அத்தியாயம் 🌾 55 :
“என் கண்ணை பார்த்து சொல்லுடி.”
பார்த்திபன் கத்திய கத்தலில் அவனுக்கு இரண்டடி தள்ளி நின்றிருந்த கயலின் உடலில் அப்பட்டமான நடுக்கம்.
பார்த்திபனின் கையிலிருந்த தம்ளர் அவன் ஓங்கி அடித்த வேகத்திற்கு தரையில் பட்டு ஆறடி மேலெழும்பி மீண்டும் தரையைத் தொட்டு சுழன்றபடி உருண்டு கொண்டிருந்தது.
“பார்த்தி காம் டவுன்.”
“கண்ணா கொஞ்சம் பொறுமையா பேசுப்பா!”
தேவராஜனும் மங்கையும் மகனை அமைதிப்படுத்த முயற்சித்தனர்.
நேற்று இரவு தான் முகி மலர் உட்பட நால்வரும் வந்து சேர்ந்தனர். அவர்களின் வருகை கயலுக்கு ஆச்சர்யத்தோடு சந்தோஷத்தையும் கொடுத்தது.
“என்னடா முகி வான்னு சொன்னா கூட வரமாட்ட. இப்போ என்ன லீவ்வா?” என்று தம்பியிடம் கேட்டாள்.
“வரனும் இருந்தால் வந்து தானே கயல் ஆகனும்” என்றவன் வந்திருப்பதற்கான காரணத்தை தான் உளறிடுவோம் என பயந்து கொண்டு வந்த பையினை அறையில் வைக்கும் பொருட்டு மறைந்திருந்தான். மலரும் அவன் பின்னோடு சென்றிருக்க, கயலுடன் மங்கை சற்று நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க… பார்த்திபன் வந்தான்.
“இந்நேரத்தில் எங்கடா போயிட்டு வர?”
“வயலுக்கு தண்ணீர் கட்ட போனேன் மாம்” என்று மங்கைக்கு பார்த்திபன் பதில் சொல்லும்போதே கயல் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.
வரும் வழியிலேயே அவர்கள் உண்டுவிட்டதாக சொல்லிவிட அதற்கு மேல் கயல் வெளியே வரவில்லை.
“சொல்லிட்டிங்களா மாம்?”
“இப்போ எப்படிடா சொல்ல… காலையில் எழுந்ததும் சொல்லிடுறேன் போதுமா?” என்றார் மங்கை.
“கயலுக்கு உன் மேல் விருப்பம் தானே பார்த்தி?”
கேட்ட தந்தையை உணர்வற்ற பார்வை பார்த்தான்.
“இல்லப்பா… கயல் உன்கிட்ட பேசியே நாளாகுது சொன்னியே அதான்” என்று தயங்கினார் தேவராஜன்.
“நாளைக்கு பதில் தெரிந்திடும் டாட்” என்றவன் அவர்களை உறங்க சொல்லிவிட்டு தன்னறைக்கு வந்துவிட்டான். ஆனால் அவனுக்கு உறக்கம் தான் வரவில்லை.
இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர் தான். சாதாரண காதலர்கள் போல் பல கதைகள் பேசி அடிக்கடி கொஞ்சி தொட்டு காதலிக்கவில்லை தான். ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தபோதும் ரசனையான பார்வைக்கூட அரிதானது தான். ஆனால் அவர்கள் மனதால் உணர்ந்து இணைந்திருந்தனர்.
ஒருவரில்லையேல் மற்றொருவர் இல்லை நிலையில் தான் இருவருமே! சொல்லப்படாத பகிரப்படாத புரிந்துணர்வு இருவருக்குமே இருந்தது. அதனால் காதல் வசனம் பேசித்தான் ஒருவர் மற்றொருவருக்கு தன்னுடைய காதலை புரிய வைக்க வேண்டுமென்ற நிலை இருவருக்குமே இல்லை.
ஆனால் இன்று…
கயலின் நடவடிக்கைகள் அனைத்தும் பார்த்திபனை சுழற்றி அடித்தது.
அவள் ஏதோ முடிவெடுத்து நடந்து கொண்டிருக்கிறாள் எனும் வரை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
அது என்னவென்று தான் தெரியவில்லை.
இரவு முழுக்க உறங்காது அவளுள் சுழன்று சிந்தை தொலைத்து அலைந்தவன்… மணியை பார்த்திட அதிகாலை என்றது.
இனியெங்கு தூங்குவதென நினைத்தவன்…
‘விடிந்ததும் பேச்சினை ஆரம்பித்திட வேண்டியது தான்’ என எண்ணியவனாக காலை நேர ஓட்டத்திற்கு தயராகினான்.
****
“ஹேய் முகி வா வா… நீ வருவன்னு தெரியும். அதான் உனக்கும் சேர்த்தே கொண்டு வந்தேன்” என்ற கயல் தனக்கு அருகிலிருந்த தம்பளரை முகியிடம் எடுத்து கொடுத்தாள்.
“எத்தனை நாள் லீவ்?”
கயலுக்கு பதில் சொல்லாது அவளையே ஆழ்ந்து பார்த்தான் முகிலன்.
“முகி…”
“உனக்கு என்ன பிரச்சனை கயல்?”
“எனக்கா? எனக்கு என்ன ஒன்னுமில்லையே?” அடுத்து முகி என்ன கேட்பான் என அறிந்து தடுமாறினாள்.
“அப்புறம் எதுக்கு அத்தானை அவாய்ட் பன்ற?”
கேட்பான் என தெரியும். ஆனால் இவ்வளவு வெளிப்படையாகக் கேட்பான் என்று அவள் நினைக்கவில்லை.
முகத்தில் தோன்றிய அதிர்வை நொடி நேரத்தில் மறைத்தாள்.
“சும்மா உளறாத முகி” என்ற கயல் அங்கிருந்து எழ முயல… கை பிடித்து அமர வைத்தான்.
“நீ செய்றது அப்பட்டமா தெரியும் போது நான் ஏன் உளறப்போறேன் கயல்?”
முகி விடுவதாக இல்லை.
“அத்தான் சொல்லும்போது கூட ரெண்டு பேரும் விளையாடுறிங்க நினைத்து தான்… அன்னைக்கு உன்கிட்ட சீரியஸா கேட்காம விட்டேன். ஆனால் இங்கு வந்து நேரில் பார்த்த பிறகு தானே தெரியுது. நைட் அத்தான் வந்ததையும் பார்த்தேன்… அவர் முகம் கண்டதும் நீ எழுந்து போனதையும் கவனித்தேன்” என்றான்.
“எங்களுக்குள்ள அப்படிலாம் இல்லை முகி. தேவையில்லாம கண்டதை கற்பனை செய்யாத” என்று கயல் முகியிடம் படபடப்புடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஓட்டம் முடித்து வந்து சேர்ந்தான் பார்த்திபன்.
பார்த்திபனை பார்த்ததும் கயல் முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொண்டாள்.
முகியை பார்த்து சின்னதாக சிரித்தவன் அங்கு அமருமாறு சைகை செய்த முகியின் தோளை தட்டியவனாக உள் சென்றுவிட்டான்.
முகி கயலை அழுத்தமாக ஏறிட்டான்.
“இப்பவும் ஒன்னுமில்லை சொல்லப்போறியா கயல்?”
அவளிடம் மௌனம்.
“சரி நாங்க ஊருக்கு வந்த காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்குத் தெரியும். அப்பவும் இதே அமைதியோட இருக்கியா பாக்குறேன்” என்ற முகி எழுந்து சென்றான்.
சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து தான் செய்வது சரியா தவறா என தன்னுடைய மனதை அலசியவள் வீட்டிற்குள் வரும் போது எல்லோரும் கூடத்தில் அமர்ந்து எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.
பார்த்திபன் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவனைச்சுற்றி… மற்ற நால்வரும் இருந்தனர். ஆதலால் கயல் அவர்கள் பக்கம் செல்லாது செல்ல… மங்கை தான் அருகில் வருமாறு அழைத்தார்.
தனக்கு பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.
“உனக்கும் பார்த்திக்கும் கல்யாணம் செய்யலாம் நினைக்கிறோம் கயல்” என்ற மங்கை,
அடுத்து என்ன என்பதைப்பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
என்று நிச்சயம் வைக்கலாம். எங்கு வைக்கலாம். எப்படி செய்யலாம். யார் யாரை அழைப்பது வரை பேசினார்.
கயல் வந்ததிலிருந்து அவளையே தான் கண் இமைக்காது பார்த்திருக்கிறான் பார்த்திபன். அவள் என்ன சொல்லுவாள் எப்படி சொல்லுவாள் என்று. ஏதோ ஒன்று உள்ளது என்பது உறுதி. அது அவளின் மறுப்பாக இருக்குமென்று யாரும் யோசித்துக்கூட இருக்கமாட்டார்கள்.
“நிச்சயத்துக்கு உனக்கு என்ன கலர் புடவை வேணும் கயல்?”
“ஹாங்…” ஏதோ கனவிலிருந்து விழிப்பது போல் மலங்க மலங்க விழித்தவள்…
“என்ன அத்தை?” எனக் கேட்டாள்.
“போச்சுடா” என்று தேவராஜன் சொல்ல…
“கல்யாணத்தை பற்றி பேசியதும் அண்ணி அண்ணாவோடு டூயட் பாட போயிட்டாங்க போல” என மலர் கேலி செய்திட அனைவரும் சிரித்தனர்.
மலர் சொல்லியதில் குழப்பமாக பார்த்த கயல்,
“யாருக்கு கல்யாணம்?” என்றாள்.
“உனக்கும் அத்தானுக்கும் தான்” என்ற முகி பார்த்திபனை பார்த்து கண் சிமிட்டினான்.
‘ஏதோ பெரியதாக ஒன்று வரப்போகிறது’ என பார்த்திபனின் உள் மனம் அடித்துக் கூறியது.
“நான் அத்தானை கட்டிக்க விருப்பமுன்னு சொல்லவேயில்லையே!” என்று அமர்த்தலாகக் கூறியவள் எழுந்து நின்றாள்.
பார்த்திபன் எதிர்பார்த்த ஒன்று வந்துவிட்டது.
அனைவரும் அதிர்ந்திருக்க… பார்த்திபன் மட்டும் தன்னிலையில் மாற்றமில்லை என்பதைப்போல் அமர்ந்திருந்தான்.
“சும்மா விளையாடத கயல்.”
சொல்லிய முகியை அழுத்தமாக நோக்கியவள், “இது விளையாட்டு விஷயம் இல்லைன்னு எனக்குத் தெரியும் முகி” என்றாள்.
“அப்போ உன் பிராப்ளம் என்ன?”
“எனக்கு பிடிக்கல.”
“யாரை?”
…..
“கேட்டதுக்கு பதில் சொல்லு கயல்.”
“விருப்பமில்லைன்னா விடண்டா.” கத்தினாள்.
“அதெப்படி உனக்கு விருப்பமில்லைன்னா விட முடியும். நீயும் அத்தானை விரும்புறன்னு தெரியும்” என்றான்.
“நான் சொன்னனா?” இதனை சொல்லும்போது அவளையும் அறியாது அவளது கண்கள் பார்த்திபனை தொட்டு மீண்டன.
“திஸ் இஸ் டூ மச் கயல்.” கயலின் வாதம் அவள் விளையாடவில்லை என்பதை முகிக்கு உணர்த்தியது.
“சரி… உனக்கும் கல்யாண வயது வந்துடுச்சே. அப்பா அம்மா இருந்திருந்தா இந்நேரம் செய்திருப்பாங்கதான. இப்போ அவங்க இடத்தில் நான்தான் இருக்கேன். சோ, நான் உனக்கு கல்யாணம் செய்யனும் முடிவு பண்ணிட்டேன். மாப்பிள்ளை அத்தான் தான்” என்று உறுதியாக மிகத் தெளிவாகக் கூறியவன் இதுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய் என்பதைப்போல் அவளை பார்த்தான்.
“அழகரோட விருப்பமும் இதுதான் கயல்” என்று தேவராஜன் சொல்ல…
“அப்பா பெயரை சொல்லி என்ன கார்னர் பண்ணாதீங்க மாமா” என சுருக்கென்று சொல்லி அவரின் வாயை அடைத்தாள்.
“உன்கிட்ட கேட்காம முடிவு பண்ணிட்டோம் கோபமா கயல்.”
“கேட்டிருக்கலாம் அத்தை” என்றவள் அவரின் முகத்தில் தெரிந்த அதிர்வை கண்டு கொள்ளாது அங்கிருந்து நகர முற்பட…
“நில்லுடி” என்று வார்த்தைக்கு வலிக்கும்படி அதே சமயம் சத்தமின்றி குரல் கொடுத்தான் பார்த்திபன்.
பார்த்திபனின் அடக்கப்பட்ட சினம் அவனின் முகத்திலேயே தெரிய…
“பார்த்தி கொஞ்சம் பொறுமையா இருப்பா.”
“எதுவாயிருந்தாலும் மெல்ல பேசிக்கலாம் கண்ணா.”
தேவராஜனும் மங்கையும் பார்த்திபனை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
அவர்கள் சொல்லுவதை காதிலேயே வாங்காதவன் போல் கயலிடம் சென்றவன். சிறு இடைவெளியில் அவளை நேருக்கு நேர் பார்த்து நின்றான்.
“கல்யாணத்தில் விருப்பமில்லையா… இல்லை என்னை கல்யா…” பார்த்திபன் கேட்க வந்ததை முடிக்கவில்லை,
“ரெண்டும் தான்” என்று உரக்க கத்தியிருந்தாள் கயல்.
“என் கண்ணை பார்த்து சொல்லுடி” என்று அவளுக்கு மேல் அதீத கோபத்தில் கத்தியிருந்தான் பார்த்திபன்.
“பார்த்தி…”
“அத்தான்…”
மூவரின் குரல் ஒருங்கே ஒலித்தது.
அவளின் உடலில் தென்பட்ட நடுக்கத்தில் தன்னையே தட்டிக்கொண்டவன்… நொடியில் தன் கோப உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
“சாரி… சாரி… சாரிடாம்மா…” என்று கயலை நெருங்கி நின்றவன்… அவளின் இரு கன்னங்களையும் தன் கைகளில் தாங்கி…
“என்னடா பிராப்ளம் உனக்கு. என்கிட்ட சொல்லு. நான் சால்வ் பன்றேன்” என்று கனிவுடன் கேட்டான்.
இந்த மென்மைக்கும் கனிவுக்கும் அவன் கோபப்பட்டு கத்துவதே மேலென்று இருந்தது. கயலுக்கு அவனது அன்பில் கரித்துக்கொண்டு வந்தது.
ஓய்ந்துப் போனவளாக மடங்கி தரையில் அமர்ந்தவள், கைகளில் முகம் புதைத்து…
“எனக்கு கல்யாணம் வேண்டாமே ப்ளீஸ்” என்று கண்ணீருடன் இறைஞ்சினாள்.
அவளின் கண்ணீர் அவனின் இதயம் சுட்டது. எங்கோ ஓர் மூலையில் அவனின் காதல் துடித்தது. மரிப்பதை இதய பிளக்கும் வலியில் உணர்ந்தான். கயலை சரியாகத் தான் புரிந்துகொள்ளவில்லையோ. எங்கோ அவளைப்பற்றிய கணிப்பில் தவறிவிட்டோம் என்று அவனின் மனம் அரற்றியது.
சிறு வயதில் அவள் பட்ட கஷ்டங்களில் கூட கயல் கலங்கி நின்று முகி பார்த்ததில்லை. ஆனால் இப்போது? கயல் அழுவது அவனுக்கும் மனதை பிசைந்தது.
கயல் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கின்றாள் என்பது வரை முகிக்கு புரிந்தது.
கயலுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்த பார்த்திபன்…
“கயல்…”
…..
“இங்க பாருடா…”
அவள் நிமிரும் மார்க்கமில்லை. உடல் குலுங்களில் சத்தமின்றிய அவளின் அழுகை பார்த்திபனுக்கு வேதனையை கொடுத்தது.
கயலின் இரு பக்க தலையில் கை வைத்து அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன்…
“அழாதடி… எனக்கு என்னவோ பண்ணுது” என்றபோதே அவனின் கண்களும் கலங்கின.
அவளின் கன்னம் தாண்டி உருண்ட கண்ணீர் துளிகளை தன் பெருவிரல் கொண்டு அழுந்தத் துடைத்தவன்…
“என்னை கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு அவ்வளவு கஷ்டமாடி” எனக் கேட்டிருந்தான்.
அந்தநொடி…
“கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று அவன் கேட்ட தருணங்களும்… அதற்கு அவள் சொல்லிய பதில்களும் இருவரின் மனதிலும் தோன்றி மறைந்தன.
இதற்கு அவள் என்ன பதில் சொல்லுவது. அவன் கேட்டதில் பட்டென்று கண்ணீர் நிற்க, குத்திய பார்வையால் அவனை ஏறிட்டாள்.
“சின்ன வயசிலிருந்தே இது வேணும் அது வேணும் நான் கேட்டதில்லை. அப்படின்னா நான் ஆசைப்பட்டதே இல்லைன்னு இல்லை. அசைப்படுறதுக்கு முன்னாடியே எனக்கு அது பிடிக்குமுன்னு டாட் வாங்கிக் கொடுத்திடுவார்.
என் மனம் அறிந்து நான் ஆசைப்பட்ட முதல் விஷயம் நீதான்டி. உன்னை நான் அவ்வளவு ஈஸியா விட்டுடுவனா?” என்றவன்…
“அதுக்காக உன் மனசு மாறும்வரை காத்திருப்பேன்னு டயலாக் எல்லாம் சொல்லமாட்டேன். நீ எதையோ நினைத்து முடிவு செய்து உன்னையும் வருத்தி என்னையும் கஷ்டப்படுத்துறன்னு தெரியுது…”
“எப்படியும் என்னை வேண்டான்னு சொல்லிட்டு நீயும் அழத்தான் போற…”
“சோ,
அவ்வளவு கஷ்டமா இருந்தா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அழு” என்றான்.
பார்த்திபன் எப்படியும் அவளின் அழுகைக்கு மதிப்பளித்து இந்த கல்யாணமே வேண்டாமென்று தான் சொல்லப்போகிறான் என்று அங்கிருந்த அனைவரும் கயல் உட்பட பார்த்திருக்க… அவன் சொல்லியதில் ஆவென்று பார்த்தனர்.
‘அண்ணா பலே ஆள் தான்.’ மலர் உள்ளுக்குள் மெச்சிய வேலை…
“கயலுக்கு விருப்பமில்லைன்னா கொஞ்ச நாள் அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல வாய் திறந்த முகியின் கையை அழுத்தி தடுத்தாள் மலர்.
“அண்ணி பிடிவாதம் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அவங்க முடிவு பண்ணிட்டா அவ்வளவு லேசில் மாத்திக்கமாட்டாங்க தெரியும் தானே! அவங்களுக்கு அண்ணா வழி தான் கரெக்ட். அதனால வாய் மூடிட்டு நில்லுங்க” என்று முகியை மென்குரலில் பேசி அடக்கினாள்.
மலர் சொல்லியதை கேட்ட பிறகே முகிக்கும் சரியெனப்பட அமைதியாகினான்.
“என்ன அப்படி பார்க்குற…?” என்று இன்னும் விழி அசையாது தன்னை பார்த்திருக்கும் கயலிடம் வினவியவன்,
“இன்னும் இருபது நாளில் ஏதோ நல்ல நாள் இருக்குன்னு மாம் சொன்னாங்க… அன்னைக்கு பெட்ரோத்தல் ஃபங்ன்க்ஷன். அப்புறம் டூ மந்த்ஸ் கேப். ஐ தின்க் ஹார்வெஸ்ட் அதுக்குள்ள முடிஞ்சிடும். ஃபிரியா மேரேஜ் வைச்சுக்கலாம்” என்று திட்டமிட்டதைப்போல் அடுத்தடுத்து கோர்வையாகக் கூறியதோடு…
“கரெக்ட் தானே மாம்” என்று அவன் பேச்சில் சிலையென நின்றிருந்த மங்கையிடம் ஒப்பினியன் கேட்டு அவரை சுயம் மீட்டான்.
“ஆங்க்… என்னப்பா?”
“அதான் மாம்… ட்வென்டி டேசில் என்(ங்)கேஜ்… ஆஃப்டர் டூ மந்த்ஸ் மேரேஜ்” என்று செய்திப்போல் கூறினான்.
முடிவு எடுத்த பின்னர் அது நடந்தே ஆகவேண்டுமென்ற நிலையில் அவனிடமிருந்து வரும் குரல் அது. அதனை மீறும் துணிவு தேவராஜனுக்கு கூட இருந்ததில்லை.
அதனால் மங்கைக்கு தலையை அசைப்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை.
“நீங்க என்ன சொன்னாலும்…”
பேசிய கயலின் வாயில் ஒற்றை விரல் வைத்து தடை செய்தவன்,
எதுவும் பேச வேண்டாம் என்பதைப்போல் தலையை ஆட்டினான்.
“என்ன சொல்லப்போற… நாட் இண்ட்ரெஸ்டட்… அதான, பட் அம் இன்டரெஸ்ட்… ஹாவ் டூ மச் ஆஃப் எக்ஸைட். சோ, நெகட்டிவ்வா எதுவும் தின்க் பண்ணாம மாமனை நினைச்சு கனவு மட்டும் காணு போ” என்று அவளை எழுப்பி கன்னம் தட்டி அனுப்பி வைத்தான்.
“அத்தான் இது சரி வருமா?”
“என்மேல் அவளுக்கு அதிக லவ் மச்சான். பட் எதையோ போட்டு குழப்பிக்கிறாள். மேரேஜுக்கு முன்னால் அது என்னன்னு கண்டுபிடித்து சரி செய்யனும்” என்று முகி கேட்டதற்கு பதிலின்றி பேசியவன்…
“இப்போ அவள் அழுததே இங்க என்னவோ பண்ணுதுடா” என மார்பை தட்டியவன், “சீக்கிரம் சரி செய்யனும்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
“என்னங்க இவன் இப்படியிருக்கான்.”
“உன் மகனை பற்றி உனக்குத் தெரியாதா மங்கை” என்ற தேவராஜன் “அவனா முறைக்கிறதக்கு முன்னால் நிச்சய வேலையை நாம் பார்க்க ஆரம்பிக்கலாம்” என்றார் தேவராஜன்.
மங்கைக்கும் அதுதான் சரியெனத் தோன்றியது.
இப்போது போல் இனியொருமுறை பார்த்திபன் இவ்வளவு பொறுமையாக இருப்பானென்று சொல்ல முடியாதே. அத்தோடு கயலின் மனமும் தெரியும் என்பதால் பார்த்திபனின் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.
அறைக்குள் வந்த கயலுக்கு…
சத்தமிட்டு கத்த வேண்டும் போலிருந்தது.
பார்த்திபனின் கண்களில் அவளுக்கான அன்பையும், காதலையும் கண்ட பின்னர் அவளால் உறுதியாக மறுப்புக் கூற முடியவில்லை.
தனக்கு எதிராக செயல்படும் தன்னுடைய மனதையே வெறுத்தாள்.
தான் திருமணம் வேண்டாமென்று மறுப்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்க… அதனை நினைக்க நினைக்க, இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என அவளுள் ஆழ ஊன்றியது.
அதே சமயம்…
‘பார்த்திபனின்று தன்னால் இருக்க முடியுமா?’ என்று நினைத்த கணம்…
‘நிச்சயம் முடியாது’ என அவளின் மனம் சத்தமாக ஓலமிட்டது.
தள்ளாடும் மனதில் கயல் திருமணத்தை ஏற்பாளா?