அத்தியாயம் 🌾 57 :
நீண்ட குறுகிய தார் சாலையில் இருமங்கிலும் போர்த்தியிருக்கும் பச்சையை கவனித்தவாறு நடந்து கொண்டிருந்தனர் பார்த்திபன் மற்றும் கயல்விழி.
“நான் இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கல கயல்.”
“என்னது அத்தான்?”
“நீங்கல்லாம் ரத்தினத்திற்கு கொடுத்த பில்டப் வைத்து, அவரை அந்தகாலத்து வில்லன் ரேஞ்சுக்கு பீல் பண்ணிட்டேன். பட் இப்படி எதிர்பார்க்கல” என்று தன் எண்ணத்தைக் கூறினான்.
“எனக்கே இது ஷாக்கிங் தான் அத்தான்” என்ற கயல் ரத்தினம் முன்பு எப்படியிருந்தார், அவரால் அவளுக்கு நடந்த சிக்கல்கள், எப்படி எதனால் அவரின் மாற்றம் என்பது வரை சொல்லியவள்… “அவர் அந்த உதவிக்கு அப்புறம் என்னிடம் மட்டும் தான் மாறியிருக்கார் நினைச்சேன். ஆனால் இப்படி மொத்தமா மாறியிருக்காருங்கிறது ஆச்சர்யம் தான்” என்றாள்.
“இதுவும் நல்லதுக்கு தான் கயல். இப்போ உன் பேச்சை கேட்க வேண்டுமென்றுதான் அன்று உன் மூலமாக அவரின் மனைவிக்கு அந்த உதவி நடந்திருக்கும் போல். எதுவும் இங்கு காரணமின்றி நடப்பதில்லை இல்லையா?” என்றவனின் எண்ணமும், கயலின் சிந்தனையும் சற்று நேரத்திற்கு முன்பு ரத்தினத்தின் இல்லத்தில் நடந்ததை நினைத்துப் பார்த்தது.
வந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்… பேச வந்ததை பேசினால் ரத்தினம் எந்தவகையில் எதிர்வினை ஆற்றுவார் என்று சிறு படபடப்புடன் கயல் அமைதியாகவே கைகளை பிசைந்தபடி அமர்ந்திருக்க… பார்த்திபன் அப்படியொன்றும் இது பெரிதில்லை எனும் தோரணையில் வீட்டை பார்வையால் அலட்சியமாக அளந்து கொண்டிருக்க… அங்கு ரத்தினத்தின் பேச்சொலி மட்டும் நிரம்பிக் கொண்டிருந்தது.
‘இவர் என்ன இவ்வளவு பேசுகிறார்!’ என நினைத்த பார்த்திபன், கயலை பார்க்க… அவளோ ரத்தினம் பேசும் வயல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கு பதில் அளித்துக்கொண்டும் தலையாட்டிக்கொண்டும் இருந்தாள்.
‘ரெண்டு விவசாயியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க… ரைட்டு. இது வேலைக்காகாது’ என்று பார்த்திபனே பேச்சினைத் துவங்கினான்.
“நாங்க வந்த விஷயத்தைப் பற்றி பேசலாமா?”
பார்த்திபன் ரத்தினத்திடம் அவ்வாறு சொல்லியதும்… கயல் ரத்தினத்தை நினைத்து பயந்து அதிர்ந்து பார்த்தாள்.
ஆனால் அவள் பயந்தது போல் பார்த்திபன் அவரின் பேச்சை இடையிட்டதை பெரியதாக எடுத்துக்கொள்ளாத ரத்தினம்…
“வராதவங்க வந்ததும் வந்த விஷயத்தை கேட்கவே மறந்துட்டேன்” எனக்கூறினார்.
பார்த்திபன் கயலை பார்க்க…
“அது வந்து… சக்தி…” என்று அடுத்து வார்த்தையை கோர்க்க முடியாது சட்டென வியர்த்திட்ட முகத்துடன் பார்த்திபனை ஏறிட்டாள். அவளின் தொண்டை குழி வார்த்தைகள் தடைபட்டது போல் ஏறியிறங்கின.
“அது ஒன்னுமில்லைங்க… சிவாவுக்கு உங்கப்பொண்ணு சக்தியை கேட்டு வந்திருக்கோம்” என்று பட்டென்று கூறினான் பார்த்திபன்.
“தம்பி சொல்லுறது விளங்கலையே!”
மீசையை நீவிவிட்டவரின் பார்வை… பார்த்திபன் சொல்லியதும் முகத்தில் சடுதியில் தோன்றிய பதட்டத்துடன் தலை கவிழ்ந்து மேல் பார்வை பார்த்திருந்த தன்னுடைய மகளின் மீது நிலைத்திருந்தது.
ரத்தினம் கேட்ட தோரணையே கயலுக்கு தன்னிடமிருந்த திடம் தொலைக்க போதுமானதாக இருந்தது.
“அத்தான் என்னால் பேச வந்ததை சரியா பேச முடியுமான்னு தெரியல. போயிட்டு நாளைக்கு வரலாமா?” கயல் பார்த்திபனின் காதில் கிசுகிசுத்தாள்.
“என்ன உங்களுக்குள்ளே பேசிக்கிறீங்க. சொல்றதை விளங்குற மாதிரி சொன்னால் தானே புரியும்” என்றார் ரத்தினம்.
“நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுது. இருந்தாலும் சொல்றேன்” என்ற பார்த்திபன்,
“சக்தியும், சிவாவும் விரும்புறாங்க. நீங்க சக்திக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறதா தகவல். அதான் உங்கக்கிட்ட நேரடியா பேசிட்டு போகலாம் வந்தோம்” என்று இம்முறை அவர் கேட்ட தெளிவுடன் கூறினான்.
ரத்தினம் அமர்ந்த தோரணையில் சிறிதும் மாற்றமின்றி தன் எதிரில் இருப்பவர்களை வெறித்தபடி இருந்தார்.
பார்த்திபன் மேற்கொண்டு பேசினான்.
“சிவாவுக்கு யாருமில்லை அப்படின்னு நீங்க நினைக்க வேண்டாம். கயலுக்கு அவன் உடன்பிறந்த சகோதரன் தான். அதை யாரும் மறுத்து சொல்ல முடியாது. நீங்க என்ன எதிர் பார்க்குறிங்களோ அதை சிவாவுக்கு நாங்க செய்வோம்” என்று பார்த்திபன் கயலை பார்க்க…
“எங்களுக்கு இருக்க எல்லாம் சிவா அண்ணாவுக்கும் தான். மொத்தமா அவருக்கு கொடுக்கவும் நான் தயார் தான். முகிக்கும் இதில் தடை இருக்காது” என்றாள்.
“உங்களுக்கு பணம் சொத்து, உங்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கவங்களுக்குத்தான் உங்க மகளை கல்யாணம் செய்து கொடுப்பீங்கன்னா… தி வாரியரில் சிவாவும் ஒன் ஆஃப் தி பார்ட்னருன்னு நான் எழுதி தர்றேன்” என்ற பார்த்திபன், “வாரியர் பற்றி தெரியனுன்னா” என சொல்ல வர,
“எனக்கும் தெரியும் தம்பி. உங்க அப்பாரு இந்த ஊருக்கு வந்த அன்னைக்கே, அவர் தொழில் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். அத்தோட உங்க உயரம் என்னன்னு அந்த பேக்டரிகாரனை நீங்க ஓடவிட்டதிலே தெரிஞ்சிருச்சு” என்றார்.
“அப்போ உங்களுக்கு சம்மதமா?” கயல் ஆர்வமாகக் கேட்டாள்.
“எந்தவொரு அப்பனும் தான் பொண்ணு வசதி வாய்ப்போடு நல்லா இருக்கனும் தான் நினைப்பான். நானும் அதற்கு விதிவிலக்கில்ல” என்றவர், “நீங்க சொன்ன எதுவும் இல்லாமலே சிவாவை என்னால் ஏத்துக்க முடியும். சிவா குணம் ஒண்ணு போதுமே. பணத்தைவிட குணம் ரொம்ப முக்கியமுன்னு நான் தெரிஞ்சிக்கிட்டு ரொம்ப நாளாகுது.
எனக்கு ஒரே பொண்ணு தான… எனக்கு அப்புறம் என் பண்ணையத்தை பார்த்துக்க… எனக்கென்ன ஆண் வாரிசா இருக்கு” என்றதோடு, “சக்தி பார்த்துக்கமாட்டாளான்னு நீங்க கேட்கலாம். ஆனால் சக்தி கயல் மாதிரி இல்லை. அதனால் எனக்கு வரப்போற மருமகன் பண்ணையம் தெரிந்தவரா இருந்தால் எனக்கு சந்தோஷம் தான். உங்களோடது சேர்த்து என்னோடதையும் பார்த்துகிட்டால் போதும்” என்றார்.
அதாவது சிவாவை தான் ஏற்றுக்கொண்டதை மறைமுகமாகக் கூறினார்.
இருந்தபோதும் கயல் மீண்டும் தெளிவுப்படுத்திக்கொள்ள வினவினாள்.
“நீங்க முழு மனசோடுதான!…”
“உன் அண்ணனுக்கு நீயே பொண்ணு கேட்டு வரும்போது நான் வேண்டான்னா சொல்லுவேன்” என்றவர், சக்தியிடம் சென்று அவளின் தலையை கையை வைத்து…
“இப்போ சந்தோஷம் தானே?” எனக் கேட்டார்.
நீர் நிறைந்திட்ட விழிகளுடன் ம் என்று தலையாட்டிய சக்தி ரத்தினத்தின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
“உங்களுக்கு கல்யாண ஏற்பாடாகுது கேள்விப்பட்டேன். ரெண்டையும் சேர்த்து செஞ்சிடலாமே” என்று ரத்தினம் யோசனையாக சொல்லிட… கயலும் பார்த்திபனும் ஒன்றாக சம்மதம் வழங்கினர்.
“சக்தி படிப்பு?” என்று கயல் கேட்டிட…
“இன்னும் ஒரு செமஸ்டர் தானே இருக்கு. பார்த்துக்கிடலாம்” என்றார் ரத்தினம்.
“எப்படியோ வந்த விஷயம் நல்லபடியா முடிந்தது” என்று நடந்ததை நினைத்த இருவரும் ஒன்றாகக் கூறிக்கொண்டனர்.
“இதை போய் அண்ணாகிட்ட சொன்னா என்ன சொல்லப்போறாரோ?”
“கண்டிப்பா அப்போஸ் தான் பண்ணுவான்.”
சொல்லிய பார்த்திபனை கயல் முறைத்தபடி நடந்தாள்.
*****
மறுநாள் காலையிலேயே சிவம் ரத்தினத்தின் முன் அமர்ந்திருந்தான்.
இரவு உணவு உண்ண சிவா வீட்டிற்கு வந்தபோது… கயல் தான் அவனிடம் விடயத்தை கூறியிருந்தாள்.
“ரத்தினமிடம் நானும் அத்தானும் பேசினோம். அவர் சம்மதம் சொல்லிட்டார். எங்க கல்யாணம் அப்போவே சேர்த்து வைக்க முடிவு பண்ணியிருக்கோம்” என்று கூறியவள், ரத்தினத்திடம் என்ன பேசினோம் என்பதை சொல்லவில்லை. அது சிவாவுக்கு தெரியவும் வேண்டாம் என நினைத்ததால் சொல்லவில்லை.
“சாருக்கு விருப்பமிருக்கான்னு கேட்டுக்கோ கயல். அப்புறம் எனக்குன்னு யாருமில்லை… சொத்து இல்லை, வீடில்லைன்னு டயலாக் பேசுவார்.” பார்த்திபன் வேண்டுமென்றே சமயம் கிடைக்கும் போதெல்லாம் சிவா அன்று பேசியதை குத்திக்காட்டினான்.
“நானாவது ஒருநாள் தான் சொன்னேன்…” சிவா முதல்முறையாக தனக்கும் கோபம் வருமென்று காட்டினான்.
“பாருடா… கோபமெல்லாம் வருதே!” அதற்கும் பார்த்திபன் கிண்டல் செய்தான்.
“அதான் எனக்குன்னு நீங்கயெல்லாம் இருக்கீங்களே… அப்புறம் என்ன யாரு யாருமில்லாதவன்னு சொல்லுவாங்க” என்றான் சிவா.
“இது சாருக்கு அன்னைக்கு பேசும்போது தெரியலையோ?”
“பார்த்தி கொஞ்சம் சும்மா இருடா. அவனை ஏன் போட்டு படுத்துற.” மங்கை அவ்வாறு கேட்ட பிறகே பார்த்திபன் வாய் மூடினான்.
“என்ன பேசுனீங்க?” சிவா கயலிடம் கேட்டான்.
“உங்களுக்கு அதெதற்கு. அவரு பொண்ணை உங்களுக்கு கட்டிக்கொடுக்க சம்மதிச்சிட்டாரு” என்ற கயல், “சக்தியை உங்களுக்கு பிடிக்கலன்னாலும் அவங்க தான் எனக்கு அண்ணியா வரனும்.” நீ வேண்டாமென்று முடிவு செய்தாலும் என் முடிவு இதுதான் என்பதைப்போல் உறுதியாகக் கூறினாள்.
“நான் சக்தியை பிடிக்கலன்னு எப்பவும் சொல்லவேயில்லையே. ஒத்து வராதுன்னு தான் சொன்னேன். அதான் இப்போ ஒத்து வந்திருச்சே… பிறகும் வேண்டாம் சொல்ல எனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு” என்று கேட்டு அனைவரையும் தன் பேச்சால் அதிர வைத்த சிவம், “அதோட என் தங்கச்சி பார்த்திருக்க பெண்ணை ஓகே சொல்ல எனக்கென்ன கசக்குமா?” என்று சொல்லியவன் தன்னை ஆச்சரியமாகப் பார்க்கும் மங்கையைப் பார்த்து கண்ணடித்தான்.
“நீ நல்லா பேச கத்துகிட்ட சிவா” என்ற சரளாவிற்கு புன்னகையை பரிசளித்தவன்…
“சேர்க்கை அப்படி” என்று பார்த்திபனை பார்த்தான்.
என்ன தான் சிவா தன் குடும்பத்தாரிடம் சம்மதம் சொல்லியிருந்தாலும், அவனுள் சில இருக்கிறதே அதை யோசித்தே இப்போது ரத்தினம் வீட்டிற்கு வந்திருந்தான்.
சிவாவை மாப்பிள்ளை என்று சொல்லித்தான் ரத்தினம் வீட்டிற்குள்ளே அழைத்தார். அதிலேயே அவர் மனமுவந்து தான் சம்மதம் சொல்லியிருக்கிறார் என்பதை சிவம் அறிந்து கொண்டான்.
சென்று அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்த சிவம்… எவ்வித பூசலுமின்றி தான் பேச வந்ததை பேசத் துவங்கினான்.
“உங்களுக்கு என்னைப்பற்றி, நான் யார் எல்லாம் தெரியும். கயலும், மாப்பிள்ளையும் உங்கக்கிட்ட என்ன பேசினாங்கன்னு எனக்குத் தெரியாது. அது தெரிஞ்சிக்கவும் நான் நினைக்கல… ஆனால் எனக்குன்னு சிலது இருக்கு. அதை சொல்லத்தான் வந்தேன்” என்றவன்,
“நான் இப்போ தான் என் படிப்பை தொலைதூர கல்வி முறையில் முடித்தேன். என்கிட்ட எனக்குன்னு இருக்கிறது இந்த படிப்பு ஒன்னு மட்டும் தான். என்னையும் அழகர் மீனாட்சி மக்களாத்தான் அந்த குடும்பத்தில் பாக்குறாங்க. எனக்காக மொத்தமும் தருவாங்க. ஆனால் எனக்குன்னு மனசாட்சி ஒன்னு இருக்கே… அதை தூர வச்சிட்டு இதையெல்லாம் என்னால் ஏற்க முடியாது. கயல் இல்லைன்னா நானில்லை. அதுக்கு கடைசிவரை நன்றி கடனா ஒரு காவலாக அங்கு இருப்பேனேத் தவிர என் மொத்த பாரத்தையும் அவங்களுக்கு சுமையா இறக்கி வைத்திட மாட்டேன்.
பப்ளிக் சர்விஸ் கமிஷன் எக்ஸாம்ஸ் எழுதலான்னு இருக்கேன். ஏற்கனவே அதற்கு பயிற்சி எடுத்துட்டுதான் இருக்கேன். எப்படியாவது கஷ்டப்பட்டு அரசாங்க வேலையில் உட்கார்ந்து… எனக்குன்னு சிலதை நானே உருவாக்கிக்கனும் நினைக்கிறேன். அதுக்கு பிறகு தான் கல்யாணம் குடும்பம் இதையெல்லாம் என்னால் ஏற்க முடியும்.
எனக்கு சக்தியோட சேர்த்து நீங்களும் தான் வேணும். உங்களுக்கும் நல்ல மகனா, சக்திக்கும் நல்ல கணவனா இருப்பேன். அதுக்கு நான் நினைத்ததெல்லாம் நடக்கனும்.
உங்கக்கிட்ட தான் சொத்து நிறைய இருக்கே. எல்லாமே சக்திக்குத்தானே. சக்திக்குன்னா அது எனக்கும் தானேன்னு நீங்க சொல்லலாம். ஆனால் என்னை நம்பி வர பொண்ணை எப்படி பார்த்துக்கணும் எனக்குன்னு சிலது இருக்கும் தானே. அதில் என்னோட சுயமரியாதையும் அடங்கியிருக்கே. அதனால் அதை என்னால் விட்டுத்தர முடியாது.
அதோட கயல், முகி, பார்த்தி மாப்ள மாதிரி என்னை எனக்காக மட்டுமே ஏத்துக்குறவங்க தான் எனக்கு வேணும்.
சக்தி மேற்கொண்டு படிக்கனுமென்றால் படிக்கட்டும். அதுக்குள்ள நான் ஸ்டெடி ஆகிடுறேன். அதன் பின்னர் கல்யாணம் வைத்துக்கொள்ளலாம். கல்யாணம் வரை சக்திகிட்ட பழகாம இருக்கணும்னா கூட எனக்கு சம்மதம் தான்.
இப்போ நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு சரின்னா எனக்கு சக்தியை கட்டிக்க முழு சம்மதம்” என்று ஒரே மூச்சாக அனைத்தையும் பேசி முடித்திருந்தான்.
இப்போது ரத்தினத்திற்கு சிவாவை நினைத்து பெருமையாகவே இருந்தது.
பிறர் சொத்திற்கு ஆசைப்படும் மனிதர்களுக்கு இடையில் தன் சுய சம்பாத்தியத்தில் நிற்க வேண்டுமென்ற அவனின் சுயமரியாதை அவருக்கு மிகவும் பிடித்தது.
அவரே ஒரு காலத்தில் கயலின் சொத்திற்கு ஆசைப்பட்டு தவறு செய்தவர் தானே. அதனை எண்ணி இப்போது சிவாவின் பேச்சில் வெட்கி வருந்தினார்.
இப்படி ஒருவனை வேண்டாமென்று அவரால் மறுத்திட முடியுமா என்ன?
“எனக்கு முழு சம்மதம் மாப்பிள்ளை” என்றவர் சிவத்தை ஆரத்தழுவி விடுவித்தார்.
“இப்போ கல்யாணம் வேண்டான்னு நீங்களே கயல்கிட்ட எதாவது காரணம் சொல்ல முடியுமா? நான் உங்ககிட்ட சொன்னதையெல்லாம் கயலிடம் சொல்ல முடியாது. சொன்னா, நான் அவங்களில் ஒருவனா நினைக்கலன்னு வருந்துவாங்க” என்று தன்னிலையை விளக்கினான்.
“உங்களுக்குள் இருக்கும் உறவை பார்க்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. இப்படி தங்களுக்குள்ளான உறவுகளை நினைத்து ஒவ்வொன்றும் செய்யும் உறவுகளுக்கு மத்தியில் என் மகள் வாழப்போறாள் என்பதே எனக்கு சந்தோஷம்.” சிவாவின் விருப்பத்திற்கு சரியென்றார் ரத்தினம்.
“அப்போ நான் வரேன் மாமா” என்ற சிவா, தனக்கான உரிமை வந்த பிறகே ரத்தினத்தை உறவாக ஏற்றுக்கொண்டதை வார்த்தையில் காட்டி வெளியேறினான்.
திரும்பிச்சென்று கொண்டிருந்த சிவாவை, ரத்தினத்தின் பண்ணையைத்தாண்டி வழி மறித்து முன் நின்றாள் சக்தி.
ஓடிவந்தவள் சற்று இளைத்து நிற்க…
முதல்முறையாக் அவளை தன்னவள் என்கிற உரிமையில் ரசனையோடு பார்த்திருந்தான் சிவம்.
எப்போதும் தன்னை கண்டதும், தன் முகத்தைக்கூட காணாது மறு பக்கம் திரும்பி கொள்பவனின் இத்தகைய பார்வை அவளுள் ஏதோ செய்திட… அவனின் முன் பேச வார்த்தைகளற்று தினறி நின்றாள்.
“என்..ன்ன அ…தி…சயம் என் முகத்தை பார்…த்து நிக்கிறீங்க?”
“பாருடா தி கிரேட் சக்திக்கு பேச நா தடுமாறுது.” அளவாக சிரித்தான்.
“பேச்சை திருப்ப வேண்டாம்” என்றவள், “எங்கப்பாக்கிட்ட ஓகேவா கேட்டிங்க, அவரையா கட்டிக்கப்போறீங்க” என்று இடையில் கை குற்றி தோரணையாகக் கேட்டாள்.
“நான் பிக்ஸ் ஆகிட்டேன்… உனக்கு ஓகே இல்லைன்னாலும் நான் தான் உன் புருஷன்” என்றவன்,
“எனக்கு ஓகே இல்லை” என்று இத்தனை நாள் தன்னை அவன் பின்னால் சுற்ற வைத்ததற்காக, அவனை தன்பின்னால் அலைய வைக்கும் எண்ணத்தில் அவள் வேண்டுமென்றே சொல்லிட,
அவளை இடையோடு பிடித்து தூக்கி வழியை விட்டு தள்ளி நிற்க வைத்து, “தள்ளியிருந்தா இப்படித்தான் தேவையில்லாம பேசத்தோணும்” எனக்கூறி அவளின் கன்னத்தில் அதிரடியாக இதழ் பதித்து “போடி” என்று சொல்லிச் சென்றான்.
அவனின் தொடுகையையே நம்பாது விழி விரித்தவள், அவன் தந்த முத்தத்தில் ஏற்பட்ட அதிர்விலிருந்து மீண்டு…
“எனக்கு எப்பவோ ஓகே தான். ரெண்டு வருசம் இல்லை, இருபது வருசம் காத்திருக்கனுன்னாலும் எனக்கு ஓகே தான்” என்று கத்தியவளின் கத்தலுக்கு திரும்பாது தலையை மட்டும் அசைத்து புன்னகைத்தபடி சென்றான்.
அன்றே ரத்தினம் கயலின் வீட்டிற்கு சென்று… சக்தியின் ஜாதகத்தில் இல்லாத பிரச்சனை ஒன்றை சொல்லி… “இப்போதைக்கு திருமண யோகமில்லையாம், ரெண்டு வருஷம் போகட்டும் சொல்றாங்க” என்று சொல்லி “சக்தியும் மேல படிக்கட்டும், அதற்குள் சிவாவும் எதாவது செய்யனுன்னா செய்யட்டும்” எனக்கூறி சக்தி சிவாவின் திருமணத்தை சிவா கேட்டுக்கொண்டதற்கேற்ப தள்ளி வைத்தார்.
பார்த்திபனுக்கு ஜாதகம் என்பதில் உடன்பாடில்லை என்றாலும், மங்கையும் கயலும் ரத்தினத்தின் பேச்சை ஏற்கத்தான் செய்தனர்.
‘இதில் சிவா ஏதோ செய்திருக்கிறான்’ என்பதை பார்த்திபனால் யூகிக்க முடிந்தது.
“சாருக்கு நாங்களாம் எப்பவும் தேர்ட் பெர்சன் தான் இல்லையா?” என்று பார்த்திபன் சிவாவிடம் நேரடியாகவேக் கேட்டிட… சிவம் அவனின் வார்த்தையில் விக்கித்து நின்றான்.