அத்தியாயம் 🌾 52 :
“நான் மட்டுமில்லை யாரும் நிலத்தை அவனுக்கு கொடுக்கக்கூடாது. நான் கொடுக்கவும் விடமாட்டேன்.”
சொல்லிய கயலிடம் அத்தனை கோபம். இதுவரை இப்படியொரு கயலை பார்த்திபன் கண்டதில்லை.
“கயல்… சில்… ஜஸ்ட் ரிலாக்ஸ்டாம்மா” என்று பார்த்திபன் அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
ஆனால் பார்த்திபன் சொல்லியதன் தாக்கம் அவளை வெகுண்டெழச் செய்தது.
“மேல்தட்டு நிலையிலே வளர்ந்ததால உங்களுக்கு விவாசயிகளோட நிலை புரியலை இல்லை” எனக் கேட்ட கயல்…
“எல்லாரும் வேலை கிடைக்கும்ன்னு விவசாய நிலங்களை இந்த மாதிரி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்துட்டு வேலைக்கு போயிட்டா இங்க பிரச்சினை சரியாகிடுமா?” என்று கோபமாக பார்த்திபனிடம் வினவினாள்.
“வேலை இருந்தால் பணம் வரும். பணம் இருந்தால் போதுமே கயல், எல்லாம் கைக்கு வந்திடுமே!” என்றான்.
இன்னும் விவசாயம் இல்லையென்றால் என்ற விபரீதம் அவனுக்கு புரியவில்லை.
“எல்லாரும் எவனோ ஒருத்தன்கிட்ட கைகட்டி வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டா… எப்படி சாப்பிடறது?” முன்பிருந்த ஆவேசம் இப்போது கயலிடம் இல்லை.
“விவசாய நிலங்களை எல்லாம் பெரிய பெரிய கட்டிடமா மத்திட்டால்… சாப்பாடு எப்படி தட்டுக்கு வரும்?”
சரியான கேள்வி. அதன் பொருளில் பார்த்திபன் ஆடித்தான் போனான். சத்தியமான உண்மையல்லவா. விவசாயம் காணாமல் போனால் இங்கு உயிர்கள் அழிவது நிச்சயமல்லவா.
பசி ஒன்று இருக்கும் வரை விவாசயம் இருந்தே ஆக வேண்டும்.
பார்த்திபனுக்கு நிதர்சனம் புரிய ஆரம்பித்தது.
“உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே… வெளிநாடுகளில் கூட பாகுபாடு இல்லாம அறிவியல் முறையில் விவாசயம் செய்பவர்கள் முக்கால்வாசி பேர் படித்தவர்கள் தான்.”
கயல் சொல்லிய போது பார்த்திபனுக்கு நியோவின் நினைவு தான் வந்தது. அந்நொடி நியோவிற்கு தான் செய்ததும் கண்ணில் தோன்றி தன் தவறை பார்த்திபனுக்கு சுட்டிக்காட்டியது. எத்தனை பெரிய பாததூரமான விடயம் அது. எவ்வளவு எளிதாக செய்துவிட்டான். இப்போது நினைக்கையில் தன் செய்கை தன்னையே குற்றவுணர்வில் தள்ளும் நிஜத்தை உணர்ந்தான்.
“ஆனால் இங்கதான் படிக்காதவன் மட்டும் தான் விவசாயம் செய்யணும் எழுதப்படாத சட்டம் எல்லோர் மனதிலும் ஊறிப்போயிருக்கு.” கயலிடம் மிதமிஞ்சிய வருத்தம்.
“எவ்வளவு எளிதா சொல்லிட்டிங்க… பேக்டரி வந்தா நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்னு. வேலை மட்டும் போதுமா. விவசாயம் செய்ய ஒருத்தரும் இலைன்னா… இங்க எவனும் சாப்பாட்டில் கை வைக்க முடியாது.
வரப்போறது ஒன்னும் சாதாரண பேக்டரி இல்லை. கார் மேன்யூஃபாக்ட்சர் ஃபேக்டரி. அதோட பின் விளைவுகள் எப்படியிருக்கும் தெரியுமா? உங்களுக்கு தெரியாததா?
அதோட அதை இங்கதான் கொண்டு வரணும் அவனுக்கு என்ன அவசியம். அவன்கிட்ட தான் நிறைய பணமிருக்கே. அதை வைத்து அவன் நாட்டிலே இன்னும் பெரிசா செய்யலாமே?”
கயலின் இக்கேள்வி சிந்திக்கக்கூடியதாக இருந்தது.
“அங்கெல்லாம் இது பேன்ட்(தடை) கயல்…”
“அது ஏன் தெரியுமா? இங்கவிட அங்கதான் கார்களின் உபயோகம் அதிகம். ஆனால் அங்க கார் உற்பத்தி செய்வது தடைக்கு உட்பட்டது. அதுக்கு காரணம் தண்ணீர். இப்போ அவன் இங்க வந்து ஆரம்பிக்க போறன்னு சொல்லுறதுக்கு காரணமும் தண்ணீர் தான்.
அப்படியே கொஞ்சம் பாருங்க” என்று சற்று தொலைவில் கண் பார்வையில் ஓடிக்கொண்டிருக்கும் நதியை காண்பித்தாள்.
“அந்த பேக்டரி மட்டும் இங்க வந்துச்சு… இந்த பச்சையெல்லாம் காணாமல் போகும். சலசலன்னு ஓடுற ஆறு வத்திப்போகும். பூமி வெடிப்பு விடும். நிலத்தடி நீர் பாதாளம் போகும். ஒரு சொட்டு தண்ணிக்கும், ஒரு வாய் சோத்துக்கும் கை ஏந்தனும். ஏன் தெரியுமா?
ஒரு கார் உற்பத்தி செய்ய நாலு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுதாம். தண்ணீர் இல்லைன்னா இங்க விவசாயம் இல்லை. விவசாயம் இல்லன்னா உணவு இல்லை. அவன் கொடுக்குற காசை வச்சிட்டு என்ன பண்ண முடியும். காகிதத்தையா சாப்பிட முடியும்.
அவன் நாட்டில் அந்த குறையெல்லாம் வந்திடக்கூடாதுன்னு இங்கு ஆரம்பிக்கிறான். அவன் நீரையும் பயிரையும் இயற்கையையும் பாதுகாத்து வச்சிக்கிட்டு நாகரிகமென்று நம்மை நவீன முறையில் அடிமைப்படுத்திட்டு இருக்கான்.
இந்த பேக்டரி இங்கு வந்தா(ல்)…
அப்போ மேல நான் சொன்னதெல்லாம் நடக்கும் தானே?” என்றவள்,
“சந்தேகம் இருந்தா கூகுள் பண்ணிப்பாருங்க தெரியும்!” என்று படபடவென பட்டாசாக வெடித்தவள் பார்த்திபன் பேச வருவதை கண்டுகொள்ளாது சென்றுவிட்டாள்.
கோபம் கோபம் கோபம் மட்டுமே அவளுள். தன் மக்களை நினைத்து அந்த கோபம். மட்டுப்பட மறுத்தது.
‘என்ன நடந்தாலும் சரி வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலை இங்கு வரக்கூடாது’ என மனதில் உறுதி எடுத்தாள்.
கயல் சென்ற பிறகு அவ்விடமே புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது.
“ஷ்ஷ்ஷ்…” காற்றினை இழுத்து வெளியிட்ட பார்த்திபன், “கயலுக்கு இப்படி கோபம் வருன்னு இப்போ தான் தெரியும்” என தலையை உலுக்கினான்.
“எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்” என்ற சிவாவும் கயல் ஆத்திரமாக அவ்வளவு பேசியதில் சற்று மிரண்டுதான் போயிருந்தான்.
“அப்போ அந்த பேக்டரி இங்க வந்தா கயல் சொன்னதெல்லாம் நடக்குமா?”
ஆமென்று சொல்லிய பார்த்திபனுக்கு கயலுக்காக இதில் இறங்க வேண்டுமென்று தோன்றியது. அதற்கு ஏற்றவாறு சிந்திக்கத் துவங்கியிருந்தான்.
******
தேவராஜன் ஹோட்டலிற்கு சென்றிருக்க… மங்கை தோட்டத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருந்தார்.
வீட்டிற்கு முன் ஆட்டோ வந்து நிற்க…
யாரென்று எட்டிப்பார்த்தார் மங்கை.
கையில் பையுடன் மலர் உள் நுழைந்தாள்.
காலை மலரை பேருந்தில் ஏற்றி விடும் போதே வீட்டின் முகவரியை கொடுத்திருந்தான். தேவராஜனிடம் சொல்லி பிக்கப் செய்ய சொல்கிறேன் என்பதை மறுத்துவிட்டாள்.
“ஹேய் மலர் வா வா… நீ வரேன்னு யாரும் சொல்லலையே!” என்று வரவேற்றவர் மலரை உள்ளே அழைத்துச் சென்றார்.
“வீடு நல்லாயிருக்கு பெரியம்மா.”
“இங்கு வந்தா தங்க போக பார்த்தி தான் வாங்கினான்” என்றவர் மலருக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.
“முகியும் சொல்லலையே!”
“நான் வரது அவருக்கே தெரியாது அத்தை” என்ற மலர் வீட்டையே சுற்றி பார்த்திருந்தாள்.
“உங்க ரூம் அங்க இருக்கு” என்று வலது பக்கம் கை காட்டியவர், “மேலே தங்கிக்க சொன்னா, நாங்க கீழே இருக்கோம். இரவில் தனியா இருக்க மாதிரி இருக்கும்ன்னு முகியும் கீழவே ரூம் எடுத்துக்கிட்டான்” என்றார்.
“வழியில் சாப்பிட்டியா இல்லையா?”
“சாப்பிட பஸ் நிறுத்தினாங்க தான் பெரியம்மா நான்தான் பசியில்லைன்னு சாப்பிடல” என்றாள்.
“சரி சரி… சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா. நான் சாப்பாடு தயார் பன்றேன். முகி வர நேரம் தான். ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவிங்க” என்றவர் கிச்சன் பக்கம் செல்ல…
“பெரியப்பா இல்லையா பெரியம்மா?” என்று கேட்டவள் முகியின் அறைக்கு செல்வதை தவிர்த்திடவே பேச்சு கொடுத்தாள்.
ஆனால் மங்கை அவளிடம் நின்று பேச நேரமில்லை என்பதைப்போல் சென்றுகொண்டே… “அவர் ஹோட்டல் போயிருக்கார்” என்றவர் கிச்சனில் மறைந்தார்.
பழைய வீட்டில் இருவரும் ஒன்றாக இருந்தாலும் தனித்தனி அறையில் தான் வாசம். அதை நடைமுறை படுத்தியதும் முகிலன் தான். அதனாலே இப்போது அவனின் அறைக்குள் செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபடி இருந்தவளுக்கு, எப்படியும் தனியே இருக்க மங்கை அனுமதிக்க மாட்டாரென்று முகியின் அறைக்குள் சென்றாள்.
அந்த வீட்டிலிருந்த அவளது உடைமைகள் அனைத்தும் அவனது அறையில் தான் தன் உடைமைகளுக்கு இடையில் வைத்திருந்தான்.
அவளுக்கே ஆச்சரியம்…
அன்று மங்கையிடமே படிப்பு முடியும் வரை தனித்தனிதான் என்று சொல்லியிருக்க…
“வாழ்க்கையை நீங்க எப்போ வேண்டுமானாலும் தொடங்குங்க. ஆனால் இப்படி தனித்து இருப்பது பெரிய இடைவெளியை உண்டாக்கிடும். ஒன்றாக இருந்து ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சி பண்ணுங்க” என்று சொல்லிவிட… அவனுக்கும் அது சரியென படவே ஒன்றாக இருக்கலாமென்று கருதினான்.
முதலில் முகியின் இச்செயலுக்கு சந்தோஷப்பட்டவரும் மங்கை தான். ஆனால் அழுத முகத்தோடு வீட்டிற்கு தனித்து வந்த மலர் விடுமுறையை காரணமாக சொல்லியபோதும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிணக்கு என்று அனுபவம் வாய்ந்தவர் எளிதில் கண்டு கொண்டார்.
அதனாலே இருவரும் தனித்து இருப்பதை விரும்பாது இங்கு ஒன்றாக இருக்குமாறு செய்தார்.
திருமண பந்தத்தின் தொடக்கத்தில் வரும் புரிதல் தானே வாழ்க்கை முழுமைக்கும் தம்பதியினரை ஒருவருக்குள் ஒருவரை கட்டிப்போட்டு வைக்கும்.
இருவருமே சிறு வயதென்றாலும், முதுமையாக யோசிக்கும் குணமுள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு வாழ்வை எப்போது தொடங்க வேண்டுமென்றும் தெரியுமென மேற்கொண்டு அதனை மங்கை பேசவில்லை.
முகி வீட்டிற்கு வந்தபோது எதிர்ப்பட்ட மங்கை மலரின் வருகையை அவனிடம் சொல்லவில்லை. அவனாக தெரிந்து கொள்ளட்டுமென்று விட்டுவிட்டார்.
மெத்திருக்கையில் தளர்வாக அமர்ந்தவன்…
“அத்தை ஐஸ் வாட்டர்” என்று குரல் கொடுப்பதற்கு முன்பு அவன்முன் நீட்டியிருந்தார்.
இப்போது முகி பார்த்திபன் சொல்லியதால் மருத்துவமனை செல்வதில்லை. படிப்பு காலத்தில் வரும் பயிற்சி வகுப்புகளுக்காக கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையிலேயே அவனுக்கு பொழுது சரியாகிவிடுகிறது.
“ரொம்ப சோர்ந்து தெரியிரியே முகி… ரெபிரஷ் செய்துட்டு வா எதாவது சாப்பிடலாம்” என்று அறைக்கு அனுப்பி வைத்தார்.
அறைக்குள் வந்தவனின் கண்ணும் கருத்தும் அங்கு மேசையில் வைக்கப்பட்டிருந்த மலரின் பையின் மீதும் அலைபேசியின் மீதும் படவேயில்லை.
கால்கள் தரையில் பதியுமாறு அப்படியே மல்லாக்கில் மெத்தையில் விழுந்தவன் வலது கை கொண்டு கண்களை மூடியவாறு சோர்வினை விரட்ட முயற்சித்தான்.
இன்று முழுக்க நேரம் பயிற்சி வகுப்பில் நின்றுகொண்டே முடிய… அதுவரை மட்டுப்பட்டிருந்த மலரின் நினைவு இப்போது முழுவதுமாக அவனுள் ஆதிக்கம் செய்தது.
“போன் போட்டா எடுப்பதே இல்லை” என்று வருத்தமாக நினைத்தாலும், அழைத்து பார்ப்போமென்று இருந்த நிலையிலிருந்தே மலருக்கு அழைக்க…
சத்தம் மேசையிலிருந்து ஒலித்த அதே கணம் குளியலறை கதவை திறந்து வெளியில் வந்தாள் மலர்.
இரண்டு ஒலியும் ஒருசேர செவி நுழைந்திட பட்டென்று எழுந்தவன் மலரை நிச்சயம் அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அகல விரிந்த அவனது கண்களே காட்டிக்கொடுத்தது.
“மலர்” என்ற அழைப்புடன் வேகமாக அவளை நெருக்கியவன் இறுக்கமாக அணைத்திருந்தான்.
“சாரிடி” என்றவன் தான் அடித்த கன்னத்தை தன்னுடைய புறங்கை கொண்டு மெல்ல வருடினான்.
அவனின் அணைப்பையும், வருடலையுமே எதிர்பார்த்திடாது அவனின் தொடுகைக்கு உருகி நின்றவள் அடுத்து அவன் கொடுத்த கன்னத்து முத்தத்தில் விழிகள் இரண்டும் தெறித்து விடுமளவிற்கு கண்களை விரித்து அதிர்வுக்குள்ளாகினாள்.
“வரமாட்ட நினைத்தேன்” என்றவன், “எனக்காகவா” என்றிட அவளின் தலை ஆமென்றது.
“சாரிடி… அன்னைக்கு…”
அவன் விளக்கம் கொடுக்கவர… அவனின் வாயில் கை வைத்து பேச்சிற்கு தடை விதித்தாள்.
புரிதல் இருக்குமிடத்தில் விளக்கங்கள் தேவையில்லையே!
“என்னை மன்னிச்சிட்டியாடி?”
கணவனின் அணைப்பிலிருந்தபடியே அவனின் கன்னங்களை பற்றியவள் அவனது நெற்றியில் இதழொற்றி விலகினாள்.
முகிக்கு அவளின் செயலே அவளது மனதை கூறிட… இரண்டு நாட்களுக்கு மேலாக இருந்த தவிப்பு அவனுள் அடங்கியது.
“இப்படியெல்லாம் செய்யாத மலர். அப்புறம் நான் வேற எதாவது செய்ய வேண்டியிருக்கும்” என்று கணவனது பார்வையில் முகி மொழிந்திட அவள் தான் தடுமாறி நின்றாள்.
அதனை மறைக்கும் பொருட்டு பேச்சு கொடுத்தாள்.
“பெரியம்மா சொன்னாங்கன்னு இங்க வந்திட்டேன். நான் வேற ரூமுக்கு போகனுமா இல்லை…” என்ற அவளது வாக்கியங்கள் அவனது இதழுக்குள் மறைந்து போனது.
சில கணங்கள் கழித்து அவளை விட்டவன்…
“மிஸ் யூ டி” என்று கள்ளப்புன்னகை சிந்தினான்.
“போங்க” என்று அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட…
“ஒன்னாவே இருக்கலாம் மலர்” என்றவன் மங்கை சொல்லியதை சொல்ல… அதற்குமேல் அவளுக்கும் அவனுடன் இருக்க எந்த தயக்கமும் இல்லை.
அந்நேரம் மலரின் அலைபேசி சிணுங்கியது.
“அண்ணா தான்” என்று திரையில் தெரிந்த பார்த்திபனின் பெயரை காட்டிய மலர் அழைப்பினை ஏற்று ஸ்பீக்கர் ஆன் செய்தாள்.
“நான் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் அண்ணா” என்று சொல்ல,
“மாம்கிட்ட விசாரிச்சுட்டேன் மலர்” என்ற பார்த்திபன், “என் மச்சான் பாவம். கொஞ்சம் பார்த்து பதமா அடி கொடும்மா” என்று சொல்ல…
“அத்தான்” என்ற முகியின் குரல் சிணுங்கலாக ஒலித்திட… எதிர்பக்கமிருந்து பல சிரிப்பொலிகள் கேட்டது.
இன்னும் இரண்டு நாட்கள் கழித்து சென்னை செல்கிறேன் என்று சொல்லியிருந்த மலர் திடீரென கிளம்பவும் சரளா புலம்பி தள்ளிவிட்டார்.
கயலும் “இருவருக்குள் ஏதேனும் இருக்குமோ? நீங்க மறைக்கிறீங்களா?” என பார்த்திபனை கேட்டிட… அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று அவர்களை சமாதானம் செய்திடவே பார்த்திபன் அனைவரையும் வைத்துக்கொண்டு பேசினான்.
மலரின் துள்ளல் பேச்சும் முகியின் அளவான புன்னகையும் அவர்களுக்கு நிறைவைத்தர அழைப்பை துண்டித்தனர்.
******
பூந்தோட்டத்தில் மாலை நேர மலர்கள் பறித்த பின்னர்… கயல் செடிகளுக்கு தண்ணீர் பாய வழி செய்து சென்றிருக்க… நீர் பாய்ந்து முடித்ததும் மடையை அடைப்பதற்காக அங்கிருந்த வரப்பில் அமர்ந்து புத்தகத்தோடு போராடியபடி பாயும் நீரிலும் ஒரு கண் வைத்திருந்தான் சிவம்.
திடீரென கேட்ட கொலுசொலியும் ஆள் வரும் அரவமும் யாரென்று உணர்த்திட… அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன் திரும்பியும் பாராது வேக எட்டுக்கள் வைத்து முன்னேறினான்.
“சிவா… சிவா…”
அவனின் வேகத்திற்கு ஈடுகொடுத்திட… அவனை அழைத்துக்கொண்டே ஓடினாள் பெண்ணவள்.
அவனோ தென்னந்தோப்பு கிணற்றடியில் சென்றுதான் நின்றான்.
சிவாவின் பின்னால் ஓடிவந்தவள் சற்று குனிந்து மூச்சு வாங்கிட…
“எதுக்கு என்னையே சுத்தி வர?” என்று திரும்பியும் பாராது வினவினான்.
“நீங்க சுத்தி வந்தா நான் ஏன் உங்களை சுத்தப்போறேன்” என்ற பேதை… “என் மனசு உங்களுக்கு புரியலையா?” என சட்டென்று நீர் நிறைந்திட்ட கண்களுடன் தொண்டை அடைக்க கேட்டிருந்தாள்.
அதில் சிவாவின் உடல் தானாக இறுக்கம் பெற முழு உயரத்திற்கு விறைத்து நின்றான்.
“நான் என்ன செய்தால் என் காதல் உங்களுக்கு புரியும்?”
வேகமாகத் திரும்பியவன்…
“இப்போ எதுக்குடி அழுவுற?” என்று அவளின் மேல் எரிந்து விழுந்தான்.
அவளை பிடிக்குமா பிடிக்காதென்றெல்லாம் அவன் ஆராய முற்படவில்லை. ஆனால் அவளின் கண்ணீரை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் அக்கணம் அவனுக்கு புரிந்தது.
தான் என்ன நினைக்கிறோம் என்ற குழப்பத்திலேயே அவளிடம் காய்ந்தான்.
“என்னை லவ் பன்ற சொல்லுங்க அழுகையை நிறுத்துறேன்” என அவள் சொல்லிட…
“இங்க பாரு சக்தி” என்ற அவனின் பேச்சில்,
“பரவாயில்லையே என் பெயரெல்லாம் தெரிந்து வைத்திருக்கீங்க” என்று வெளிப்படையாகவே அவனை கலாய்த்தாள்.
அதில் அவளை முறைக்க முயன்று தோற்றவன் மறுபக்கம் திரும்பி…
“இந்த காதலெல்லாம் எனக்கு செட் ஆகாது. இப்போ அதில் எனக்கு விருப்பமும் இல்லை. சும்மா என் பின்னால் சுற்றி நேரத்தை வீணாக்காத! ஒழுங்கா படிக்கும் வேலையை மட்டும் பார். உன் அப்பா நினைத்தால் என்னைவிட பல மடங்கு சிறந்த ஒருவனை உனக்கு மணம் முடித்து வைப்பார்” என்றவனின் பேச்சு காதிலே வாங்காது…
“நாளைக்கு காலையில் ஹாஸ்டல் கிளம்புறேன். இனி எக்ஸாம் முடிச்சிட்டு தான் வருவேன். அதை சொல்லிட்டு அப்படியே உங்களை பார்த்துட்டு போகத்தான் வந்தேன்” என்றவள்…
“நான் படிச்சு முடிக்குற வரை தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள என்ன லவ் பண்ண ட்ரை பண்ணுங்க. இல்லை நான் உங்களை தூக்கிட்டுப்போய் தாலி கட்ட வேண்டியது இருக்கும்” என்ற அவளின் பேச்சைக்கேட்டு சிவாவுடன் சேர்ந்து அங்கு வந்த பார்த்திபனும் ஜெர்க்காகினான்.
“அப்புறம் நீங்க சொன்ன அட்வைஸ் எனக்கு கேட்கவேயில்லை” என்றவள் அங்கிருந்து செல்ல கிளம்பிட… பின்னால் நின்றிருந்த பார்த்திபனை கண்டு…
“உங்க மச்சானுக்கு நீங்க பண்ணுற லவ்வில் பாதியாவது கொஞ்சம் லவ் பண்ண சொல்லிக் கொடுங்கண்ணா” என்று தயக்கமின்றி உரிமையாய் சொல்லிச் செல்ல… செல்லும் அவளையே பார்த்திருந்த பார்த்திபனுக்கு அவளின் பேச்சும் அதிரடியும் பிடித்தது.
“பார்த்து மச்சான் சொன்னதை செஞ்சிடுவாள் நினைக்கிறேன். ஒரு பொண்ணு தூக்கிட்டு போய் தாலி கட்டினா எவ்வளவு பெரிய அசிங்கம். கொஞ்சம் யோசிச்சிக்கோ” என்று பார்த்திபன் சிவாவை கேலி செய்திட…
“அவள் ரத்தினத்தோட மகள்” என்ற சிவா பார்த்திபனை கடந்து செல்ல…
“ரத்தினத்தின் மகள் என்பது மட்டும் தான் உன் பிரச்சனையா சிவா” என்று பார்த்திபனின் வெளிப்படையானக் கேள்வியில் சிவாவின் நடை நின்றது.