பார்த்திபனின் கயல்விழியாள் 56

அத்தியாயம் 🌾 56 :

“எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்சிதா சிவா?”

தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாது அமர்ந்திருந்த சிவாவை தொட்டு தன் பக்கம் திருப்பினான் பார்த்திபன்.

“என்னடா நான் பேசுறது காதில் விழுதா இல்லையா?”

“சக்தி வந்திருந்தாள்.”

“என்னவாம்?”

“ரத்தினம் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காராம்!” சுரத்தே இல்லாமல் கூறினான்.

“அவங்க படிச்சிட்டு தானே இருக்காங்க?”

“ஒரு இடம் வந்திருக்காம். அதைவிட அவருக்கு மனசில்லையாம். ஒப்பு தாம்பூலம் மாதிரி பேசி வைக்கப்போறாங்களாம்.”

சிவாவின் மனம் பாரித்திபனுக்கு நன்கு புரிந்தது. ஆனால் காதல் ஒருவர் எடுத்து சொல்லி புரிய வைப்பதில்லையே. அவரவர் மனம் அவரவருக்கு மட்டுமே உரித்தானது. இதில் இடையில் மற்றவர் சொல்வதற்கு ஒன்றுமிருக்காது. சொன்னாலும் காதல் அது கொண்ட நெஞ்சத்தின் பேச்சை மட்டுமே கேட்கும்.

சிவாவை கூர்மையாக நோக்கிய பார்த்திபன்…

“அதனால் உனக்கென்ன கவலை சிவா. உனக்குத்தான் யாருமில்லையே! உன்னை நம்பி வர பொண்ணைத்தான் உட்கார வைக்கக்கூட இடமில்லையே. அதோட உனக்குத்தான் அவங்களை பிடிக்காதே!” என்று சமயம் பார்த்து சிவா பேசியதை சொல்லிக்காட்டியதோடு வார்த்தையால் அவனுக்கு கொட்டும் வைத்தான்.

‘அந்நொடி உனக்கு நாங்க இருக்கிறோம் என்பதை நீ மறந்துவிட்டாய் தானே’ என்ற உட்பொருள் பார்த்திபனின் வார்த்தைகளில் பொதிந்திருந்தது.

பார்த்திபன் அவ்வாறு பேசியதும் அவனை அடிபட்ட பார்வை பார்த்தான் சிவா.

அவனால் மனம் திறந்து தெளிவாக இதைப்பற்றி பேசவும் முடியவில்லை. ஆரம்ப காலங்களில் கயலுக்கு பெரும் தொல்லையாக இருந்ததே ரத்தினம் தான். இடையில் என்ன நடந்ததோ, ரத்தினத்தால் கயலுக்கு தோன்றும் காரணமற்ற தொல்லைகள் முற்றிலும் இல்லாது போனதோடு, ரத்தினமே கயலுக்கு பல வகைகளில் உதவி செய்கிறார். அத்தோடு முகி மலர் திருமண விடயத்தில் கூட சரவணன் மீண்டும் பிரச்சினை கொடுக்காமல் இருக்க, அவனின் தந்தையிடம் பேசி சுமூகமாக சூழலை மாற்றி கொடுத்தவர் ரத்தினம் தான்.

இப்போது தான் தன் மனம் திறந்து சக்தி காதலை ஏற்றுக்கொண்டால் ரத்தினம் மீண்டும் வேதாளம் போல் மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தொல்லைகளும் இடைஞ்சல்களும் என்னவோ கயலுக்குத்தான்.

ரத்தினம் எளிதில் சக்தியின் காதலை ஏற்கும் நபரில்லை.

அத்தோடு சக்தி காதலிப்பது சிவா என்று தெரிந்தால்…? ரத்தினத்தின் செயல் அவர் மட்டுமே அறிந்ததாக இருக்கும்.

நினைக்க நினைக்க மனம் கனத்துப்போக… தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன் சக்தி என்ற பெயரையே மறக்க முயற்சித்தான்.

“தேவையில்லாம ஒரு பெண்ணை கஷ்டப்படுத்திட்டனேன்னு தான் யோசனை. வேறொன்றுமில்லை” என்று பார்த்திபனை சமாளித்த சிவா, இதனால் தனக்கொன்றும் பாதிப்பில்லை என்பதை தனக்கும் சேர்த்து மனதில் பதிய வைத்தான். அது பதிந்துபோனதா?

“காதலென்றால் சந்தோஷம் மட்டுமில்லை. சந்தோஷத்தைவிட இங்கு வலிகளுக்கே இடம் அதிகம் இல்லையா சிவா” என்ற பார்த்திபனின் வார்த்தைகள் கசந்து வந்தன.

“என்ன மாப்ள சொல்ற. எனக்கு புரியலையே?”

“புரியாது சிவா. உனக்கும் புரியாது. உன் தங்கச்சிக்கும் புரியாது. கயல் எனக்கு என்ன செய்றாளோ அதைத்தான் நீ சக்திக்கு செஞ்சிட்டு இருக்க. நான் ஆம்பளைங்கிறதால கயல் பேச்சை ஈஸியா என்னால் முறியடிக்க முடியுது. ஆனால் சக்தி பெண்ணில்லையா அதான் அவளால் உன் பின்னால் சுற்றுவதைத்தவிர வேறு என்ன செய்து தன்னுடைய காதலை தக்க வைத்துக் கொள்வதுன்னு தெரியாம உன்னை பார்த்து அழுதுட்டு போயிருக்காள்.

காதலை பெறுவதைவிட கொடுப்பது அதீத மகிழ்வை கொடுக்கும் சிவா. ஒருமுறை கொடுத்துதான் பாரேன். அந்த இன்பம் அலாதியானது. வார்த்தையால் விவரிக்க முடியாதது. சொன்னா புரிந்துகொள்ளவும் முடியாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

உயிர்வரை அதனின் தித்திப்பை சுவைத்திட முடியும்.

உனக்காக யாருமில்லைன்னு வருந்துறியே… உன்னை உறவா ஏற்கத் தயாரா இருக்கும், வலிய வரும் ஒரு உறவை ஏன் எட்டி உதைக்கிற?

வாழ்க்கை எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பினை கொடுப்பதில்லை சிவா” என்ற பார்த்திபன் இனி முடிவு அவன் கையில் என்பதைப்போல் நகர்ந்துவிட்டான்.

என்னதான் கயலிடம் நிச்சயம் நடக்குமென்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தாலும், எவ்வித ஈடுபாடுமின்றி யாருக்கோ விருந்தென்ற மனநிலையில் முகத்தில் புன்னகைக்கே பஞ்சம் என்ற தோற்றத்தில் வலம் வரும் கயலை பார்க்கும் போதெல்லாம் இப்படியொரு நிலையில் இத்திருமணம் அவசியம் தானா. கயலின் மனம் மாறும்வரை சற்று பொறுமையாகக் காத்திருக்கலாம் என்று பார்த்திபனுக்கு தோன்றத்தான் செய்தது. ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கயலின் மறுப்பும் ஒதுக்கமும், தான் எடுத்த முடிவு சரிதானென்று அடுத்தடுத்த வேலைகளை பார்த்திபனை செய்ய வைத்தது.

‘தன்னைமீறி… தன் வார்த்தைக்கு மதிப்பின்றி நடந்து கொள்கின்றனரே’ என்று கயல் அனைவரிடமும் விலகி நின்றாள். பேசுவதையே முற்றிலும் தவிர்த்தாள்.

நிச்சயத்திற்கு முதல் நாள் வருவதாக முகியும், மலரும் சென்னை சென்றுவிட… அனைத்தையும் தேவராஜன் தான் முன்நின்று செய்து கொண்டிருக்கிறார். கயலுக்கு திருமணம் என்பதில் அதிக மகிழ்வு மாணிக்கத்திற்குத்தான். பத்து வயது குறைந்தது போல் சுறுசுறுப்பாக எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு செய்தார்.

சரளா மட்டும் கயலை கவனித்து என்ன ஏதென்று விசாரித்திட…

அவரிடம் திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல ஏனோ அவளுக்கு மனம் வரவில்லை. அத்தோடு பார்த்திபனை யாரிடமும் விட்டுக்கொடுக்க அவளால் முடியவில்லை.

வீட்டின் பின்னால் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது கயல் அமர்ந்திருந்தாள்.

அவளின் கண்கள் எங்கோ எதையோ இலக்கின்றி வெறித்தபடி இருந்தது. மனதின் கவலை முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

தொட்டி நிரம்பி வழிந்து உடலில் பரவும் ஈரத்தைக் கூட உணராது எதையோ நினைத்து தனக்குள் புதைந்தபடி இருந்தாள்.

“அம்மாடி கயல்.”

மங்கையின் விளிப்பில் பதறி திரும்பியவள் நிலைத்தடுமாறி பத்தடிக்கும் மேலிருக்கும் தொட்டியின் உள்ளே விழப்போக பார்த்திபன் இடைத்தொட்டு தன்னவளை தூக்கி தரையில் நிலையாக நிற்க வைத்தான்.

“உன் கவனமெல்லாம் எங்கிருக்கு கயல்?” என்றவன் தொட்டியை ஒருமுறை எட்டிப்பார்த்தான்.

கயலுக்கு நீச்சல் தெரியும் தான். தொட்டியும் அதீத ஆழமில்லை. ஓர் ஆள் மூழ்கும் அளவுதான். ஆனால் விழும் வேகத்திற்கு சிமெண்ட் தொட்டி தரையில் காலூன்ற முடியாது வழுக்கினாலோ, பக்க சுவற்றில் தலை மோதினாலோ ஆபத்து தானே என்று அவள் விடயத்தில் முதல் முறையாக பயம் என்பதை உணர்ந்தான்.

பார்த்திபனின் கோபம் கண்டு முகம் சுருக்கியவள்…

“கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு” என்று மெல்லக் கூறினாள்.

“பார்த்து கயல். இங்க வாழ்க்கையே ஸ்லிப் ஆகிடும் போலிருக்கு” என்றவன் விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டான்.

அவன் கூறிச்சென்ற வார்த்தையில் கயல் தான் அசையாது நின்றாள்.

பார்த்திபன் சொல்லுவது உண்மை தானே… ‘என் முடிவு இருவரின் வாழ்வை அல்லவா கேள்விக்குறியாக்கிவிடும்.’

சட்டென்று கண்களில் துளிர்த்த நீரை மங்கை முன்னிருப்பதை உணர்ந்து உள்ளிழுத்துக் கொண்டாள்.

“ட்ரெஸ்செல்லாம் ஈரம் ஆகிடுச்சு மாத்திட்டு வாம்மா” என்றவர், எனக்கு உன்னிடம் பேச வேண்டுமென்பதை குறிப்புக் காட்டினார்.

ஆடை மாற்றி வந்தவள் மங்கையைத் தேடி வந்தாள். அவர் தோட்டத்தில் இருந்த கல்லில் அமர்ந்திருந்தார்.

கை பிடித்து தனக்கு அருகில் அமர வைத்தவர், வாஞ்சையாக அவளின் முன் தலை கோதினார்.

“உனக்கு பார்த்தியை பிடிக்கலையா கயல்?”

இப்படி வெளிப்படையாக அவர் கேட்பாரென்று கயல் எதிர்பார்க்கவில்லை. வேகமாக மறுப்பாக தலையசைத்தவளின் முகம் அப்பட்டமாக அதிர்வை சுமந்திருந்தது.

“பின்ன வேறென்ன காரணம் கயல்?” என்றவர், “இப்போ கல்யாணம் வேண்டாம் இருக்கியா?” என்று தன் யூகத்தைக் கேட்டார்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை அத்தை” என்றவள், “அப்பா அம்மா இல்லாம செய்துக்க என்னவோ போலிருக்கு” என்றாள். இதுவும் ஒரு காரணம் தான். ஆனால் உண்மை காரணத்தை பார்த்திபனிடமே சொல்லாதபோது அவரிடம் சொல்ல ஏனோ அவளுக்குத் தோன்றவில்லை.

“உனக்கு அப்பா அம்மாவா இருந்து நாங்க செய்றோம் கயல். உனக்கும் பார்த்திக்கும் திருமணம் என்றால் அதிக சந்தோஷம் கொள்வது என் அண்ணனோட ஆத்மாவாதான் இருக்கும். அவருடைய இறுதி ஆசையும் இதுதான். நிறைவேற்றிக் கொடு கயல்” என்றதோடு…

“பார்த்தி எதுக்கும் இவ்வளவு உடைஞ்சு நான் பார்த்ததில்லை கயல். எங்களுக்கு (தேவராஜன், மங்கை) ஏதாவதுன்னா கூட அவனிடம் அப்படியொரு திடம், தெளிவு இருக்கும். அடுத்து என்ன என்பதில் தான் கவனமா இருப்பான்.

ஆனால் உன் விஷியத்தில் ரொம்ப சோர்ந்து போறான் கயல். உன் முகவாட்டம் அவனையும் வாட்டுது.

உன் மேல் உயிரையே வைத்திருக்கான் கயல். அது உனக்கும் தெரியும் நினைக்கிறேன்.

எந்தளவுக்கு அவன் உன்னை காதலித்திருந்தா… அவன் ஆசைப்பட்டு உருவாக்கிய மென்பொருள் நிறுவனத்தைக்கூட வேறொருவரின் பாதுகாப்பில் விட்டுட்டு உனக்காக இங்கு வந்திருப்பான். உனக்காக அவன் எதுவும் செய்வான் கயல்.

உனக்கே பிடிக்கலன்னாலும் உன்னை அவன் விடமாட்டான். அதற்கு உதாரணம் இப்போ நடக்குற ஏற்பாட்டையே சொல்லலாம்.

பார்த்திகிட்ட மனம் விட்டு பேசு கயல்… உனக்காக கரியரையே விட்டுக்கொடுத்திட்டு வந்திருப்பவன் என்னவும் செய்வான். உன் சந்தோஷத்துக்காக” என்றவர் இனி முடிவு உன்னிடம் தான் என்பதைப்போல் அவளின் முகத்தையேப் பார்த்திருந்தார்.

மங்கை சொல்லித்தான் பார்த்தியின் முழு காதலும் அவளுக்குத் தெரிய வேண்டுமென்றில்லை. அவனின் ஒற்றை பார்வை போதுமே அவளை மொத்த காதலில் திணறடித்து விடுவானே!

பார்த்திபனை நினைத்த மாத்திரம் அதுவரை மனதில் அப்பியிருந்த கவலைகள் இருந்த திடமின்றி முகம் புன்னகையை பூசியது.

சற்று முன் அவன் கொண்ட கோபத்திற்கு பின்னான அவளின் மீதான அக்கறை புரிந்திட… தன்னுடைய அனைத்து சந்தோஷமும் அவனிடம் மட்டுமே உள்ளதென்று அவளின் ஆழ் மனம் அடித்துக் கூறியது.

தனக்காக எல்லாம் விட்டுவிட்டு வந்திருப்பவனுக்காக தான் எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்று அந்நொடி தோன்றிட, மனதில் அவன் மீதான காதல் ஊற்றெடுக்க அருகிலிருந்த மங்கையை அணைத்துக் கொண்டாள்.

கயலின் முகத்தையே உன்னிப்பாகக் கவனித்திருந்த மங்கைக்கு அவளின் முகத்தில் வந்துபோன பல்வேறு விதமான உணர்வுகள் அடங்கி இறுதியில் நிலையாக நின்ற மகிழ்வில் அவரும் மகிழ்ந்தார். கயல் தெளிவாகிவிட்டாள் என்பதே அவரை நிம்மதிக்கொள்ளச் செய்தது.

தற்போதைக்கு தெளிந்த அவளின் மனம் மீண்டும் குரங்காக மாறும் வாய்ப்புகள் இருப்பதை இருவரும் அறியவில்லை.

“கயல் நான் பார்த்தியில்லை” என்று மங்கை கேலி செய்த பின்னரே அவரை விட்டவள்…

“ச்சூ… அத்தை” என்றபடி நாணத்தை அவருக்கு காட்டாது வீட்டிற்குள் ஓடியவள்… பின் வாயிலை கடந்து செல்கையில், அருகிலிருந்த மாடிப்படி மறைத்தவாறு எதிரே வந்த பார்த்திபனின் மார்பில் மோதி நின்றாள்.

“சாரி… சாரி அத்தான்” என்றவள், “பார்த்து வரமாட்டிங்களா, இப்படித்தான் வந்து மோதுவிங்களா” என்று வேண்டுமன்றே அவனிடம் வம்பு பேசினாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு அவளிருந்த வருந்தியத் தோற்றத்திற்கும்… இப்போது இருக்கும் சலனமற்ற முகத்திற்கும் இடையேயான வித்தியாசங்கள் அவன் கண்களிலிருந்து தப்பவில்லை.

மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டியவன்… மாடிப்படிச் சுவற்றின் மீதே ஒரு பக்கமாக சாய்ந்து நின்றான்.

அவனின் பார்வை அவனவளை ஊசியாய் துளைத்தது.

தன்னவனின் பார்வையைத் தாங்காது அவளின் இமை குடை கவிழ்ந்தது.

“லவ்லி…” கன்னம் தொட்ட இமை கற்றையை ரசனையாகக் கூறினான்.

“ஹாங்…” என்று விழி நிமிர்த்தியவளிடம்…

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டிருந்தான்.

அவளிடம் அவன் எந்த விளக்கமும் பெற முற்படவில்லை. நடக்கும் நிகழ்வை மனம் உவந்து மகிழ்வோடு அவள் ஏற்றுக்கொண்டால் போதுமென்று நினைத்தே… தற்போதைய அவளின் மாற்றம் தெரிய… பழையதை கேட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறவிடாது தடுத்தவனாக அவளின் விருப்பத்தை மட்டும் கேட்டான்.

பார்த்திபன் கேட்டதற்கு சரியென தலையாட்டியவளின் தலையை பிடித்து ஆட்டுவதை நிறுத்தியவன்…

“வாய் திறந்து வார்த்தையா சொல்லு” என்றிருந்தான்.

அவனின் பிடிவாதம் அவள் அறிந்தது தானே! அதனால் அவன் கேட்ட விதத்திலேயே பதில் வழங்கினாள்.

“சம்மதம்…”

“கேட்கலை…”

“எனக்கு உங்களை கல்யாணம் செய்துக்க முழு சம்மதம்” என்று நீட்டி கூறினாள்.

அதில் தன் மூரல்கள் பளிச்சிட பார்த்திபன் சிரித்திட… அவள் இமைக்க மறந்தாள்.

முதல் முறையாக வெளிப்படையாக விழி அகற்றாது அவளவனை ரசிக்கிறாள். ரசனை காதலை அவனிடம் சேர்பித்தது.

கயலின் கருவிழிகள் வழியாக தன் இதயம் கடத்திய காதல் அவனுள் இளமை உணர்வுகளை தூண்டுவதாய்.

தன்னை கட்டுக்குள் கொண்டுவர,

“ஓய்… சைட் அடிக்குறியா?” எனக் கேட்டு அவளைத் திணறடித்தான்.

அவள் காட்டும் பாவனைகள் எல்லாம் அவனை காதல் எனும் பெரும் சுழலில் சிக்க வைப்பதாக.

என்னதான் கயல் திருமணத்திற்கு சரியென ஒப்புக்கொண்டாலும், அவள் நினைத்த ஒன்று இன்னமும் அப்படியே இருப்பதாகத்தான் பார்த்திபனுக்கு தோன்றியது. அதனை அறிந்து அவள் விரும்பும் வகையில் செய்து முடித்த பின்னர் தான் காதலுக்கெல்லாம் இடமென்று நினைத்தவன் அச்சூழலை களைக்கவே மனமின்றி களைத்தான்.

“ரத்தினத்தை மீட் பண்ணனும் கயல்.”

பார்த்திபன் விடயம் என்னவென்று சொல்லாது சொல்ல… ரத்தினம் மீண்டும் ஆரம்பித்துவிட்டாரா என்றுதான் நினைத்தாள் கயல்.

கயலின் அதிர்ந்த முகம் கண்டு… சக்தி விடயத்தைக் கூறினான்.

“நானும் இதைப்பற்றி பேசனும் நினைத்திருந்தேன் அத்தான்” என்றவள், “ரத்தினம் இவ்வளவு சீக்கிரம் சக்திக்கு திருமணம் செய்வார் நினைக்கல” என்றாள்.

“ம்” என்றவன், “சக்தி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க கயல். சிவா தான்…” என்று சிவாவை நம்பி ரத்தினத்திடம் பேசலாமா என்றும் தயங்கினான்.

“உங்க தயக்கம் புரியுது அத்தான். அதுக்காக சிவாண்ணாக்கு கிடைக்கிற நல்ல வாழ்க்கையை அவர் இழந்திடக் கூடாதே” என்றாள்.

“எப்படியும் சிவாவுக்கு இப்போ இல்லைன்னாலும் பின்னால் திருமணம் என்ற ஒன்று நடக்கும் தானே. அந்தப்பெண் சக்தியா இருக்கட்டுமே.

நீ பார்த்து சொல்லும் பெண்ணை சிவா நிச்சயம் மறுக்கமாட்டான். சோ, சக்தியை நீ பார்த்து அவனுக்கு செய்யும் பெண்ணாக மாற்றிடலாம். இப்போ ரத்தினத்தை சம்மதிக்க வைக்க வேண்டும்.”

பார்த்திபன் சொல்லுவதும் கயலுக்கு சரியெனப்பட்டது.

“ஆமா அத்தான். சிவாண்ணாவை ஒத்துக்க வைத்துவிடலாம். ஆனால் ரத்தினம். விஷயம் தெரிந்து என்ன குதி குதிக்கப் போறாரோ!

அவர் மற்ற ஏற்பாடுகளை செய்வதற்குள் அவரிடம் பேச வேண்டுமென அப்போதே இருவரும் ரத்தினத்தை காணச் சென்றனர்.

கயல் சிறு வயதில் ரத்தினத்திடம் தான் கொடுத்த குத்தகையை ரத்து செய்வதற்காக அவரின் இல்லம் சென்றது. அதன் பின்னர் பல வருடங்கள் கடந்து இன்றுதான் ரத்தினத்தின் வீட்டிற்கு இரண்டாவது முறையாக செல்கிறாள். அதுவும் சிவத்திற்காக.

பண்ணைக்கு நடுவில் வீற்றிருக்கும் பெரிய மச்சு வீடு அது. அதை ஒட்டியே மாடி வைத்த வீடும் ஒன்று இருந்தது.

“நைஸ் லொக்கேட்” என்ற பார்த்திபன்… “நைட்ல வந்து பார்த்தா, தென்னை மரங்களுக்கு நடுவிலிருக்கும் பேய் பங்களா மாதிரியே இருக்கும்” எனக்கூறி சிரித்தான்.

தூரத்திலேயே அவர்களை கண்டுவிட்ட ரத்தினம் அவர்களை நோக்கி வந்தார்.

ரத்தினம் வருவதை கண்ட கயல்… பார்த்திபனின் தோளில் தட்டி அவனை அடக்கினாள்.

கார் தொழிற்சாலை விடயத்தில் பார்த்திபனின் உயரம் அறிந்த ரத்தினத்துக்கு… இப்போது கயலை எதிர்த்து போட்டி போடுபவன் அவன் என்கிற எண்ணம் மறைந்திருந்தது. அத்தோடு பார்த்திபன் கயலின் சொந்த அத்தை மகன் எனும்போது நடுவில் தேவையில்லாது தன்னால் எதற்கு குழப்பமென்று பார்த்திபனிடம் தள்ளியே நின்றார்.

அதனால் கயலுடன் சேர்த்து பார்த்திபனையும் இலகுவாகவே வரவேற்றார்.

“வாங்க… வாங்க… வராதவங்க வந்திருக்கீங்க” என்று ஆர்பாட்டமாக உபசரிப்பு செய்தார்.

திண்ணையிலேயே அமரச் சென்ற இருவரையும் வம்படியாக வீட்டிற்குள் அழைத்துச்சென்று தன்னுடைய மனைவி மகளை அறிமுகம் செய்தார்.

ஏற்கனவே தெரிந்திருந்த போதும் அவர் சொல்லும்போது புன்னகையோடு அவர்களை பார்த்தாள் கயல்.

சக்தியின் தோற்றம் கயலை யோசிக்க வைத்தது… எப்போதும் பளிச்சென்று இருக்கும் சக்தியை பார்த்துதான் கயலுக்கு பழக்கம். ஆனால் இன்று கடமைக்கு ஏதோ உடுத்தியிருந்தாள். முடியை பின்னலிடாது முடிந்திருந்தாள். கண்களில் ஜீவன் வற்றி முகத்தில் வருத்தம் தோய்ந்திருந்தது.

சக்தியையே கயல் பார்த்திருப்பதை கண்ட ரத்தினத்தின் மனைவி செண்பகம், “ரெண்டு நாளா உடம்புக்கு சுகமில்லை. அதான் என்னவோ போல் இருக்காள்” என்றார்.

ஆனால் சக்தியின் இந்நிலைக்கு காரணம் அவள் அறிந்தது தானே!

“நீங்க பேசிட்டு இருங்க… நான் இளநீர் வெட்டியாரா சொல்லிட்டு வரேன்” என்று ரத்தினம் எழுந்து வெளியில் சென்றிட…

“கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா” எனக்கேட்டு செண்பகத்தை உள் அனுப்பிய பார்த்திபன் கயலை அர்த்தமாக ஏறிட…

“நீ ஸ்ட்ராங்கா இருக்கத்தானே சக்தி. நாங்க பேசிய பின்னர், உங்க அப்பாவுக்கு பயந்து பல்டி அடிச்சிட மாட்டியே” என்ற கயலின் வார்த்தைகள் புரிந்ததும்… ஓடிவந்து கயலுக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்த சக்தி கயலின் இரு முட்டியையும் பற்றியபடி… கலங்கிய கண்களுடன்,

“தேன்க்ஸ் அண்ணி” என்று தன்னுடைய உறுதியை காண்பித்தாள்.

சக்தியின் கைகளை தட்டிக்கொடுத்தாள் கயல்விழி.

ரத்தினத்தின் அரவம் உணர்ந்து சக்தி பழையபடி சென்று நின்றுகொண்டாள்.

கயல் வீட்டிற்கு வந்தது ரத்தினத்திற்கு மகிழ்வாக இருந்தது. தான் செய்ததற்கெல்லாம் கயல் மன்னித்து விட்டாளா என்று வெளிப்படையாகக் கேட்கத் தயங்கி இருந்தவருக்கு அவள் வீடு வந்திருப்பதே அவரை மன்னித்து விட்டதாக நினைத்தார்.

கயல் தான் வந்த விடயத்தை சொல்லிய பின்னரும் ரத்தினம் இதேபோல் இருப்பாரா?

error: Content is protected !!
Scroll to Top