அத்தியாயம் 🌾 54 :
இருபத்தி நான்கு நாட்களுக்கு மேலாகியது…
அன்று ஒருபக்கம் பார்த்திபன் மற்றும் கயல் இருவரது நாற்றாங்காளிலும் நாற்று பிடிங்கி கட்டப்பட்டுக்கொண்டிருக்க… மறுபக்கம் உழுது, பரம்படித்து, பசுந்தாள் உரம் மற்றும் மண்புழு உரமிட்டு செப்பனிடப்பட்ட தத்தம் வயலில் பார்த்திபன் மற்றும் கயல் நாற்று கட்டுகளை வேண்டுவோருக்கு தூக்கிபோட்டபடி இருக்க… கட்டப்பட்ட சிறு கட்டு நாற்றை பிரித்து… அதிலிருந்து சிறு கொத்து நாற்றை எடுத்து தண்ணீர் தேங்கி உள்வாங்கும் சேற்றில் நடும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நடவு பாதி முடிந்த வேளையில் நாற்றங்கால் பகுதியில் முழு நாற்றும் பிடுங்கப்பட்டிருந்தது.
“நாத்தாங்காலை அப்படியே விட வேண்டாம் சிவாண்ணா. கலப்பை வைத்து உழுதுடுங்க… சேர்த்து நாத்து நட்டுடலாம்” என்று கயல் சிவாவிடம் சொல்ல… அப்பகுதியும் சில நிமிடங்களில் நடவுக்கு ஏற்றது போல் மாறியது.
காலை ஒன்பது மணிக்கே சூரியன் உச்சியில் நிற்பது போல் வெயில் சுட்டெரித்திட… புது அனுபவம் பார்த்திபனை திணறச் செய்தது.
தலையை உயர்த்தி வானத்தை பார்த்தவனின் கண்கள் கூசிட… சட்டென்று இமை மூடி முகம் சுருக்கினான்.
வியர்வை ஆறென உடலில் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
நெற்றி வியர்வையை சுட்டு விரல் கொண்டு வழித்து பெரு விரல் முனை தொட்டு சுண்டி எரிந்திட… தெறித்த வியர்வை துளிகள் சூரிய ஒளியில் மின்னியது. பொன் நகைகளில் காணாத பளபளப்பு. வியர்வையின் மதிப்பு அக்கணம் பார்த்திபனுக்கு புரிந்தது.
மீண்டும் ஒருமுறை கண்ணுயர்த்தி சுள்ளென்று தகிக்கும் சூரியனை கண்டிட முயற்சித்தவன்… தன் மடமை புரிந்து சிறு புன்னகையோடு நாற்று கேட்ட பெண்ணிற்கு கீழே குனிந்து நாற்று கட்டை எடுத்து தூக்கிப்போட்டான்.
அவனின் செய்கையை பார்த்திருந்த கயல் அவனருகில் சென்று, தலையில் வெயில் படாதவாறு துண்டினை கட்டிவிட்டபடி,
“உங்களால முடியலன்னா வரப்பில் போய் உட்காருங்க. நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லியதோடு பிறரின் கவனம் தங்கள் மீது உள்ளதா என்பதை பார்வையால் அளந்தவாறே இடை சொருகியிருந்த தாவணி நுனி கொண்டு அவனின் முகம் துடைத்தாள்.
தன் உயரத்திற்கு எக்கி நின்று தலையில் துணியை கட்டிவிட்டபோது கயல் மீது ரசனையாக பார்வையை பதித்தவனின் நிலையில் சற்றும் மாற்றமில்லை.
கயலின் அக்கறை நிறைந்த முகத்தில் கருவிழியை நிலைக்கச் செய்திட்டவன்,
“பிடிச்சிருக்கு…” என்றான்.
அவன் சொன்னதன் பொருள் விளங்காது… “அத்தான் என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.
கயலின் இடையோடு கையிட்டு தன்னோடு நெருக்கியவன்…
“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றிருந்தான்.
“பொண்ணு ஓகே சொல்லி முப்பது நாளாச்சு” என்று முகத்தில் தோன்றிய நாணத்தை இதழில் நெலிந்த புன்னகையில் மறைத்து பார்த்திபனின் முகம் பார்த்து கூறினாள்.
“இந்த மாம் ஏதேதோ ரீசன் சொல்றாங்களே!” என்று சிணுங்களில் கூறியவன், “நாமே பண்ணிப்போமா?” எனக் கேட்டான்.
தன்னிரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி தப்பு போட்டவள் வேண்டாமென தலையசைத்தாள்.
“உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு சத்தியமா முடியலடி…” என்றவன், “ஒரு கிஸ் பண்ணிக்கவா” என இயற்கையிலேயே சிவந்திருந்த அவளது வதனத்தில் கண் வைத்தவனாகக் கேட்டிட…
“சாந்தா ய(அ)க்கா பேச்சைக் குறைச்சிட்டு வேலையை பார்த்தால் நல்லாயிருக்கும்” என்ற சிவாவின் உரத்த குரலில் வேகமாக கயலை தன் அணைப்பிலிருந்து விடுத்தவன் தன்னுணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி அறியாது பின்னந்தலையை தடவி விட்டுக்கொண்டான்.
பார்த்திபன் திருமணம் என்று பேசும் போது இல்லாத அதிர்வு அவன் கேட்ட முத்தத்திலும், அவனின் பார்வை நிலைத்ததிலும் தோன்றியிருக்க… சுற்றம் உணர்ந்தவள் அவன் விட்டதும் வேகமாக அவனிடமிருந்து நகர்ந்திருந்தாள்.
பார்த்திபனுக்கு அருகில் வந்த சிவா…
“நான் எதும் பார்க்கலப்பா” என்றதோடு, “யாரும் பார்த்திடக் கூடாதுன்னு தான் சத்தமிட்டேன்” என்று சிறு சிரிப்போடு சொல்ல பார்த்திபன் தோன்றிய நாணத்தை தனக்குள் மறைத்தான்.
“மொட்டை வெயிலில் கூட ரொமான்ஸ் சீன் பார்க்க நல்லாத்தான் மாப்ள இருந்துச்சு… ஏதோ கிஸ்ஸுன்னு கேட்டுச்சா… சுத்தியிருக்க எல்லாரும் குழந்தை புள்ளைங்க பாரு, பார்க்கக்கூடாததை பார்த்து கிறுக்காகிப்புட்டா என்ன பன்றது அதான் நான் நந்தி வேலை பார்க்க வேண்டியதாகிப்போச்சு” என்று உச்சுக்கொட்டியவனின் முதுகிலேயே வலிக்காதவாறு ரெண்டடி வைத்தான் பார்த்திபன்.
பார்த்திபனின் பிடியிலிருந்தபடியே அப்போது அங்கு வந்த ஒருவரை…
“வாங்க முத்தண்ணா… உங்க வயலிலும் நடவு போல இன்னைக்கு. அதை விட்டுப்போட்டு இங்க எங்க வர்றீங்க?” எனக் கேட்டான் சிவா.
“கயலு இல்லையா சிவா?”
அவர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே… அவரைக் கண்டுவிட்டு அவ்விடம் வந்தாள் கயல்.
“என்ன சித்தப்பா நடவு முடிஞ்சுதா?” என்றாள்.
தலையை சொறிந்தவர், “இல்லை கயலு. நாத்து போதலை” என்றார்.
“அதுகெதுக்கு இருக்குற நாலு முடியையும் பிக்குறீங்க… எத்தனை முடி (இங்கு ஒரு முடி என்பது ஒரு நாற்று கட்டை குறிக்கும் சொல்) வேணும்?”
“கயல் இருக்கிறது நமக்கே பத்தாது நினைக்குறேன்.”
சிவா அவளை தடுத்தான்.
“நமக்கே பத்தாதுன்னா அப்புறம் ஏன் கயல் கொடுக்கனும்?” என்று பார்த்திபனும் சிவாவுக்கு துணை நின்றான்.
“ரெண்டு பேரும் சும்மா இருங்க” என்ற கயல் முத்துவின் பக்கம் திரும்பி…
“சித்தப்பா…” என்றிட அவரோ,
“உனக்கு போதலைன்னா விடு கயலு” என்றார்.
“சித்தப்பா நான் சொல்றதை முதல்ல கேளுங்க” என்றவள், “உனக்கு எத்தனை முடி தேவைப்படுமோ போய் எடுத்துக்கோங்க” என்றாள்.
“இல்லை கயலு…” அவர் சிவாவை பார்த்து தயங்கினார்.
“அண்ணா ஒன்னும் சொல்லாது நீங்க போய் எடுத்துக்கோங்க சித்தப்பா” என்றவள் அவர் அப்படியே நிற்கவும், தானே கூடையை எடுத்து நாற்று கட்டுக்களை அடுக்கினாள்.
“பத்து முடி போதும் கயல்” என்றவர் தூக்கிச் சென்றார்.
“திஸ் இஸ் நாட் ஃபேர் கயல்” என்ற பார்த்திபனை ஆழ்ந்து நோக்கியவள்…
“நம்மகிட்ட வந்தா கிடைக்கும் அப்படின்னு நம்பிக்கையிலதான அவர் வந்தாரு. அந்த நம்பிக்கை பொய்யாக்கக்கூடாது அத்தான். நம்மள நம்பி வரவங்க ஏமாந்து மட்டும் போகக்கூடாது” என்றாள்.
“கயல் எப்பவும் இப்படித்தான் மாப்ள… அவருக்கும் இது பழகிப்போச்சு. ஒவ்வொரு பட்டத்துக்கும் இங்கு வந்து நாத்து வாங்கலைன்னா அவருக்கு விளையாது. விடும் போதே சேர்த்து விடுவோமுன்னு இல்லை” என்று கோபமாகப் பேசி… “இப்போ நாத்தாங்கால் பகுதிக்கு நாத்து குறையுதே கயல்” என்றான் சிவா.
“அதுல உளுந்து விதைச்சிட்டு சுத்தி புதினா வையுங்கண்ணா… வாசனைக்கு எலி அண்டாம இருக்கும். நம்ம பயிருக்கும் பாதுகாப்பா இருக்கும்” என்றாள்.
“அதுல மட்டும் உளுந்து விதைச்சு என்னத்த எடுக்க?”
“ஒரு மூட்டை வந்தாலும் லாபம் தான!” என்றவள் அத்தோடு அப்பேச்சுக்கு புள்ளி வைத்தாள்.
“எல்லாத்துலயும் நேர்மறையை மட்டும் எப்படி கயல் உன்னால் பார்க்க முடியுது?” கேட்ட பார்த்திபனிடம், “எண்ணம்போல் வாழ்க்கை கேள்விப்பட்டதில்லையா அத்தான்” என்றாள்.
அவள் சொல்லாமல் விட்டதன் பொருள் பார்த்திபனுக்கு நன்கு புரிந்தது.
‘நம் எண்ணம் நல்லாயிருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும்.’
“கயல் இப்போ மாப்ள இடத்துல அதிகமாக நாத்து நட்டால், அவர் ஜெயிக்க வாய்ப்பு அதிகம் தானே” எனக் கேட்டான் சிவா.
“ஆமா இருவருக்கும் சமமான நிலத்தில் நெல் விளைந்தால் தானே போட்டி முடிவு நடுநிலையா இருக்கும்” என்ற பார்த்திபன், “என்னோட நாத்தங்கால் பகுதியிலும் நாத்து நாடாம கயல் சொன்ன மாதிரி உளுந்து, புதினா வச்சிடலாம் சிவா” என்றான்.
எப்படியும் பார்த்திபனை ஜெயிக்க வைக்க வேண்டுமென்று தான் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்குமென்று கயல் இதனை செய்தது. ஆனால் சிவா கண்டுகொள்ள, பார்த்திபனும் இது சரியில்லை என்பதை போல் பொதுவாக முடிவெடுத்திட கயல் பார்த்திபனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.
அவனது கயலின் எண்ணம் அவனுக்கு புரியாமல் இருக்குமா? தனக்குள் சிரித்துக் கொண்டான்.
“என்ன கயல் உன் பயிர் மட்டும் எலிக்கிட்ட இருந்து பாதுகாப்பா இருக்கனும். என் பயிர் மட்டும் எலிக்கு விருந்தாகி நான் போட்டியில் தோற்கனும் அதுக்குத்தானே இந்த பிளான்” என்று வேண்டுமென்றே சீண்டினான்.
“போய்யா…” என்றவள் நாவினை துருத்தி அழகு காண்பித்தாள்.
“நேர்மையா கிடைத்தாதான் அது வெற்றி கயல்.”
“ரொம்பத்தான்.” நொடித்தாள் அவள்.
“உங்க மாமன் மவ(கள்), அத்தை மவ(கன்) பேச்சுவார்த்தையை அப்புறம் வச்சிக்கோங்க. மொத நாத்து முடி தூக்கிப்போடுங்க” என்று ஒரு பெண்மணி கத்தி சொல்ல… அவ்விடமே கொள்ளென்று சிரிப்பில் நிறைந்தது.
இப்படி பேச்சும் சிரிப்புமாக நேரம் சென்றதே தெரியாமல் வேலையும் முடிந்தது.
வேலை செய்த எல்லோருக்கும் கயல் வேலைக்கான பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“நாளைக்கும் வேலை இழுக்குமோ நினைச்சேன்” என்ற சிவா, கயல் ஒவ்வொருத்தருக்கும் பணத்தை கொடுக்க கொடுக்க நோட்டில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தான்.
“எனக்கும் சேர்த்து கொடுக்குறியா கயல்” என்ற பார்த்திபனிடம்…
“ஆமா” என்றாள் கயல்.
“எனக்காக வேலை செய்தவங்களுக்கு நான்தானே கொடுக்கனும். நாளைக்கு நான் வின் பண்ண பிறகு… இதெல்லாம் காரணம் காட்டி நீ என்னோட வின்னிங்கை அக்செப்ட் செய்யாம விட்டுட்டா?” என்று கேள்வியாக நிறுத்தினான்.
“இந்த ஒன்னை மட்டும் என்னாலே பொறுத்துக்க முடியல சிவாண்ணா…” என்று சிவாவின் காதில் முணுமுணுத்த கயல்…
“ஓவர் கான்பிடன்ட் தான். நீங்க வின் பண்ணிட்டா வட்டிப்போட்டு வாங்கிக்கிறேன்” என்றாள்.
“இதுவும் ஓகே தான். இப்போ நீ கொடுக்க சொன்னாலும் என்கிட்ட கேஷா இல்லை. சோ, நீயே கொடுத்திடு” என்று சொல்லியவனை அப்புறம் எதற்கு இந்தப்பேச்சு எனும் விதமாக முறைத்துப் பார்த்தாள் கயல்விழி.
“ச்சூ கயல்… என்ன பார்வை இது. வீட்டில் போய் லவ் பண்ணலாம்” என்று பார்த்திபன் அவளிடம் விளையாட…
“யோவ்… உன்னை கொல்லப்போறேன் பார்த்துக்கோ” என்று மென் குரலில் சீறினாள்.
“எனக்கு பிடிச்சிருக்கு கயல்.”
“என்னது?” என்றவள், “இப்போலாம் என்ன கேட்டாலும் பிடிச்சிருக்குன்னே சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள்.
“உன்னை. உன்னோட இப்படி பேசிட்டு இருக்க. இப்போ நீ என்னை திட்டுறது. மிரட்டுறது. எல்லாம் தான் பிடிச்சிருக்கு.”
“எதே… நான் உங்களை திட்டுனனா, மிரட்டுறனா?”
“ஆமா.”
கயல் பார்த்திபனிடம் பேசியபடி இருந்தாலும் ஆளுங்களுக்கு பணத்தை கொடுத்தபடி இருந்தாள்.
“நட்டவங்க அவ்வளவு தான் கயல். இவங்க நாத்து பிடுங்கனவங்க.”
நடவு செய்தவர்களுக்கு கொடுக்கும் அதே தொகையை அவர்களுக்கும் கயல் கொடுத்திட அதனை திருத்திக் கூறினான் சிவா.
“அச்சோ அத்தான் நீங்க தள்ளிப்போங்க. நீங்க பக்கத்துல இருந்தாலே கவனம் சிதறுது” என்றாள்.
சிரித்தபடி பார்த்திபனும் நகர்ந்து சென்றான்.
அவனின் அலைபேசி ஒலிக்க… முகி அழைத்திருந்தான்.
“சொல்லுடா டாக்டர்.”
“அத்தான்” என்று ஆரம்பித்த முகி நடவு பற்றி கேட்டறிந்து… “உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்” என்று பீடிகை போட்டான்.
“என்ன?”
“அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டேன்.”
“சரிடா. எப்போ சொல்லனும் தோணுதோ சொல்லு” என்று பார்த்திபன் இலகுவாக சொன்னான். எப்படியும் முகி சொல்லிவிடுவான் என்கிற எண்ணம்.
“என்ன அத்தான் இப்படி சொல்லிட்டிங்க. சஸ்பென்ஸ் என்னன்னு ஈகர் இல்லையா? இதை வைத்து பெருசா கேட்கலாம் பார்த்தேன்” என்றான்.
“சரி என்ன வேணும் கேளு?”
“ஒரு ஹாஸ்பிட்டல் கட்டித்தாங்கா?”
“அவ்வளவு தானா? கட்டிடலாம். சரி என்ன விஷயம் சொல்லு?”
முகி என்னவோ சாதரணமாகத்தான் கேட்டான். ஆனால் பார்த்திபன் அதனை எப்படி எடுத்துக்கொண்டான் என்பது அவன் மட்டுமே அறிந்தது.
“உங்களுக்கும் கயலுக்கும் கல்யாணம் செய்ய முடிவு பன்றாங்க.”
“யாரு?”
பார்த்திபன் அவ்வாறு கேட்டதும் தான் சொன்னதை சரியாகத்தான் சொன்னோமா என்கிற சந்தேகம் தோன்றிவிட்டது முகிக்கு.
“அத்தையும் மாமாவும் தான். வேற யாரு முடிவு பண்ணுவாங்க.”
“ம். பண்ணட்டும்.” மிக சாதாரணமாக இருந்தது பார்த்தியின் பேச்சு.
“அத்தான் உங்களுக்கு சந்தோஷமா இல்லையா?”
“இருக்குடா!”
“அப்புறம் ஏன் எந்தவொரு ரியாக்ட்டும் இல்லாம உம்முன்னு பேசுறீங்க?”
“பின்ன என்னடா எனக்கு கல்யாணம் அப்படின்னு பாட்டு போட்டு டான்ஸ் பண்ண சொல்றியா? சந்தோஷமெல்லாம் உள்ளுக்குள்ளுள்ள இருக்கு” என்ற பார்த்திபன் இறுதியில் புன்னகைத்து விட அப்போதுதான் முகிக்கு நிம்மதியாக இருந்தது.
“கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லையோன்னு நினைக்க வச்சிட்டிங்க” என்றான்.
“விடுடா…” என்ற பார்த்தி… “கயலுக்கு நான் சொல்லிக்கிறேன்” என அழைப்பை வைத்தான்.
வைக்கும் முன்னர் “அத்தை சொல்லும்போது தெரிந்த மாதிரி காட்டிக்காதீங்க” என்றுவிட்டே வைத்திருந்தான் முகி.
*****
இரவு உணவு முடிந்த பின்னர் பார்த்திபன் கூடத்தில் அமர்ந்து மடிகணினியில் தன்னுடைய வேலைகளை பார்த்தபடி டெல்லுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.
“எப்போ பாஸ் மேரேஜ்?”
வேலை முடிந்ததும் டெல் கேட்டிருந்தான்.
“சீக்கிரம் சொல்றேன்” என்றவன் லேப்டாப்பை மூடி வைத்தான்.
“உங்களுக்கு கஷ்டமாயில்லையா அத்தான்.”
அவனின் வேலை முடிந்துவிட்டது என்ற பிறகு அவனின் அருகில் வந்து கீழே தரையில் அமர்ந்தாள் கயல்.
“லவ் பன்ற பொண்ணு கூடவே இருக்கும்போது எனக்கென்ன கஷ்டம்” என்றவன் இரு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்தான்.
“வயல்ல வேலையும் பார்த்து வீட்டுக்கு வந்து உங்க வேலையும் பார்க்க” என்று கேட்டிருந்தாள்.
“நான் என்ன வாழ்க்கை முழுக்க… இங்கேயாவா இருக்கப்போறேன். இன்னும் த்ரீ மன்த்ஸ்” என்றவன், “அத்தோட விவசாயம் என் தொழிலில்லை கயல்” என்றான்.
அப்போதுதான் கயலுக்கும் ஒன்றும் புரிந்தது.
சிந்திக்கத் துவங்கினாள்.
‘அப்போ அத்தான் இங்கயே இருக்க மாட்டாரா? அவரில்லாம நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்? நானிங்கில்லாம விவசாயம் எப்படி?’
யோசித்து குழம்ப ஆரம்பித்திருந்தாள்.
‘அத்தானை கல்யாணம் செய்துகிட்டா… அவர் இருக்கும் இடத்தில் தான் நானிருக்க முடியும். அவரோட போயிட்டா இங்கு நிலங்களை சிவாண்ணா பார்த்துப்பாருன்னாலும் என்னால விவசாயம் செய்ய முடியாம எப்படி?’
மனதில் அதிர்வு.
“என்னடா என்ன திங்க் பன்ற?”
“ஒன்னுமில்லை.”
அவள் முகமே ஏதோ இருப்பதை அவனுக்கு உணர்த்தியது.
“எதுவாயிருந்தாலும் சொல்லு கயல். நான் சரி செய்றேன்” என்று மீண்டும் ஒருமுறை வினவியவன் அவளின் தலையை வருடினான்.
“அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றனே அப்புறம் என்ன?” என்று காரணமின்றி அவனிடம் உரக்க பேசியவள் வேகமாக எழுந்து சென்று அறைக்குள் புகுந்து கதவடைத்திருந்தாள்.
‘என்னாச்சு இவளுக்கு?’ சிந்தித்தவனுக்கு பதில் கிடைக்கவில்லை.
மறுநாள் அவன் திண்ணைக்கு வருவதற்கு முன்பு அவனது அறைக்கே தேநீரை சரளாவிடம் கொடுத்து அனுப்பினாள்.
பார்த்திபனுக்கு முன்பு வயலுக்குச் சென்று தன் வேலைகள் முடித்து வீடு திரும்பினாள்.
பார்த்திபன் வீட்டிலிருக்கும் நேரம் பின்னால் தோட்டத்தில் இல்லாத வேலையை செய்து கொண்டிருப்பாள். இல்லையென்றால் அறைக்குள் முடங்கிக்கிடப்பாள்.
உணவும் சரளாவே எடுத்து வைக்குமாறு பார்த்துக்கொண்டாள்.
வீட்டில் கயல் இருக்கிறாளா என்பதே பார்த்திபனுக்கு சந்தேகமாக இருந்தது.
அவளது அறைக்கே சென்று அவன் பேச முயன்றாலும், தலைவலிக்குது, தூக்கம் வருகிறது என்ற காரணங்களை தயாராக வைத்திருந்தாள்.
அப்போது மட்டுமல்ல அதற்கடுத்து வந்த நாட்களிலும் கயலின் பாராமுகம் நீடித்தது.
காரணம் விளங்காது பார்த்திபன் தான் குழம்பிப்போனான்.
முகியிடம் சொல்லி கயலிடம் பேச வைத்தும் பதில் கிடைக்கவில்லை.
நேரடியாக சென்று பேசிட பார்த்திபனுக்கு கயல் வாய்ப்பு கொடுக்கத் தயாராக இல்லை.
மொத்தத்தில் பார்த்திபனை முற்றும் முழுதாகத் தவிர்த்தாள். அவனை கண்டாலே ஓடி ஒளிந்தாள்.
கயலின் செயல் எதுவும் புரியாது சிவாவிடம் புலம்பித் தள்ளிவிட்டான்.
“ரொம்ப பன்றா(ள்)டா சிவா. என்கிட்ட அவள் பேசியே… ம்ப்ச், என் முகத்தை அவள் பார்த்தே பத்து நாளாகுது” என்றவன் பெருமூச்சு ஒன்றினை வெளிவிட்டான்.
“இந்த நிலையில நாளைக்கு மாம் அண்ட் டாட் வராங்க. எங்க மேரேஜ் விஷயம் பேச” என்று ஆயாசமாகக் கூறினான்.
“கயல் வேணும்னே இப்படி செய்யாது. எதாவது காரணம் இருக்கும்” என்று சிவா ஆறுதல் சொல்லிட,
“அது என்னென்னாவது சொல்லனுமா இல்லையா?” என்று கேட்டவன் அருகிலிருந்த தென்னை மரத்தின் தண்டில் ஓங்கி குத்தினான்.
அவள் விலகி செல்வதற்கே இப்படி இருப்பவன்… நாளை அவள் சொல்லப்போகும் செய்தி கேட்டு எப்படி எதிர்வினையாற்றப் போகின்றானோ?