பார்த்திபனின் கயல்விழியாள் 59

அத்தியாயம் 🌾 59 :

நாட்கள் தெளிந்த நதி போல்… எவ்வித சலனமுமின்றி ஒரே சீராக சென்று கொண்டிருந்தது.

இடையில் திருமண வேலைகளும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

கயலின் திருமணம் என்பதே குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமானதாக இருக்க… அத்தோடு மாப்பிள்ளை தங்களின் அனைவருக்கும் மிக பிடித்த பார்த்திபன் என்பதில் இன்னும் அதீத சந்தோஷம். அதனால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மிக நேர்த்தியாக செய்து கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு நடுவில் ரத்தினமும் தன் பங்குக்கு செய்தே தீருவேனென்று அனைத்தையும் முன்னின்று கவனித்தபடி இருந்தார்.

இரண்டு மாத காலம் தான் அதற்குள் எவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திட முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

நிறைய திட்டங்கள்… ஒவ்வொன்றும் நல்ல முறையில் அரங்கேறிக் கொண்டிருந்தது.

மற்றவர்கள் அனைவரும் கல்யாண வேலையை இழுத்துப்போட்டு செய்ய… பார்த்திபனும், கயலும் வயலில் தங்களின் நேரத்தை நுழைத்துக் கொண்டனர்.

பயிர் வைத்து இரண்டு மாதம் முடியும் நெருக்கத்தில் இருந்தது. நெற்செடி நன்கு வளர்ந்து தமதமவென நின்றது. காற்றோடு அசைந்து வரப்போடு உரசும் காட்சி கவிதையாய்.

வயல் பச்சை பசுமையாய் பார்ப்பதற்கே கண்ணிற்கும் மனதிற்கும் அத்தனை குளிர்ச்சியாய்.

ஒரு விவசாயிக்கு அழகான விடயமென்றால் அது இந்த பசுமை தான். தான் பெற்ற பிள்ளையை பேணி காப்பது போல் விவசாயிக்கு தான் வைத்த ஒவ்வொரு செடியின் நலனும் முக்கியம்.

இதோடு இரண்டு முறை களை எடுத்து… மூன்று முறை இயற்கை உரமிட்டு… எவ்வித குறையுமின்றி நன்றாகவே உள்ளது பயிர்கள்.

இனி பூ வைக்கும் நேரம்.

காய வைத்து பதப்படுத்தி வைத்திருந்த வேப்பங்கொட்டைகளை உரலில் இட்டு உலக்கை வைத்து இடித்துக் கொண்டிருந்தாள் கயல்.

இடித்த வேப்பங்கொட்டைகளை உரம் கலக்கப் பயன்படுத்தப்படும் தொட்டியில் போட்டு நீர் ஊற்றிக் கொண்டிருந்தான் சிவா.

அப்போது தான் தன்னுடைய வயலுக்கு நீர் பாய்த்து முடித்து… கயலின் வயலில் நீர் நிரம்பி விட்டதை கண்டு மடையை அடைத்துவிட்டு அவர்களிடம் வந்தான் பார்த்திபன்.

“வெஸ்ட் சைட் வயலுக்கு தண்ணீ திருப்பி விட்டதை மறந்துட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்க கயல்?” எனக்கெட்டுக்கொண்டே வந்தவன்,

“வரப்பை அடைச்சிட்டேன்” என்றபடி இடித்து வைத்திருந்ததை பார்த்து என்னவென்று வினவினான்.

“வேப்பங்கொட்டை…” சிவா சொல்ல இது எதற்கு என்பதைப்போல் பார்த்தான்.

“இனி பூ வைச்சு கருது வரும். இப்போ நெல்லோட இலையில் பாக்டீரியா ஊடுருவி இலை கருகல் நோயினை உண்டாக்கும். இது கருது வரவிடாம செடியையே கருக வைத்திடும்” என்று சிவா பதில் சொல்ல…

“அதுக்குத்தான் ஐந்து சதவீதம் இந்த ஊறப்போட்ட வேப்பங்கொட்டைச் சாறை பத்து நாளுக்கு ஒரு முறை தெளிச்சால் இந்த நோய் வராமல் தடுக்க முடியும்” என கயல் விளக்கம் கொடுத்தாள்.

“ஷ்ஷ்… ப்பா… விவசாயம் சாதாரணம் இல்லைன்னு இப்போதான் தெரியுது.

நம்ம பிளேட்டில் உணவு வருவதற்கு முன்னர், எத்தனை இருக்கு” என்று மலைத்தவனுக்கு விவசாயம் நினைத்து பார்க்க முடியாத ஆச்சரியமாக இருந்தது. இப்போது அவனுக்கும் விவசாயம் செய்ய பிடித்திருந்தது.

“விவசாயமென்றால் சும்மாவா… ஒரு பெண் கருவுற்று பிள்ளை பெறுவதற்கு சமம்” என்ற கயலிடம்

“எனக்கும் இதனுடைய செய்முறை சொல்லிக்கொடு கயல்” என்றதோடு, “உன்கிட்டவே விவசாயம் கத்துக்கிட்டு உன்னையே வின் பண்ணப்போறேன்” என சிரித்தான் பார்த்திபன்.

“அதான் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒன்னுக்குள்ள ஒன்னாகப்போறீங்களே அப்புறம் என்னத்துக்கு இந்த சவால் போட்டி” என்று சிவா கேட்டான்.

“அது வேற இது வேற சிவாண்ணா… அவங்க ஜெயித்து தான் ஆகனும். என்னைவிட ஒரு மூட்டை நெல்லு அவரு அதிகமா விளைவித்து காட்டணும்” என்று பார்த்திபனை பார்த்துக்கொண்டே, தொட்டியில்  இடித்த வேம்பு விதைகளை தண்ணீரில் கலக்கியபடி கூறினாள்.

பார்த்திபனிடம் மௌனமான புன்னகை.

அன்று அவனை இங்கிருந்து ஓடவிட வேண்டுமென்று நினைத்தவளே இன்று அவன் இதில் வெற்றிபெற வேண்டுமென எண்ணம் கொண்டாள்.

“நாங்க போட்டியை க்விட் பண்றன்னு சொல்லவே இல்லையே” என்ற பார்த்திபன், “எனக்கு எதிலும் ஜெயித்து தான் பழக்கம்” என்றான்.

இருவருக்கும் இடையில் வந்த சிவா…

“போதும் திரும்ப வாதம் பண்றன்னு எதையும் இழுத்துக்காதீங்க” என்று சொல்லி… “டவுனுக்கு போகனும் சொன்னீங்களே வாங்க போவோம்” என பார்த்திபனை கையோடு இழுத்துச்  சென்றான்.

சில நிமிடங்களில் காலடி ஓசைக்கேட்டு… செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி கயல் திரும்பி பார்த்திட மருது அவளையே விழுங்கும் பார்வை பார்த்தபடி வந்து கொண்டிருந்தான்.

மருதுவை கண்டதும் கயலின் கைகள் தன்னைப்போல் தன் தாவணியை சரி செய்து… முனையை இறுக்கி இடை சொருகினாள்.

அன்றைய நாள் நிகழ்வு உடலில் ஒரு படபடப்பை கொடுத்த போதும்… அதனை மறைத்தவளாக, மருதுவை பற்றி பார்த்திபனிடம் சொல்லிய போது அவன் கூறியதை நினைவு கூர்ந்தாள்.

“எதிர்த்து நிற்பது சிங்கமா இருந்தாலும், உன் பலத்தை காட்டாது பின்வாங்கக் கூடாது கயல். ஒரு பெண்ணை இங்கு வீழ்த்துவது மருதுவை போன்றோருக்கு மிக எளிது. அவர்களின் ஆயுதமே பெண்ணின் நடத்தையும் அவளின் மானமும் தான். அப்படி உன்னை அவை இரண்டும் நிலைகொள்ளச் செய்யும் எனில் நொடியில் அதை ஒதுக்கிடு. உன்னைப்பற்றி உனக்கு மட்டும் தெரிந்தால் போதும். நல்லது நடந்தாலும் ஏற்க முடியாது பலதும் பேசும் சமூகத்தின் பேச்சு நமக்கு முக்கியமில்லை.”

இப்போதும் தன் முன் நின்று பார்த்திபனே சொல்வதைப்போல் உணர்ந்தவள்… நொடியில் திடம் பெற்று நிமிர்ந்து நின்றாள்.

அவளின் பார்வை குத்தீட்டியாய் மருதுவை குத்தி கிழித்தது.

கயலுக்கு திருமணம் என்றதுமே மருது தன் தந்தையிடம் மீண்டும் ஆரம்பித்துவிட்டான். பார்த்திபனின் உயரம் கண்டு பயந்தவர் மீண்டும் மருதுவால் பிரச்சனை வந்துவிடுமோ… அதோடு, பார்த்திபன் வேறு எதிராளியை சும்மா விடுபவனல்ல என்று அவனுக்கு அஞ்சியே மருதுவிடம் ஒத்துவராது என சொல்லி அவனை மீண்டும் ஊருக்கு அனுப்பி வைத்தார். கயலின் திருமணம் முடிந்த பின்னர் வரவழைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் அவனோ அவருக்குத் தெரியாமல் ஊருக்குள் வந்ததும் நேராக கயலைத் தேடி வந்துவிட்டான்.

“என்னடி பார்வையெல்லாம் ஒரு தினுசா இருக்கு?”

கயலை நெருங்கி நின்றான். தன்னைப்போல் கயல் இரண்டடி பின் நகர்ந்தாள்.

“உனக்காக நான் பல வருசமா தேவுடு காத்திட்டு இருக்கேன். நீயென்னடான்னா செவந்த தோலுள்ள ஒருவன் வந்ததும் அவனைக் கட்டிக்கிடுவியா… காத்திருந்த நான்?” எனக் கேட்டவன், “உனக்கு தாலின்னு ஒன்னு ஏறுனா அது என் கையால் தான்” என்றவாறு சட்டை பையிலிருந்து தாலியை எடுத்து கயலின் முகத்திற்கு நேரே பிடித்து ஆட்டினான்.

ஒரு கணம் அரண்டாலும்,

“இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என்று சொல்லிய கயல் பின்னால் சென்று கொண்டேயிருக்க… மருது அவளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தான்.

“பயமில்லன்னா நிக்க வேண்டியது தான… எதுக்கு பின்னாலே போற?” என்றவன் வெடித்து சிரித்தான்.

“அவன் என்னை பண்ணது இன்னும் வலிக்குதுடி…” என்றவன் தன் நகக்கண்களை பார்த்தபடி “எனக்கு வலியை கொடுத்தவனுக்கு மனசால வலி கொடுக்கப்போறேன். நீயில்லைங்குறது அவனுக்கு எப்பேர்ப்பட்ட வலி தெரியுமா? அவன் அந்தளவுக்கு உன்னை நேசிக்கிறான். அதை எனக்கு அவன் கொடுத்த வலியில் தெரிஞ்சிகிட்டேன்” என்று கயலின் கையை எட்டிபிடிக்க முயற்சிக்க… வேகமாக பின்னால் நகர்ந்தவள் கிணற்று சுவர் தடுத்து சாய்ந்து நின்றாள்.

கயலை பார்த்து கோணலாக இதழ் வளைத்தவன்…

“நீயே மாட்டிக்கிட்டியே” என்றபடி இரு கையாலும் தாலி கயிற்றின் இரு முனையை பிடித்து சுழற்றியபடி மெல்ல கயலை நோக்கி அடி வைத்தான்.

“வேண்டாம் சொன்னா கேளு. இது விளையாட்டில்ல” என்றாள் சுற்றி பார்த்தபடி.

அந்நேரத்தில் அங்கு யாருமில்லை.

ரத்தினத்தின் பண்ணை கூட ஆளின்றி வெறிச்சோடி இருந்தது.

கயலின் பார்வையை அவதானித்தவன்,

“யாருமில்லை அதெல்லாம் பக்காவா நோட்டமிட்டு தான் வந்தேன்” என்றவன், “இப்போ நான் விளையாட வரல… நாம விளையாடுற விளையாட்டு இதை உன்  கழுத்தில் கட்டிய பிறகு தான்” என்று தாலியை கண் காட்டினான்.

“ச்சீய்… அவனின் வார்த்தையில் அறுவருத்தவள் முகம் சுளித்தாள்.

கயலை நெருங்கிவிட்டவன் அவளின் கழுத்து அருகே தாலியை கொண்டு சென்று பின்னால் கயிறு சுற்றி கையை கொண்டு போக…

தன்னிடமிருந்த மொத்த பலத்தையும் திரட்டியும் அவனின் மார்பில் கை வைத்து வேகமாகத் தள்ளினாள்.

அவள் அப்படி செய்வாள் என்று எதிர்பாராதவன்… தன் நிலை தடுமாறி பின்னால் விழ… அவனின் பின்னந்தலை அங்கிருந்த தரையில் கிடந்த பெரிய கல்லில் வேகமாக அடிக்க, முதுகும் தரையில் பலமாக தாக்கப்பட கீழே விழுந்தான்

கல்லின் முனை கூராக இருந்திட… சடுதியில் அவனின் தலைக்கு பின்னால் தரை ரத்தத்தில் நனைந்தது.

மருதுவை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட முயன்ற கயல் அவன் பின்னால் வருகிறானா என்று தெரிந்துகொள்ள, திரும்பிப் பார்த்திட அவனின் நிலை கண்டு அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அப்படி நின்றது இமைக்கும் நேரம் தான். சடுதியில் தன்னை மீட்டு மருதுவின் அருகில் வந்தவள்…

அவனின் தலையை தொட்டு,

வலியில் சுருங்கி துவண்ட மருதுவின் முகத்தை பார்த்து தன் செயலில் வருந்தியவள், அவனைத் தூக்கிட முயற்சித்தாள்.

பலனில்லை. அவளால் சிறிதும் திடம்கொண்ட அவனின் தேகத்தை அசைத்திட முடியவில்லை.

அதிகமாக ரத்தம் போய் கொண்டேயிருக்க. கயல் மிகவும் பயந்து போனாள்.

அதிக ரத்தப்போக்கு மருதுவை சுயமிழக்கச் செய்ய… கண்கள் சொருகிட இருந்தவனிடம்,

“கண்… கண்ணை மூடாதீங்க. ப்ளீஸ்… ப்ளீஸ்… மயக்கமாகிடாதீங்க” என்று கத்தி பேச்சுக்கொடுத்தாள்.

என்ன செய்ய என்று குழம்பியவள்,

இடையில் சொருகியிருந்த தன்னுடைய அலைபேசியை எடுத்து, பார்த்திபனுக்கு அழைக்க நினைத்தவள்,

‘அத்தான் டவுனுக்கு இந்நேரம் சென்றிருப்பார். அங்கிருந்து வருவதற்குள் இவன் உயிர் போனாலும் போயிடும்’ என்று எண்ணி, தேவராஜனுக்கு அழைத்து மங்கையிடம் சொல்லாது மாணிக்கத்தையும் அழைத்துக்கொண்டு விரைந்து வருமாறு கூறி வைத்தாள்.

அங்கிருந்த துண்டு ஒன்றை எடுத்து அவனின் தலையில் இறுக்கிக் கட்டினாள். ரத்தம் வெளியேறாது இருப்பதற்கு.

தன்னால் அவளுக்கு ஆபத்து என்று தெரிந்தும்… முன்னர் அவளுக்கு தான் செய்த செயலிற்காக தான் இறந்து போகட்டுமென்று சிறிதும் எண்ணாமல் தனக்காக படபடத்து, ரத்தம் கசியாமல் இருக்க கையினால் அழுத்தம் கொடுத்து, மயங்காதிருக்க தன் முகம் பார்த்து ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் கயலை பார்த்தபடியே கண்கள் சொருக மூடியவன் மயக்கத்தில் விழுந்தான்.

சரியாக அந்நேரம் விரைந்து வந்த தேவராஜனும் மாணிக்கமும், மருது இருந்த நிலையை பார்த்து பதறி என்னவென்று கேட்டிட,

“மாமா இப்போ சொல்ல நேரமில்லை. முதலில் இவனை ஹாஸ்பிட்டல் கொண்டு போகனும்” என்ற கயலின் பேச்சு சரியெனப்பட இருவரும் விரைந்து செயல்பட்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் டவுனிலிருக்கும் மருத்துவமனையில் மருது சேர்க்கப்பட்டு சிகிச்சை துவங்கியிருந்தது.

தேவராஜனும் மாணிக்கமும் எவ்வளவோ சொல்லியும் கயல் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டாள்.

“அவன் இப்படியிருக்க காரணமே நான் தான் மாமா” என்றவளை அதட்டிய தேவராஜன், “இனியொருமுறை இப்படி சத்தமா சொல்லி வைக்காதே” என்றவர் பார்த்திபனுக்கு அழைத்து சொல்லிவிட்டார்.

பார்த்திபனும் சிவாவும் ஏற்கனவே அங்குதான் இருப்பதால் பத்து நிமிடத்தில் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர்.

நடந்ததை அறிந்த பார்த்திபன்…

“அவன் சாகட்டும் விடவேண்டியது தான” என்று கயலிடம் வெடித்தான்.

“அத்தான் கொஞ்சம் அமைதியா இருங்க… என்னயிருந்தாலும் அவன் இப்படியிருக்க…” என்று பாதியிலேயே நிறுத்தியவள், தேவராஜனை பார்த்து வார்த்தையை விழுங்கினாள்.

“அதுக்கு, அவனுக்கு நீ உதவி செய்வியா. அவனுக்கு மட்டும் இப்படி ஆகாம இருந்திருந்தா இந்நேரம் அவன் கையில் உன் நிலை என்ன?” என்ற பார்த்திபனுக்கு மருது செய்யவிருந்த செயலின் வீரியம் அதீத கோபத்தை கொடுத்தது.

“அத்தான் சொல்றதும் சரிதானே கயல்” என்ற சிவா, “அவன் அப்பனுக்கு தகவல் சொல்லிட்டு நாம கிளம்புவோம்” என்றான்.

அதன்படி மருதுவின் தந்தைக்கு தகவல் கொடுத்து… அவர் மருத்துவமனை வந்ததும், “கீழே விழுந்ததால இப்படியாகிவிட்டது” என்று மட்டும் சொல்லி அங்கிருந்து கிளம்ப,

“அவனுக்கு என்னன்னு தெரியாம நான் வரமாட்டேன்” என்று அடமாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

பார்த்திபன் சிவாவிடம் கண் காட்டிட, சிவா தேவராஜனையும் மாணிக்கத்தையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான்.

அவர்கள் சென்றதும் கயலின் அருகிலிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்த பார்த்திபன்…

“ரொம்ப பன்ற கயல்” என்றான்.

அவனின் கோபம் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.

பார்த்திபனின் கையை தன்னுடைய கைக்குள் பொத்தி வைத்து அவனின் கோபம் குறைக்க முயன்றவள்,

“எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு உயிர்ன்னு பாருங்க அத்தான். என்னாலதான், நான் தள்ளிவிட்டதாலதான். அவனுக்கு எதாவது ஆனால் எனக்கு எவ்வளவு குற்றவுணர்வை அது கொடுக்கும். அத்தோட உங்க முன்னால ஒரு உயிர் துடிக்கும் போது சாகட்டும் கடந்து போயிருப்பிங்களா?” எனக் கேட்டாள்.

“அவனுக்கு இப்படி ஆகாம இருந்திருந்தால். அவன் நினைத்து அங்கு வந்தது நடந்திருக்கும். அதன் பிறகு மட்டும் நீ நிம்மதியா இருந்திருப்பியா? எனக்கு அது மட்டும் தான் நினைக்கத் தோணுது” என்று படபடத்தான்.

“அத்தான்…”

“எப்பவும் ஒன் சைட் மட்டும் தின்க் பண்ணாத கயல்” என்றவன் எங்கே கோபத்தில் அவளிடம் ஏதேனும் பேசிவிடுவோமோ என இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

கயல் பார்த்திபனின் கைகளை விடாமல் பிடித்தபடியே இருந்தாள்.

சில மணி நேரத்திற்கு பிறகு மருத்துவ அறையிலிருந்து வெளியில் வந்த மருத்துவர்,

“கல் குத்தியதில் காயம் ஏற்பட்டிருக்கு, காயம் ரொம்ப ஆழமில்லை. ஆனால் ரத்தம் அதிகம் வெளியேறியதால் மயக்கம் போட்டுட்டார். காயத்திற்கு தையலிட்டு மருந்து போட்டிருக்கு. அத்தோடு முதுகுத்தண்டிலும் நல்ல அடி… கொஞ்சநாள் அங்கு வலியிருக்கும். சரியாகிடும். நல்ல வேலை வேறெதுவும் பெரியதாக இல்லை” என்று சொல்லிச்செல்ல அப்போதுதான் கயலுக்கு மூச்சு சீரானது.

“போதுமா… கேட்டாச்சா… அவனுக்கு ஒன்னுமில்லையாம். கிளம்புவோம்” என்ற பார்த்திபன் கயலையும் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.

“பார்த்துக்கோங்க” என்று திரும்பி மருதுவின் தந்தையிடம் சொல்லி பார்த்திபனின் முகம் பார்த்தாள். அவனின் இழுப்புக்கு உட்பட்டு.

“இப்போ நீங்க தான் ரொம்ப பன்றீங்க அத்தான்” என்றவளின் முகம் இப்போதுதான் தெளிந்திருந்தது.

“போடி” என்றவன் கயலை இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர வைத்து வண்டியை இயக்கினான்.

மருது கண் விழித்ததும், பார்த்திபனுக்கும் கயலுக்கிமிடையே நடந்த பேச்சு வார்த்தையை அவனின் தந்தை சொல்லிட… ஏற்கனவே கயலின் உதவியால் மனம் வெட்கி வெதும்பியவன் இப்போது முற்றும் முழுதாக தன் செயல்களை நினைத்து வருந்தினான்.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து உடல் தேறிய பின்னர் கயலின் வீட்டிற்கே சென்று தன்னுடைய செயல்களுக்கு மன்னிப்பு வேண்டினான்.

கயல் எதுவும் சொல்லாது சிறு புன்னகையில் அவனை கடந்து விட்டால்.

அன்புக்கும் புன்னகைக்கும் இருக்கும் சக்தி மிகுந்த பலம் வாய்ந்தது. எத்தகைய சூழலையும் இவை இரண்டும் மாற்றி அமைத்திடும். அந்த வகை தான் இப்போது மருதுவிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றமும்.

இந்த மன்னிப்பால் கயல் தான் பார்த்திபனிடம் அதிகம் பட்டுவிட்டாள். அவனை சரி செய்து மலை இறக்குவதற்குள் கயல் தான் படாதபாடு பட வேண்டியதிருந்தது.

திருமண நாள் நெருங்க… அறுவடை நாள் முன்னுக்க வந்து நின்றது.

“இனி வயலுக்கு நீர் பாய்ச்சிட வேண்டாம் அத்தான். நிலம் காயனும். அப்போதான் வண்டி இறங்கி அறுத்திட சரியா இருக்கும். இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு” என்றாள் கயல்.

அறுவடை நாள்…

அன்று காலையிலிருந்தே பார்த்திபன் மிகுந்த பதட்டத்துடன் இருந்தான். விடிவதற்கு முன்பே வயலுக்கு வந்துவிட்டான்.

விடிந்தும் விடியாத அவ்விருளிலும், மஞ்சள் வர்ணத்தில் தங்கத்தை கொட்டி வைத்தது போல் காணப்பட்ட நெல்மணிகள் அடங்கிய கருதுகள் அவனை வாரி அணைக்கச் செய்தன.

வரப்பில் குத்திட்டு அமர்ந்து தன்னிரு கைகளையும் அகல விரித்து கைக்குள் அடங்கும் அளவிற்கு நெல் கதிர்களை மார்போடு அணைத்துக்கொண்ட பார்த்திபனின் கண்களில் இரு சொட்டு உப்புநீர் கசிந்தன.

எதற்கும் அசைந்திடாத அவனின் மனம்… பூமிக்கும் மனிதனுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான பந்தத்தில் அசைந்தது.

error: Content is protected !!
Scroll to Top