பார்த்திபனின் கயல்விழியாள் 60

அத்தியாயம் 🌾 60 :

 

ஊரே கயலின் பண்ணையில் இருக்கும் களத்தில் திரண்டிருந்தது.

அன்று தான் அறுவடை. கயல் மற்றும் பார்த்திபனின் உழைப்பின் பலனை தெரிந்து கொள்வதற்காகக் கூடியுள்ளனர்.

அத்தோடு வெற்றி யாரின் பக்கம் என்பதை அறிவதற்கே ஆர்வமாக வந்திருந்தனர்.

அதிகாலையே வயலுக்கு வந்திட்ட பார்த்திபன்… அங்கு செழித்து தலை சரித்து தரையோடு காற்றில் அசைந்து காதல் செய்து கொண்டிருந்த பொன்னிற கதிர்களைக் கண்டு மொத்த உணர்வு குவியலாகிப்போனான்.

அன்று எவ்வித சலனமுமின்றி சர்வ சாதாரணமாக தன்னுடைய ஈகோவிற்காக பல ஏக்கர் வயல்வெளியை தீக்கு இறையாக்கியவனின் மனம் இன்று அதன் மதிப்பை முழுமையாக உணர்ந்தது. தான் செய்தது மாபாதகமான செயலென்று இன்று குற்றவுணர்வுக்கு ஆளாகினான்.

எத்தகைய விருப்பமுள்ள வேலையாக இருந்தாலும் கூட… மூளை மட்டுமே அங்கு செயல்படும்.

ஆனால், விவசாயத்தில்…

மனிதனின் மனதோடு சேர்ந்து உணர்வுகளும் வேலை செய்திடும். பூமி என்பது வெறும் மண் மட்டுமல்ல… தன்னை தோண்டுபவருக்கும் பலன் மட்டுமே கொடுக்கக்கூடிய… வார்த்தையில் நிறைக்கப்படாத ஒன்று.

விவசாயம் இங்கு தொழிலாக பார்க்கப்படும் வரை அதனின் மகத்துவத்தை எவரும் அறிந்திடப்போவதில்லை.

அன்று செடி நடுவதெல்லாம் ஒரு வேலையா என்று கேட்டுவிட்ட பார்த்திபன்… இன்று செடியில் ஒரு இலையை பறிப்பதற்கு அதற்கும் வலிக்குமே என்று யோசிப்பான். இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் கயல். அவளில்லை என்றால் அவனுக்கு விவசாயம் என்பது எப்போதும் போல் அறுவருக்கத்தக்க ஒன்றென்றே நினைத்து ஒதுங்கியிருந்திருப்பான்.

பால் முற்றி அரிசியாய் தங்க நிறத் தோல் போர்த்தி மகரந்தமாய் காட்சியளித்த நெல்மணிகளை தொட்டு அரவணைத்து கண்ணுக்கு அருகில் பார்க்கும்போது… இத்தனை நாள் அவன்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நொடியில் மறைந்து ஆனந்தமாக கண்ணில் நீர் திரண்டு கன்னம் உருண்டது.

“மாப்ள…”

பார்த்திபனின் வரவு அறிந்து அங்கு வந்த சிவா அவனின் தோள் தொட…

கண்களை துடைத்தபடி எழுந்து நின்றவன்,

“இதற்கு… இந்த ஒரு நாளுக்காக எத்தனை உழைப்பு…” என சொல்லிய பார்த்திபன் வெகுவாக நெகிழ்ந்திருந்தான்.

“நானும் ஒரு விவசாயின்னு சொல்லுறதுக்கும் நிறைய தகுதி வேணும் இப்போ தெரியுது சிவா” என்ற பார்த்திபன் அதற்கு மேல் முடியாதென்று தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சிவாவை அணைத்திருந்தான்.

வந்த முதல் நாளிருந்த பார்த்திபனுக்கும் இப்போதிருக்கும் பார்த்திபனுக்கும் இடையேயான வித்தியாசம் சிவா உணர்ந்தே இருந்தான்.

பார்த்திபனின் முதுகை தட்டிக்கொடுத்த சிவா…

“இப்படியெல்லாம் செண்ட்டியா பீல் பண்ணி ஈஸியா வின் பண்ணிடலாம் நினைக்காதீங்க. சவால் சவால் தான். மூட்டை கணக்கை எண்ணியே ஆகனும்” என்று சொல்லி அவனை சகஜ நிலைக்குத் திருப்பினான்.

“எனக்கு இதில் தோல்வியே கிடைத்தாலும் சந்தோஷம் தான் சிவா” என்ற பார்த்திபனின் முகம் தெளிந்திருந்தது.

கயலும் வந்து சேர்ந்தாள். அவளுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களும். திருமணத்திற்கென்று முகியும், மலரும் பத்து நாட்களுக்கு முன்பே வந்திருந்தினர்.

ஊர்காரர்களும் ஒருவர் பின் ஒருவராக வர, கயலின் பண்ணை திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது.

அப்போது,

“நானில்லாம முடிவு தெரிஞ்சிடுமா” என்று தன்னுடைய மீசையை நீவிக்கொண்டு ரத்தினமும் வந்தார். உடன் சக்தி.

ஒருநொடி சிவா மற்றும் சக்தியின் பார்வை ஒன்றையொன்று கவ்வி விலகியது.

“ம்க்கும்…” முகியின் செருமளில் தலையை கோதியபடி தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான் சிவம்.

“என்ன கொழுந்தனாரே… நீங்க பண்ணாத லவ்வையா நாங்க பண்ணிட்டோம். நந்தி வேலை பார்க்காம நகர்ந்து நில்லுங்க” என்று சிவாவின் குறுக்கே நின்றிருந்த முகியை கை வைத்து தள்ளிய சக்தி சிவத்திற்கு பக்கத்தில் நின்றுகொண்டாள்.

‘சிவாண்ணா அமைதிக்கு இந்த சரவெடி தான் சரி’ என நினைத்த முகியின் உதட்டில் புன்னகை உறைய… சக்தி அவனைப்பார்த்து கண் சிமிட்டினாள்.

“என்ன கயலு இந்தமுறை வண்டி வைத்து அறுப்பு?” கூட்டத்தில் ஒருவர் கேட்டிட…

“ரெண்டு நாளில் கல்யாணம். கை அறுப்புன்னா மூணு நாலு நாள் வேலையிருக்கும். அதான் வேண்டான்னு வண்டி வைத்து அறுக்க நான்தான் முடிவு பண்ணேன்” என்று பதில் வழங்கினான் முகி.

“நீ சொல்றதும் சரிதான்.” கேள்வி கேட்டவர் கூறினார்.

“வண்டி எப்போ வருதாம்?” சிவத்திடம் கேட்ட கயல் பார்த்திபனுக்கு அருகில் சென்று நின்றாள்.

“கால் பண்ணிட்டேன் கயல், ஐந்து நிமிஷத்தில் வந்திடும்” என்ற சிவத்திடம்,

“ரெண்டு வண்டி தானே சொல்லியிருக்கு” என்றான் முகி.

அதற்கு அமோதிப்பாக சிவா தலையசைத்தான்.

“நெல் அறுத்து வண்டி பின்னால் கொட்டும்போதே மூட்டையாக பிடித்துக்கலாம் கயல். ஆளுங்கதான் நிறைய இருக்காங்களே… எதுக்கு களத்தில் கொட்டிக்கிட்டி அப்புறம் மூட்டை பிடிச்சுக்கிட்டு… நேர விறையம்” என்ற மாணிக்கத்தின் கூற்றிற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

“என்ன அத்தான் தோத்துடுவோம் பயமா இருக்கா?”

பதட்டத்துடன் இருப்பவனின் மனநிலையை மாற்றுவதற்கு வேண்டுமென்றே அவனை சீண்டினாள்.

“தோத்தாலும் உன்கிட்டதானே. சந்தோஷம் தான் கயல்” என்றவன் அவளின் தோள் இடித்தான்.

“ச்சூ…” தள்ளி நின்றவள், “அதான் காலையிலே இங்க வந்திட்டிங்களோ!” எனக்கேட்டு நக்கல் செய்தாள்.

“என்ன வேணாலும் பேசிக்கோ கயல்” என்று தன்னை அவளிடம் ஒப்புவித்தவன், “இந்த வயலை இப்படி பார்க்கவே செமயா இருக்கு” என்று சிலாகித்தான்.

“சீ மை ஹேண்ட்” என்று அவளின் முன்பு இரு கைகளையும் நீட்டியவன்,

“எப்படி கூஸ் பம்ப்ஸ் ஆகுது பாரு” எனக் கட்டினான்.

“விவசாயம், விவசாயி இல்லைன்னா இங்கு ஒன்னுமே இல்லைன்னு புரிஞ்சிக்க த்ரீ மந்த்ஸ் தேவைப்பட்டிருக்கு” என்றான்.

“திரும்ப இந்த வயல், தென்னை மரம், கிணறு, ஓட்டு வீடு, பண்ணை இதையெல்லாம் விட்டுட்டு சிங்கப்பூர் போகனும் நினைத்தாலே முடியுமான்னு தெரியல” என்றான்.

பார்த்திபன் அவ்வாறு சொல்லியதும் அவளுள் அமிழ்ந்திருந்த ஏக்கம், பயம் மீண்டும் வெளிவந்தது.

‘உங்களாலே இதையெல்லாம் விட்டு இருக்க முடியாதுன்னு சொல்லும்போது என்னால எப்படி இருக்க முடியுமுன்னு கொஞ்சம் யோசிங்க அத்தான் ப்ளீஸ். நம்ம கல்யாணப்பேச்சு எடுத்ததிலிருந்து எனக்குள் இந்த பயம் இருக்கு. இந்த பண்ணையில் ஒவ்வொன்றும் என்னுடைய உழைப்பு. இங்கிருக்கும் சிறு புல் கூட என்னுடைய உயிர். இதைவிட்டு என்னால் அங்கு உங்களோட நிம்மதியா இருந்திட முடியுமா? விவசாயமின்றி கயலா?’ பார்த்திபனின் முகம் பார்த்து மானசீகமாகக் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு வெளியே அவனிடம் கேட்டிட முடியாமல் போனது.

‘இதை நினைத்து பயந்து தான் கல்யாணம் வேண்டாம் சொன்னேன்’ என்று தனக்குள் உழன்றிருந்தவளின் முகத்திற்கு நேரே சொடக்கிட்டவன்,

“வண்டி வந்திருச்சு கயல்” என்றான்.

“ஹாங்… ஆங்… அத்தான்.” அவன் சொன்னது விளங்காது திருதிருத்தவளின் முகத்தை வண்டி இருந்த பக்கம் திருப்பிக் காட்டினான்.

“அப்படியென்ன யோசனை கயல். என்கிட்ட எதாவது கேட்கணுமா?”

பார்த்திபனின் விழிகளை ஏறிட்டவள்,

“இங்கிருந்தே நீங்க வேலை பார்க்க முடியாதா அத்தான். இப்போ மாதிரி” எனக் கேட்டிருந்தாள்.

ஒரு நொடி கயலை கூர்ந்து நோக்கியவன்,

“ஹோட்டல்ஸ் ஓகே கயல்… ஹெட் ஆபீஸ் சென்னை மாத்தியாச்சு. பட் சாஃப்ட்வெர் கம்பெனி… அது முடியாதே. ஹோட்டல்ஸ் வளர்ச்சிக்கு நான் காரணமா இருந்தாலும், அது டாட் உடைய உழைப்பு. எனக்கானது என் முயற்சியில் உருவாக்கிய சாஃப்ட்வேர் கம்பெனி தான். அதை நான் தான் பார்த்துக்கணும். இங்கிருந்தா அது முடியாது” என்றவன் சிவத்தின் அழைப்பு ஏற்று அவனருகில் சென்றான்.

அவனது தொழிலைப்பற்றி சொல்லும்போது அவனது முகத்தில் வந்துபோன வெளிச்சம் மேற்கொண்டு அவனிடம் இதைப்பற்றி பேசுவதை தடைசெய்தது.

அவனது கண்களின் மின்னலே எவ்வளவு கனவோடும் ஆசையோடும் அவனது தொழிலை ஆரம்பித்திருப்பான் என்று கயலுக்கு உணர்த்தியது.

‘தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவனது சந்தோஷத்தை துறக்க சொல்லுவது நியாயமில்லை’ என அந்நொடித் தோன்றிட… அதனை ஒதுக்கி வைத்தாள்.

ஒதுக்கி மட்டுமே வைத்தாள். தன்னுடைய உயிர் மூச்சான விவசாயம் இனி தன் கைகளில் இல்லை என்னும் நினைவே அவளின் மனதை வாள் கொண்டு அறுத்தது. தன்னவனுக்காக மட்டுமே அதனை புறம் தள்ளினாள்.

“கயல் வண்டி ஸ்டார்ட் ஆகுது வா!” முகியின் கத்தலுக்கு பின்னரே வயலில் இறங்கி வண்டி பின்னால் சென்றாள்.

வண்டி வயலுக்குள் இறங்குவதற்கு முன்பே, சுற்றி வரப்போராம் இருக்கும் கதிர்களை வண்டி இறங்கிட வாகாக அறுத்து நடுவில் இருக்கும் நெற்கதிர்களோடு போட்டிருந்தனர்.

ஏதோ யோசனையோடே இருந்த கயலை பார்த்திபன் கவனிக்கத் தவறவில்லை.

நெல் அறுக்கும் வண்டியிலேயே பெரிய ட்ரம் ஒன்றிருக்கும். நெல் மணிகள் அதனில் சேகரிக்கப்படும். ட்ரம் நிரம்பிய பின்னர், பின்னாலிருக்கும் குழாயின் வழியாக நெல்லினை மூட்டை பிடித்துக்கொள்ளலாம். அல்லது பெரிய பெரிய புட்டிகளில், வண்டி இயங்கிக்கொண்டிருக்கும்போதே பின்னால் சென்றபடி ட்ரம் நிரம்ப நிரம்ப பிடித்து களம் சேர்க்கவும் செய்வர்.

ஆனால் இங்கு நேரமின்மை காரணமாக நேரடியாக மூட்டைகளிலேயே பிடித்தனர்.

ஒரு ஏக்கர் நெல் அறுத்திட குறைந்தப்பட்சம் நாப்பது நிமிடங்களாவது ஆகும்.

அதேபோல் ஒரு ஏக்கரில் எழுபது மூட்டைகள் நெல் பெறுவதே வளமான விவசாய செழிப்பாகும். ஆனால் இன்றைய செயற்கை உரங்கள் நிறைந்திட்ட காலங்களில் ஐம்பது மூட்டைகள் கிடைப்பதே அரிது. ஆனால் கயல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்திருப்பதால் அறுபதுக்கு மேல் வர வாய்ப்புகள் உள்ளன.

பார்த்திபனின் வயலில் அவனுக்குத் துணையாக சிவம் மற்றும் முகில் மூட்டைகளை பிடித்திட… கயலுக்கு உதவியாக மாணிக்கமும், ரத்தினமும் உதவினர். உறவினர்கள் என்றான பின்பு ரத்தினம் தன்னிலை இறங்கி கயலுக்கு அனைத்தும் செய்தார்.

மூட்டை பிடிக்க பிடிக்க ஆட்கள் கொண்டு களத்தில் இரு பகுதிகளில் பார்த்திபன் கயலென பிரித்து அடுக்கி வைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் நெல் அறுத்து முடிந்து… வயலெங்கும் சிதறிய வைகோல்கள் காட்சியளித்தன.

“வேலை முடிந்த கையோடு யார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ளலாமே” என்று ரத்தினம் சொல்ல…

முகி பார்த்திபனுடையதையும், சிவா கயலுடையதையும் எண்ணத் துவங்கினர்.

“1, 2….. 17….. 21….. 36…. 50…..”

எண்ணிக்கை ஐம்பதில் நிற்க…

“இருபக்கமும் அமோக விளைச்சல் தான் போல” என்று மீசையை நீவிக்கொண்டார் ரத்தினம்.

“51… 58…”

இருபக்கமும் சம நிலையில் எண்ணிக்கைத் தொடர்ந்திட…

“சரியான போட்டி” என்ற பேச்சுக்கள் கூட்டத்தில் ஒலித்தன.

“60… 61, 62, 63… 66.”

“இங்கு அறுபத்தி ஆறு சிவாண்ணா” என்று முகில் மூட்டை கணக்கு முடிந்து முடிவை சொல்லிட…

சிவா ஆச்சரியத்தில் கயலையும் பார்த்திபனையும் மாற்றி மாற்றி பார்த்தான்.

“என்னண்ணா அப்படி பாக்குறிங்க?” என்ற முகியிடம்…

“இங்கும் அறுபத்தி ஆறு தாண்டா” என்றான்.

“ரெண்டு பேர் ஒற்றுமையையும் இதில் காட்டியிருக்கங்க…”

“நம்ம கயல் சொல்லிக்கொடுத்து தானே அந்த தம்பி விவசாயம் பார்த்துச்சு. அதான் கயல் மாதிரி நல்ல விளைச்சலை அந்த தம்பி பார்த்திருக்கு.”

“ஆக மொத்தம் ஜெயிப்பு ரெண்டு பேருக்கும் தான்” என்று பலதரப்பட்ட பேச்சுக்கள் அடங்க கூட்டமும் கலைந்தது.

“எப்படியோ யாரோ ஒருத்தர் ஜெயித்து ஈகோ ஆரம்பிக்காம சுமூகமா போட்டி முடிந்ததே சந்தோஷம்.” தேவராஜன் மங்கையிடம் சொல்லிட,

“நான் கூட இந்த வெற்றியால் யாரோ ஒருத்தருடைய மனம் காயப்பட்டுடுமோ பயந்தேன்” என்று மங்கை நிம்மதி பெருமூச்சு விட்டார்.

பார்த்திபனுக்கும் கயலுக்கும் தனிமை கொடுத்து குடும்பத்தினரும் விலகி வீடு நோக்கிச் சென்றனர்.

கயலுக்கு மிக நெருக்கத்தில் வந்த பார்த்திபன்… அவளின் தோள் மீது கைபோட்டு தன்னுடன் இறுக்கி…

“ஏய் கேடி… இதுக்கு நீதானே காரணம்” எனக் கேட்டான்.

“எதுக்கு?” ஒன்றும் தெரியாததைப்போல் பார்த்தவளின் தலையில் கை வைத்து ஆட்டியவன்… “ஈக்குவலா வந்திருக்கே அதுக்கு” என்றான்.

“நான் ஒன்னும் பண்ணலையே.”

“ஆஹான்…”

“அச்சோ அத்தான் என்ன பார்வை இது. உங்களை…” என்றவள்,

“ஆமாம் நான் தான் மூட்டை அடுக்கியவர்களிடம் வயலிலிருந்து இங்கு கொண்டு வந்து அடுக்கும் போதே ரெண்டு பக்கமும் சமமா அடுக்கச் சொன்னேன்” எனக் கூறினாள்.

“ஏன்?”

“ம்ம்… வெற்றி எப்பவும் தனியா இல்லாம நமக்குன்னு இருக்கனுன்னு தான்” என்றவளை காதலாகப் பார்த்தான்.

அவனின் பார்வை மாற்றம் உணர்ந்தவள் அவனிலிருந்து விலக முயற்சிக்க பலனில்லை.

சட்டென்று எம்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டவள் அவன் அசந்த நேரம் அவனிலிருந்து ஓடிவிட்டாள்.

“இன்னும் ரெண்டு நாள் தான். அதுக்கு அப்புறம் இந்த மாதிரி உன்னால் ஓட முடியாது.”

அவனின் சிரிப்பு கலந்த பேச்சு அவளின் முதுகைத் தீண்டியது.

********

நாளை திருமணம்…

மாலை மண்டபத்திற்கு செல்ல வேண்டும்.

திருமணம் நினைத்து மகிழ்வு இருந்த போதும் கயலால் அதனை ஆழ்ந்து அனுபவிக்க முடியவில்லை.

அந்தச் சூழலில் அவளால் பொருந்தவும் முடியவில்லை.

இனி தன் வாழ்வில் விவசாயம் இல்லை என்பதே அவளின் உயிர்ப்பை தொலைத்திருந்தது.

ஆனால் அவளுக்கு நேரெதிராக ஒவ்வொன்றையும் ரசித்தான் அவன்.

பார்த்திபன் இந்தியன் என்ற போதும்… அவர்களின் சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி ஒன்றும் அறிந்திடாதவன் தன்னுடைய கல்யாணத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிப்பாய் வியப்பாய் பார்த்து மனதில் சேமித்தான்.

ஐந்து நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்த பொன் உருக்கலில் ஆரம்பித்து, பந்தகால் நட்டு நலங்கு தொடங்கியது முதல் ரசித்து அனுபவித்தான்.

காலை கயலுக்கு நலங்கு வைக்கும்போதே அவளை அணு அணுவாக தனக்குள் சேர்ப்பித்தவாறு நடப்பதை அவளுக்கு நேரெதிர் நின்று பார்த்திருந்தான்.

நலங்கு முகத்தோடு அவளின் கன்னம் இழைத்திட தோன்றிய பேராவலை கடினப்பட்டு அடக்கினான்.

அவளையே இமைக்காது பார்த்திருப்பவனுக்கு அவளின் முகத்திலிருக்கும் வருத்தம் தென்படாமலா இருக்கும். கண்டுகொண்டான்.

மாலை மண்டபத்திற்கு சென்றிட கிளம்பி தயாராக கயல் இருக்கும் வேளையில் அவளது அறைக்குள் கதவினை தட்டி உள் நுழைந்தான் பார்த்திபன்.

“அண்ணா இப்போ நீங்க இங்கு வரக்கூடாது” என்று அவன் வந்ததை மலர் மறுக்க…

“இன்னும் ஒரு ராத்திரி தான் அண்ணா, அப்புறம் கயல் மொத்தமா உங்களுக்குத்தான்” என்று சக்தி கேலி செய்தாள்.

சக்தியின் பேச்சுக்கு மலருக்கும் சிரிப்பு வர,

இருவரும் வெளியேறினர்.

பட்டு புடவையில் முழு அலங்காரத்தில் ஜொலித்த கயலின் முகம் தரை கவிழ்ந்திருந்தது.

அவன் வரவு உணர்ந்தும் நிமிரவில்லை.

கயல் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் சென்று நின்றவன், நிமிடங்கள் கடந்தும் அவளில் மாற்றமில்லாது போக, அவளின் முன்பு ஒரு கால் குத்தி மண்டியிட்டான்.

ஒற்றை விரல் கொண்டு கயலின் நாடி தொட்டு அவளின் முகம் நிமிர்த்தியவன்…

தன்னவளின் விழிகளோடு தன்னுடைய விழிகளை கூர்மையாய் நிலைக்கச் செய்தான்.

“உனக்கு இந்த மேரேஜில் விருப்பமில்லையா கயல்?”

அவளின் அதிர்வை அவளது கருமணிகளின் அசைவில் புரிந்துகொண்டான்.

“ஓகே… லெட்ஸ் கால் ஆப் தி மேரேஜ்” என்று எழுந்தவனின் கரம் பிடித்து இழுத்தவள்,

அவனின் முகம் பார்த்து வேண்டாம் எனபதைப்போல் தலையாட்டினாள்.

“உன் முகத்தில் ஹாப்பினெஸ் மிஸ்ஸிங் கயல். அத்தோட கனவில் கூட என்னை சுருட்டிக்கும் இந்த ரெண்டு கண்ணிலும் சுத்தமா ஜீவனே இல்லை. காலையில் நலங்கு வைக்கும்போது அதற்கான பிரதிபலிப்பு கொஞ்சம் கூட உன் உதட்டில் இல்லை. இப்படி எதுவுமே இல்லாம உன்னை வருத்தி இந்த மேரேஜ் அவசியம் தானான்னு என்னையே நினைக்க வச்சிட்ட. என்னோட இருக்கும்போது நீ ஹேப்பியா மட்டும் தான் இருக்கனும். அப்போ நீ வேண்டாம் சொன்ன காரணம் இப்பவும் அப்படியே இருக்கு… ரைட்?”

சிறு மௌனத்திற்கு பிறகு,

“மேரேஜ் ட்ராப் பண்ணிடலாம்” என்றான். ஒருவித மரத்தக் குரலில். உணர்வுகளற்று.

பார்த்திபனின் அவ்வார்த்தைகள்… அவனின் அந்நேரத் தோற்றம்…

வேகமாக அவனை இழுத்து இறுகக் கட்டிக்கொண்டவள்.

“எனக்கு நீங்க வேணும் அத்தான். ப்ளீஸ் நிறுத்திடாதீங்க” என்று விசும்பினாள். கண்ணீரோடு அவனின் முகமெங்கும் இதழ் ஒற்றினாள்.

“இப்பவும் காரணம் சொல்லமாட்டியா கயல்.”

கேட்டவனுக்கு அவளிடமிருந்து பதிலில்லை.

அவளின் அணைப்பு மேலும் இறுகியது.

“கயல் மேக்கப்பெல்லாம் அழிய போகுது.”

“திரும்ப போட்டுக்கலாம்.”

“ட்ரெஸ் கசங்குது.”

“வேற மாத்திக்கலாம்.”

“மலரும், சக்தியும் பாக்குறாங்க.”

“பார்க்கட்டும்…” என்றவள் தன் நாவினை கடித்து அசடு வழிந்தவளாக பார்த்திபனிடமிருந்து விலகி முதுகுக் காட்டிக்கொண்டாள்.

“டோர் லாக் பண்ணிருக்கலாம்.” சக்தி மலரிடம் சொல்ல…

“நாம தான் நந்தி மாதிரி வந்துட்டோம்” என்றாள் மலர்.

“அண்ணா உங்களைத் தேடுறாங்க” என்ற சக்தி பார்த்திபனை பார்த்து சிரிக்க…

“நீ டோர் நாக் பண்ணியிருக்கலாம்” என்றான்.

“பாருடா கதவை திறந்துவச்சிட்டு ஷோ காட்டுனது நீங்க” என்று சீண்டியவளின் தலையில் கொட்டியவன்… “சிவா பாவம்” எனக்கூறிச் சென்றான்.

*****

மாப்பிள்ளையும், பெண்ணும் ஒரே வீடு என்பதால் திருமணத்திற்கு முதல் நாள் இருவரையும் ஒன்றாக வைத்தே வீட்டு தெய்வம் கும்பிட்டவர்கள், ஒன்றாகவே மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு சடங்குகள் செய்து நிச்சயம் முடிய… நள்ளிரவு வரை புகைப்படக்காரர் புகைப்படம் எடுக்கிறேன் என்று அவர்களை வைத்து செய்தார்.

நெருக்கமாக பலதரப்பட்ட கோணங்களில் போஸ் கொடுக்க சொல்ல… கயல் தான் வெட்கத்தில் சிவந்தாள். தன்னிலை தடுமாறினாள். பார்த்திபன் அவளை ரசித்தபடி நொடி நேரத்தையும் ரசனையாக இதயம் சேர்பித்தான்.

“போதும்பா… கல்யாணம் முடிந்ததும் நிறைய எடுத்துக்கலாம். கொஞ்ச நேரமாவது தூங்கட்டும்” என்று தேவராஜன் வந்து சொல்லிய பிறகே அவர்களை போட்டோகிராபர் விடுவித்தார்.

மீண்டும் அதிகாலை நான்கு மணிக்கே சடங்குகள் ஆரம்பமாக… மண்டபம் நிரம்பி வழிந்தது.

முகியும், சிவாவும் பம்பரமாக சுழன்றனர்.

முகூர்த்த நேரம் நெருங்கியது.

சிவாவும் முகியும் ஆளுக்கு ஒருபுறம் வர, பார்த்திபன் மனையில் வந்து அமர அவனுக்கான மந்திரங்கள் தொடங்கியது.

ஐயர் சொல்லிய அனைத்தையும் மனமுவந்து செய்து கொண்டிருந்தான்.

“பொண்ணை அழைத்து வாங்கோ!”

சக்தி, மலர் அழைத்துவர தேவதையென பார்த்திபனின் அருகில் வந்தமர்ந்தாள் கயல்விழி.

நிச்சயத்தன்றே பல பேர் முன்னிலையில் பார்த்திபன் செய்த சில்மிஷம் நினைவிற்கு வர, சிறு பத்தட்டதோடு கடைக்கண் கொண்டு தன்னவனை ஏறிட்டாள்.

அவளின் பார்வைக்காகவே காத்திருந்தவன் அவளைப்போல் ஓரவிழி அல்லாது நேராகவே பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி மற்றைய கண் அடித்தான்.

அதில் மொத்தமாக அவனுள் சுருண்டவள், நாணத்தோடு தலை கவிழ்ந்தாள்.

அடுத்த சில கணங்களில், பெற்றோர் பெரியோர் சுற்றோரின் மனம் நிறைந்த ஆசிர்வாதத்தோடு பார்த்திபனின் கயல்விழியாகினாள்.

******

மூன்று வருடங்களுக்கு பின்னர்…

“இல்லை நியோ வந்திடுவேன். ஒரு டென் டெய்ஸ் மேனேஜ் பண்ணிக்கோங்க. வெஜ் பார்மில் நாளைக்கு ஹார்வெஸ்ட் முடிச்சிட்டு எனக்கு மெயில் பண்ணுங்க. மத்ததையெல்லாம் நான் வந்து பார்த்துக்கிறேன்.”

நியோவிடம் அலைபேசியில் பேசிவிட்டு திரும்பிய கயலை தன் அணைப்பில் வைத்தான் பார்த்திபன்.

“அச்சோ அத்தான் விடுங்க… அங்க பொண்ணு மாப்பிள்ளை வெயிட் பண்ணுவாங்க.”

மனைவியின் கழுத்தில் முகம் புதைத்தவன்,

“இப்போதான் உனக்கு அவங்க ஞாபகம் வருதா? இங்கு வந்தும் ஃபார்ம் நினைவுதான் உனக்கு. உனக்கு அத்தான் நினைவேயில்லை” என்று புகார் வாசித்தவன் அவளை சிணுங்க வைத்தான்.

“எப்போபாரு நமக்கு நடுவில் அந்த நியோ வேற… தொல்லை” என்றவன், கயலின் தோளில் கடித்து வைத்தான்.

வலியில் அவனை விலக்கித் தள்ளியவள்,

பார்த்திபனை முறைத்து நின்றாள்.

“நீங்க தானே நியோவை அறிமுகம் செய்து வைத்தீங்க. இப்போ அவரிடம் பேசக்கூடாது சொன்னா என்ன அர்த்தம்.”

கேட்டவளின் இடைவளைத்து தனது கைக்குள் வைத்தவன்,

“என் கயலோட உயிர் ஃபார்மிங்கில் தானே இருக்கு. அதுக்காக அவனை இன்ட்ரோ கொடுத்தேன். இப்போ என்னடான்னா ரெண்டு பேரும் விவாசயம் செய்றேன்னு என்னை மறந்து சுத்துறீங்க” பொய்யாகக் கோபம் கொண்டான்.

ஆம் திருமணம் முடிந்து பத்து நாட்களில் அனைத்தையும் சிவா மற்றும் மாணிக்கத்தின் பொறுப்பில் விட்டவன், சென்னை வந்து ஹோட்டல் பொறுப்புகள் அனைத்தையும் தேவராஜன் மேற்பார்வை மட்டும் பார்க்கும்படி ஏற்பாடு செய்தவன் ஒரு வாரத்தில் சிங்கப்பூர் சென்றுவிட்டான். தன் காதல் மனைவியுடன்.

சிங்கப்பூர் வந்திறங்கிய இரண்டாம் நாள் நியோவை நேரில் சந்தித்து அவனது பண்ணையை எரித்ததற்காக எவ்வித தயக்கமுமின்றி மன்னிப்பு வேண்டியவன், அதற்கு ஈடாக பணம் கொடுத்து நஷ்டத்தை சரி செய்தான். பணம் ஈடாகாது தான், ஆனால் அவனின் குற்றவுணர்வு நீங்கியது.

கயலை நியோவிடம் தன்னுடைய மனைவியென அறிமுகம் செய்து வைத்தவன்… விவசாயத்தில் கயலின் செயல்களை தெரிவித்து… அவளுக்கென பண்ணைகளையும் வாங்கி கொடுத்து, நியோவை துணை நிறுத்தினான்.

பார்த்திபனின் செயலில் நியோ அவனின் நண்பனாகிப்போக… கயலும் நியோவும் சேர்ந்து ஆர்கானிக் முறையில் ஃபார்மிங் செய்தனர்.

இப்போது உலகம் முழுவதும் இருக்கும் பார்த்திபனின் ஹோட்டலிற்கு உணவுப்பொருட்கள் வகையான காய்கறி, பழங்கள் அனைத்தும் இவர்களது தோட்டத்திலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

காதலாக பார்த்த மனைவியிடம்…

“நீ சொல்லலன்னாலும் உன் விருப்பம் எனக்குத் தெரியும்” என்றான்.

விவசாயம் செய்ய முடியாது என்பது தான் அவளின் மனதை வாட்டுகிறது என்று புரிந்துகொண்ட பார்த்திபன் அவளுக்குத் தேவையானதை அவள் சொல்லாமலே கேட்காமலே நிறைவேற்றி வைத்தான்.

இருவரும் மனம் புரிந்து ஒருவரின் விருப்பத்தை மற்றவரின் விருப்பமாக ஏற்று காதலோடு தங்கள் வாழ்வை திகட்ட திகட்ட வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

“கயல்… சிவாண்ணா நீங்க அங்கு மேடையில் இல்லைன்னு கோபமா இருக்காங்க. விட்டா எழுந்து வந்துடுவார் போலிருக்கு” என்று வந்த முகியின் கைகளில் கயல் மற்றும் பார்த்திபன் தம்பதியனரின் ஒரு வயது மகள் வீற்றிருந்தாள்.

தந்தையை கண்டதும் தாவியி பூக்குவியலை கைகளில் ஏந்தினான் பார்த்திபன்.

கயலும் பார்த்திபனும் குழந்தையோடு மேடைக்கு வர, அவர்களுடனிருந்த முகி வேறு பக்கம் சென்று இருக்கையில் ஏழு மாத மேடிட்ட வயிற்றோடு அமர்ந்திருந்த மலரை அணைவாக மேடைக்கு அழைத்து வந்தான்.

அடுத்த நான்கு நாட்களில் மலருக்கு வளைகாப்பு ஏற்பாடாகியுள்ளது.

மலர் படிப்பை முடித்து… தானும் ஒரு மருத்துவனாக நிலையாக நின்ற பின்னரே தன் குடும்ப வாழ்வை காதலால் நிலை நிறுத்தினான் முகி. அவர்களின் சந்தோஷமான வாழ்வின் சான்று மலரின் வயிற்றில் உதித்திருக்கும் மகவு.

அன்று ஒருநாள் முகி விளையாட்டாகக் கேட்டதை பார்த்திபன் நிறைவேற்றி வைத்திருந்தான்.

அவர்களது கிராமத்திலேயே மருத்துவமனை ஒன்றை கட்டி அதில் முகியை மருத்துவனாக அமர வைத்தான்.

இப்போது சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவர் முகிலன் நல்ல பிரபலம்.

சரளா மாணிக்கம் உட்பட, ரத்தினம் என அனைவரும் மேடைக்கு வந்ததும் தான் சிவாவின் முகம் சீரானது.

உறவென்று சொல்லிக்கொள்ளாத நிலையில் இருந்தவன், இப்போது தன்னைச்சுற்றி நிற்கும் தன் உறவுகளை கண்களால் ஆரத்தழுவினான்.

சிவாவின் மாலையை சரி செய்யும் பொருட்டு குனிந்த பார்த்திபன், அவனின் கண்களை துடைத்து விட்டான்.

சிவாவும் தான் நினைத்தைப்போல் அரசாங்க வேலையில் அமர்ந்து தன் காலால் வேரூன்றிய பின்னர் தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, இந்நொடி நல்லபடியாக அவனது திருமணம் சக்தியுடன் சிறப்பாக நடந்தும் முடிந்தது.

சிவா சக்தியின் கழுத்தில் பொன் தாலியிட…

மணமக்களுக்கு பின்னால் நின்றிருந்த…

பார்த்திபன் – கயல்விழி
முகிலன் – மலர்
மங்கை – தேவராஜன்
சரளா – மாணிக்கம்
ரத்தினம் – செண்பகம்

அனைவரும் தங்களின் இணையோடு நின்று விரிந்த புன்னகையோடு மணமக்களின் மீது அர்ட்சதை தூவும் அழகிய தருணம் காமிராவில் பதிந்தது.

எல்லோரும் இன்புற்றிருக்கும் வேளையில் நாமும் நம்மோடு பயணித்த கதை மாந்தர்களிடமிருந்து இன்பத்தோடு விடைபெறுவோம்.

****

விவசாயம் தொழிலல்ல… தமிழர்களின் அடையாளம்.

கயலின் அடையாளம் மாற்றாது ஏற்றுக்கொண்ட பார்த்திபனை போல் நம் தமிழ் மண்ணின் அடையாளம் காக்க சிறு முயற்சியாவது செய்வோம்.

விவசாயம் காப்போம்! விவசாயம் போற்றுவோம்!

*சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.*

நம் நாட்டில் காப்பாற்றப்பட வேண்டியதும் காக்கப்படவேண்டியதும்…

விவசாயமும், விவசாயிகளும் தான்.

சுபம்.

******

கதையில் ரொமான்ஸ் இல்லையேன்னு யாரும் கேட்கப்படாது… ஒரு கருத்தை சொல்ல நினைத்து சொல்லிய கதை. அது அந்த கருத்தோடு மனதில் பதிய வேண்டுமென்ற எண்ணம். அதற்காகவே அதிக காதல் காட்சிகள் வைத்து காதல் கதையாக காட்ட முனையவில்லை.

error: Content is protected !!
Scroll to Top