்.
அதற்குத்தான் “இன்னும் நாலு கொடுக்கவா” எனும் அர்த்தத்தில் சூடாகத் திருப்பிக் கேட்டிருந்தாள்.
மலர் அவ்வாறு கேட்டதும் சுணங்கிய மனதையும் முகத்தையும் நொடியில் சரி செய்தவன்…
“ப்ளீஸ் வாடி. நீயில்லாம எதுவுமே செய்ய முடியமாட்டேங்குது.” கிட்டத்தட்ட மனைவியிடம் கெஞ்சினான்.
“நான் அங்க வந்தும் எந்த யூஸும் இல்லை டாக்டரே. அங்கிருக்கும் சேர், டேபுள் மாதிரி தான் நானும் இருக்கனும். அதிசயமா ஒரு நாள் வெளிய கூட்டிப்போனிங்க… அதுக்குத்தான் மொத்தமா சேர்த்து வச்சு துரத்தியாச்சு” என்றவளுக்கு கணவனை கஷ்டப்படுத்த வேண்டுமென்கிற எண்ணமெல்லாம் இல்லை. மனதில் பட்டதை உள்ளுக்குள் வைத்து மருகுவதை விட காரணமானவரிடமே கொட்டிவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்த்திடலாமே. அதற்காகவே அவன் மனம் நோகுமென்று தெரிந்தும் பேசினாள்.
“உன்னை நான் துரத்தலாம் இல்லைடி… சூழ்நிலை அப்படி” என்றவன், “நான் சொல்றதை கேட்டு பயப்படாதே! முக்கியமா கயலுகிட்ட உளறக்கூடாது. இப்போ இது முடிஞ்சிப்போன ஒன்னு புரியுதா?” எனக் கேட்டு எதற்காக அவளை மறுக்க மறுக்க ஊருக்கு அனுப்பி வைத்தான் என்பதையும், தன் உயிர் எந்த சிக்கலில் எப்படி மாட்டியிருந்தது என்பதையும் தெளிவாகக் கூறினான்.
பார்த்திபன் “முகி பிரோப்ளேம் சால்வ்ட்” என்று மட்டும் தான் மலரிடம் சொல்லியிருந்தான். இவ்வளவு விளக்கமாகக் கூறவில்லை. அதனால் முகி எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறான் என்பதை இப்போது தான் அறிந்தாள்.
மனம் வேதனை கொண்ட போதும் சரியாகிவிட்டதே என்ற நிம்மதி அவளுள்.
இருப்பினும் அவன் அடித்ததை அவளால் ஏற்க முடியவில்லை.
‘தன்னிடம் சொல்லியிருந்தாலே பிடிவாதமில்லாது அவனது வார்த்தைக்கு மதிப்பளித்து கிளம்பியிருந்திருப்பேனே. அல்லது அவனுடன் இருந்து அவனின் கஷ்டத்தில் பங்கெடுத்திருப்பேனே’ என்று ‘அவனின் துன்பத்தை தன்னிடம் சொல்லுமளவிற்கு தான் அவனுக்கு நெருக்கமில்லை போலும்’ என வருந்தினாள்.
அவ்வருத்தம் முகியிடம் சாதாரணமாக பேச வைத்தது.
“அவ்வளவு தானா?”
“என்னடி?”
“நீங்க தான் சொல்லனும்.”
“எப்போ கிளம்புற?”
“நான் தான் வரனுமா?”
“புரிஞ்சிக்கோடி… இப்போ என்னால லீவ்வெல்லாம் போட முடியாது.” இறங்கி வந்து பேசினான்.
கணவன் இப்படி கெஞ்சுவது அவளுக்கு மிகவும் பிடித்தது. அக்கணம் அவன் மீதான கோபம் வருத்தமெல்லாம் மாயமாகியிருந்தது. மேலும் சீண்டி விளையாட நினைத்தாள்.
“என்னால வர முடியாது. இனி நான் இங்கதான் இருப்பேன்.”
“காலேஜ் போக வேண்டாமா?” படிப்பை காரணம் காட்டினால் நிச்சயம் வருவாளென்று அவன் சொல்ல அதற்கும் அவளிடம் பதில் இருந்தது.
“நான் வீட்டிலிருந்தே படிச்சிக்கிறேன்.”
இதற்கு மேலும் அவளிடம் எப்படி பேசுவதென்று அவனுக்குத் தெரியவில்லை.
“அவ்வளவு தானா?” கேட்டவளுக்கும் அவனின் அமைதி என்னவோ செய்தது.
“ப்ளீஸ்டி அம்முலு என்கிட்ட வந்துடு.”
கணவனின் அந்த குரலும் புதிய அழைப்பும் அவளின் காதுக்குள் நுழைந்து என்னவோ செய்தது.
அதனை அனுபவித்தவளாக கண் மூடி நின்றாள்.
கல்லூரி செல்வதற்கு நேரமாவதை உணர்ந்தவன்…
“காலேஜ் போயிட்டு சைன் வச்சிட்டு ஹாஸ்பிடல் போகனும் மலர். டைம் ஆகிடுச்சு. ஈவ்வினிங் வந்து கால் பன்றேன். அட்டெண்ட் பண்ணு” என்றவன் காலினை கட் செய்திருந்தான்.
கணவனின் கெஞ்சலை உதாசீனம் செய்தவளால் அவனின் காதல் உருகும் குரலை அலட்சியம் செய்ய முடியவில்லை.
அடுத்த நிமிடம் பார்த்திபனின் முன் நின்றிருந்தாள்.
“நான் சென்னை போகனும்.”
“என் மச்சான் மன்னிப்பு கேட்டான் போலயே!” அட்டகாசமாக சிரித்த பார்த்திபனின் புன்னகை மலரின் சிணுங்களில் மேலும் அதிகமானது.
“அச்சோ அண்ணா” என்று முகம் மூடியவள்… “நான் ரெடியாகுறேன். என்னை பஸ் ஏற்றி விடுங்க” என்றவள் வாசல் வரை சென்று திரும்பி வந்தாள்.
“நான் போறதை அவர்கிட்ட சொல்லிடாதீங்க” என்றாள்.
“பயல ரொம்ப கெஞ்ச விட்டுட்டியோ!” இப்போதும் பார்த்திபனிடம் புன்னகை விரிந்தது.
“போங்கண்ணா” என்றவள் ஓடிவிட்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் கிளம்பியிருந்தாள்.
மாலை முகி இல்லம் வருவதற்குள் சென்றுவிட வேண்டுமென்பதே இந்த அவசரம்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியும் விட்டாள்.
பார்த்திபனுடன் காரில் செல்லும்போது…
“அண்ணி அவங்ககிட்ட சொல்லிட்டாங்கன்னா?”
“அவனுக்கு இந்நேரமெல்லாம் கயல் கால் பண்ணமாட்டாள். அப்படியே சொன்னாலும் சொல்லட்டுமே. விஷயம் தெரிந்தால் பியூஸ் போன என் மச்சான் முகம் தௌசண்ட் வாட்ஸ் லைட் மாதிரி ஒளிருமே” என்றான்.
மலரை பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பி வரும் வழியில் மருது வழி மறித்து நின்றிருந்தான்.
கார் கண்ணாடியை இறக்கிவிட்டு என்னவென்று பார்த்திபன் பார்த்திட…
“கொஞ்சம் இறங்கி வாரது…” என்றான் மருது.
இறங்கி வந்த பார்த்திபன் காரின் பேனட்டில் சாய்ந்து, கால்களை மாற்றி போட்டு, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சொல் என்ற பார்வையை வீசி நின்றான்.
“ஆள் நல்லா தோரணையாத்தான் இருக்க.”
“தேன்க் யூ…”
“அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். கயல் எனக்கு தான்.” மிரட்டும் தொனி.
‘இவனுக்கு கொடுத்தது பத்தல போலிருக்கே!’ மனதோடு சொல்லிக்கொண்ட பார்த்திபனின் பார்வையிலும் உடல் மொழியிலும் எவ்வித மாற்றமும் இல்லை.
“ஃபாரின்ல வீட்டுக்குள்ள வச்சு வளர்த்திருப்பாங்க. உனக்கு என்னைப்பற்றி தெரியல. நான் எதுவுமே ஒரு முறை தான் சொல்லுவேன். இனி கயலோட உன்னை பார்த்தேன்” என்றவன் நாக்கை மடித்து விரல் நீட்டி எச்சரித்தான்.
அதில் வந்த சிரிப்பை தனக்குள் மறைத்தான் பார்த்திபன்.
“என்னடா அடி வாங்கியவன் திரும்ப தைரியமா வந்து மிரட்டுறான் பாக்குரியா?” என்ற மருது அவனை தான் கண்டு கொண்டதில் அவனிடம் ஏதும் அதிர்வு தெரிகிறதா என்று கூர்ந்து நோக்கினான்.
பார்த்திபனிடம் அப்படியொன்றும் இல்லை என்பது அவனுக்கு ஏமாற்றமாகிப்போனது.
“எனக்கு நேருக்கு நேர் மோதி தான் பழக்கம்.”
இப்போது அடக்கமாட்டாமல் சத்தமாகவே பார்த்திபன் சிரித்து விட்டான்.
“பொண்ணுகிட்ட வீரத்தை காட்டினவனெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுறான்” என்று மீண்டும் சிரித்தான்.
அதில் மருதுவின் முகம் அவமானத்தால் சிறுத்தது.
“வேண்டாம் என்னை ரொம்ப சீண்டுற. ஏற்கனவே என்னை கடத்தி பெரிய தப்பு பண்ணிட்ட…” என்ற மருது “உன் சாவு என் கையில் தான். உன்னை செய்யுறேன் இரு” என்றான்.
“டயலாக் பேசாம வழியை விடு. ஏதோ சின்ன பையன் தனுஷ் படம் பார்த்துட்டு வந்து சொல்லத் தெரியாம டயலாக் சொல்ற மாதிரி இருக்கு” என்ற பார்த்திபன் காரில் சென்று அமர்ந்தான்.
“வழியை விடு. இல்லை விட்டு ஏத்திட்டு போயிட்டே இருப்பேன். ஏதோ கயல் சொன்னா(ள்)ன்னு அன்னைக்கு உன்னை விட்டேன்” என்றான். சற்றும் குறையாத கோபம். அன்றுக்கு நிகராக இன்றும்.
‘இவன் சொன்னதை செய்திடுவானா!’ எனும் பாவனையில் மருது நடு வழியில் அப்படியே இருக்க… சில அடிகள் பின்னால் சென்ற பார்த்திபன் அதீத வேகத்தில் காரினை முன்னோக்கி செலுத்தினான்… இமைப்பொழுதில் மருது விலகி நிலை தடுமாறி சாலையின் மறுபக்கமிருந்த சேற்று வயலில் விழுந்திருந்தான்.
“தப்பிச்சிட்டான்” என்று ஸ்டியரிங்கில் கையை தட்டிய பார்த்திபன் ‘இன்னைக்கு அவனுக்கு நல்ல நேரம்’ என தனக்குள் சொல்லிக்கொண்டான்.
மருதுவை நேரில் பார்த்ததும் கயலால் உள் பதுங்கியிருந்த அவனின் சீற்றம் மீண்டும் மேலெழும்பி இருந்தது.
அதனை மட்டுப்படுத்தும் வழி தெரியாது… நேராக வீட்டிற்கு செல்லாமல் பண்ணைக்கு வந்திருந்தான்.
சிவா திண்ணையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்தான்.
குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பார்த்திபனின் முகத்தில் ஒரு தீவிரம். நடையில் அப்படியொரு வேகம்.
“என்னாச்சு?”
பார்த்திபனை கவனித்த சிவா கேட்டிருந்தான்.
“மருதுவை பார்த்தேன்.”
‘வாண்ட்டடா வந்து புலி வாலை மிதிச்சிருக்கானே!’
“நான் தான் கடத்தினேன் கண்டுபிடிச்சிட்டான்.”
“அச்சச்சோ.” மருதுவை பற்றி தெரிந்ததால் சிவா பதறினான்.
“அவன் ரொம்ப மோசமானவன். அவன் பேரில் நிறைய அடிதடி கேஸ் இருக்கு. அவன் அப்பாவால எதுலையும் மாட்டாம தப்பிச்சிட்டு இருக்கான். நாம கடத்திய அன்னைக்கு அவனுக்கு ஏதோ நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். இப்படி அசால்ட்டா மாட்டும் ஆளில்லை அவன்” என்றான் சிவா.
“அவனுக்கெல்லாம் அவ்வளவு சீனில்லை மச்சான்” என்ற பார்த்திபன்… “அவனை திரும்ப எதாவது செய்யணும் தோணுதே” என்றவாறு இரு உள்ளங்கைகளையும் வேகமாகத் தேய்த்துக் கொண்டான்.
“வேண்டாம் கயலுக்கு தெரிந்தால் அவ்வளவு தான்” என்ற சிவா, “கயல் நம்மை இப்போ மன்னித்ததே பெரிய விஷயம்” என்றான்.
இப்போது வேண்டாமென்ற கயலே மருதுவை கொல்லுமளவிற்கு செல்லவிருக்கிறாளென்று யாருக்கும் தெரியவில்லை.
“இந்த முறை கயலுக்கு தெரியாம அவனை பண்ணனும் சிவா. இன்னைக்கு நேரா வந்து என்கிட்டவே டயலாக் பேசுறான்” என்ற பார்த்திபனிடம் அத்தனை கொதிப்பு.
“இப்போ செஞ்சதெல்லாம் பத்தாது. ஒரே அடி. அவன் திரும்ப எழுந்துக்கவே கூடாது.”
“யாரு எழக்கூடாது.”
கயலின் குரல் கேட்டதும் சடுதியில் பார்த்திபனின் முகம் சீரானது.
‘அச்சோ கயல் எல்லாம் கேட்டிருக்குமோ.’ சிவாவின் பயம் பார்த்திபனிடம் இல்லை.
சட்டென்று போனை எடுத்து காதில் வைத்தவனாக பார்த்திபன் திரும்பிட…
“ஹோ… ஃபோனிலா” என்ற கயல் சிவாவிடம் சென்றாள்.
“எக்ஸாம் முடியுற வரை வயல் வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அண்ணா” என்ற கயலுக்கு சரியென தலையாட்டினான் சிவா.
சற்று நேரத்திற்கு முன்பு சொல்லியிருந்தாள் முடியாதென மறுத்திருப்பான். இப்போது பார்த்திபனின் பேச்சால் கயலை எண்ணி பயந்தவனால் அவளுக்கு சரியென தலையாட்ட மட்டுமே முடிந்தது.
வராத அழைப்பில் பேசி முடித்து வந்த பார்த்திபன் கயலின் அருகில் அமர்ந்தான்.
“நாற்று எப்போ வரும்?”
“இருபத்தி நாலு நாள் ஆகும்.”
‘அப்படியே பச்ச மண்ணாட்டம் நடிக்குறதை பாரு.’ இவ்வளவு நேரமும் கொலைவெறியுடன் பேசியவனா இவனென்ற சந்தேகம் சிவாவிடம். அதை அப்படியே அவனின் முகமும் காட்டியது.
தனக்கு புரிந்தது என்பதைப்போல் பார்த்திபன் கயலுக்கு தெரியாது சிவாவை பார்த்து ஒற்றை கண்ணடிக்க… சிவா தலையை உளுக்கிக்கொண்டு, புத்தகத்தில் கவிழ்ந்திட்டான்.
பார்த்திபன் கயலின் கையை பிடிக்க… அவள் பதறி சிவாவை பார்த்தாள்.
“அவன் படிக்கிறான்” என்ற பார்த்திபன் அவளை நெருங்கி அமர்ந்தான்.
“அச்சோ அத்தான் விடுங்க. அண்ணா பார்க்க போறாங்க” என்றவள் அவனிடமிருந்து விலகி நகர்ந்து அமர ரத்தினம் வந்தார்.
“உன்னைத்தேடி வீட்டுக்கு போயிருந்தேன் கயல்” என்றவரை திண்ணைக்கு அருகில் கிடந்த கயிற்று கட்டிலில் அமர கூறினாள்.
ரத்தினம் முகத்தில் பதட்டம்.
இப்போது சிவாவின் கவனமும் ரத்தினம் மீது.
“விஷயமில்லாம இவர் வரமாட்டாரே!”
மூவரும் அவர் முகம் பார்த்திருக்க…
“நம்ம நிலமெல்லாம் கேட்டு ஒருத்தன் எனக்கு போன் போட்டிருந்தான் கயல். உரிய பணம் கொடுக்குறேன். உங்க ஊரிலிருக்கும் நிலமெல்லாம் வேணும். நீங்களா கொடுத்தால் பணம் கிடைக்கும். நானா எடுத்துக்கிட்டா, எதுவும் தேறாது சொல்றான். நான் ஊரில் பெரும்புள்ளின்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு. எல்லோரையும் சம்மதிக்க வைக்கணுமுன்னு எங்கிட்டவே வியாபாரம் பேசுறான் அவன்” என்றார்.
“எதுக்காகவாம்?” பார்த்திபன் தான் கேட்டிருந்தான்.
“ஏதோ கார் பேக்டரி வருதாமே… பக்கத்து ஊர் கோவில் நிலம் அதுக்கு போதலையாம். கோவிலுக்கு அந்தப்பக்கம் போனா தண்ணீர் கிடைக்காதாம். ஆறு நம்மவூர் பக்கம் அகண்டு ஓடுறதால கோவிலுக்கு இந்தபக்கமிருக்கும் நம்மவூர் நிலமெல்லாம் வேணுமாம்.” ரத்தினம் விளக்கமாகக் கூறினான்.
“நீங்க என்ன சொன்னீங்க?” கயல் கூர்மையாக வினவினாள்.
“சோறு போடுற பூமி. இதைப்போய் நான் விட்டுக்கொடுப்பேனா. அதெல்லாம் முடியாதுன்னு வச்சிட்டேன்” என்றார்.
“சரி பார்த்துக்கலாம் விடுங்க” என்ற பார்த்திபனுக்கு விவசாயமென்றாலே இப்போது தான் தெரிகிறது. அதற்கு ஆபத்தென்றால் ஏற்படும் விளைவுகள் எங்கிருந்து தெரிந்திருக்கப்போகிறது. அதனால் சாதரணமாகக் கூறினான்.
“உன்கிட்ட சொல்லனும் தோணுச்சு அதான் வந்தேன்” என்றவர், “முடியாது சொன்னதும் விடறவன் மாதிரி தெரியல… அவன் பேசுனதை பார்த்தால் எல்லாம் திட்டம் போட்டு கோவிலை மூடுன மாதிரி தெரியுது” என்றவர், “அந்தவூர் ஆளுவ மாதிரி நாம ஏமாந்திடக் கூடாது கயல்” என்றார்.
“திரும்ப வந்து பேசினா சொல்லுங்க…” என்ற கயல் ரத்தினத்திற்கு தைரியமளித்து அனுப்பி வைத்ததோடு யோசனையில் மூழ்கினாள்.
“என்ன கயல் யோசிக்குற?”
“இது சாதாரண பிரச்சனையா தெரியலண்ணா!”
கேள்வி கேட்ட சிவாவுக்கு கயல் பதில் சொல்லிட…
“எதுக்கு இவ்வளவு கவலை கயல். அவன் கேட்குறான் விருப்பம் இருக்கவங்க கொடுக்கப்போறாங்க. உனக்கு விருப்பமில்லைன்னா விடு. அவனால் என்ன செய்ய முடியும்” என்றான் பார்த்திபன்.
“நானில்லை… இந்த ஊரில் யாரும் அவனுக்கு நிலம் கொடுக்கக்கூடாது” என்றாள் கயல்.
பார்த்திபனுக்கு சுத்தமாக புரியவில்லை.
விவசாயம் முன்பு போலில்லை. கிணறு வைத்திருப்பவர்கள் மட்டுமே இரண்டு அல்லது மூன்று போகம் பயிர் வைக்கின்றனர். கிணறு இல்லாதவர்கள் மழையை நம்பித்தான். வருடத்திற்கு ஒருமுறை அவர்களெல்லாம் பயிர் வைப்பதே கடினம் தான். அப்படி வைத்தாலும் லாபமென்பது இன்றி ஏற்படும் நஷ்ட சுமை காரணமாக இப்போதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் அரிதாகிவிட்டனர்.
விவசாயம் என்பது மனிதனுக்கும் பூமிக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பந்தம். அதனை உணர்ந்து விவசாயத்தை உயிர் மூச்சாக நினைக்கும் ஒரு சிலர் மட்டுமே கஷ்டப்பட்டாலும் இன்றளவிலும் விவாசயத்தை விடாது இருக்கின்றனர்.
அப்படி விவசாயம் செய்யாது இருக்கும் பலருக்கு தொழிற்சாலை வந்துவிட்டால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பார்த்திபன் எளிதாகக் கூறிட கயல் வெகுண்டுவிட்டாள்.