அத்தியாயம் 🌾 58 :
பத்து நாட்கள் கடந்திருந்தன…
அன்று வயலில் களை பறிப்பு. நட்ட நாற்றுகள் வேர் பிடித்து நிலத்தில் ஊன்றி செழித்து நிமிர்ந்து நின்றிருந்தன. நெல் பயிரைச் சுற்றி முளைத்திருக்கும் தேவையற்ற களைகளை நீக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
வரப்பில் நடந்தபடி வயலில் களை எடுத்துக்கொண்டிருந்தவர்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் பார்த்திபன்.
அவன் முன்னால் வருவதும்… அவன் பின்னே செல்வதும்… அவனின் கண்ணில் படுவதுமாய் சிவா அங்குமிங்கும் நடந்த போதும் பார்த்திபன் சிவாவை கண்டுகொள்வதாக இல்லை.
அன்றைய கோபத்தை பார்த்திபன் இன்னும் இழுத்துப் பிடித்திருந்தான்.
சிவாவால் தான் முதலில் வைக்க நினைத்த திருமணத்தை ரத்தினம் தள்ளிப்போட்டாரென்று பார்த்திபன் யூகித்தது…
பார்த்திபன் கேட்ட,
“சாருக்கு நாங்களாம் எப்பவும் தேர்ட் பெர்சன் தான் இல்லையா?” என்ற வார்த்தைகளில் சிவாவின் கண்களில் நொடி நேரம் வந்து சென்ற அலைப்புறுதலில் கண்டு கொண்டான்.
அதற்கான எந்த விளக்கத்தையும் பார்த்திபன் சிவாவிடம் கேட்கத் தயாராக இல்லை.
‘தான் மட்டுமல்லாது, அன்று தன்னிலை குறித்து சிவா பேசியபோது கயலும் சேர்ந்து தங்களுக்குள் அவனின் உறவு எத்தகையதென்று சொல்லியிருக்க… அதையெல்லாம் மனதில் ஏற்காது ரத்தினத்திடம் மீண்டும் தன்னுடைய நிலையை பற்றி பேசியிருக்கிறான் என்றால்… அவனளவில் தாங்கள் அனைவரும் யாரோ தானே’ என்ற எண்ணம் பார்த்திபனை சிவாவிடம் கோபம் கொள்ள காரணமாக இருக்கிறது.
அன்றிலிருந்து சிவா எவ்வளவோ முயற்சித்தும் பார்த்திபன் அவனை நேருக்கு நேராக சந்திப்பதையே தவிர்த்து வருகிறான்.
கயலும் பார்த்திபனின் ஆட்டத்தை கண்டும் காணததைப்போல் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள்.
பார்த்திபன் முறுக்கிக்கொண்டு செல்வதும்… சிவா ஏக்கத்தோடு கெஞ்சல் பார்வையோடு பார்த்திபனின் பின்னால் அலைவதையும் பார்ப்பதற்கு… காதலியின் பின்னால் காதலன் சுற்றுவதைப்போல் தான் அவளுக்குத் தெரிந்தது.
அந்நொடி இருக்கும் சூழல் மறந்து சத்தமாக சிரித்துவிட்டாள்.
“என்னன்னு சொன்னா செய்யுற வேலை களைப்பு தெரியாம நாங்களும் சிரிப்போமே” என்று குனிந்து களை பறித்துக்கொண்டு இருந்த பெண் ஒருவர் சொல்ல…
“கல்யாண கனவா இருக்கும்” என்று மற்றொரு பெண் சொன்னதோடு கயலுக்கு இல்லாத நாணத்தை தன் முகத்தில் கொண்டு வந்து நெளிந்தார்.
அச்சமயம்… “என்ன கயலு நீ பண்ண வேண்டிய வேலையை உன் அண்ணன் பண்ணிட்டு இருக்கான்” என்று ஒரு பெண் மேவாயில் கைவைத்து வினவ,
“நானும் அதைப்பார்த்துதான் பெரிம்மா சிரித்தேன்” என்றிட அனைவரும் கொள்ளென்று சிரித்தனர்.
சத்தம் கேட்டு கயலின் வயல் பக்கம் திரும்பிய பார்த்திபன்… அவர்களின் அனைவரின் பார்வையும் தன் பக்கமிருக்க… ‘தன்னையும் சிவாவையும் குறித்து தான் ஏதோ கேலி பேசி சிரிக்கின்றனர்’ என்றவரை அவனுக்கு புரிந்தது.
“டேய் தள்ளிப்போடா… அவங்கலாம் வேறமாதிரி நினைத்து சிரிக்குறாங்க” என்ற பார்த்திபன் தன் நீண்ட எட்டுக்களை வைத்து சிவாவிடமிருந்து தூரம் சென்றான்.
எவ்வளவு நெருங்கினாலும், விலகிப்போகும் பார்த்திபனின் செயல் சிவாவின் முகத்தை நொடியில் சுருங்கச் செய்தது.
கவனித்த கயல் பார்த்திபனை தேடிச்சென்றாள்.
“சிவாண்ணா இங்கையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க… இதோ வர்றேன்.”
மல்லிகைத் தோட்டத்தில் இங்குமங்குமாய் நடைபோட்டுக் கொண்டிருந்தான்.
பார்த்திபனுக்கு முன் சென்று நின்றவள்…
“இப்போ என்னாச்சுன்னு இங்க வந்து… பிரசவ வார்டுக்கு பொண்டாட்டியை அனுப்பி வைத்த புருஷன் மாதிரி நடந்திட்டு இருக்கீங்க?” எவ்வளவு தான் சிரிக்காமல் கேட்க முயன்றும் அவளால் முடியவில்லை.
“அது நடக்க முதல்ல மேரேஜ் ஆகனும்.” முகத்தை உர்ரென்று வைத்தபடி கூறினான்.
“அதான் நடக்கப் போகுதே…”
…
“ச்சூ அத்தான் இப்போ உங்களுக்கு அண்ணாவோட என்ன பிரச்சினை?”
காரணம் அவள் அறியாமல் இருக்குமா?
“எனக்குத் தெரியல கயல். பட் அவன் நம்மளை தள்ளி வைக்கிறான்னு தோணுது. அவனுக்காக நாம் இருக்கோமுன்னு ஏன் அவன் அக்செப்ட் செய்யமாட்றான்.” பார்த்திபனின் குரலில் அவ்வளவு வருத்தம்.
பார்த்திபன் இங்கு வந்த போது… முகி யாரென்று சொல்லியிருந்தாலும், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து பிறருக்கு உதவியாக இருப்பதற்கு மனம் வேண்டும். அந்த மனம் சிவாவிடம் இருந்தது. அதனால் தான் பார்த்திபனுக்கு உதவியாக அனைத்திலும் சிவா இருந்தான். அக்கணங்களில் பார்த்திபன் சிவாவை தன் சகோதரனாகவே நினைக்கத் தொடங்கியிருந்தான். அதனால் தான் அவனால் சிவாவுடன் இயல்பாக பழகவும் முடிந்தது. இப்போது அவனுக்காக எதுவும் தர முடியுமென்று ரத்தினத்திடம் சொல்ல முடிந்தது.
ஆனால் சிவா தங்களைப்போல் இல்லாது… தங்களின் உறவினை ஏற்கவில்லையோ, அதனால் தான் ரத்தினத்திடம் பேசியிருக்கிறான் என்ற வருத்தமே சிவாவிடம் கோபம் கொள்ள செய்ய… அதனை வெளிப்படையாக சிவாவிடமும் காட்டிக்கொண்டிருக்கிறான்.
அதனை கயலிடமும் தற்போது சொல்லி வருந்தினான்.
“சிவாண்ணாவுக்கு உறவுன்னா அது நாமதான் அத்தான். அதனால வருத்தப்படாதீங்க.
உறவுகளைத் தாண்டி நமக்குன்னு ஒன்னு இருக்குமே. அதுதான் இப்போ சிவாண்ணாவை சக்தி அப்பாவிடம் பேச வைத்திருக்கு.”
“அப்போ அவன் பேசியிருக்கான்னு உனக்கும் தெரியுமா?” பார்த்திபனிடம் சிறு யூகம்.
“ம்” என்றவள், “என்ன பேசினாருன்னு கூடத் தெரியும்.” சிவா பேசியது அனைத்தும் சக்தி வாயிலாக தான் அறிந்ததை பார்த்திபனிடம் கூறினாள்.
“சக்தி…?”
“சக்தி என்னோட பிரண்ட். ஒரே ஸ்கூல் தான். அப்புறம் அவள் காலேஜ் படிக்கிறன்னு ஹாஸ்டல் போயிட்டாள். அவள் யூஜி முடிக்கும் போதே அவங்கப்பா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்னு சொன்னார். அப்போதான் சிவாண்ணா இங்க வந்து சில மாதங்கள் இருக்கும். ரத்தினத்திற்கு என்னை பிடிக்காதுங்கிறதால் சக்தி என்னை பார்க்க யாருக்கும் தெரியாமதான் வருவாள். அப்படி சிவாண்ணாவை பார்த்து மேடமுக்கு லவ் ஆகிப்போச்சு. அதனால் கல்யாணப் பேச்சைத் தடுக்கத்தான், மேல மேல படிச்சிக்கிட்டே இருக்காள். இப்போ எம்.பில் முடிச்சு பி.எச்.டி’யில் வந்து நிக்குது.”
தங்களின் நட்பின் ரகசியத்தை கயல் பார்த்திபனிடம் சொல்ல…
“ஹோ அப்போ மேடம் எல்லாம் தெரிஞ்சும், உங்க அண்ணாவை மன்னிச்சிட்டீங்க…” என்று ஒரு மாதிரியாக இழுத்தான்.
“இதுல மன்னிக்க என்ன இருக்கு அத்தான். மன்னிக்கிற அளவுக்கு அவர் என்ன தப்பு செய்தார்?” என்ற கயல், பார்த்திபனின் புரியாத முக பாவனையில்,
“இதை அவரோட சுய மரியாதைன்னு யோசிச்சுப் பாருங்க… அப்போ புரியும்” என்றாள்.
“நாம என்னதான் உறவுகளா ரத்த சொந்தங்களா இருந்தாலும்… நமக்குள்ளே சுயமரியாதை, சுயகௌரவம் அப்டின்னு ஒன்னு குறுக்க வரும்போது அவர் அவருடைய தன்மானத்துக்காக சிலது யோசிக்கும்போது அது சரிதானே அத்தான்.
பிடிச்சி இறுக்கி வைப்பது உறவுகளிடையே கசப்பைத்தான் உண்டாக்கும். எந்தவொரு உறவுக்கு இடையிலும், சுதந்திரம் அப்படின்னு ஒன்னு இருக்கனும். அது அந்த உறவுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.
அந்த வகையில் சிவாண்ணாவுக்கு சுயமரியாதை முக்கியம் தானே. அதுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத்தானே வேண்டும்.
சிவாண்ணா நம்மளை புரிஞ்சிக்கலன்னு வருந்தறதைவிட அவரை நாம புரிஞ்சிப்போம்” என்றாள்.
இப்போது தன்னுடைய சிறுபிள்ளைத்தனமான கோபம் பார்த்திபனுக்கு சிரிப்பைத்தான் வரவழைத்தது.
அதன் பின்னர் என்ன… பார்த்திபனும் சிவாவும் மீண்டும் மச்சான் மாப்ள என்று ஒன்று கூடிவிட்டனர்.
நாட்கள் செல்ல… நிச்சயத்திற்கு குறித்த நாளும் வந்தது.
எல்லோரும் மிகவும் சந்தோஷத்துடன் வலம் வந்தனர்.
தேவராஜனும் மாணிக்கமும் சேர்ந்து பெரிதளவில் விமர்சையாக ஏற்பாடு செய்தனர். இவர்களுடன் ரத்தினமும் சேர்ந்து தன் பங்குக்கு எடுத்துக்கட்டி செய்தார். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பே வீடு கலை கட்டிவிட்டது.
ஊர் மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கயல் வீட்டில் என்றானது.
நிச்சயத்திற்கு நாள் நெருங்க நெருங்க… கயலின் திடம் தொலைந்து அமிழ்ந்திருந்த பயம் மீண்டும் மெல்ல மெல்ல மேலெழும்பத் துவங்கியிருந்தது. இருப்பினும் பார்த்திபனின் காதலுக்காக முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகை முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள்.
சபையோர் முன்னிலையில் பார்த்திபன் அமர்ந்திருக்க…
மலரின் கை வண்ணத்தில் தேவதையெனத் தயாராகி அறையில் அமர்ந்திருந்தாள் கயல். சக்தி கயலுக்கு பழச்சாறு கொடுத்துக்கொண்டிருந்தாள்.
வந்திருப்பவர்களை கவனித்து அமர வைத்து உபசரிப்பதிலேயே முகிக்கும் சிவாவுக்கும் நேரம் சரியாக இருந்தது.
முகியின் சோர்வை கவனித்த சிவா அவனையும் சேர்த்து கவனித்துக் கொண்டான்.
“நீ கொஞ்ச நேரம் உட்காரு முகி. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“அதெல்லாம் முடியாது நீங்க மட்டும் உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு ஓடி ஓடி வேலை செய்வீங்க… நான் எங்க அக்காவுக்கு செய்யக் கூடாதா” என்று பிடிவாதம் பிடித்தான் முகி.
“அப்போ நீங்க ரெண்டு பேருமே எனக்காக எதுவும் செய்யலை” என்ற பார்த்திபனின் குரலில் இருவரும் ஒரு சேர அசடு வழிந்தனர்.
“ச்சூ… போங்கடா. போய் என் ஆளை கூட்டிட்டு வாங்க. எவ்வளவு நேரம் தனியா உட்கார்ந்திருக்கிறது” என்று அவர்களை விரட்டினான்.
“மாப்பிள்ளைக்கு ரொம்பத்தான் அவசரம்” என்ற தாத்தாவின் கேலியில் பல சிரிப்பொலிகள் எழுந்து அடங்கின.
“கண்ணா இப்டியெல்லாம் நீ பேசக்கூடாதுடா” என்று தேவராஜன் பார்த்திபனின் காதில் முணுமுணுக்க,
“நமக்கானதை நாம் தான் கேட்டு வாங்கணும் டாட்” என்று கண்ணடித்து அவரை வாய்மூடச் செய்தான்.
கயலின் அறைக்குள் சிவாவும், முகியும் நுழைய…
தன் அக்காவை பார்த்தது பார்த்த மாதிரி முகி நின்றுவிட்டான். சிவாவுக்கும் அதே நிலை தான்.
எப்போதும் சேற்று வயலில் தூக்கி சொருகிய பாவடையுடனும், கொண்டையிட்ட கேசம்… வெயிலில் மங்கிய முகத்தோடும் பார்த்திருந்த சகோதரியை முழு அலங்காரத்தில் பார்த்ததும் இருவருக்குமே கண்கள் மெல்ல பனித்தன.
சிவா தன்னை நொடியில் மீட்டுக்கொண்டு கயலின் அருகில் சென்று அவளின் உச்சந்தலையில் கை வைத்து, கண்களில் பாசம் பொங்கிட அவளின் தலையை மெல்ல அசைத்தான்.
“சிவாண்ணா” என்ற கயலும் நெகிழ்ந்து போயிருந்தாள்.
“உன் நல்ல மனசுக்கு நீயெப்பவும் நல்லாயிருப்படா” என்ற சிவா அந்நொடி கனத்தை தாங்காது வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
சிவா உள்ளே வந்தது முதல் சக்தியின் பார்வை அவனிடம் தான்.
எப்போதும் உணர்வுகளற்று வெறுமையான சிவாவை பார்த்துதான் அவளுக்கு பழக்கம்… ஆனால் இன்று,
‘நம்ம ஆளுக்கும் செண்ட்டிமெண்ட்டெல்லாம் இருக்கும் போலயே!’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாள்.
சிவாவை நெருங்கியவள், “கண்ணு தொடைச்சு விடணுமா?” எனக் கேட்க,
“போடி” என்று முணுமுணுத்து விட்டு அவளிடமிருந்து சற்று தள்ளி நின்றான்.
“என்ன மாமா அங்கயே நின்னுட்டீங்க… அண்ணி செமயா இருக்காங்கள்ல” என்ற மலரின் கேள்வியில் தான் தன்னிலை பெற்று முகி கயலின் பக்கம் வந்தான்.
கயலை அக்கோலத்தில் கண்டவன் வெகுவாக உடைந்து போயிருந்தான்.
“அப்பா ஆசைப்பட்டது நடக்குது. ஆனால் அப்பா இல்லையே கயல்” என்றவன் கயலை அணைத்துக்கொண்டான்.
“அதான் நீயிருக்கியேடா… எனக்கு எல்லாம் செய்ய நீபோதாதா” என்று முகியை தேற்றிய கயலுக்கும் தாய் தந்தை இல்லாதது வலி தான். இருந்தபோதும் முகியிடம் அதனைக்காட்டிக்கொள்ள அவள் தயாரில்லை.
சிறுப்பிள்ளையென முகியும் கண்ணீர் சிந்தியபடி… கயலை விடுவேனா என நின்றிருந்தான்.
“ஒன்னுமில்லை முகி” என்றவள், “சிவாண்ணா இவனை கூட்டிப்போங்க” என்றாள்.
சிவா வந்து தோள் தொட்ட பிறகே கயலிடமிருந்து விலகினான் முகி.
“அழகா இருக்க கயல்” என்று தமக்கையின் நெற்றியில் முத்தம் வைத்தவன், “நீயெப்பவும் சந்தோஷமா இருக்கனும் கயல்” என்றான்.
“சரி சரி ரொம்ப செண்ட்டி சீனா மாத்தாதீங்க… வாங்க ஒரு செல்ஃபி எடுத்துப்போம்” என்று மலர் அழைக்க ஐவரும் புன்னகை முகமாக சுயமி எடுத்துக்கொண்டனர்.
அறையிலிருந்து செல்லும்போது “பத்து நிமிடங்கள் சென்று அழைத்து வாங்க” என்றுவிட்டு போனான் முகி.
“அத்தான் சீக்கிரம் அழைத்து வர சொன்னாருடா” என்ற சிவத்திடம், “அவரை கொஞ்சம் தவிக்க வைக்கலாம் அண்ணா” என்று சிரித்தான் முகி.
சிவா பார்த்திபனை மாப்ள என விளித்தாலும், பிறரிடம் அடையாளப்படுத்தும்போது அத்தான் என்று சொல்ல இந்த இடைப்பட்ட நாட்களில் பழகியிருந்தான்.
கூடத்திற்கு வந்த இருவரும் பார்த்திபனுக்கு பின்னால் சென்று நின்றனர்.
“எங்கடா கயல்?” பார்த்திபன் தன் முகம் மாறாது… பற்களுக்கிடையில் கேட்டான்.
“இன்னும் கால் மணிநேரம் ஆகுமாம் அத்தான்.”
“எதே…!” பார்த்திபன் அதிர்ந்தேவிட்டான்.
“டேய் காலையிலிருந்து அவளை கண்ணுல காட்டாம படுத்துறீங்கடா!” என்று சலிப்பாகக் கூறினான்.
“அப்போ இதை பாருங்க” என்று சில கணங்களுக்கு முன்னால் எடுத்த புகைப்படத்தை முகி பார்த்திபனின் முன் காட்டிட…
“கயல் செம அழகுல டா மச்சான்ஸ்” என்று கண்கள் மின்ன ரசனையாகக் கூறினான் பார்த்திபன்.
“அச்சோ அத்தான் பப்ளிக் பப்ளிக்” என்ற சிவா… “அந்த போனை முதலில் உள்ள வைடா” என்று முகியை அதட்டினான்.
“டேய் விளையாடம சீக்கிரம் கூட்டி வாங்கடா.” கிட்டத்தட்ட பார்த்திபன் அவன்களிடம் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான்.
“முகி போதும் விளையாட்டு கயலை அழைத்துவர சொல்லு. நேரமாகுது.” மங்கை சத்தமிட்ட பின்னரே முகி மலருக்கு மிஸ்ட்டு கால் கொடுக்க… கயலை அழைத்து வந்து பார்த்தியின் அருகில் அமர வைத்தனர்.
“சோ… க்யூட் டி பொண்டாட்டி…” தனக்கு மிக நெருக்கத்தில் அமர்ந்திருந்த கயலின் பாதம் அவனின் பாதத்தை தொட்டும் தொடாமலும் இருக்க… தன்னுடைய கால் பெருவிரலால் அவளின் பாதத்தில் உரசியபடி அவன் சொல்ல… செங்காந்தளாய் நங்கையவளின் முகம் சிவந்து ஒளிர்ந்தது.
கயலின் நாணத்தை கண்ட சிவா முகியிடம்…
“அத்தான் ஏதோ குறும்பு வேலை செய்றார்” என்க… “ஐ லவ் யூ சொல்லியிருப்பார்” என்று சக்தி பதில் கொடுத்ததோடு, “நீங்க எப்போ சொல்லுவீங்க?” எனக் கேட்டிருந்தாள்.
“நீதான் எனக்கு பொண்டாட்டி ஆகப்போறன்னு ஊருக்கே தெரியும். இதுல நான் அதை சொன்னாதான் என்ன கட்டிக்குவியா என்ன?” எனக்கேட்டு சக்தியின் வாயை மூடச்செய்தான் சிவா.
தேவராஜனும் மங்கையும் கயலின் பக்கமும், மாணிக்கமும் சரளாவும் பார்த்திபனின் பக்கமும் அமர்ந்து தட்டு மாற்றிக்கொள்ள…
நிச்சயப் பத்திரிக்கை வாசித்து…
மாப்பிள்ளைக்கு முகியை மாலை அணிவிக்க சொல்ல… அவனோ சிவாவின் கைகளில் மாலையை கொடுத்து போடச் சொன்னான்.
அதில் சிவா முற்றிலும் உடைந்து நெக்குறுகிப் போனான்.
நீயென் உறவு என்பது வார்த்தையால் சொல்வது மட்டுமல்ல… உறவின் ஆழம் நம்மின் சிறு சிறு செயல்களில் தான் அடங்கியுள்ளது.
சிவா மாலை அணிவித்து… சந்தனம் குங்குமம் வைத்து நகர, தேவராஜன் கயலுக்கு அதேபோல் செய்தார்.
அடுத்தடுத்து உறவினர்கள் அதனை செய்து முடிக்க…
அறுவடை முடிந்த இரண்டாம் நாள் திருமணம் என முடிவு செய்யப்பட்டு நிச்சய விழா இனிதே நிறைவுற்றது.
“மலர் கயலை கூப்பிட்டு போம்மா.” மங்கை சொல்ல…
“காஸ்டியூம் சேன்ஞ் பண்ணிடாத கயல்” என்று அவளின் காதில் கிசுகிசுத்து அனுப்பி வைத்தான் பார்த்திபன்.
அதன் பின்னர் ஒரு மணி நேரத்தில் வீடே உறவினர்கள் சென்று அமைதியாகக் காட்சியளித்தது.
உடல் அசதியில் வீட்டு உறுப்பினர்கள் அறைக்குள் முடங்கிட… நேரம் பார்த்திருந்த பார்த்திபன் மெல்ல கயலின் அறைக்குள் நுழைந்தான்.
வந்தவன் கதவினை உட்புறமாகத் தாழிட்டு மெத்தையில் அமர்ந்திருந்த கயலின் அருகில் அமர்ந்து அவளைத் தூக்கி தன் மடியில் இருத்திக்கொண்டான்.
“அச்சோ அத்தான்” என்று பதறியவளாள் அவனின் பிடியிலிருந்து அசையக்கூட முடியவில்லை.
“என்ன அத்தான் இது” என்று தாங்கள் இருக்கும் நிலையை சுட்டிக்காட்டியவள், “யாராவது வரப்போறங்க” என்றாள்.
கயலின் தோளில் தன் தாடை பதித்தவன்…
அவளை வயிற்றோடு கையிட்டு கட்டிக்கொண்டான்.
“யார் வந்தா எனக்கென்ன? இப்போ எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு” என்றவன் பட்டென்று அவளின் கன்னத்தில் இதழ் பதித்திருந்தான்.
“கயல்…”
அவனின் முத்தத்தில் கிறங்கியிருந்தவளுக்கு அவனின் அழைப்பு எங்கோ தொலை தூரத்தில் ஒலித்தது.
“ம்…”
தனக்குள் அடங்கி தன் நெருக்கத்தில் காதல் கட்டவிழ மெய் மறந்து இருப்பவளின் தோற்றம் அவனை கொள்ளை கொள்ள… தன்னோடு சேர்த்து அக்காட்சியை தன்னுடைய அலைபேசியில் சேமித்துக்கொண்டான்.
“எப்போ சொல்லுவ?” காதல் எனும் மூன்று வார்த்தை வரியை இதுவரை அவன் தான் அவளிடம் சொல்லியிருக்கிறான். அவள் சொல்லி கேட்டிட அவனுக்கு விருப்பம்.
“சொல்லனுமா?”
“சொன்னா நான் கொஞ்சம் ஹாப்பி ஆவேன்.”
“முடியாது” என்றவள் அவனின் நெஞ்சத்தில் முகம் புதைத்தாள்.