அத்தியாயம் 🌾 53 :
பார்த்திபன் கேட்ட கேள்வியில் சிவாவின் நடை தானாக நின்றிருந்தது.
திரும்பியவன் பார்த்திபனை பார்த்தது பார்த்தபடி நின்றிருக்க… பார்த்திபனும் சிவத்தின் வார்த்தைக்காகக் காத்திருந்தான்.
“காரணம் நிறைய இருக்கு.”
பெரும் அமைதிக்குப்பின் சிவா கூறினான்.
“காதல் வேண்டான்னு சொல்ல நானே ஒரு பெரிய காரணம் தான்.”
“புரியலயே?”
சிவாவின் உள்ளக்கிடங்கின் காரணம் பார்த்திபனுக்கு புரிந்திருந்த போதும்… அவனாகவே சொல்ல வேண்டுமென நினைத்து, சிவாவின் எண்ணமறிந்ததால் உண்டான கோபத்தை வெளிக்காட்டாது கேள்வியாக வினவினான்.
“நான் யாரு?
எனக்குன்னு என் பெயரைத் தவிர வேறென்ன இருக்கு?
சக்திக்கு நான் ஓகே சொல்றன்னு வைய்ங்க, இது அதோட நிக்குமா? அடுத்த கட்டத்துக்கு போகும். அப்படி போகும்போது… காதல்ல தெரியாத பல விஷயம் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பெருசா தெரியும்.
என்னை நம்பி வரவளை உட்கார வைக்க என்கிட்ட வீடா இருக்கு?
இப்போ நானிருக்கும் நிலையில் அவளுக்கு ஒரு வேலை சோறு போட முடியுமா?
ஏன், அவள் கேட்கிறான்னு ஒரு குண்டூசி கூட அவளுக்கு என்னால் வாங்கிக்கொடுக்க முடியாது.
காதலிக்கும்போது வேண்டான்னு நினைக்கிற உறவுகள் எல்லாம் கல்யாணத்தின் போது வேணும் நினைக்கும்.
என்னோட நிலை யாருக்கு தெரியுதோ இல்லையோ எனக்கு நல்லாவே தெரியும்?
இங்கு ஆசைப்படக் கூட சில தகுதிகள் இருக்கனும்.
அந்த தகுதிகள் வரும்போது நான் ஆசைப்படக் கத்துக்கிறேன்” என்று தன்னுடைய உள்ளத்தில் அடக்கி வைத்திருந்தவற்றை எவ்வித பிசிறுமின்றி எதிரில் நிற்பவனுக்கு புரியும் வகையில் தெளிவாக அழுத்தத்துடன் கூறியிருந்தான்.
எப்போதும் சிரித்த முகத்துடன் மட்டுமே பார்த்து பழகிய சிவாவினுள் இத்தனை இருக்குமென்பதை பார்த்திபனே எதிர்பார்க்கவில்லை.
‘எனக்குன்னு யாரிருக்கா?’ என்று அந்த வகையில் தான் சிவா நினைத்திருப்பானென்று யோசித்திருந்த பார்த்திபனுக்கு சிவாவின் வார்த்தைகள் அதிர்வு தான்.
ஆனால், சிவா கயலையாவது கருத்தில் வைத்து பேசியிருக்கலாம் என்று தோன்றியது.
“உனக்குன்னு நாங்க இருக்கோங்கிறதை மறந்துட்டு பேசுறியா மச்சான்.”
மச்சான் என்ற வார்த்தைக்கு பார்த்திபன் கொடுத்த அழுத்தம் சிவாவை அவனை நோக்கி நேருக்கு நேராகப் பார்க்க வைத்தது.
“என்னை புரிஞ்சி வரவங்க நம்ம உறவையும் புரிஞ்சிப்பாங்கன்னு சொல்ல முடியாதே!” என்ற சிவா… இந்தப்பேச்சு இத்தோடு போதுமென்பதைப் போன்று “தோட்டத்து மடையை அடைக்கனும்” என்று சொல்லி திரும்பிய சிவா கண்கள் கலங்க நின்றிருந்த கயலை கண்டு அதிர்ந்து போனான்.
“நீ எப்போ கயல் வந்த?”
“எல்லாம் கேட்டுட்டேன் அத்தான்.”
கயலின் முகத்தை வைத்தே அவள் தான் பேசிய அனைத்தும் கேட்டுவிட்டாள் என்பதை யூகித்த சிவா மௌனமாக நிற்க… பார்த்திபன் கேட்டதற்கு பதில் சொல்லிய கயல் அடுத்த கணம் அங்கு நிற்காது சென்றிருந்தாள்.
இருவருமே தண்ணீர் தொட்டிக்கு அந்தப்பக்கம் இருந்ததால் பக்கவாட்டாக வந்த கயலை கவனிக்கவில்லை.
கயலின் உருவம் மறைந்த பின்னரும் சிவாவின் பார்வை அத்திசையிலேயே இருக்க… அவனது அருகில் வந்த பார்த்திபன் சிவாவின் தோளைத் தட்டி கை போட்டவாறு…
“உனக்கு யாரும் இல்லைங்கிற பீல் உண்மையாவே உனக்கு இருக்கா சிவா?” எனக் கேட்டான்.
மனதில் அழுத்தம் பெற்றதெல்லாம் வெளிவந்த போதும்… தான் பேசியதன் பொருள் யாவும் கயலை பார்த்த பின்னரே சிவாவால் உணர முடிந்தது.
இத்தனை வருட ஆழ் மனதின் நுண்ணுணர்வுகள் அவனையும் தாண்டி வெளி வந்ததே தவிர, கயலை ஒருபோதும் விட்டு தரும் எண்ணம் சிவாவிற்கு இல்லை.
சக்தியின் பேச்சினை இனி யாரும் எடுக்கக்கூடாது என்பதற்காகவே தன்னிடம் இல்லாததை எல்லாம் சொல்லியிருந்தான்.
அத்தோடு சக்தி தன்னை மணக்க நேரிடும் போது… ரத்தினத்தின் பார்வையிலிருந்து யோசித்து அவற்றை பேசியிருந்தான்.
“நான்… அது…”
“எனக்கு புரியுது சிவா” என்ற பார்த்திபன் அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்த சமயம் கயல் மீண்டும் வந்தாள்.
“கிளம்பிட்டிங்களா அத்தான்?”
“ம்.”
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நானும் வரேன்” என்றவள் சிவாவின் அருகில் சென்றாள்.
சிவாவின் கையில் வங்கி சேமிப்பு கணக்கு அடங்கிய புத்தகத்தை வைத்த கயல்…
“உங்களை எங்க சொந்த பிறப்பாத்தான் நானும் முகியும் பாக்குறோம்” என்று சொல்ல ஆரம்பித்தவள் ஏதோ பேச வந்த சிவாவை தடுத்து…
“இங்கு சுத்தி தெரியுற பச்சையில் உங்க உழைப்பும் இருக்கு. நீங்க இல்லாம நான் மட்டும் இதற்கு காரணமில்லை. நான் மட்டுமே இதற்கு சொந்தம் கொண்டாடிடவும் முடியாது. எல்லாம் என்னோடதுங்கிறது வெளிப்பார்வைக்குத்தான்.
நீங்க எங்ககிட்ட வந்த புதிதில் உங்க செலவுக்குன்னு பணம் கொடுத்தப்போ நீங்க வாங்க மறுத்து…
இங்கயே தங்கிக்கிறேன். இங்கயே சாப்பிட்டுக்கிறேன். நீதான் படிக்க வைக்கிற எனக்கு எதுக்கு கயல் தனியா பணம் சொன்னதோட… கூலி கொடுத்து உறவு வேண்டான்னு சொல்லாம சொல்லுறியான்னு கேட்டிங்க…
அப்போ நீங்க வேற ஆளா எங்களை நினைக்கலன்னு நீங்க சொல்லாமலே புரிஞ்சுது.
முகிக்கும் எனக்கும் சொந்தமா நீங்க இருக்கீங்கன்னு அவ்வளவு சந்தோஷப்பட்டோம்.
ஆனால் இப்போ?
உங்களை எப்பவும் நாங்க வேறையா பார்க்கலண்ணா.
ஒவ்வொரு லாபத்திலும் முகிக்கு தனியா போட்டு வைக்குற மாதிரி உங்களுக்கும் எடுத்து வைச்சிட்டு தான் வரேன்.
இங்கு இருக்குற எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் சிவாண்ணா. எது வேணுமோ எடுத்துக்கோங்கன்னு சொன்னாக்கூட அது என்கிட்ட இருப்பதை உங்களுக்கு கொடுக்குற மாதிரி ஆகிடும். அதனால் தான் இதுவரை சொல்லாம இருந்தேன். எல்லாம் உங்களோடதுன்னு நீங்களும் என்னை மாதிரியே நினைச்சிருப்பிங்கன்னு நினைச்சது என் தப்பு தான்.
என்கிட்ட உரிமை இல்லைன்னு நினைச்சுட்டிங்களா சிவாண்ணா.
உங்களுக்கு நானும் முகியும் இருக்கோம். இப்போ அத்தானும்.
இதெல்லாம் எங்களோடது இல்லைண்ணா நம்மளோடது.
கயல் என் தங்கச்சி… முகி என் தம்பின்னு நீங்க சொல்றது வெறும் வாய் வார்த்தையாதானாண்ணா.
நான் உங்களை குறையோ தப்போ சொல்லல… என்மேல் தான் எனக்கு கோபம் வருது. உங்களை இதுவரை எங்களுக்குள் ஒருத்தருன்னு நாங்க உணர வைக்கலன்னு.
சாரிண்ணா…”
அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியாது கயல் முகம் மூடி விசும்பிட…
கயலை தனக்குள் அடக்கியிருந்தான் சிவா.
உறவுகள் இருந்தும் அனாதையாக்கப்பட்டவனுக்கு யாரோவாகியவர்கள் உடன் பிறப்பாக மாறுவார்கள் என்று அறிந்திடாத விந்தை தெரியாது பேசிவிட்டான்.
“சாரி கயல்… நான் உங்களை பிரிச்சு பார்க்கலம்மா.
மத்தவங்க பார்வை என்மேல எப்படியிருக்குங்கிறதைதான் சொன்னேன்.”
“புரியுதுண்ணா… ஆனால் நீங்க அப்படி பேசியிருக்க வேண்டாம். எத்தனை பேரோட வாய் சொல்லியிருந்தாலும், உங்க வாயிலிருந்து வந்துருச்சேன்னு தான் ஒரு மாதிரி இருக்கு” என்றவள் தன் கண்களை துடைத்துக்கொள்ள… சிவாவும் கலங்கிய விழிகளை சரி செய்தான்.
“உங்க பாசமலர் படம் ஓவரா?” என்று கிண்டல் செய்த பார்த்திபனை இருவரும் ஒன்றாக முறைத்தனர்.
“என்ன ஏன் முறைக்கிறீங்க…” என்ற பார்த்திபன், “கயல் வந்ததால என் கோபத்தை காட்டல நான். இல்லை நீ பேசினதுக்கு சப்புன்னு ஒன்னு கொடுத்திருப்பேன்” என்று சொல்ல “ஏதோ உணர்ச்சி வசத்தில் பேசிட்டேன்” என சிவா மன்னிப்பு வேண்டிய பின்னரே பார்த்திபன் நேரமாவதை சுட்டிக்காட்டி கயலை அழைத்துச் சென்றான்.
சிவா கையிலிருந்த வங்கி புத்தகத்தை கயலிடம் மறக்காது கொடுத்திருந்தான்.
சிவாவிற்கு மனதில் விவரிக்க முடியாத சந்தோஷம் பேரலையாய் உருவாகியது.
தனக்கென்று உறவுகள். குடும்பம். அவன் எதிர்பார்த்தது கையிலிருக்க அந்த வானத்தையே தன் கைக்குள் அடக்கிய ஆனந்தம்.
இதற்கு பின்னராவது சிவா சக்தியின் காதலை ஏற்பானா?
*******
“இன்னும் தூங்கலையா?”
மொட்டை மாடியில் இருளை வெறித்திருந்த பார்த்திபனை கயல் கேட்டிருந்தாள்.
அவளுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தவன் திரும்பிய வேகத்தில் கயலின் கையை பிடித்திழுக்க அவனின் மார்பில் முட்டி நின்றாள்.
தானிருந்த நிலையிலேயே அவளை சுற்றி வளைத்து அவளின் முதுகோடு ஒன்றியவன் தன் பிடியை இருக்கினான்.
“அத்தான் என்னதிது?”
அவனின் நெருக்கத்தில் நெளிந்தாலும், அவளுக்கு விலகும் எண்ணம் தோன்றவில்லை.
“கொஞ்ச நேரம் நெளியாம நில்லுடி” என்றவன் அவளின் தோளில் தன் தாடையை பதித்து கண்களை மூடிக்கொண்டன்.
“சரி இந்நேரம் நீயெதுக்கு மாடிக்கு வந்த?”
“மாடுங்க கத்துற மாதிரி இருந்துச்சுன்னு பின்னால் போனேன். அப்போதுதான் இங்கு நீங்க நிக்கிறதை பார்த்தேன்.” அவனின் அணைப்பில் அவளுக்கு பேச்சே வரவில்லை. காற்றாகத்தான் குரல் ஒலித்தது.
“ம்…” என்றவனிடம் அதன் பின்னர் நீண்ட மௌனம்.
கன்னத்தில் உராயும் அவனின் தாடி முடிகள் குறுகுறுப்பை ஏற்படுத்த உள்ளுக்குள் அவஸ்தையாய் இருந்தது அவளுக்கு.
“அத்தான் நான் போகட்டுமா?”
அவனது அருகாமை தன்னை என்னவோ செய்கிறது என்பது வரை உணர்ந்தவள் அவன் விட்டால் ஓடிவிடும் மனநிலையில் இருந்தாள்.
“பிடிக்கலையா?”
“ஹாங்…”
“என்னை?”
“பிடிச்சிருக்கு.”
“அப்புறம் என்ன?” அவனின் கை அவளது வெற்றிடையில் அழுத்தமாக பதிந்தது.
வேகமாக அவனை உதறி தள்ளியவள் தன்னை சமன்செய்திட முயல… அவனோ அட்டகாசமாக சிரித்தான்.
“நீ ரொம்ப சாஃப்ட் பேபி” என்றவனை “பேசாதீங்க” என்று சொல்லியவள் “நான் போறேன்” என்று நகர மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான்.
“நாளைக்கு சென்னை கிளம்பனும்.”
“ம்… எப்போ கிளம்புறீங்க?”
“நீயும் தான்.”
கயல் எதற்கு என்பதைப்போல் அவனை பார்க்க…
அவளின் மூக்கினை பிடித்து ஆட்டியவன், “உன்னை கடத்திட்டு போய் தாலி கட்டப்போறேன்” என்றான்.
“ச்சூ… விளையாடாம சொல்லுங்க.”
“லாயர் பார்க்க…”
“எதையும் ஒரே முறையில் தெளிவா சொல்ல மாட்டிங்களா?”
“அந்த கார் கம்பெனிக்காரன் உன்கிட்ட வந்து பேசுவதற்குள் நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கணும்” என்றான்.
ஆனால் அவர்கள் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன்னரே அவன் பல அடிகள் எடுத்து வைத்திருந்தான்.
“மார்னிங் எயிட் ஓ க்ளாக் கிளம்பலாம். அதுக்கு முன்னாடி சிவாவைப்பார்த்து சொல்லிட்டு போகலாம்” என்றவன் மேலும் பல கதைகள் பேசிய பின்னர் தான் கயலை உறங்க அனுப்பி வைத்தான்.
காலையிலேயே ரத்தினம் மற்றும் இன்னும் சிலரோடு பக்கத்து ஊர்க்காரர்கள் சிலரும் கயலின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
ரத்தினம் நிலைமையின் தீவிரம் அறிந்து பேசினார்.
“கார் கம்பெனிக்காரன் வேலையை ஆரம்பிச்சிட்டான் கயல்… கட்டிட பூஜைக்கு மத்திய மந்திரி நம்ம தொகுதி எம்.எல்.ஏ எல்லாரும் வராங்களாம்.”
“இந்த சுத்துப்பட்டு கிராமங்களுக்கே சிகரம் வைத்த மாதிரியிருந்த எங்கவூர் கோவிலைக்கூட மூடிட்டானுங்க.”
“விவசாயத்தை தவிர எங்களுக்கு ஒன்னும் தெரியாதே!”
“ஆமாம் கயல் எங்களுக்கு என்ன பன்றது தெரியல. அதான் உன்கிட்ட கேட்டு போகலாம் வந்தோம்.”
“நிலத்தை மொத்தமும் கோவில் பிரச்சினை சொல்லி பக்கத்து ஊர்காரங்ககிட்ட பிடுங்கின மாதிரி நம்மகிட்டையும் விலை பேசியிருக்கான். நாங்க யாரும் முடியாதுன்னு சொல்லிய பிறகும் அவன் வேலையைத் தொடங்கியிருப்பது எங்களுக்கென்னவோ சரியாப் படல.”
“வயல் இல்லாம… விவசாயம் செய்யாம எப்படி கயல் இருப்பது.”
“நீங்க எது செய்தாலும் எங்கவூர் ஆட்கள் துணை நிற்கிறோம். திரும்ப கோவில் திறக்கனும். கோவில் நிலங்களில் விவசாயம் நடக்கனும்.”
வந்திருப்பவர்களில் ஆளாளுக்கு தங்களது எண்ணத்தை தெரிவித்தபடி இருந்தனர்.
ஒருவர் பார்த்திபனை பார்த்து…
“நீங்க தான் வெளிநாட்டில் இருந்தவராச்சே நீங்க எதுவும் செய்ய முடியாதா?” எனக் கேட்டார்.
பார்த்திபன் இறங்கினால் இது ஒன்றுமில்லை தான். அவனின் செல்வாக்கின் முன் இதெல்லாம் ஒன்றுமில்லை தான். ஆனால் அவ்வளவு இறங்க வேண்டுமா என்றே பார்த்திபன் பொறுமையாக இருக்கின்றான். ஆனால் அவனின் பொறுமை இன்னும் சிறிது நேரத்தில் காணாமல் போய்… அதிரடி காண்பிக்கவிருக்கிறான்.
கயல் பார்த்திபனை ஏறிட…
அந்நேரம் சரியாக வெளிநாட்டு கார் ஒன்று கயலின் வீட்டுமுன் வந்து நின்றது.
அதிலிருந்து படாடோபமாக மூவர் இறங்கினர்.
(அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில் இருப்பினும் தமிழில்.)
வந்திருப்பவர்கள் யாரென்பதைப்போன்று அனைவரின் பார்வையும் இருக்க…
“இவனுங்க அந்த கார் கம்பெனிக்காரனுக்கு கையாளுவ போல கயல். என்கிட்ட இவனுங்க தான் வந்து பேசனானுங்க” என்று மென் குரலில் ரத்தினம் முணுமுணுத்தார்.
ஊர்காரர்கள் திண்ணையில் அமர்ந்திருக்க… சுவற்றில் ஒரு கால் மடித்து சாய்ந்து நின்றிருந்தான் பார்த்திபன்.
வந்திருப்பவர்களை தன் பார்வையால் எடைபோட்டபடி.
“இந்தபொண்ணு சொன்னா இந்தவூர்க்காரங்க கேட்பாங்க.” வந்திருந்த மூவரில் ஒருவன் கயலை சுட்டிக்காட்டி கூறினான்.
அதற்குள் அவர்களில் மற்றொருவன் பார்த்திபனை இனம் கண்டு கொண்டு…
“நீங்க மிஸ்டர்.பார்த்திபன் தானே” என்று கேட்டிட… ஆமென்ற பார்த்திபன், அவர்கள் யாரின் கீழ் வேலைபார்ப்பவர்கள் என்பதை அறிந்து… டெல்லின் மூலம் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களின் நிர்வாகியை வீடியோ கால் வழியாக பிடித்திருந்தான்.
அப்போதுதான் பார்த்திபனின் உயரத்தை அங்கிருப்பவர்கள் முழுதாய் தெரிந்து கொண்டனர்.
கயலுமே பார்த்திபனின் உயரம் கண்டு விழிவிரித்தாள்.
பல நாடுகளில் வாரியரின் கிளைகள் இயங்குகின்றன என்று மட்டுமே அறிந்திருந்த கயலுக்கு பார்த்திபனின் செல்வாக்கு அந்நொடி தான் அடிவரை தெரிந்தது.
வந்திருந்த மூவரிடமும் மிகுந்த பொறுமையுடன் பார்த்திபன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் தங்களது பிடியில் உறுதியாக நின்றனர்.
இறுதியில்…
“உங்களிடம் எங்களுக்கு பேசில்லை” என்றவர்கள் நேரடியாக அங்கிருந்தவர்கள் மற்றும் கயலிடம் பேசியதோடு கிட்டத்தட்ட மிரட்டவே செய்தனர்.
“இங்கிருக்கும் நிலமெல்லாம் உங்களுடையதில்லை என்பதற்கான பத்திரம்” என்று போலி காகிதங்களை முன் வைக்க அதனை எடுத்து பார்த்த கயல் உட்பட அனைவரும் தங்களது அதிர்ச்சியை வெளிப்படையாகக் காட்டினர்.
“அத்தான் இங்க பாருங்க” என்று கயல் பார்த்திபனிடம் பத்திரத்தைக் காட்டிட… இதற்குமேலும் பொறுமை காக்க முடியாதென்றே பார்த்திபன் விரைந்து செயல்பட்டான்.
அதன் பலன்…
வீடியோ காலில் வெளிநாட்டில் இருந்துகொண்டு இங்கு கார் கம்பெனி ஆரம்பிக்கவிருக்கும் அந்நிறுவனத்தின் மேனேஜிங் டிரெக்டர் பெர்னாண்டஸ் மற்றும் பார்த்திபன் இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்திருந்தனர்.
பெர்னாண்டசும் பார்த்திபனை அறிந்திருந்தான்.
“உலகம் முழுக்க ஹோட்டல் பிஸ்னெஸ் அத்தோடு உச்சம் தோட்ட மென்பொருள் நிறுவனத்தின் எம்.டி’யை வில்லேஜில் இப்படி சந்திப்பேன்னு எதிர்பார்க்கவில்லை” எனக்கூறி சத்தமிட்டு சிரித்தார்.
“நானும் தான்” என்ற பார்த்திபன் நேரடியாக விடயத்திற்கு வந்திருந்தான்.
சில நாட்கள் விவசாயத்தோடு பிணைந்திருந்ததால் விவசாயம் பற்றி எடுத்துச்சொல்ல பார்த்திபன் அவ்வளவு மெனக்கெடவில்லை. தான் பார்த்தது அறிந்தது அத்தோடு ஒரு கார் கம்பெனியின் வருகை இங்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுமையாகவே பார்த்திபன் எடுத்துக்கூற… அனைத்தையும் கேட்ட பெர்னாண்டஸ் தான் செய்வதற்கு எதுவுமில்லையென்று கையை விரித்திட… பார்த்திபன் தன் மறுமுகத்தைக் காட்டினான்.
“பிக்கப் தி கால் மிஸ்டர்.பெர்னாண்டஸ்” என்ற பார்த்திபன் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.
ஒலித்த தன்னுடைய அலைபேசியை எடுத்து செவிமடுத்த பெர்னாண்டஸ் கேட்ட செய்தியில் அலைபேசியை நழுவ விட்டார்.
“பார்த்திபன்…” பெர்னாண்டஸ் தன்னுடைய கோபத்தை பார்த்திபனின் பெயரில் காண்பிக்க…
“யா… இட்ஸ் மீ” என்ற பார்த்திபன் கால்களை மாற்றி போட்டு அமர்ந்தான்.
“இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே எனக்கு வந்திருக்காது. நான் சொல்லியதை நீ கேட்டிருந்தா. நானே இதை லீகளாக ஹேண்டில் பண்ணத்தான் லாயரை மீட் பண்ண நினைத்தேன். இதெல்லாம் விவசாயம் நிலம்னு காட்ட சின்ன பேப்பர் போதும். உன் தொழிற்சாலையை இங்கு வராமல் தடுப்பதற்கு. ஆனால் அதுக்கு நீ எனக்கு இடம் தரவேயில்லையே பெர்னாண்டஸ். நான் என்ன செய்யட்டும். எனக்கும் இதைத்தவிர்த்து வேறுவழியில்லை. நீ நான் சொன்னதை கேட்கலையே” என்று, இப்போது சிரிப்பது பார்த்திபனின் முறையாயிற்று.
“ஓகே பை மிஸ்டர்.பெர்னாண்டஸ்” என்ற பார்த்திபன், “என்னை பழிவாங்கன்னு ஏதும் பிளான் பண்ணாதே சேதாரம் உனக்குத்தான்” என்றவன் பெர்னாண்டஸ் முறைப்பதை கண்டு கொள்ளாது காலினை டிஸ்கனெக்ட் செய்து… தனக்கு முன்னால் நின்றிருந்த மூவரையும் பார்த்தான்.
அடுத்த கணம் வந்த சுவடு தெரியாது மூவரும் அங்கிருந்து மறைந்திருந்தனர்.
“தம்பி ரொம்ப பெரிய ஆளு போல…”
ரத்தினம் வாயெல்லாம் பல்லாக கேட்டிட…
“எதிரிகளுக்கு எப்பவும் உண்மை முகத்தை காட்டிட்டே இருக்கனும்” என்றான் பார்த்திபன்.
“தம்பி கார் பேக்டரி…” என்று ஒருவர் இழுவையாகக் கேட்டிட…
“நீங்க உங்க ஊருக்குள் போகும் போது கோவில் திறந்திருக்கும்” என்று அவர்களின் மனம் சந்தோஷம் கொள்ளும் செய்தியைக் கூறினான்.
“இங்கு மட்டுமில்லை… இந்தியாவிலேயே எங்கும் அவன் பேக்டரி கட்ட முடியாது” என்றான்.
அவ்வாறு சொல்லியதும் பார்த்திபன் கயலின் முகத்தை தான் பார்த்தான்.
அப்படியொரு சந்தோஷத்தை கயலை சந்தித்திலிருந்து இதுநாள்வரை பார்த்திபன் கண்டதில்லை.
கண்கள் மின்னிட… முகம் கொள்ளா பூரிப்புடன் இதழ்கள் நன்கு நீண்டு விரிந்து பொலிவுடன் நின்றிருந்தாள்.
கயலின் சந்தோஷத்தை தனக்குள் உள்வாங்கியபடி சுற்றம் மறந்து இமைக்காது அவளையே பார்த்தபடி பார்த்திபன் இருக்க… வந்திருந்த அனைவரும் நன்றி தெரிவித்து சென்ற எதையும் அவன் கருத்தை நிறைக்கவில்லை.
“எப்படி அத்தான் ஒரு மணி நேரத்தில்…?” கயல் ஆச்சரியமாக வினவினாள்.
“டெல் மூலமா அரசியலில் யாரை பிடிக்கனுமோ பிடிச்சு வேலையை முடிச்சாச்சு” என்றவனின் பார்வை அப்போதும் மாறவில்லை.
“ரொம்ப செலவாகியிருக்குமோ!”
“ம்ம்ம்ம்…”
“எதுக்கு அத்தான். நீங்கதான் லாயர் பார்க்க போலாம் சொன்னீங்களே! அப்படியே ட்ரை பண்ணியிருக்கலாமே? இப்போ என்னால் உங்களுக்குத்தான் ஏகப்பட்ட பணம் இழப்பு” என்றாள்.
“உன் முகத்தில் இந்த சிரிப்பை பார்க்க… இதுக்கு மேல கூட கொடுக்கலாம்” என்றவனின் கண்களில் அப்பட்டமாக காதல் வழிந்தது.
அவனின் வார்த்தையில் கயலின் முகம் அவன்மீது கொண்ட காதலை பிரதிபலித்தது.